நூல் வெளியீடு : புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு.
சமூகநீதிப் பார்வையுடன் கொள்கைகளை வகுக்கிறோம்
சென்னை, மே 30- கேரள அரசின் கொள்கைகள் சமூக நீதி பார்வையுடன் வகுக்கப்படுகிறது என்று கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கேரள மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து, மகளிர் ஆணைய தலைவர் சதி தேவி ஆகியோருக்கு கேரள சமாஜம் சார்பில் ஞாயிறன்று (மே 29) வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குச் சமாஜத்தின் செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். இரா.சிந்தன் தமிழில் மொழி பெயர்த்துள்ள பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான “புதிய கேரளத்திற்கான தொலை நோக்கு” என்ற நூலை அமைச்சர் பிந்து வெளியிட சமாஜத்தின் தலைவர் எம்.சிவதாசன் பிள்ளை பெற்றுக் கொண்டார். பின்னர் அமைச்சர் பேசுகையில், கேரளாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தத் தொலைநோக்கு திட்டம் தீட்டப் பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் 6.8 லட்சம் குழந்தைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். 141 பள்ளிகளின் கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு மாற்றியமைத்துள்ளோம். 4,752 பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆயிரம் பள்ளிகளில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 45,000 வகுப்பறைகள் உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்டவையாக மாற்றப் பட்டுள்ளன.
11,272 ஆரம்பப் பள்ளிகளில் தொடக்க நிலை உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களை ஏற்படுத்தியுள்ளோம். உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் தொடங்கப்பட்டு 395 பள்ளிகளுக்கு தலா 3 கோடி ரூபாயும், 444 பள்ளிகளுக்கு தலா 1 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. 1,19,054 மடிக்கணினிகள், 69,943 புரொஜெக்டர்கள், 4,578 கேமராக்கள், 4545 தொலைக்காட்சி பெட்டிகள், 4611 பிரிண்டர்கள், 23,098 திரைகள், 4720 இணைய கேமராக்கள், 1,00,472 ஸ்பீக்கர்கள் 1 முதல் 12 ஆகியவை 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிதி ஆயோக் தரவரிசையில் தரமான பள்ளிக் கல்வி யை வழங்கும் மாநிலமாகக் கேரளம் விளங்குகிறது.
உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மாநிலத் தின் வளர்ச்சியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அரசின் கொள்கை கள் மக்களின் பல்வேறு வர்க்கங்களுடைய பிரச்சனைகளையும், சமூக பிரச்சனைகளையும் கணக்கில் கொண்டு சமூக நீதி பார்வையுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் இதர ஏழை மக்களை மனதில் கொண்டு கொள்கைகள் வகுக்கப் படுகின்றன. நவீன காலகட்டத்தில் , கல்வி முன்னேற்றம் அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் அவசியமாகும். வருவாய் குறைவாக உள்ள குடும்பங்களுக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதன் மூலமே அந்த இலக்கை அடைய முடியும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தியதன் மூலம் பொதுக் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பின்பு கல்வியை மேம்படுத்தும் திட்டத்தின் தொடர்ச்சியாக உயர்கல்வியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது சுகாதாரத்தை வலிமைப் படுத்தும் நடவடிக்கையின் வாயிலாக வருமானம் குறைவான குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டங்களில் வழங்கப்படும் உதவி 600 ரூபாயிலிருந்து 1,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டங்களின் நலன் களைப் பெறுவோர் எண்ணிக்கை 59.5 லட்சமாக உயர்ந்துள்ளது. உயர்த்தப் பட்ட ஓய்வூதியம் பரவலான மக்களுக்கு வழங்கப்படுகிறது. தரமான மருத்துவம், கல்வி வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நவ கேரளத்தில் யாரும் பட்டினியில் வாடக் கூடாது என்பதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உணவகங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மேலும் அங்கு தயாரிக் கப்படும் உணவுகளில், 10 விழுக்காடு உணவுப் பொட்டலங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. ஒரு சாப்பாடு 20 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை இடது ஜனநாயக முன்னணி அரசு அமல்படுத்தி வருகிறது என்றார். இதில் கேரள மாநில மகளிர் ஆணைய தலைவி சதிதேவியும் பேசினார். சமாஜத்தின் பொருளாளர் சசிதரன் நன்றி கூறினார்.
Bharathi Puthakalayam
7, Elango Salai.
Teynampet.
Chennai 600 018
044 24332424