வெட்கமறியாத ஆசைகள் – தமிழ் இலக்கிய உலகம் கவனம் கொள்ள வேண்டிய படைப்பு.
நூல்: வெட்கமறியாத ஆசைகள்
ஆசிரியர்: சிவசங்கர் ஜெகதீசன்
‘எல்லா சாதனைகளின் தொடக்கப்புள்ளியும் ஆசை’ எனும் மேற்கோளுடன் தொடங்கும் நூலில் பதினொரு சிறுகதைகளை எழுதியும் தானே வெளியிட்டும் நம் முன் படைத்திருக்கிறார் சிவஷங்கர் ஜெகதீசன். இலக்கிய படைப்பூக்கத் தளத்தில் இயங்க வேண்டும் என்கிற அவரது அவா மிகுந்த பாராட்டுக்குரியது.
இந்தியச் சந்தைகள் திறந்துவிடப்பட்டு உலகமயம் நுகர்வுமயம் என்கிற சொல்லாடல்கள், ஓரளவு வசதி படைத்தோரிடம் உற்பத்தி செய்திருக்கிற நவீனப் பண்புகளின் இழிவுகளை கருவாக்கி எழுத முயன்றிருக்கிறார். அதிநவீன சுரண்டல் முறை மாசு படத்திவிட்ட சமூகச் சூழலில் நம் வாழ்க்கையில் கவனம் கொள்ள வேண்டியவற்றை கதை வடிவில் எடுத்துச் சொல்ல… எச்சரிக்கை செய்ய தன்னால் இயன்ற முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
படிப்பிலும் விளையாட்டிலும் கலைகளிலும் முதல் மாணவி ஸ்வேதா. அவளின் புகைப்படம் பிரபல வார இதழின் அட்டையில் பிரசுரமாக அது அவளுக்குள் ஹீரோயின் ஆசையைக் கனவைக் கிளர்த்துகிறது. அந்த ஆசை ஸ்வேதாவை அழைத்துச் செல்லும் இடம் நோக்கி நாமும் விறுவிறுப்பாகப் பயணிக்கிறோம். பயணத்தின் முடிவில், ஆணாதிக்கத் தந்திரங்களும் பாலியல் வக்கிரங்களும் கசக்கி எறிந்த ஸ்வேதா உதிரத்துளியாய் படிந்து விடுகிறாள் நமக்குள். நூலின் தலைப்புக்கதை ஸ்வேதாவுடையது.
கிட்டத்தட்ட 4000 கிளைகளுடன் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வியாபித்திருக்கும் வெளிநாட்டு உணவகங்களில் ஒன்று ஜே. எஃப். சி. ஆரோக்கியமான உணவுகளே எங்கள் உணவகங்களில் தயாரிக்கப்படுகிறது என்ற வாக்குறுதியுடன், உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களை பயன்படுத்தி உணவுகளுக்கு சுவையூட்டுகிறார்கள் நிறம் கூட்டுகிறார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கும் இச் செயலை வாடிக்கையாளர்களிடமிருந்து மறைத்தும் விடுகிறார்கள். இவர்களின் நாவூறும் விளம்பரங்கள் குழந்தைகளை இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கின்றன. பர்கர், பீசா, சிக்கன் நக்கட்ஸ் உண்பதை நவீன மோஸ்த்தராக அறிவுறுத்துகிறது. இந்தப் புதிய உணவு முறையின் விளைவுகளையும் விபரீதங்களையும் முன் வைக்கிறது ஜே. எஃப். சி. சிறுகதை.
மாநகர் சென்னை சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொருவரும் ‘த்ரில்’ சாந்தகுமார் போன்ற விடலைகளை கண்டிப்பாக சந்தித்திருப்போம். விபத்துப் பயத்தில் கோபப்பட்டு எரிச்சலடைந்திருப்போம். ஒரு கணம் வேகமாக வைதிருப்போம். பதின் வயதில் இருசக்கர வாகனத்தில் காற்றைக் கிழித்துப் பறக்கும் போதை அலாதியானது. அதுவே பந்தயமாகிறபோது மண்டையைச் சிதறடித்துக் காவு கொள்கிறது. கை கால்களை உடைத்து முடமாக்கி விடுகிறது. பலியான சாந்தகுமார் கதை ‘த்ரில்’ சிறுகதையில் விவரிக்கப்படுகிறது. பலி கொடுத்த ஏழை பெற்றோராக நம்மை – வாசகரை வதைக்கிறது. ‘த்ரில்’ கதை மட்டுமல்ல எச்சரிக்கையும்.
அடுக்களை எண்ணெய் பிசுபிசுப்பு, புகை மூட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தேவைப்படும் புகை போக்கிக்காக மல்லுக்கு நிற்கத் தள்ளப்படும் வைஷ்ணவி… புகை போக்கி கிடைக்கிற போது ஏற்படும் சந்தோஷம் என ‘சிம்னி அன்ட் ஹாப்’ நகர்கிறது.
கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வமும் அதை கைக்கொள்ள செலவழித்த கடும் உழைப்பும் திறமையும் தேர்வர்களின் அறமற்ற உதாசீனப்படுத்துதலால் ஏற்படுத்தும் வலி, விரக்தி ‘நிராசை’ யாக வடிவம் கொண்டுள்ளது.
செல்பேசி வாயிலாக சிறார்களை வசியப்படுத்தும் இணைய வழி விளையாட்டுகள் கொண்டு வரும் இழப்புகளை கவனப்படுத்துகிறது ‘நேரக்கடத்தி’. ஏளனம், விபரீத ராஜயோகம், ஸ்டைரீன் சிறுகதைகள் உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. பிறரை எத்திப்பிழைக்கும் சமூக அமைப்பு ஒரு பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் காட்டும் கைவரிசையை நுட்பமாக பதிந்திருக்கிறது ‘நூதனத்திருட்டு’.
வாசிப்பதற்கு இலகுவான வாக்கிய அமைப்பு, சுற்றிவளைக்காமல் நறுக்கென சொல்லிவிடுகிறப் பாங்கு, பகட்டற்ற புனைவு இவைகள் சிவஷங்கர் ஜெகதீசனின் தனித்த அடையாளமாக மிளிர்கிறது. கதைகளில் பிறமொழிக் கலப்பைத் தவிர்ப்பது கூடுதல் சிறப்பைத் தரும். கடின உழைப்பும் ஆழ்ந்த வாசிப்பும் முற்போக்கு அரசியல் புரிதலும் தொடர் முயற்சியும் தமிழ் இலக்கியத் தளத்தில் உங்கள் படைப்புகளுக்கு தனித்த அடையாளத்தை வழங்கும். தொடருங்கள். வாழ்த்துக்கள்.
தோழமையுடன் சைதை ஜெ.