kavithai : anniya azhagu - ko.ramakrishnan கவிதை : அந்நிய அழகு - கொ. ராமகிருஷ்ணன்

கவிதை : அந்நிய அழகு – கொ. ராமகிருஷ்ணன்

அந்நிய மண்ணில் அழகிய சூழலில் விதைக்காமலே பலவித விண்ணுயர் மரங்கள்....   எமது வீட்டருகே எத்தனைத் தீவுகள் எதுவும் பெறவியலாமல் எள்ளளவும் தரவியலாமல்!   உதட்டின் இனிமை உதட்டின் எல்லைவரை 'புனித சாலையில்' மயான அமைதி!   எவருமிங்கு உறவிலில்லை வேண்டாதவரும்…
மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்




“அம்மா!” 

நான் அழ நீ சிரித் “தாய்”
நான் பிரசவித்தபோது!

நான் புசிக்க நீ பசித் தாய்
நான் முலையமுது உண்டபோது!

நான் உயர நீ உழைத் தாய்
நான் பள்ளி சென்றபோது!

நான் துடிக்க நீ துதித் தாய்
நான் துன்புற்றபோது!

நான் மகிழ நீ நெகிழ்ந் தாய்
நான் சிறப்புற்றபோது!

நான் உறங்க நீ விழித் தாய்
நான் நோயுற்றபோது!

நான் மணக்க நீ முயற்சித் தாய்
நான் ஆளானபோது!

ஆனால் நீ முதுமையால் முடங்கியபோதோ…
நான் எங்கோ? ஏனோ?யாருடனோ?
ஓதுங்கி ஒளி(ழி)ந்து விலகிப்போனேன்!
கைதியாய்(சூழ்நிலை)!
கையாலாகாதவனாய்!!

“முகமூடிகள்”

கிரகணமெனும் முகம்மூடி
ஒளிந்துகொள்ளும் ஆதவன்!

முகில்களெனும் முகம்மூடி
மகிழ்கின்ற நீள்விசும்பு!

பனிக்கட்டியெனும் முகம்மூடி
பயணிக்கும் ஆழிநீர்!

தென்றலெனும் முகம்மூடி
கொந்தளிக்கும் சூறாவளி!

மரங்களெனும் முகம்மூடி
மறைந்தொழுகும் மாமலைகள்!

பூமியெனும் முகம்மூடி
பூரிக்கும் பூகம்பம்!!

வண்ணமெனும் முகம்மூடி
வடிவுபெறும் வானவில்!

நிலமென்னும் முகம்மூடி
எழுகின்ற எரிமலைகள்!

அப்பப்பா இயற்கைக்கு,
அளவில்லா அழிவில்லா,
எத்தனை எத்தனை…
எண்ணிலடங்கா முகமூடிகள்!

” ஒருநாள் கணக்கு.”

ஈராறு எண்களில்
இருமுறை இணையும்
பெருசிறு முட்களே
ஒருநாள் கணக்கு!

நிலமகள் சுழற்சி
ஒருமுறை முடியும்முன்,
ஓராயிரம் மணித்துளிகள்
உனக்காகவே காத்திருக்கு!

நீயதனை நேர்த்தியாய்
நிர்வாகம் செய்திடின்,
நின்வாழ்வு ஆங்கோர்
நல்வாழ்வு ஆகிடுமே!

சொப்பனம் பகல்கண்டு,
சோம்பித் திரிந்து,
உதவாக்கரையாய்
ஊர்சுற்றி வந்திடின்…

காலம் உன்னை
கண்டனம் செய்திடும்
கண்டனம் செய்துனக்குத்
தண்டனை தந்திடும்!

–மரு உடலியங்கியல் பாலா.

சசிகலா திருமால் கவிதைகள்

சசிகலா திருமால் கவிதைகள்




பெண் என்பவள்…
**********************
பெண் என்ற பிறப்பின்
அர்த்தம் தேடி அலைகிறேன்
விடையறியா வினாவாகவே
சுற்றுகிறது என்னை…

கருகலைப்பிலும் கரையாமல்
கள்ளிப்பாலிலும் உயிர் போகாமல்
தடைகளைத் தாண்டித் தங்கிவிட்ட
உயிர் கண்டு கலங்கி நிற்கும் நெஞ்சங்கள்…

பாரமென்றறியாது சுமந்த உயிரே
இன்று பாரமாகிப் போனதோ ஈன்றவளுக்கு…
பெண்ணாய்ப் பிறப்பெடுத்ததை நினைந்து
ஆனந்தக் கண்ணீர் வடித்தாளோ
ஏளனமாயும் போதைப் பொருளாயும்
பார்க்கும் சமூகத்தில்
ஏன் பெண்ணாய்ப் பிறந்தாயோ என்ற
வேதனையில் அழுதாளோ
கன்னம் தொட்டுக் கரைபுண்டோடும்
அவளின் கண்ணீருக்கு
அர்த்தம் இன்னும் விளங்கவேயில்லை..

ஆண் மகவென்றால்
குடும்ப பாரம் சுமப்பானாம்
பெண்ணாய்ப் பிறப்பெடுத்ததால்
குடும்பத்திற்கே பாரமாகிப் போனதாம்…
கல்யாணம் காட்சி நகைநட்டு சேர்த்திட
எங்கே போவதென்று
மலைத்து நிற்கும் தந்தை..
சீர் செய்தே சீரழியுமாம் உடன்பிறப்பு..

கருவோடு கலைந்திடாத நானோ
அனுதினமும் கருக்கலைப்புச் செய்கிறேன்
என் கனவுகளை…
சுதந்திரமாய் விரித்திட நினைக்கும்
என் சிறகுகளோ ஆங்காங்கே
ஒடிக்கப்பட்டு முடக்கப்படுகின்றன
ஆணாதிக்கம் எனும் அளவுகோல் கொண்டு..

திறந்த மேனியாய் கிடக்கும்
பிறந்த பிள்ளையைக்கூட
பெண்ணென்பதால்
காமமேறிய கண்களால் களவாடுகின்றன
அகமெங்கும் அழுக்கேறிய
சில அகோரிகள்…

கருவறை முதல் கல்லறை வரை
கலவிக்கெனவே பயன்படும்
உணர்வுகளற்ற மரப்பாச்சியெனவே
குருதியெங்கும் ஊறிவிட்ட எண்ணமதை
மாற்றிட ஆளின்றி தவிக்கிறது
பெண்ணினம்…
எத்தனை பெரியார் வந்துதான்
என்ன பயன்?..

அத்தனை அசிங்கங்களையும்
ஆழ்துளைக் கிணறெனவே
ஆழ்மனதில் ஆழமாய் புதைத்திட்டே
பழகிவிட்டது
பாழாய்ப்போன பெண்ணினம்..

பெண்ணினத்தை பிரமிப்பாய்
பார்க்கும் காலத்திலும்
கள்ளிப்பால் கலாச்சாரம்
மாறாத சுவடுகளாய் ஆறாத ரணமாய்
இன்னும் இருந்திடதானே செய்கிறது..
பெண் என்பவள் யாராகத்தான்
இருந்திட முடியும்?…
சதைப் பிண்டமாகவா அல்லது
அக்னிச் சிறகுகள் கொண்ட
சாதிக்கும் பறவையாகவா?…
எப்படிப் பார்த்தாலும் நிரம்புவதேயில்லை
பெண் எனும் அட்சயப் பாத்திரம்…

இரக்கமில்லா நின் நினைவுகள்..
****************************************
தினம் தினம்
எந்தன் உறக்கம் பறித்திடும்
இரக்கமில்லா நின் நினைவுகளை
எச்சரிக்கிறேன்…
வேண்டாமென்று விலகி விட எத்தனிக்கையில்
வேண்டுமென்றே பிடிவாதமாய்
இறுக்கிப் பிடித்துக்கொண்டு
இம்சிக்கின்றதே நின் நினைவுகள்….
விரும்பும் போது விலகிச் செல்வதும்
விலகும் போது விரும்பி வருவதும்
காதலின் எழுதப்படாத விதிகளில்
ஒன்று போலும்….

சசிகலா திருமால்
கும்பகோணம்.

Urakkathai Thedi Kavithai By Sakthi உறக்கத்தை தேடி....!!! கவிதை - சக்தி

உறக்கத்தை தேடி….!!! கவிதை – சக்தி




யார்
களவாடிப்போனது
என் உறக்கத்தை?
எப்படிக்
களவாடப்பட்டது
என் உறக்கம்?
எப்போது
களவாடப்பட்டது?
எதுவும் தெரியவில்லை
கதவு
உள்புறமாகப் பூட்டப்பட்டுள்ளது
சன்னல்களும்
சாத்தப்பட்டிருக்கின்றன

மெதுவாய்க்
கதவைத் திறந்து
வெளியே
வந்து பார்க்கிறேன்,
நட்சத்திரங்கள்
மேகங்களுக்குள்
மறைந்து
தூங்கிக்கொண்டிருக்கின்றன,
செடிகளில்
மாலையில்
மலர்ந்த பூக்கள்
இலைகளின் மீது
தலைவைத்துத்
தூங்கிக்கொண்டிருக்கின்றன,
எப்போதேனும்
குரைக்கும்
எதிர்வீட்டு நாயும்
தூங்கிக்கொண்டிருக்கிறது
உடலுக்குள் தலைவைத்து

வேறு
எந்த அறையிலாவது
ஒளிந்திருக்கிறதா
என
வீட்டுக்குள் வந்து
குளியலறை
சமையலறை
பூஜையறை
என
எல்லா அறைகளிலும்
தேடிப்பார்த்தேன்
கிடைக்கவில்லை

இன்று
படித்த புத்தகங்களின்
எழுத்துக்களுக்குள்
விழுந்து தொலைந்ததா
என
வாசித்த
புத்தகங்களையெல்லாம்
அவசர
அவசரமாய்ப்
புரட்டிப்பார்த்தேன்
அகப்படவில்லை

ஊருக்குச்
சென்றுவிட்டதா
என
வீட்டுக்கு
அலைபேசியில் போனேன்
அலைபேசியின்
அலறலைக் கேட்காமல்
எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள்,

புகார் தெரிவித்தால்
கட்டாயம் கண்டுபிடித்துத் தருவார்களென
இருபத்து நான்கு மணி
நேரக்காவல் நிலையம் சென்றால்
வெளிச்சமாய் விளக்குகளைப் போட்டுவைத்துவிட்டு
காவலர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள்,

சோர்ந்துபோய்
வீட்டுக்குத் திரும்பி
படுக்கையில்
படுத்தபடி யோசிக்கிறேன்
யார் களவாடியது தூக்கத்தை?
எங்கே தொலைந்து போனது தூக்கம்?
கண்டேபிடிக்கமுடியவில்லை,

களவாடப்பட்ட
தூக்கத்தையோ
அல்லது
தொலைந்த தூக்கத்தையோ
கண்டுபிடித்தல்
அவ்வளவு
சுலபமான காரியம் அல்ல,

துயரிலும் துளிர்விடு கவிதை – கார்கவி

துயரிலும் துளிர்விடு கவிதை – கார்கவி




அந்த விதை அங்குதான் விதைக்கப்பட்டது
எச்சில்கள் துப்பப்பட்டன
யாரோ ஒருவரின் கழிவு அங்கே கழிக்கப்பட்டது
மொத்தமான இயற்கையை ஒண்டிப்பிடித்து
புல்லினங்காலின் அழகுகளில் படாது தப்பிய விதையின்
விருட்சத்தின் கிளையில்தான்
நீங்கள் அமர்ந்து யோசிக்கும் நாற்காலி உருவாகியுள்ளது…….

நித்திரை கலைந்த மொத்த இருளின்
யாரோ ஒருவரின் இருட்பசியை போக்கிட
சிறு விளக்கு வெளிச்சத்தில்
மொத்த மோகப்பெருவெளியில்
அடர்ந்த மேகமாய் சூழ்ந்த
மனிதப் பரப்பில் சிறு சிறு காயங்களைத் துடைத்தெறிந்த
அந்தவொரு மெல்லிய தேகத்தில்
சிலிர்த்து எழும்பி பறிபோகிறது ஒரு துளி குருதியில்
யாரோ ஒருவரின் அராஜக வேகமும்…மோகமும்……

கிளறிய மண்ணுக்குள்
தீ நுழைந்து நீங்கள் மரமாக வேண்டாம்
மண்புழு செரித்திடாத ஒரு பசித்தாவரமாய் இல்லாத
இறுகப்பற்றும் ஆல விழுதாய் மாறிடப்பழகுங்கள்…….

இந்த ஈர காற்றுவெளியில் ஏதோ சிலாகித்தலை
ஆழ்த்தும் அந்த ஏகாந்த நொடிகளைப் பற்றி
அகலும் உனது ஒட்டுமொத்த தேவைகளைப் பறித்துச் செல்லும் இடத்தில்
ஓர் அடி பின்னால் வைத்து உனது உரிமையை இழுக்கப் பழகுங்கள்……..

அனாதையில்லங்களின் வாசலில்
இரட்டை மரங்களிலிருந்து சிந்திய
தனியொரு அனாதை தென்னங்கீற்று பெருக்கெடுத்து
துயரம் பாய்ந்தாற்போல் ஒவ்வொரு கீற்றிலும்
சுத்தம் செய்யும்விரல்களாய்
உனது கரங்களை ஊன்றிடப் பழகுங்கள்…..

கண்ணீர்க் கடலில் கட்டுமரமும்
அலையுமான அனைத்து ஏற்ற இறக்கங்களில்
சிறு அலையெனத் துள்ளிடும்
மீனின் சிறு கடல் துளியாய்
நீ நீச்சலில் காதம் பற்றி பலதூரம் கடந்திடு
நித்தம் துயரிலும் விருட்சமாய் துளிர்விடு……

கவிஞர் சே.கார்கவி

Watchman Shortstory By Karkavi வாட்ச்மேன் குறுங்கதை - கார்கவி

வாட்ச்மேன் குறுங்கதை – கார்கவி

“என்னய்யா வேலைய பாக்க சொன்னா உட்காந்துகிட்டே தூங்குற….”

“என்னய்யா இது, நீ எனக்கு முன்னாடி சேர் போட்டு உட்காந்துட்டு இருக்க…”

“யோவ் நீ வேலை பாத்த லட்சணம் போதும், போய் எல்லார்க்கும் டீ வாங்கிட்டு வா…”

“என்னய்யா நீ வேல பாக்கற லட்சணம்….ஆபிசுல அவ்ளோ மண்ணு… அத சுத்தம் பண்ண என்னயா உனக்கு…நீ் என்ன கலக்டர் வேல பாக்கிறதா நெனப்பா…”

“யோவ் வாட்ச்மேன், அந்த நேம் ரிஜிஸ்டர் எங்கயா….!”

“என்னயா நீ வேல பாக்ர..ஒரு டீ வாங்கிட்டு வர இவ்ளோ நேரமா…அதுல சூடில்ல ..சொரண இல்ல…உனக்கு சுகர்னா நாங்களும் சாப்டக் கூடாதா என்ன…!”

“ஓடிப் போய் கேட் திறய்யா, டைம் ஆயிட்டு…. இதுக்குதா வயசானவங்கள வேலைக்கு வைக்கக் கூடாதுன்றது ….”

“என்னயா இது பேனா எழுதமாட்டங்குது..ஒரு பேனா கூட வாங்கி வைக்க மாட்டியாயா…!”

“யோவ் இன்னக்கு ஆபிசர்லாம் வருவாங்க, அந்த சானிடைசர் எங்கயா…என்னய்யா முழிக்கிற கைல ஊத்தி துடைப்பாங்கள்ள .. அந்த பாட்டில் எடுத்து வை…போய்யா….”

“அந்த மூஞ்சில போடுறத ஒழுங்கா போடு..இவனுங்க வேர கழுத்தறுக்குறானுங்க…”

“என்னய்யா புது ட்ரஸ்லாம் போட்டுக்கிட்டு அமர்க்களமா நிக்கிற…. சம்பளம் வாங்கியாச்சா..பெரிய ஆளுதான்யா, சும்மா நின்னுகிட்டே சம்பாதிக்கிற கஸ்டமில்லாம….!”

Mohamed Bacha Poems. முகமது பாட்சா கவிதைகள்

முகமது பாட்சா கவிதைகள்




1
மூன்று பாக்கெட் பால்
இரண்டு கிலோ வெங்காயம் பணப்பையைத்
தின்றுவிட…
இருமிக்கொண்டிருக்கும் அப்பனை
ஆஸ்பத்திரியில்
இப்போது காட்டமுடியாது என்பதால்
பெனடரையல் காஃப் சிரப்பிற்கும் கடன் சொல்லி
வாங்கிக் கொண்டு….
தேதி 20 ஐ கிழித்துவிட்டு
அவசரவசரமாகப் பெட்ரோலுக்கு
பொண்டாட்டி சிறுவாட்டியை அசடுவழிந்து
வாங்கிக் கொண்டு ஓடும் போதும்…
“ஏன் கடவுளே! இப்படி சோதிக்கிற”
என்று மட்டும்
திட்டத் தோணுகிறதே தவிர
இந்தப் பாழாய்ப் போன அரசியலைக் கடிந்துகொள்ள
நேரமே கிடைப்பதில்லை
எந்த சாமானியனுக்கும்,
“பொழைக்கிறவனுக்கு ஏன் இந்த அரசியல்?”

2
தூக்கம் எத்தனை மோசமானது…
தூங்கும்போது
இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
இறந்தவனை
தூங்குகிறான் என்று சொல்வது நியாயம்தான்
கனவில் வருகிறவனை
கண் மூடித் தூங்கும்போது புதைத்து விட்டு
வாசல் கதவைத் தட்டும்போது
அடைத்து விடுகிறீர்கள்…
காக்காய்க்குச் சோறு வைக்காதீர்கள்
விரட்டிவிட்ட வீட்டிற்கு
மானமுள்ள யாரும் வருவதில்லை.

3
நீ வருவாயா?
தேடலின் மிச்சத்தை
சன்னலோரத்தில் வைத்திருக்கிறேன்….

தேயிலை வடிநீரில்
உன் பார்வைகள் வந்து இடறுகின்றன…
கோப்பை ஏனோ மிகைக்கிறது!

வர்ணிக்கத் தெரியாதவனின் முற்றத்தில்தான்
காதல் பறவைகள் கூடமைக்கின்றன…
அவ்வப்போது நான் அதில் இளைப்பாறுகிறேன்…

ரசமிழந்தக் கண்ணாடியின் அரூபம்
எங்கோ அழைத்துச் செல்ல
மந்தகாச இருட்டில்
சிறு வெளிச்சமாய் நீ வருகிறாய்…

வெட்பம் இருவருக்குள்ளும்
புதைந்து போனதால்
விரல்பிடித்த தருணம் உணர்ந்தேன்
உலகம் உறைந்து கிடந்ததை…

இலைகள் அசைகின்றன
இதமான காற்று உள் நுழைகிறது.

4
என் வார்த்தைகளை
மொழி பெயர்க்கும் போது
சில வார்த்தைகளை
உதிர்த்துவிடுகிறாய் …
சருகாகிப் போன அவ் வார்த்தைகள்
உன் கால்களில்
ஒட்டிக் கொண்டே தொடர்கின்றன!
எழுதாத அந்த வார்த்தைகளை
நீ எப்படிக் கோர்த்தாய்?
பிழையான எழுத்துகளில்
சில வார்த்தைகள்
சிக்கிக் கொண்டிருக்கின்றன!
நானென்பது நீயாகவும்
நீயென்பது நானாகவும் திரிந்து கிடக்கிறது…
வார்த்தைகளின் நடுவே
நீ விட்டு வைத்திருக்கும் இடைவெளி
உனது ஆழ்ந்த மௌனமா?
அல்லது என் நீண்ட பெரு மூச்சா?
காற்றிலாடும் அந்த வார்த்தைகளை
பத்திரமாகப் பிடித்து வை…
நம் காதலை
அது சொல்ல வந்ததாகவும் இருக்கலாம்!

John Donne Death be not proud Holy Sonnet10 in tamil Translated by Thanges. ஜான் டன் ஆங்கில கவிஞர் மொழி பெயர்ப்பு கவிதை - தமிழில்: தங்கேஸ்

ஜான் டன் ஆங்கில கவிஞர் மொழி பெயர்ப்பு கவிதை – தமிழில்: தங்கேஸ்




கவிதைச் சூழல்
(ஷேக்ஸ்பியரின் சமகால கவிஞரான ஜான் டன் எழுதிய பத்து சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்றாக. (Death be not proud (Holy Sonnet 10) ) விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. காதல் கவிதைகளும் பெண் ஈர்ப்புக் கவிதைகளும் எழுதிக் கொண்டிருந்த ஜான் டன் தன் பிற்கால வாழ்க்கையில் ஒரு உண்மையான மத போதகராக மாறிய பின்பு முற்றிலும் கிறிஸ்த்துவ மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடல் (Sonnet ) இது . மரணமென்பது வாழ்வின் முடிவல்ல இறைவனின் சொர்க்கத்தில் எல்லையின்மையில் வெளியில் தூய ஆன்மாவின் ஆனந்தம் தொடரும் என்கிற ரீதியில் எழுதப்பட்ட பதினான்கு வரிகளை கொண்ட பாடல் இது)

John Donne
Death be not proud (Holy Sonnet 10)

கர்வம் வேண்டாம் மரணமே I
ஆனாலும் அத்தனை கர்வம்
உனக்கு வேண்டாம் மரணமே |

அறியாதவர்களோ உன்னைப் பார்த்து
அகில உலகச் சக்கரவர்த்தி
அதி பயங்கர கு௹பி என்று அடைமொழியிட் டு
நடு நடுங்குகிறார்கள்
ஆனால் அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் நீ
அத்தனை ஆனந்தப்படத் தேவையில்லை

ஓர் இரகசியம் தெரியுமா உனக்கு?
மெய்யாகவே நீ கொல்லும் மனிதர்கள்
யாரும் சாவதில்லை

ஓய்வையும் உறக்கத்தையும்
ஓவியம் தீட்டுகிறேன்
அட ஆச்சரியம் உன் முகம் தோன்றுகிறது ஓவியத்தில்
அம்முகத்திலிருந்து பீறிட்டு பிரவாகமெடுக்கிறது ஆனந்தம்

ஆகச் சிறந்த மனிதர்கள் உன்னோடு பயணிக்கும் போது
அவர்களின் எலும்புகளோ
பூமிக்குள் போகின்றன
அவர்களின் ஆன்மாவோ எல்லையின்மைக்குள் பறக்கின்றது

பெருமிதத்தால் பெருத்து விடாதே மரணமே

நீ சுதந்திரமானவனா சொல் ?
அடிமை தானே நீ ?
விதிக்கும் அகாலத்திற்கும்
இரத்த வெறி கொண்ட அரசர்களுக்கும்
தற்கொலை என்ணம் கொண்ட வீணர்களுக்கும்
நீ அடிமை தானே மரணமே..?

உன் சகவாசம் என்ன?
விஷத்துடனும் போர்க்களத்துடனும் போக்கிடமற்ற நோய்களுடனும் தானே

ஓ… அதிகர்வி மரணமே !
விரல்களின் வருடல்களிலேயே
உயிர்களுக்கு தூக்கத்தைத் தருபவன் என
ஆணவத்தில் ஆர்ப்பரிக்க வேண்டாம்

பாப்பி மரங்களின் போதை நெடியும்
மந்திரவாதியின் உச்சாடனங்களும் கூட
எங்களுக்குத் தூக்கம் தருபவை தானே.

இறுதி என்பது என்ன?
இங்கே சிறு துயிலில் விழுகிறோம்
அங்கே எல்லையின்மையில் எழுகிறோம்
பிறகு எங்களுக்கேது இறப்பு?
உண்மையில் அது உனக்குத்தானே?

மூலம்: ஜான் டன்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்