ரெண்டு ஜோடி சிறுகதை – சுதா
ஊ…ஊ….ஊ……என்ற சங்கு சத்தம் உடல் முழுவதும் பரவி நரம்புகளில் ரசாயன மாற்றத்தை யாரையும் அறியாமல் அனைவர் மீதும் ஊடுருவிக் கொண்டிருந்தது. கதிர் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான் பத்து மணிக்கெல்லாம் காரியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனுள்…
கற்பகம் இறந்து இரண்டு மணி நேரம் தான் ஆகுது. கற்பகத்துக்கு வரவேண்டியவங்க யாரும் இல்ல. கதிர் தான்…அவனும் உசிர் போவதற்கு முன்னமே வந்துட்டான். அதுவே கற்பகத்தின் ஆத்மா சாந்தி அடையும்…
கதிர் கற்பகத்தின் ஒரே பையன் கதிரின் அப்பா கற்பகத்தையும் கதிரையும் விட்டு விட்டு காணாமல் போய் பல வருஷம் ஆச்சு. காட்டு வேலையும் நாலு ஆட்டுக்குட்டியும் தா கதிர படிக்கவச்சது…வெள்ளாமை இல்லா காட்டுல விதைக்கு என்ன வேலைனு ஒதுங்காம கற்பகம் தன் மாமியாரையும் காத்து காடு சேர்த்தா…
அப்ப கதிருக்கு பதினேழு வயசு இருக்கும். கதிரோட அப்பா இறந்து விட்டதாக செய்தி வர கற்பகமும்.. ஊர்க்காரங்க நாலு பேரும் போயி அடக்கம் பண்ணிட்டு வந்துட்டாங்க.இதுல பெருசா வருத்தப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ கதிருக்கும் அவன் அம்மாவுக்கு ஒண்ணுமே இல்ல…
கதிர் கற்பகத்தின் கஷ்டம் உணர்ந்து படிச்சான். கவர்மெண்ட் பேங்க்ல நல்ல உத்தியோகம் கற்பகத்தின் பாடு அப்போதுதான் விடிஞ்சது. கொஞ்சம் கொஞ்சமா கற்பகத்தின் ஓட்டம் கொறஞ்சது ஓடிய கால்கள் கொஞ்சம் இளைப்பாறுச்சு கதிர் கற்பகத்த கண்ணுல வச்சு பார்த்துகிட்டான்…
யார் கண்ணு பட்டுச்சோ கற்பகத்துக்கு உடம்பு முடியல. எத்தனை ஆஸ்பத்திரி பார்த்தும் ஒன்னும் கேட்கல. இந்த சமயத்துலதா கற்பகத்த பார்க்க கற்பகத்தோட சினேகிதி சரசா வந்தா. வந்தவ உள்ள வராம வெளியில் நின்றபடியே கற்பகம் கற்பகமுனு கத்திகிட்டு இருந்தா…வெளில இரண்டு ஜோடி செருப்பு கிடந்துச்சு யாரோ உள்ள இருக்காங்கன்னு யூகிச்சிட்டா சரசா…
கட்டில்ல படுத்தபடியே உள்ள வான்னு சொன்னா கற்பகம். சினேகிதிய பார்த்த சந்தோஷம் அவளுக்கு…பால்ய கால கதை எல்லாம் பேசி பாதி நாள் கழிஞ்சு போச்சு..பேச்சுவாக்கில் சரசா கேட்டா நீ உன் பையன் கூடவே போயிடலாம்ல. அவன் உன்னை பார்த்துப்பான்ல இங்கே இருந்து ஏன் கஷ்டப்படுற. கேட்ட வாய் மூடுவதற்குள் அய்யோ என்னால இருக்க முடியாது பா..டவுன்ல போயி என்னால இருக்க முடியாது கதிர் தான் அப்பப்போ வரான்ல அதுவே போதும் என்று சொல்லி கற்பகம் நகர்ந்தா.
இப்பயும் சரசா விடுறதா இல்லை கற்பகம் கேட்கணும்னு நினைச்சேன். நீ ஒரு ஆளு உனக்கு எதுக்கு ரெண்டு ஜோடி செருப்பு…சிரித்தபடியே கற்பகம் சொன்னாள் நான்தான் ஒத்தையா இருக்கேனே அது இரண்டு ஜோடியா இருக்கணும்னு தான் போட்டு வச்சிருக்கேன் அப்படின்னு சொன்னா.
நாட்கள் நகர நகர செருப்பு மட்டும் தான் மாறிகிட்டே இருந்துச்சு. அவ நெலம மாறவில்லை.போகப்போக உடம்பு மோசமாகி இறந்தும் போய்ட்டா மவராசி…
கதிருக்கு இது பெரிய இழப்பு தான்ஆனாலும் இனிமே அம்மாவுக்கு வலிக்காது என நினைக்கும்போது மனசுக்கு நிம்மதியா தான் இருந்துச்சு. கற்பகத்தை குளிப்பாட்டி பட்டு கட்டி படுக்க வைத்திருந்தத பார்க்க. தன்னோட அம்மா தூங்குற மாதிரியே தெரிந்தது கதிருக்கு…
காரியம் எல்லாம் முடிஞ்சது. கதிர் அம்மாவின் இறந்த உடலை தூக்கிட்டு சுடுகாட்டுக்கு போனாங்க…கற்பகம் பயன்படுத்தின பொருட்களையும் சேர்த்து தூக்கிட்டுப் போனாங்க. வீட்டு முற்றத்துல கிடந்த அந்த ரெண்டு ஜோடி செருப்ப மட்டும் யாரும் கவனிக்கல…