மே தினக் கவிதை எஸ்.வி.வேணுகோபாலன்

மே தினக் கவிதை எஸ்.வி.வேணுகோபாலன்




ஆகவே தோழர்களே!

உதிரச் சிவப்பு
உதிரா சிரிப்பு
உரத்த முழக்கத்தில் விடிகிறது இந்த நாள்

பதட்டத்தில் விழித்துப் பார்க்கிறான் முதலாளி
பாட்டாளி வர்க்கத்தின் பெருநாள்
அவன் பரம்பரைக்கே சாபத் திருநாள்

எந்த ஊரில் போய் நின்று கேட்டாலும்
சிகாகோ என்றே ஒலிக்கிறது
எந்தக் கம்பத்தை நோக்கினாலும்
செங்கொடி வீசிப் பறக்கிறது

வெறி பிடித்த உத்திரபிரதேசத்து அதிகாரி எவனோ
கூடையோடு போய்க்கொண்டிருக்கும்
மூதாட்டியை நிறுத்திப் பெயரைக் கேட்கிறான்:
பெலகேயா நீலவ்னா
என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டுப்
போய்க்கொண்டே இருக்கிறாள் அந்தத் தாய்.

இலத்தீன் அமெரிக்காவில்
கொடியேற்றிக் கொண்டிருக்கும் இளைஞனோ
திருத்தமாக உச்சரிக்கிறான்
தனது பெயர் சிங்காரவேலர் என்று!

நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழிலாளி
உற்றுப் பார்க்கிறான்
கடந்து போகும் மனிதர்
பாப்லோ நெருடாவோ என்று

மார்க்சின் முகச்சாயலில்
ஏங்கெல்சின் உடையில்
லெனின் குரலில்
அரங்கத்தின் கைத்தட்டலுக்கிடையே
பேசிக்கொண்டிருக்கிறான்
சிற்றூர் மாணவன் ஒருவன்

மெரீனா கடற்கரையில்
அன்றாடம் வந்து கேட்டுப் போகின்றன அலைகள்
பதில் கிடைக்காமல்
சுனாமியாகவும் எழுந்து கேட்டுப் போயின
முதல் மே தின கொண்டாட்டத்தின்
நூற்றாண்டு என்றைக்கு என

செஞ்சூரியன் வந்து
கடலில் பற்ற வைக்கும்
நெருப்புச் சுடரில் இருந்து
தீ பற்றவைத்துக் கொண்டு
கால எந்திரத்திலேறி
ஓடுகிறாள் தொழிலாளி ஒருத்தி
ஹே மார்க்கெட் சதுக்கம் நோக்கி

‘ஆகவே தோழர்களே …..’
என்று
அகஸ்டஸ் ஸ்பைஸ் நிகழ்த்தும் உரை
அவள் நிமித்தம்
உரத்துக் கேட்கிறது
ஊரெங்கும்
உலகெங்கும்

நன்றாகப் புலர்ந்துவிட்டது மே தினம்!