Sleep deprived small manufacturers and the Prime Minister who works without sleep Article by Kanagaraj தூக்கம் தொலைத்த சிறுகுறு உற்பத்தியாளர்களும் தூங்காமல் பணிபுரியும் பிரதமரும் கட்டுரை - கனகராஜ்

தூக்கம் தொலைத்த சிறு-குறு உற்பத்தியாளர்களும்; ‘தூங்காமல்’ பணிபுரியும் பிரதமரும்! – கனகராஜ்



சமீப நாட்களாக சில ஆங்கில பத்திரிகைகளில் தொடர்ச்சியாக அசையா சொத்துக்கள் ஏலம் பற்றிய விளம்பரங்கள் மிக அதிகமாக தென்படுகின்றன. அவற்றை கூர்ந்து கவனித்தால் ஆகப்பெரும்பாலனவை 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவை சிறு-குறு நிறுவன உரிமையாளர்களின் சொத்துக்களாக இருக்கின்றன. இவர்களின் கடன் தொகை சில லட்சங்களிலிருந்து அதிகபட்சமாக ஒன்றிரண்டு கோடிகள் வரை இருக்கிறது. கோடிகளில் கடன் இருப்பவை மிகச் சொற்பமாக இருக்கின்றன. பொதுவாக, இந்தியாவில் பெருமளவு வேலைவாய்ப்புகளை வழங்கி கொண்டிருப்பது சிறு-குறு தொழில்கள் தான். இந்தியா முழுமைக்கும் சுமார் 6 கோடிக்கும் அதிகமான சிறு-குறு நடுத்தர தொழில்கள் உள்ளதாக அமைச்சர் நிதின்கட்கரி ஒருமுறை அறிவித்திருந்தார். சராசரியாக 5 பேர் என்று வைத்துக்கொண்டாலும் 30 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு தொழிலும், வாழ்வும் அளிக்கும் துறையாக இது இருக்கிறது. குறைந்தபட்சம் இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவிகிதம் அளவிற்கு பங்களிப்புச் செய்பவையாக இந்த தொழில்கள் தான் விளங்கிக் கொண்டிருக்கின்றன. உள்ளூர் பொருளாதார நடவடிக்கையில் சிறு-குறு தொழில்களின் பங்கு மிக முக்கியமானது. நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கத்திற்கு வந்த பிறகு இவை கடுமையான சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டன. உண்மையில், மிகக் கடுமையான தாக்குதல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையோடு வந்து சேர்ந்தது. அதன்பிறகு ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பிறகு ஒலிம்பிக் போட்டியாளரோடு உள்ளூர் போட்டியாளர் போட்டியிட வேண்டிய நிலைமையைப் போன்ற கடுமையான சூழலுக்குள் சிறு-குறு தொழில்கள் தள்ளிவிடப்பட்டன. கோவிட் பாதிப்பு காலத்தில் சிறு-குறு தொழில்களை வாழ்வா? சாவா? என்ற நிலைமைக்கு தள்ளிவிட்டுள்ளது. அதன் வெளிப்பாடு தான் ஆங்கில பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வரும் இ-ஏல அறிவிப்புகள்.

ஒன்றிய அரசாங்கம் ஏதோ இந்த தொழில்களை காப்பாற்றுவதற்கு மிகப்பெரிய அளவிற்கு உதவி செய்துவிட்டது போல தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, சில நாட்களுக்கு முன்பு நிர்மலா சீத்தாராமன் அவர்கள் வெளியிட்ட ட்வீட்டில் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அசாமில் 5,20,000 சிறு-குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு ரூ. 2482.23 கோடி உதவி செய்திருப்பதாக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2482 கோடி என்பது பார்த்தவுடன் மிகப் பெரிய தொகையாக தோன்றும். ஆனால், உண்மையில் அதனால் பலனடைந்ததாகச் சொல்லப்படும் 5,20,000 என்கிற எண்ணிக்கையால் வகுத்து பார்த்தால் சராசரி ரூ. 47,735/-தான். இது மூன்று பேர் பணிபுரியும் நிறுவனத்திற்கு ஒரு மாத சம்பளத்திற்கு கூட போதுமானதா என்று தெரியவில்லை. இப்படித்தான் அரசாங்கம் பீற்றிக்கொள்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசாங்கம் இந்தியா முழுவதும் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் புரிவோருக்கு உதவுவதற்காக கேரண்டி ஸ்கீம் ஒன்றை அறிவித்தது. அதற்காக மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியதாக ஏராளமான விளம்பரங்கள் செய்யப்பட்டது. அதில் தமிழகம் தான் அதிகம் பயன்பெற்றதாக அறிவிப்பும் வெளியானது. ஆனால், அதன்பிறகு செய்திகளை பார்க்கும்போது 62,999 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால், 34,626 பேர் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதுபற்றி விசாரித்த போது உண்மையில் இந்த பணத்தில் ஒரு பைசா கூட பெரும்பாலானோரில் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரவில்லை என்றும், வங்கிகளே நேரடியாக அந்த பணத்தை ஜி.எஸ்.டி. உள்ளிட்ட சட்டப்படியான நிலுவைத் தொகையினை கட்டுவதற்கு அனுப்பி விட்டதாகவும் சொல்லப்பட்டது. அதாவது உண்மையில், ஒருவருக்கும் கூட இந்த பணம் அவர்கள் கணக்கிற்கு வரவில்லை. மாறாக, அவர்கள் கணக்கில் கடன் ஏற்றப்பட்டது. இதனால் தான் மீதிப்பேர் இதை பயன்படுத்த முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் மேற்கண்ட ஏல விளம்பரங்கள் மிக கடுமையானதாகவும் பல தொழில்கள் மூடப்படுவதோடு உரிமையாளராக உள்ள குடும்பங்களும், தொழிலாளர்களும், தொழிலும், வேலையும் இன்றி தள்ளப்படும் நிலை ஏற்படும் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. பொதுவான கோவிட் பாதிப்பு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சமமற்ற போட்டி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கந்துவட்டித் தனம் அனைத்தும் சேர்ந்து இவர்கனை இந்த நிலைமைக்கு தள்ளியிருக்கிறது.

கோவையில் உள்ள ஒரு நிறுவனம் 2015ல் ஐ.டி.பி.ஐ. வங்கியில் 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். இந்த கடனுக்கான வட்டியை 2020 மார்ச் வரை பாக்கியில்லாமல் காலம் தாழ்த்தாமலும் கட்டி வந்திருக்கிறார்கள். 2020 மார்ச்சுக்கு பின்பு அவர்களால் வங்கி வட்டியை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனம் பள்ளி கல்லூரிகளுக்கு சீருடை, காலணிகளை உற்பத்தி செய்து வழங்கும் நிறுவனம். ஆண்டு முழுவதும் இந்த காலணிகளை உற்பத்தி செய்து பள்ளி துவங்கும் காலத்தில் மட்டுமே அதிகளவு விற்பனை செய்யும் நிறுவனம். அவர்களுக்கு ரூ. 2 கோடி பெறுமானம் உள்ள சீருடைக் காலணிகள் உற்பத்தி செய்து வைத்திருந்த நிலையில் பள்ளிக் கூடங்கள் திறக்காததால் அவை முழுவதும் தேங்கி போய்விட்டன. இதனால் அவர்களால் வங்கிக்கான வட்டியை செலுத்த முடியவில்லை. எனவே, 50 லட்சம் கடனுக்காக மேற்கண்ட வங்கியில் அடமானம் வைத்துள்ள சொத்தை ஏலம் விடப்போவதாக வங்கி மிரட்டியிருக்கிறது. வேறுவழியின்றி 25 லட்சம் ரூபாய் கடன் புரட்டி வங்கிக்கு கட்டியிருக்கிறார்கள். ஆனாலும் வங்கி விடவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் அடமானம் வைக்கப்பட்டிருந்த சொத்தில் உரிய காலத்தில் கட்டவில்லையென்றால் சொத்து ஏலம் விடப்படும் என்று அந்த சொத்துள்ள இடத்தில் எழுதி வைத்துவிட்டார்கள். சிறு-குறு தொழில் முனைவோரின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் திரு. ரகுநாதன் Raghunathan K E அவர்களை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சந்தித்திருக்கிறார். நிதியமைச்சர் சிறு-குறு தொழில் துறை செயலாளர், வங்கி என்று ஒவ்வொருவருக்கும் முறையீடு செய்திருக்கிறார்கள். ஆனால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளரின் உதவியையும் நாடியிருக்கிறார்கள். அவர் தலையிட்ட பிறகும் கூடுதலாக, ஒரு மாதம் அவகாசம் வழங்கியதைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை.

தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் M. K. Stalin அவர்கள் சமீபத்தில் 12 மாநில முதல்வர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். சிறு-குறு தொழில்துறையினர் வாங்கிய கடனுக்கான வட்டி ஓராண்டுக்கு வரிவிலக்கு அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்பது தான் அந்த கடிதம். ஆனால், ஒன்றிய அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமீபத்தில் கோவையைச் சேர்ந்த சிறு-குறு உரிமையாளர் சங்கங்கள் எல்லாம் ஒரு காணொளியை https://youtu.be/04tFuIA5fRI வெளியிட்டுள்ளார்கள். அந்த காணொளியில் சிறு-குறு தொழிலில் உள்ளோர் தங்களுடைய பிரச்சனைகளை பட்டியலிட்டிருக்கிறார்கள். அவர்கள் மிக முக்கியமான பிரச்சனைகள் என்று சொல்வது ஒன்று, பெருநிறுவனங்களுக்கு இணையாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி. வருவதற்கு முன்பு சிறு-குறு தொழில்களுக்கு மதிப்புக் கூட்டல் வரி 5 சதவிகிதம் மட்டும் தான் இருந்தது. ஆனால் பெருநிறுவனங்களுக்கு மதிப்புக் கூட்டல் வரியும், மத்திய கலால் வரியும் இணைந்து 17.5 சதவிகிதம் இருந்தது. இப்போது இரண்டு துறைகளுக்கும் 18 சதவிகிதம் வரி.) இரண்டாவது, வங்கிகள் கடன் தருவதிலும், கடனை வசூலிப்பதிலும் காட்டும் நெருக்கடி. (இந்த காலத்தில் பெருநிறுவனங்களுக்கு 9 லட்சம் கோடி கடன் வாராக் கடன் என்று தள்ளுபடி செய்யப்பட்டதை நினைவில் கொள்க), மூன்றாவதாக, இடுபொருட்களின் விலை அவ்வப்போது உயர்வு (கடந்த காலத்தில் விலை கட்டுப்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு விலைக்கட்டுப்பாடு அமலில் இருந்தது. தற்போது நிறுவனங்களே விலையை ஏற்றிக் கொள்கிறார்கள்), நான்காவதாக, பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் போதாமை ஆகியவற்றை பட்டியலிட்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் மோடியின் தீவிர ஆதரவாளர்கள். ஆனால், இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது என்பதற்காக ஒரு வீடியோ வடிவில் அவர்களுடைய பிரச்சனையை சொல்ல முனைந்திருக்கிறார்கள்.

இந்த கடனுக்காக ஏலம் விடும் அறிவிப்புகளும், தொழில்துறையினர் தாக்குப்பிடிக்க முடியாமல் தங்கள் குறைகளை வாய் விட்டு அழ முடியாத அளவிற்கு சொல்வதும், எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் என்றே சொல்ல வேண்டும். இது, சிறு-குறு உற்பத்தியாளர்களின் பிரச்சனை மட்டுமல்ல. அதை சார்ந்த தொழிலாளர்கள் அந்த தொழிலாளர்களின் சம்பளத்தில் இயங்கும் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் பிரச்சனைகளும் தான் இந்திய பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

விவசாயத்தைக் காப்பாற்ற ஏறத்தாழ 11 மாதமாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஃபோர்டு உள்ளிட்ட தொழிற்சாலைகள் மூடப்படாமல் பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா பட்டினிக் குறியீட்டில் 94வது இடத்திலிருந்து 101வது இடத்திற்கு ‘முன்னேறியிருக்கிறது’. இப்படி இந்தியாவில் ஒவ்வொரு துறையும் மிகக் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மிகப் பெரும்பாலானோருக்கு வேலை வழங்கிக் கொண்டிருக்கும் சிறு-குறு தொழில்கள் எப்படியாவது பிழைத்திருக்க வேண்டும் என்கிற நிலையில் அதற்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம். மற்ற பிரச்சனைகள் ஒருபக்கம் இருந்தாலும் பெருநிறுவனங்களுக்கு இந்த காலத்தில் 9 லட்சம் கோடி தள்ளுபடி செய்த ஒன்றிய அரசாங்கம் இந்த சிறு-குறு தொழில்கள் பெற்ற கடனுக்கு கடந்த ஏப்ரல் முதல் இந்தாண்டு தற்போது வரையிலான காலத்திற்கான வட்டியை மட்டுமாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உரத்துக் குரல் எழுப்ப வேண்டியது மிகவும் முக்கியமாகும். இன்னும் சிறிது காலத்திற்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்களிக்க வேண்டுமென்று கோருவதும் பொதுவான மக்கள் நலனிலிருந்தும், இந்தியாவின் பொருளாதாரத் தேவையிலிருந்தும் ஒலிக்க வேண்டிய முழக்கங்களாகும்.

“பிரதமர் விமானத்தில் பறந்து கொண்டே வேலை செய்கிறார். விமானத்திலிருந்து இறங்கியதும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை பார்வையிடுகிறார். உணவும், உறக்கமும் இன்றி 24 மணி நேரமும் பணிபுரிகிறார்” என்றெல்லாம் பாஜகவினர் பேசுவது உண்மையானால், அழிவின் விளிம்பில் நிற்கும் சிறு-குறு தொழில்களையும், அதில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களையும் காப்பாற்றுவதற்கு சிறிது நேரத்தையாவது ஒதுக்கட்டும்.

 

https://youtu.be/04tFuIA5fRI