பொய் மனிதனின் கதை அத்தியாயம் 10 – ஜா. மாதவராஜ்

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 10 – ஜா. மாதவராஜ்



“அப்பாவிகளின் நம்பிக்கையே, பொய்யர்களின் முக்கியமான ஆயுதம்”
– ஸ்டீபன் கிங்

2019 நவம்பரில் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது இது. பாரத ஸ்டேட் வங்கியின் குர்கான் கிளையில் ஹுக்கும் சிங் என்பவர் கணக்கு வைத்திருந்தார். வீடு கட்டுவதற்காக பணத்தை தன் கணக்கில் செலுத்தி சேமித்து வந்தார். ஒருநாள் கணக்கை சரி பார்க்கும்போது அதிர்ந்து போனார். தன் கணக்கில் இருந்து அவரே அவ்வப்போது பணம் எடுத்து வந்ததாக வங்கியின் ஆவணங்கள் காட்டின. வங்கியின் அதிகாரிகளிடம் புகார் அளித்த பிறகுதான் எல்லாம் தெரிய வந்தது.

அந்த கிளையில் இரண்டு வாடிக்கையாளர்கள் ஹுக்கும் சிங் என்ற பெயரில் இருந்திருக்கிறார்கள். இருவருக்குமே அந்தக் கிளையில் ஒரே சேமிப்புக்கணக்கு எண்ணைத் தெரியாமல் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு பேரின் பாஸ்புக்கும் ஒன்று போலவே இருந்தன, பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களைத் தவிர!

ஒரு ஹுக்கும் சிங் செலுத்திய பணத்தை இன்னொரு ஹுக்கும் சிங் எடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். உண்மை தெரியவந்தவுடன் பணத்தை எடுத்த ஹக்கும் சிங் சொன்னதுதான் ஹைலைட். ‘இது மோடி போட்ட பணம் என்று நினைத்தேன்”

நம்பும்படி இல்லைதான். தனது மோசடி தெரிந்தவுடன் அதனை சமாளிப்பதற்காகவோ அல்லது தன் தரப்பை நியாயப்படுத்துவதற்கோ ஹுக்கும் சிங் சொல்வதாகத் தெரிகிறது. வங்கியின் மீது தவறு இருப்பதால் இது சிக்கலான பிரச்சினைதான். பீகாரில் நடந்த சம்பவத்தை அப்படிக் கருத முடியவில்லை.

பக்தியார்பூரில் வசிக்கும் 30 வயதான ரஞ்சித் தாஸ் அங்குள்ள தட்சண கிராம வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறான். அதில் இன்னொருவருடைய பணம் 5.5 லட்சம் தவறுதலாக 2021 மார்ச் மாதத்தில் வரவு வைக்கப்பட்டு விட்டது. அவன் அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்து வந்திருக்கிறான்.

உண்மையெல்லாம் தெரிந்த பிறகு வங்கி அதிகாரிகள் ரஞ்சித் தாஸை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். தன்னால் திருப்பித் தர முடியாது என்றும், எல்லாவற்றையும் செலவு செய்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறான். “உன் பணம் இல்லை என்று தெரிந்த பிறகு ஏன் எடுத்தாய்” என்று போலீஸ் கேட்டது.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 10) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“என்னுடைய கணக்கில் 5.5 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக என் மொபைலுக்கு செய்தி வந்தது. பிரதமர் மோடி ஒவ்வொருத்தர் கணக்கிலும் பதினைந்து லட்சம் போடுவதாகச் சொல்லி இருந்தார். அதன் முதல் தவணையாக ஐந்தரை லட்சத்தை அனுப்பி இருப்பதாக நினைத்துக் கொண்டேன். அந்தப் பணத்தை நான் செலவழித்து விட்டேன்.” என்று சொல்லி இருக்கிறான்.

மொத்தப் பணத்தையும் ஒரே தடவையில் அவசரம் அவசரமாகவும் எடுக்கவில்லை ரஞ்சித் தாஸ். தன்னுடைய பணம் என்பதாகவே பல தவணைகளில் மூன்று மாதங்களாகத்தான் எடுத்திருந்தான். ஆகஸ்ட் மாதம்தான் வங்கிக்கு தெரிய வந்திருக்கிறது. ரஞ்சித் தாஸ் உண்மையிலேயே அப்பாவியாகவும் கருத இடமிருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களிலும் குறித்து வைத்துக் கொள்ளக் கூடிய ஒன்று உண்டு. மோடி அப்படி சொல்லவில்லை என்றோ, ஒரு பிரதமரின் பெயரையே தங்கள் மோசடி காரியத்துக்கு பயன்படுத்தினார்கள் என்றோ சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஊழலற்றவராகவும், வளர்ச்சி நாயகனாகவும், தேசத்தை மீட்க வந்த இரட்சகனாகவும் பெரும் முழக்கங்களோடும் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி விமானத்தில் பறந்து பறந்து 2014 பாராளுமன்ற தேர்தலின் போது பேசியதுதான் இது:

“இந்தியாவில் உள்ள மோசடிப் பேர்வழிகள் தங்கள் கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள் என்று உலகமே சொல்கிறது. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டு இருப்பது நமது நாட்டின் பணம். என் சகோதர சகோதரிகளே, நீங்கள் சொல்லுங்கள், அந்த கருப்பு பணம் திரும்பி வர வேண்டுமா இல்லையா? திருடர்களால் பதுக்கி வைக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் நாம் திரும்பப் பெற வேண்டாமா? அந்தப் பணத்தின் மீது நம் மக்களுக்கு உரிமை இல்லையா?” என வீராவேசமாக கேள்வி கேட்டார். “வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் அந்தத் திருடர்களால் பதுக்கப்பட்ட பணத்தை மட்டும் திரும்பக் கொண்டுவந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனும் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை இலவசமாகப் பெறுவான்.” என பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரிக்க போகுமிடமெல்லாம் பெருஞ்சத்தமாய் கூவினார்.

மோடி பேசியதை ஊடகங்கள் தொடர்ந்து ஒளி பரப்பின. பிஜேபியின் தலைவர்களும், தொண்டர்களும் “மோடி பிரதமரானால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பதினைந்து லட்சம் கிடைக்கும்” என்று வீடு வீடாய் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். 100 நாட்கள் ஆனது. ஒன்றும் நடக்கவில்லை. மக்கள் முணுமுணுத்தார்கள். ஒரு வருடம் ஆனது வரவில்லை. கேள்விகள் எழுந்தன. மோடி தேர்தலுக்குப் பிறகு அந்த 15 லட்சம் குறித்து வாயேத் திறக்கவில்லை. பிஜேபியின் தலைவர்கள்தாம் ஆள் ஆளுக்காய் ஒவ்வொன்று பேசினார்கள்.

பாஜக தலைவர் அமித்ஷா சிரித்துக்கொண்டே “அது ஒரு எலக்‌ஷன் ஜும்லா” என்றார். தேர்தல் நேரத்தில் எல்லோரும் சொல்வதுதானே, அதையா சீரியஸாக எடுத்துக் கொண்டீர்கள் என்ற கிண்டல் தொனியில் பதில் இருந்தது. “நாங்கள் ஜெயிப்போம் என்று நினைக்கவில்லை. அதனால் அப்படியெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்தோம்” என்றார் நிதின் கட்கரி.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 10) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“நிச்சயம் கொடுப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்போம்” என சமூக நிதித்துறைக்கான இனையமைச்சர் ராம்தாஸ் அதவாலே. “அப்படி மோடி சொல்லவே இல்லை.”என்று மறுத்தார் ராஜ்நாத்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டார்கள். அருண் ஜெட்லி எழுந்து, “அது ஒரு உதாரணத்திற்குச் சொன்னது.” என்றார். “வெளிநாட்டில் இருக்கும் கருப்புப்பணத்தை எல்லாம் கொண்டு வந்தால் ஓவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் பெறுமான பணம் கிடைக்கும் என்றால் வெளிநாட்டில் எந்த அளவுக்கு கருப்புப்பணம் இருக்கிறது என்பதை புரிய வைப்பதற்காக” என்ற தோனியில் சொல்லி தன் அறிவை புரிய வைத்தார்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் இராஜஸ்தான் மாநில பிஜேபி தலைவர் மதன்லால் சைனி, “மோடி பிரதமரான பிறகு மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்திருக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் மறைமுகமாக ஏழை எளிய மக்களுக்கு 15 லட்சம் ருபாய் கொடுக்கப்பட்டு விட்டது” என மொத்தமாக ஊற்றி மூடப் பார்த்தார்.

மோடியோ “சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி பாகிஸ்தானை நம் முன்னே மண்டியிடச் செய்தோம். காங்கிரஸ் நம் இராணுவ வீரர்களை நம்பாமல் கேள்விகள் கேட்கிறது. தேச துரோகிகள்” என்று மக்களின் கவனத்தை திசை திருப்ப தேசபக்தி மேட்டரை கையிலெடுத்தார். உடனே “Modi slams”, “Modi attacks”, “Modi’s masterstroke”, “Modi set agenda” என்று ஊடகங்கள் மாற்றி மாற்றிப் போட்டு ‘அவரு யாரு தெரியுமா’ என பிலிம் காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

முறையான பதில் எங்கிருந்தும் வராததால் இராஜஸ்தானில், ஜலாவர் மாவட்டத்திலிருந்து, கன்னையா லால் என்பவர், பிரதமர் அலுவலகத்துக்கு 8.2.2016 அன்று கீழ்கண்ட கேள்விகளை RTI மூலம் கேட்டே விட்டார்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 10) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“தேர்தலின் போது வெளி நாட்டில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்டு வந்து, ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கொடுக்கப் போவதாக மரியாதைக்குரிய பிரதமர் மோடி கூறினார். அது என்ன ஆனது?

தேர்தலின்போது ஊழலை ஒழிப்பேன் என்று மரியாதைக்குரிய பிரதமர் கூறினார். ஆனால் 90 சதவீதம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்கான புதிய சட்டத்தை எப்போது கொண்டு வரப் போகிறார்?

அரசு Smart cities உருவாக்குகிறது. ராஜஸ்தானில் ஒரு கிராமம் கூட முன்னேறவில்லை. எந்தெந்த கிராமங்களின் நிலைமை மோசத்திலிருந்து படு மோசமாகி இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். எப்போது இராஜஸ்தான் கிராமங்களுக்கு சாலை வசதிகள் செய்து தரப்படும்?”

பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. கன்னையா விடவில்லை. சரியாக 30 நாட்கள் காத்திருந்து 9.3.2016 அன்று Central Information Commissionக்கு புகார் செய்தார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்றது. இறுதியில் 30.8.2016 அன்று, கன்னையாகுமாரின் கேள்விகளுக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 10) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஅதற்குப் பிறகு, கன்னையா லால் குறித்தும், அவருக்கு பிரதமரிடமிருந்து கிடைத்த பதில் குறித்தும் எந்தத் தகவலும் தெரியவில்லை. ஆனால் மக்கள் அந்த 15 லட்சத்தை மறந்த பாடில்லை. 2019 ஜூலை 30ம் தேதி மூணாறு தபால் அலுவலகத்தில் திரண்ட மக்களின் கூட்டத்தை ஒரு சிறு செய்தியாக இந்த தேசம் கடந்து விட முடியாது.

தேர்தலின் போது மோடி அறிவித்த பதினைந்து லட்சம் ருபாயை தபால் ஆபிஸ் மூலம் வழங்கப்பட இருப்பதாகவும், தபால் நிலையத்தில் கணக்கு ஆரம்பியுங்கள் என்று கிடைத்த எதோ தகவலை வைத்து எஸ்டேட்களிலும், தோட்டங்களிலும் வேலைபார்க்கும் தொழிலாளிகள் தங்கள் ஒருநாள் கூலியை விட்டு விட்டு, லீவு போட்டு அங்கு காத்து நின்றார்கள். எல்லோர் கைகளிலும் நூறு ருபாயும், ஆதார் அட்டையும், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களும் இருந்தன.

அந்த எளிய மக்கள் நீண்ட வரிசையில் அப்படி காத்துக் கிடந்தது இந்தியாவின் ஒரு மூலையில் இருக்கும் மூணாறில் என்று மட்டும் நினைத்தாலோ, அவர்களை முட்டாள்கள் என்றோ நினைத்தால் நம்மைப் போன்ற முட்டாள்கள் யாருமில்லை. மூணாறு அந்த நாளில் இந்த தேசத்தின் குறியீடாக இருந்தது.

தங்கள் வாழ்வில் எதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து விடாதா? அன்றாடம் படும் துயரங்களுக்கு எதாவது ஒரு வழி கிடைக்காதா என காலமெல்லாம் ஏங்கிப் போனவர்கள் அவர்கள். என்றாவது ஒருநாள் “கடவுள் கண்னைத் திறப்பார்” என்று காத்திருப்பவர்கள் அவர்கள்.

தேர்தல் நேரத்தில் சொன்ன வெறும் வார்த்தைகள் அவை என அவர்கள் அதிலிருந்து மீள முடியவில்லை என்பதை விட மீள விரும்பவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். அதிகாரத்துக்கு வந்ததும் அதை மோடியும், பிஜேபியும் மறந்து விட்டார்கள் என்னும் உன்மையை உள்ளுக்குள் அவர்களால் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மக்களின் துயரமான வாழ்வையும், அவலமான நிலையையும் வைத்து ஏமாற்றுவதைப் போல கொடிய காரியம் எதுவுமில்லை. அதை 130 கோடி மக்கள் நிரம்பிய தேசத்தில் அவர்கள் சர்வ சாதாரணமாக நிகழ்த்த முடிவது நம் சமூகத்தை அதிர்ச்சியோடும், பரிதாபமாகவும் பார்க்க வைக்கிறது.

மூணாறு போலீஸ் தரப்பில் வந்து, அது பொய்யான செய்தி என்று எடுத்துக் கூறி, அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவித்தார்கள். ஆனால் மக்கள் போலீஸ் சொன்னதை நம்பாமல் அங்கேயே இருந்திருக்கிறார்கள். அவர்களை திருப்பி அனுப்புவது பெரும் பாடாகி இருக்கிறது.

இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மூணாறு காவல் நிலைய கண்காணிப்பாளர் அறிவித்தார். யார் பரப்பியது என்பது அகில உலகத்துகே தெரிகிறது. யார் அவர் மீது வழக்குப் பதிவது? கைது செய்வது? அதற்கும் இந்த தேசத்தின் பிரஜை ஒருவர் துணிந்து விட்டார்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 10) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History2020ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில், ராஞ்சி ஹை கோர்ட்டில், ஹெச்.கே.சிங் என்னும் வழக்கறிஞர், “மோடியும் அமித்ஷாவும் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian penal Code) செக்‌ஷன் 415 (cheating), செக்‌ஷன் 420 (dishonesty) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (Representation of the people Act) செக்‌ஷன் 123 (b) பிரகாரம் வழக்கு பதியப்பட்டு இருந்தது.

2020 பிப்ரவரியில் ஆரம்பித்த விசாரனையின்போது, “2013-2014ல் நடந்த விஷயத்திற்கு இப்போது ஏன் வழக்குத் தொடுக்கிறீர்கள்” என நீதிபதிகள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது.

“தேர்தலின் போது சி.ஏ.ஏவை (CAA) கொண்டு வருவதாகச் சொன்னோம் அதனால் இப்போது கொண்டு வருகிறோம் என மோடியும் அமித்ஷாவும் சொன்னார்கள். அப்படித்தானே பதினைந்து லட்சம் ருபாய் எல்லோர் கணக்கிலும் வரவு வைக்கப்படும் எனச் சொன்னார்கள். அதை சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அதனை நிறைவேற்றவில்லை என்றால், மக்களை ஏமாற்றுவதாகத்தானே அர்த்தம்?” என்று வாதாடி இருக்கிறார் ஹெச்.கே.சிங். வழக்கு பின்னொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கின் தற்போதைய நிலை, போக்கு என்னவென்று தெரியவில்லை.

மோடி மீதும், அமித் ஷா மீது எத்தனையோ வழக்குகள் தொடுக்கப்பட்டு இருந்தன. அதிலிருந்தெல்லாம் அவர்கள் விடுவிக்கப்பட்டும் விட்டார்கள். எல்லாம் எப்படி என்று தெரியும். இந்த வழக்கின் முடிவு என்னவாகும் என்றும் தெரியும்.

ஆனால் இந்த நாட்டின் பிரதமர் மீது, இந்த நாட்டின் பிரஜை ஒருவர் cheating case தொடர்ந்திருப்பது எவ்வளவு அவமானகரமானது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் மோடி சொன்ன பொய்யை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது வரலாற்றில் எவ்வளவு முக்கியமானது.

References:
* ‘PM Modi sent me money’: Bihar man refuses to return Rs 5.5 lakh to bank, arrested (Times of India, Sep 15, 2021)
* Huge crowd flocks to Munnar post office to get ‘Rs 15 lakh promised by Modi’ (Mathrubhumi, Jul 30, 2019)
* Thought Modi ji Was Giving This Money’, PM’s Promise of Rs 15 Lakh Landed This Man in Trouble – Here’s How (India.com, Nov 22, 2019)
* BJP has fulfilled PM Modi’s campaign promise of giving Rs 15 lakh: Rajasthan party chief (Hindustan times, jul 18, 2018)
* Twitter remembers PM Modi’s ‘Rs 15 lakh promise’, trends #15LakhAaGaye as India crosses 15 lakh COVID-19 cases (Free Press, Jul 29, 2020)
* Rs 15 lakh promise: PM Modi, Amit Shah face charges of cheating, dishonesty in Ranchi court (India Today, Feb 3, 2020)