Vellai Pookkal Kavithai By PuthiyaMaadhavi வெள்ளைப்பூக்கள் கவிதை - புதியமாதவி

வெள்ளைப்பூக்கள் கவிதை – புதியமாதவி

பறந்து வரும் உன் வானத்தை
தரையில் இருக்கும் கூடுகள்
அச்சத்தோடு எட்டிப்பார்க்கின்றன.
சந்திப்புகளின் காயங்கள் ஆறவில்லை.

கைக் குலுக்க மறுத்த காரணங்கள்
தேச வரைபடங்களில்
கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.
உறவின் அர்த்தங்களை அவமானத்தில்

புதைத்த அவன் தேசம்
சமவெளி எங்கும் எந்திர மனிதர்கள்
மத்தாப்பு கொளுத்தி நடனமாடுகிறார்கள்
காயப்பட்டு கண்மூடிக்கிடக்கும் அந்த இரவு

உயிர்ப்பறவையின் படபடப்பு
பிரபஞ்சத்தின் பால்வீதிகள் இருண்டுபோய்
நட்சத்திரங்கள் தடுமாறுகின்றன.
தோழி
அவனை எட்டிப்பார்த்து

காற்றில் முத்தமிட்டு
கரைந்துவிட முடியாமல்
அடங்கிப்போகிறது பரணி.
கண்மூடிய கனவுகளை
அவன் சுடுகாடுகள்

எரிக்குமோ புதைக்குமோ?
யுத்தகளத்தில் மூடாமல் விழித்திருக்கும்
பிணத்தின் கண்களிருந்து
அழுகி நாற்றமெடுக்கிறது
அவன் எப்போதோ கொடுத்த
வெள்ளைப்பூக்களின் வாசம்.

Mahalakshmi Poems பா. மகாலட்சுமியின் கவிதைகள்

பா. மகாலட்சுமியின் கவிதைகள்




வாசனை
************
விற்றுவிட்ட
எங்கள் பூர்வீகத் தோட்டத்தை
பார்த்துவிடும் ஆவலோடு
நிலத்தில் கால்பதிக்கிறேன்

மலையடிவார
கட்டாந்தரையை
கல் முள்ளகற்றிப் பண்படுத்திய
அப்பாவின் குரல்
அங்கு கேட்கிறது

வலப்புற ஓடைப்பகுதியில்
பருத்திச் செடியில்
வெடித்துச் சிரிக்கிறார்
அண்ணன்

ஐந்து வயதில்
கருணைக் கிழங்கின்
விரிந்த இலைகளில்
நான் ஒளிந்து விளையாடிய இடத்தில்
தென்னை மரங்கள்
பாளை விட்டிருந்தன

வரப்புகளில் படர்ந்துகிடந்த
மூக்குத்திப் பூக்களெல்லாம்
என் அக்காமாரின் முகப்படங்கள்

கிணற்றுத்தண்ணீர்
அன்றுபோலவே
பாதங்களை எடுத்துக்கொண்டு
வாய்க்காலில் ஓடியது

அம்மா நட்டுவைத்த
மாமரமொன்றில்
எனக்குப் பிடித்த
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது

நிலங்கள்
கைமாறிக் கொண்டே இருந்தாலும்
அழியாமல் இருக்கின்றன
வாழ்ந்தவர்களின்
வாசனை

வடக்குத்
தோட்டத்திலிருந்து
வருடத்திற்கொருமுறை
சேவலறுத்துப் பொங்கலிடும்
புற்றைப் பார்த்தபடியே
வெளியேறுகிறேன்

நலம் விசாரிப்பதுபோல்
என்மீது
வந்து உதிர்கிறாள்
வேப்பம்பூக்களாய்
அம்மா.

வானம்
***********
சந்ததியை வயிற்றிலும்
விதையை நிலத்திலுமாய்
வளர்த்தெடுத்தவள் அவள்
ஆதி நெருப்பை
அணையாமல் வைத்திருந்தவளின் கரங்களில் விலங்கிட்டு
வேடிக்கை பார்க்கிறீர்கள்
கொடிய மிருகங்கள் கொன்றாள்
பகிர்ந்துண்ணும் பகுத்தறிவு கொண்டாள்
உணர்வின் விசாலத்தை அடையாளப்படுத்த
உள்ளும் புறமுமாக
கனன்று கொண்டிருக்கிறது
அவளது ஆதிக்கனல்
காட்டுமிராண்டியை
மெல்ல மெல்ல மனிதனாக்கியவளை
கலாச்சாரக்கயிற்றில் கட்டவாமுடியும்
நெருப்பை நெய்தவளுக்கு
கயிறெரிக்கத் தெரியாதா
பாவம் அவளிடம்
தோற்றுப்போன
உங்களால்
அவள் உடலை மட்டுமே வன்புணர முடிந்தது
உங்கள்
அடக்கு முறையில்
புதைந்து கிடக்கும்
அவள் சுயங்களின்
சிறகை விரிக்க
வானம் நெய்துகொண்டிருக்கிறாள்.
Anal Thazhuviya Kalam Poem By Chandru RC. அனல் தழுவிய காலம் கவிதை - சந்துரு.ஆர். சி

அனல் தழுவிய காலம் கவிதை – சந்துரு.ஆர். சி




எங்கள் சிறகுகளின் மேல் வலுவேற்றுவதாய்ச் சொல்லி
நுகர்ந்தறியா
சில திரவியங்களை
வலிந்து பூசினார்கள்.

சந்தேகத்தின் கண்கொண்டு
நாங்களதை மறுதலித்தபோது
பசித்திருந்த எங்களின்
இரைப்பைகள்
அறுசுவை கனவுகளால் பூட்டபட்டன.

சொப்பனங்கள் மெல்ல இளைத்து
நாங்கள்
அலைகழிக்கப்பட்டபோது
வேர்கள் அழுகிய புற்களின் வனாந்திரத்தில்
எங்கள் நம்பிக்கைகள்
குடியேற்றப்பட்டன.

இருண்ட Cகளில்
கார்மேகச் சித்திரங்களை
எழுதி தினமும் ரசிக்கச்சொல்கிறார்கள்.
ஏமாற்றங்களால்
எங்கள் கனவின் நிறங்கள்
ஒவ்வொன்றாய் உதிர்வதை தினமும் காண்கிறோம்.

முந்தைய நாட்களில் நறுமணங்களுடன்
கை வீசிச்சென்ற இவ்வழியில்
தீய்ந்த வாசமொன்று
எங்களை விடாமல்
துரத்திக்கொண்டே வருகிறது.

திணறடிக்கும் அவ்வாடை
வருகின்ற திசையை
கண்ணுக்கெட்டியவரை
பார்வைகளால் அகழ்ந்து
யூகிக்க முடியாமல் திகைக்கிறோம்.

தீய்ந்த வாடை மேலும் எங்களை சமீபிக்கிறது.
அனல் காற்றின் பெருஞ்சூடு
அடி வயிற்றில்
சுள்ளென உரைக்கும் போதுதான்
அறிந்துகொண்டோம்
திரவியம் பூசப்பட்ட
எங்கள் சிறகுகள்
பொசுங்கும் வாடையை…

Marathin Manam Poem by Shanthi Saravanan சாந்தி சரவணனின் மரத்தின் மனம் கவிதை

மரத்தின் மனம் கவிதை – சாந்தி சரவணன்




மண்ணில் உரம் போட்டு
உன்னைக் கொல்ல நினைத்தேன்
நீ செடியாக, மரமாக வளர்ந்தாய்
பூக்கள் கொடுத்தாய்
பழங்கள் கொடுத்தாய்
நிழல் கொடுத்தாய்
என் மகளின் திருமணத்திற்கு
உன்னில் ஒரு பகுதியை
வெட்டி கட்டில் பீரோ
செய்து கொடுத்தேன்
மகள் மகிழ்ந்தாள்
மீண்டும் நீ துளிர் விட்டாய்;
மழை காலத்தில்
உன் கிளைகள்
என் வீட்டுக் கூரையானது
இதோ என் பேரக் குழந்தைகள்
ஊஞ்சல் கட்டி உன் மேல் ஆடுகிறார்கள்
காலம் கடக்கிறது
காலன் என்னை அழைக்கிறான்
இப்போதும்
உன் மேல் தான் நான் கிடத்தபட்டுள்ளேன்
இத்தனை செய்தும்
நீ எனக்கு நல்லவற்றை
மட்டுமே கொடுத்தாய், ஏன்?
என்ற மானுடனின் கேள்விக்கு
நகைத்து கொண்டே
சுமந்து கொண்டிருந்த
மரம் கதைத்தது
என்னிடம் இருந்ததை நான்
கொடுத்தேன்
உன்னிடம் இருந்ததை நீ கொடுத்தாய்
இருப்பதைத் தானே கொடுக்க முடியும் என
பதில் இல்லாமல்
எரிந்து கொண்டிருக்கிறேன்
மின்சார சவகிடங்கில்.

நாற்றத்திற்குள் துருப்பிடித்த வாழ்வு( காயலான் கடைகளும்.. உதிரி மனிதர்களும்…) – வசந்ததீபன்

நாற்றத்திற்குள் துருப்பிடித்த வாழ்வு( காயலான் கடைகளும்.. உதிரி மனிதர்களும்…) – வசந்ததீபன்

காயலான் கடை என்றும் பழைய இரும்புக்கடை என்றும் அழைக்கப்படும் உலகத்தில்... நாகரீக, கலாச்சார.. வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கும், வாழ்க்கை முறைகளுக்கும் அப்பாற்பட்டு வாழும் மனித இயந்திரங்களின் துருப்பிடித்த வாழ்க்கையை நம்மில் பெரும்பாலோர் அறிந்தும் அறியாமலும் இருக்கலாம். மனித சமூக பேரமைப்பில் பொருந்தாத எத்தனையோ…