அய்யனார் ஈடாடி : கவிதைகள் Ayyanar Edadi : kavithaigal

அய்யனார் ஈடாடி : கவிதைகள்


மிதப்பலைகள்
அடர்ந்த பனையின்
நிழல் விழுந்து
நுரைமிதக்கும்
தாமரைக்குளத்தில்
சாயம் வெளுத்துப்போன
கொடிச்சீலைகளோடு
பயணிக்கும்
அகண்ட நெகிழிகள்
மீன்குஞ்சுகளோடு
தொட்டலையும் போது
பூத்தெழுகிறது மிதப்பலைகள்
ஆழத்தின் மற்றொரு பக்கம்…

 

மகிழ்ச்சிப் படலம்

கண்ணீரின் சுவையறிந்த
அம்மாவின் முத்தங்கள்
அழுத குரலோடு
வீட்டைக் கடக்கையில்
சிறுவன் மீது
பூ உதிர்க்கும்
மரமல்லி மரமென
உதிர்கிறது முத்தப்பூக்கள்…

எதிரெதிர் முகங்களாக
உடைந்த போதிலும்
நிலைக்குத்தி நிற்பது
சூழப்பட்ட
மகிழ்ச்சிப் படலத்தில்
எச்சமிருக்கும்
கண்ணாடித் துண்டுகளே…

சோகத்தின் வலிகள்

புகை கலைந்து போகும்
வெதுவெதுப்பான
யாருமற்ற  வெளியில்
வெந்நீர் அடுப்பின்
பக்கவாட்டில் காயும்
இறகுகள் நனைந்த
ஈரக்கோழிக்குஞ்சினை
தொலைவு நீண்டு வந்த
அடி சருகொடிந்த பருந்து
தூக்கிச் செல்லும் போது
சோகத்தின் வலிகள்
வெகுண்டெழுகிறது
வெள்ளனத்தில திறந்துவிட்ட
மூங்கி பஞ்சாரத்தின்
அருகே நகரும் போது…

பெருஞ் சுவடுகள்
வெறிச்சோடிய தெரு முற்றத்தின்
தந்தி மரத்தில்
அமர மறுக்கும்
தாயற்ற கூட்டுப்பறவைகள்
எத்தனிக்கும்
அந்தர வெளியின்
நிர்வாணக்கொடியை
மேவி மறைக்கும்
ஈரச்சொடுக்கு வழிந்து
காயும் சீலைகளில்
வந்தமரும் போதெல்லாம்
உதிர் சருகுக்காக
காத்துக்கிடக்கின்றன
காயம்பட்ட உள்ளத்தின்
பெருஞ் சுவடுகள்…