கலையின் – கவிதை
வெண்பனியே
வெள்ளிப் போர்வையோ
வைரத் துளியோ
மழைச்சாரலோ
மலையருவி தூரலோவென
கொஞ்சியது போதுமென்று
போகாமல்
சளிப் பிடித்திருக்கென
உழற வைத்து
பிஞ்சு பிள்ளைகளின்
முனகலில் முகம் மலர்வதை
நிறுத்திக் கொள்
முள் பனியே!
– கலை
கவிஞனா நீ ? கவிதை – பாங்கைத் தமிழன்
நிலவே,
சிறிது நாட்கள்
வெளியில் வராதே!
காற்றே
சிறிது காலம்
தென்றலை அனுப்பாதே!
பனியே,
சிறிது காலம்
தண்மையாய் இராதே!
மலர்களே,
சிறிது காலம்
மலர்வதை மறந்து விடுங்கள்!
குளிரோடையே,
சிறிது காலம்
சூடாக ஓடு!
பெண்களே,
சிறிது காலம்
சிரிக்காமல் இருங்கள்!
இப்படியாக
இருப்பீர்களானால்,
அழுகைக் குரலும்
அவல வாழ்வும்
எவர் செவிகளில் விழுமோ
அவரே கவிஞர்.
அவர்தான் கவிஞர்!
– பாங்கைத் தமிழன்
கலையின் கவிதைகள்
1.
மூடியே பழக்கிய
சாளரத்துக்குத்தான்
எவ்வளவு ஏக்கம் இருந்திருக்குமோ
எத்தனை நாள்தான்
பார்த்து மட்டும் காத்திருக்கும் ஒருநாள் வெளிப்பட்டுத்தானே
ஆக வேண்டும்
உருகிக் கொண்டே இருக்கிறது
பனித்துளியுடன் கூடி!
2.
என்னைத்தான்
வெண் காலையிலும்
பொன் மாலையிலும்
ஒளிந்து மறைந்து வர வைக்கிறாய்
உச்சிப் பொழுதில் கிறக்கத்தில் உருகடிக்கிறாய்
ராத்திரியில் போரத்தித் துரத்தி விடுகிறாய்
ஒரு பொழுதேனும்
ஒட்டி வர விட மாட்டேன் என்கிறாய்
உன் நிழலையுமா….
நிஜமில்லாமல்
நிழல் எங்கே போகும்?
3.
துரத்திப் பிடித்துக் குதித்து
மகிழ்ந்தேன்
பட்டாம்பூச்சியை.
என் கொட்டமடங்கியது…
அதன் கொண்டாட்டத்தை
மறந்துவிட்டோமென்று!
4.
அடி வானம் கும்மிருட்டானதுமே
வந்திருக்கலாம்
பாழாய்ப்போன நிலவும்
உப்பாய்க் கரைந்தபோதே நகர்ந்திருக்கலாம்
தான் …
குத்துக்காலிட்ட குடும்பத்தை நிமிர்த்த
பார்வையில்லாமல் பாதையில் பத்தி விற்று
மணம் வீசியவரை மரணமாக்கியது
செருக்கில் சுற்றும் கிறுக்குகளின்
நெருப்பொளி வீசி விரைந்து பறந்த வாகனம்!