Kalandarin Karuppai Poem By Karthigaiselvan செ.கார்த்திகைசெல்வனின் காலண்டரின் கருப்பை கவிதை

காலண்டரின் கருப்பை கவிதை – செ.கார்த்திகைசெல்வன்




ஆணும் பெண்ணும்
ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்கள்….
காலத்தின் விரல்கள்
சுண்டிவிட்டாலும்
தலையோ பூவோ
விழுந்தாக வேண்டும்….
ஆணே பூவென்றும்
பெண்ணே தலையென்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை….
பெண் தலையில்தான்
பூக்கள் ஆயுட்காலம்
கழிக்கின்றன…

ஆணும் பெண்ணும்
ஒரு நாளின்
இரண்டு பக்கங்கள்….
எத்தனை முறைகள்
புரட்டினாலும்
இரவும் பகலும் வந்தே
தீரும்….
ஆணே பகலென்றும்
பெண்ணே இரவென்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை…
இரவுகளே விடியுமென்ற
நம்பிக்கையைத் தருகின்றன..

ஆணும் பெண்ணும்
ஒரு வீட்டின்
இரண்டு துளைகள்…..
எத்துணை அழகாக
வீடு கட்டினாலும்
வாசலும் ஜன்னலும்
அமைத்தே ஆகவேண்டும்…
ஆணே வாசலென்றும்
பெண்ணே ஜன்னலென்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை…
ஜன்னல்களே வெளிச்சத்தைத்
தீர்மானிக்கின்றன…

ஆணும் பெண்ணும்
ஒரு மரத்தின்
எதிரெதிர் துருவங்கள்….
மையப்புள்ளி நிலப்பரப்பு
என்றாலும் கீழேயும்
மேலேயும் வளர்ந்தாக வேண்டும்….
ஆணே மேல்பகுதி என்றும்
பெண்ணே கீழ்ப்பகுதி என்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை….
வேர்கள் பிடித்திருப்பதால்தான்
கிளைகள் நடனமாடுகின்றன…

ஓ பெண்ணே…..!
நாங்கள் சதிகாரர்கள்தான்….
நாங்கள்தான் உன்னை
உடன்கட்டையில் ஏற்றிக்
கொன்றோம்….

ஓ பெண்ணே….!
நாங்கள் நாசக்காரர்தான்…
நாங்கள்தான் உனக்குக்
குழந்தைத் திருமணம்
நடத்தி வதை செய்தோம்….

ஓ பெண்ணே…..!
நாங்கள் ஆதிக்கவாதிதான்….
நாங்கள்தான் உன்னை
குழந்தைப் பெற்றுத்தரும்
இயந்திரமாகவே இயக்கிவந்தோம்…..

ஓ பெண்ணே….!
நாங்கள் கொலைகாரர்தான்….
நாங்கள்தான் நீ
பிறந்த உடனேயே
சிசுக் கொலைகள் செய்தோம்….

ஓ பெண்ணே….!
நாங்கள் மதம்பிடித்தவர்தான்…
நீ காதலொன்று
கொண்டாலும் நாங்கள்தான்
ஆணவக்கொலை செய்தோம்….

ஓ பெண்ணே…..!
நாங்கள் பச்சோந்திகள்தான்….
பொதுவெளியில் உனக்கொரு
தேசியகீதம் பாடிவிட்டு
மறைமுக மரணகீதமும் பாடினோம்….

அன்பின் ஐந்திணையில்
வாழ்ந்தவளே!
தூதுசென்று போர்களைத்
தடுத்தவளே!
புலியை முறத்தால் விரட்டியவளே!
புதல்வனைப் போருக்கு
அனுப்பியவளே!
அதியமானிடம் நெல்லிக்கனி
பெற்றவளே!
புறமுதுகிடாமல் நெஞ்சில்
வேல் வாங்கியவளே!

உயர்திணையில் வருபவளே!
அஃறிணைகளின் ஆதிக்கத்தை
வீழ்த்தி உயரத்திற்கு வந்தவளே!
என்றும் நீ நெஞ்சம் உயர்த்தியே
யாவையும் எதிர்கொள்கிறாய்..!
இருந்தும் உன் முதுகிலல்லவா
அம்புகளை இன்று பாய்ச்சுகிறார்கள்…!
நீ உயர்திணை மட்டுமல்ல….
உயிர்த்திணையும் நீதான்….

இதோ பிறந்து கொண்டிருக்கிறது
புத்தாண்டு….!
இந்தச் சமூகமும் புதிதாய்
பிறக்கட்டும்…..

Online Education: Social Inequality - Dr. V. Sivashankar. Book Day Website is a Branch Of Bharathi Puthakalayam

இணையவழிக்கல்வி: சமூக ஏற்றத்தாழ்வு – பேரா. வே. சிவசங்கர்

கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதத்திலிருந்து உலக அளவில் பள்ளிகள் மூடப்பட்டன. கரோனா பரவத் தொடங்கியதன் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் (UNESCO) ஆய்வு அறிக்கையின்படி உலகில் 150 நாடுகளில் பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. 10…