தமிழணங்கு என்ன நிறம்? | Thamizhanangu enna niram | Book Review

தமிழணங்கு என்ன நிறம்?

இவள் உயிர்ப்புள்ள தமிழணங்கு   "தமிழணங்கு என்ன நிறம்?"- தலைப்பே படிக்கத் தூண்டுகிறது. இந்த நூல் பொறியாளர் மு இராமனாதன் எழுதிய சமூகம், அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. நடைமுறை சம்பவங்களையும் தரவுகளின் அடிப்படையிலான தர்க்கங்களையும் கொண்டிருப்பது இந்நூலின் சிறப்பு. உயிரோடு…
அருள்மொழி எழுதிய “அமெரிக்காவில் சாதி” நூலறிமுகம்

அருள்மொழி எழுதிய “அமெரிக்காவில் சாதி” நூலறிமுகம்

'அமெரிக்காவில் சாதி' என்ற நூல் டிசம்பர் 2023 ல் வெளியாகியுள்ளது. வெளியீடு 'பாரதி புத்தகாலயம்'.80 பக்கமுள்ள இந்த நூலின் விலை ரூ.80. பாமரன் இந்த நூலிற்கு அணிந்துரை எழுதியுள்ளார். கூர்மையும் எள்ளலும் கலந்த அந்த முன்னுரை இப்புத்தகத்தின் சாளரங்களைப் புரிதல்களோடு திறந்து…
Lottery short story by shirley jackson in tamil translation by Ki.Ramesh ஷிர்லி ஜாக்சனின் லாட்டரி சிறுகதை தமிழில் கி.ரமேஷ்

லாட்டரி சிறுகதை – ஷிர்லி ஜாக்சன்| தமிழில்: கி.ரமேஷ்



ஜூன் 27ஆம் தேதி காலை வானம் தெளிவாக இருந்தது, வெயில் அடித்துக் கொண்டிருந்தது, ஒரு முழுமையான கோடை நாளாக புதிய வெதுவெதுப்பான காலநிலை நிலவியது; மலர்கள் மிகுதியாக மலர்ந்து கொண்டிருந்தன, புற்கள் அடர்த்தியான பச்சை நிறத்தில் மின்னின. காலை சுமார் பத்து மணி அளவில் தபால் நிலையத்துக்கும், வங்கிக்கும் இடையில் இருந்த மைதானத்தில் மக்கள் கூடத் தொடங்கினர்; சில நகரங்களில் லாட்டரி நடத்த இரண்டு நாட்கள் ஆகும் அளவுக்கு மக்கள் இருந்தனர். எனவே லாட்டரியை ஒருநாள் முன்னதாக ஜுன்26 ஆம் தேதியே தொடங்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த கிராமத்திலோ லாட்டரியை முழுதாக முடிக்க இரண்டு மணி நேரமே ஆனது. காலை பத்து மணிக்குத் தொடங்கினால், மதிய உணவுக்கு மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பப் போதிய நேரம் மீதமிருந்தது.

Lottery short story by shirley jackson in tamil translation by Ki.Ramesh ஷிர்லி ஜாக்சனின் லாட்டரி சிறுகதை தமிழில் கி.ரமேஷ்

 

வழக்கம் போலக் குழந்தைகள் முதலில் கூடினர். பள்ளிகள் கோடை விடுமுறைக்காக சமீபத்தில்தான் மூடியிருந்தன. விடுதலை உணர்வு அவர்கள் பெரும்பாலானோரிடம் சற்று சங்கடமாகவே படிந்திருந்தது; அவர்கள் முதலில் சற்று அமைதியாகக் கூடியது போல் தெரிந்தாலும், அவர்கள் துள்ளி விளையாடத் தொடங்கினர். அவர்களது பேச்சு இன்னும் வகுப்பறையையும், ஆசிரியரையும், புத்தகங்களையும், தண்டனைகளையும் பற்றியே இருந்தது. பாபி மார்ட்டின் தனது பாக்கெட்டை ஏற்கனவே கற்களால் நிரப்பியிருந்தான். மற்ற சிறுவர்களும் வேகமாக அவனைப் பின்பற்றி வழுவழுப்பான, வட்ட வடிவக் கற்களைப் பொறுக்கினர். பாபியும், ஹாரி ஜோன்சும் டிக்கி டெலக்ராயிக்சும் – கிராமத்தினர் இந்தப் பெயரை ‘டெலக்ராய்’ என்று கூறினர் – விரைவில் மைதானத்தின் ஒரு மூலையில் ஏராளமான கற்களைக் குவித்து விட்டு, மற்ற பையன்கள் அவற்றை எடுத்து விடாதபடி காவலுக்கு நின்றனர். சிறுமிகள் தமக்குள் பேசிக்கொண்டு சிறுவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு தள்ளி நின்றனர். மிகவும் சிறியவர்கள் புழுதியில் புரண்டு விளையாடினர் அல்லது தமது மூத்த சகோதர, சகோதரிகளின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றனர்.

விரைவில் ஆண்கள் தமது குழந்தைகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டும், செடிகளையும், மழையையும், டிராக்டர்களையும், வரிகளையும் பற்றிப் பேசிக் கொண்டு கூடினர். அவர்கள் மூலையில் குவித்திருந்த கற்களிடமிருந்து சற்றுத் தள்ளி நின்றனர். அவர்களது நகைச்சுவைகள் சத்தமின்றிக் கூறப்பட்டு, அவர்கள் வாய்விட்டுச் சிரிப்பதற்குப் பதிலாகப் புன்னகைத்தனர். வெளிறிப் போன இரவு உடைகளையும், ஸ்வெட்டர்களையும் போட்டுக் கொண்டு பெண்கள் ஆண்களுக்கு சற்றுப் பின்னர் வந்து சேர்ந்தனர். அவர்கள் தமது கணவர்களுடன் சென்று சேர்வதற்கு முன்னால் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொண்டும், சிறிது வம்பு பேசிக் கொண்டும் சென்றனர். விரைவில் பெண்கள் தமது கணவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு தமது குழந்தைகளை அழைத்தனர். நாலைந்து முறை அழைத்த பின் குழந்தைகள் வேண்டா வெறுப்பாக வந்தனர். தன் தாயின் பிடியில் இருந்த பாபி மார்ட்டின் தனது கையை விடுவித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே கல்குவியலுக்குப் போய்ச் சேர்ந்தான். அவனது அப்பா சற்றுக் கடுமையாகப் பேசவும், திரும்பி வந்து தன் தந்தைக்கும் மூத்த சகோதரனுக்கும் இடையில் நின்று கொண்டான்.

மைதான நடனம், விடலைப் பருவ கிளப், ஹாலோவீன் பண்டிகை போன்ற அனைத்தையும் சமூக செயல்பாடுகளுக்காகத் தம் நேரத்தை ஒதுக்க முடிந்த திரு.சம்மர்ஸ்தான் லாட்டரியையும் நடத்தினார். வட்ட வடிவ முகம் கொண்ட அவர் மிகவும் நகைச்சுவை உணர்வுடையவர், நிலக்கரி வர்த்தகம் நடத்தி வந்தார். அவருக்குக் குழந்தைகள் கிடையாது என்பதாலும், அவரது மனைவி ஒரு சிடுமூஞ்சி என்பதாலும் மக்கள் அவருக்காகப் பரிதாபப்பட்டனர். அவர் கருப்பு மரப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு மைதானத்துக்கு வந்தபோது ஒரு முணுமுணுப்பாக சத்தமெழுந்தது. “கொஞ்சம் தாமதமாகி விட்டது” என்றபடியே அவர் கையை ஆட்டிக் கொண்டு வந்தார். பின்னாலேயே தபால் அலுவலர் திரு.கிரேவ்ஸ் ஒரு முக்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து மைதானத்தின் நடுவில் போட, திரு.சம்மர்ஸ் பெட்டியை அதன் மீது வைத்தார். தமக்கும், பெட்டிக்கும் இடையில் சிறிது இடம் விட்டு மக்கள் தூர நின்றனர். “யாராவது எனக்கு உதவ முடியுமா?” என்று திரு.சம்மர்ஸ் கேட்டதும், சற்றுத் தயக்கத்துக்குப் பிறகு திரு.மார்ட்டினும், அவரது மூத்த மகன் பாக்ஸ்கரும் பெட்டி முக்காலி மீது ஆடாமல் இருக்க அதைப் பிடித்துக் கொள்ள, திரு.சம்மர்ஸ் அதற்குள் இருந்த காகிதங்களைக் கிளறினார்.

Lottery short story by shirley jackson in tamil translation by Ki.Ramesh ஷிர்லி ஜாக்சனின் லாட்டரி சிறுகதை தமிழில் கி.ரமேஷ்

லாட்டரியில் பயன்படுத்தப்பட்ட முந்தையப் பொருட்கள் நீண்ட காலம் முன்பே ஒழிந்து போய் விட்டன. இப்போது முக்காலி மீது இருக்கும் கருப்புப் பெட்டி கூட நகரத்திலேயே மிகவும் மூத்தவரான வார்னர் பிறப்பதற்கு முன்னாலிருந்தே உபயோகத்திலிருந்தது. ஒரு புதிய பெட்டி செய்வதற்காகப் பலமுறை திரு.சம்மர்ஸ் மக்களைக் கேட்டுக் கொண்டும், பாரம்பரியத்திலிருந்து வழுவ விரும்பாததால் யாரும் அதை ஏற்கவில்லை. இந்த மரப்பெட்டி அதற்கு முன்னாலிருந்த மரப்பெட்டியின் சில கட்டைகளைக் கொண்டு செய்யப்பட்டதாகவும், அந்த முதல் பெட்டி இந்தக் கிராமத்தில் மக்கள் முதன்முறையாகக் குடியேறிய போது செய்யப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு வருடமும் திரு.சம்மர்ஸ் ஒரு புதிய பெட்டி செய்வது குறித்து லாட்டரி முடிந்தவுடன் பேசத் தொடங்குவார். ஆனால் அதற்கு யாரும் பிடி கொடுக்காமல் அந்தப் பேச்சு அப்படியே அடங்கி விடும். கருப்புப் பெட்டி ஆண்டுக்கு ஆண்டு வெளிறிப் போய்க் கொண்டிருந்தது; இப்போது அது முழுக் கருப்பு நிறத்தில் இல்லை. ஒரு புறம் மோசமாகப் பிய்ந்து போய், மரத்தின் உண்மையான நிறத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. சில இடங்களில் வெளிறியும், கறைகளுடனும் இருந்தது.

திரு.சம்மர்ஸ் பெட்டியில் இருந்த காகிதங்களை முழுமையாகக் கிளறும் வரை அது ஆடாமல் திரு.மார்ட்டினும் அவரது மூத்த மகன் பாக்ஸ்டரும் அதைப் பிடித்துக் கொண்டனர். சடங்கின் பெரும்பகுதி மறக்கப்பட்டும், விடப்பட்டும் இருந்ததால், திரு.சம்மர்ஸ் அதில் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தப்பட்ட மரத்துண்டுகளுக்குப் பதில் காகிதங்களை ஏற்க வைப்பதில் வெற்றி பெற்றிருந்தார். முன்பு கிராமம் சிறியதாக இருந்தபோது மரத்துண்டுகள் சரியாக இருந்தன. ஆனால் இப்போது அங்கு மக்கட்தொகை முன்னூறுக்கும் அதிகமாகக் கூடி விட்டது, இன்னும் அதிகரிக்கும் என்றும், அந்தக் கருப்புப் பெட்டியில் எளிதாகக் கொள்ளும் அளவுக்கு வேறு எதையாவது போட வேண்டும் என்றும் வாதிட்டார். லாட்டரிக்கு முந்தைய நாள் இரவு திரு.சம்மர்சும், திரு.கிரேவ்சும் துண்டுச் சீட்டுக்களைத் தயார் செய்து அவற்றைப் பெட்டிக்குள் போட்டு திரு.சம்மர்ஸ் அதை அடுத்த நாள் மைதானத்துக்கு எடுத்துச் செல்லும் வரை பாதுகாப்பாக அதை திரு.சம்மர்சின் நிலக்கரி கம்பெனிக்கு எடுத்துச் சென்று வைத்தனர். ஆண்டில் மற்ற நாட்களில் பெட்டி ஒரு சமயம் ஒரு இடத்திலும், இன்னொரு சமயம் இன்னொரு இடத்திலும் வைக்கப்பட்டிருந்தது; ஒரு ஆண்டு அது கிரு.கிரேவ்சின் கொட்டடியிலும், இன்னொரு சமயம் தபால் நிலையத்தின் தரையிலும், இன்னொரு சமயம் மார்ட்டினின் பலசரக்குக் கடையிலும் வைக்கப்பட்டிருந்தது.

Lottery short story by shirley jackson in tamil translation by Ki.Ramesh ஷிர்லி ஜாக்சனின் லாட்டரி சிறுகதை தமிழில் கி.ரமேஷ்

திரு.சம்மர்ஸ் லாட்டரியை முறைப்படி தொடங்கி வைப்பதற்கு முன் நிறையப் பேச வேண்டியிருந்தது. குடும்பங்களின் தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பட்டியலையும் தயார் செய்ய வேண்டியிருந்தது. திரு.சம்மர்சுக்கு முறைப்படி தபால்நிலைய அதிகாரி லாட்டரியை நடத்துபவராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்; ஒரு காலத்தில் எதோ ஒரு மந்திரம் லாட்டரி நடத்துபவரால் உச்சரிக்கப்பட்டதை சிலர் நினைவு வைத்திருந்தனர். அது தானாக வருவதாகவும், எந்த இசையுமின்றி வந்ததாகவும் ஒவ்வொரு வருடமாக அது தேய்ந்து போனதாகவும் அவர்களுக்கு நினைவிருந்தது; சிலர் லாட்டரி நடத்துபவர் அதை உச்சரிக்கும்போது அப்படியே நின்று கொண்டிருக்க வேண்டுமென்றும், சிலர் அவர் கூட்டத்தினரிடையே நடந்து செல்ல வேண்டுமென்றும் நம்பினர். ஒவ்வொரு ஆண்டாக இந்தச் சடங்கு தேய்ந்து போக அனுமதிக்கப்பட்டது. அதே போல லாட்டரியில் தனது சீட்டை எடுக்க ஒவ்வொருவராக வரும்பொது சடங்கு ரீதியாக அவருக்கு லாட்டரி நடத்துபவர் ஒரு மரியாதை செலுத்த வேண்டியிருந்தது. அது மாறிவிட்டாலும், சடங்கு நடத்துபவர் சீட்டு எடுக்க வருபவரிடம் பேச வேண்டியிருந்தது. அவை அனைத்தையும் திரு.சம்மர்ஸ் நன்றாகவே செய்தார்; வெண்ணிறச் சட்டையையும், நீல நிற ஜீன்சையும் அணிந்து கொண்டு, ஒரு கையை அந்தப் பெட்டியின் மேல் அலட்சியமாக வைத்துக் கொண்டு அவர் திரு.கிரேவ்சிடமும், மார்ட்டின்களிடமும் நிற்காமல் அவர் எதோ முக்கியமாகப் பேசிக் கொண்டிருந்தது போல் தோன்றியது.

இறுதியாக திரு.சம்மர்ஸ் பேச்சை நிறுத்தி கூடியிருந்த கிராமத்தினரை நோக்கித் திரும்பியபோது, திருமதி ஹட்சின்சன் ஸ்வெட்டரைத் தனது தோளில் போட்டுக் கொண்டு அவசர அவசரமாக மைதானத்தை நோக்கி ஓடி வந்து கூட்டத்தின் கடைசியில் நின்றார். ”இது எந்த நாள் என்பதை மறந்தே போய் விட்டேன்” என்று தனக்கருகில் நின்ற திருமதி.டெலக்ராய்க்சிடம் சொன்னார். அவர்கள் இருவரும் மென்மையாகச் சிரித்தனர். “என்னுடைய கணவர் பின்பக்கம் விறகை அடுக்கிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்” என்று திருமதி ஹட்சின்சன் தொடர்ந்தார். “பிறகு நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது குழந்தைகள் சென்றிருந்ததைப் பார்த்தேன். அப்புறம்தான் இன்று இருபத்தேழாம் தேதி என்பது நினைவுக்கு வந்து ஓடி வந்தேன்”. அவர் தனது அங்கியில் தனது கையைத் துடைத்துக் கொள்ள, திருமதி டெலக்ராய்க்ஸ் “நீங்கள் சரியான சமயத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். அவர்கள் இன்னும் அங்கே பேசிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.

தனது கழுத்தைத் திருப்பிக் கூட்டத்தினரை சுற்றிப் பார்த்த திருமதி ஹட்சின்சன், தனது கணவரும், குழந்தைகளும் முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் முன்னால் செல்வதாக திருமதி டெலக்ராய்க்சின் கையைத் தட்டிச் சொல்லி விட்டு கூட்டத்தினரிடையே புகுந்து தன் குடும்பத்தினரிடம் நடந்தார். அவருக்கு மற்றவர்கள் நல்மனதுடன் வழிவிட்டனர்; இரண்டு, மூன்று பேர் கூட்டத்தினர் கேட்குமளவுக்குக் குரலை உயர்த்தி, “இதோ உங்கள் மனைவி திருமதி ஹட்சின்சன் வருகிறார், பில் அவர் எப்படியோ வந்து விட்டார்” என்றனர். திருமதி ஹட்சின்சன் காத்துக் கொண்டிருந்த தனது கணவரையும், திரு.சம்மர்சையும் அடைய, “டெஸ்ஸி, எங்கே நீங்கள் இல்லாமல் தொடங்க வேண்டி வந்து விடுமோ என்று நினைத்தேன்” என்று உற்சாகத்துடன் சொன்னார் திரு.சம்மர்ஸ். ”அங்கே தொட்டியில் பாத்திரங்கள் கிடக்க நான் வர நீங்கள் அனுமதிப்பீர்களா ஜோ” என்று திருமதி ஹட்சின்சன் முறைத்துக் கொண்டே கேட்டார். திருமதி ஹட்சின்சன் வந்து சேர்ந்ததும் தமது இடங்களில் பொருந்தி நின்று கொண்ட கூட்டத்தினரிடம் ஒரு மென்மையான சிரிப்பு வெளிப்பட்டது.
திரு.சம்மர்ஸ் இப்போது கடுமையான குரலில், “சரி, இப்போது நாம் வேலைக்கு வருவோம். யாராவது இங்கு இல்லாமல் இருக்கிறார்களா?” என்று கேட்டார்.
”டன்பார்” என்று பலர் சொன்னார்கள். “டன்பார், டன்பார்”.
திரு.சம்மர்ஸ் தனது பட்டியலை சரிபார்த்தார். “கிளை டன்பார்” என்றார். “சரிதான். அவர் தனது காலை உடைத்துக் கொண்டார். சரிதானே? யார் அவருக்காக சீட்டை எடுப்பார்கள்?”

”நான் எடுக்கலாமென்று நினைக்கிறேன்” என்று ஒரு பெண் சொல்ல, திரு.சம்மர்ஸ் திரும்பி அவளைப் பார்த்து விட்டுச் சொன்னார், “மனைவி அவர் கணவருக்காக எடுக்கிறார்.” “உங்களுக்காக எடுக்க உங்களுக்கு ஒரு வளர்ந்த மகன் இல்லையா ஜேனி?” என்று கேட்டார். இதற்கான பதில் திரு.சம்மர்சுக்கும், கிராமத்திலிருந்த மற்ற அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்தாலும், இத்தகைய கேள்விகளைது லாட்டரி நடத்துபவர் கேட்பதே முறை. திருமதி.டன்பார் பதிலளிக்கும் வரை திரு.சம்மர்ஸ் மரியாதையான ஆர்வத்துடன் காத்திருந்தார்.
”அவனுக்கு இன்னும் பதினாறு வயது கூட ஆகவில்லை.” திருமதி டன்பார் வருத்தத்துடன் சொன்னார். “இந்த வருடம் என் கணவருக்காக நான் தான் சீட்டு எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.”

”சரி” என்றார் திரு.சம்மர்ஸ். அவர் தனது கையில் இருந்த பட்டியலில் குறித்துக் கொண்டார். பிறகு, “இந்த வருடம் வாட்சன் பையன் லாட்டரி எடுக்கிறானா?” என்று கேட்டார்.

Lottery short story by shirley jackson in tamil translation by Ki.Ramesh ஷிர்லி ஜாக்சனின் லாட்டரி சிறுகதை தமிழில் கி.ரமேஷ்

கூட்டத்திலிருந்து ஒரு உயரமான பையன் கையை உயர்த்தினான். “இதோ” என்றான். “எனக்காகவும், என் அம்மாவுக்காகவும் நான் எடுக்கிறேன்” என்றான். கூட்டத்தில் பலர் உடனே, “நல்ல பையன்” எனவும், “உன் அம்மாவுக்காக எடுக்க ஒரு பையன் இருக்கிறான் என்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று பேசவும், பையன் தன் தலையை சங்கடத்துடன் குனிந்து கொண்டான்.

”ஆக, எல்லோரும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கிழவர் வார்னர் வந்து விட்டாரா?” என்று கேட்டார் திரு.சம்மர்ஸ்.
”இதோ இருக்கிறேன்” என்று குரல் வர, திரு.சம்மர்ஸ் தலையை ஆட்டிக் கொண்டார்.

திரு.சம்மர்ஸ் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பட்டியலைப் பார்க்கவும், கூட்டத்தில் திடீரென அமைதி நிலவியது. “எல்லாம் தயாரா?” என்று அவர் கேட்டார். “இப்போது நான் பெயர்களைப் படிக்கிறேன் – முதலில் குடும்பத் தலைவர்களின் பெயர் – அவர்கள் வந்து தமது சீட்டை பெட்டியிலிருந்து எடுக்கட்டும். எல்லோரும் தமது சீட்டை எடுக்கும் வரை அவர்கள் தமது சீட்டைப் பிரிக்காமல் கையில் வைத்திருக்க வேண்டும். எல்லோருக்கும் தெளிவாகி விட்டதா?”
கூட்டத்தில் இருந்த மக்கள் இதைப் பலமுறை செய்திருப்பதால், அவர் கூறிய வழிமுறைகளைப் பாதிதான் கேட்டனர்: பலர் தமது உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு சுற்றிப் பார்க்காமல் அமைதியாக இருந்தனர். பிறகு திரு.சம்மர்ஸ் ஒரு கையை உயர்த்தி, “ஆடம்ஸ்” என்று அழைத்தார். ஒரு மனிதர் கூட்டத்திலிருந்து வெளிவந்தார். “ஹை,ஸ்டீவ்” என்று முகமன் கூறினார் திரு.சம்மர்ஸ். “ஹை, ஜோ”. அவர்கள் இருவரும் எந்தச் சிரிப்புமின்றி சங்கடத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு திரு.ஆடம்ஸ் பெட்டிக்குள் கையை விட்டு ஒரு சீட்டை எடுத்தார். அதை ஒரு முனையில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு கூட்டத்தில் தனது இடத்துக்கு வந்தார். தனது கையில் இருப்பதைக் குனிந்து பார்க்காமல் தனது குடும்பத்தினரிடமிருந்து சற்று விலகி நின்றார்.
”ஆலன்”, “ஆண்டர்சன்”, ….”பெந்தாம்” என்று படித்துக் கொண்டே வந்தார் திரு.சம்மர்ஸ்.

”இரண்டு லாட்டரிகளுக்கிடையே நேரமே இல்லாதது போல் தோன்றுகிறது” என்று திருமதி டெலக்ராய்க்ஸ் தன் பின்வரிசையில் நின்ற திருமதி.கிரேவ்சிடம் சொன்னார்.

”போன வாரம்தான் ஒரு லாட்டரி நடந்தது போல் இருக்கிறது.”

”காலம் வேகமாகத்தான் போகிறது” என்றார் திருமதி.கிரேவ்ஸ்.

”கிளார்க் . . . .டெலக்ராய்க்ஸ்”

”அதோ என் கணவர் போகிறார்” என்றார் திருமதி டெலக்ராய்க்ஸ். அவர் தன் கணவர் முன்னால் போகும்போது தன் மூச்சைப் பிடித்துக் கொண்டார்.
”டன்பார்” என்று அழைத்தார் திரு.சம்மர்ஸ். திருமதி டன்பார் பெட்டியிடம் சென்றார். கூட்டத்திலிருந்து ஒரு பெண்மணி, “போ ஜேனி” என்று சொல்ல, இன்னொருவர் “இதோ அவர் போகிறார்” என்றார்.

”நாம்தான் அடுத்தது” என்றார் திருமதி கிரேவ்ஸ். திரு கிரேவ்ஸ் பெட்டியைச் சுற்றி வந்து இறுகிய முகத்துடன் திரு.சம்மர்ஸுக்கு வணக்கம் சொல்லி விட்டுப் பெட்டியிலிருந்து ஒரு சீட்டை எடுத்ததை அவர் கவனித்துக் கொண்டே இருந்தார். இப்போது கூட்டத்திலிருந்த ஆண்கள் அனைவரும் தமது அகன்ற கைகளில் சீட்டை சுருட்டிக் கொண்டிருந்தனர். திருமதி டன்பாரும் அவரது இரண்டு மகன்களும் சேர்ந்து நிற்க, திருமதி டன்பார் கையில் சீட்டை வைத்திருந்தார்.

”ஹார்பர்ட் . . . ஹட்சின்சன்”

”எழுந்திரு பில்” என்றார் திருமதி ஹட்சின்சன், அவருக்கருகில் இருந்த கூட்டத்தினர் அனைவரும் சிரித்தனர்.
”ஜோன்ஸ்”

”வடக்கில் இருக்கும் கிராமத்தில் லாட்டரியை விட்டு விடுவது பற்றிப் பேசுகிறார்களாம்” என்று திரு.ஆடம்ஸ் தனக்கருகில் நின்ற கிழவர் வார்னரிடம் சொன்னார்.
கிழவர் வார்னர் வெறுப்புடன் கனைத்தார். “பைத்தியக்கார முட்டாள் கூட்டம்” என்றார் அவர். “இளைஞர்கள் சொல்வதைக் கேட்கிறார்கள். எதுவும் நல்லதற்கில்லை. அப்புறம் அவர்கள் மீண்டும் குகைகளில் வசிக்கச் செல்வார்கள், யாரும் இனி உழைக்க மாட்டார்கள், அப்படியே கொஞ்சம் வாழுவார்கள். ‘ஜூனில் லாட்டரி, விரைவில் சோளம் பெருகும்’ என்று ஒரு பழமொழி உண்டு. முதலில் கொண்டைக் கடலையையும், கருவாலிக் கொட்டையையும் நாம் தின்று கொண்டிருப்போம். எப்போதுமே லாட்டரி இருந்தது” என்று அவர் பிடிவாதமாகக் கூறினார். “அங்கு நிற்கும் இளம் ஜோ சம்மர்ஸ் எல்லாரிடமும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருப்பதை பார்ப்பதே மோசமானது.”

”சில இடங்களில் ஏற்கனவே லாட்டரியை விட்டு விட்டார்கள்” என்றார் திருமதி.ஆடம்ஸ். “அதனால் பிரச்சனைதான் ஏற்பட்டது” என்று உறுதியாகச் சொன்னார் கிழவர் வார்னர். “முட்டாள் இளைஞர் குழு.” “மார்ட்டின்”. பாபி மார்ட்டின் தனது தந்தை முன்னால் செல்வதைப் பார்த்தான். “ஓவர்டைக் . ,. . பெர்சி.” “அவர்கள் வேகமாகச் சென்றால் நல்லது” என்ரு திருமதி டன்பார் தனது மூத்த மகனிடம் சொன்னார். “அவர்கள் வேகமாகச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன்.” “அவர்கள் ஏறத்தாழ முடித்து விட்டார்கள்” என்றான் அவரது மூத்த மகன். ”அப்பாவிடம் ஓடிப் போய்ச் சொல்வதற்கு நீ தயாராக இரு” என்றார் திருமதி.டன்பார்.
திரு.சம்மர்ஸ் தன் பெயரைத் தானே அழைத்துக் கொண்டு முன்னால் வந்து பெட்டியிலிருந்து ஒரு சீட்டை எடுத்தார். பிறகு அழைத்தார், “வார்னர்.”
”எழுபத்து ஏழு வருடமாக நான் லாட்டரியில் பங்கு பெறுகிறேன்” என்று திரு.வார்னர் கூட்டத்தின் இடையே செல்லும்போது கூறினார். “எழுபத்து ஏழாவது முறை.”
”வாட்சன்”. ஒரு உயரமான பையன் கூட்டத்திலிருந்து அசட்டுத்தனமாக வெளியே வந்தான். யாரோ சொன்னார்கள், “பதட்டப்படாதே ஜாக்”. திரு.சம்மர்ஸ், “மெதுவா வா பையா” என்றார்.

”ஸனானி”

பிறகு ஒரு நீண்ட அமைதிக்குப் பிறகு திரு.சம்மர்ஸ் தனது சீட்டை காற்றில் ஆட்டிக் காட்டும் வரை மூச்சு விடாமல் இருந்தது கூட்டம். “சரி, மக்களே”. ஒரு நிமிடம், யாருமே அசையவில்லை. பிறகு அனைத்துச் சீட்டுகளும் பிரிக்கப்பட்டன. திடீரென, ஒரே நேரத்தில் எல்லாப் பெண்களும் பேசத் தொடங்கினர், “யார் அது, யார் அது?” “டன்பாரா?”, “வாட்சனா?” . பிறகு குரல்கள், “அது ஹட்சின்சன், அது பில்”, “ஹட்சின்சனிடம் கிடைத்துள்ளது” என்று குரல்கள் கேட்கத் தொடங்கின.
”போய் உன் அப்பாவிடம் சொல்,” என்று திருமதி டன்பார் தன் மூத்த மகனிடம் சொன்னார்.
மக்கள் ஹட்சின்சன்களைப் பார்க்கத் திரும்பத் தொடங்கினர். பில் ஹட்சின்சன் அமைதியாகத் தன் கையில் இருந்த சீட்டைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். திடீரென, டெஸ்ஸி ஹட்சின்சன் திரு.சம்மர்சிடம், “நீங்கள் அவர் விரும்பிய சீட்டை எடுப்பதற்கு உரிய நேரத்தைக் கொடுக்கவில்லை. நான் பார்த்தேன். இது நியாயமல்ல!” என்று கத்தினார்.

”நல்ல விளையாட்டு விளையாடுங்கள், டெஸ்ஸி” என்று திருமதி டெலக்ராய்க்ஸ் சொல்ல, திருமதி க்ரேவ்ஸ், “நாங்கள் எல்லோரும் அதே நேரம் எடுத்துக் கொண்டோம்” என்றார்.

”வாயை மூடு டெஸ்ஸி” என்று பில் ஹட்சின்சன் சொன்னார். “சரி, அது வேகமாகவே முடிந்தது. இப்போது இன்னும் கொஞ்சம் வேகமாக வேலையை முடிக்க வேண்டும்” என்றார் திரு.சம்மர்ஸ். அவர் தனது அடுத்த பட்டியலைப் பார்த்தார். “பில், நீங்கள் ஹட்சின்சன் குடும்பத்துக்குள் தேர்ந்தெடுங்கள். ஹட்சின்சன் குடும்பத்தில் வேறு யாரும் இருக்கிறார்களா?”.

”டானும், இவாவும் இருக்கிறார்கள்” என்று திருமதி ஹட்சின்சன் கத்தினார். “அவர்கள் தமது வாய்ப்பைப் பயன்படுத்தட்டும்.”
”மகள்கள் தமது கணவர்களின் குடும்பத்துடன் லாட்டரி எடுப்பார்கள் டெஸ்ஸி” என்று திரு.சம்மர்ஸ் மென்மையாகச் சொன்னார். “இது எல்லாரையும் போலத்தான் என்பது உங்களுக்குத் தெரியும்.”

”இது நியாயமே அல்ல” என்றார் டெஸ்ஸி.

”நான் அப்படி நினைக்கவில்லை” என்று பில் ஹட்சின்சன் வருத்தத்துடன் சொன்னார். “என் மகள் தனது கணவர் குடும்பத்துடன் எடுத்தாள்; அதுதான் நியாயம். எனக்குக் குழந்தைகளைத் தவிர வேறு குடும்பம் எதுவும் இல்லை.”

”பிறகு, குடும்பத்தைப் பொருத்தவரை ஆளைத் தேர்ந்தெடுப்பது நீங்கள்தான்” என்றார் சம்மர்ஸ். “வீட்டு வேலையாட்களைப் பொருத்தவரையும் நீங்கள்தான் தேர்வு செய்வீர்கள், சரியா?” என்றார்.

”சரி” என்றார் பில் ஹட்சின்சன். “எத்தனை பிள்ளைகள், பில்?” என்று முறையான வகையில் திரு.சம்மர்ஸ் கேட்டார்.

”மூன்று” என்றார் பில் ஹட்சின்சன்.

”அது பில் ஜூனியர். நான்சி, சின்னவன் டேவ். டெஸ்ஸி, நான்.”

”அப்ப சரி. ஹாரி நீ அவர்களின் சீட்டுக்களை திரும்ப வாங்கிக் கொண்டாயா?”

திரு.கிரேவ்ஸ் தலை ஆட்டி விட்டு அந்தச் சீட்டுக்களைக் கொடுத்தார். “அவற்றைப் பெட்டிக்குள் போடுங்கள்” என்று திரு.சம்மர்ஸ் சொன்னார். “பில்லுடையதையும் வாங்கிப் பெட்டியில் போடுங்கள்.”

”நாம் திரும்ப லாட்டரி நடத்த வேண்டுமென்று நினைக்கிறேன்” என்று ஹட்சின்சன் முடிந்தவரை குரலைக் குறைத்துச் சொன்னார் திருமதி ஹட்சின்சன். ”இது நியாயமே இல்லை என்று நான் சொல்கிறேன். நீங்கள் அவருக்குப் போதிய நேரம் கொடுக்கவில்லை. எல்லாரும் அதைப் பார்த்தார்கள்.”
திரு.கிரேவ்ஸ் ஐந்து சீட்டுக்களைத் தேர்வு செய்து பெட்டியில் போட்டார். பிறகு மற்றவையைத் தரையில் போட, அவை காற்றில் பறந்தன. “எல்லோரும் கேளுங்கள்” என்று திருமதி ஹட்சின்சன் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் பேசினார். “தயாரா பில்?” என்று திரு.சம்மர்ஸ் கேட்க, பில் ஹட்சின்சன் வேகமாகத் தன் மனைவியையும், குழந்தைகளையும் பார்த்து விட்டுத் தலையாட்டினார்.

”நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் ஒரு சீட்டை எடுத்து விட்டு அனைவரும் எடுக்கும் வரை மூடி வையுங்கள். ஹாரி, நீ குட்டிப் பையன் டேவுக்கு உதவி செய்” என்றார் திரு.சம்மர்ஸ். திரு.கிரேவ்ஸ் தானே பெட்டியிடம் விரும்பி வந்த குட்டிப் பையனின் விரலைப் பிடித்துக் கொண்டார். “டேவி, ஒரு சீட்டை எடு” என்றார் திரு.சம்மர்ஸ். டேவி தன் கையைப் பெட்டிக்குள் விட்டு விட்டுச் சிரித்தான். “ஒரே ஒரு சீட்டை எடு” என்ற சம்மர்ஸ், “ஹாரி, நீ அவனுக்காக எடு” என்றார். திரு.கிரேவ்ஸ் குழந்தையின் கையை எடுத்து, அவன் கையில் இறுக்கமாகப் பிடித்திருந்த சீட்டை எடுத்துக் கொள்ள, சிறுவன் அருகில் நின்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தான்.

”அடுத்தது நான்சி” என்றார் திரு.சம்மர்ஸ். நான்சிக்கு வயது பன்னிரண்டு. அவள் தன் பாவாடையைப் பிடித்துக் கொண்டு பெட்டியிடம் வந்த போது அவளது பள்ளி நண்பர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டனர். “பில் ஜுனியர்” என திரு.சம்மர்ஸ் அழைக்க, பில்லி சிவந்து போன முகத்துடன், தன் கால்கள் பின்ன, ஒரு சீட்டை எடுத்த போது கிட்டத்தட்ட பெட்டியில் இடித்துக் கொண்டான். ”டெஸ்ஸி” என்று திரு.சம்மர்ஸ் அழைக்க, அவர் ஒரு நிமிடம் தயங்கி எல்லோரையும் விரோதமாகப் பார்த்து விட்டுத் தன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு பெட்டியிடம் சென்றார். ஒரு சீட்டை வெடுக்கென எடுத்துக் கொண்டு தன் பின்னால் மறைத்துக் கொண்டார்.
”பில்” என்று திரு.சம்மர்ஸ் அழைக்க, பில் ஹட்சின்சன் பெட்டிக்குச் சென்று அதில் இருந்த கடைசிச் சீட்டை எடுத்துக் கொண்டார்.
கூட்டம் அமைதியாக இருந்தது. ஒரு சிறுமி கிசுகிசுத்தாள், “ அது நான்சியாக இருக்காது என்று நான் நம்புகிறேன்”. அந்தக் கிசுகிசுப்பான குரல் கூட்டத்தின் கடைசி வரை கேட்டது.

”இது முன்பு போல் இல்லை” என்று தெளிவாகச் சொன்னார் கிழவர் வார்னர். “மக்களும் முன்பு இருந்தது போல் இல்லை.”
”சரி, சீட்டுக்களை திறங்கள். ஹாரி நீங்கள் டேவியின் சீட்டைத் திறங்கள்” என்றார் திரு.சம்மர்ஸ்.

Lottery short story by shirley jackson in tamil translation by Ki.Ramesh ஷிர்லி ஜாக்சனின் லாட்டரி சிறுகதை தமிழில் கி.ரமேஷ்

திரு.கிரேவ்ஸ் தன் கையிலிருந்த சீட்டைத் திறந்து கூட்டத்தினரிடம் உயர்த்திக் காட்டினார். அது வெறுமையாக இருந்ததைப் பார்த்துக் கூட்டம் பெருமூச்சு விட்டது. நான்சி, பில் ஜூனியர், தமது சீட்டைத் திறந்து பார்த்து விட்டு பெருமூச்சு விட்டுச் சிரித்து விட்டுக் கூட்டத்தினரிடம் திரும்பிச் சீட்டை உயர்த்திக் காட்டினர்.
”டெஸ்ஸி” என்று அழைத்தார் திரு.சம்மர்ஸ். ஒரு நிமிடம் அமைதி நிலவியது. பிறகு திரு.சம்மர்ஸ் பில் ஹட்சின்சனைப் பார்த்தார். பில் தனது சீட்டைப் பிரித்துக் காட்டினார். அது வெறுமையாக இருந்தது.

”டெஸ்ஸிதான்” என்றார் திரு. சம்மர்ஸ். அவரது குரல் அமைதிப்பட, “அவளது சீட்டைக் காட்டுங்கள், பில்” என்றார்.
பில் ஹட்சின்சன் தன் மனைவிடம் சென்று வலுக்கட்டாயமாக அவளிடம் இருந்த சீட்டைப் பிடுங்கினார். அதில் ஒரு கருப்புப் புள்ளி இருந்தது. அது திரு. சம்மர்ஸ் முந்தைய நாள் இரவு தன் நிலக்கரி கம்பெனி அலுவலகப் பென்சிலால் அழுத்தமாக வைத்திருந்த புள்ளி. பில் ஹட்சின்சன் அதை உயர்த்திக் கூட்டத்தினரிடம் காட்ட, கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.

”சரி மக்களே. இப்போது வேகமாக முடிப்போம்” என்றார் திரு.சம்மர்ஸ்.

கிராமத்தினர் சடங்கை மறந்து, உண்மையான கருப்புப் பெட்டியை இழந்திருந்தாலும், அவர்களுக்கு இன்னும் கற்களின் பயன்பாடு தெரிந்திருந்தது. சிறுவர்கள் முன்பு குவித்து வைத்திருந்த கற்கள் தயாராக இருந்தன; கீழே தரையில் பறந்த சீட்டுக்களைப் பிடித்துக் கொண்டு இருந்த கற்கள் இருந்தன. டெலக்ராய்க்ஸ் ஒரு பெரிய கல்லைத் தன் இரு கைகளாலும் பிடித்துத் தூக்கிக் கொண்டு திருமதி டன்பாரிடம், “வா, வேகமாக வா” என்றார்.
திருமதி டன்பார் தன் இரு கைகளிலும் பெரிய கற்களைத் தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கினார். “என்னால் ஓடவே முடியாது. நீங்கள் முன்னே ஓடுங்கள், நான் பின்னால் வருகிறேன்” என்றார்.

Lottery short story by shirley jackson in tamil translation by Ki.Ramesh ஷிர்லி ஜாக்சனின் லாட்டரி சிறுகதை தமிழில் கி.ரமேஷ்

குழந்தைகளிடம் ஏற்கனவே கற்கள் தயாராக இருந்தன. யாரோ குட்டி டேவி ஹட்சின்சனிடம் சில சிறு கற்களைக் கொடுத்தார்கள்.
டெஸ்ஸி ஹட்சின்சனைச் சுற்றி ஒரு வெற்றிடம் உருவாகி இருக்க, நடுவில் நின்றார் அவர். அவள் தன் கைகளை நம்பிக்கையற்றுப் போய் நீட்ட, கிராமத்தினர் அவரை நெருங்கினர். “இது நியாயமே இல்லை” என்றார் அவர். ஒரு கல் அவரது தலையில் ஒரு பக்கத்தைத் தாக்கியது. கிழவர் வார்னர், “வாருங்கள், எல்லோரும் வாருங்கள்” என்று அழைக்க, ஸ்டீவ் ஆடம்ஸ் கிராமத்தினர் கூட்டத்தின் முன் இருக்க, திருமதி.கிரேவ்ஸ் உடன் சென்றார்.

”இது நியாயமல்ல. இது சரியல்ல” என்று திருமதி.ஹட்சின்சன் அலற, எல்லோரும் அவர்மீது பாய்ந்தனர்.

1948ஆம் ஆண்டில் நியூயார்க்கரில் ஷிர்லி ஜாக்சன் எழுதி வெளியான சிறுகதை இது. ஏன் இந்த லாட்டரி நடைபெறுகிறது என்பது கடைசி வரை தெரியாமல் எடுத்துச் செல்லப்படுகிறது. சில கிராமங்கள் இந்த லாட்டரியைக் கைவிட முயல்வதைச் சுட்டிக் காட்டி இது தவறு என்று ஒரு பாத்திரம் வாதிடுகிறது. காலகாலமாக இந்தச் சடங்கு எப்படிச் செய்யப்பட்டது என்று மறக்கப்பட்டாலும், கடைசியில் இந்தச் சடங்கு ஒரு உயிரைத் தேவையில்லாமல் பலி வாங்குகிறது. ஏன் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. அர்த்தமின்றி எதோ ஒரு காலத்தில் செய்யப்பட்ட சடங்குகள் இன்றும் தொடர்வதை மன வேதனையுடன் சுட்டிக் காட்டும் சிறுகதையாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

Modi Atchiyil Seerazhindha Triuppur

மோடி ஆட்சியில் சீரழிந்த திருப்பூர் | வே. தூயவன்

அறிமுகம் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனை குறித்துதமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறுக்கிட்டு, (வேலையில்லை என்பவர்கள் திருப்பூருக்குப் போகட்டும், அங்கே வேலை தாராளமாகக் கிடைக்கும்!) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக…