Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் சமூக-பொருளாதார மேம்பாடு: ஒரு நூற்றாண்டின் ஒப்பாய்வு



சுருக்கம்

சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டும் நாட்டின் முக்கிய தரவுகோல்களாகும். சமூக மேம்பாடு அடைய, சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கல்வி, சுகாதரம், வேலைவாய்ப்பு போன்றவற்றினைச் சமஅளவில் அனுகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகும். இவற்றை நாம் “சமூக நீதி” என்கிறோம். பொருளாதார வளர்ச்சி சமூக மேம்பாட்டைத் தவிர்த்து அடைய முடியாது. இந்தியா பல்வேறு இன, மத, மொழி குழுக்களை உடையது. இக்குழுக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது. சமூகச் சீர்திருத்தங்களால் இவ்ஏற்றத்தாழ்வினைக் குறைக்க முடியும். இந்தியாவில் புத்தர் தொடங்கி, இன்றுவரை சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இச்சீர்திருத்தங்களை அரசியல் வழியாகக் கடந்த காலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டு வந்திருக்கிறது. தமிழ்நாடு சமத்துவம், சமூக நீதியின் உரைவிடமாகும். வள்ளலார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரால் சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் மக்களிடம் விதைக்கப்பட்டுள்ளது. இக்கருத்துகளை நடைமுறைப்படுத்த கடந்த ஒரு நூற்றாண்டாக 1921ஆம் ஆண்டு நீதிக் கட்சி தொடங்கி, தற்போது உள்ள திராவிடக் கட்சி ஆட்சி வரை தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள் பல முயற்சிகளை எடுத்துள்ளன. அதன் பயன் தமிழ்நாடு இந்திய அளவில் ஒரு முன்மாதிரி மாநிலமாக, சமூக-பொருளாதார நிலைகளில் இனம் காணப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் கடந்த ஒரு நுற்றாண்டாகத் தமிழ்நாட்டை ஆண்ட மூன்று கட்சிகளின் (நீதிக் கட்சி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி, திராவிடக் கட்சி) ஆட்சிக் காலங்களில் கல்வி, சுகாதாரம், தொழில் துறை, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை என்பதை ஒப்பீட்டு அளவில் மூன்று கட்டங்களாகப் பிரித்து ஆய்விட முனைகிறது இக்கட்டுரை இரண்டாம் நிலைப் புள்ளி விவரங்களை அரசு ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து இவ்வாய்விற்குப் பயன்படுத்தியுள்ளது.

முன்னுரை

உலகில் உள்ள சமூகக் குழுக்கள் பலவேறு நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளப் பெரும்சவால்களை எதிர்கொண்டன. வலிமையான சமூகக் குழுக்கள் மற்றவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதும், அவற்றை அழித்தொழிக்கும் செயலையும் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் செய்துகொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூதாயம் தங்களின் உரிமைகளைப் பெற, சிலர் தலைமையின் விழித்தெழுந்து வெகுகாலம் போராடவேண்டியுள்ளது. சமுதாயத்தில் காலம்காலமாகக் காணப்படும் ஆண்டான் அடிமையினையும், சமுதாயத்தில் புரையோடி இருந்த மூடநம்பிக்கைகளைப் போக்கவும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அறிஞர் பலர் விதைத்துச் சென்றுள்ளனர். இந்தியாவில் சமூகச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர்களில் புத்தர் தொடங்கி, இன்று வரை பலர் உண்டு. மனித மேம்பாடு சமூகச் சீத்திருத்தங்களினால் தான் அடைய முடியும் என்று கடந்த ஒரு நூற்றாண்டாக நாம் கண்கூடாக அறிந்திருக்கிறோம்.

இந்தியாவில் பல சமூகச் சீர்திருத்தவாதிகள் இருந்தாலும் அவர்களில் மகாத்மா ஜோதிராவ் புலே, ஸ்ரீ நாராயண குரு, தந்தை பெரியார் போன்றோரால் சமுதாயத்தின் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள்களின் உரிமைகளைப் பெறப் பெரும் பங்காற்றியவர்களாவார்கள். இவர்களின் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அரசியல்தளங்களில் நாளடைவில் உள்வாங்கிக்கொண்டு நாட்டில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டது. சமூதாயம் மேம்படும்போது அதன் சஙகலித்தொடராக பொருளாதாரநிலை மேம்படத்; தொடங்கும். இதனால் வறுமை ஒழியும், சமத்துவம் ஊண்றத் தொடங்கும். இந்தியாவில் குறிப்பிட்ட சில (தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா) மாநிலங்கள் சமூக-பொருளாதார தளங்களில் உயர்நத்து நின்று உள்ளடக்கிய வளர்ச்சியின் வழியில் பயனிக்கிறது.

இந்தியாவில் உள்ள மநிலங்களில் தமிழ்நாடு சமூக-பொருளாதார தளத்தில் ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் பல வழிகளில் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது. இடஒதுக்கீடு, ஆண்-பெண் சமத்துவம், கல்வி அறிவு, அளவான குடும்பம், இருமொழிக்கொள்கை என்ற சமூக நிலையிலும் வேளாண்மை, தொழில் துறை மேம்பாடு என்ற பொருளாதாரத் தளத்திலும் இந்தியாவிலேயே முன்னேடியான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் 4 விழுக்காடு நிலப் பங்கினைப் பெற்றுள்ளது ஆனால் 5.96 விழுக்காடு மக்களைப் பெற்றுள்ளது. பொருளாதார நிலையில் தமிழ் நாடு ஒட்டுமொத்தத் தேசிய வருமானத்திற்கு 8.59 விழுக்காடு பங்கினை அளித்து இரண்டாவது இடத்தை மார்ச்சு 2021இல் வகிக்கிறது (https://statisticstimes.com/economy/india/indian-states-gdp.php). பத்தாண்டுகளுக்கு (2000-01ல்) முன்பு இது 7.62 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது (Shanmugam 2012). இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டை, கடந்த 100 ஆண்டுகளாக ஆண்ட அரசியல் கட்சிகள் என்றால் அது மிகையாகாது. சமூகச் சீர்திருத்தங்களைத் தமிழ்நாட்டில் பரப்பியவர்களில் முதன்மையானவர்கள் இராமலிங்க அடிகளார், பெரியார், அண்ணா, கலைஞர் முதலியோர். இதன் விளைவு தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில்  இல்லாத வகையில் சக மனிதனை மனிதனாக மதிக்கக்கூடிய நிலையும், சாதிய அடையாளங்களைப் பெயருக்குப் பின்னால் துறந்த நிலையும் இன்று காண முடிகிறது. மேற்கண்ட அறிஞர்களின் கருத்துகளைச் செயல் வடிவம் கொடுத்து நடைமுறைப்படுத்தியது தமிழ்நாட்டை ஆண்ட அரசியல் கட்சிகளே ஆகும்.

அவ்வகையில் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அரசியல் தளங்களை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம் அவை நீதிக் கட்சிக் காலம், இந்திய தேசிய காங்கிரஸ் காலம், திராவிடக் கழகங்களின் (திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) காலம் எனலாம். திராவிடக் கட்சிகளின் ஆணி வேராகத் திகழ்வது நீதிக் கட்சியாகும். இக்கட்சியின் ஆளுகை தொடங்கப்பட்டு (சட்டமன்றம் 17.12.1920 தொடங்கப்பட்டது இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளது) 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து நீதிக் கட்சி முன்னெடுத்த செயல்பாடுகளை திராவிடக் கட்சிகள் ஏற்றது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் ஏற்று அதே வழியில் சமூகச் சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தியுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இதன் வெளிப்பாடு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்சசி, தொழில் நுட்ப மேம்பாடு எனப் பல தளங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. இந்தப் பின்னணியில் இக்கட்டுறையின் முதன்மை நோக்கம் தமிழ்நாட்டை ஆண்ட இம்மூன்று கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் கல்வி, சுகாதாரம், தொழில்துறை, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை ஒப்பீட்டு அளவில் மூன்று கட்டங்களாகப் பிரித்து ஆய்விட முனைகிறது இக் கட்டுரை இரண்டாம் நிலைப் புள்ளிவிவரங்களை அரசு ஆவணங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து இவ் ஆய்விற்குப் பயன்படுத்தியுள்ளது.

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள்

சென்னை மாகாணம் 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. 1953ல் ஆந்திரப்பிரதேசம் மொழிவாரிய மாநிங்கள் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்றது. நவம்பர் 1, 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு புதிய சென்னை மாகாணம் உருவானது. மாநிலத்தின் சிலபகுதிகள் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி பொன்ற மாநிலங்களுக்குச் சென்றது (Perumalswamy 1985). சென்னை மாகாணம் என்று இருந்ததை, திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்ச்சியில் அமர்நததும் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம் 14 ஜனவரி 1969 முதல் நடைமுறைக்கு வந்தது.

அட்டவணை 1: தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளும் முதலமைச்சர்களும்

கட்சிகள்

ஆண்டு

முதலமைச்சர்கள்

நீதிக் கட்சி

1920 முதல் 1937 முடிய

ஏ.சுப்பராயலு ரெட்டியார், பனங்கல் அரசர், பி.சுப்பராயன், பி. முனுசாமி நாயுடு, ராமகிருஷ்ண ரங்கராவ், பி.டி.ராஜன், குர்மா வெங்கட ரெட்டி நாயுடு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி

1937 முதல் 1967 முடிய

சி.ராஜகோபாலாச்சாரி, டங்குத்துரி பிரகாசம், ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, கு.காமராஜ், எம்.பக்தவச்சலம்,

திராவிடக்
கட்சிகள்

1967 முதல் 2021 தற்போது வரை

சி.என்..அண்ணாதுரை, எம்.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின்

ஆதாரம்: Ramakrishnan T (2021): “T.N. Legislature Turns 100,” The Hindu, 1.8.2021, p.4.

நீதிக்கட்சி 17.12.1920 முதல் 14.07.1937 வரை 17 ஆண்டுகள் அன்றைய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்தது. இதில் திரு.ஏ.சுப்ராயலு ரெட்டியார் தொடங்கி திரு. குமார வெங்கட்ட ரெட்டி நாயுடு வரை 7 முதலமைச்சர்கள் (தொடக்கத்தில் மாநிலப் பிரதமர் என அழைக்கப்பட்டனர்) ஆட்சி செலுத்தினர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 14.07.1937 முதல் 06.03.1967 முதல் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டது. இதில் திரு.சி.ராஜகோபாலாச்சாரி தொடங்கி, திரு. எம். பக்தவச்சலம் முடிய 6 முதலமைச்சர்கள் ஆட்ச்சி செய்தார்கள். திரு. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், திரு. காமராஜ் போன்ற திறன்மிக்க முதலமைச்சர்கள் இவர்களில் அடங்குவர்.

திராவிடக் கழகக் கட்சிகள் 06.03.1967 முதல் தற்போது வரை 54 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம் சி.என். அண்ணாதுரை தொடங்கி, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முதலமைச்சராக இக்காலக்கட்டங்களில் ஆட்சியிலிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது திரு.மு.க.ஸ்டாலின் முதல்வராகத் தொடர்கிறார். 1921 முதல் தற்போது வரை 22 முதல்வர்களைத் தமிழ்நாடு கண்டுள்ளது.

இக்காலகட்டங்களில் பல புகழ்மிக்க வல்லவர்கள் தமிழகச் சட்டமன்றத்தில் கோலாச்சியவர்கள் பலர் அவர்களில் முக்கியமானவர்கள் எ. ராமசாமி முதலியார், எ. லட்சுமணசாமி முதலியார், சத்திய மூர்த்தி, சி.பி. ராமசாமி ஐயர், பி.டி. ராஜன், ஆர்.கே.சண்முகம் செட்டியார், கிருஷ்ணய்யர், சி.சுப்பரமணியம், ஆர்.வெங்கட்டராமன், கே.வினாயகம், இராமசாமி படையாச்சியார், வி.ஆர்.நெடுஞ்செழியன், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், என்.சங்கரய்யா, நல்லக்கண்ணு, ஆர்.உமாநாத், குமரி ஆனந்தன், துரைமுருகன் இவர்களின் சட்டமன்றச் செயல்பாடுகள் தமிழக மேம்பாட்டிற்குப் பெருமளவில் உதவியது என்றால் அது மிகையாகாது.

சமூக மேம்பாடு – கல்வி, சுகாதாரம்

தமிழ்நாட்டில் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 3 விழுக்காடு பங்குகொண்ட சில முன்னேறிய வகுப்பினர் கல்வி, நிருவாகம், வேலைவாய்ப்பில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதனால் இதர பிரிவினர் பெருமளவிற்குக் கல்வி-வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டனர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணர் அல்லாத கல்வி பெற்றவர்கள் கல்வி, நிருவாகம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் புறக்கணிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக, பி.டி.தியாகராய செட்டியாரால் ‘தென்இந்திய நல உரிமைக் கூட்டமைப்பு’ 1916ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இது பின்னால் ‘நீதிக் கட்சி’ என்று அழைக்கப்பட்டது (Mohan Ram 1974). அன்றைய நிலையில் மக்கள் தொகையில் 3.2 விழுக்காடாக மட்டுமே இருந்த பிராமணர்கள், மொத்தமான 130 உதவி ஆட்சியாளர்களில் 77 பேர் இருந்தனர், அதாவது 55 விழுக்காடு ஆகும். இதுபோன்றே நீதித்துறை, மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் உயர்பதவிகளில் இவர்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்தது. 1920ல் சென்னை மாகாணத்தில் ஆட்சியினைப் பிடித்த நீதிக்கட்சி, தொடக்கக் கல்வி பெறுவதை ஊக்குவிக்க மதிய உணவுத் திட்டம் மெட்ராஸில் (ஆயிரம் விளக்கு பகுதியில்) 1925ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது, மாணவர்களுக்கான உறைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டது, 1920ஆம் ஆண்டு மெட்ராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டுத் தொடக்கக் கல்வி கட்டாயம் என்றானது. இதனால் பெருமளவிற்குத் தொடக்கக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன, உயர்கல்வி பெறுவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகச் சட்டம் இயற்றப்பட்டது, ஆந்திரா பல்கலைக்கழகம் (1929ஆம் ஆண்டு) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (1926ஆம் ஆண்டு) போன்றவை தொடங்கப்பட்டன. வேலைவாய்பில் பிராமணர் அல்லாதோர் பயனடையும் வகையில் இந்தியாவில் முதன்முதலாக இடஒதுக்கீடு 16 செப்டம்பர் 1921ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 1928ஆம் ஆண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவு நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் கல்வி அறிவு பெற்றோர் 1921 மற்றும் 1941ஆம் ஆண்டுகளுக்கிடையே இரண்டுமடங்கு அதிகரித்தது. வேலைவாய்ப்பினை அனைத்துப் பிரிவினரும் பெற இந்தியாவிலேயே முதன்முதலாக அரசு தேர்வாணைக்குழு 1929ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது (ஜெயராமன் 2021).

அடுத்து வந்த காங்கிரஸ் அதிக அளவில் தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. மேலும் இந்தியாவிலேயே சென்னை மாகாணத்தில் முதன்முதலாகத் தனிஒதுக்கீடு 1947ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீட்டிற்கு எதிராக நீதி மன்றத்தின் மூலம் முட்டுக்கட்டை ஏற்பட்டபோது தமிழகமே கொதித்து எழுந்தது. அதற்குத் தலைவணங்கிய ஒன்றி அரசு, 1950ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுப் பிற்படுத்தப்பட்டோரும் பயன்பெறும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் 300 மக்கள் தொகையுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்பப் பள்ளியினை அமைக்கத் திட்டமிட்டார். மதிய உணவுத்திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்தி ஏழை எளிய மக்கள் கல்வி பயில வழிவகை செய்தார். இதனால் 1951ஆம் ஆண்டு 16037 எண்ணிகையிலான ஆரம்பப் பள்ளிகள் 1967ஆம் ஆண்டு 33529 பள்ளிகளாக உயர்ந்தன. இதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1951ஆம் ஆண்டு 1852 மில்லியனிலிருந்து 1961ஆம் ஆண்டு 3558 மில்லியனாக உயர்தது. 1969ஆண்டு கணக்கின்படி 30663 பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது இதனால் 18.32 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். இலவசச் சீருடைத் திட்டம் இக்காலகட்டங்களில் தான் தொடங்கப்பட்டது. இது போன்றே உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

அட்டவணை 2: தமிழ்நாட்டின் மக்கள்தொகையும் கல்வியறிவும்.

ஆண்டு

மக்கள்தொகை (மில்லியன்)

கல்வியறிவு (%)

கல்வியறிவு வீதத்தின் மாற்றம்

1921

21.63

7.60

நீதிக் கட்சி

+  6.70 %

1931

23.47

11.30

1941

26.27

14.30

1951

30.12

20.00

இந்திய தேசிய காங்கிரஸ்

+  25.43 %

1961

33.69

31.47

1971

41.20

45.43

1981

48.14

54.39

திராவிடக் கட்சிகள்

         +  34.90 %

1991

55.86

62.66

2001

62.40

73.45

2011

72.15

80.33

ஆதாரம்: Government of India,  various  Population Census, Director of Census of India

1956-57ஆம் ஆண்டு 3 பல்கலைக் கழகங்கள், 56 கலைக்கல்லூரிகள் (அரசு மற்றும் தனியார்) செயல்பட்டு வந்தன இதில் 42000 மாணவர்கள் பயின்றனர். 1968-69ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ் வழி கல்வி பயில வழிசெய்யப்பட்டது. 23 ஜனவரி 1968 முதல் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டது இதன்படி தாய்மொழியுடன் ஆங்கிலம் அல்லது இந்திய மொழி அல்லாத ஒன்றைப் படிக்க வழிவகை செய்தது. இது தமிழகம் முழவதும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராகப் போரட்டங்கள் வெடித்தது. அன்றை ஒன்றிய அரசு இந்தி திணிப்பினைப் கைவிட்டது. ஆங்கிலம் இணைப்பு மொழியானதால் உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் தழிழர்கள் செல்லவும், அறிவினைப் பெருக்கிக்கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. இதன் விளைவு இன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழர்கள் உலஅளவில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். ஆங்கில இணைப்பு மொழி தமிழர்களின் போராட்டத்தால் பெறப்பட்டதால் தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் ஆங்கில மொழி அறிவினை வளர்க்க உதவியது. இதனால் இன்று உலகில் பல நாடுகளிலும் இந்தியர்கள் உயர்பதவிகளை அலங்கரிக்கின்றனர்

திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் சமூக உரிமை, நீதி மற்றும் மேம்பாடு; தலையானதாக இருந்து வருகிறது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்து சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பயன்பெறும் வகையில் 69 விழுக்காடு முறையை நடைமுறைபடுத்தினர். நாட்டிலேயே முதல் முதலில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் சரியான பங்கினைப் பெறமுடியாமல் போன சில குறிப்பிட்ட சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கி அவர்களின் மேம்பாட்டிற்குத் திராவிடக் கழகங்களின் ஆட்சிக்காலங்களில் சமூக நீதியினை வலுவாக நிலைநாட்டியுள்ளது. மேலும்; மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு, மண்டல் கமிஷன் நடைமுறைபடுத்த அழுத்தம் தரப்பட்டு 1992இல் நடைமுறைபடுத்தப்பட்டது. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை பல்வேறு திட்டங்கள் (இலவச மிதிவண்டி, மடிக்கணினி, மதிய உணவுத் திட்டம், இலவசப் பேருந்து பயணம், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்குக் கட்டணச் சலுகைகள்) நடைமுறைப்படுத்தப்பட்டன. கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டன. 2017-18ஆம் ஆண்டின்படி உயர் கல்வி நிறுவனங்களின் (பொதுக் கல்வி) எண்ணிக்கை 1535ம், தொழில் நுட்பக் கல்லூரிகள் 580ம், தொடக்க, இடைநிலை கல்வி நிறுவனங்கள் 45161ம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 8312ம் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. (GoTN 2020). இந்தியாவில் அதிக அளவு கல்வி நிறுவனங்கள் உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறுபவர்கள் 50 விழுக்காடு அளவிற்கு உள்ளனர், தொடக்கக் கல்வியில் முழு அளவிலான மாணவர் சேர்க்கை, படிப்பைத் தொடர முடியாமல் இடைநிறுத்தம் ஏற்படும் அளவு மிகக் குறைவாகவும் உள்ளது.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை பெரிய அளவில் இயற்கை வளங்கள் இல்லை, ஆனால் மனிதவளம் அதிக அளவில் உள்ளது. கல்வி அறிவு மனிதனின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதற்கு எடுத்துக்காட்டான மாநிலமாகத் தற்போது தமிழ்நாடு திகழ்கிறது. கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காட்டை அடிப்படையாகக்கொண்டு நாட்டின் கல்வி நிலையினை அளவிட முடியும். அவ்வகையில் நீதிக் கட்சி காலத்தில் கல்விஅறிவு பெற்றவர்கள் அளவு 1921ஆம் ஆண்டு 7.6 விழுக்காடாக இருந்து 1941ஆம் ஆண்டு 14.30 விழுக்காடாக அதிகரித்தது, அதாவது 6.7 விழுக்காடு கூடுதலானது (அதாவது ஒரு 10 ஆண்டுக்குச் சராசரியாக 3.35 விழுக்காடு உயர்ந்துள்ளது). இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இது 25.43 விழுக்காடு கூடுதலாக அதிகரித்து, 1971ஆம் ஆண்டு 45.43 விழுக்காடாக உயர்ந்தது (அதாவது ஒரு 10ஆண்டிற்குச் சராசரியாக 8.47 விழுக்காடு உயர்ந்துள்ளது) மேலும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இது 34.9 விழுக்காட்டுப் புள்ளிகள் கூடுதலாக அதிகரித்து. 2011ஆம் ஆண்டின்படி 80.33 விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர் (அதாவது ஒரு 10ஆண்டிற்குச் சாராசரியாக 8.72 விழுக்காடு உயர்ந்துள்ளது).

சமூக மேம்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்வது சுகாதாரமாகும். இவற்றின் வெளிப்பாடடை பல காரணிகளைக்கொண்டு (பிறப்பு வீதம், இறப்பு வீதம், குழந்தை இறப்பு வீதம், கருவுறுதல் வீதம், பாதுகாப்பான மகப்பேறு வீதம்) அளவிட முடிந்தாளும் ஆயுள் எதிர்பார்ப்பு என்பது மூலம் அளவிடுவது இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒற்றைக் காரணியாகக் கொள்ளமுடியும். இதன் பொருள் ஒரு நபர் எத்தனை ஆண்டுகள் ஆயுள் நீடிப்புடன் வாழமுடியும் என்பதாகும். இது, முழக்க சுகாதாரப் பாதுகாப்பு அளிப்பினைப் பொறுத்தது. நீதிக் கட்சிக் காலத்தில் ஆண்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு 1911-21ஆம் ஆண்டில் 19.75ஆண்டுகள் என்றிருந்தது. 1931-41ஆம் ஆண்டில் 36.22 ஆண்டுகளாக உயர்ந்தது இதுபோலவே, பெண்களின் வயது இவ்வாண்டுகளில் 24.33லிருந்து 36.17 ஆண்டுகளாக உயர்நதது. இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1941-51 மற்றும் 1961-71ஆம் ஆண்டுகளுக்கிடையே கூடுதலாக 16.47 ஆண்டுகள் ஆண்களுக்கும் 11.94 ஆண்டுகள் பெண்களுக்கும் அதிகரித்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் 1961-71 மற்றும் 2013-17ஆம் ஆண்டுகளுக்கிடையே 22.4 ஆண்டுகள் ஆண்களுக்கும் 27.2 ஆண்டுகள் பெண்களுக்கும் கூடுதலாக ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதாவது 2013-17ஆம் ஆண்டுக் கணக்கின்படி 69..90 ஆண்டுகள் ஆணகளுக்கும் 73.70 ஆண்டுகள் பெண்களுக்கும் ஆயள் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் பெண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு பெருமளவிற்கு ஆண்களைவிட அதிக அளவில் பதிவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கான கல்வி, வேலைவாய்பபு, சுகாதாரப் பாதுகாப்பு. சுயதொழில் செய்ய உதவி, பெண்கள் சுய உதவிக் குழக்கள், பெண்குழந்தைகளைப் பாதுகாப்பது போன்ற சில முக்கிய திட்டங்கள் திராவிடக் கழகங்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதைக் குறிப்பிடலாம். இது மட்டுமல்லாமல் சுகாதாரக் கட்டமைப்பை பெருமளவிற்கு வலுபடுத்தியதையும் குறிப்பிடலாம்.

அட்டவணை 2: தமிழ் நாட்டில் ஆயுள் எதிர்பார்ப்பு (ஆண்டுகள்)

ஆண்டு

ஆண்கள்

பெண்கள்

ஆண்கள்-மாற்றம்

பெண்கள்-மாற்றம்

1911-1921

19.75

24.23

நீதிக் கட்சிக் காலம்

16.47

நீதிக் கட்சிக் காலம்

11.94

1921-1931

28.71

30.94

1931-1941

36.22

36.17

1941-1951

35.03

37.23

இந்திய தேசிய காங்கிரஸ் காலம்

11.28

இந்திய தேசிய காங்கிரஸ் காலம்

10.33

1951-1961

41.09

39.24

1961-1971

47.50

46.50

1971-1981

52.50

51.90

திராவிடக் கட்சிகள் காலம்

22.40

திராவிடக் கட்சிகள் காலம்

27.20

1981-1991

57.40

58.50

1991-2001

63.80

66.70

2001-2011

67.60

71.40

2013-2017

69.90

73.70

Source: GoTN (2020): “Statistical Hand Book 2019,” Government of Tamil Nadu , Chennai .

நீதிக் கட்சிக் காலத்தில் நோய்த் தடுப்பு மற்றும் தொற்று நோயினைக் கட்டுப்படுத்த முதன்முதலாகப் பொது சுகாதாரத்துறை 1923ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1955ஆம் ஆண்டு மாநிலத் தொழிலாளர் காப்பீட்டு நிறுவனம் (நுஅpடழலநநள’ ளுவயவந ஐளெரசயnஉந ஊழசிழசயவழைn) கொண்டுவரப்பட்டது. 1966ஆம் ஆண்டு குடும்ப நலத்துறைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு மருத்துவக் கல்வி இயக்குநர் மூலமாக நடைமுறைபடுத்தப்பட்டது. 1966ஆம் ஆண்டு 1249 அரசு சுகாதார மையங்களாக இருந்து 2017-18ஆம் ஆண்டு 11137 ஆக உயர்ந்துள்ளது (GoTN 2020). இதுபோலவே 1968ல் 9 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலை தற்போது 25 மருத்துவக் கல்லூரிகளாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில் பெண்கல்வி, சமத்துவம் போன்றவற்றில் தமிழ்நாடு சிறப்பாக முன்னிலையில் உள்ளதற்கு அரசின் திட்டங்கள் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளன.

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், மருத்துவக் காப்பீடு, விரிவுபடுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம், பெண்கள் மேம்பாட்டுக் கழகம், மகிளிருக்கென அன்னை தெரசா பல்கலைக்கழகம் போன்றவை திராவிடக் கட்சிகளின் முக்கிய சமூகநலத் திட்டங்களாகும். இதன் விளைவு திராவிடக் கழகங்களின் ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கருவுறுதல் வீதம் தமிழ்நாட்டில் மிகக்குறைவான அளவாக ஒரு தாய்க்கு 1.6 குழந்தைகள் என்று பதிவாகியுள்ளது, மருத்துவமனைகளில் சென்று தாய்மார்கள் பாதுகாப்புடன் குழந்தை பிரசவிக்கும் அளவு 99 விழுக்காடு ஆகும் (இந்திய அளவில் 78.9 விழுக்காடு), குழந்தை இறப்பு வீதம் 1000ம் குழந்தைகளுக்கு 21 (இந்திய அளவில் 42) எனப் பல நிலைகளில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டைப் பொதுமக்கள் இயல்பாகவே எந்த உந்துதலும் இல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையினைத் தற்போது காணமுடிகிறது.

ஆட்டவணை 3: தமிழ்நாட்டின் சுகாதரா பாதுகாப்பின் வெளிப்பர்டு

குறியீடுகள்

அலகு

ஸ்ரீஆண்டு

1951

1971

2017

பிறப்பு வீதம் (CBR)

1000 மக்களுக்கு

19.1

(40.8)

31.4 (36.9)

14.9 (20.2)

,இறப்பு வீதம் (CDR)

1000 மக்களுக்கு

17.1 (25.1)

14.4 (14.9)

6.7

(6.3)

மொத்த கருவுருதல் வீதம் (TFR)

ஒரு பெண்ணிற்காகச் சாராசரி குழந்தை

NA

3.9

(5.2)

1.6

(2.4)

பேறுகால இறப்பு வீதம்

1 லட்சத்திற்கு

1050*

(1000)

450

(800)

63

(122)

பாதுகாப்பான மகப்பேறு

(Institutional Delivary)

விழுக்காடு

NA

82.8

(38.6)

99

(78.9)

குழந்தைகள் இறப்பு வீதம்

1000 குழந்தைகளுக்கு

120

(186.7)

113 (129)

21

(42)

Note: * 1965 as reference period; NA- Not Available

Source: Velappan 1986;  GoTN, Statistical Handbook 2019 and World Bank (https://data.worldbank.org).

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

தொழில் மற்றும் வேளாண்மைத் துறைகள்

தொழில் துறையினை மேம்படுத்த, நீதிக் கட்சி ஆட்சியில் மாநிலத் தொழில் உதவிச் சட்டம் 1922ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி தொழில் தொடங்குவதற்குக் கடன் வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் (பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்துஸ்த்தான் போட்டோ தொழிற்சாலை (உதகமண்டலம்), பல்நோக்கு மின்சாரம் தயாரித்தல், கல்பாக்கம் அனல் மின் நிலையம், சக்கரை ஆலைகள், நூற்பாலைகள், திருச்சி பாரத் கனரக மின் உற்பத்திபாக நிறுவனம்;, 22 தொழிற்பேட்டைகள் (கிண்டி, அம்பத்தூர், ஓசூர், திருச்சி, இராணிப்பேட்டை, விருதுநகர் உட்பட) தொடங்கப்பட்டன. கோயம்புத்தூரில் காட்டன் மற்றும் சர்க்கரைத் தொழில்கள் தொடங்கப்பட்டன. அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு, வேளாண்மை நீர்ப்பாசனத்திற்கு மின்மோட்டார் பயன்படுத்துவது போன்றவை நடைமுறைபடுத்தப்பட்டன. இதன் விளைவு இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு அன்றைய நிலையில் மூன்றாம் இடத்தில் தொழில் துறை உற்பத்தியில் அங்கம் வகித்தது (Velappan 1986)..

வேளாண்மை வளர்ச்சிக்காகப் பவானி, வைகை, அமராவதி, சாத்தனூர், கிரு~;ணகிரி, பரம்பிக்குளம், வீடூர் போன்ற நீhத்;தேக்கங்கள் காங்கிரஸ் ஆட்ச்சியில் கட்டப்பட்டன. ஜமின்தார் ஒழிப்புச் சட்டம் நிரைவேற்றப்பட்டு 20 மில்லியன் குத்தகைதாரர்களுக்கு நில உரிமை வழங்கப்பட்டது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்டத் தொழில் மையம், தமிழ்நாடு சிறுதொழில் கழகம், தொழில் நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், என ஏராளமாகத் தொடங்கப்பட்டன. வேளாண்மையினை மேம்படுத்த இலவச மின்சாரம், நமக்கு நாமே, குடிமறாமரத்து, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம், உழவர் சந்தைகள் என வேளாண்துறை வளர்ச்சிக்கு வித்திட்டது. காங்கிரஸ் கட்சியின் ஆட்ச்சிக் காலத்தில் 58.01 லட்சம் எக்டர் நிகர சாகுபடி பரப்பாக 1950-51இல் இருந்தது திராவிடக் கட்சிகளின் காலமான 2017-18இல் 46.38 லட்சம் எக்டராகக் குறைந்துள்ளது ஆனால் வேளாண்சாரா நிலப்பயன்பாடு 1961-61இல் 12.95 லட்சம் எக்டராக இருந்தது 2017-18இல் 22.01 லட்சமாக அதிகரித்துள்ளது. 1950-51இல் மொத்தப் பயிரிடும் பரப்பில் 50.9 விழுக்காடு நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற்றது 2017-18இல் 57 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதோபோல் 1955-56இல் உணவு தானிய உற்பத்தி 40.88 லட்சம் டன்னாக இருந்தது 2017-18இல் 107.13 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. திராவிடக் கழகங்கள் ஆட்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாகப் பணப்பயிர் அதிகப் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவு வேளாண்சார் தொழில்களான பஞ்சாலை தொழிற்சாலைகள், சர்கரை ஆலைகள் அதிக அளவில் பல தமிழ்நாட்டின்; பல மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது. 1960-61இல் 3000 சிறு தொழில் நிறுவனங்கள் இருந்த நிலையில் 2017-18இல் 23.6 லட்சம் சிறு, நடுத்தரத் தொழில்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. இதன்வழியாக அதிக அளவிற்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது மேலும் ஏற்றுமதியும் நடைபெறுகிறது (Perumalsamy, 1985; GoTN 2020).

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்பதில் தமிழ்நாடு முன்ணனியில் உள்ளதைத் தற்போதும் காண முடிகிறது. மோட்டார் வாகன உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மையானது. உலகப் புகழ்பெற்ற ஹ_ண்டாய், ஃபோர்ட், ரெனோல்டு, பி.எம்.டபில்யு, அசோக் லைலேண்டு, டி.வி.எஸ் என மோட்டர் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சென்னை ‘இந்தியாவின் டெட்ராயிட்’ என அழைக்கப்படுகிறது.

இன்று இந்திய அளவில் தமிழ்நாடு தொழில் உற்பத்தியில் 11 விழுக்காடும், தொழில் நிறுவனங்களில் 17 விழுக்காடும், தொழில் துறை வேலைவாய்ப்பில் 16 விழுக்காடும், அந்நிய நேரடி முதலீட்டில் 6 விழுக்காடு பங்குகளைத் தற்போது பெற்றுள்ளது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டில் முன்னியில் இருப்பதற்கு மற்றொரு காரணம் இயற்கையாகவே நீண்ட கடற்கரையைப் (1076 கி.மீ) பெற்றுள்ளது, இந்தியாவில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில் 3 (சென்னை, தூத்க்குடி, எண்ணூர்) தமிழ்நாட்டில் உள்ளது, பன்னாட்டு விமான நிலையங்கள் 4 உள்ளது. சாலை-இரயில் போக்குவரத்து நாட்டின் பல பகுதிகளையும் நேரடியான இணைப்பினைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், திராவிடக் கட்சிகள் ஒன்றிய அமைச்சரவையில் பங்கேற்றதையும் அவர்களால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் தமிழ் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியதையும் குறிப்படலாம். இன்று திருப்பூர் (பின்னலாடை), சென்னை (வாகன உற்பத்தி), கோயம்புத்தூர் (மோட்டர் உற்பத்தி), மதுரை (வாகன உதிரி பாகங்கள்), திருச்சி (வேளாண்சார் மதிப்புக் கூட்டல் உற்பத்தி), சிவகாசி (பட்டாசு) போன்ற நகரங்கள் உலக அளவில் தொழில் துறைகளில் குறிப்பிடும் இடத்தை பெற்றுள்ளது.

இன்றைய நிலையில் தமிழ்நாடு இந்தியாவில் நகரமயமாதலில் முதன்மையானதாகும் (49 விழுக்காடு அளவில் மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்). இதனால் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் அதிக அளவில் ஒட்டுமொத்த மாநிலப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பினை அளிக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இயற்கைவள ஆதாரங்கள் மிகவும் குறைவு. ஆனால் மனிதவள ஆதாரங்கள் அதிகம் குறிப்பாகத் திராவிடக் கட்சிகள் பின்பற்றும் இருமொழிக்கொள்கையின் விளைவு, தொழில் நுட்ப மேம்பாட்டில் பன்னாட்டு அளவில் சிறந்து விளங்குகிறது. உலக அளவிலும் பல வல்லுநர்களை உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியான சேவைத்துறையின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டெட், வங்கித்துறை, போக்குவரத்துத் துறை, மருத்துவம், காப்பீடு, சுற்றுலா, போன்றவற்றின்; தலைசிறந்து விளங்குகிறது. சென்னை நகரம் இந்தியாவின் மருத்துவத்திற்கான மையமாகத் திகழ்கிறது.

துறைவாரியான மேம்பாடு

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

வரைபடம் 1: தமிழ்நாட்டின் துறைவரியான பங்களிப்பு- 1960-61 மற்றும் 2017-18 ஒப்பீடு

Socio-economic development in the Tamil Nadu political arena: A century-long comparison Aticle By Prof P. Anbalagan. Book Day

ஆதாரம்: Tamil Nadu An Economic Appraisal and Tamil Nadu Statistical Hand Book 2019.

பொருளாதார மேம்பாட்டினைத் துறைவாரியாகப் பார்த்தால் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கழகங்களின் ஆட்சிகளை ஒப்பிடும் போது வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறையின் ஒட்டுமொத்த மாநில மொத்த வருவாயில் 1960-61ஆம் ஆண்டு 51 விழுக்காடாகப் பங்களிப்பு இருந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலமான 2017-18ஆம் ஆண்டு உள்ள ஆண்டுகளில் 12 விழுக்காடு பங்களிப்பாகக் குறைந்துள்ளது (இந்திய அளவில் தற்போது 15.3 விழுக்காடு), தொழில் துறையினை உள்ளடக்கிய இரண்டாம் நிலைத் துறையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 18 விழுக்காட்டிலிருந்த பங்களிப்பு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் 36 விழுக்காடாக இதே காலகட்டங்களில் அதிகரித்துள்ளது (இந்திய அளவில் தற்போது 30.5 விழுக்காடு), இதுபோன்று சேவைத்துறை 31 விழுக்காட்டிலிருந்து 52 விழுக்காடாக அதிகரித்துள்ளது (இந்திய அளவில் தற்போது 54.2 விழுக்காடு) (Rajkumar et al, EPW, 12.07.2021). காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1960-61ல் ரூ.330ஆக இருந்த தலா வருமானம் 1970-71ஆம் ஆண்டு ரூ. 581ஆக அதிகரித்தது. இது தற்போது ரூ.138805 என 2018-19ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மொத்த மாநில வருவாயில் தலா வருமானம் 1960-61 மற்றும் 1970-71ல் 5.82 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆனால் இது திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருமடங்காக 11.82 விழுக்காடாக 1980-81 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

அட்டவணை 4: தமிழ்நாட்டின் தலா வருமானப் போக்கு (நிலையான விலையில்)

ஆண்டு

தலா வருமானம் (ரூ.)

சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் (%)

1960-61

      330

இந்திய தேசிய காங்கிரசு காலம் 5.81

1970-71

      581

1980-81

    1269

திராவிடக் கட்சிகளின் காலம் 11.82

1990-91

    2275

2000-01

    53507

2010-11

    78473

2018-19

  138805

ஆதாரம்: Compailed from various Tamil Nadu Statistical Hand Book, published by Government of Tamil Nadu.

வறுமை ஒழிப்பு

ஒட்டுமொத்தப் பார்வையில் நீதிக் கட்சியானது பல்வேறு எதிர்புகளுக்கிடையே சமூகச் சீர்திருத்தத்திற்கு அடிப்படையாகப் பல திட்டங்களைக் குறுகிய காலத்தில் நடைமுறைபடுத்தித் தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு அடிகோலியது. அடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கல்வி மேம்பாட்டிற்கான அடித்தளத்தினையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சமூக-பொருளாதார தளங்களின் தங்களின் சித்தாந்தை நடைமுறைபடுத்தியது, கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு, உள்கட்டமைப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என அனைத்திலும் தடம்பதித்துள்ளது. இதன் விளைவு இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் அதிகஅளவில் குறைத்த மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் 1957-58ஆம் ஆண்டு 67.8 விழுக்காடாக இருந்த வறுமையின் அளவு திராவிடக் கழகங்களின் ஆட்சியில் 2011-12ஆம் ஆண்டு 15.80 விழுக்காடாகக் குறைந்துள்ளது அதாவது 1973-74 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே கிராமப்புறங்களில் வறுமை 41.63 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்துள்ளது. நகர்புறங்களில் 1973-74இல் 49.4 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்துள்ளனர் இது 2011-12ஆம் ஆண்டு 6.50 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவிலேயே பொதுவிநியோகத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது, உணவுப் பாதுகாப்பு (குறிப்பாக மதிய உணவுதிட்டம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து), முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்களைத் திராவிடக் கழகங்களின் ஆட்சிக் காலங்களில் நடைமுறைப்படுத்தியதைக் குறிப்பிடலாம். இவற்றின் ஒட்டு மொத்த விளைவு கிராம-நகர, ஆண்-பெண், வட்டாரங்களுக்கிடையேவும்,  சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வின் இடைவெளி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளது.

அட்டவணை 5: தமிழ்நாட்டில் வறுமை வீதம் (விழுக்காடு)

ஆண்டு

கிராமப்புறம்

நகர்புறம்

மொத்தம்

% குறைந்து

1957-58

67.8

1963-64

52.0

1973-74

57.4

49.4

54.6

1977-78

57.7

48.7

54.8

0.15

1983-84

54.0

47.0

51.7

3.13

1987-88

45.8

38.6

43.4

8.27

1993-94

32.5

39.8

35.0

8.36

1999-00

20.6

22.1

21.1

13.9

2004-05

22.8

22.2

22.5

-1.40

2011-12

15.8

6.5

11.2

11.30

1973-74 & 2011-12 , இடையே குறைநத அளவு

41.6

42.9

43.4

ஆதாரம்: Shanmugam, 2012 and  C.Rangarajan 2014.

முடிவுரை

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே கணக்கில் கொண்டு அவற்றின் நிலையினை மதிப்பிடுவது சரியாக இருக்காது சமூகக் கூறுகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று பல பொருளியல் அறிஞர்கள் அன்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே சமூக, பொருளாதாரம் உள்ளடக்கிய கூறுகளான கல்வி, சுகாதாரம், தலாவருமானம் ஆகியவற்றின் வெளிப்பாடான மனிதவள மேம்மபாட்டுக் குறியீட்டை ஐக்கிய நாடுகளின் சபை 1990ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வெளியிட்டு வருகிறது. மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டெண்ணில் தமிழ்நாடு 1981இல் 0.343 புள்ளியில் இருந்தது 2019ஆம் ஆண்டு 0.709 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் உள்ள பெரிய மாநிங்களில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் தமிழ்நாடு சமூக-பொருளாதார நிலைகளில் முன்னேடியாக இருப்பதற்குக் காரணம் சமூகச் நீதி, சமூகச் சீர்திருத்தங்கள் எனத் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படுவதே ஆகும். இதன் விளைவு இயைந்த, நீடித்த வளர்ச்சிக்கான பாதையில் தமிழ்நாடு பயணித்துக்கொண்டுள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடு பல நிலைகளில் ஒரு மாதிரிமாநிலமாக தற்போது இருப்பதற்குக் காரணம் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அரசியல் வழியாக அவற்றை நடைமுறைப் படுத்தியதே ஆகும். இவை ஒருபுறம் இருந்தாலும் இந்தியவிற்கே முன்னேடியாக மதிய உணவுத் திட்டம், இட ஒதுக்கீடு, பெண்கள் உரிமை, பொதுவிநியோகம், அனைவருக்குமான கல்வி, சுகாதாரம் திகழ்ந்தாலும் பல உரிமைகளை ஒன்றிய அரசு பறித்துக்கொண்ட நிலையினைத் தற்போது காண முடிகிறது. முக்கியமாக கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றை மாநில அரசின் அதிகாரத்திற்கு முழுமையாகக் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது. நோபல் பரிசுபெற்ற பேரா. அமர்த்தியா சென் தன்னுடைய புத்தமான Development as Freedom என்பதில் தமிழ்நாட்டைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘சுகாதாரப் பாதுகாப்பின் வெளிப்பாட்டினில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக உள்ளது’ என்கிறார். An Uncertain Glory: India and its Contradictions என்ற புத்தகத்தில் தமிழ்நாடு சமூக மேம்பாட்டில் உயர்ந்து இருப்பதால் வறுமை ஒழிப்பு, சமத்துவம் போன்றவற்றில் இந்திய அளவில் உயர்ந்து நிற்கின்ற மாநிலம் என்கிறார்.

முக்கிய சொற்கள்: சமூக-பொருளாதாரம், சமூக நீதி, சுகாதாரம், கல்வி, வறுமை
————————-

முனைவர் பு. அன்பழகன்
இணைப்பேராசிரியர், பொருளியல் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை-5

 

முந்தைய  பொருளாதார கட்டுரைகளை படிக்க கிளிக் செய்க: 

இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் – நா.மணி

பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்

பொருளாதார கட்டுரை 3: வரிச்சுமையை மறக்க பக்தியென்னும் மயக்க மருந்து: ஓர் வரலாற்று பார்வை ~ பேரா. மா. சிவக்குமார்

பொருளாதார கட்டுரை 4: கோவிட்-19 பெருந்தொற்றும், இந்திய கிராமப்புற பொதுசுகாதார உள்கட்டமைப்பும் – பேரா. பு. அன்பழகன்

பொருளாதார கட்டுரை 5: இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும்; கோவிட்-19 பெருந்தொற்றும் – பேரா. பு. அன்பழகன்

பொருளாதார கட்டுரை 6: பலன் தருமா தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை? – பேரா. பு. அன்பழகன்

References

Balasubramanian T and K Ayyanar (2020): “Socio-Economic Treands in Tamil Nadu After Independence,” Aegaeum, Vol.8, No.14, pp 1621-1630.

Business Standard (2016): “Tamil Nadu lost due to Bifurcation of Madras: Ramadoss”, 31.10.2016, https://www.business-standard.com/article/news-ians/tamil-nadu-lost-due-to-bifurcation-of-madras-ramadoss-116103101264_1.html\

GoI (2005),”Tamil Development Report,” Planning Commission, Government of India, New Delhi.

GoTN (2020): “Statistical Hand Book 2019,” Government of Tamil Nadu , Chennai

Government of Tamil Nadu (2003): “Tamil Nadu Human Development Report,” New Delhi, Social Science Press.

https://statisticstimes.com/economy/india/indian-states-gdp.php

Mohan Ram (1974): “Ramaswami Naicker and the Dravidan Movement,” Economic and Political Weekly, Vol.9, No.6/8, pp.217-224.

ஜேயராமன், கோவி (2021): “ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்,” பெண்ணைப் பதிப்பகம், கடலூர்.

Pallavi Roy (2011): “Tamil Nadu: Growth in the Time of Clientelism,” Working Paper, SOAS-AFD Research Project, Paris (http://eprints.soas.ac.uk/22131/).

Permalsamy S (1985): “Economic Development of Tamil Nadu,” S.Chand & Company Ltd., New Delhi.

Perumal C A and V K Padmanabhan (1987): “Political Alliances in Tamil Nadu,” The Indian Journal of Political Science, Vol 48, No 4, pp 618-624.

Rajaraman K R (1970): “Tamil Nadu State Administration Report 1968-69,” Government of Tamil Nadu.

Ramakrishnan T (2021): “T.N. Legislature Turns 100,” The Hindu, 1.8.2021, p.4.

Rangarajan C (2014): “Report of the Expert Group to Review the Methodology for measurement of Poverty,” Planning Commission, Government of India.

Shanmugam, K.R (2012): “Monitorable Indicators and Performance: Tamil Nadu,” Madras School of Economics, Chennai.

Thamari Manalan (2018): “Role of Justice Party in Tamil Nadu Politics,” JETIR, Vol.5. Issue 5.

Velappan (1986): “Ecnomic Development of Tamil Nadu,” Emeral Publisher, Madras.

William Joe, Suresh Sharma, Jyotsna Sharma, Y Manasa Shanta, Mala Ramanathan, Udaya Shankar Mishra and B.Subha Sri (2015): “Maternal Mortality in India: A Review of Trends and Patterns,” IEG Working Paper No. 353.