The Davos Agenda என்பது உலகப் பொருளாதார மையத்தின் செயல்பாடு ஆகும். ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை 15 கொள்கைகளை உலக மக்களின் மேம்பாட்டுக்காக வகுத்து வைத்திருக்கும் நிலையில் உலகப் போருளாதார மையம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் அரசு, தொழில்நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் பொதுமக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து இப்பொருளாதார மையத்தில் கலந்து கொண்டு ஆண்டுதோறும் கூடி உலக மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக திட்டங்கள் தீட்டுவர். கடந்த 50 ஆண்டுகளாக இப்படிப்பட்டக் கூட்டம் நடந்து முடிந்து விட்டது. 2022 ஜனவரி 17 முதல் 21 வரை நடந்த இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர், சீன அதிபர், சிங்கப்பூர் அதிபர், இந்தியப் பிரதமர், ரொவாண்டா அதிபர், இஸ்ரெல் அதிபர்.
ஜோர்டான் நாட்டு மன்னர், கானா நாட்டு அதிபர், பிரான்ஸ் அதிபர், அர்ஜென்டினா அதிபர் என்று பல நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டனர். தடுப்பூசி பற்றிய விவாதங்களும் சமுதாய தொழில்களுக்கு ஆதரவு கொடுத்தும், வளர்ச்சியை நோக்கிய உறபத்தியும், மிக முக்கியமானக் கருத்துக்களாக கருதப்பட்டது. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நீடித்து நிலைக்கக் கூடிய வளங்களையும் நாடுகளின் மீட்டெழுச்சித் திறனை ஊக்குவிக்கத் தகுந்த ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை இந்த இணைய சந்திப்பு நிகழந்தது. Klaus Schwab, உலகப் பொருளாதார மையத்தின் நிறுவனர் கூறுகிறார்.
செல்வத்தைச் சாராத, மக்களைச் சார்ந்த ஒரு முதலாளித்துவம் தேவை என்பதை இந்த ஐந்து நாள் கூட்டம் வலியுறுத்தியது. ஒரு நிறுவனம் பங்குச்சந்தை பங்குதாரர்களின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல் அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களின் நன்மைக்காகவும் எதிர்கால சந்ததியினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் படியாகவும் தங்கள் நிறுவனக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும், தரவுகளின் ஆதாரத்துடனும் இச்சங்கமம் வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் கருவூலச்செயலர் ஜெனட் எலன் அம்மா பேசுகையில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பாரம்பரிய அளிப்புச் சங்கிலியை விட்டு நவீன அளிப்புச்சங்கிலி பற்றியக் கொள்கைகளை அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ளது என்றும், ஒரு சமுதாயத்தின் உட்கட்டமைப்புகளான தொழிலாளர்கள், இயற்கை சார்ந்த எரிசக்தி கட்டமைப்பு மனித வளத்தை மேம்படுத்தும் தானியக்கத் தொழில்நுட்பங்கள் அதற்கான ஆராய்ச்சி கல்விமுறை ஆகிய பல பரிணாமங்களில் அரசுக் கொள்கைகள் மாறி வருகிறது என்று கூறினார். இப்படியாக பலப் பரிணாமங்களைக் கொண்ட இத்தகைய ஒரு பொருளாதாராத்தைத்தான் நான்காம் தொழில்புரட்சியின் அடிப்படை ஆகும். இப்பொருளாதாரத்தை எதிர் நோக்கியே ஐநா சபையின் 15 கொள்கைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமாக அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மின்னியியல் சார்ந்த அடிப்படை அறிவுத் தேவைப்படுகின்றது என்பது கல்வியாளர்களான நமக்காகக் கூறப்படுவதாகும். இத்தகையப் பொருளாரத் தேவையை கணித்து 2016ல் நடந்த டாவோஸ் கல்வி 4.0ன் தேவை அறிவுறுத்தப்பட்டது. நான்காவது தொழில்புரட்சிக்கு ஏதுவாக இன்றைய கல்வியாளர்கள் தாங்கள் படிக்கும் விதங்களில், பொருண்மைகளில் சீரிய மாற்றம் தேவை என்பதை கல்வி 4.0 வலியுறுத்துகிறது.
நான்காம் தொழிற்புரட்சிக்கு ஏற்றக் கருவிகளை உருவாக்குதல் மழலைக் கல்வி மூலம் சமுதாயத்தை வழிநடத்தும் தலைமுறையை உருவாக்குதல், இப்புதிய கல்விக் கொள்கைகளை ஏற்று நடத்தும் படியான அரசு தனியார் நிறுவன கொள்கைகள் ஒவ்வோரு தேச அளவிலும் சர்வதேச அளவிலும் கொண்டு வர வேண்டும் என்பதே கல்வி 4.0 செல்வத்தைச் சார்ந்த முதலாளித்துவம் என்ன நமக்குத் தெரியும் ஆனால் அது என்ன மக்களைச் சார்ந்த முதலாளித்துவம்?
நாம் இப்போதே கருவிகளை உருவாக்கிக் கொண்டுதானே இருக்கின்றோம்? இன்னும் என்ன மாதிரியானக் கருவிகள் உருவாக்கபப்ட வேண்டும்?
ஏற்கனவே 2 வயது மூன்று வயதுக் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கொண்டுதான் இருக்கின்றனர்? இன்னும் என்ன மழலைக்கல்வி பற்றிய விவாதம் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம்.
இவற்றை ஒவ்வோன்றாக ஆராய்ந்தால் நாம்கல்வி 4.0 என்பதன் கட்டமைப்பை ஆழமாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கல்வி 4.0 என்ற கல்வியின் வெளிப்பாடு
ஒவ்வோரு மாணவர்களுகளின் தனிப்பட்டத் தேவையை பூர்த்தி செய்யும் கல்விச்சூழல்,
கல்வி நிலையங்களை விட்டுத் தொலைவிலிருந்தும் ஒதுக்குப்புறமான இடங்களிலும் செயல்படக் கூடிய கல்வி
கல்விக் கற்றலுக்கான கருவிகள் தேவைக்கு அதிகபடியாக கிடைத்தல். தரவு விவரங்களை ஒவ்வோரு மாணவரும் தன் வசம் வைத்து இருத்தல் அடிப்படைத் திறன்களான பிரச்சனைகளைத் தீர்த்தல்
ஒரு செயல்பாட்டின் வழிமுறைகளும் செயல் திட்டம் சார்ந்த கல்விமுறை
திறன்சார் கல்வி
அறிவாற்றலைப் பலவழிகளில் கொடுக்கக் கூடிய வழிகள்
மாணவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படாமல் அவர்களின் ஒரு மனிதனின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான பாடங்கள் நடத்தப்பட வேண்டும்
செயல்திறனை மேம்படுத்த உதவும் செயல்பாடுகள்
குழு அமைப்பில் செயல்படுதல்
தனி மனிதக் குறிக்கோளை எட்டும் பிரத்யேக வழி
செய்யும் வேலையில் 100% முனைப்பாடும் வெளிப்பாடும்
வாழ்க்கைக் கல்வி ர்செயல்திறனை அதிகரிக்கக் கூடிய செய்திகளைக் கொடுத்தல், பல்துறை அடிப்படை செயல் திறன்
ஆகிய அம்சங்களைத் தாங்கி இருக்க வேண்டும்
1. தனிமனிதனின் செயல் திறனை மேம்படுத்துதல் 2. செயல்திறனை மேம்படுத்த உதவும் செயல்பாடுகளை அடையும் வழிகளைக் கண்டு பிடித்தல் 3. குழுவாகச் செயல்படுதல் 4. தனி மனிதக் குறிக்கோளை எட்டும் பிரத்யேக வழிகளை அடையாளப்படுத்துதல் 5. செய்யும் வேலையில் 100% முனைப்பாடும் வெளிப்பாடும் கொண்டு வருதல் 6. வாழ்க்கை கல்வி என்ற இந்த ஆறு வழிகளில் நாம் மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நம்முடைய இன்றையப் பாடத்திட்டங்கள் ஓரளவுஇந்தக் குறிக்கோள்களைக் எதிரொலித்தாலும், இன்னும் பல முக்கிய மாற்றங்களை நாம் கொண்டு வர வேண்டும். முக்கியமாக மனனம் செய்து தேர்வு எழுதும் கல்வி முறையை நாம் மாற்றியே ஆக வேண்டும்மாணவர்கள்
அலிபாபா நிறுவனம் இயற்கை சூழலுக்காக செய்யும் வேலைகளைப் பற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.இயற்கையைப் பாதுகாக்கும் தொழில்நுட்பமாக புத்தாக்க எரிசக்திகளைக் கொண்டுவருவதும் ஏற்கனவே சூழவியலில் உள்ள கரிமல வாயுவை சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்திலும் முதலீடு செய்து சுற்றுப்புறத்தையும் சூழ்வியலையும் சுத்தமாக வைத்திருக்கும் வகையில் மக்களின் நடத்தையை, குணாதிசியத்தை மாற்றப் போவதாகவும் சீன அலிபாபா நிறுவனம் அறிவித்து உள்ளது. இதில் இருந்து இரு செய்திகளை நாம் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று 2030 ஒரு முக்கியமான ஆண்டு. இரண்டாவது ஒரு நிறுவனத்தால் மனிதர்களின் குணாதிசியத்தை எளிதில் மாற்ற இயலும். அதற்குத் தேவையான அணுகு முறைகளும் தரவுகளும் அவர்களிடம் ஏற்கெனவே இருக்கின்றது. இந்த இரண்டில் இரண்டாவது கூறப்படும் விஷயம் நாம் அனைவரும் அன்றாடம் அனுபவித்து வருகின்றோம். இன்று நம் ஒவ்வொரு வேலையும் தொழில்நுட்பங்கள் என்ன சொல்கின்றதோ அதை அடிப்படையாக நம் தினப்படி வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது.
ஆனால் முதலாவது செய்தி அது என்ன 2030? அந்த ஆண்டில் என்ன அப்படி முக்கியத்துவம்?
2030ம் ஆண்டு இன்று உலக அரசின் செயல்திட்டங்களிலும் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகத்திலும் பங்குசந்தையிலும் பொருளாதார வல்லுநர்களாலும் ஒரு தாரக மந்திரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1990களிலிருந்தே ஐநாசபை மனித எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அப்போதைய புள்ளி விவரங்களில் இருந்து தெரிந்து கொண்டு, என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தது. அதன் விளைவாக நீடித்து இருக்கக் கூடிய வளர்ச்சிக் குறிக்கோள்கள் என்று ஒரு பதினேழு குறிக்கோள்களை ஐநா சபைக் கொண்டு வந்தது. நம் பின்வரும் தலைமுறையினரின் எதிர்காலத் தேவைகளுக்கு எந்த ஒரு பங்கமும் வராமல், இன்றையத் தேவைகளை சந்திக்கும் ஒரு வளர்ச்சி தான் நீடித்து நிற்கக் கூடிய வளர்ச்சியின் சாராம்சம்.
ஏழ்மையில்லா நிலை, பசிக் கொடுமையின்மை, ஆரோக்கியம், வளமான கல்வி, பாலின வேறுபாடு களைவு, தூய்மையான நீரும் சுகாதாரமும், மலிவு விலையில் சுத்தமான ஆற்றல், தனிமனிதனுக்கு நல்ல வேலை, பொருளாதார வளர்ச்சி, சமநிலை, வளங்கள், நீடித்து இருக்கும்படியான பயன்பாட்டைக் கொண்ட சமுதாயம், பொறுப்புணர்வோடு கலந்த நுகர்வும் உற்பத்தியும் சூழவியல் செயல்பாடு நீர்வாழ் உயிரினப்பாதுகாப்பு, நிலவாழ் உயிரினப்பாதுகாப்பு, அமைதி, நீதி இவ்விரண்டையும் மையமாக் கொண்ட சமுதாய அமைப்பு, இவ்வனைத்து குறிக்கோள்களையும் அடைய கூட்டுறவு முயற்சி ஆகிய 17 குறிக்கோள்களைக் ஐநாசபை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐநாவின் திட்டப்படி இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டியக் காலக்கெடுதான் 2030ம் ஆண்டு.
மேற்கூறிய குறிக்கோள்களை அடைய ஒவ்வோரு நாடும் சட்டங்கள் இயற்றினாலும் பல வியாபாரர நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்புணர்ச்சி சிறந்த நிலையில் இருந்தால் ஒழிய இந்தக் குறிக்கோள்களை அடையமுடியாது. இன்று நிறுவனங்களின் செயல்பாடு எப்படி இருக்கின்றது?
நுகர்வோர் மிண்ணனு பொருட்காட்சி (consumer electronic show- CES 2022) ஒன்று கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ்வேகாஸ் நகரில் தற்போது நடந்துகொண்டு இருக்கின்றது. நுகர்வோர் தொழில்நுட்ப அமைப்பு ஒன்று 1967ல் நிறுவப்பட்டு அதன் மூலம் பாமர மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் மின்ணனு சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இணைந்து மூன்று நாள் பொருட்காட்சியை ஆண்டாண்டுகளாய் நடத்தி வருகின்றது. நுகர்வோர் வாழ்வின் அனைத்து பரிணாமங்களின் இன்று கணினி இருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இந்தப் பொருட்காட்சி இருக்கிறது. இந்த தொழில்நுட்பங்களை அலசி ஆராய்ந்தால் நமது எதிர்காலம் எப்படி இருக்கும்? முக்கியமாக வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பிற்கு நாம் நிச்சயம் வரலாம்.
செயற்கை நுண்ணறிவிலிருந்து முப்பரிமாண அச்சிடுதல் போக்குவரத்து , உடல்நலம், மனநலம், பந்தய விளையாட்டுகள், கேளிக்கைகள், சாதூரியமான நகரம், சாதூரியமான வீடு, விண்வெளி பாளச்சங்கித் தொழில்நுட்பம், மிண்னியியல் செலாவணி என்று பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தப் பொருட்காட்சியில் ஈடுபட்டுள்ளன. கல்வித் தொழில்நுட்பத்திற்கு என்று தனிப்பிரிவு இல்லை என்றாலும் தொய்விக்கும் பொழுது போக்கு IMMERSIVE Entertainment தொழில்நுட்பத்தின் மெய்நிகர் தொழில்நுட்பங்களும் செயற்கை அறிவுத் தொழில்நுட்பமும் கல்வி சார்ந்த மின்ணனு சாதனங்களுக்கு அடிப்படையாக அமையும் என்று கொள்ளலாம்.
நேரத்திற்கும் இருப்பிடத்திற்கும் தகுந்தார் போல விளம்பரங்களைக் காட்டும் LG நிறுவனத்தின் CLO இயந்திர மனிதன், “organic light-emitting diode என்பதின் சுருக்கமான OLED தொலைக்காட்சிப் பெட்டிகள். தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் BMW மின்சார மகிழுந்து, OMN ipod எனப்படும் சகல வசதிகளும் செயற்கை நுண்ணறிவு இயந்திர வேலையாளும் கொண்ட உல்லாச போக்குவரத்து வாகனம், எந்த ஒரு தளத்தையும் தொலைக்காட்சியாக மாற்றக் கூடிய தொழில்நுட்பம், விளையாடுக்களுக்கெனவே பயன்படும் மடிக்கணினி என்று மின்னணு சாதனங்களின் ஊர்வலம் தொழில்நுட்ப ஆர்வலர்களையும் நிபுணர்களையும் இணைத்து நடக்கின்றது. இவ்வாறாக மொத்தம் 2200 நிறுவனங்கள் கலந்து கொண்டிருப்பதாகவும் இந்தப் பொருட்காட்சியின் இணையதளம் தெரிவிக்கின்றது.
இவற்றைப் பார்க்கும்போது, எந்த மாதிரி தொழில்நுட்பம் வருங்காலத்தில் வேலைவாய்ப்பைக் கொடுக்கும் என்று நம்மால் யோசிக்கமுடியும். ஆனால் அதைவிட முக்கியமாக இந்த சாதனங்கள் எல்லாமே தற்போது பொழுதுபோக்கு அம்சங்களின் ஒரு பகுதியாக உள்ளன என்பதும் நமக்குத் தெரிகின்றது. இன்றைய தலைமுறை நம்மிடம் இருக்கும் ஒவ்வொன்றையும் புத்தாக்க சிந்தைனையால் தொழில்நுட்பத்தின் உதவியோடு மெருகு ஏற்றிக் கொண்டிருக்கின்றது.
2015ல் ஆப்பிள் நிறுவனம் கணினியையே கைக்கடிகாராமாக்கியது ஒருவர் பயன்படுத்தும் கணினி திறன்பேசி அனைத்தும் அக்கடிகாரத்துடன் இணைந்து செயல்பட்டு மக்களின் வாழ்க்கையை இலகுவானதாக மாற்றுவதாக விளம்பரம் செய்து ஆப்பிள் நிறுவனம் அக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது. இன்று உலகம் முழுவதும் ஆப்பிள் ஆண்ட்ரைடு, சாம்சங் தளங்களுக்கு ஏற்ப மூன்று வித திறன் கடிகாரங்களே சந்தையில் உள்ளன. ஆனால் இன்றளவும் ஏறத்தாழ 12.3 million திறன் கடிகாரங்கள் விற்பனையாகியுள்ளன.
இந்த திறன் கடிகாரங்களை ஒப்பிடும் போது, கணினி சாராத பாரம்பரியக் கைகடிகாரங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இருபதிற்கும் மேல் உள்ளன. இந்தியாவில் மட்டும் 6 கடிகார நிறுவனங்கள் உள்ளன. இக்கடிகாரங்களில் நடக்கும் தொழில்நுட்ப மாற்றத்தைத்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
இந்த நிறுவனங்களில் கார்ட்டியர் கைக்கெடிகார நிறுவனம் அறிமுகப்படுத்திய மாதிரியில் 1917 வருட முகப்புக் கொண்டு, சூரிய சக்தியில் இயங்கும் மின்கலம் கொண்ட கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. சூரிய ஒளியில் இயங்கும் கைக்கடிகாரங்கள் முன்பே இருந்தாலும், இப்போது கடிகார எண்களில் உள்ளத் துளை வழியாகவும் சூரிய ஒளி சென்று மின்கலத்தை உயிரூட்டும் வகையில் இந்தக் கைக்கடிகாரத்தின் கட்டுமானம் உள்ளது. அதே போல கைகடிகாரத்தின் பட்டையுமே ஆப்பிள் பழத் தோலிலிருந்து பெறபப்ட்ட மூலவளம் 40% பயன் படுத்தபப்டுகின்றது. என்ன ஒரு புத்தாக்க சிந்தனை. இயற்கை வளங்களை காப்பதில் என்ன ஒரு அக்கறை.
Yankodesign என்ற நிறுவனம் நாம் சிறுவயதில் பயன்படுத்திய walkman போன்றத் தோற்றத்தில் bluetooth ஒலிப்பெருக்கிகளாக அறிமுகப்படுத்தியுள்ளன. அதேபோல இன்றைய திறன் பேசியை tape recorderல் இட்டு பாடவைப்பது போன்ற walkman ஒலிப்பெருக்கிகளும் வந்துள்ளன. சில ஒலிப்பெருக்கிகளில் திறன்பேசி மின்னேற்றம் செய்வதற்கும் வழி செய்யபட்டுள்ளது. வாழ்க்கை என்ற வட்டம் இதுதான் நம் குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னதை அவர்களின் தலைமுறையினர் ஆசையோடு அரவணைக்கின்றனர். 2015ல் 18 வயதில் இருந்த சிறுவன் இப்போதுதான் இதுவரை அனுபவிக்காத ஒன்றைப் புதுமை என்று எண்ணி தன் வாழ்க்கை முறையில் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
இத்தலைமுறையின் குழந்தைகளுக்கு எந்த மாதிரிக் கல்வியை நாம் வழங்க முடியும்? அதற்குத் தயாராக நாம் என்ன செய்ய வேண்டும்? ஐநாவின் குறிக்கோள்களை அடைய அரசும் நிறுவனங்களும் செயல்பட்டால் போதுமா கல்வி என்ற அமைப்பு என்ன செய்ய வேண்டி இருக்கிறது?
இயற்கை வளங்களைக் காப்பது, மனித வளங்களைக் காப்பது, மருத்துவம் என்று பல துறைகளில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நுகர்வோருக்கு அடையாளம் காட்டும் கலாச்சாரம், நுகர்வோரின் குணாதிசியத்தை மாற்றும் ஒரு வழியாகத்தான் தோன்றுகின்றது. மனித வளமும் தொழில்நுட்பமும் மோதிக் கொள்ளும் நாள் வருமா? அப்படிப்பட்ட ஒரு நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? கை கொடுக்குமா கல்வி 4.0? யோசிக்கலாம்.
இயற்கை வளங்களில்லா உலகில் கல்வி என்பது என்ன? நாம் இன்று திறன்பேசியை எப்படிப் பயன்படுத்துகின்றோம்? ஒரு தொலைபேசியாக, ஒரு கடிகாரமாக, ஒரு நாள் காட்டியாக, ஒரு விலாசப்புத்தகமாக, ஒரு ஆலோசகராக, செய்தித்தாளாக, நம் தொழில்சார்ந்த கணினியாக என்று பலவிதங்களில் பயன்படுத்துகின்றோம். இப்படி எல்லா வழிகளிலும் தகவல்களைப் பெறும் கருவியாக இருக்கும் ஒரு சாதனம் பயன்படுத்தப்படும்போது, அது பொதுமக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக மாறிவிடுகின்றது. நாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மின்சாரப் பற்றாக்குறையால் அவதிப்பட்டவர்கள்தான். ஆனால் இப்போது மின்சாரம் தடைபட்டாலும் நம் வீட்டில் முக்கிய மின்சார சாதனங்கள் தற்காலிகமாக வேலை செய்ய வேண்டிய உபகரணங்களை வாங்கி வைத்து இருக்கின்றோம்.
கருவிகளைப் பயன்படுத்த நமது பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. ஒருவருடைய சராசரி நுண்ணறிவு குறைய ஆரம்பிக்கின்றது. நம் வீடுகளில் துவைப்பதற்கு என்று கல் இருக்கும். அவற்றின் இடத்தை சலவை இயந்திரங்களுக்கு நாம் கொடுத்துவிட்டோம். அம்மி உரல் போல துவைக்கும் கல்லும் கூட ஒரு கலாச்சாரத்தின் அடையாளாமாக மாறிவிட்டது.
ஆனாலும் இன்றைய தமிழ்நாட்டில், மின்சார சலவை இயந்திரம் வேலை செய்யாவிட்டால் நம்மில் பலருக்கு நம் துணியை துவைக்கத்தெரியும். அதே அம்மியில் அரைக்கத் தெரியுமா? ஆட்டுக்கல்லில் ஆட்டத் தெரியுமா ஏன்றால்? நம்மில் பலரின் பதில் என்னவாக இருக்கும்?
சுகாதாரமான உடை அணிவதும் நாவுக்கு ருசியாக உணவு உன்பதும் எந்த ஒரு மனிதனின் அடிப்படைத்தேவை. அவற்றைக் கருவிகள் கொண்டு செய்யப்பழகும்போது நாம் நம் உடல்பயிற்சியை மட்டுமல்ல மற்ற ஒரு சில திறன்களையும் இழந்து விடுகின்றோம். மின் இயந்திரங்களை சமையலில் பயன்படுத்தும்போது, நம் வேலை எளிதாகிறது. அதை அடுத்து பொடிகளை வாங்கி சமைக்கின்றோம். அதுவும் குளிர்சாதனப்பெட்டி என்ற இயந்திரம் வந்து விட்டதால் பல வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறைதான் சமையல், அதை அடுத்து இப்போது வலையொளியில் பார்த்து சமைக்கின்றோம். பாரம்பரிய கிராமக் கலைகளைத் தொலைத்து போல தொலைந்து போன ஒன்று சமையல்கலை.
எங்கள் வீட்டில் என் குழந்தைகள் நடுநிலைப்பள்ளியில் படிக்கும்போது நடந்த கதை ஒன்றைக் கேளுங்கள். நான் அமெரிக்கா வந்ததிலிருந்து மின் இயந்திரத்தில்தான் துணி துவைப்பது. என் குழந்தைகள் இந்தியா வரும்போது மட்டுமே, துவைக்கும் கல்லைப் பார்த்து இருக்கின்றார்கள். அதில் துணி துவைப்பதை ஆச்சரியமாகப் பார்த்து இருக்கின்றார்கள்.
சரி கதைக்கு வருவோம். என் இரண்டாவது பெண் எட்டாம்வகுப்பு படிக்கும்போது அவர்களின் கோடைக்காலக் கல்வியாக மற்ற நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் மூன்று வாரங்களுக்கு உலக சுற்றுப்பயணம் செல்ல முடிவுசெய்தாள். சரி பயணத்திற்குத் தயாராகும் வேளையில் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டது, என்னவென்றால் அமெரிக்கா போல இல்லாமல் மற்ற எல்லா நாடுகளிலும் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகள் அதிகம். ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக யாரிடம் தனி வாகனங்கள் இருப்பதில்லை. பொது வாகனங்களில் மட்டுமே மற்ற நாடுகளில் பயணிக்க இயலும். அதனால் மாணவர்கள் அவர்களால் கையாளக்கூடிய வகையில் எடை குறைந்த இலகுவான பயணப் பெட்டிகளே எடுத்துவர வேண்டும்.
முடிந்த அளவு ஒருவருக்கு ஒரு பயணப்பெட்டி ஒரு கைப்பை போதும் என்று கூறிவிட்டனர். மூன்று வாரத்திற்கு ஒரேஒரு பெட்டி என்னும்போது தினம் ஒரு ஆடை அணிய இயலாது. எனவே ஒரு வாரத்திற்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வந்தாலே போதுமானது. எடுத்துவரும் துணிகளும் எளிதில் துவைத்து அலசிக் காயப்போடும் வகையில் இருக்கவேண்டும் அவர்கள் தங்கும் இடங்களில் அவர் அவர் துணியை அவர்களேத் துவைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் பயணம் எளிதாக இருக்கும் என்று சொல்லி விட்டனர்.
அடுத்தது என்ன? கையால் துவைக்க சோப்புக் கட்டியைத் தேடி அலைந்ததுதான் மிச்சம். எங்கு சென்றாலும் சலவை இயந்திரத்திற்கு போடும் சோப்புத்தான் கிடைத்தது. வேறு வழியின்றி அந்த சோப்புத்தூளை வைத்தே துணி துவைக்க சொல்லிக் கொடுக்கவேண்டும். பயணத்தில் இருப்பவர்களாயிற்றே கூடவே வாளியையா கொடுத்து அனுப்பமுடியும். எட்டாவது படிக்கும் பெண் இயந்திரத்தில் அழகாக தன் துணியை துவைத்து எடுத்து வைத்துவிடுவாள், ஆனால் கையால் துவைக்க வேண்டுமேயானால்?
பயண ஏற்பாட்டாளர்கள் சொல்லித் தந்தபடி ஆரம்பித்தது துணி துவைக்கும் பயிற்சி. துணியைக் கையால் துவைப்பது எப்படி என்று பட்டியலிட்டு ஒரு காகிதத்தையும் கொடுத்து விட்டார்கள்.
அவள் செய்ய செய்ய நான் அவளை மேற்பார்வையிட வேண்டும் (நான் வேறு ஆசிரியர்கள் சொல்வதை பிறழாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அடிக்கடி புத்தி மதி கூறி இருக்கின்றேன். என் சொல்லைக் கேட்கவா போகிறாள்?. உதடுகளை கடித்து என் வாயை மூடி அவள் செய்வதைக் கவனிக்க ஆரம்பித்தேன். முதலில் நாம் கை கழுவி வாய் கொப்பளிக்கும் தொட்டியில் துணியை ஊறவைத்து பின் அதிலேயே அலச வேண்டும்.
தொட்டியில் நீரை நிரப்பி, சோப்புத்தூளை போடும்வரை இருவருக்குமே ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அதில் துணியை போட்டு ஊறவைக்க வேன்டும் என்ற நிலையில் எங்கள் இருவருக்குமே குமட்டிக் கொண்டு வந்தது. சரி வாய் கொப்பளிக்கும் தொட்டியில் துணி துவைப்பது என்பது முடியாத காரியம் என்று தெரிந்துபோனது. வீட்டில் இருக்கும் தொட்டியிலேயே இவ்வளவு அருவருப்பாக இருக்கும்போது பொதுத்தொட்டியில் துணியை துவைப்பதா ?
கண்டிப்பாக முடியாது என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்து குளிக்கும்போதே அப்படியே துணியை அலசிக் கொள்வது. அப்படி செய்து இரவில் துணியை குளியல் அறையிலேயே வைத்து விட்டு மறுநாள் காலை சென்று பார்த்தால் துனியிலிருந்து ஒரு வாடை மட்டுமல்ல துணி கொஞ்சம்கூட காயவில்லை ஏன் என்றால் துணியை ஈரம் போகப் பிழிய அவளுக்குத் தெரியவில்லை, துணையைப் பிழியாமலே சொட்ட சொட்ட காயப் போட்டு வந்துவிட்டாள்.
இந்தக் கதையை எதற்குச் சொல்கின்றேன் என்றால், இயந்திரத்தை வைத்து ஒரு செயலைச் செய்யப் பழகிய அவளுக்கு அந்த வேலையை இயந்திரம் இல்லாமல் செய்யத்தெரியவில்லை. அதைவிட அந்த வேலையைச்செய்யும் பொறுமை அவளிடம் இல்லை. ஒரு இயந்திரத்தை இயக்கத் தெரிந்த அறிவைக் கொண்டு மட்டுமே அவளுடைய அன்றாட வாழ்க்கை இன்றும் நடக்கிறது.
இந்த இளம் தலைமுறையினர் பொதுவாக இப்படித்தான் இருக்கின்றனர். கணினிகள் சூழந்து அவர்கள் வாழும் வாழ்க்கை, கணினிகளே அவர்களுடைய வாழ்க்கையின் அத்தியாவசியம் ஆகி விடுகிறது. கருவிகளையே நம்பி வாழும் தலைமுறைக்கு நமக்குப் பிந்தைய தலைமுறையினர் நுண்ணறிவோடு செய்த செயல்கள் ஆச்சிரியத்தைத் தருகின்றன. அவை ஒவ்வோன்றையும் அற்புதமாக நினைக்கின்றனர். அதனாலேயே இன்றைய அவர்களுடைய வாழ்க்கையில் புத்தாக்கம் என்பது நுண்ணறிவு சார்ந்து செய்யப்படும் செயல்கள்தான். நாளையை தலைமுறை நேற்றைய விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கருவி என்ற ஒரு பெரியதிரை இடையில் இருக்கின்றதே!
அப்படி யோசித்தால் நம்முடையக் கல்வி என்பது கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது மட்டுமா? இல்லையே? கருவி என்பது மனிதன் செய்யும் வேலைக்கு உதவி புரிய வந்தது தானே? இந்தக் கேள்விகளைப் பார்க்கும்போது இயற்கை சார்ந்த வாழ்க்கைதான் சிறந்தது என்ற முடிவிற்கு நாம் வரலாம். ஆனால் நம்முடைய சுமை தோளாக இருக்க இயற்கை உயிரோடு இருக்குமா? இயற்கையைவிட மேலாக நம் முண்ணோரின் அனுபவ அறிவிற்கும் நுண்ணறிவிற்குமே 2030ல் பற்றாக்குறை இருக்குமே?
நாம் இன்றிலிருந்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்தான்/ ஆனால் அது மட்டும் போதுமா? நமது நுண்ணறிவை, கடந்த 200 ஆண்டுகால பட்டறிவை எப்படிக் காப்பது?
உலகில் ஐயாயிரம் வகை தவளைகள் இருக்கின்றனவாம். ஆனால் தவளைகளின் தொகை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது. காரணம் அசுத்தமாகிப்போன நீர் நிலைகள். இப்படி எத்தனையோ நாம் கைக்காட்டிக் கொண்டே போகலாம். நம்முடைய வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தவேண்டும் அதே நேரம் செழிப்பான மண்வளம், நீர்வளம் மாசற்ற காற்றும் நம் அடிப்படைத் தேவையல்லவா? ஐநாசபை 2030க்கான திட்டம் கொரானா பெருந்தொற்றினால் ஆட்டம் கண்டிருந்தாலும் அரசாங்கத்தைப்போல, சமுதாயப் பொறுப்புள்ள நிறுவனங்களைப்போல கல்வியாளர்களாகிய நமக்கும் ஐநாவின் பதினேழு குறிக்கோள்களைப் பின்பற்றி ஒரு நல்லுலகைப் படைக்க வேண்டாமா?
ஒவ்வோரு நாடும் தன் தனித்தன்மை, பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைக் கணினி நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கொடுத்தால் போதுமா?
நாம் இன்று என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?
அதற்குத் தான் கல்வி 4.0. இத்தனை வாரங்களில் கல்வி 4.0ன் தேவைக்கான காரணிகளைப் பலவாறு பார்த்தோம். அடுத்து கல்வி 4.0 என்ன என்பதைப் பார்ப்போம். அதை இன்றே நாம் நம் கல்வி முறையில் எப்படிப் பயன்படுத்துவது என்றும் காணலாம். உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்:
கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்
ஒரு காலத்தில் கணினியும் கணினியியலும் ஒரு தனிப்பிரிவாக ஒரு அறிவியலின் ஒருஅங்கமாகக் கருதப்பட்டது. இப்போது கூட STEM என்று சொல்லிக் கொண்டு அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணக்கு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அமைத்து கொடுப்பதோடு இவை நான்கும் இணைந்த ஒருத் தனிப்பிரிவாக பிரிக்கப்பட்டு கற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அறிவியல்பிரிவு, சமுதாய அறிவியல்பிரிவு, வீட்டுமேலாண்மை அறிவியல் என்று மூன்று பிரிவுகளாக பதினோராம் பன்னிரண்டாம் மாணவர்களுக்கு இருக்கும். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து இருப்பவர்களுக்கு, அறிவியல் பிரிவிலும் கணிதம் கணினிப்பிரிவிலும் சிக்கலில்லாமல் இடம் கிடைக்கும்.
இப்போது தமிழ்நாட்டில் எப்படி நடக்கின்றது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது ஒரு மாணவர் பயிலும் எல்லா பாடங்களிலும் இவை ஊடுருவி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. உலக தரத்தின்படி 20ம் ஆண்டு தொடக்கத்தில் அறிவியியல் பாடங்களை எடுத்துப் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் மிகக்குறைவாக இருந்தனர். இது பல பிரச்சனைகளை உருவாக்கும் என்று கருதிய அமெரிக்க தேசத்து அறிவியில் நிறுவனம் பிரதான அறிவியல் பாடங்களை என்று பெயர் கொடுத்து மாணவர்களுக்கு தொடக்க நடுநிலைப்பள்ளிகளிலேயே அவர்களுடையப் பாடத்திட்டத்தின் அடிப்படையாக இருக்கவேண்டியக் கட்டாயத்தை உணர்த்தினர். அதன் விளைவாக இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு வகையில் அமெரிக்கநாடு பலன் அடைந்து இருந்தாலும், மிக, மிக முக்கியமான மாற்றம், கணினியிலும் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் ஏற்பட்டது. இந்த மாற்றம் எந்த அளவிற்கு என்பதை இன்றைய அன்றாட வாழ்க்கையில் நாம் தினம்தினம் அனுபவித்து வருகின்றோம். தரவுகளின் இராஜியமாக உலகமே மாறிவிட்டது என்னும் பொழுது எந்தத் துறையை எடுத்துப் படித்தாலும் மாணவர்களில் கணினியியல் தகவல் தொழில்நுட்ப இயல் இரண்டிலும் இளம் வயதிலிருந்தே முறையாகக் கற்றால்தான் அவர்களால், அவர்கள் படிப்பைக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளமுடியும்.
கணினியியல் தகவல்தொழில்நுட்ப அறிவு என்று சொல்லும்போது, கருவிகளும் தொழில்நுட்பங்களும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது முதல் குறிக்கோளாக இருந்தாலும் அடிப்படை கணினிஅறிவு ஒருவருக்கு ஒரு அனுபவ அறிவாகக் கண்டிப்பாகத் தேவைப்படுகின்றது. ஒரு கல்விமுறையில் கணினியியலின் அனுபவ அறிவு மட்டுமின்றி மிக ஆழமான தெரிதலும் புரிதலும் கொண்ட கணினி ஆளுமையும் வல்லமையும் இன்றைய மாணவர்களுக்கு கண்டிப்பாகத் தேவையாக உள்ளது.
இது மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையின் மறுபக்கம் என்ன? கணினி ஆளுமையும் வல்லமையும் பெறக்கூடிய வாய்ப்பு இல்லாத ஒரு சமுதாயம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே உருவாகி வருகின்றது. உலகின் மனிதவளத்தில் ஒரு சமமின்மைக் காணப்படுகின்றது. அதற்கு ஏழ்மை, அரசியல் சூழல் என்று நாம் காரணங்களை அடுக்கினாலும் நாம் அனைவருமே நமக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கின்ற சேவைகளே போதும் என்று உலகின் மிக முக்கிய கணினி நிறுவனங்களை சார்ந்து இருக்க ஆரம்பித்து உள்ளோம்.
அந்த நிறுவனங்கள் நமக்குக் கொடுக்கும் சேவைகளுக்கு ஏற்றபடி நம் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு வருகின்றோம். மறுமலர்ச்சி காலத்திலிருந்து உலகில் எத்தனையோ கண்டுபிடிப்பகள் ஏற்பட்டன. அவற்றில் மின்சாரம், கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பு, அணுசக்தி கண்டுபிடிப்பு, விமானத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் என்று நாம் சில முக்கியமானத் தொழில்நுட்பங்களோடு இன்றைய தகவல்தொழில்நுட்ப கணினியியல் தொழில்நுட்பம் உலகில் கொண்டுவந்த தாக்கங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்படி ஒரு கல்வியாளர்களாக ஆராய்ச்சியாளர்களா நாம் தரவுகளின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தகவல் தொழில்நுட்பம்தான் மனித இனத்தை வேரோடு மாற்றிக்கொன்டு இருக்கின்றது.
உலக வரலாற்றில் ஒவ்வோரு தொழில்நுட்பமும் மனிதகுலத்தின் மேன்மைக்காகக் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும் அப்படிப்பட்ட பயன்பாடுகளின் எதிர்விளைவுகளை நாம் இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். சென்னை வெள்ளம், மலேசிய வெள்ளம், ஆஸ்திரேலியா வெள்ளம், கலிபோர்னியாவில் காட்டுத்தீ, சூறைப்புயல்களின் தாக்கம் வழக்கத்திற்கு மாறான இடங்களிலும் காலத்திலும் பனிப்புயல் என்று நம்முடைய அன்றாட வானிலை இரு திசைதெரியா முள்ளாக அலைபுற்றுக் கொண்டு இருக்கின்றது. இவையெல்லாம் இயற்கையில் நம் அன்றாட தொழில்நுட்பங்களின் அதீத பயன்பாட்டினால் வந்தது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
மின்சக்தி நமக்கு இயற்கையில் கிடைக்கின்றது என்று பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் அவர்களால் 1752ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதை மின்சாரம் என்ற தொழில்நுட்பமாக மாற்றியது தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள். அவரைத் தொடர்ந்து சாமுவேல் இன்சுல் என்பவர் ஒரு ஆடம்பர மூலப்பொருளாக இருந்த மின்சக்தியை அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் குறைந்த விலையில் உற்பத்தி செய்தார். மின்சாரம் கண்டுபிடித்து ஏறத்தாழ 300 ஆண்டுகள் கழித்தும் இன்னும் ஏறத்தாழ 20% உலக மக்கள் தொகைக்கு சரியான வகையில் மின்சாரம் கிடைக்கவில்லை.
மின்சாரப் பற்றாக்குறை இன்னும் தீர்ந்தபாடில்லை. ஆனால் மின்சாரத் தேவைக்காக பயன்படுத்தபபட்டு நிலக்கரி தொல்லுயிர் எச்சம் எரிசக்திகளினால் பைங்குடில் வளிக்களான (greenhouse gas) நீராவி கரிமல வாயு, ஓசோன் நைட்ரேட் ஆக்ஸைடு, மீத்தேன் ஆகியவை சுற்றுச்சூழலை பாதித்துக் கொண்டே இருக்கின்றது என்று நமக்குத் தெரியும். அதனால்தான் நீர் காற்று சூரியசக்தி என்று இயற்கை வழியில் நாம் எரிசக்தியைக் கண்டுபிடித்துக் கொண்டு இருக்கின்றோம்.
நாம் பயன்படுத்தும் அடுத்தத் தொழில்நுட்பத்தில் மிக முக்கியமானது போக்குவரத்துத் தொழில்நுட்பம் இருசக்கரவாகனம் முதல் விண்வெளியில் செல்லும் விண்கலம்வரை அனைத்தும் தங்கள் கழிவுகளாக தங்கள் பங்கிற்கு சூழவியலை மாசுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. அதனால்தான் இன்று மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உற்பத்தியில் நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியையும் நடத்தி வருகின்றன. நாம் இன்று பயன்படுத்தும் மகிழுந்து 1885களில் கண்டுபிடிக்கப்பட்டது. 1903ல் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தனை நூற்றாண்டுகளில் இவற்றின் பாதிப்பு சூழவியலில் என்ன என்று தெரியுமா? ஒரு சராசரி நான்கு சக்கர மகிழுந்து 4.5 லிட்டர் கல்லெண்ணெயிலிருந்து (petrol) பயன்பாட்டில் எட்டு கிராம் கரிமல வாயுவையும் 4.5 லிட்டர் வளியெண்ணெய் (diesel) பயன்பாட்டிலிருந்து ஏறத்தாழ பத்துகிராம் கரிமலம் வெளியாகின்றது என்றும் அமெரிக்க சூழவியியல் ஆணையம் தெரிவிக்கின்றது. அமெரிக்க வாஷிங்டன் நகரிலிருந்து ஜெர்மனிவழி சென்னை சென்று அதேபோல ஒருவர் திரும்பிவரும் பயணத்தில் 4.6 டன் கரிமல வாயுவை வெளியிடுகிறது என்று myclimate.org என்ற தளத்தில் அறிந்துகொண்டேன். அணுசக்தியினால் இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட விளைவை உலகம் என்றுமே மறவாது.
நான் இவ்வாறு பாதகமான விளைவுகளை எடுத்துச் சொல்வதால் அந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்லவரவில்லை. கடந்த நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் தங்களின் மனித பயன்பாட்டைப் பார்த்தனரே தவிர அதனால் விளையும் பாதகமான விளைவுகளை எண்ணிப்பார்க்கவில்லை.
அதே போலத்தான் இந்த கணினித் தொழில்நுட்பமும். ஆப்பிள் நிறுவனத்தின் திறன்பேசி வெளிவந்த காலக்கட்டத்திலிருந்து கணினித் தொழில்நுட்பம் பொது மக்களிடேயே மிகவேகமாகப் பரவினாலும் அதனுடைய பாதகமான தாக்கம் இயற்கைச்சூழலை மட்டுமல்ல மனிதவளத்தையே சூறையாடிக்கொண்டு இருக்கிறது. மனிதம் என்பது கற்றலும் பொருள் ஈட்டுவது மட்டும் தானா? மனித நோக்கமே பணிசெய்து பொருள் ஈட்டி பலபல சொத்துக்களைப் பெருக்குவதுதான் என்றால் நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் என்ன வேறுபாடு ஐந்தறிவு உயிரினங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் அறம். ஒவ்வோரு உயிரினத்திற்கும் ஓர் அறம் உண்டு. ஆனால் மனிதனின் அறம் எது என்பதை எப்படி ஒரு சில தொழில்நுட்ப நிறுவனங்கள் நிச்சயிக்கலாம்?
இயற்கையை தன்னைச் சுற்றிய சக மனிதர்களை, அரவணைத்துப் போக நமக்குத் தெரியவேண்டுமே? இது இங்கே வாழ்க்கைத் தத்துவமாக சொல்ல வரவில்லை. தன்னையும் நம் சமுதாயத்தையும் நாம் பேணி வாழாவிட்டால் அங்கே சமூகம் என்பதே ஏது? நம்முடைய இன்றையக் கல்விமுறைகளும் அப்படிப்பட்ட ஒரு சிந்தனையை நமக்குள் வளர்க்கவில்லை. அறநெறி என்பது ஒரு தத்துவப் பாடமாகவோ அல்லது ஆன்மீகமாகவோதான் பார்க்கப்படுகின்றது என்றோ யாரோ போட்ட வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம். நாம் சுவாசிக்கும் காற்று மாசு பட்டபோது நாம் கவலைப்படவில்லை. நம் விவசாய நிலங்கள் மனைகளாக தொழிற்சாலைகளாக மாறும்போதும் நாம் கவலைப்பட்டதில்லை. கவலைப்பட்டவர்கள் எல்லாம் அதைக் கல்விச்சூழலில் கொண்டுவரவும் இல்லை.
சமுதாய நல்லிணக்க நோக்கு இல்லாத ஒரு கல்வி எத்தகைய எதிர்காலத்தை நமக்கு உருவாக்கும்?
மனிதனுடைய எதிர்காலம் எல்லைகளை அரசியலை கலாச்சாரத்தை மொழியை ஒரு கூட்டத்தினரின் தனித்துவத்தைப் பாதுகாப்பதிலும் அதை வளர்ச்சி அடையச் செய்வதிலுமல்லவா ஒளிந்து இருக்கின்றது. இப்படி சமுதாய நோக்கோடு கூடிய நன்னெறிகொண்ட தலைமைப்பண்பு நாளைய நிறுவனர்களுக்கு, நாளைய தொழிலாளிகளுக்கு, நாளைய அரசாங்கத்திற்குத் அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. அப்படிப்பட்ட அத்தியாவசியத்தை இன்றே இப்போதேப் பூர்த்தி செய்யத் தொடங்குவதுதான் கல்வி 4.0வின் அடிப்படை.
எப்படி அறிவியலுக்கான மனிதவளம் தேவை என்று தீர்மாணித்து STEM நம் பாடங்களில் கொண்டுவரப்பட்டதோ அதேபோல நம்முடைய எதிர்காலத்திற்கு இன்று பற்றாக்குறையாய் இருப்பது சமுதாய நல்லிணக்க நோக்கு சார்ந்த பாடப் பொருண்மைகள்? நம்மால் கொண்டுவர முடியுமா? நம் கல்வி முறையை மாற்றுவதன் மூலம் நம் புவியை இயற்கை அழிவிலிருந்து காக்க முடியுமா? மனிதவளத்தை மேம்படுத்த முடியுமா? முடியும் என்று சொல்கிறது கல்வி 4.0.
சிறந்த கல்வியின் அடிப்படை உன்னதமான கல்வி வளங்களும் மனிதநேயம் வளர்க்கும் ஆசிரியர்களும். இவை இரண்டும் உருவாக தகவல்தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு தேவை.
விழிப்புணர்வின் அடுத்தப்பக்கம் நமது சமூக வலைதளங்களில் வரும் செய்திகள். இணையதளம் என்பதை virtual என்று கூடக் கேள்விப்பட்டு இருக்கின்றோம். அப்படி என்றால்
carried out, accessed, or stored by means of a computer, especially over a network என்று Oxford ஆங்கில அகராதி கூறுகின்றது. இதையே தமிழில் நடைமுறையில் மெய்யான , செயலளவில் மெய்யாகக் கொள்ளத்தக்க என்று அகராதி கூறுகின்றது. அதே virtual என்ற சொல்லை கணினிக் கலைச்சொல்லாக பார்க்கும் போது மெய்நிகர் என்ற சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம். மெய்நிகர் என்றுதான் கூறுகின்றோமேத் தவிர மெய் என்று சொல்வதில்லை. மெய்க்கு நிகரான ஒன்று மெய்யாகி விட முடியுமா? இதையே தான் Oxford ஆங்கில அகராதியும் not physically existing as such but made by software to appear to do so என்று இன்னோரு விளக்கமும் அளிக்கின்றது. தமிழில் மாயம், மறைமுகம் கற்பனை என்று கூட இச்சொல்லுக்கு பொருள் இருக்கின்றது. இந்த அடிப்படையைக்கூட உணராமல் நாம் இணையத்தில் வரும் தகவல்களை நம்பிச் செயலாற்றிக் கொன்டு இருக்கின்றோம். 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி நார்வே நாட்டில் நோபல் பரிசு பெற்ற இரஷ்ய பிலிப்பைன்ஸ் செய்தித் தொடர்பாளர்கள் தங்களுடைய ஏற்புறையில் இன்றைய செய்திகள் குறித்த கவலையைத் தெரிவித்து உள்ளனர். அதிலும் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் ராப்ளர் என்ற செய்தி தளத்தின் முதன்மை மேலாண்மை அலுவலர் மரியா ரேசா சமூக வலைதளங்களில் வரும் செய்திகளைக் குறித்த தன் கவலையைத் தெரிவித்தார். இன்றைய சமூக வலைதள நிறுவனங்களை நேரடியாக குறித்துப் பேசிய அவர் “ செய்தியாளர்களின் இன்னோரு பக்கமாக இருக்கும் தொழில்நுட்பத் தளங்கள், பொய் என்ற கிருமிகள் மூலம் நமது சிந்தனையை ஆக்கிரமித்து, நம்மை ஒருவரை ஒருவரோடு மோத வைத்து மக்களின் மனதில் பயன் கோபம் ஆத்திரம் என்ற விஷ உணர்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். இந்த விஷமச் செய்திகள் நம் உலகத்தை ஒரு அலங்கோலமாக மாற்றி வருகின்றது. தங்களுடைய இலாபத்திற்காக இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யும் அமெரிக்க தொழில்நுட்பங்களுக்கு எதிராக உண்மையான செய்திகளைப் பரப்ப செய்தியாளர்கள் மிகவும் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்று அவர் கூறுகின்றார். சமூக வலைதளங்களில் நடக்கும் வன்முறை இன்று உலகில் நாம் அனைவரும் அனுபவிக்கும் உண்மையான வன்முறை என்று அவர் சொல்கிறார்.
இன்று உலகில் வலம்வரும் செய்திகளில் பெரும்பான்மையான பங்கு முகநூல் வழியாகத் தான் பகிரப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் உண்மையான மனிதர்களா அல்லது வர்த்தகங்களா என்ற விவரம் முகநூல் நிறுவனத்திற்கு அன்றி வேறு யாருக்கும் தெரியாது. இந்தப் பயனாளர்கள் இடும் செய்திகள் எந்த வகையைச் சார்ந்தவை என்பதும் முகநூலுக்குத் தான் தெரியும். 2021ம் ஆண்டு டிசம்பர் பதினாறாம் தேதி வெளிவந்த அறிக்கையில் முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டா (meta) கொடுத்துள்ள அறிக்கையில் பல தனியார் அவதானிப்பு (surveillance) நிறுவனங்கள் ஏறத்தாழ 50000 பயனர்களை தாக்கி அவர்களிடமிருந்து விவரங்களை எடுத்து அதை வைத்து உளவு நடத்தி இருப்பதாக அறிவிக்கைத் தெரிவித்து உள்ளது. டிசம்பர் 3ம் தேதி வந்த Reuters செய்தித்தளத்தில் வந்த செய்தியில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு அரசியல் செய்தித் தளம் 2020ம் அமெரிக்கத் தேர்தல் பற்றிய பொய்யான செய்திகள், புரளிகளை உண்மை செய்தியாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாகத் தெரியவருகிறது. இது முகநூல் நிறுவனத்திற்குத் தெரிந்திருந்த போதிலும் அவர்கள் செய்திதளத்தைக் கண்டித்த போதும் இந்தத் தளத்திலிருந்துவரும் பொய்யான செய்திகளை முகநூல் நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தெரிகிறது.
நவம்பர் ஒன்பதாம் தேதி முகநூல் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் வெளிவரும் ஒவ்வொரு 10,000 பதிவுகளில் பயனாளர்களை அச்சுறுத்தியும் கோபப்படுத்தியும் மன உளைச்சல் கொடுத்தும் தொந்தரவு கூட பதிவுகள் 14 அல்லது 15 முறை வருகின்றன என்று கூறுகின்றது. இவ்வாறு தவறு இழைக்கும் பயனர்களின் கணக்கை முடக்கியும், அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடுத்தும் வருகிறது முகநூல்.
முகநூல் கொடுக்கும் தண்டனைகளில் முக்கியமானது இம்மாதிரி பதிவுகளைப் பற்றி எச்சரிக்கையை மற்றப் பயனர்களுக்குக் கொடுப்பதும். அப்பதிவுகளை பயனர்கள் பார்க்காதவாறு கீழே தள்ளுவதுமே தவிர இந்தச் செய்திகளை முழுமையாக அவர்களின் தளத்திலிருந்து எடுப்பதில்லை. அப்படியானால் நாம் மின்னியியல் வழி நுகரும் செய்திகளில் எது உண்மையானது? எது பொய்யானது? எது நிகழ்வுகளைத் தெரிவிக்கப் பயன்படுத்தபடுகிறது? எது நம் உணர்வுகளைத் தூண்டி செயல்பட வைக்கிறது.
ஒருவரின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கும்?
முகநூலில் வரும் எதிர்மறை செய்திகள் இன்று இணையத்தில் வரும் செய்திகளில் ஒரு எடுத்துக்காட்டுத்தான். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இணையத்தில் வரும் செய்திகள் எப்படிப்பட்டவை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைதளங்களை நம்பி இருக்கும் செய்தியாளர்களை நாம் குறை சொல்லமுடியாது. ஒரு செய்தியை எப்படி எவ்வாறு சேகரிப்பது என்ற அடிப்படையில் அல்லவா மாற்றம் கொண்டு வரவேண்டும்? அந்த மாற்றம் கல்வியாலும் கல்வியாளர்களாலும் தான் வரும். நோபல்பரிசு பெற்ற மரியா ரேசா அவர்களின் கருத்து சரிதானே? இன்றைய முன்ணனி இணைய நிறுவனங்கள் ஒரு பதிப்பகத்தைப் போலத்தானே செயல்படுகின்றன?
சில நாட்களுக்கு முன்னால் வலையோளியாளர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பதிவில் சொன்ன கருத்துக்களுக்காக கொடுக்கப்பட்ட புகாரை இரத்து செய்யும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உயர்திரு நீதியரசர் ஜீ.ஆர் ஸ்வாமிநாதன் அவர்கள் தன் தீர்ப்புரையில்கூட “எந்த ஒரு வலையோளியாளரோ அல்லது பொதுநல செய்திகளைப் பற்றி கருத்துரைக்கும் சமூகவலைதள பிரபலங்களோ இந்திய அரசு சாசனம் Article 19 (1) (a) படி ஊடகங்களும் செய்தியாளர்களும் அனுபவிக்கும் பேச்சு சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்று கூறுகிறார். இவ்வாறு மக்கள் நுகரும் அனைத்து செய்திகளிலும் கலப்படம் இருந்தால் என்ன செய்வது? கலப்பட செய்திகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளவும், உண்மையானச் செய்திகளை எவ்வாறு கொடுப்பது? கொடுக்கும் செய்திகள் மனிதஉரிமைகள் மீறா வண்ணம் எப்படி அமையவேண்டும் என்று சொல்வதும் கற்றுக் கொடுப்பதும் கல்வி தானே? இன்றையக் கல்வி அப்படிப்பட்ட ஒரு கருவியாக மாணவர்களுக்குப் பயன்படுகின்றதா? இல்லைதானே?
பசி எவ்வாறு ஒரு காலத்தில் போக்ககூடிய ஒரு பிணியாகப் படுத்தபட்டதோ? எப்படி மின்சாரப் பற்றாக்குறை முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியத் தேவையாக முதன்மைப் படுத்தப்பட்டதோ அது போல கல்வி முறையில் மாற்றம் இன்றைய இன்றியமையாதத் தேவையாக உள்ளது. கல்விப் புரட்சியில் நம் பொருளாதாரத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா நிலைகளிலும் தன்னிறைவு அடையலாம்.
செய்தித்தாள், வானோலி தொலைக்காட்சி மூலம் வரும் செய்திகளை நாம் வடிகட்டி எடுத்துப் புரிந்துகொள்ள சற்றேனும் கால அவகாசம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் கணினி வழி தகவல் தொழில்நுட்பத்தின் அகோர வடிவமாக, நம்மை வந்து அடையும் இந்த செய்தித் துணுக்குகளின் தாக்கத்தை எவ்வாறு நேர்மறையாக மாற்ற முடியும்? என்ன செய்யலாம்?