உன்னிமேனன் இளையராஜாவின் இசையில் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் ‘பொன்மானே’ பாடியிருந்தாலும் அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து ரஹ்மான் இசையில் ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ பாடலின் மூலம்தான் மீண்டும் புகழ் பெறுகிறார். அதன் பிறகு மின்சார கனவில் ‘ஊ…லா..லா’ பாடலைப் பாடியதற்கு அவருக்கு தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது. ரஹ்மான் இசையில் சிறந்த பாடல்களை பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கே.ஜே.ஜேசுதாஸ் போன்றவர்கள் பாடக்கூடிய குரல்வளத்துடன் பாடல்களை ரஹ்மான் உன்னிமேனனுக்கு தயங்காமல் கொடுத்தார். ‘ரிதம்’ படத்திலும், ‘கண்களால் கைது செய்’ படத்திலும் அவர் பாடிய பாடல்கள் இன்றும் மக்களால் விரும்பி ரசிக்கப்படுகின்றன.
சுரேஷ் பீட்டர், ரஹ்மானின் இளம்வயது நண்பர். பல்வேறு குழுக்களில் பாடியும், டிரம்ஸ் வாசித்து வந்த இவரை முதல் பாடலான ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் உச்சத்தை அடையச்செய்தது. அதன் பிறகு ‘டேக் இட் ஈஸி ஊர்வசி’, ‘பேட்டை ராப்’ போன்ற பாடல்கள் மூலம் குறுகிய காலத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்தப் பாடல்களை கேட்ட அனு மாலிக் போன்ற இசையமைப்பாளர்கள் இவரை இந்தியிலும் பாட வைத்தார்கள். அனு மாலிக் இசையில் ‘சிக்கு புக்கு ரயிலு’ இந்தி வடிவத்திலும், ஜோஷ் படத்தில் ‘ஷைலாரோ’ பாடலையும் பாடி ஒருகாலத்தில் புகழின் உச்சியில் இருந்தார்.
ரஹ்மான் அறிமுகப்படுத்திய குரல்களில் மறைந்த பாடகர் ஷாகுல் ஹமீதின் குரல் தனித்துவமானது. அசலானது. அவருக்கு
அருமையான பாடல்களை கொடுத்து ஷாகுல் ஹமீதின் குரலை அனைவரும் கேட்கச் செய்தார். அதற்கு முன்பு ஷாகுல், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மெல்லிசை பாடகராக இருந்தார். ரஹ்மானை ஒரு விளம்பரப்படத்தில் பாட சந்தித்தார் ஷாகுல் ஹமீது. அவரது குரலும், பண்பும் ரஹ்மானுக்கு பிடித்து போனது. இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். அப்போதுதான் பஞ்சதன் ரிக்கார்டிங் தியேட்டரை கட்டியிருந்தார். அதில் 1989ஆம் ஆண்டு முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது ‘தீன் இசை மாலை’ என்னும் இஸ்லாமிய இசை ஆல்பம். அந்த ஆல்பத்தில் அதிக பாடல்களை ஷாகுல் ஹமீதை பாட வைத்தார். அதன் பிறகு சினிமாவில் நுழைந்து வெற்றி பெற்ற நேரம் ஷாகுலை பாட அழைத்தார் ரஹ்மான்.
திரையிசைக்கு ஷாகுல் பாடிய முதல் பாடல், ‘திருடா திருடா’ படத்தில் வரும் ‘ராசாத்தி’ என்ற பாடல் தான். ஆனால், அதற்கு முன்பாக ஜென்டில்மேன் படத்தில் பாடிய ‘உசிலம்பட்டி பெண்குட்டி’ வெளிவந்து பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆகிவிட்டது. தொடர்ந்து காதலன், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, உழவன், மே மாதம், வண்டிச்சோலை சின்ராசு என வரிசையாக ரஹ்மான் இசையமைத்த படங்களில் ஹிட் பாடல்களை பாடி, தமிழக இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் ஷாகுல் ஹமீது. மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் பாடிக்கொண்டிருந்து
அருமையாக முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் மரணமடைந்தார். அவரின் மரணம் ரஹ்மானை மிகவும் பாதித்தது. அதை ரஹ்மானே பல்வேறு பேட்டிகளில் கூறியுள்ளார். ஷாகுல் ஹமீது கடைசியாக பாடிய பாடலும் ரஹ்மானுக்குத்தான் என்பதும் நம்மை சோகத்தில் ஆழ்த்தும் விஷயம். ‘ஜீன்ஸ்’ படத்தில் வரும் ‘வராயோ தோழி’ என்ற பாடல்தான் ஷாகுல் பாடிய கடைசி பாடல்.
ஸ்ரீநிவாஸ் கெமிக்கல் என்ஜினீயராக வேலைபார்த்துக் கொண்டிருந்தவர். பாடகராக வேண்டும் என்ற ஆசையில் முயற்சி செய்து கொண்டிருந்தார். ரஹ்மானிடம் வாய்ப்பு கேட்டுப்போன அவர் மெஹ்தி ஹாசனின் பாடல்களை பாடிக் காண்பிக்கிறார். ரஹ்மான் அவருக்குக் குழுவில் பாடும் வாய்ப்பை முதலில் தருகிறார். மெல்ல மெல்ல இரண்டு, மூன்று பாடகர்கள் சேர்ந்து பாடும் பாடலை தருகிறார். ஒரு கட்டத்தில் தனது என்ஜினீயர் வேலையை விட்டுவிட்டு ரஹ்மான் குழுவில் ஒரு முக்கிய அங்கத்தினராகவே ஆகிவிடுகிறார் ஸ்ரீநிவாஸ். ‘ரட்சகன்’ படத்தில் இவர் பாடிய ‘கையில் மிதக்கும் கனவா நீ’ பாடல் தனியாக பாடிய முதல் பாடல்.
படையப்பா படத்தில் ‘மின்சாரப் பூவே’ பாடலை பாடகர் ஹரிஹரனுக்கு டிராக் பாடகராக பாடுகிறார். அதன் பிறகு ஹரிஹரனும் பாடிவிட்டு போய் விடுகிறார். ஆனால், ரஜினிகாந்துக்கு ஸ்ரீநிவாஸ் குரல் பிடித்துவிட, அவர் பாடியதையே டிராக்கில் வைத்துவிட சொல்கிறார். அந்த பாடல் ஸ்ரீநிவாஸுக்கு பெரிய புகழை வாங்கிக் கொடுத்தது. தமிழக அரசின் சிறந்த பாடகர் விருதும் அவருக்குக் கிடைத்து. அதன் பிறகு அவரது கிராஃப் மடமடவென ஏற ஆரம்பித்து. இந்தி, மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் பாடல்களை பாடிய ஸ்ரீநிவாஸ், சில படங்களுக்கு இசையும் அமைத்தார். இன்றுவரை ரஹ்மானுக்கு நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார்.
பாடகர் ஹரிஹரன் சில இந்தி படங்களில் பாடியிருந்தார். கஜல் பாடகராக அறியப்பட்ட அவரை ‘ரோஜா’ படத்தில் ‘தமிழா தமிழா’ பாடலுக்கு பாட வைத்தார். ஹரிஹரனின் கஜல் பாடல்களின் ரசிகர் ரஹ்மான். ரஹ்மானும், ஹரிஹரனும் இணைந்து பல அருமையான பாடல்களை பம்பாய், இந்தியன், லவ் பேர்ட்ஸ், முத்து, மின்சார கனவு, ஜீன்ஸ், ரங்கீலா, தால் ஆகிய படங்களில் கொடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 15 வருடங்கள் தமிழ் இசையமைப்பாளர்களின் மோஸ்ட் வாண்டேட் பாடகராக மும்பையில் இருந்து பறந்து சென்னைக்கு வந்து பாடிக்கொண்டிருந்தார் ஹரிஹரன். ஏ.ஆர்.ரஹ்மான் தமிழிலும், இந்தியிலும் பல புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழில் பாடிக்கொண்டிருந்த பல பாடகர்களை இந்தியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். சுஜாதா, ஸ்வர்ணலதா, ஜெயச்சந்திரன், சித்ரா ஆகிய பாடகர்களை தனது இந்திப் படங்களில் பயன்படுத்தி நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இந்தியிலும் சினிமா மார்க்கெட்டுக்கு வெளியிலிருந்து நல்ல குரல்களைக்கூட தேடிப்பிடித்து இந்திப் பாடல்களில் பாடவைத்துள்ளார். அட்னான் சாமி, ராகேஸ்வரி, அலிசா செனாய், லக்கி அலி, ரூப்குமார் ரதோட், சோனு நிகம் போன்ற பாடகர்கள் தனியிசை ஆல்பங்களில்தான் அதிகம் பாடி புகழுடன் இருந்தனர். இவர்கள் அனைவரையும் இந்தியில் பாடவைத்து ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். நரேஷ் அய்யர், பென்னி தயாள், ஜோனிடா காந்தி போன்ற இளம் பாடகர்களை இந்தியில் அறிமுகப்படுத்தியிருந்தாலும் தமிழில் பல
அருமையான
பாடல்களைப் பாடவைத்திருக்கிறார். நரேஷ் அய்யர் வடஇந்தியாவில் வளர்ந்த தமிழ் இளைஞர். அவரை சூப்பர் சிங்கர் பாடல் போட்டியில் சந்திக்கிறார் ரஹ்மான். அவரது குரல் பிடித்துப் போகிறது. போட்டியில் நடுவர்களில் ஒருவரான ரஹ்மான் அவரிடம் சொல்கிறார் ‘ உங்களை அடுத்த கட்டத்துக்கு தேர்வுசெய்ய முடியவில்லை. ஆனால் நீங்கள் விரும்பினால் எனது இசையமைப்பில் தமிழ்ப் படங்களில் பாடலாம். ரிக்கார்டிங் தேதிகளை தெரிவிக்கிறேன். சென்னைக்கு வாருங்கள்’ என்கிறார். நரேஷ் அய்யருக்கு எதிர்பாராத வாய்ப்பு இது. அந்தப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால்கூட அவர் இந்தளவு மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டார். முதல் பாடலே ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
நரேஷ் அய்யர் சென்னைக்கு வந்த பாடிய முதல் பாடல்தான் எஸ்.ஜே.சூர்யாவின்’ அன்பே ஆருயிரே’ படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆன ‘மயிலிறகே மயிலிறகே’ பாடல். கலக்கலான நாதஸ்வரம் மற்றும் தவில் இசையுடன் தொடங்கும் இந்தப் பாடல் இன்றுவரைக்கும் தமிழ் மக்களின் மனதில் நிலைத்திருக்கிறது. இன்றும் தென் தமிழகங்களில் திருமண வீடுகளில் ஒலிக்கவிடப்படுகிறது என்பது இன்னும் சிறப்பம்சம். இன்னும் ஒரு மறக்கவியலாத பாடலையும் நரேஷ் அய்யர் ரஹ்மானுக்குப் பாடியுள்ளார். ’ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் வரும் ‘முன்பே வா’ என்னும் அற்புத மெலடி. அதன்பிறகு எத்தனையோ பாடல்களை நரேஷ் அய்யர் பாடினாலும் இந்த இரண்டு பாடல்களுக்காக தமிழ்த் திரையிசையில் என்றும் நினைக்கப்படுவார்.
ஹரிணி, ரஹ்மான் அறிமுகப்படுத்திய பாடகிகளுள் மிக முக்கியமானவர். இந்திரா படத்தில் ‘நிலா காய்கிறது’ பாடலைப் பாடியபோது அவர் பத்தாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தார். அதற்கடுத்த பாடலே இந்தியன் படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து பாடிய ‘டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா’ பாடலே அவரை மிகப் பிரபலம் ஆக்கியது. கர்நாடக வாய்ப்பாட்டு இசையை முறையாகக் கற்றவர். பல
அருமையான
பாடல்களைப் பாடிய ஹரிணி, இந்தியிலும் முக்கியமான பாடல்களைப் பாடியுள்ளார்.
கர்நாடக இசைப்பாடகியாக புகழுடன் விளங்கிய டி.கே.பட்டம்மாள் அவர்களின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவனை திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் ரஹ்மான்தான். ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடல்தான் நித்யஸ்ரீ திரையிசைக்குப் பாடிய முதல் பாடலாகும். நித்யஸ்ரீயை ஜதிகளையும் பாடச்சொல்லி ரிக்கார்ட் செய்துகொண்டாராம் ரஹ்மான். அவர் பாடிய ஜதிகளை பாடலின் ஆரம்பத்திலேயெ அசத்தலாக பயன்படுத்தியிருப்பார். சுதந்திரமாக பாடலைப் பாட அனுமதித்தார் எனக் குறிப்பிட்டுள்ளார் நித்யஸ்ரீ. எல்லா பாடகர்களையும் அவர்கள் விரும்பும்படி பாடச்செய்து அவர்களின் தனித் திறமையை தனது இசைக்குள் கொண்டு வருவதுதான் ரஹ்மான் ஸ்டைல். இந்த மேஜிக்கை அவர் பல ஆண்டுகளாக நிகழ்த்திக் காட்டி வருகிறார்.
பாடகரை முதலில் பாடச் செய்து ரிக்கார்ட் செய்துகொண்ட பின்புதான் இசையை மிக்ஸ் செய்வார் ரஹ்மான். பாடல் வெளிவரும்போது அதைச்சுற்றி பல லேயர்கள் வேலை செய்திருப்பார். பாடிய பாடகர்களுக்கே தாங்கள் பாடிய பாடலைக் கேட்கும்போது அற்புதமான மேஜிக்கை உணர்வார்கள்.
பாலக்காடு ஸ்ரீராம் என அழைக்கப்படும் எஸ்.ஸ்ரீராம், தனது மனைவியை பாட வைப்பதற்காக ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு கூட்டிச் சென்றிருக்கிறார். ரிக்கார்டிங் அறையில் மனைவிக்கு பாட சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தவரின் குரலை மைக்கை ஆப் செய்யாமல் வைத்திருந்ததால் ரஹ்மான் கேட்டுவிட்டார். ஸ்ரீராமின் குரல் ரஹ்மானுக்குப் பிடித்துவிட நீங்கள் பாடகரா? எனக் கேட்டவர், அவரது தொடர்பு எண்ணை கொடுத்துப்போகச் சொல்லியிருக்கிறார். அடுத்து, தாஜ்மகால் படத்தின் ஆரம்பப் பாடலான ’ திருப்பாச்சி அருவாள’ பாடலை பாட வைத்தார். படையப்பா படத்தில் வரும் ‘வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லப்பா’ பாடலையும் பாடவைத்து அவரை ஹிட் பாடகர் ஆக்கினார். ரஹ்மான் கண்பார்வையில் படும் பாடகர்கள் உடனடியாக லைம்லைட்டுக்கு வருவதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே.
’திருடா திருடா’ படத்தில் வரும் ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ பாடலைக் கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அனுபமா பாடிய முதல் பாட்டு. அதற்கு சில வருடங்களுக்கு முன்பு திலீப்பாக விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தபோது, சில ஜிங்கிள்ஸ் பாடியுள்ளார் அனுபமா. அவர் அப்போது டெல்லியில் இருந்தார். ரோஜாவில் அறிமுகமாகி பரபரப்பாக இசையமைத்துக் கொண்டிருந்தபோது, ஒருமுறை ரஹ்மானை பாடலுக்காக சந்தித்தபோதுதான் திலீப் தான் ரஹ்மான் என அறிந்துகொண்டாராம். அனுபமாவுக்கு இயற்கையில் அற்புதமான குரல். ஹைபிட்ச்சில் வரும் வரிகளை அருமையாகப் பாடுவார். ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சந்திரலேகா என்னும் உச்சஸ்தாயிக்குச் செல்லும்போது அனுபமா காட்டியிருக்கும் பல்வேறு வெரைட்டி பிட்ச்சுகளை இன்றும் ரசிக்க முடியும். ரஹ்மானைப் பார்த்தபோது ஆங்கில பாப் பாடல் ஒன்றை பாடிக் காண்பித்திருக்கிறார். அவர் பாடியவிதம் பிடித்துப் போகவே இந்தப் பாடலை பாடவைத்திருக்கிறார் ரஹ்மான். இந்த ஒரே பாடலில் அனுபமாவுக்கு உலகளாவிய புகழ் கிடைத்தது. இந்த பாடலுக்குப் பிறகு இந்தி, தெலுங்கு படங்களிலும் பாடினார் அனுபமா.
‘திருடா திருடா’ படத்தில் ’தீ தீ தித்திக்கும் தீ’ பாடலை கேரலின் பாடினார். இது பலவகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த பாடல். இதில் வரும் ஜதிகளை ரஹ்மானே பாடியிருப்பார். மிஸ்டர் ரோமியோ படத்தில் ’தண்ணீரைக் காதலிக்கும்’ பாடலை சங்கீதா சுஜித், ‘கல்லூரி சாலை’ மற்றும் ‘சம்பா சம்பா’ பாடலைப் பாடிய அஸ்லாம் முஸ்தபா, ‘உன்னைக் காணவில்லையே நேற்றோடு’ பாடலை எஸ்.பி.பி-யுடன் இணைந்து பாடிய கர்நாடக இசைப்பாடகர் ஒ.எஸ்.அருண் என்று ஒரிரு பாடல்களை பாடியவர்கள்கூட அந்தப் பாடல்களால் இன்றும் நினைவில் கொள்ளப்படுவது ரஹ்மான் இசைக்கு கிடைத்த வெற்றியேயாகும்.
சுக்வீந்தர் சிங் ரஹ்மான் இசையில் பாடுவதற்குமுன் வேறுசில பாடல்களைப் பாடியிருந்தாலும் தில் சே படத்தில் பாடிய ‘சைய்யா சைய்யா’ பாடல்தான் அவரை உலகம் முழுக்க பிரபலம் ஆக்கியது. ஆனால் அதற்குமுன்னரே தமிழில் பாட ஆரம்பித்துவிட்டார். அந்தப் பாடல், ரட்சகன் படத்தில் வரும் ‘லக்கி லக்கி’ பாடல். அதன்பிறகு தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் சிறந்த பாடல்களைக் கொடுத்துள்ளார் சுக்வீந்தர். ஆஸ்கார் விருதை வென்ற ஜெய்ஹோ பாடலில்கூட முதன்மையான பாடகராக சுக்வீந்தர் இருந்தார். இந்தியில் பல நல்ல பாடல்களை ரஹ்மான் இசையில் பாடியுள்ள சுக்வீந்தர், சில படங்களுக்கு இந்தியில் இசையும் அமைத்துள்ளார். தனக்கு இந்த இடம் கிடைத்ததற்கு ரஹ்மான் முக்கியக் காரணம் என பல மேடைகளில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார் சுக்வீந்தர்.
சங்கர் மகாதேவனுக்கும் பல முக்கிய பாடல்களைக் கொடுத்துள்ளார் ரஹ்மான். ‘வராக நதிக்கரையோரம்’, ‘உப்புக் கருவாடு’, ‘என்ன சொல்லப் போகிறாய்’ என பல ஹிட் பாடல்களை ரஹ்மானுக்காகப் பாடியுள்ளார், ’என்ன சொல்லப் போகிறாய்’ பாடல், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்று அந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் முதன்மையான பட்டியலில் இருந்தது. அந்தப் பாடலை பாடியதற்காக அந்த ஆண்டின் சிறந்த பாடகருக்கான தேசிய விருதையும் பெற்றார் சங்கர் மகாதேவன்.
புதிய பாடகர்களை அதிகமாக பயன்படுத்துவதற்கான காரணத்தையும் ரஹ்மான் தனது சுயசரிதையில் விளக்கியிருக்கிறார்.’ஒருகாலத்தில் குறிப்பிட்ட நடிகருக்கு குறிப்பிட்ட பாடகர் பாடினால்தான் மக்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று சொல்வார்கள். சிவாஜிக்கு டி.எம்.செளந்தரராஜன் பாடுவார். இந்தியில் ராஜ்கபூருக்கு முகேஷ் பாடினார். நாம் அந்தக் காலங்களை தாண்டி வந்துவிட்டோம். இப்போது தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. மல்டி டிராக் ரிக்கார்டிங் வசதி வந்துவிட்டது. ஹோம் ஸ்டுடியோ செட்டப்பில் வேலை செய்வதால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் புதிய பாடகர்களுக்கு எங்களால் பயிற்சி கொடுக்க முடிகிறது. இதனால் பல திறமையான பாடகர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க முடிகிறது. அவர்களும் தங்களது தனித்துவத்தை நிரூபித்து, சாதித்தும் வருகிறார்கள். குடத்திலிட்ட விளக்குகளாக இருக்கும் அவர்களை குன்றில் வைப்பது மட்டும் எனது வேலை’ என்கிறார் ரஹ்மான்!
( நான் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் புத்தகத்திலிருந்து…)