ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் நாவலின் இந்தியப் பதிப்பு கட்டுரை – விஜயன்
எதற்கெல்லாம் இந்திய அறிவியல் – தொழில்நுட்ப அறிஞர்களின் நேரத்தை பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு ஒரு வரையரையே இல்லை என்பதை இச்செய்தியைப் https://www.telegraphindia.com/india/ayodhya-sun-to-shine-on-ram-with-science/cid/1899477 பார்த்ததும் புரிந்து கொள்ளலாம். ஆம் அயோத்தியாவில் கட்டப்படும் ராமர் கோவிலில் அமைக்கப்பட உள்ள ராமர் சிலையின் நெற்றியில் அவரது பிறந்த தினமான ராமநவமி தினத்தன்று (பங்குனி மாசம் அம்மாவசைக்குப் பிறகு வரும் 9ம் நாள்) சூரிய ஒளிக் கற்றை அவரது நெற்றியில் விழும் வகையில் ஒரு சிறப்பு உபகரணத்தை அமைக்குமாறு Indian Institute of Astrophysics, Interuniversity center for Astronomy and Astrophysics, Council for Scientific Researchச் சேர்ந்த Central Building Research Institute ஆகிய நிறுவனங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளன. இதில் Indian Institute of Technology இப்போதைக்கு விடுபட்டுள்ளது. எதிர்காலத்தில் சேர்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. Servomotor உள்ளிட்ட Opto-Mechanical arrangement ஐ Indian Institute of Technology தான் வடிவமைக்கும்.
இதை நடைமுறைப்படுத்த பல்வேறு சவால்கள் இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக இது சாத்தியமானதுதான். முதலாவதாக ராமநவமி என்பது சந்திர நாட்காட்டியைப் பயன்படுத்தி குறிக்கப்படும் நாள். சந்திர நாட்காட்டியிலோ ஒரு வருடத்திற்கு 346+ நாட்களே உள்ளன. ஆனால் பூமி சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 365+ நாட்கள். இதை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டது சூரிய நாட்காட்டி. சூரிய நாட்காட்டி தினங்களையும் சந்திர நாட்காட்டி தினங்களையும் ஒருமைப்படுத்த சமன்பாடு எழுதி அடுத்த நூறு ஆண்டுகளுக்கு வரும் ராமநவமிகளை ஆங்கில நாட்காட்டியில் அதாவது சூரிய நாட்காட்டியாக மாற்றும் கணிணி நிரலை உருவாக்க வேண்டும்.
இரண்டாவதாக பூமியின் அயன சுழற்சி (Precision). பூமியின் அச்சானது பூமியின் சுற்றுப்பாதைத் தளத்தில் 23.5 பாகை சாய்ந்திருக்கிறது. அத்தோடு நிற்காமல் இந்த சாய்மானமே அதே 23.5பாகை கோணத்தில் ஆட்டம் போடுகிறது. நேராக நின்று சுழலும் பம்பரம் நிற்கும் போது ஆட்டம் போடுமே அதேபோல் பூமியின் அச்சும் அதன் அடிப் புள்ளி ஒன்றில் நின்று அந்த அச்சின் உச்சிப்புள்ளியானது அதே 23.5 பாகையில் வட்டமடிக்கிறது. இதை அயன சுழற்சி என்பார்கள். இது ஒரு ஆட்டம் ஆட 26000- ஆண்டுகள் ஆகும். இதன் விளைவாக 13000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பருவகாலமும் தலைகீழகாக மாறிவிடும். அதாவது குளிர்காலமும் கோடைக்காலமும் தலைகீழாக மாறிவிடும். அயன சுழற்சியால் ஏற்படும் மாற்றமும் பூமியில் விழும் சூரிய கதிர்களின் கோணத்தை மாற்றும். இதையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
மூன்றாவதாக ராமர் கோவிலுள்ள ராமர் சிலையின் நெற்றியின் இருப்பிடம் (Latitude, Longitude, Distance from the center of earth) கணக்கிட்டு அதையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
நான்காவதாக, பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதையான வட்டப்பாதையல்ல. நீள்வட்டப்பாதையாகும். ராமநவமி தினமானது இந்த நீள்வட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புள்ளியில் வரும். இதையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
சூரியனின் கதிர்களை ஓரு வில்லைகள் மூலம் இணைக்கதிர்களாக மாற்றி ஒரு குழி ஆடியில் விழச் செய்ய வேண்டும். குழி ஆடியிலிருந்து எதிரொளிக்கப்படும் கதிர்களை வில்லைகள் மூலம் ராமர் நெற்றியில் குவியச் செய்ய வேண்டும். இது சாத்தியம்தான். இதற்குப் பிறகுதான் பிரச்சனையே. சூரிய நாட்காட்டிக்கும் சந்திர நாட்காட்டிக்கும் உள்ள இடைவெளியையும், அயன சுழற்சியை கணக்கில் எடுத்து, பூமியின் சுற்றுப்பாதையில் நாமநவமி வரும் புள்ளியையும் கணக்கில் எடுத்து, ராமர் சிலையின் நெற்றிப் பொட்டின் இருப்பிடத்தையும் கணக்கில் எடுத்து ஒரு கணிணி நிரல் எழுத வேண்டும். அதை ஒரு குறுங்கணிணியில் ஏற்ற வேண்டும். நிரலின் கணக்கீட்டு முடிவுப்படி குழியாடியானது அதன் மையப்புள்ளியில் மையமாக வைத்து சுழற்றும் மின்மோட்டாருடன் குழிஆடியை இணைக்க வேண்டும். கணிணி நிரலின் கட்டளைப்படி மின்மோட்டார் இயங்கி குழியாடி சுழன்று கணக்கீடு சொல்லும் இடத்தில் நிற்கவேண்டும். அடுத்தது கணிணிநிரல் கொண்டு மாற்றம் செய்யும் Servomotor என்ற உபகரணமானது ஒளிவாங்கி வில்லைகளின் தூரத்தையும் எதிரொளி வில்லைகளின் தூரத்தையும் மாற்றம் செய்யும். வில்லைகளின் நகர்த்தலையும் குவியாடியின் சுழற்சியையும் உள்ளடக்கிய Opto-Mechanical arrangementஐ கணிணியுடன் இணைக்க வேண்டும். அதை ஏற்கனவே நிர்ணயித்த இடத்தில் பொருத்த வேண்டும். இந்தப் பணிகளைத்தான் இந்த மூன்று அறிவியல் நிறுவனங்களும் செய்யப் போகிறது.
இது தேவையா என்பதுதான் எனது கேள்வி. அறிவியல் அறிஞர்களையும் தொழில்நுட்ப அறிஞர்களையும் ஆக்கபூர்வமான வேலைகளுக்கு பயன்படுத்துவதற்கு பதில் எதற்கும் பயன்படாத இந்த விஷயத்தை செய்வது ஏன்? ராம நவமி தினத்தன்று சூரியக்கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் படும் போது பக்திப்பரவத்திலிருக்கும் பக்தர்கள் சூரிய ஒளியானது ராமர்சிலையிருந்து கிளம்பிச் செல்கிறது என்றே முடிவெடுப்பார்கள். இதை வைத்து பிரசாரம் செய்து ராமர் அற்புத சக்தி படைத்தவர், அவர் சிலையில் கடவுள் குடியிருக்கிறார் எனவே அவரது‘ பிறந்த நாள் அன்று நெற்றியிலிருந்து ஒளியை உமிழ்கிறார் என்று பிரசாரம் செய்ய இது பயன்படும். ஏராளமான வீடியோக்கள் எடுத்து வாட்ஸ்அப்பில் சுற்றுக்கு விட்டுவிடலாம்.
டான் பிரௌன் எழுதிய ஏஞ்சல் அண்ட் டெமான்ஸ் நாவலில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாட்டிகனின் “அற்புத சக்தியை“ நிலை நாட்டி, சரிந்து வரும் வாட்டிக்கன் சந்தையை நிமிர்த்தி நிறுத்த போடும் திட்டத்தை அதன் கிளைமாக்ஸில் அற்புதமாக வர்ணித்திருப்பார் அதேபோல்தான் ராமர் சந்தையை என்றென்றும் நிலைத்திருக்கவும் அறியாமையைப் பரப்பவுமே இந்த தொழில்நுட்பங்கள் பயன்படப்போகின்றன. எனவேதான் இந்திய நாட்டின் முன்னணி அறிவியல் அறிஞர்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள்.
– விஜயன்