தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 18 – டாக்டர் இடங்கர் பாவலன்
தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
மகனுக்குத் தாய் எழுதிய வாழ்த்துக் கடிதம்
அன்பு மகனே!
நம் வீட்டு மருமகள் பிள்ளை பெற்று இப்போது வீடு வந்து சேர்ந்திருக்கிறாள். அவளின் துயரோ ஒருகாலமும் நீ அறியாதது. வாழ்வின் கிடைத்தற்கரிய இக்கணத்தில் பிள்ளை பெற்று, பாலூட்டி வளர்ப்பதற்கான துயரத்தில் நீயும் அவளோடு துணை நிற்க வேண்டும் மகனே! காலங்காலமாய் இது பெண்களின் விசயம், இதைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது, பெரியவர்களே பார்த்துக் கொள்வார்கள், பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சுவதற்கே அச்சமாக இருக்கிறதென்ற உப்புக்குப் பெறாத காரணங்களையெல்லாம் இனி நீயும் பழைய ஆண்களைப் போல சொல்லிக் கொண்டிருக்க முடியாது. உனக்குக் கர்ப்பப்பை இல்லை, பாலூட்ட மார்புகள் இல்லை என்பதற்காக எதிலிருந்தும் ஒதுங்கிக் கொள்ளவும் முடியாது.
இப்பெருமைக்குரிய பொழுதில் நீ உன் தந்தையைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் மகனே! எப்போதும் எவரையும் கடிந்து கொள்ளாத, வெள்ளந்தியான சிரிப்பை மட்டுமே எல்லாவற்றிற்கும் பதிலாகத் தருகிற, உன் மீதான பேரன்பையெல்லாம் ஒரு சொல்லில் வார்க்கத் தெரியாத உனது அப்பாவைப் பற்றி புரிந்து கொள்வதற்கு இக்கணமே பொருத்தமானது. மகப்பேற்றில், பிரசவத்தில், பாலூட்டும் காலத்தில் ஆண்களின் பங்கு என்னவென்று விளங்காமலே இத்தனையாண்டு காலம் ஆண்கள் கடந்து வந்துவிட்ட போதிலும் உன் தந்தை உனை எப்படியெல்லாம் போற்றி வளர்த்தார் என்பதையெல்லாம் இப்போது தந்தையாகிவிட்ட நீயும் அறிந்து கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது மகனே!
எனக்கு மெல்ல பிரசவ வலியெடுக்கத் துவங்கிய அந்த உயிர்த்துடிப்பான நாட்களின் துவக்கத்திலிருந்தே உன் அப்பாவும் திட்டமிட்டு ஒருமாத கால நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டார். குமரிக் கடலின் சூரியோதயத்தின் போது அக்கணத்தில் இருக்க வேண்டியதன் பரவசத்தைப் போலவே நீ பிறக்கப் போகிற தருணத்தின் நித்திய கணத்தில் இருக்க வேண்டுமென்ற பேரன்பின் பொருட்டு அவர் வேலையைத் துறந்திருந்தார். எனது மகப்பேறு காலத்தில், பிரசவத்தின் போதான பயத்தில், தனிமையில் என அம்மா, அத்தையென்று பெண்கள் உடனிருக்க வேண்டிய அத்தனை இடத்திலும் அவரே உடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்டார். இதையெல்லாம் வேறெவரும் சொல்லியோ, கட்டாயப்படுத்தியோ, அறிவுறுத்தலின் பேரிலோகூட அவர் செய்யவில்லை. அடிவயிற்றிலிருந்து எழுகிற பெண்மையின் பெருவலியை எப்படியேனும் ஆணாய்ப் பகிர்ந்து கொண்டுவிட வேண்டும் என்கிற உள்ளன்பினால் எழுந்த பேருணர்ச்சி தான் அது.
பெருவலியில் பற்களைக் கடித்து கைகளை முறுக்கி அலருகிற போதெல்லாம் என் கைகளைப் பற்றி வயிற்றைத் தழுவி என்னை ஆறுதல்படுத்தபடி இருப்பார். அவரது கைகளில் பத்திரமாய் இருக்கிற ஓருணர்வே எனக்கு அவ்வலியைக் கடக்க பேருதவியாய் இருந்தது மகனே! அப்போதெல்லாம் நான் அழாதிருப்பதற்கு அவர் அருகாமையில் இருந்த ஒற்றை கணமே போதுமானதாயிருந்தது. பிரசவத்திற்கு முந்தைய பத்து நாட்களும், நீ பிறந்த பின்னால் இருபது நாட்களுமாக அவர் என்னோடிருந்த முப்பது நாட்களும் உளப்பூர்வமான குடும்பத்தின் இன்பத்தில் திளைத்திருந்தேன். பிரசவித்த கட்டில் விளிம்பில் ஒருபுறம் கட்டியணைத்தபடி நீ துயில் கொண்டிருக்க மறுபக்கமாக நாற்காலியில் அமர்ந்து என்னை அரவணைத்தபடியே மருத்துவமனையின் ஊழிக் காலங்களில் நம் இருவருக்காக அவர் தூங்காமலே சாய்ந்திருப்பார்.
வீடு வந்துவிட்ட காலங்களில் உன் பாட்டி அருகாமையில் இருந்தாலும்கூட நீ பசியென்று அழும் போது உனைத் தூக்கி மடியிலே கிடத்திப் பாலூட்ட வைப்பதற்காக உன் தந்தையே உடனிருந்து பார்த்துக் கொண்டார். உனக்குப் பாலூட்டிய பின்னால் உள்ளங்கையில் வாங்கி அவரின் நெஞ்சில் போட்டு முதுகையத் தட்டிக் கொடுத்தபடி எந்நேரமும் வீட்டிற்குள் பூனையைப் போல் நடந்தபடியே இருப்பார். உடல் அயர்ச்சியில் நான் கண்ணசருகிற போதெல்லாம் உனக்கென நான் சேமித்து வைத்திருந்த தாய்ப்பாலினை குடுவையில் எடுத்து உன் பசிதீரப் புகட்டி உனை அவரேதான் துயில் கொள்ள வைத்திருக்கிறார். அவரால் ஒரு தந்தையாக மட்டுமின்றி தாயாகவும் கூட எல்லா தருணங்களிலும் இருக்க முடிந்தது உனக்கும் எனக்கும்கூட வாய்த்த பேரதிர்ஷ்டம் தான்.
உனக்குத் தாய்ப்பாலினை எடுத்து பாட்டிலின் வழியே புகட்டுகிற போது வயிற்று வலியில் அடிக்கடி உடம்பை முறுக்கிக் கொண்டிருப்பாய். உனக்கு வலியென்று வந்தால் உரக்கவும் அழ மாட்டாய். அச்சமயம் உடம்பைப் பிழிகிறது போல முறுக்குவாய். பிறந்த குழந்தைகளுக்கு குடல் வளர்ச்சி முழுமையடையாத காரணத்தினால் சரியாகச் செரிமானமாகாத பாலானது குடலிற்குள் காற்றாய் நிறையத் துவங்கிவிடுமாம். அப்படி உருவாகிற காற்றை வெளியேற்றுவதற்கு வயிற்றிலிருக்கிற தசைகளே உதவுகிறதாம். ஆனால் வயிற்றின் தசைகள் முழுவளர்ச்சி கொள்ளாத பிள்ளைப் பருவத்தின் காரணமாக காற்றைச் சரியாக உன்னால் வெளியேற்ற முடியவில்லை. அச்சமயத்தில் நெஞ்சுக்கும், வயிற்றுக்குமிடையே மூச்சுவிடுவதற்கு உதவுகின்ற உதரவிதான தசையைப் பயன்படுத்தி உந்திதான் முக்கியபடி காற்றையும் நீ வெளியேற்றிக் கொண்டிருப்பாய்.
இதையெல்லாம் நீயும் முக்குவது போலே ஏனோ அடிக்கடி செய்து கொண்டிருந்தாய். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து முறுக்கிக் கொள்ளத் துவங்கி பொழுது விடிகிற ஆறுமணி வரையிலும் இதையே தான் தூங்காமல் விழித்திருந்து செய்தபடி இருப்பாய். அப்போதைய நிலையில் குடற்காற்றை வெளியேற்றி உனை ஆசுவாசப்படுத்துவதற்கு உன்னைக் குப்புற படுக்க வைக்க வேண்டும். அப்படிப் படுக்க வைப்பதன் வழியே உன் வயிற்றுக்கான ஒத்துழைப்பினை வெளியிலிருந்து கொடுக்கும் போது உனது முக்குவதெல்லாம் குறைந்து நீயுமே அப்போது இயல்பாகிவிடுவாய்.
ஆனால் நீயோ அப்போது தான் பிறந்த சிறுபிள்ளையாய் இருந்தாய்! உன்னைத் தரையில் கீழே படுக்க வைப்பதற்கு தந்தையின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அதிகாலையில் அலாரம் போல் அழுகிற குரலுக்கு எழுகிற உன் அப்பா உன்னோடிருக்கிற அத்தனை நாட்களும் நெஞ்சின் மேல் போட்டு அள்ளியணைத்துக் கொள்வார். உனக்கு என் கதகதப்பையும் தாண்டி அப்பாவின் கதகதப்புதான் அப்போது தேவையாய் இருந்தது. இதனால் நீயோ உடலின் முறுக்கம் குறைந்து நல்லபடியாக துயில் கொண்டிருப்பாய். ஆனால் அப்படி உனைக் கிடத்திக் கொண்டே அப்பாவால் படுக்க முடியாது. அந்நிலையில் முன்தாழ்வாரத்தில் போடப்பட்ட நாற்காலியில் சாய்ந்து உனை சேர்ந்தணைத்தபடி அமர்ந்து கொள்வார். இரவின் பூரண நிலவோடும் நட்சத்திரங்களோடும் துவங்குகிற இத்தூக்கம் நான் விடிய கண்விழித்துப் பார்த்து உனை நான் அள்ளிக் கொள்கிற வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் மகனே!
சிசேரியன் வலியும் தழும்பும் காரணமாக துவக்க காலத்தில் என்னால் அமர்ந்து உனைக் குளிக்க வைப்பதற்கு முடியவில்லை. உனைத் தொட்டுக் கால்களில் கிடத்தி நீரள்ளி உனைப் பூஜிப்பதற்கான பேறு எனக்கு அப்போது கிடைக்கவில்லை மகனே! கனிந்த பழத்தின் மிருதுவாகிய உனைத் தூக்கி காலில் கிடத்திக் குளிக்க வைப்பதற்கு எங்களுக்கே அப்போது அச்சமாயிருக்கும். ஆனாலும் உனை பேரன்போடு தூக்கி இருகால்களையும் தரையில் பரப்பியபடி உனை அதன் கால்வாயில் இருத்தி பொற்சிலைக்கு பாலபிஷேகம் செய்விப்பதைப் போல பொறுமையோடு குளிப்பாட்டிக் கொண்டிருப்பார். உனை வாங்கி நாங்கள் எண்ணெய் தேய்த்து, கண்ணத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து கூச்சத்தில் நெளிந்து நீ பொங்கிச் சிரிக்கிறவரையிலும் உடன் உதவியபடிதான் இருப்பார். அச்சமயத்தில் உன் பாட்டி அருகிலிருந்தும்கூட எவ்வித கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் உன்னை வளர்ப்பதென்பது தனக்குரிய ஒரு அங்கமாகவே அவர் நினைத்துச் செய்தபடி இருப்பார்.
இரவு நேரங்களில் சிறுநீர், மலம் கழிப்பதற்கென்று உனக்குப் பருத்தித் துணியிலான ஆடைகளையே உபயோகப்படுத்தினேன். உனது அசைவுகளின் அசௌகரியத்தைக் கவனத்தபடியே உன் அப்பா எழுந்து வந்து அவராகவே உனைக் கழுவிச் சுத்தம் செய்து கொண்டிருப்பார். உனக்குப் புத்தாடை அணிவிப்பதிலிருந்து அத்துணிகளை துவைத்து உலர வைப்பது வரையிலுமாக அவராகவே விரும்பி அதைச் செய்து கொண்டிருப்பார். இது என் வேலை, உன் வேலை என்கிற பாகுபாடெல்லாம் இதுவரை அவர் எவ்விசயத்திலுமே துளியும் நடந்து கொண்டதுமில்லை. ஆக, உனது மனைவி, மகள் விசயத்திலும்கூட நீ அப்பாவைப் போல அல்லது அதற்கும் மேலாகவே இருப்பாய் என்று நம்புகிறேன் மகனே!
நீ பிறந்த தருணத்திலிருந்து ஒரு தாயாக நான் எந்த அளவிற்கு உன் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவளாக இருந்தேனோ அதற்குத் துளியும் குறைவில்லாத உன் தந்தையின் இருப்பின் அன்பின் மகத்துவமும் வாய்ந்த்து தான் மகனே! உனையள்ளி தோளில் துயில் கொள்ள வைப்பது, தாலாட்டுப் பாடுவது என அவரது அன்பின் வாசம் எப்போதும் உன் மீதே கமழ்ந்தபடியே இருக்கும். மகனே, இதையும்விட மகத்தான ஓரிடத்தை உன் பிள்ளைக்கும் மனைவிக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமென நான் உன்னிடம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இப்படியாகத்தான் என்னால் உனக்கு தந்தைக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள முடிகிறது மகனே! அன்பு வாழ்த்துக்கள்.
டாக்டர் இடங்கர் பாவலன்