சூறாவளிக்குள் தூங்குகிறோம் கவிதை – வசந்ததீபன்
சாக்கடையில் விழுந்து புரண்டன
தேடித்தேடி வயிறை நிரப்பின
பள்ளம் தோண்டி
ஒய்யாரமாய்ப் படுத்துக்
கனவு காண்கின்றன
அழைத்தான் வரவில்லை
வந்தது அழைக்கவில்லை
அழையா விருந்தாளியாய்ப் போகிறான்
மலரினும் மெல்லியது காதல்
மழைத்துளியின் கனம் தான் காமம்
மண் வாசனையாய்
கமழ்கிறது ஊடல்
அவளது நாக்கு வாளாய் மின்னுகிறது
வார்த்தைகள் வெட்டிச் சாய்க்கின்றன
குற்றுயிரும் குலையுயிருமாய் அவன்
பலாப்பழத்தை அறுத்துச் சொளையெடுக்கலாம்
பப்பாளியை வெட்டிக் கீத்தெடுக்கலாம்
சண்டாளர்கள் பணத்துக்காக
வயிற்றுத்துக் குழந்தையெடுக்கிறார்கள்
மெளனமாக இருக்க முயல்கிறேன்
காற்று
ஆடையைப் பறிக்க
பிரயாசைப் படுகிறது
அடைமழை
உயிரைப் பிடுங்க
உக்கிர தாண்டவமாடுகிறது
தண்டவாளங்கள் சாட்சி சொல்லியது
புகைவண்டி அறியாமல் செய்து விட்டது
நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது
சுதந்திரமாய்ப் பிறந்தோம்
அடிமைகளாய் வாழ்கிறோம்
சுதந்திர அடிமைகளாய்ப்
போய்ச் சேருவோம்.