சூரியனைத் தொடரும் காற்று – லியோனார்ட் பெல்டியர்
”பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்று பாரதி சொன்னது பல சம்பவங்களைப் பார்க்கும் போது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. உலகமெல்லாம் சென்று ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் ஒரு நாட்டின் முகமூடி உள்நாட்டில் கிழிந்து தொங்குகிறது.
இனவெறி எந்த அளவுக்குச் செல்ல முடியும்? ஒரு செவ்விந்தியத் தலைவனை போலியான கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அத்துடன் தப்பித்து ஓட முயன்றதற்காக ஒரு ஏழு ஆண்டு தண்டனையும் சேர்த்து வழங்கி ஜனநாயகக் காவலனான அமெரிக்கா தனது நீதியை நிலைநாட்டியுள்ளது!. அவர் 1985 முதல் இன்று வரை சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அவர் உயிருடன் இருந்தால் விடுதலை பெற வேண்டிய ஆண்டு 2035. அப்போது அவருக்கு 97 வயது ஆகியிருக்கும். படிக்கும் போதே மனம் பதறுகிறது அல்லவா. அவர்தான் லியோனார்ட் பெல்டியர். அவரது செவ்விந்தியப் பெயர் க்வார்த்தீலாஸ். அதாவது மக்களை வழிநடத்துபவன். அவரது கொள்ளுத்தாத்தாவின் செவ்விந்தியப் பெயர்தான் ‘சூரியனைத் தொடரும் காற்று’. டகோட்டா மொழியில் டாட்டே விகிகூவா. இப்போது, கைதி எண் 89637-132.
மனம் பதறப் பதற இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தேன். இப்படியும் நடக்குமா என்று மனம் நம்ப மறுக்கிறது.
அமெரிக்காவின் கருப்பின மக்களும், செவ்விந்தியர்களும் என்ன பாடு படுகிறார்கள் என்பது குறித்துப் பல புத்தகங்கள் வந்துள்ளன. செவ்விந்தியர்கள் அங்கு கொலம்பஸ் வந்து இறங்கிய 1492 முதலாகவே கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களது தந்தை நிலத்தைக் கைப்பற்றப் பல உத்திகளை பிரிட்டனிலிருந்து சென்ற வெள்ளையினத்தவர் கைக்கொண்டிருக்கின்றனர். அம்மை வந்து இறந்தவர்களின் கம்பளியை பரிசு போல் அவர்களுக்குக் கொடுத்துக் கொத்துக் கொத்தாக சாக விட்டதும் அதில் அடங்கும். அவர்களது நிலத்திலிருந்து விரட்டியடித்து அவர்களை ரிசர்வேஷன்கள் என்ற சிறு சிறு இடங்கள் அல்லது நமது நகரங்கள் போல் வழியற்றுக் குடியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளனர். தமது நிலத்தைப் பாதுகாக்கப் போராடியவர்கள் மீது கடும் அடக்குமுறையையும், கொலைவெறியையும் காட்டியுள்ளனர். போலிக் குற்றச்சாட்டுகளில் கைது செய்து மரணதண்டனை விதிப்பது, காலம் முழுதும் சிறையில் வாட விடுவது, தப்பிக்க முயன்றார் என்று கூறி சுட்டுக் கொல்வது என்று எண்ணிலடங்கா அட்டூழியங்கள்.
அமெரிக்கக் கலாச்சாரத்தையும், செவ்விந்தியக் கலாச்சாரத்தையும் இணைத்து வளர்ந்த பெல்டியர் பின்னர் செவ்விந்தியக் கலாச்சாரம்தான் தனது கலாச்சாரம் என்பதைப் புரிந்து கொண்டார். அவர்கள் படும் இன்னல்களைப் புரிந்து கொண்டு தமது வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்தார் அவர். அமெரிக்க இந்தியக் கழகத்தின் முக்கியமான தலைவராகவும் திகழ்ந்தார். செவ்விந்தியர்கள் வாழும் பகுதிகளில் அடிக்கடி சென்று தாக்குதல் தொடுத்த அமெரிக்கப் படையினரிடமிருந்து தப்புவதே அவர்களது பெரும் துன்பமாகி விட்டது. அந்த ஒரு சமயத்தில் இந்தத் தாக்குதல் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்த பெல்டியரும் வேறு சிலரும் அந்தப் பகுதிக்குத் தற்காப்பு நடவடிக்கைக்காகச் சென்றனர். தாக்குதலிலிருந்து எப்படியோ தப்பி விட்டாலும், அங்கு யாரோ சுட்டதில் இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். அவர்களை பெல்டியர்தான் சுட்டுக் கொன்றார் என்று குற்றச்சாட்டு புனையப்பட்டு பெல்டியர் கைது செய்யப்பட்டார். அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்துத் தனது ரத்ததாகத்தைத் தணித்துக் கொண்டிருக்கிறது அவ்வரசு.
அதன் பின் நடந்த பல விசாரணைகளில் அவர் சுட்டு அவர்கள் இறக்கவில்லை என்பது நிரூபணமானது. அவரது உடைந்து போன துப்பாக்கியால் சுடவே முடியாது. அது மட்டுமல்ல, அவர்கள் அங்கு கண்டெடுத்த ஒரு துப்பாக்கி உரையை வைத்துத்தான் அவர் சுட்டார் என்று கதை கட்டப்பட்டது. அந்தத் துப்பாக்கி உரையில் இந்தத் துப்பாக்கி பொருந்தவே இல்லை. ஒரு பெண்ணை மிரட்டி அவர்தான் நேரடி சாட்சி என்று நம்ப வைக்கப்பட்டுள்ளது. அத்தனையும் பொய்க்குற்றச்சாட்டு என்பது நிரூபணமானது. அந்தப் பெண் இவரைப் பார்த்ததேயில்லை. நாம் சிறு வயதில் ஒரு கதை கேட்டிருப்போம். ஆட்டைத் தின்ன விரும்பிய ஒரு ஓநாய், நீ திருடா விட்டால் உன் பாட்டன் திருடினான் என்று சொல்லி அந்த ஆட்டை அடித்துத் தின்றதாம். அதுபோல் நீ கொல்லா விட்டாலும், நீ உடந்தை என்று கதை கட்டி அவர் சிறையில் வாட விடப்பட்டிருக்கிறார். எந்த அமெரிக்க அதிபரும், கருப்பின அதிபர் உட்பட அவரது விடுதலைக்கு உதவவில்லை. இத்தனைக்கும் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று உறுதி கூடக் கொடுக்கப்பட்டது.
ஏன் இவர்கள் பழங்குடி மக்களையே குறி வைக்கிறார்கள்? அங்கு காலகாலமாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள் காடுகளைப் பாதுகாத்து வருகிறார்கள். எனினும் அந்த மண்ணில் புதையுண்டு கிடக்கும் கனிம வளங்கள்தான் அவர்களை விரட்டுகின்றன. அந்தக் கனிமங்களை அகழ்ந்தெடுத்து பூமியை அழிக்கும் வேலையைச் செய்பவர்களுக்கு அரசுகள் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றன. அதற்காக என்ன வேண்டுமானாலும் முதலாளித்துவம் செய்யும். மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் மேற்கோள் காட்டுவது போல், 300% லாபம் கிடைக்கும் என்றால் மூலதனம் தனது முதலாளியைக் கூடக் கொல்லத் தயங்காது. பழங்குடி மக்கள் எம்மாத்திரம்?
லியோனார்ட் பெல்டியரின் வாழ்க்கையை, அவரது போராட்டத்தை, அவரது சிறை வாழ்க்கையை இந்தப் புத்தகம் மூலம் அறிய முடிகிறது. அவரே அனைத்துக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அந்த ஐந்துக்கு ஒன்பது அடி சிறைக்கொட்டடியில் அவர் எழுதிய வார்த்தைகள் நம் மனதைப் பிழிகின்றன. என்ன வாழ்க்கை அது? 45 ஆண்டுகள் கடந்து விட்டன. சிறையிலிருந்து உயிருடன் திரும்பப் போவதில்லை என்று உணர்ந்தே இருக்கிறார் அவர். தனது பேரனையும் கூட கம்பிகளுக்குப் பின்னாலிருந்துதான் அந்தத் தாத்தா பார்க்கிறார்.
இவ்வளவுக்குள்ளிருந்தும், எதோ ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இரக்கத்தால், செவ்விந்தியர்களின் ஒரு சடங்குக்கு மட்டும் அரசு அனுமதித்திருக்கிறது. கடுமையான அந்தச் சடங்கைச் செய்வதன் மூலம் ஆன்ம பலம் பெறுகின்றனர் அந்த இந்தியர்கள். அதையும் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார் அவர்.
கடந்த மாதம்தான் 1982 முதல் சிறையில் வாடும் கருப்பினத் தலைவனான முமியாவின் வாழ்க்கைக் கதையைப் படித்து முடித்தேன். இப்போது பெல்டியரின் கதை. இந்தப் போராட்டத் தலைவர்களின் வரலாற்றை மக்களுக்காகப் போராடும், தமது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். இவை அவர்களுக்கு உறுதியை அளிக்கும். மேலும் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும்.
பெல்டியரின் வார்த்தைகளுடன் முடிப்போம்:
”இருபது ஆண்டுகளுக்கும் மேலாக
எனது சொந்த நிழலுக்குள்
சிறைப்படுத்தப்பட்டவனாக
இங்கே நான் . . .
கல்லினூடாக, இரும்பினூடாக,
முட்கம்பியினூடாக
என் கைகளை நீட்டி
உலகத்தின் இதயத்தைத் தொடுகிறேன் . . .
ஒரு மனித உயிர் கூடப் பட்டினி கிடக்காத நிலை ஏற்படும்வரை, ஒரு மனித உயிர்கூடத் துன்புறுத்தப்பட்டு உருக்குலைக்கப்படாத நிலை ஏற்படும் வரை, ஒரு மனிதன் கூடப் போரில் சாகும்படி நிர்ப்பந்திக்கப்படாத நிலை ஏற்படும்வரை, ஒரு நிரபராதி கூடச் சிறையில் வாடாத நாள் வரும்வரை, ஒருவர்கூடத் தனது நம்பிக்கைகளுக்காகச் சித்ரவதை செய்யப்படாத நாள் வரும்வரை நமது பணி முழுமையடையப் போவதில்லை . . .”
சூரியனைத் தொடரும் காற்று (ஒரு அமெரிக்கக் கைதியின் சிறை வாழ்க்கை)
லியோனார்ட் பெல்ட்டியர் | தமிழில் எஸ். பாலச்சந்திரன்
வெளியீடு: சிந்தன் புக்ஸ்
பக்கங்கள்:283
விலை: 230/-.
தொடர்புக்கு: 9445123164
கி.ரமேஷ்