Posted inPoetry
மெளனம் தந்த சொற்கள் கவிதை – தயானி தாயுமானவன்
நாங்கள் எப்போதும்
எளிமையானவைகளையே…
முன்னிறுத்தினோம்.
உங்களை யாரென்று
அறியாமலேயே
கண்களினால்
அன்புசெய்தோம்.
உங்கள் சொற்களினால்
வசீகரிக்கப்பட்ட
நாங்கள் நாடோடிகள்.
எங்களுக்கான
குரல் இயற்கையினுடையது.
எங்கள் தார்ப்பாயின் வீடுகள்….
எப்போதும்
திறந்தே கிடந்தன.
உங்கள் சொற்பொழிவுகளைக் கேட்க….
எங்களுக்கு
கையூட்டு தரப்பட்டது.
அது
ஒரு வேளைப் பசிக்குப் போதுமானதாக.
நான் ஆசீர்வதித்துத் தருகிறேன்.
ஞானத்தையும்
கொஞ்சம் கொடு
இந்த மனித வடிவ
கழுதைகளுக்கு என்று.
வெள்ளிப் பணத்தைச் சுமந்து சென்று
உங்கள் முதலாளிகளின்
கஜானாவில் சேர்ப்பது
கடினமல்லவா?
எனவே
அந்த உறுதியையும்
உங்கள் உடல் பெறட்டும்….
என்றே
என் கழுதையை
வேண்டி நின்றேன்.
இப்போது புரிகிறதா?
கோப்பைகளுக்காக நாங்கள் அலைவதில்லை.
நாங்கள் கேட்காமலயே
எங்கள் மது கோப்பைகள்
நிரம்பிவிட்டன
சற்று முன்பு.