து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




நான் என்‌ செய்வேன்?
**************************
உயிரொன்று தோன்ற
உளம் பூக்க ஊட்டமானாள் அன்னை.
மகனே தன் வாரிசெனப் பூரித்தான் அப்பன்..
இரட்டைப் பிள்ளை போல..
அங்கலாய்த்தாள் அப்பத்தா
பேரனோ பேத்தியோ இரண்டும் சுகமே..
பொக்கை வாய் சிவக்கக் கொக்கரித்தார் தாத்தன்..

உற்றார்கொண்டாட..
உறவுகள் மகிழ்ந்திருக்க..
முழங்கை முடிச்சுகள் ஸ்வரங்கள் இசைக்க
அன்னை அரவணைப்பில் களித்திருந்தேன்..
வெப்பத் திமிரில் வலசைபோனேன்..

நிதம் மல்லிகை வாசம்..
பொழுதொன்றில் ருசியான உண்டியின் சுவாசம்…

இருள் கவ்விய அறைக்குள்
ஈரைந்து கால தவமிருந்தேன்..
வானகமெங்கும் சிறந்திருக்கப்
பொழுதொன்றிலும் கனா கண்டேன்..

முட்டி மோதி முத்தெடுத்தேன்
முக்காடு போர்த்தி மூலையில் சாத்தப்பட்டேன்…

கண் சிமிட்டி விழித்தேன்..
சுற்றும் முற்றும் ரசித்தேன்.

பூவுலக சரித்திரங்கள் பல கதைக்கத் தித்தித்தேன்
அவை அத்தனையும் எனக்கானதே என்பதை
அப்போதுணரும் திறனற்றேன்..

சூழல் குறிகள் யாவும்
சுற்றியே வளைத்திட திணறிப்போனேன்
சுக்குநூறாகிச் சுருங்கியே திசைமறந்தேன்..

அழு குரல் ஒலித்தன..
ஆரவாரங்கள் அறுந்தன
கொண்டாடிய குரல் ஒன்றும்
கண்ணீரில் கனத்தே அமர்ந்தன..

கூர்ந்துற்றேன்..
கொஞ்சம் போல குனிந்து நோக்கினேன்..
நானல்ல என்பதில் துடித்து நொடிந்தேன்
கூனிக்குறுகியே வெலவெலத்து உருகினேன்.
கண்ணீர் பெருக்க இனம் மறந்து இற்றுத் தான் போனேன்..

ஆங்கே இரு பாலுறுப்புகள் அருகருகே அமிழக் கண்டேன்
வேதனையில் துப்பிய விழி நீரை மீண்டும் விழுங்கி ஆற்றினேன்.
வல்லுறவு குற்றம் தாங்க
இன்றே நிரந்தர மூலமானேன்

ஏனிந்த புதுவகை…
இறை எதற்கிழைத்தவிந்தக் தீராதவாதை..

ஆசுவாசமற்ற எனதிந்தப் பிறப்பு..
அவசியமற்ற அனாயாச சிறப்பு.
ஆயாசமாய் மக்கள் இனி இடிந்துரைக்கவிருக்கும்..
எனக்கே எனக்கான எகத்தாளச் சிரிப்பு..

குற்றமற்ற எனைக் கொண்டாட வேண்டாம் உறவுகளே
கொடுங்கோலின்றி எனைக் கொண்டால் போதும் மனிதர்களே..

அங்ஙனம் விட்டொழிக்க விலையோ கொஞ்சமே இனி..
வாங்கவோ விற்கவோ
அதுவும் கூட கெஞ்சுமே நனி..

வாய்க்கும் அது பத்தாது.
எனை வார்த்தெடுக்கவும்
மிச்சமிருக்காது…

புதிரான பாதைகள் புதுவிதமாய் விழுங்கின
மலமற்ற குடல் மலடிபோல மருவியே மிரண்டன..
கொடிசூடிய தொப்புளோ அங்ஙனமே சுருங்கின….
மரணகாலம் கூட களமிறங்க
கலகமற்று கைகழுவின..

இருபாலுறுப்பும் ஒருமித்தமான மனிதமானேன்
திருனர் சமூகத்தின் இருனரானேன்..
இனியோ…
இருபாலினர் மத்தியில் நான் மட்டும் இதரரானேன்..

மூண்ட போரில் மாளாத மணக்கோலம்..
*****************************************************
தொலைத்த உனது முகப்பொழிலைத் தேடியே
கனத்து நிற்கின்றன இமைகள்..

காதல் மொழிகளை மகன் கேட்கும் முன் மென்றுச் சுவைத்த நாவு
சுருண்டு உழல்கிறது..
இறுதியாய் பருகிய உனது பன்னீர் துளிகளை ருசித்தே..

வாரேன் என விடைப்பெற்றாய்..
மீள்வாய் எப்போது என்றே சுளித்தன உனது கரம் பற்றிய எனது விரல்கள்..

பசலையில் பரிதவிக்கிறது
கருஞ்சாந்துக் குறியீடாக….
நீயற்ற புருவ மத்திமம்..

உனக்கும் பிடிக்கும் என்பதாலேயே
மஞ்ச குளிப்பதை மறந்து பச்சையம் உடுத்தினேன்..

செய்தி உடன் வர..
கூடடைந்த புல்லலுருவியாய்
புசிக்க அமர்ந்து..
உடன் கைகழுவினாய்..
கைநழுவ வேண்டியே..

எங்கு தொலைந்தாய்
எங்கு தேடுவேன்

என்றறிந்தே..
உயிரை எனது அறைக்குள் புகுத்தி..
உடலை மட்டும் கயவனின் வேள்வித் தீக்கிரையாக்கினாய் போல…

குற்றவாளி பிறப்பதல்ல..
*****************************
உன்னைத் தவிர
எல்லோர் அழைப்பும் கொஞ்சும்..
நூறைத் தாண்டி உனை கெஞ்சியது எனது அழைப்புகள்….

உன்னைத் தவிர..
கனவுகள் பலதும் நனவுகள் சிலதும் நானே..
குப்பைக் கூடையில் அனாதையாய் முதல் நினைவுப் பரிசு…

உன்னைத் தவிர..
பலர் வாழ்விலும் நானே..
வீழ்விலும் உடனிருந்தேனே..
தூக்கியெறிந்த கலாப வாழ்வு கலங்கியது நேற்று…..

உன்னைத் தவிர…
பக்குவ முகிழ்வில் சமைந்த சமையலைக்
கொண்டாடிய நாவுகள் ஏராளம் ..
தூக்கியெறிந்த பாயாசம்
உவர்த்துக் கிடக்கிறது உலர்ந்து….

உன்னைத் தவிர..
நொடிந்தேங்கும் பாடுகளுக்கு
அலைபேசி விலையானேன்..
விருந்தான அந்தரங்கத்தை
மருந்தாக கசந்துத் துப்பிய உமிழ்நீர்
அறைகிறது முகத்தில்…

இன்று..
ஆசைக்காதலியாய் அந்தரங்க உயரூதியம் பெற்றேன்…
ஆயிரங்கால பதிவிரதயாய் ஓரங்க பதவிநீக்கம் செய்தபின்..

து.பா.பரமேஸ்வரி
சென்னை.