அறிவியல் எனக்குத் தெரியாது – வே. சங்கர்
இந்த கொரானா காலத்தில், ஜூம் மீட்டிங், கூகுள் மீட்டிங், ஸ்ட்ரீம் லைவ் மீட்டிங் என்று ஏதேதோ சொல்கிறார்கள். எல்லாமே எனக்கு மிகமிகப் புதிது. அவ்வளவு தொழில்நுட்ப அறிவெல்லாம் எனக்கு எதற்கு என்ற அலட்சியம் ஒரு காரணமாக இருக்கலாம்.. அறிவியல் தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் 100 புத்தகங்களை அறிமுகம் செய்யப்போவதாக முதலில் ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் வலம் வந்தது.
அதை ’பாரதி டிவி’யில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்போவதாக அடுத்த செய்தி வந்தது. தோழர் கலைக்கோவன் ஒரு மாலைவேளையில் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, ”நீங்க ஒரு புத்தகத்தைப் பத்திப் பேசறீங்க” என்றார். “திடுதிப்பென்று சொன்னால் எப்படி?” என்றேன் நான்.
வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை மீண்டும் நினைவுகூர்ந்தார். “நீங்க அன்றொரு நாள், விண்வெளி மனிதர்கள் என்ற புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருந்தீங்க இல்ல!. அதையே பேசிடுங்க” என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டார்.
ஒருமுறை நான் பணிபுரியும் பள்ளியில் மாணவர்களுடன் அறிவியல் குறித்து உரையாட இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் சசிக்குமார் வந்திருந்தார். அங்கேதான் அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
எப்போதும்போல ஒரு நூலாசிரியரைப் பார்த்ததும் வரும் பரவசத்தைவிட நானும் ஒரு எழுத்தாளன் என்று அறிமுகம் செய்துகொள்வதில் ஒருவித தற்பெருமை இருக்குமல்லவா! அப்படித்தான் எனது நூல்களை அவர் கையில் கொடுத்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டது.
போகிறபோக்கில் நான் ஒரு நூல் விமர்சகர். உங்களது நூலுக்கு மதிப்புரை, அல்லது விமர்சனம் இதில் ஏதேனும் ஒன்றை எழுதித் தருகிறேன் என்றும் கொஞ்சம் ஓவர் பில்டப்போடு உறுதியளித்திருந்தேன். ஆனால், இன்றுவரை மதிப்புரைக்கும் விமர்சனத்திற்கும் உள்ள வேறுபாடு சத்தியமாகத் தெரியாது.
ஒருவழியாய் முட்டி மோதி எனக்குத்தெரிந்த அறைகுறை அறிவில் ஒரு விமர்சனம் என்ற பெயரில் ஒன்றை எழுதி அனுப்ப, அதை பெரிய மனதுபண்ணி பாரதி புத்தகாலயத்தின் இணையதளமான புக் டே டாட் இன்னில் வெளியிட்டிருந்தார்கள். அதைத்தான் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மற்றபடி, எனக்கும் அறிவியலுக்கும் வெகுதூரம். அதைவிட நான் எழுத்தாளனிலும் சேர்த்தி இல்லை. பேச்சாளனிலும் சேர்த்தி இல்லை. தெளிவாகச் சொன்னால் இரண்டிலும் நான் அரைவேக்காடு என்பது என் நெருங்கிய வட்டத்திற்குத் தெரியும்.
எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்ற எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் இங்கே பேசுகிறேன். அதில் ஏதேனும் தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளவும் தோழர்களே என்ற முன்னுரையோடு மார்ச் 3 ஆம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் பேசத்தொடங்கிவிட்டேன்.
எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் 20 நிமிடங்கள். நான் முன்னப்பின்னே கேமராவைப் பார்த்துப் பேசிப் பழக்கம் இல்லாததால் எடுத்துவைத்திருந்த குறிப்புகளைப் பார்த்தே கடைசிவரை பேசினேன்.
தற்போது நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை சொல்லிவிடுகிறேன். நான் ஏற்கனவே இஸ்ரோ விஞ்ஞானிகளான சசிக்குமார் மற்றும் பா. அரவிந்த் அவர்களின் விண்வெளி மனிதர்கள் நூலை வாசித்திருந்தேன். அவ்வளவுதான் எனக்கும் இந்தநூல் பற்றி பேசுவதற்கான தகுதியும் என்ற ரீதியில் தொடங்கினேன்.
எனது உரை இப்படிப்போனது. “எனது அறிவியல் மீதான கண்ணோட்டம் அதன் பாதிப்பு பற்றிய எண்ணங்களும் வேறானது. அறிவியல் என்பது மாற்றங்களைக் கண்டுகொண்டே இருப்பது. அதற்கு ஒரு முடிவே கிடையாது. ஒன்றைக் கண்டுபிடிப்பார்கள். பிறகு அதற்கு மாற்றாக மற்றொன்றைக் கண்டுபிடிப்பார்கள். பெருமையாக பேசப்பட்ட ஒன்று குறுகிய காலத்தில் பழையது என்ற பெயர் சூட்டப்படும். புதியது என்று பெயர் எடுத்த மற்றொன்றும் சில காலங்களில் பழையது ஆகிவிடும். பழசு என்று சொல்லப்பட்ட ஒன்று சிலமாறுதல்களுடன் புதிதாக வெளிவரும். ஆகவே நிரந்தரம் இல்லாத ஒன்றுதான் அறிவியலா? என்ற கேள்விக்கு எனக்கு எப்போதும் பதில் கிடைத்ததே இல்லை”.
இன்னும் நூறு ஆண்டுகளில் நாம் விண்வெளியில்தான் வாழப்போகிறோம், நிலாவில் ப்ளாட்போட்டு விற்கப்போகிறார்களாம், செவ்வாய் கிரகத்திலே தண்ணீர் இருக்கிறதாம். அனேகமாக, அங்கேதான் நம் பேரப்பிள்ளைகள் வாழப்போகிறார்களாம் என்பது போன்ற உரையாடல்களைக் கேள்விப்படும்போது, உண்மையிலேயே இதெல்லாம் சாத்தியமா? இல்ல சும்மாவாச்சும் அடிச்சு விடறாங்களா? என்கிற சந்தேகம் இயல்பாகவே வரும்.
அப்புறம், இந்த விண்வெளி, விண்வெளி என்று அவ்வப்போது செய்திகளில் எல்லாம் வருகிறதே அதெல்லாம் எப்படி இருக்கும்? விண்வெளி ஓடம் என்கிறார்கள், ராக்கெட் என்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன வித்தியாசம்? அதுமட்டுமல்ல, விண்வெளிக்குப்போகிற ஆசாமிகளை எல்லாம் பார்த்தால் நாம போட்டுக்கொண்டு இருக்கும் உடை மாதிரி இல்லையே!, நாம அப்படியே ஹாயா ஒரு லுங்கியும் பனியனும் போட்டுக்கொண்டு வீட்டிலே இருப்பதைப்போல், விண்வெளிக்குப் போனவுடனே அந்த உடையைக் கழற்றிவிட்டு இருப்பார்களா? இல்லை நாள் முழுக்க இந்த ட்ரஸ்ஸோடதானா?
உச்சா வந்தா என்ன பண்ணுவாங்க? எத்தன லிட்டர் தண்ணி கொண்டுபோவாங்க? என்ன சாப்பிடுவாங்க? எதாவது வாய்க்கு ருசியா சாப்பிட வேண்டுமெனத் தோன்றினால் விண்வெளியில் சமையல் செய்து சாப்பிடமுடியுமா? நிலாவுக்குச் சென்றால், யாருக்கோ நீண்ட நாளாக வடை சுட்டுக்கொண்டு இருக்கும் பாட்டியை மீட் பண்ணமுடியுமா? அந்த ஊரு வடை எப்படி இருக்குன்னு ஒருகை பார்க்க வேண்டும் அல்லவா!, இப்படி ஏராளமான கேள்விகள் மற்றும் எண்ணங்கள் என் சின்ன வயசிலே தோன்றியிருக்கிறது.
இன்றைய குழந்தைகளுக்கெல்லாம் ஏராளமான விசயங்கள் தெரிந்திருக்கிறது.. படிக்கும்போதே, நீ என்னவாக வேண்டும்? என்று கேட்டால் ’நான் அஷ்ட்ரானட் ஆகவேண்டும்’ என்று மிக எளிதாகச் சொல்லுகிறார்கள். அஷ்ட்ரானட் ஆகனும்னா என்ன வழிமுறை என்று இன்றுவரை எனக்குத் தெரியாது.
ஆனால், உண்மையில் இந்த விண்வெளி மனிதர்கள் என்ற புத்தகத்தை வாசித்த பிறகுதான் ஏராளமான கேள்விகளுக்கு விடை தெரிய ஆரம்பிச்சது.. ஏனென்றால், அறிவியல் சார்ந்த புத்தகங்களை வாசித்தால் ஒன்று, ஆங்கிலத்திலே இருக்கும் அல்லது பாடப்புத்தகத்தை மீண்டும் படிக்கிறமாதிரி ஒரு உணர்வு தோன்றும். வெளிநாட்டுப் புத்தகங்களை மொழிப்பெயர்ப்பு செய்திருந்தால் அவ்வளவுதான். அந்த மொழியை உள்வாங்கி புரிந்துகொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
ஆனால், இந்தப் புத்தகம் அப்படி இல்லை. ஒரு பதினேழு பதினெட்டு கட்டுரைகளில் எல்லா சந்தேகங்களுக்கான விடையாக இருப்பது ஒருவிதத்தில் பெரிய சந்தோசம். முதல் அத்தியாயத்திலேயே விண்வெளி என்றால் என்ன? நாம் ஏன் விண்வெளிக்குப் போகவேண்டும்? அதனால் என்ன யூஸ்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்துவிடுகிறது. ஒரு கதை சொல்லும் பாங்கில் எழுதியிருப்பதால் வாசிப்பதற்கு மிக எளிதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு விண்வெளியைப் பற்றிய தகவல்களை சுலபமாக சொல்வதைப் போல இருப்பதால் ஒரு குழந்தையை வானவியல்மீது மிகப்பெரிய ஈடுபாட்டை தந்துவிடமுடியும்.
பிறகு, ஏவூர்தி அதாங்க ராக்கெட் எப்படி உருவானது? என்ற கேள்விக்கு, மைசூர் மன்னர்களான ஹைதர் அலியும் அவரது மகன் திப்புசுல்தானும் உலகிலேயே முதன் முதலில் ராக்கெட்டுகளைப் போரில் பயன்படுத்தி எதிரிகளை நடுநடுங்க வைத்தார்கள் என்று வரலாறு புத்தகத்திலே படித்திருக்கிறோம். அந்த ராக்கெட்டும், இப்போதெல்லாம் டிவிகளிலும் செய்தித்தாள்களிலும் சொல்வதைப்போல இரண்டும் ஒன்றா? அல்லது வேறு ஏதாவதா? போன்ற கேள்விகளுக்கு பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது..
அதாவது, தாக்கும் ராக்கெட்டை ஏவுகணை என்கிறார்கள். ஆங்கிலத்தில் மிஸ்சைல் என்ற பெயராம். விண்ணுக்கு செயற்கைக்கோளைக் கொண்டுசெல்கிற ராக்கெட்டை ஏவுவாகனம் என்கிறார்கள்.. அதற்கு, ஆங்கிலத்தில் லாஞ்ச் வெய்க்கில் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, மனிதர்கள் பயணிக்கும் ராக்கெட்டிற்கு விண்ணூர்தி, விண்கலம், விண்வெளி ஓடம் என்று ஏராளமான பெயர் வைத்திருக்கிறார்கள் போலும்.. இவற்றையெல்லாம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் எனக்கே ஓரளவுக்குத் தெளிவு ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இரண்டாம் உலகப்போரில் அதிக நாடுகளை கைப்பற்ற ஹிட்லர் பல ஆயிரம் வி2 ஏவுகணைகளை உருவாக்கியிருந்தாராம். செப்டம்பர் 1943 லிருந்து மார்ச் 1944 வரையிலான ஆறுமாதத்திலே சுமார் 3200 வி2 ஏவுகணைகள் செலுத்தப்பட்டிருக்கு. ஹிட்லரின் இந்த முரட்டுக் குணம்தான் அதிநவீன ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இரண்டாம் உலகபோருக்குப் பிறகு உலக வல்லரசுநாடுகளான அமெரிக்காவும், சோவியத் யூனியனும் யார் ஹிட்லரின் வி2 ஏவுகணைத் திட்டத்தை ஆட்டையப் போடலாம் என்று பெரிய போட்டியே போட்டிருக்கிறார்கள்.
பேப்பர் கிளிப்ங் என்கிற ரகசிய ஏற்பாட்டின்படி 500க்கும் அதிகமான விஞ்ஞானிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் அமெரிக்கா கடத்தியிருக்கு. வெர்னர் வான் பிரவுன்ங் என்கிறவர்தான் வி2 ஏவுகணைத் தயாரிப்பிலே முதன்மை விஞ்ஞானியா இருந்தவராம். இவர் வடிவமைத்த சார்ட்டன்-வி என்கிற ஏவுவாகனம் மனிதர்களை 1969 லிருந்து 1972 வரை ஆறுமுறை நிலாவுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிருக்கு.
இது இப்படியிருக்க, அமெரிக்காவுக்குப் போக விருப்பம் இல்லாத விஞ்ஞானிகளில் சிலர் சோவியத் யூனியனில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் செர்கெ கோரோலேவ்.. இவர் சோவியத் யூனியன் போனவுடனே செய்த முதல் காரியம் வி2 ராக்கெட்டை மறுபடியும் உருவாக்கியதுதான். உலகின் முதல் இரண்டு செயற்கைக்கோள்களான ஸ்புட்னிக்1 மற்றும் ஸ்புட்னிக்2 கேள்விப்பட்டிருக்கோம் அல்லவா! அந்த இரண்டையும் இவருடைய தலைமையிலதான் தயாரிக்கப்பட்டிருக்கு.
உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்1 என்கிற செயற்கைக்கோளை 1957 ல் சோவியத் யூனியன் விண்வெளிக்கு அனுப்பியது. அதன்பிறகு, இந்த விண்வெளிப்போட்டி பனிப்போரா மாறிவிட்டது. நீ பெரிய ஆளா இல்ல நான் பெரிய ஆளா என்கிற போட்டியில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் விண்வெளிப் போட்டியில் இறங்கியது. இந்தக் கதையெல்லாம் நமக்கு ஓரளவுக்குத் தெரியும்.
முதல் முதலில் விண்ணுக்குச் சென்ற மனிதர் யார் என்றால் அவர்தான் யூரி காகரின். இவர் சோவியத் யூனியனைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் முதல் விண்வெளிவீரர் யார் என்று பார்த்தால், அவர்தான் ஆலன் ஷெபர்டின். யூரி காகரின் ஏப்ரல் 12, 1961 ஆம் தேதி, காலை 6 மணி ஏழு நிமிடத்திற்கு விண்ணுக்கு ஏவப்பட்டார். அவர் திரும்பவும் புவியை 108 நிமிசம் கழிச்சு 7 மணி 55க்கு திரும்ப வந்தடைந்தார்.
யூரி காகரின் விண்ணுக்குப் போய் வந்த 23 நாட்களிலேயே அமெரிக்காவின் முதல் விண்வெளி மனிதன் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கு. மே5, 1961 ஆம் தேதி ஆலன் ஷெப்பர்ட் விண்வெளிக்குப் போகிறார். அவர் 15 நிமிடங்கள் 22 விநாடிகள் புவியிலிருந்து 188 கிலோமீட்டர் உயரம் வரை சென்றுவிட்டு நேராகத் தரை இறங்கிவிட்டார்.
பிறகு, 1948-ல் சோவியத் யூனியன் சவுண்டிங் ராக்கெட் எனப்படும் ஏவு வாகனத்தை அனுப்பும் திட்டத்தை தொடங்கியது. ஆகஸ்ட் 1951 ஆம் வருடம் ஒரு நாய்க்குட்டியை 110 கிலோமீட்டர் உயரம் வரை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த நாய்க்குட்டிதான் விண்வெளிக்கு முதன்முதலாகச் சென்ற உயிரினம்.
அடுத்ததாக, 1957 அக்டோபர் 4ஆம் தேதி உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1 ரஷ்யாவினால் விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடனே அமெரிக்காவால் சும்மா இருக்க முடியுமா? எப்படியாவது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்திட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே ரஷ்யா லைக்கா என்கிற நாய்க்குட்டியை விண்வெளிக்கு அனுப்பி அடுத்த சாதனையை படைத்தது. இதேபோல 1960 ல் அமெரிக்கா ஒரு சிம்பன்சி குரங்கை விண்வெளிக்கு அனுப்பியது.
லைக்கா செல்வதற்கு முன்பாக பல விலங்குகள் விண்வெளிக்குப் சென்றிருந்தாலும் முதல் முதலாகப் புவியைச் சுற்றிவந்த உயிரினம் இந்த லைக்கா நாய்க்குட்டிதானாம். நாய்க்குத் தேவையான உணவும் அசையாமல் இருப்பதற்கான நாற்காலியும் அமைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அதுவும் பத்திரமா விண்வெளியைச் சுத்தி வந்திருந்தது. ஆனால் பத்துநாளுக்கான உணவுப்பொருட்கள் வைக்கப்படிருந்த போதிலும் அது இரண்டாவது நாளே இறந்துவிட்டது என்பது ஆய்வில் தெரியவந்தது..
1947 லிருந்து 1957 வரை குரங்கு, நாய் என்று ஏராளமான விலங்குகள் விண்ணுக்கு அனுப்பப்பட்டிருக்கு. முதன் முதலாகப் புவியை வெற்றிகரமா வலம்வந்த செயற்கைக்கோள் ஸ்புட்னிக்-1 தான். இது மூன்று மாதத்தில் பூமியை 1440 முறை வலம் வந்திருக்கிறது. அமெரிக்காவும் தன் பங்குக்கு தனது முதல் செயற்கைக்கோளான எக்ஸ்புளோரர் 1 ஐ 1958, ஜனவரி 31 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது.
அமெரிக்கா தங்கள் நாட்டு விண்வெளி மனிதர்களை அஸ்ட்ரோநாட் என்றும், ரஷ்யா காஸ்மோநாட் என்றும் அழைக்கிறார்கள்.. 1959லிருந்து 1961 வரை சுமார் இருபது விண்கலங்கள் ஏவப்பட்டிருக்கு. அதில் பாதிக்கும் மேல் தோல்வியில் முடிந்திருக்கிறது. கூப்பர் என்கிற விண்வெளி வீரர் பூமியை 22 முறை சுற்றி வந்திருக்கிறார். சுமார் 34 மணிநேரம் விண்ணில் இருந்திருக்கிறார். பூமியிலிருந்து அதிகபட்சம் 267 கிலோமீட்டர் தொலைவுக்கு போயிருக்கிறார். கேட்கிறபோதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது அல்லவா!
அப்பல்லோ – 11 திட்டத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் என்கிற மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். காலின்ஸ் கட்டுப்பாட்டுக் கூடத்தில் தங்கி நிலவின் சுற்று வட்டப்பாதையில சுத்தி வருவது என்றும், நிலவில் விண்வெளி ஓடத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகிய இரண்டுபேரும் பயணம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் குழுத் தலைவராக நீல் ஆம்ஸ்ட்ராங்கை நியமித்தார்கள். யார் நிலவில் இறங்குவது என்கிற கேள்விக்கு நாசா தெளிவாக இருந்தது. நீல் ஆம்ஸ்ட்ராங்தான் முதலில் நிலவில் கால் வைக்க வேண்டும் என்று தீர்மானமா இருந்தார்கள்.
அதேபோலவே 1969 ஆம் வருடம் ஜூலை மாதம் 21 ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடியை நிலவில் பதித்தார். நிலவில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்க அதிபருடன் தொடர்புகொண்டார். இவர்கள் 22 கிலோ எடையுள்ள பாறைகள், மற்றும் மணல் போன்றவற்றை சேகரித்தனர். நிலவில் இவர்கள் செலவிட்ட நேரம் இரண்டு மணிநேரம் 31 நிமிடங்கள்.
அடுத்ததாக, விண்வெளி நிலையம், ஸ்பேஸ் ஸ்டேசன் என்பது விண்ணிலிருந்தே பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு வசிப்பிடம் அல்லது கிராமம் என்றும் சொல்கிறார்கள்.. இதுவும் ஒருவகையான செயற்கைக்கோள்தானாம். ஆனால், இதில் மனிதர்கள் சிறிது காலம் விண்வெளியில் தங்கியிருக்கத் தேவையான எல்லா வசதிகளும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், கொடுக்கப்பட்டப் பாதையிலிருந்து ரொம்பதூரம் விலகிச் செல்லவோ பூமிக்குக் கொண்டுவரவோ வசதிகள் கிடையாது என்றும் சொல்கிறார்கள். இந்த விண்வெளி நிலையத்துக்குப் போக பயண விண்கலங்களைத்தான் பயன்படுத்த வேண்டுமாம்.
இது எதற்காகவென்றால், தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது இடையில் பயணியர் விடுதியில் தங்கிவிட்டு மறுபடியும் பயணத்தை மேற்கொள்வதற்கு இந்த விண்வெளி மையத்தை பயன்படுத்தலாம் என்று நினைத்தார்கள்.
உலகிலேயே முதல் விண்வெளி நிலையம் ரஷ்யா அனுப்பிய சல்யூட்-1 நிலையம்தான். இது 1971 ஆம் வருடம் ஏப்ரல் 19 ஆம் தேதி அனுப்பப்பட்டது. சோவியத் யூனியனின் விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களைக் கொண்டு போக அவர்களின் சோயுஸ் விண்கலம் பயன்பட்டது. சல்யூட்-1 நிலையத்தை விண்வட்டத்தில் அதாவது ஆர்பிட்டில் செலுத்தி மூன்று நாட்களில் சோயுஸ்-10 விண்கலம் அனுப்பப்பட்டது. நின்றுகொண்டிருக்கும் ரயில்வண்டியில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதைப் போல ஏற்கனவே விண்ணில் இருக்கும் நிலையத்தில் இந்த சோயுஸ் என்கிற விண்கலத்தை இணைக்கிறது.
இதையெல்லாம் கேட்கும்போது மிகச் சாதாரணமாகத் தெரியும். ஆனால், இந்த நிகழ்வு நடைபெறும்போது இந்த இரண்டு விண்கலங்களும் மணிக்கு சுமார் 28000 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்துகொண்டிருக்குமாம். கேட்கும்போதே பயமாக இருக்கிறதல்லவா!. விண்கலத்திலில் இருக்கும் கருவியைப் பயன்படுத்தி அதனுடைய வேகத்தை தேவைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் மற்றும் சுழற்றியும் இணைப்புக் கருவிகளை சரியான பொருத்தத்திற்கு கொண்டுவந்த பிறகு இந்த நிகழ்வு நிகழ்த்தபடும். ஆனால் சோயுஸ்-10 விண்கலம் விண்வெளியில் இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், மறுபடியும் பூமிக்கே கொண்டுவர வேண்டியதாகிவிட்டது..
பிறகு, இந்த குறைபாடுகளையெல்லாம் நிவர்த்தி செய்து தொடர்ந்து விண்வெளி ஓடங்களை இணைக்கும் முயற்சி செய்துகொண்டே இருந்தார்கள்.
சோயுஸ் -11 வெற்றிகரமான நிலையத்துடன் இணைத்தார்கள்.. இதில் பயணம் செய்த மூன்றுபேரும் 24 நாட்களில் 383 முறை பூமியை வலம்வந்தார்கள். ஆனால், துரதிஷ்டம் என்னவென்றால், வெற்றியைக் கொண்டாட அவர்கள் பத்திரமா நிலத்துக்கு வரவில்லை. கீழே வரும்போது நிகழ்ந்த விபத்திலே மூன்றுபேரும் இறந்துவிட்டார்கள்.
இதுபோல விண்வெளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும்போது விபத்தில் இறந்தவங்களின் லிஸ்ட்டைப் பார்த்தால் மயக்கமே வந்துவிடும்.
விண்வெளி மனிதர்கள் தங்குவதற்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டபிறகு வலேரி போல்யகோவ் என்பவர் 437 நாட்கள் விண்வெளி ஓடத்திலே தங்கியிருந்திருக்கார். இவர் அதிக நாட்கள் இடைவிடாமல் விண்வெளியில் தங்கியிருந்தவர் என்கிற பெயரைத் தட்டிச்சென்றார்.
1970 களின் இறுதியில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அதன்பிறகு, உலக நாடுகள் விண்வெளியில் சேர்ந்து பணியாற்றும் சூழல் வளர்ந்தது.
முதல் முறை நிலவுக்கு மனிதர்கள் போய்வந்ததன் மேல் இருந்த ஆர்வம் படிப்படியாக மக்களிடம் குறைய ஆரம்பித்ததாலும், நிலவிலிருந்து மண் மற்றும் பாறைகளின் மாதிரிகள் கொண்டுவந்ததைத் தவிர பெரிய அளவில் ஆராய்ச்சிகள் தொடரவில்லை. அதனால், ஒருகட்டத்தில் மனிதனை நிலவுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை நிறுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவால் விண்ணில் செலுத்தப்பட்ட ஒரே விண்வெளி நிலையம் ஸ்கைலாப்தான்.
இன்று விண்வெளியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே விண்வெளி நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் மட்டுமே. இது அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஆறு விண்வெளி மனிதர்கள் தங்குவதற்கான வசதிகள் இங்கே இருக்கிறதாம்.
ஒரு கிலோ பொருளை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக் கொண்டுசெல்ல 4 லட்சம் ரூபாய்வரை செலவாகிறது என்று சொல்கிறார்கள். அதனால், ஒவ்வொரு முறையும் பூமியிலிருந்து தண்ணீரைக் கொண்டுசெல்வது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, நீரை மறுசுழற்சி செய்யும் கருவிகள் விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதாம். கழிவு நீரை நல்லநீராக மாற்றுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 14 லிட்டர் நீர் இதன்மூலம் பெறப்படுகிறது. இது பூமியில் பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் மாதிரியேதான் இருக்கும். ஆனால் இது எதிலிருந்து சுத்தீகரிக்கப்படுகிறது என்று தெரிந்தால் ‘உவ்வே’ என்று’ வாந்திவந்தாலும் வந்திடலாம்.
அதேசமயம் விண்வெளியில நடந்த விபத்துக்கள் ஏராளம். அதில் இழந்த உயிர்களும் ஏராளம். இந்தப் புத்தகத்திலேயே என் மனதுக்குப் பிடித்தமான அத்தியாயம் எதுவென்றால், அது விண்வெளி உடைபற்றியதுதான். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை முழுசாகப் போத்தியிருப்பது போன்றதொரு கவச உடையோடுதான் விண்வெளி மனிதர்களின் போட்டோவைப் பார்த்திருப்போம்.
விண்வெளியில் பயணிக்கும்போது விண்வெளி மனிதர்கள் அணியும் உடை பூமியில் அணியும் உடையிலிருந்து வேறுபடுகிறது. அதைத்தான் விண்வெளி உடை என்று சொல்கிறார்கள்.. விண்வெளியில் ஏற்படும் தட்பவெப்ப நிலைகளின் மாற்றத்தால் மனிதனுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் இருக்க இந்த விண்வெளி உடை பயன்படுத்தபடுகிறது.
நம் மனித உடல் பூமியின் சூழ் அழுத்தத்திற்குப் பழக்கப்பட்டது. நம் உடலைச் சுற்றியுள்ள காற்றழுத்தம் எப்போதும் பூமியில் உள்ளது போலவே இருக்கவேண்டும். உடலைச் சுற்றியுள்ள காற்றழுத்தம் கூடினாலும் ஆபத்து, குறைந்தாலும் ஆபத்து.
கூடினால் உடல் நசுங்கிவிடும். குறைந்தால் உடலின் திரவங்கள் அவற்றின் நாளங்களில் இருந்து தெறித்துவிடும். வழிமண்டல அழுத்தத்தில் 30 விழுக்காட்டிற்குக் கீழே செல்லும்பொழுது நமது உடலில் உள்ள உறுப்புகள் செயலிழக்கும், தரைமட்டத்திலிருந்து மேலே செல்லச்செல்ல சுமார் 19 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றழுத்தம் 8 விழுக்காட்டை விடக் குறையும். அந்த அழுத்தத்தில் வெப்பமில்லாமலேயே நம் ரத்தம் ஆவியாகத் தொடங்கும்.
இதுபோன்ற தட்பவெப்ப மாறும் அழுத்த நிலைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள விண்வெளி உடைகள் தேவைப்படுகின்றன. விண்வெளி மனிதர்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து அவர்கள் அணியவேண்டிய உடைகள் மாறுபடுகின்றன. விண்வெளி உடைகள் மூன்று விதங்களாக உள்ளன. விண்கலத்தில் இருக்கும்போது அணிந்துகொள்ள ஒருவிதமான உடை. விண்கலத்திலிருந்து வெளியே செல்ல ஒருவிதமான உடை. இந்த இரண்டிற்கும் சேர்த்து ஒரே வகையான உடை என மூன்று வகையான உடைகள் உள்ளனவாம்.
உடை என்றதும் உடனே ஒரு விசயம் எனக்கு நினைவுக்கு வருகிறது, அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட் தன் பயணத்திற்கு காலை 6 மணிக்கே தயாராகிவிட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரையின்படி அந்த திட்டம் இரண்டு மணிநேரத்தில் நிறைவடையும். அவரும் சரியாக 8 மணிக்கு, ஏவுதளத்திற்கு வந்துட்டார். ஏவு ஊர்தி புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அவருக்கு உரிய இடத்தில் உட்காரவேண்டும். அவரும் அதுபோலவே போய் உட்காந்துவிட்டார்.
ஆனால், ஏவு ஊர்தியின் செயல்பாடுகளை கவனிக்கத் தொடங்கியபிறகுதான் ஏதோ ஒரு சின்ன குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. அதனால் உடனடியாக ஏவு ஊர்தியை செலுத்த முடியவில்லை. சுமார் 4 மணிநேரம் காலதாமதம் ஆகியும் குறிப்பிட்டபடி ஏவு ஊர்தி கிளம்பர மாதிரி தெரியவில்லை. நீண்ட நேரம் ஆகிவிட்டதால், அவருக்கு சிறுநீர் கழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
அதைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினார். அவருக்கு உடுத்தப்பட்டிருந்த உடையில் அதற்கான வசதி செய்யப்படவில்லையாம்.. ஒரு கட்டத்தில் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ’நான் விண்வெளி உடையிலேயெ உச்சா போகிறேன்’ என்று சொல்லிட்டு போய்விட்டார்.
இதில், என்ன விசேசம் என்றால்,, உடையில் இருந்த மின்சார பொருட்களில் சிறுநீர் பட்டு அதன் செயல்பாடுகள் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பதற்றமாகிவிட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் சுமார் ஒரு மணிநேரத்தில் ஈரப்பதம் ஆவியாகி உடை உலர்ந்துபோய்த் தப்பிவிட்டது. அவரும் அந்த உச்சா போன ட்ரஸ்ஸோடவே பத்திரமாக விண்வெளிக்குப் போன முதல் அமெரிக்கர் என்கிற பேரைப் பிடித்துவிட்டார்.
பூமியில் இருப்பதைப்போல வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறை ஒரு புதிய உடை எல்லாம் விண்வெளியில் கிடைக்காது. பூமியிலிருந்து கிளம்பியது முதல் திரும்பி வரும் வரை ஒரே உடைதான் என்பதை நினைவில் கொள்க.
அப்போலோ திட்டங்களில் அணியப்பட்ட உடையை அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும். அது சுமார் 80 கிலோ எடை கொண்டதாக இருந்திருக்கிறது. நல்லவேளையாக, இப்போதைய விண்வெளி வீரர்கள் அணியும் நவீன உடைகள் 40லிருந்து 45 கிலோ எடை கொண்டதாக இருக்கிறதாம்.
சரி அது இருக்கட்டும், சாதாரணமாகப் பேருந்திலோ அல்லது விமானத்திலோ நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்து செல்லும்போது என்ன நிகழும்? நமது கால் வீங்கிவிடும். அல்லவா! இதற்குக் காரணம், ஈர்ப்பு விசையின் காரணமாக உடலில் உள்ள் நீர் உடம்பின் கீழ்பகுதிக்குப் போய் காலில் சேர்வதால் இப்படி ஆகிறது. இடையிடையே சிறிது தூரம் நடந்தால் அது சரியாகிவிடும். ஆனால், விண்வெளிக்குச் சென்றவுடன் ஈர்ப்புவிசை இல்லாத காரணத்தால் காலில் உள்ள அனைத்து நீரும் உடலின் மேற்பகுதியை நோக்கிப் பயணிக்கும். அப்போ என்னவாகும் என்றால், முகம் வீங்கிவிடும். கால்கள் சிறுத்துப் போய்விடும். இந்த நிலையைத் தான் விண்வெளி மனிதர்கள் ”கோழிக்கால் மனிதன்” என்று சொல்கிறார்கள். இப்போது தெரிகிறதா? ஏன் விண்வெளிக்குப் போன உடனே விண்வெளி வீரர்கள் போட்டோ எடுத்து அனுப்பாமல் இரண்டொரு நாட்கள் கழித்து அனுப்புகிறார்கள் என்று?
சரி இதுமட்டும் இல்லாமல் வேறு சில விசயங்களையும் நாம பார்க்கவேண்டும். தலைக்குச் சென்ற அதிகப்படியான நீர் மூக்கு, கண், காது, மூளை என்று பல பகுதிக்குப் போய்விடுவதால் என்னவாகும் என்றால், வயிற்றில் குமட்டல், தும்மல், வாந்திவருவது, உடல் சோர்வு, பசியில்லாம போவது, தலை சுற்றுவது என்று பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.. இதைப் பலமுறை விண்வெளிக்குச் சென்று வந்த விண்வெளிவீரர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்ததாக, மிகப்பெரிய பிரச்சினை, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு. விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் மூளைக்கு கிடைக்கும் சிக்னல்களில் குழப்பங்களும், சிரமமும் ஏற்படுகிறதாம். ஒரு சுழல் நாற்காலியில் உட்கார்ந்து சுத்திக்கொண்டு இருந்துவிட்டு திடீரென்று எழுந்தால் என்னவாகும்? நாம சுத்துவது நின்றபின்னும் நாம் சுத்திக்கொண்டே இருப்பதைப் போன்றதொரு உணர்வு உருவாகுமல்லவா! அது ஏனென்றால்? நம் காதுக்குள் இருக்கும் நீர் சிறிதுநேரம் சுத்திக்கொண்டே இருந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமா செட்டில் டவுன் ஆகும்.
அதனால் தான் அப்படி கிறுகிறுன்னு சுத்தறமாதிரி இருக்கு. அதேமாதிரி, விண்வெளி நிலையத்துக்குப் போனவுடனே நாம மேலே நிக்கிறோமா, இல்ல தலைகீழா நிக்கிறோமா? என்கிற பல குழப்பங்கள் உருவாகிறதாம். இதற்கு விண்வெளி நிலையத்தில் ஒரு ஐடியா பண்ணி வைத்திருக்கிறார்களாம். ஆம், சில குறியீடுகளை வரைந்து வைத்திருக்கிறார்கள். அதைவைத்து, நேரா இருக்கிறோமா அல்லது தலைகீழாக இருக்கிறோமா என்று தெரிந்துகொள்கிறார்கள்.
முறையான உடற்பயிற்சியும் வேலைப்பளுவும் இல்லையென்றால் என்னவாகும்? எலும்பில் உள்ள கால்சியம் குறைந்து தேய்மானம் அடைய ஆரம்பித்துவிடும். எலும்பிலிருந்து அதிகமாக ரத்தத்தில் கலந்த கால்சியத்தின் அளவைக் கட்டுக்குள் வைக்க சிறுநீரகம், இதை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற போதுமான அளவு தண்ணீர் வேண்டும். விண்வெளி மனிதர்கள் அதிகளவு தண்ணீர் குடிக்காததால் வெளியேற்றப்படவேண்டிய கால்சியத்தின் அளவு அதிகமாகத் தேங்கி சிறுநீர்க் கற்கள் உருவாக ஆரம்பித்துவிடும். இந்த மாதிரி ஏராளமான உடல் உபாதைகளை விண்வெளி வீரர்கள் சந்திக்கவேண்டியிருக்கு.
இன்னும் ஒரு முக்கியமான செய்தியை நான் சொல்ல வேண்டும். அது தூக்கம். பூமியில் 12 மணிநேரம் பகல் 12 மணிநேரம் இரவு என்று இருப்பதால் இருட்டானால் போதும் படுத்துத் தூங்கிடலாம். ஆனால், விண்வெளி மனிதர்கள் பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டு இருக்கும் போது ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்கள் பூமியை சுத்திக்கொண்டு வருகிறார்கள். அப்போது என்னவாகும்? ஒரு மணி நேரம் இருட்டிலும் அரைமணிநேரம் வெளிச்சத்திலும் மாறிமாறி இருக்கவேண்டி வரும். அதைவிட முக்கியமாக, விண்வெளி நிலையத்தை இயக்கத்தில் வைத்திருப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் கருவிகளில் இருந்து தொடர்ந்து சத்தம் வந்துகொண்டே இருக்கும். இதற்கு நடுவிலேதான் தூங்கி எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல விண்வெளி நிலையத்தில் எல்லாரும் ஒரே நேரத்தில தூங்குவதற்கான வசதிகளும் இல்லையாம். உதாரணத்துக்கு நாலுபேர் இருந்தால் இரண்டுபேர் தூங்கிக்கொண்டும் இரண்டுபேர் பணிசெய்துகொண்டும் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் என்ன நடக்கும்? பணிசெய்பவர்களின் பேச்சுச் சத்தமும் தூக்கத்துக்கு இடையூறாக இருக்கும் அல்லவா?
அடுத்ததாக விண்வெளி உணவுகள். நாம் நினைப்பதைப்போல விண்வெளி நிலையத்தில் ஸ்டவ் அடுப்பு வைத்தெல்லாம் சமைத்துச் சாப்பிட முடியாது. கெட்டுபோகாத ஃப்ரூட் ஜூஸ், பேக்ட் ஃபுட்தான். கீழே வரும்வரைக்கும். விண்வெளியிலே ஏராளமான ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். அதைச் சொல்லத் தொடங்கினால் ஒரு நாளே போதாது. செடி வளர்ப்பதற்குக்கூட ஆராய்ச்சி செய்கிறார்களாம். இதுவரைக்கும் பயணம் செய்த விண்வெளி மனிதர்களில் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியே சென்றவர்கள் அப்போலோ விண்கலத்தில் பயணித்த விண்வெளி வீரர்கள் மட்டுமே.
அவர்கள் சென்ற அதிகபட்ச தூரம் பூமியிலிருந்து நிலா உள்ள தூரத்திற்கு மட்டுமே. நம்ம ஊர் டீக்கடையிலே உட்கார்ந்து கொண்டு ஏதோ ஈரோட்டிலேர்ந்து சென்னைக்குப் போறமாதிரி, அடுத்தவாரம் செவ்வாய் கிரகத்துக்குப் போகப்போகிறேன், சனிக்கிழமை, சனிகிரகத்துப் போகப்போகிறேன் என்று யாராவது பீலா விட்டால் நம்பிவிடாதீர்கள்.. அதற்கான ஆராய்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இந்த பூமியில் உள்ள வளங்களையும் சுற்றுச்சூழலையும் நாம் வேகமாக அழித்துக்கொண்டே வருகிறோம். நாம் வாழத்தகுதியில்லாத இடமாக பூமியை மாற்றிவிட்டோம் என்றால், அவ்வளவுதான். நிலாவில் போய் தங்குவது விண்வெளியில் போய் தங்குவது எல்லாம் அவ்வளவு சாதாரணமான விசயமில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
விண்வெளி ஆராய்ச்சிகளைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள். நான் சொன்னதெல்லாம் இந்த புத்தகத்தில் இருந்து கொஞ்சம்தான். நீங்கள் இந்தப் புத்தகத்தை ஒரு முறை வாசித்தாலே போதும் இன்னும் இதுசார்ந்த விசயங்களைத் தேட ஆரம்பித்துவிடுவீர்கள். நீங்களும் ஒருநாள் விண்வெளி வீரராக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சார் டைம் முடிஞ்சு பத்து நிமிடம் ஆகிவிட்டது என்று சிக்னல் கொடுத்துக்கொண்டே இருந்தார் தொகுப்பாளர்.
ஆகவே, அவசர அவசரமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாரதி புத்தகாலயத்திற்கும், பாரதி டிவியில் இதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தோழர் கலைக்கோவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைச் சொல்லிவிட்டு ஒரு பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன். ஏனென்றால், எனக்கு அறிவியல் அவ்வளவாகத் தெரியாது.