சிறப்பு விருந்தினர் கவிதை – வில்லியம்ஸ்
சுழல் நாற்காலி மீது
படமெடுத்து அமர்ந்திருந்த பாம்பிற்கு
கூட்டாண்மைத் தோற்றம்
பாதுகாப்பான தூரத்திலிருந்து
உங்களைப் பற்றிச்
சொல்லுங்கள் என்கிறான்
பேட்டியாளன்
நான் அதிரூபன்
ஆதிசேஷன்
ஆலகாலம்
மூலப்பரிகாரம்
நான் முத்தமிட்டால்
முக்தி அடைவீர்கள்
கடவுள் அவதாரமா
நானன்றி வேறேது தெய்வம்
சிவனென்
இடுப்பிலிருப்பதால்
பரம்பொருளும் நானே
அகம் பிரம்மாஸ்மி
ஊர்ந்து வாழும் சாபம் குறித்து
சங்கடமில்லையா
கண்ட மறுகணம்
தண்டுவடம் நடுங்க வைக்கும்
அங்க அமைப்புக்கு
சங்கடப்படுவானேன்
கீரியோடு அப்படியென்ன
முன்விரோதம்
யார் கூறியது
அதுவோர் வீரவிளையாட்டு
மஞ்சுவிரட்டுக்கும் முந்தையது
நகக்குறிகளை ரசிப்பதில்லையா
பற்குறிகளில் ரத்தம் துளிர்ப்பது
பரவச அனுபவம்
வட்டமிடும் கட்டுக்கதைகள் பற்றி
ஏற்கனவே ஒளிரும்
ஐந்து தலை ரத்தினக்கல்லுடன்
ஆமைக்கும் கயிருக்கும்
பிறந்தது தான் பாம்பினமென
புதிதாயொன்றை
கிளப்பி விடுங்கள்
இசை பிடிக்குமா
காதில்லாவிட்டாலும்
கண்களால் ரசிக்கும்
அஷ்டாவதானி நான்
மனிதர்கள் பற்றி
எல்லாம் அல்ல
ஒரு சிலர் மட்டும்
கொடிய விஷம்
பார்த்தாலே நீலம் பாயும்