நூல் அறிமுகம்: அசோகமித்திரனின் ‘ஆடிய ஆட்டமென்ன’ சுரேஷ் வெங்கடாத்ரி

நூல் அறிமுகம்: அசோகமித்திரனின் ‘ஆடிய ஆட்டமென்ன’ சுரேஷ் வெங்கடாத்ரி




‘ காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ் பாரிஸ் நகரில் தெருவில் போகும் ஒருவரை அடையாளம் கண்டு கொண்டு தன்னையறியாமல் ‘மேஸ்ட்ரோ’ என்று கத்துகிறார். அவர் அப்படி கத்தியது, எர்னஸ்ட் ஹெமிங்வேயைப் பார்த்து. ஹெமிங்வே கையைத் தூக்கி அன்புடன் ஆனால் உறுதியுடன் ‘போய்வா நண்பனே ‘ என்கிறார்.’

‘ நான் ஜி.ஆர்.விஸ்வநாத்தைக் கண்டபோதும் அப்படித்தான் கத்தினேன்.நான் விஸ்வநாத்தை விட 15,20 ஆண்டுகளாவது மூத்தவன். ஆனால் அபிமானத்துக்கு வயது கிடையாதோ என்று நினைக்கிறேன்.”

மேலே இருக்கும் வரிகளை எழுதியிருப்பவர் அசோகமித்திரன். அவர் எழுதிய கிரிக்கெட் கட்டுரைகளைத் தொகுத்து வந்திருக்கும், ‘ஆடிய ஆட்டமென்ன’ என்ற ஒரு சிறு நூலில் ‘இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை’ என்ற கட்டுரையில் வருகிறது இது..

அசோகமித்திரனுக்கும் என்னைப் போலவே விஸ்வநாத்தைப் பிடிக்கும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அன்றெல்லாம் காவஸ்கரா விஸ்வநாத்தா என்ற கோஷ்டி சண்டையில் நாங்கள் எப்போதுமே விஸ்வநாத் அணிதான்.(அப்புறம் காவஸ்கருக்கும் விசிறியானேன் என்பது வேறு விஷயம்.)

உண்மையில் நான் வாசித்த அசோகமித்திரனின் முதல் கதையே கிரிக்கெட் பற்றியதுதான். ஜாலி ரோவர்ஸ் ஆடுவதை ஒரு முறையாவது பார்து விட வேண்டுமென்று ஏங்கும் ஒரு பதின்ம வயதுப் பையனைப் பற்றிய கதை அது. அவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பார்க்க முடியாமல், வேலைக்கு சென்று சேரும் நிர்ப்பந்தத்தில் இருப்பான் அவன் (நினைவிலிருந்து சொல்கிறேன்) ஆட்டத்தை பார்க்க முடியாது..அந்தக்கதையின் பெயர் நினைவில் இல்லை. எவ்வளவோ தேடிப் பார்த்தும் மீண்டும் ஒரு முறை அதைப் படிக்கவேயில்லை. இந்த நூலைப்பார்த்ததும் முதலில் அந்தக் கதை இருக்கிறதா என்றுதான் தேடினேன். அனால் இது அவர் எழுதிய கிரிக்கெட் கட்டுரைகளைக் கொண்டது என்று அப்புறம்தான் தெரிந்தது. அவரது 18 அட்சக் கோடு நாவலிலும் கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கிய இடமுண்டுதான்.

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும், 19 கட்டுரைகளும், 2006ம் ஆண்டு தினமணிக் கதிரில் அவர் தொடராக எழுதி வெளி வந்தவை. சிகந்திராபாத்தில் அவரது இள வயது கிரிக்கெட் ஆட்ட அனுபவங்களும், அவர் கேட்டு (ஆம் ரேடியோவில்) ரசித்த கிரிக்கெட் ஆட்டங்கள், ஆட்டக்காரர்கள் பற்றியக் கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு. இரண்டுமே சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன.

ஜி.ஆர்.விஸ்வநாத்தைத் தவிர அசோகமித்திரனுக்கு பிடித்த மற்ற வீரர்கள் என்றால் பிராட்மன் விஜய் ஹசாரே குலாம் அஹ்மது, பூபதி எனும் ஹைதரபாத் ஆட்டக்காரர் என்று தெரிகிறது.மிகவும் நம்பிக்கையளிக்கும் துவக்கங்களைக் கொண்டிருந்த, ஆனால், பின்னாளில் பெரிதாகப் பிரகாசிக்க முடியாத சில ஆட்டக்காரர்களைப் பற்றிய சித்திரங்களும் இதில் உண்டு.

இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியைப் பற்றி , எழுதியிருக்கிறார். 1960ல் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் ‘டை’ டெஸ்டை நினைவு கூர்ந்திருக்கிறார். இடையிடையே சில கட்டுரைகளில் அவர் சந்தர்ப்பவசத்தால் தலைவனாக இருந்த தனது அணியின் சில மேட்சுகளைப் பற்றிய கட்டுரைகளும் உண்டு. அவற்றைப் படிக்கையில் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் சுஜாதாவின் கிரிக்கெட் கட்டுரைகள் நினைவுக்கு வருகின்றன.

எப்போதுமே போதிய பொருளாதார பலமில்லாமல்,உடைந்த பேட் பிய்ந்து போன, தைக்கப்பட்ட கிரிக்கெட் பந்து, அரை மேட் (Mat ), ஆகியவற்றை வைத்து சமாளிக்கும், கீழ் மத்தியத் தரத்து பையன்கள் நடத்தும் கிரிக்கெட் அணியின் அத்தனை சிரமங்களையும் அனாயாசமாக சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். முழுக்க முழுக்கக் கிரிக்கெட் விளையாட்டின் மிக லேசான மனநிலையை கொண்டிருக்கும் ஒரு கட்டுரையின் ஒரு வரியில் சட்டென்று ஒரு ஆழத்தையும் கனத்தையும், கொண்டு வந்துவிடுவது அவருக்கே உரித்தான முத்திரை. அப்படிப்பட்ட தருணங்கள் பல இருக்கின்றன இந்தக் கட்டுரைகளில். குறிப்பாக இரண்டாம் உலகப் போர் இந்த ஆட்டத்தையும் வீரர்களையும் பாதித்த விதம்..

இந்தியா ஒரு முறை ஆஸ்திரேலியாவில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தைப் பற்றி ஒருகட்டுரையில் வருத்தத்துடன் விவரிக்கிறார். நல்ல வேளையாக அதே ஆஸ்திரேலியாவில் 36 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்ததை பார்க்க அ .மி உயிருடன் இருக்கவில்லை. இங்கிலாந்தில் 42 ஆல் அவுட் ஆனது ஏனோ இதில் வரவில்லை. இன்று இந்தியக் கிரிக்கெட் அணிகள் வலுவானவையாக இருப்பதைப் பார்க்க அவரில்லையே என்றும் ஒரு ஏக்கம் படர்கிறது.

சென்ற நூற்றாண்டின் 40களிலிருந்து 70கள் வரையிலான பல இந்திய, சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரர்களான, ரங்காச்சாரி, பங்கஜ் ராய், வினு மங்கட் உம்ரிகர், சந்து சர்வாட்டே, ஜெயசிம்ஹா, சோபர்ஸ், கீத் மில்லர், ரே லிண்ட்வால், ஃப்ரெட் ட்ரூமன் இன்னும் பலரையும், அறிந்து கொள்ளக் கூட இந்தக் கட்டுரைகளை படிக்கலாம்., அசோகமித்திரனின் விசேஷமான பார்வையில் அவர்கள் இங்கே இதிலே ஜொலிக்கிறார்கள். டிராவிட் தோனியைப் பற்றியெல்லாம் கூட ஓரிரு வரிகளில் சொல்லி விடுகிறார். முக்கியமாக டிராவிட் அடிக்கடி ரன் அவுட் ஆவதையும் தோனியின் நீள முடியை முஷாரஃப் பாராட்டியது குறித்தும்கூட எழுதியிருக்கிறார். (முஷாராஃபின் காலமும் முடிந்து விட்டது). இவர்களைப் புகழ்வதில் எந்த மிகையும் இல்லை. அந்த ஜி.ஆர்.விஸ்வனாத் பற்றிய கட்டுரையில் கூட அப்படித்தான். மார்க்வெஸே மேஸ்ட்ரோ என்றழைத்த ஹெமிங்வே, 15-20 ஆண்டுகள் மூத்தவரான அசோகமித்திரன்
வியந்து பார்த்து, மேஸ்ட்ரோ என்று கத்திய விஸ்வநாத்.. அவ்வளவுதான்.. அது போதுமில்லையா..

என்னைப் போன்ற அசோகமித்திரன், கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ரசித்துப் படிக்கத் தக்க, படிக்க வேண்டிய அருமையான நூல்.

சுரேஷ். வெங்கடாத்ரி

நூல் : ஆடிய ஆட்டமென்ன
ஆசிரியர் : அசோகமித்திரன்
விலை : ரூ.₹100/-
வெளியீடு : காலச் சுவடு

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

பீலே மறைந்தார் கட்டுரை – அ.பக்கியம்

பீலே மறைந்தார் கட்டுரை – அ.பக்கியம்




உலக கால்பந்து ஜாம்பவான், கால்பந்தின் அடையாளம், பீலே 29-ம் தேதி தனது 82 வது வயதில் பிரேசிலின் சா பவலோ நகரில் மறைந்தார்.

உலகம் அஞ்சலி அலைகளால் திணறிக் கொண்டிருக்கிறது.

அவரது உடல் இருக்கும் மருத்துவ மனையை சுற்றி மக்கள் வெள்ளம் சூழ்ந்து மூழ்கடிக்கப்பட்டு விட்டது.

நாங்கள் உன்னை எல்லை இல்லாமல் நேசிக்கிறோம் நிம்மதியாக இருங்கள் என்று அவரது மகள் கிளி நாசிமெண்டோ தெரிவித்துள்ளார்.

பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், பீலே கால்பந்தை ஒரு கலையாக மாற்றியவர், பிரான்ஸ் நாட்டின் கிலியன் எம்பாபாபே பீலே யின் பாரம்பரியத்தை எப்போதும் மறக்க முடியாது என்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மில்லியன்களின் உத்வேகம் என்றும் மெஸ்ஸி அமைதியுடன் ஓய்வு எடுங்கள் என்றும் உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களில் ஒருவராக மக்களை ஒன்றிணைக்கும் விளையாட்டு ஆற்றலை அவர் புரிந்து கொண்டார் என்று ஒபாமா அஞ்சலி தெரிவித்துள்ளார்.

தனது தனது 15 வது வயதில் கால்பந்து விளையாட்டில் நுழைந்தார். கால்பந்து வணிகமயம் ஆக்கத்தின் துவக்கட்டமாக அக்காலம் இருந்தது.

1958, 1962, 1970 ஆகிய மூன்று உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றார் ஒரே கால்பந்து வீரர் பீலே மட்டும்தான்.

21 வருட கால்பந்த வாழ்க்கையில் 1363 போட்டிகளில் விளையாடி 1281 கோள்களை அடித்து உலக சாதனை படைத்தார்.

1940 அக்டோபர் 23-ம் தேதி அன்று பிரேசில் தென்கிழக்கு நகரான ட்ரெஸ் கோரக்எஸ் இடத்தில் பிறந்தார்.
Edson Arantes do Nacimento என்று தாமஸ் எடிசன் பெயர் சூட்டப்பட்டது. ஒருமுறை அவர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது அவரது பெயரை சரியாக உச்சரிக்கவில்லை என்ற காரணத்தினால் பீலே என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டது.

தன் குடும்பத்தை ஏழ்மையை போக்குவதற்காக தெருவில் வேர்க்கடலை வியாபாரம் செய்து வளர்ந்தார்.

“சம்பா கால்பந்து” என்று அழைக்கப்படும் பிரேசில் தேசிய அணியின் விளையாட்டு பாணியை உருவக படுத்தினார்.

சாண்டாஸ் கிளப்பில் 15 வயதில் தொழில் ரீதியாக விளையாடத் தொடங்கிய பிலே பலரை திகைப்பு அடையச் செய்தார்.

1962-63 கண்டங்களுக்கிடையான பல போட்டிகளில் பட்டங்களை அலையலையாக பெற்றார்.

1950 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் சொந்த மண்ணில் உருகுவேயிடம் உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரேசில் தோற்ற பொழுது தந்தை அழுது கொண்டிருந்தார். பீலே அவரது தந்தை அழுவதை பார்த்து கோப்பையை ஒரு நாள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று உறுதி அளித்தார்.

1958 ஆம் ஆண்டு 17 வது வயதில் உலகக் கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தார்.

1970 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பையில் பீலே மகத்துவத்தின் உச்சத்தை அடைந்தார்.

அவர் பல நாடுகளுக்கு சென்ற பொழுது அங்கிருந்த சூழல் மாற்றப்படும் நிகழ்வு நடந்திருக்கிறது. 1969 ஆம் ஆண்டில் அவர் நைஜீரியாவிற்கு சென்றதால் அங்கு நடைபெற்ற போர் 48 மணி நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

பீலே ஐரோப்பிய கிளப்புக்களில் விளையாடுவதை நிராகரித்தார். ஆனால் தனது தொழில் முறை விளையாட்டின் இறுதி கட்டத்தில் நியூயார்க் காஸ்மோஸ் உடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

ஒரு திரைப்பட நட்சத்திரம், பாடகர், நாட்டின் விளையாட்டு மந்திரி (1995-98) போன்ற கால்பந்து கடந்த துறைகளிலும் அவரின் பணி நீடித்தது.

பிரேசில் நாட்டின் முதல் கருப்பின அமைச்சரவை உறுப்பினர் பீலே என்பதை குறிப்பிடுகிறார்கள்.

அவர் மீதான விமர்சனங்களும் உள்ளது.சமூகப் பிரச்சனைகள் மற்றும் இனவெறி போன்றவற்றில் அவர் அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக இருந்தார் என்று விமர்சனங்களை எதிர்கொண்டார்.

அர்ஜென்டினாவின் கிளர்ச்சியாளர் டி யாகோ மரடோனாவை போன்று அல்லாமல் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த பட்டத்தை பெறுவதற்காக பீலே அமைதி காத்தார் என்று விமர்சனங்கள் உள்ளது பிரேசில் நாட்டில் 1964- 85 காலகட்டங்களில் நடைபெற்ற ராணுவ ஆட்சி உட்பட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமாக இருந்தார் என்ற விமர்சனம் எதார்த்தம் என்பதை வரலாறு நமக்கு தெரிவிக்கிறது.

கால்பந்தின் ஈர்ப்பு சக்தியாக, ஒட்டுமொத்த தேசத்தின் கால்பந்து அடையாளமாக, உலக கால்பந்து சாதனையாளராக, கால்பந்தின் தூதுவனாக, கால்பந்து மைதானத்தினை கடந்து உலகம் முழுவதும் சுழலும் சக்தியாக இருந்த பீலே தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் அவருக்கான அஞ்சலியை ஒரு தாக்குவோம்.

– அ.பாக்கியம்.

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்




“இதற்குத்தானே ஆசைப்பட்டேன்”
*************************************
பிறக்கையில் கொங்கையமுது
தவழ்கையில் மண்ணமுது
நின்றபின் பிஸ்கட் சாக்லேட்டமுது
வளர்ந்த்பின் இன்னபிற இனிப்பமுது
வாலிப வயதில் விளையாட்டு
பருவம் வந்ததும் காதல்களியாட்டம்
மணந்தபின் கவின்மிகு கலவி
நடுத்தர வயதில் பணம் பொருள் செல்வம்
முதிர்ந்தபின் நோயற்ற வாழ்வு
இறுதியில் வலியற்ற இறப்பு,
இதற்குத்தானே ஆசைப்பட்டான்!
ஆனால் எதுவுமே ஏகமாய்
கிட்டுவதில்லை!!
துன்பத்தின் தூறல்கள் தூவானமாகி
துரத்தும் கவலைகள் கானல் நீரென
துடிக்கும் கனவுகள் துவண்டு போக!
துடிப்பும் ஒருநாள் நின்றுபோகும்,
தூயவனின் தாள்சேரும் சுகமான இறுதி நாளுக்கு….
ஏங்கிஏங்கி தவித்து நின்றான் மானிடன்!

திக்குத் தெரியாத காட்டில்”
********************************
தத்தித் தத்தி
தாயவளை கரம்பற்றி
சுத்திச் சுத்தி வந்து!
பற்றிப் பற்றிப்
பள்ளிப்புத்தகம் தனைக்
கற்று கற்று தேறி
சுற்றி சுற்றி
சுழல் விழியாள் காதலை
தேற்றி தேற்றி தொலைத்து
ஓடி ஓடி
வேலைதனைத்
தேடித் தேடி அலைந்து பெற்று!
பாத்துப் பாத்துப்
பெண்ணவள மனைவியாக்கி
பொத்திப் பொத்திப் பாதுகாத்து
சேத்துச் சேத்து
வைத்த பொருள்தனை
காத்துக் காத்து வைத்துத்
தூக்கித் தூக்கி
வளர்த்த வாரிசுகளோ
தாக்கித் தாக்கிப் பேச
தொங்கித் தொங்கி
முதுமையால் உடல்
மங்கி மங்கிப் போக
சுட்டுச் சுட்டுத்
திக்குத் தெரியாத (இடு)காட்டில்!
மண்ணொடு மண்ணாகிப் போனானே போக்கத்த மனிதன்!

“எழுத்தறிவித்தோனே ஏகன்!”
**********************************
ஆசிரியர்கள்!
அரும்பெரும் பட்டங்கள்!
ஆதாயம் தரும் பதவிகள் !
அனைத்தும் மாணவர்கட்கு
அறிவால் போதித்து!
கற்றுத்தரும் பெற்றுத்தரும்!!
ஆரவாரம் இல்லா
அணையா சுடர்கள்!

ஆசிரியர்கள்!
ஆயிரம் ஆயிரம் இளவல்களை
அலுங்காமல் நலுங்காமல்
ஆங்கே உயரத்தில் அமர்த்திடும்
அரிய பணி ஆற்றிடும் இவர்கள்!
ஏனோ ஏணியை போல்
“ஏறல்” முடிந்ததும்
எங்கோ புறந்தள்ளப்படுவர்!

ஆசிரியர்கள்…
ஆக சிறந்த சமுதாயம்
ஆக்க பிறந்த ஆசான்கள்!
அவர்கள் இல்லையேல்..
ஆவிபிரிந்த உடல்போல்
ஆகிவிடும் அழிந்துவிடும்!

ஆசிரியர்கள்
அவமதிக்கும் நாடும் அரசும்!
அமைதி விலகி
ஆக்கம் விலகி
அவ்வியம் தழுவி
அழிவது உறுதி!

அனைவர்க்கும்,
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
குருவே சரணம்!!

அவர் சைக்கிள் போட்டி!!
*****************************
அம்மாவின் அஞ்சரை பெட்டியில்
அஞ்சி நடுங்கி அரண்டு புரண்டு! ஐம்பது பைசா ஆட்டைய போட்டு!
அண்ணாச்சி சைக்கிள்கடையில்
அரைமணி நேரம் வாடகை எடுத்து!
அரைடஜன் நட்புகள் ஒன்றுகூடி,
போட்டாப்போட்டி பந்தயத்தில்!
மிதித்து மிதித்து பறந்தேன்!
மிதந்து மிதந்து மகிழ்ந்தேன்!
மின்னலென வெற்றி பெற்று!
கிரிக்கெட் மட்டை பரிசு பெற்று!
அம்மாவிடம் வெற்றியை பகிர!
அஞ்சறைபெட்டி ஆட்டையை மன்னித்து
அன்பு அம்மா! வாரியணைத்து
ஆசைதீர உச்சிமோர்ந்து ஆசிதந்தாள்!

– மரு உடலியங்கியல் பாலா