Music Life Series Of Cinema Music (Ithu Vasantha Kalamo En Isaiyin Kolamo) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்




மழை வாழ்க்கை இன்னும் தொடர்கிறது. வாழ்க்கை மழையைப் பார்த்து மலைத்து நிற்கிறது. ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’ என்று பாடியது போல், தேங்கும் மழை நீரை வாங்கும் வழியின்றித் தவிக்கிறது மாநகரத்தின் மக்கள் கூட்டம்.

இசைப்பாடல் ஒன்றோடு போதுமா, எங்கே அடுத்த பாடல் என்று மாணவி கேட்டார். இதென்னடா வம்பாய்ப் போச்சு என்று உடனே அடுத்த பாடல் ஒன்று புனைந்து அவருக்கு அனுப்பி வைத்தேன்.

மழையோ என்று எட்டிப் பார்த்தேன்
மழை தான் மழை தான் மழையே தான்
பொழியாதென்று எண்ணி இருந்தேன்
மழை தான் மழை தான் மழையே தான்

உறக்கம் கலைந்து காலடி கேட்டு
உள்ளம் சிலிர்க்கக் கதவு திறந்தேன்
அவள் தான் அவள் தான் அவளே தான்
மழையோ என்று எட்டிப் பார்த்தேன்…….

இது தான் பல்லவி….
இப்போது எட்டிப் பார்த்தாலும், குட்டிக் கரணம் அடித்தாலும், வீடு திரும்ப முடியாத படி அடித்துக் கொண்டிருக்கிறது விட்டு விட்டு மழை. பள்ளிக்கூட நாட்களில் ஆசிரியர் அல்லது ஆசிரியர்களில் சிலர் அடியடி என்று அடித்துவிட்டுத் தனது இருக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பார்கள் (என்று நினைத்துக் கொண்டிருக்கையில், திடீர் என்று திரும்பி) அதே மாணவரைப் போய் இன்னும் கடுமையாக அடிப்பதுபோல் அடித்து நிமிர்த்துகிறது மழை.

வேடிக்கை என்னவென்றால், மழைக்காகப் புதிய நாள்காட்டி தயார் செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். மிதமான, நடுத்தரமான, கனமான, அதி கனமான நாட்களாகவே இருக்கும் போலிருக்கிறது வருகிற நாட்கள்.

முதல் மழைக்கும் இரண்டாம் மழைக்கும் இடைப்பட்ட மழை நாள் ஒன்றில், புதிய ஆசிரியன் வாசகர்கள் குழுவில், சகாயராஜா அவர்கள் பகிர்ந்திருந்த காணொளிப் பதிவு, ஆஹா…ஆஹா…. உள்ளபடியே, அக்டோபர் 2020ல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இயக்கத் தோழர் ரமணி, முக நூல் இணைப்போடு அனுப்பிய, இதே காணொளிப் பதிவை அப்போது பார்க்கத் தவறி இருக்கிறேன், இந்தப் பாவங்களுக்கு எல்லாம் என்ன தண்டனை!.

1970களின் பிற்பகுதியில் மிகவும் கொண்டாடப்பட்ட இந்திப் பாடல்களில், மகத்தான இசைப் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களது அசாத்திய குரலினிமையில் உரக்க ஒலித்துக் கொண்டே இருந்த திரைப்பாடல் அது. லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் கோரஸ் முழங்க, சத்யம் சிவம் சுந்தரம் படத்தின் அந்தப் பாடல், அடுத்தடுத்த தலைமுறை இளம் பாடகர்களும் முயற்சி செய்து கொண்டே இருக்கும் பாடல்களில் ஒன்று.

https://www.youtube.com/watch?v=FLzhXNayLJo

ஆர்யானந்தா, கேரளத்துச் சிறுமி. இந்தி அத்தனை சுத்தமாகப் பேச வராதாம், ஆனால், மிகப் பெரிய சபையில், எண்பது வயதான பியாரிலால் முன்னிலையில் (லட்சுமிகாந்த் இப்போது இல்லை), லதாவின் நுட்பமான சங்கதிகள், நுணுக்கமான இழைத்தலும், குழைத்தலும் பொதிந்த பதங்கள் அப்படியே அபார ஆற்றலோடு, தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் மிளிர இந்தச் சிறுமி பாடப்பாட (குமார் சாணு, உதித் நாராயணன், என்னால் முகங்கள் வைத்து அறிய மாட்டாத வேறு பிரபலங்கள்) பாடலை இசையமைத்த பெரியவரின் மின்னல் தெறிக்கும் கண்களால் கொண்டாட்ட வரவேற்பு கிடைக்கும் காட்சி சிலிர்க்க வைத்தது.

ஏற்கெனவே பலமுறை கேட்டு ரசித்த பாடலை அதே பாவங்களோடு (க்யா ஃ பீல் ஹை என்று இடையே இடையே ஒலிக்கும் குரல்கள் கேளுங்கள்) உணர்ச்சிகரமாக ஓர் இளம் பாடகர் இசைக்கும்போது, ரசிகர்கள் உள்ளம் ஆரவாரிக்கிறது. ஓர் இசைப்பொழிவை அதன் தரத்திற்கேற்ற பாராட்டு எதிர்கொள்வதும் மழைப்பொழிவு அன்றி வேறென்ன… கனமழை பார்த்தாயிற்று அல்லவா, மென் தென்றல் பாட்டு ஒன்று காத்திருக்கிறது அடுத்தது. அது வந்து சேர்ந்த கதை சுவாரசியமானது.

புலவர் கீரன் பேசப் பேச அப்படியே மலைத்துப் போய்ப் பார்த்த நாட்கள் மறக்காது. கல்லூரித் தொடக்க காலம் அது. ஒரு கூட்டத்தில் சொன்னார், ‘எனக்கு கந்த புராணம் தலைகீழ்ப் பாடம். கம்பராமாயணம் அத்தனை முறை படித்திருக்கிறேன். இதை கர்வமாகச் சொல்லவில்லை, ஒரு நிகழ்ச்சியில் பள்ளி மாணவி ஒரு செய்யுள் இசைக்கிறாள், அதன் சொற்களைக் கேட்டு, கம்பன் எழுதியது தான், இந்த காண்டத்தில் இந்த இடத்தில் ஒருவேளை அது வந்திருக்கும் என்று உத்தேசமாகத் தான் நினைக்க முடிந்ததே தவிர பளிச்சென்று நினைவுக்கு வரவில்லை. அப்போதெல்லாம் செருக்கு கொஞ்சம் அடங்கும்’.

எனக்கு கர்வம் வருகிற அளவுக்கு இசைப்பாடல்கள் தெரிந்திருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனாலும், தெரிந்த பாடல்கள் யாராவது குறிப்பிடும் போது, ஒரு மிதப்பு தோன்றி மறையும். அந்த மிதப்பு உணர்வு அவ்வப்பொழுது அடி வாங்கும், ஆனால், அது சுவாரசியமான அனுபவமாகவே இருக்கும். அந்த மிதப்பு அப்படியோர் அடி வாங்கியது, இந்த வாரம்!

பண்பலை கேட்க கார்ட்ஸ் இல்லை என்று அலைபேசியில் யூ டியூப் தொட்டெடுத்து, காலைப் பொழுதுக்கான பாடல்கள் என்ற வரிசையில் பாடல்கள் ஒலிக்கக் கேட்டபடி இருந்த என் வாழ்க்கை இணையர் தோழர் ராஜி, சமையலறை வேலையில் இணைந்த என்னிடம், ப்பா…இந்தப் பாட்டு தெரியுமா, உங்களுக்கு…அய்யோ கேளுங்களேன்” என்றார்.

அடடா….எஸ் ஜானகியின் அபாரமான பாடல்களில் ஒன்றான அதைக் கேட்ட நினைவே இல்லை. சங்கர் கணேஷ் இசையில், புலவர் புலமைப்பித்தன் அவர்களது அருமையான இசைப்பாடல் அது. எப்படி நழுவ விட்டேன்!

காலையில் மட்டுமல்ல எப்போது கேட்டாலும், அதிகாலைப் பொழுதில் கேட்போரைக் கொண்டு குடிவைக்கும் குரலில் அப்படி பாடி இருக்கிறார் ஜானகி. பறவைகளின் உறக்க முறிவில் பிறக்கும் நேயமிக்க கீச் கீச், குக்கூ நம்மைப் போர்வையை உதறிப் போட்டுப் பார்க்க தேவைப்படுகின்றன. ஊடே குழலிசை கண்ணைத் திறந்து தேட வைக்கின்றது. அப்போது யாரோ நம்மைப் படுக்கையிலிருந்து எழுப்ப, காதருகே வந்து சிலிர்க்கவைக்கும் இரகசிய குரலில் சொல்கிறார்கள்: காலைப் பொழுது….என்று. என்னவாம் காலைப் பொழுதுக்கு என்று நாம் கேட்கிறோம் என்றால், விடிந்தது என்று பதில் வருகிறது, அதற்கு என்ன, இன்று மட்டும் எப்படி விடிந்ததாம் என்று கேட்போம் என்றால், என் நெஞ்சத்தைப் போலே என்று பளீர் என்று பதில் வருகிறது. பார்ரா ….

‘காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போலே …..’ என்ன ஒரு பல்லவியின் தொடக்க வரி. அப்புறம்? ‘சோலை மலரும் மலர்ந்தது…’.அது எப்படியாம்? என் கண்களைப் போலே’ ! அப்படி என்றால் இது என்ன காலம், ‘அது வசந்த காலமோ, என் இளமைக் கோலமோ’ என்கிறாள் அந்த இளம் பெண்.

புலமைப் பித்தன் காதல் பாடல்களை இயற்கையோடு இயைந்து எழுதுவதில் எத்தனை தேர்ச்சி பெற்றவர் என்பதன் சாட்சியமாக அமைந்த பாடலின் பல்லவியில் இருந்து காலைப் பூக்களில் வந்து அமரும் தேனீ போல் சுறுசுறுப்பாகவும், வண்ணத்துப் பூச்சி போல் நிறங்களின் கலவையாகவும், வண்டாக ரீங்கரிக்கவும் செய்கிறது ஜானகியின் குரல்.

அந்த ‘காலைப் பொழுதை’ அவர் இஷ்டம் போல் விரிவாக்கவும், மடித்து வைத்துக் கொள்ளவும், சட்டென்று சிமிட்டிப் பார்க்கவுமாக பாடல் நெடுக விதவிதமாக இசைப்பதைக் கேட்கமுடியும். அதே போலவே,என் நெஞ்சத்தைப் போலே வரும், போலே அவருக்கு ஒரு ஸ்கிப்பிங் கயிறு போல வாகாக வளைத்துக் குதிக்க வைப்பதைத் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டே இருக்க வைக்கும்.

பாடல் முழுவதும் தாளக்கட்டு அந்தக் காலைப்பொழுதைக் களைகட்ட வைக்கிறது. தபேலா மட்டுமல்ல, சரணங்கள் இடையே மிருதங்க இசை கூட ஒலிப்பது போல் தெரிந்தது. வயலின்களும், புல்லாங்குழலும், இன்ன பிற இசைக்கருவிகளும் எஸ் ஜானகியின் குரலில் மயங்கிக் குரலோடு இயங்கி வழங்கி வரும் இசை, கேட்பவர் கால்களும் தம்மையறியாமல் தாளத்தில் இணையவைக்கும்.

‘இளைய தென்றல் மென்காற்று எனக்குச் சொல்லும் நல்வாழ்த்து’ என்ற முதல் சரணத்தின் அடுத்த அடி, ‘அருவி கூட தாளக்கோட்டில் அசைந்து செல்லாதோ’ என்று இழைக்கிறது. அத்தனை துள்ளோட்டமாக இந்த முதல் வரிகளை மெட்டமைக்கும் சங்கர் கணேஷ், அடுத்து, ‘முகத்தில் சிந்தூரம், மனசில் சந்தோஷம், சகல சௌபாக்கியம் நிலைக்கும் எந்நாளும் ‘ என்று இரட்டை இரட்டை பதங்களாக நான்கு அடிகளில் இளம்பெண்ணின் குதூகலமான உள்மனத்து உரையாடலை மேலும் மென்குரல்களில் பாடவைக்கிறார் ஜானகியை.

சரணத்திலிருந்து பல்லவிக்கு மீளும் இடத்தில் ஜானகியின் ஊஞ்சலாட்டம் தொடர்கிறது. அதில் சோலையின் சோவில் ஒரு புது சுகம் வைக்கிறார், அந்த மலரும் மலர்ந்தது என்பதில் சங்கதி சேர்த்து ஒய்யாரமாக மேலும் மலரவைக்கிறார். வசந்த காலமோ, என் இளமைக் கோலமோ என்ற வரிகளை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நகாசு வேலையோடு மின்ன வைக்கிறார்.

இரண்டாம் சரணத்தில், ‘மதுரை அன்னை மீனாட்சி மனது வைக்கும் நாளாச்சு அமிர்தயோகம் நாளை என்று எழுதி வச்சாச்சு’ என்ற வரிகளில் அப்படியோர் ஆர்ப்பரிக்கும் மனத்தை எடுத்து வைக்கிறார் ஜானகி. இதற்கு அடுத்த கட்டம் முகமும் அகமும் மேற்கொள்ள வேண்டிய அலங்காரத்தை, ‘விழியில் மையோடு வளையல் கையோடு ஒருவன் நெஞ்சோடு உறவு கொண்டாடு’ என்று படைத்திருக்கிறார் புலமைப்பித்தன். மூன்றாம் சரணம் உணர்வுகளின் அடுத்த கட்ட பொங்குதல். நினைப்பது நடப்பதும் அது இன்பமாக நிலைப்பதும்!

பாடலின் சொற்களுக்கு ஜானகி வழங்கும் உயிரோட்டமும் உணர்வூட்டமும் உணர்ச்சியாற்றலும் அபாரம். காலைப் பொழுதில் உற்சாகம் ததும்பும் உளவியலை வீச்சாகக் கொண்டு போகிறது அவரது குரலும், உடன் ஒட்டிய நிழலாகவே தொடரும் இசையும். நிறைவாகப் பல்லவியை வந்தடையும் போது, அதே ரகசியக் குரலில், ‘காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போலே’ என ஒயிலாக வடிப்பது அத்தனை அம்சமாக இருக்கும்.

படத்தில் இடம்பெறும் காட்சியை விடவும், ஆடியோ மட்டும் கேட்கும் யூ டியூப் பதிவே சிறப்பாக ஒலிக்கிறது, எனவே அந்த இணைப்பை இங்கே தந்திருக்கிறேன்.

ராஜராஜேஸ்வரி படத்தில் சுஜாதா இந்தப் பாடலுக்கு வடிக்கும் பாவங்கள், ஒரு சிறப்பான திறன் படைத்திருந்தும் முழுமையாகத் திரையில் அதை வெளிப்படுத்த வாய்ப்பு வாய்க்காத திரைக் கலைஞரில் ஒருவர் அவர் என்று மீண்டும் ஒரு முறை மனத்தில் தோன்றியது.

https://www.youtube.com/watch?v=tlOueWXb1KA

பாடல் காட்சியைப் பார்க்க விரும்புவோருக்கு இந்தக் காணொளிப் பதிவு பயன்படும்.

காலைப் பொழுது விடிந்தது எப்படி இருந்தாலும், இந்த நவம்பர் 19 அன்று ஒன்பது மணிக்குப் பிறகு காதில் விழுந்த செய்தி அன்றைய பொழுதை மேலும் இன்பமயமாக்கியது! ‘நினைத்த தெல்லாம் நன்றாகும், நிலைத்த இன்பம் உண்டாகும், மனசு போல வாழ்க்கை என்று உலகம் சொல்லாதோ’ என்று மூன்றாம் சரணத்தில் சொற்களை புலவர் அடுக்கி இருந்தது எத்தனை பொருத்தமானது!

எல்லா இடர்ப்பாடுகளையும், தாக்குதல்களையும், அவதூறுகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளையும், கண்ணீர்ப் புகை வீச்சு, தடியடி அராஜக நடவடிக்கைகள் எல்லாம் எதிர்கொண்டு இந்திய விவசாயிகள் தங்கள் அமைதியான, உறுதியான, விடாப்பிடியான போராட்டத்தின் வாயிலாக ஏற்படுத்திய தாக்கம், மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து என்று பிரதமரை அறிவிக்க வைத்தது.

‘இனிய சங்கீதம், இதயப் பண்பாடு, தினமும் நன்னாளே, எதிரில் கண்டேனே…..காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போ….லே…..’ என்று மாற்றத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை மலர ஒவ்வொரு நாளும் அந்தப் போராளிகள் பாடிக்கொண்டிருக்கின்றனர் என்றே தெரிந்தது. இந்த வார இசை வாழ்க்கை, அவர்கள் வெற்றிக்குப் படைக்கப்படுகிறது.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்