சிறுகதைச் சுருக்கம் 92: பா. ராமச்சந்திரனின் தளிர் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
இவர் சில கதைகளை எழுதுகிறார். சில கதைகளை வரைகிறார். எழுத்துக்களுக்கு இடையே சித்திரங்கள் தோன்றி சித்திரங்களுக்கிடையே எழுத்து அழிகிறதாக மாறி மாறி விரிவடைந்து கொண்டே போகிறது.
தளிர்
பா. ராமச்சந்திரன்
விடியற்காலைப் பொழுதுகளில் குகை ரோட்டில் பயணிப்பது வித்தியாசமான அனுபவம். வாகனத்தினுள் ஒழுங்கற்றுத் திணிக்கப்பட்டிருந்த சாமான்களில் சில இதோ இப்போ உருண்டு விடுகிறேன் பார் என்பது போல் பயமுறுத்திக் கொண்டிருந்தன. அவற்றை விழுந்து விடாமல் பாதுகாத்தபடியிருந்தார்கள் அப்பாவும் ரேவதியும்.
குடியிருப்பு வீட்டில் குடியேற வருவது இது இரண்டாம் முறை. கல்லூரிப் படிப்பில் நான் நுழைந்திருந்த ஆண்டில் அது நடந்தது. நட்ட நடு ராத்திரியில் எங்கள் குடும்பம் இதே குகை ரோட்டில் பயணித்த போது அம்மாவும் அக்காவும் அவரவர்களின் சந்தேகங்களைக் கேட்டனர்.
“புது வீட்லே ஃபேன் இருக்குமாங்க?”
“படிக்க தனியறை இருக்குமாப்பா?”
எனக்கிருந்த சந்தேகமெல்லாம் டெஸ்ட் மாட்ச் பார்க்க பக்கத்து வீட்ல டிவி இருக்குமா என்பது மட்டுமே.
புது வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மா உடனடியாய் ஃபேனைச் சுழல விட்டதும், மூன்று அறைகள் கொண்ட குடியிருப்பு வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்த அக்கா அதிசயித்து நின்றதும், குரோட்டன்ஸ்களும் பூந்தோட்டங்களும் மரங்களுமாயிருந்த கீழ்த்தளத்து வீட்டை பால்கனியிலிருந்து பார்த்துக் குடும்பம் முழுவதும் பிரமித்து நின்றதும் என்றும் மனதில் வரும் நினைவுகள்.
நாங்கள் இருந்தது இரண்டாம் மாடியில். அங்கிருந்து எந்த மரத்தை வளர்க்க முடியும்! பின்பக்கம் படிக்குப் பக்கத்திலே இருக்கும் கொஞ்சூண்டு மண்ணுலே மல்லி ரோஜா செம்பருத்தி பப்பாளியைத்தான் வைக்க முடியும். அக்காவக்கு இந்த அளவுக்காவது இடம் கிடைச்சுதேங்கிற சந்தோஷம்.
ரங்கராஜன் சாரின் கீழ் வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளே எல்லா மரங்களும் இருந்தன. ஆனாலும் அதிகமாக இருந்தவை என்னவோ முருங்கை மரங்கள்தான். வீட்டுக்குப் பின்புறமும் வேலிக்கட்டி அங்கேயும் வாழை முருங்கைனு எக்கச்சக்கமான மரங்கள். ரங்கராஜன் சார் கையிலே ஹோஸ் பைப்பைப் பிடிச்சுட்டார்னா காலைல மணி அஞ்சுனு கரெக்டா சொல்லிடலாம். தண்ணி ஊத்தின கையோட வாங்கிட்டு வந்த உரத்தை செடிகளுக்குப் போடுவார். அவரைத் தவிர வேற யாரும் அவங்க வீட்டுக் கார்டனுக்கு தண்ணி ஊத்திப் பாத்ததில்ல நாங்க.
அவரு வீட்ல பூக்குற ரோஜாவும், மல்லியும் பிளாக்ல எல்லா வீட்டுக்கும் போகும். அக்காவுக்கு அந்த மாதிரி ரோஜா வளர்க்கணும்னு ஆசை. உடனே ரங்கராஜன் சார் வேரோட பிடுங்கிக் கொடுத்ததோட இல்லாம இரண்டு மூணு முறை மேல வந்து செடிக்கு உரமெல்லாம் போட்டுட்டுப் போனார்.
“செடி வைக்கிறது பெரிசில்லைம்மா உஷா. அதை நாம் குழந்தைகளாட்டம் பார்த்துக்கணும், அப்பப்ப அதுங்களோட தேவையைப் பூர்த்தி பண்ணணும். அப்பத்தான் அதுங்களும் நம்மை கவனிக்கறதுக்கு ஆளு இருக்குனு நம்பிக்கையாய் வளருங்க. நா வரப்ப ஒண்ணுகூட கிடையாது. ஒவ்வொண்ணா வைச்சு இன்னிக்கு வரைக்கும் காப்பாதிட்டேன். எனக்குப் பின்னாடி அந்த வீட்டுக்கு வரவன் கையிலேதான் அதுங்களோட ஆயுசு.”
ரங்கராஜன் சார் சொன்னது சத்தியமான வார்த்தைகள். அன்னிக்கு அவர் ஏன் அப்படிப் பேசினார் என்பது அடுத்த ஆறாவது மாதத்தில் புரிந்தது. ஒருநாள் விடியற்காலையில் ரங்கராஜன் சார் எங்கள் விட்டிற்கு வந்தார். எங்கள் வீட்டிற்கு வருவதற்கு முன் பிளாக்கில் உள்ள சில வீடுகளுக்கு போயிருந்தார். எல்லா வீடுகளிலும் அவர் சொன்னது ஒரே விசயத்தை “வர முப்பதாம் தேதியோட பணிக்காலம் முடியுது. ஒரு மாசத்துக்கு முன்னாடியே காலி பண்ணாத்தான் செட்டில்மெண்ட் சீக்கிரமா கிடைக்குமாமே.. அதான் காலைல கிளம்பறேன். நா போன பிறகு இந்த வீட்டுக்கு இன்னொருத்தரா வர இரண்டு மூணு மாசமானாலும் ஆகலாம். அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் பத்திரமாக தண்ணி ஊத்தி பாத்துக்குங்க. பக்கத்து வீட்லே ஹோஸ் பைப், உரமெல்லாம் வைச்சுட்டுத்தான் போறேன். டிசம்பரும், கனகாம்பரமும் போனவாரம் வைச்சது. சரியா கவனிக்கலைன்னா பட்டுப் போயிடும். பத்திரமா பாத்துக்குங்க.”
அவர் வீட்டைக் காலிபண்ணிட்டுப் போன மறுநாளிலிருந்து பிளாக்கிலிருந்த பதினொரு குடும்பங்களும் புதிதாய் வைக்கப்பட்ட செடிகளுக்கும் குரோட்டன்ஸ்களுக்கும் தண்ணீரைப் போட்டி போட்டுக் கொண்டு ஊற்றினார்கள்.
ரங்கராஜன் சார் வீட்டைக் காலி செய்த பதினைந்தாம் நாள் ஏகப்பட்ட முருங்கைப் பிஞ்சுகள் காய்ந்துக் குலுங்கின. பிஞ்சுகள் முளைத்த அடுத்த இருபத்து நாலு மணி நேரத்தில் அந்த வீட்டில் குடிபுக பெருங் குடும்பமொன்று லாரியில் வந்திறங்கியது.
புதுக்குடித்தனக்காரர் வந்த சில தினங்களுக்குள்ளாகவே பிஞ்சுகளாய் இருந்த காய்கள் இரண்டடி காய்களாக மரமெங்கும் பரவிக் கிடந்தன. அந்தக் காய்களை முதல் மாடியில் இருந்தபடியே பறிக்கலாம், முதல் மாடிக்கார குடித்தனவாசி இரண்டு காய்களைப் பறிக்கவும் செய்தார்.
முதல்மாடிக்காரர் முருங்கைக்காய் பறித்த செய்தியைக் கேள்விப்பட்டதும் புதுக்குடித்தனக்காரர் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்க் குதித்தார்.
“எங்க வீட்டு மரத்துலேயிருந்து எவண்டா காயைப் பறிச்சது?”
“என்னய்யா பொம்பளை கிட்ட பேசறே? நான்தான் பறிச்சேன். இப்ப என்ன சொல்றே. பதினோரு வீட்டுக்கும் மரம் சொந்தம்னுதான் ரங்கராஜன் சார் சொல்லிட்டுப் போனாரு.”
முதல் மாடிக்காரருடன் வேறு சிலரும் சேர்ந்து கொண்டனர். “என்னமோ நீங்க கஷ்டப்பட்டு வளர்த்த மாதிரில்ல பேசுறீங்க. ரங்கராஜன் சார் இல்லன்னா என்னைக்கோ போயிருக்கும்”. ஆளாளுக்குக் கத்தியதில் புதுக் குடித்தனக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது. உள்ளே ஓடினான். திரும்பி வந்தான் கையில் வெட்டரிவாளோடு.
வந்தவன் எதுவும் பேசவில்லை. வெட்டரிவாளை வெறிக்கொண்டு வீசினான். கிளைகளை வெட்டி பூக்களை காயப்படுத்தி அந்த பிரம்மாண்டத்தை அரை மணி நேரத்துக்குள்ளாக வெட்டிச் சாய்த்தான்.
ரங்கராஜன் சார் மரத்துக்காக உழைத்ததைப் பற்றிக் கொஞ்ச நாளைக்குப் பேசினார்கள். அப்புறம் அதை எல்லோருமாய் மறந்தே போனார்கள். எனக்கு மட்டும் அதை மறக்க முடியவில்லை. அந்த மரம் மீண்டும் அவனிடத்தில் வளர்ந்துடக்கூடாது என்கிற எண்ணம் எனக்குள் தீவிரமாய் வளர்ந்தது.
காலையில் எழுந்ததும் என் முதல் வேலை பால்கனியில் நின்ற அந்தக் கொலையுண்ட மரத்தைப் பற்றிய சேதியை விசாரிப்பதாக இருந்தது. எனக்கு முன்னாலேயே அவன் எழுந்திருந்து அந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பான். எங்கேயோ போய்ச் சாணத்தை அள்ளி வந்து மரத்திற்கு போடுவான். ஆடு மாடுகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்ற சுற்றிலும் முள்செடியை பரப்புவான்,
நாங்கள் அங்கிருந்த வரைக்கும் அவனோட எல்லா முயற்சிகளும் தோற்றுப் போயின. எந்தவிதமான அசைவையும் காட்டாமல் மரம் உறுதியாய் இருந்ததில் மனது சந்தோஷப்பட்டது.
அப்பாவின் பணி ஓய்வு காரணமாக அடுத்த இரண்டு வருடத்தில் வீட்டைக் காலி செய்தோம். மீண்டும் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு குடியிருப்பு வீட்டில் குடிபுக இப்போது என் குடும்பத்தோடு வந்து கொண்டிருக்கிறோம். எட்டுவருட ஃபேன் வாழ்க்கையை முடித்துக் கொண்டு அம்மா போய் விட்டார்கள். குடியிருப்பு வீட்டில் தனியறை தன்னறையாக இருந்த அக்காவுக்கும் திருமணம் முடிந்திருந்தது,
லாரி நாங்கள் குடிபுக இருக்கும் வீட்டருகில் நின்றதும், அப்பாவிடம் புதுவீட்டின் சாவியைக் கொடுத்து விட்டு இறங்கி ஓடினேன். சிகரெட் பிடிக்கத்தான் போகிறார்னு ரேவதி நினைத்திருப்பாள். இரண்டு தெருவைக் கடந்த ஒரு வலப்பக்க வளைவில் திரும்பி மீண்டும் ஒரு இடப்பக்க வளைவில் திரும்பி முன் நாங்கள் குடியிருந்த பிளாக் அருகில் வந்தேன்.
நடுத்தர வயதுக்காரரொருவர் கைலி கட்டிக் கொண்டு செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
“யாரு வேணும் சார் உங்களுக்கு?”
“இங்க செல்வராஜ் இருந்தாரே அவுரு இல்லீங்களா?”
“அவரு காலி பண்ணிட்டுப் போய் ஆறு மாசமாச்சு. சொந்த வீடு கட்டிட்டு போயிட்டார். எல்லாம் அவரு வைச்சுட்டுப் போன மரங்கள்.”
ரங்கராஜன் சார் வைத்து விட்டுப் போயிருந்த தோட்டத்தில் மரங்கள் கூடியிருந்தன. விதவிதமான குரோட்டன்ஸ் மல்லி கனகாம்பரம் செடிகள், வாழையில் குலைகுலையாய்க் காய்கள் தலை காட்டத் துவங்கியிருந்தன. எல்லாவற்றுக்கும் மத்தியில் அந்த பிரும்மாண்டம் பச்சைப் பசேலென்று தன் உடலெங்கும் காய்களத் தொங்கவிட்டுக் கொண்டு கம்பீரமாய் நின்றிருந்தது.
மீண்டு ஹோஸ் பைப்பில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றத் தொடங்கிய கைலிக்காரர் கேட்டார் “உங்க நண்பரா சார், ரொம்ப நாளைக்கப்புறம் பார்க்க வரீங்க போலிருக்கு…”
ஒரு கணம்கூட யோசிக்காமல் சொன்னேன் “ஆமாங்க”
பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.