பொய் மனிதனின் கதை 7 – ஜா. மாதவராஜ்
”உண்மையான நேர்மையான மனிதனை விட
ஒரு பொய்யன் நம்பகத்தன்மை மிக்கவனாக தோன்றுவது
இன்றைய காலத்தின் பெரும் துரதிர்ஷ்டம்”
– முனியா கான்
“என் வாழ்க்கைல …. ஒவ்வொரு நாளும்….. ஒவ்வொரு நிமிடமும்….. ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..” என்று நடிகர் அஜித் ஒரு படத்தில் பஞ்ச் வசனம் பேசுவார். திருமணமானதும் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய், அங்கங்கு சில வருடங்கள் அலைந்து திரிந்தது வரை வேண்டுமானால் மோடியும் இது போன்று “நானா செதுக்குனதுடா” என மார்தட்டிக் கொள்ளலாம். ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்த பிறகு இந்துத்துவா வெறி அவரை செதுக்கியது. அதன் தொடர்ச்சியாக பிஜேபியில் இணைந்ததும் அரசியல் அதிகாரம் அவரை செதுக்கியது. குஜராத் கலவரங்களுக்குப் பிறகு இறுதியாக இந்திய ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் உலகம் அவரை செதுக்க ஆரம்பித்தது.
பத்து வருடங்களில் மோடியை ஒரு ’பிராண்ட்’ (வியாபார அடையாளம்) ஆக முன்னிறுத்தி சந்தையில் இறக்குவதற்கு தயாராக்கி இருந்தார்கள். தேர்தல், ஜனநாயகம், வாக்குரிமை, மக்களின் பிரச்சினைகள் என்று பொழுதெல்லாம் மிகுந்த அக்கறை கொண்டு அலசி ஆராயப்படும் அரசியலின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு, இந்தியக் குடிமக்கள் அனைவரையும் தங்களின் ‘சந்தை’யாக கார்ப்பரேட் உலகம் உள்ளங்கையில் எடுத்து வைத்துக்கொண்டு உற்றுப்பார்த்தது.
தங்களின் புதிய பிராண்டை சந்தையில் அறிமுகப்படுத்தி, அதனை நோக்கி வாடிக்கையாளர்களை இழுக்கும் அனைத்து விளம்பர உத்திகளும், வியாபார உத்திகளும் திட்டமிட்டு வகுக்கப்பட்டன. அதற்கெனவே மும்பையைச் சேர்ந்த ஜெயினின் தலைமையில் ஒரு குழுவும், பிரசாந்த் கிஷோர் தலைமையில் ஒரு குழுவும், ஹிரேன் ஜோஷி தலைமையில் ஒரு குழுவும், அரவிந்த் குப்தா தலைமையில் ஒரு குழுவுமாக மொத்தம் நான்கு குழுக்கள் இணைந்து மோடியின் ஒவ்வொரு அசைவையும், வார்த்தையையும் அளந்து அளந்து செதுக்கி செதுக்கி வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். மோடி என்னும் பிராண்டின் முகம் மட்டுமே தெரியும். தெரிந்தது.
“விரும்பப்படுகிறாரோ , வெறுக்கப்படுகிறாரோ அது முக்கியமில்லை. ஒருவர் எவ்வாறு உணரப்படுகிறார் என்பதே முக்கியம். அதுதான் ஒருவரின் பிராண்ட்!” என்று அமெரிக்க மார்க்கெட்டிங் குருவும், பிராண்ட் குறித்து பல புத்தகங்கள் எழுதியவருமான டேவிட் ஆக்கர் சொல்கிறார். தொடர்ச்சியான, உறுதியான, செயல்பாடுகளின் மூலம் இந்த வகை பிராண்டு தன்னை நீட்டித்துக் கொள்ளும், இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் தன்னை அப்படியே கலைத்துக் கொள்ளும் என ‘பிராண்ட்’ குறித்த தன்மையை விவரிக்கிறார். 2003லிருந்து ‘துடிப்பு மிக்க’ குஜராத் (Vibrant Gujarat ) மூலம் மோடி அத்தகைய ‘பிராண்ட்’ ஆக உருவாக்கப்பட்டிருந்தார்.
பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, தங்களின் பிராண்ட் நரேந்திர மோடிக்கு மூன்று முக்கிய சவால்கள் இருப்பதாக கார்ப்பரேட் உலகம் ஆராய்ந்து வைத்திருந்தது. முதலாவதாக மூன்று முறை குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி ஒரு பிரதேசத்தின் பிராண்ட் ( Regional Brand) ஆக மட்டுமே தென்பட்டார். அவர் அகில இந்திய அளவில் ‘பிராண்ட்’ ( National Brand) ஆக இல்லை. இரண்டாவது, 2002 குஜராத் கலவரங்களினால் ஏற்பட்ட கறைகள் மோடி மீது தேசீய அளவில் படிந்திருந்தது. மூன்றாவது, பெரும்பாலும் இந்தியிலேயே பேசும் அவர் நகர்ப்புறத்தைச் சேர்ந்த, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களோடு நெருக்கமாக வேண்டும். 63 வயதான மோடி, அடுத்து வரும் தேர்தலில் 15 கோடி புதிய வாக்காளர்களான இளைஞர்களோடு தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.
தேசிய அளவில் மேலும் இருந்தது ஒரு பிராண்ட்தான். காங்கிரஸ் மட்டுமே. அதுவும் தனது பிராண்ட் தன்மையை இழந்து விட்டிருந்தது. அதற்கு ஒரு மாற்றை தேடிக் கொண்டு இருந்த நேரம் அது. மோடியை பிராண்ட் ஆக்குவதற்கு காங்கிரஸே இடம் கொடுத்திருந்தது.
ஒரு பொதுவான தேவையை உணர்த்தி அதற்குரிய விளைவுகளையும் ஒரு பிராண்டினால் உருவாக்க முடிந்தால், அதன் எல்லைகளை விரிவாக்க முடியும். என்கிற ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸின்’ பேராசிரியர் ஸ்ரீதர் சாமு, ஒரு பிரதேசத்தில் மட்டுமே இருந்த சரவண பவனும் ஹால்டராமும் எப்படி தேசீய பிராண்டாக தங்களை உயர்த்திக் கொண்டன என்பதை சுட்டிக் காட்டுகிறார்.
குறுகிய காலத்தில் தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக 5000க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில், 470க்கும் மேற்பட்ட அரசியல் கூட்டங்களில் பறந்து பறந்து மோடி கலந்து கொண்டார். பறவையின் பார்வையில் மேலிருந்து பார்த்தால் இந்தியாவை அப்படியே இறுக்கப் பிணைத்த ஒரு சிலந்தி வலையைப் போல அவரது பயணத்தின் பாதைகள் இருந்திருக்கும்.
அடுத்ததாக மோடி மீது படிந்திருந்த குஜராத் கலவரக் கறைகளை என்ன செய்வது? ஒரு பிராண்டைப் பொறுத்த வரையில் அதை மறுக்கவோ, அது குறித்து மேலும் பேசாமல் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பேச ஆரம்பித்தால், அது குறித்த விவாதங்களும் நடந்து கொண்டே இருக்கும். மக்களின் நினைவுகளில் ஆழமாகப் பதிந்துவிடும். சர்ச்சைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது ஒரு ‘பிராண்டின்’ சூத்திரம்.
காட்பரிஸ் சாக்லெட்டில் புழு இருந்தது. கோக், பெப்சியில் நச்சுத்தன்மை இருந்தது. அந்த நேரத்தில் பதற்றத்தோடும் கடும் வேகத்தோடும் பேசப்பட்டன. கோக்கும் பெப்சியும் விற்றுக்கொண்டே இருந்தன. மெல்ல மெல்ல எதிர்ப்புகள் அடங்கி, முணுமுணுப்பாகி பின்னர் எந்தப் பேச்சும் இல்லாமலேயே போய்விட்டது. விளையாட்டு மற்றும் சினிமாவில் பிரபலமானவர்களின் கைகளில் பெப்சியும், கோக்கும் இருந்தன.
2003க்குப் பிறகு குஜராத் கலவரங்கள் குறித்து மோடி பேசுவதை குறைத்துக் கொண்டே வந்தார். அவரது ஒரே மந்திரமாக ‘வளர்ச்சி’ மட்டுமே இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் அபிமானத்துக்குரியவர்கள் மோடியை சந்தித்த அல்லது மோடி அவர்களைப் போய் சந்தித்த நிகழ்வுகள் அரங்கேறின. அவர்கள் நெருங்கி நின்று சிரித்த வண்னம் நின்றிருந்த காட்சியளித்தனர். இரக்கமற்ற, கொடூரமான, வெறுப்பைக் கக்கிய உருவத்திலிருந்து உறுதியான, வேகமான, எதிர்காலம் குறித்து சிந்திக்கக் கூடிய கனவானின் உருவத்திற்கு மோடியின் பிம்பம் மாறியது. ‘புதிய மனிதா, பூமிக்கு வா’ என கார்ப்பரேட்கள் கொண்டாடினார்கள்.
பிறகென்ன? கண்கள் மற்றும் காதுகள் வழியாக 2013 இறுதியில் இந்திய மக்கள் அனைவருக்குள்ளும் “ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்ற வார்த்தைகள் சொருகப்பட்டன. அதாவது “இந்த தடவை மோடி அரசு!”
மூன்றாவது நகர்ப்புறத்து மக்களோடும் இளஞர்களோடும் தொடர்பு கொள்வதற்கு மோடி என்னும் பிராண்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம் சோஷியல் மீடியாக்கள். பிஜேபி தலைவர்கள் ஃபியூஸ் கோயல் மற்றும் அஜய் சிங் தலைமையில் ஒரு பெரும் படையே 24 மணி நேரமும் இயங்கியது. பிஜேபியின் தகவல் & தொடர்பு துறையினருக்கு இந்தியாவில் இருக்கும் ஃபேஸ்புக் ஊழியர்கள் பயிற்சி கொடுத்தார்கள்.
இங்கு செய்திகளும், தகவல்களுமே அறிவாகவும், ஞானமாகவும் சுருக்கப்பட்டு இருக்கிறது. தகவல்களை வடிகட்டி, கடந்த காலத்தின் பின்னணியோடு பகுத்துப் பார்ப்பதுதான் அறிவு என்பதை அறியாமல் இருக்கிறார்கள். இரண்டு ஃபார்வேர்டு மெஸேஜ்களை படித்து விட்டு எல்லாம் தெரிந்தவர்களாய் தங்களை கருதிக் கொள்கிறார்கள். நுனிப்புல் மேய்ந்துவிட்டு தொடை தட்டி பேசுவதில் கெட்டிக்காரர்களாகி கிடக்கிறார்கள். பெரும்பாலான இந்திய மத்தியதர வர்க்கத்தையும் படித்த இளஞர்களையும் பீடித்த சாபம் இது. ஒரு பிராண்டை அறிமுகப்படுத்துவதற்கும், வார்ப்பதற்கும் உற்ற சூழல் இது.
குஜராத்தில் எல்லா வாய்ப்புகளும், வசதிகளும் உருவாக்கப்பட்டிருப்பதாக, குஜராத்திற்கு வெளியே தொடர்ந்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் செய்திகள் ஃபார்வேர்டு ஆகிக் கொண்டே இருந்தன. டாட்டா, அம்பானி போன்ற கார்ப்பரேட்கள் வெளிப்படையாக மோடியை பாராட்டி வந்தார்கள். குஜராத்தில் தொழில்துறை, விவசாயத் துறை, தகவல் தொழில்நுட்ப துறை, உள் கட்டமைப்பு எல்லாம் அசுர வளர்ச்சி கண்டிருப்பதாக கற்பனைகளை அலை அலையாய் எங்கும் மிதக்க விட்டார்கள். ஆனாலும் மிக முக்கியமாக புதிய வாக்காளர்களான 15 கோடி இளஞர்களை மோடி என்னும் பிராண்ட் தன் பக்கம் கவர வேண்டி இருந்தது.
எல்லாம் தெரிந்த, வலிமையான ஒரு தந்தையின் பிம்பத்தை மோடிக்கு கட்டமைப்பதில் அவர்கள் ஈடுபட்டார்கள். மோடியின் சிறு வயதுக் கதைகளை காமிக்ஸ் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும், வாய்மொழி வழியாகவும் பரப்ப ஆரம்பித்தார்கள். முதலைகள் நிறைந்த குளத்தில் நீந்திய சிறுவனாக ஒரு கதை. பின்னர் இளைஞனானதும் பொது வாழ்க்கைக்காக குடும்பத்தை விட்டு வெளியேறியதாக ஒரு கதை. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் துணிவும், அர்ப்பணிப்பும் மிக்க ஒரு பிம்பம் அரூபமாய் மூளையில் படரும்.
‘நரேந்திர மோடி’யை ‘நமோ’ என சமஸ்கிருதச் சொல்லாடலோடு அழைக்க ஆரம்பித்தார்கள். மிக எளிதாக பெரும்பாலான மனிதர்களுக்குள் ஊடுருவும் வார்த்தையானது.‘ப்ரோ’ என அழைத்துப் பழகும் இன்றைய நவயுக மனிதர்களுக்கும் ‘நமோ’ நெருக்கமானது. கடும் கிண்டல்களும், கேலிகளும் ஒரு புறம் எழுந்தாலும், ஊதிப் பெருக்கப்பட்ட அந்தக் கதைகளின் முன்னே அவையெல்லாம் அலட்சியப்படுத்தக் கூடிய அளவில் சொற்பமாகவே இருந்தன.
இளைஞனான மோடி துடைப்பத்தால் பெருக்குவதைப் போன்று வெளியிடப்பட்ட போட்டோவை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வைரலாக எங்கும் பரப்பப்பட்டது. எளிமையான, பணிவான, உண்மையான, உழைக்கிற தோற்றம் யாரையும் சட்டென்று கவரும். அந்த போட்டோ பொய்யானது என்றும், போட்டோஷாப்பில் உருவமாற்றம் செய்யப்பட்டது எனவும் பின்னாளில் தெரிய வந்தது. அதற்குள் மக்களின் மனதில் அந்த பிம்பம் அழிக்க முடியாதபடிக்கு பதிய வைக்கப்பட்டிருந்தது.
ஃபேஸ்புக், ட்வீட்டரில் நரேந்திர மோடி 2009லிருந்தே இருந்தார். அதில் தொடர்ந்து அவர் பதிவு செய்தும் வந்திருந்தார். அவை யாவுமே அவரது நீண்ட கால, தீர்க்கமான இலக்குகளை நோக்கியதாக இருந்தன.
மிக முக்கியமாக, மோடியின் பேச்சாற்றலை குறிப்பிட வேண்டும். சிந்திக்கத் தூண்டாமல், உணர்ச்சி வசப்பட வைக்கும் தன்மை நிறைந்தது அது. வரலாற்றில் ஹிட்லரும் இது போன்று மக்களை ஆர்ப்பரிக்க வைக்கிற, வெறியேற்றுகிற பேச்சாளனாக இருந்தான். ’ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டுவிடும்’ என்பதை உலகுக்கு காட்டியவன். மோடி அப்படி மக்களை நம்ப வைக்க க் கூடியவராய் இருந்தார்.
2013 பிப்ரவரி 6ம் தேதி டெல்லி ‘ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில்’ மோடி பேசியது அன்றைக்கு இந்திய அரசியலில் ஒரு சாதாரண நிகழ்வாக தெரிந்திருக்க வேண்டும். 15கோடி முதன்முறை வாக்காளர்களை குறிவைத்து அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தங்கள் எதிர்காலம் குறித்து கனவுகளும், கவலைகளும் நிறைந்த அந்த கல்லூரி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். மோடி என்னும் ’பிராண்ட்’ அன்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
“இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மகாத்மா காந்தியின், வல்லபாய் பட்டேலின் பூமியிலிருந்து நான் வந்திருக்கிறேன்” என்று ஆரம்பித்து அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நன்கு திட்டமிடப்பட்டு முன்வைக்கப்பட்டவை.
“உலக வரைபடத்தில் தனக்கான இடத்தை இந்தியா கண்டு கொள்ள வேண்டுமானால், நல்ல நிர்வாகம் வேண்டும்” என்றார்.
“இது விவேகானந்தரின் 150வது ஆண்டு. இதனை நாம் ‘யுவ வருஷமாக’ நினைவு கூர்வோம்” என்றார்.
“ஒரு முறை வெளிநாட்டு தூதுவர் என்னை பார்க்க வந்தார். இந்தியாவின் சவால்கள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதுதான் சவால் என்றேன். அவர் ஆச்சரியமடைந்தார். உலகில் அதிகம் இளைஞர்களைக் கொண்ட நாடு இப்போது இந்தியாதான் என்று சொன்னேன்” என்றார்.
“இந்திய இளைஞர்கள் இங்கே புதிய வாக்காளர்களாக பார்க்கப்படுகிறார்கள். நம் இளைஞர்களை நான் புதிய சக்தியாக பார்க்கிறேன்.” என்றார்.
திரும்பத் திரும்ப இளைஞர்களை தூக்கி வைத்து கொண்டாடினார் மோடி. அந்த புதிய வாக்காளர்கள் அப்படியே வசியம் செய்யப்பட்டிருந்தார்கள். ஆரவாரித்துக் கிடந்தார்கள். தங்களை இரட்சிக்க வந்த தேவதூதன் மோடிதான் என்று நம்பினார்கள்.
“இந்தியாவை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் மோடியிடம் அதற்கான ஆற்றலும் வேகமும் இருக்கிறது” என்றார் அந்தக் கல்லூரியில் பி.ஏ ஹானர்ஸ் படித்துக்கொண்டு இருந்த 19 வயதான அபிஷேக்.
“குஜராத்திற்கு மோடி நிறைய செய்திருக்கிறார். தேசீய அளவில் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” என்றார் மிடல் குப்தா என்னும் மாணவர்.
“நாம் வல்லரசாக வேண்டுமென்றால், நமது பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். அதற்கு சரியான மனிதர் மோடியே!” என்றார் செஜ்வால்.
அன்றைய மோடியின் பேச்சையும், மாணவர்களின் கருத்துக்களையும் இந்தியாவின் ஊடகங்களை அனைத்தும் மாற்றி மாற்றி ஒளிபரப்பின. ஃபேஸ்புக், ட்வீட்டர் எல்லாவற்றிலும் வைரலாயின. அதே நாளில் மோடியின் வருகையை எதிர்த்து அந்த கல்லூரி மாணவர்களில் சிலர் வெளியே நின்று கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். ஊடகங்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. உலகமும் அறிந்திருக்கவில்லை.
எதிர்த்த அந்த மாணவர்களுக்குத் தெரிந்திருந்தது…. ‘திரும்ப திரும்பச் சொன்னாலும் பொய் உண்மையாகி விடாது’ என்பது. அதற்குப் பிறகான மீதிக் கதையும், இன்று வரையிலான தொடர்கதையும் அதுதானே.