ஸ்ரீதர்பாரதியின் கவிதைகள்

ஸ்ரீதர்பாரதியின் கவிதைகள்




சன்மானம்
**************
தவில்காரனின் நடைக்கும்
நாயனக்காரனின் ஏற்ற இறக்கத்திற்கும் ஏற்றபடி

பபூனை சோடியிட்டு
குலுங்கி ஆடுகிறாள்
குஜிலியம்பாறை ஆட்டக்காரி

செத்துப்போன சிலுக்குவார்பட்டி மைனர் மாத்திரம்
இந்நேரம் இருந்திருந்தால்
அள்ளி அணைத்து
குத்தியிருப்பார்
ஐநூத்தி ஒன்னு.

அரட்டல்
***********
சென்ற வருடம்
நாண்டுகொண்ட சின்னம்மா

வயதுக்கு வந்த தன் மகளை
அன்றாடம் அரட்டுவதாக
என்னிடம் குமைகிறாள்
அத்தை

அப்புராணி சின்னம்மா
அப்படி அரட்டுவதாயிருந்தால

கூத்தியாள்பேச்சைக்கேட்டு
கொடுமைப்படுத்திய
குடிகார சித்தப்பனை அல்லவா
அரட்டியிருக்கவேண்டும்?

நிழல்
********
வெயிலில் காய்கிறார்
வீரனார்

வீச்சரிவாள் மீது கவிகிறது
வேம்பின் நிழல்

தேஜஸ்
*********
பௌர்ணமி இரவில்
மினுங்கும் அரசிலைகளுக்கு

புத்தனின் தேஜஸ்

கிளை
********
பழங் கட்டிடத்தில் வேர் பிடித்து நிற்கும்
மரமொன்றின் சிறு கிளைக்கு

பறவையொன்றின்
பாதத்தோற்றம்

– ஸ்ரீதர்பாரதி

Sithrathirzha Poem Sridharbharathi. ஸ்ரீதர்பாரதியின் சித்ரத்திர்ழா கவிதை

சித்ரத்திர்ழா கவிதை – ஸ்ரீதர்பாரதி




சடாமுடி வழுதாச்சக்கரத்துடன் கள்ளர்
திருக்கோலத்தில் மண்டகப்படி கடந்துவரும் மாமாயனுக்கு தல்லாகுளத்தில்
எதிர்சேவை

ஊரெல்லாம்
பந்தலிட்டு உற்சவ வீதியெல்லாம் தோரணங்கட்டி
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட சொக்கனோடு மலையத்துவசன் மகளுக்கு
தெற்காடிவீதியிலே தங்கத்தாலி பூட்டி தடபுடலாய்க் கல்யாணம்

சேறுஞ்
சகதியுமாய் சிறுத்து சீரழிந்து சீவன் ஓய்ந்த சிலப்பதிகார நதியில்
சிவபானப் பிரியர்களின் மதுக்குவளை மகோத்சவம்

நினைத்ததெல்லாம்
நடக்குமென்று நெஞ்சாரப் பொய்யவிழ்த்து அபாண்ட அருள்வாக்குரைக்கும்
கள்ளழகன் வேடமிட்ட கபடதாரியின் கால்சராயில் கசங்குகிறது மகாத்மாவின்
புன்னகை

முல்லைப்பெரியாறும் வைகையும்
முப்போகத்திற்கு வருகிறதோ
இல்லையோ? வட்டாவட்டம்தட்டாமல் வந்துவிடுகிறது மருதை ஜில்லாவுக்கு
சீரும் சிறப்புமாய் சித்ரத்திர்ழா

Sridhar Bharathi's Poems. ஸ்ரீதர் பாரதி கவிதைகள்

ஸ்ரீதர் பாரதி கவிதைகள்




1.காலஞ்சென்ற அம்மா
நிலாச்சோறூட்டினாள்
அதிகாலைக் கனவில்.

2.உள்நுழையும் முன்பே
உற்சாகபோதை
மதுக்கடை விளம்பரப்பதாகையில்
சில்க் ஸ்மிதாவின் கண்கள்

3 புதிய தபால்காரர் ஊருக்கு வந்தார்
பழைய தபால்காரரின்
மரணச் செய்தியோடு

4.புதுச்செருப்பு வாங்குகிறபொழுதெல்லாம்
அனிச்சையாய் தோன்றுகின்றன
அப்பாவின் ஆணிக்கால்கள்.

5. பார்வையற்ற பாடகனை
உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது
உண்டியலின் ஒற்றைக்கண்.

6.சாவு வீட்டிலும்
வாழச் சொல்கின்றன
ஆட்டக்காரியின் ஏற்ற இறக்கங்கள்

7.கலர்கோழிக்குஞ்சு விற்பவரின்
பத்து விரலும்
வானவில்