நூறு ஜில்லாக்களிலும் அழகியவன் – இரா. இரமணன்
இந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் வெளிவந்துள்ள தெலுங்கு திரைப்படம். அவசரல ஸ்ரீனிவாஸ் என்பவர் கதை, திரைக்கதை வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார். அவரே கதாநாயகன் பாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். ராச்சகொண்ட வித்யாசாகர் இயக்கியுள்ளார். ருகானி ஷர்மா , தமிழ் நடிகர் ரோகினி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிஎஸ்என் என்றழைக்கப்படும் கோட்டி சூரியநாராயணா ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிகிறான். பிரி மெச்சூர் பால்டிங் எனப்படும் இளமையிலேயே வழுக்கை விழும் குறைபாடு உடையவன். அதை மறைக்க ‘விக்’ வைத்துக் கொண்டிருக்கிறான். தன்னுடைய தந்தை இதை மட்டும்தான் தனக்கு விட்டுவைத்துவிட்டு இறந்துவிட்டார் என்று வருத்தமும் கோபமும் கலந்த உணர்வு அவனுக்கு. அவனுடைய குறைபாடு தாயார் (ரோகிணி) மற்றும் ஒரு நண்பனுக்கு மட்டும்தான் தெரியும். அவனுடைய நிறுவனத்தில் புதிதாக பணிக்கு வரும் பெண்ணுடன் காதல் மலர்கிறது. தனக்கு வழுக்கை குறைபாடு இருப்பது தெரிந்தால் அவள் தன்னை ஏற்றுக்கொள்வாளோ மாட்டாளோ என்கிற சந்தேகத்தில் அதை மறைத்து விடுகிறான். அவளிடம் சொல்லிவிடலாம் என்று சில நேரங்களில் நினைக்கிறான். ஆனால் சொல்ல தைரியம் வருவதில்லை. ஒருநாள் அவளுக்கு தெரிந்துவிடுகிறது. அவன் பொய் சொன்னான் என்று கூறி அவனை விட்டு விலகி வெறுக்கிறாள். பிறகு அவன் நல்ல அரசாங்க வேலை கிடைக்கும் என்ற நிலையில் கூட பொய் சொல்லவில்லை என்பதை அறிந்த அவள் அவனை ஏற்றுக்கொள்கிறாள்.
தன்னம்பிக்கையோடு எல்லோரையும் எதிர்கொள்ள சொல்கிறாள். அவள் பேச்சால் தைரியம் கொண்ட அவன் உண்மையான தோற்றத்துடன் அவள் வீட்டிற்கு செல்லும்போது அவளுடைய தாயார் அவனை கன்னத்தில் அறைந்து விடுகிறார். அவன் விரக்தியாகி அவர்களை விட்டு விலகுகிறான்.. தந்தை தனக்கு வழுக்கையை மட்டும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்; வீடு இல்லை; வசதி இல்லை என்று தாயாரிடமும் கோபிக்கிறான். எது வந்தாலும் துணிவோடு எதிர்கொள்ள வேண்டும் என்கிற இயல்பைத்தான் அவனுக்கு முன்னோர்கள் விட்டு செல்லவில்லை என்று அவன் தயார் கோபிக்கிறாள். அவன் வழுக்கையை ஒரு குறைபாடாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்கிறாள்.
தன்னை சந்திக்க வரும் இளவயது நண்பனுடன் பேசுவதைக்கூட தவிர்க்கிறான். இந்த வழுக்கைக்காகவா தங்கள் நட்பு குறைந்துவிடும்; அவன் எப்படி இருந்தாலும் நண்பன்தான் என்கிறான் அவன். தாயாரின் ஊக்கமும் நண்பனின் பாசமும் அவனை புது மனிதனாக்குகிறது. நிறுவனத்தில் உற்சாகமாக வேலை செய்து விற்பனையை அதிகரிக்கிறான். அவனுக்கு நடத்தப்படும் பாராட்டுக் கூட்டத்தில் தன்னுடைய உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்துகிறான். தன் தாயாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறான். வெளி மாநிலத்திற்கு பணி தேடி பிரிந்து செல்லும் காதலியையும் சந்தித்து தன் புதிய மன நிலையை சொல்லி இருவரும் இணைகிறார்கள்.
குள்ளம், குண்டு, கருப்பு போன்ற தோற்றக் குறைபாடு உடையவர்கள் பெரும்பாலான திரைப்படங்களில் கேலி செய்யப்படுவார்கள். ‘பேரழகன்’ போன்ற திரைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளானது. இதில் ஒரு இடத்தில்கூட அப்படிப்பட்ட வசனங்களோ நிகழ்வுகளோ இல்லை. இதே குறைபாட்டை மையமாகக் கொண்ட இந்தி திரைப்படம் ‘பாலா’வில் இன்னும் சிறப்பாகக் கையாளப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். பார்க்க இந்தியா டைம்ஸ் விமர்சனம். Nootokka Zillala Andagaadu Movie Review: Fun entertainer with a predictable story (indiatimes.com).
முதல் பாதி நகைச்சுவை என்கிற பெயரில் சற்று தொய்வாக உள்ளது. நகைச்சுவை என்பது எவ்வளவு கடினம் என்பது தெரிகிறது. ஜிஎஸ்என்னின் தந்தை படம் கிரேசி மோகனைப் போல இருக்கிறது. அவர் படத்தை வைத்தவர்கள் நகைச்சுவையையும் இன்னும் யோசித்து எடுத்திருக்கலாம். விக் தயாரிக்கும் சத்தார் பாய் தாங்களும் கலைஞர்கள் தான் என்று கூறும் இடம் எதுவாக இருந்தாலும் படைப்பு படைப்பாளி என்பது மதிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூறுகிறது. தன்னுடைய இளவயது நண்பனுக்கு தன்னுடைய நிறுவனத்திலேயே தான் சிபாரிசு செய்தால் பணி கிடைக்கும் என்று தெரிந்தும் அவன் அதிகம் பேசுவான், தன்னுடைய வழுக்கை தெரிந்துவிடும் என்பதால் அவன் பொருத்தமானவன் இல்லை என்று கதாநாயகன் ஜிஎஸ்என் சொல்லிவிடுகிறான். ‘மனிதன் மகா சல்லிப்பயல்’ என்று ஜி.நாகராஜன் சொன்னது இதைப் போன்ற நிகழ்வுகளால் தானோ? அதே நண்பனின் வார்த்தைகளே அவனை புது மனிதனாக்குகிறது.
நிறுவனத்தின் உரிமையாளர் கதாநாயாகியின் கல்லூரி நண்பர் என்பதால் அவளிடம் நெருங்கிப் பழக முயற்சிக்கிறார். திருமணமும் செய்ய முன்மொழிகிறார். இது பாலியல் துன்புறுத்தல்(HARASMENT) என்று கூறி அவள் வேலையை விட்டு விலகிவிடுகிறாள். அவள் வேறு வேலை தேடும்போது பழைய நிறுவனத்திடம் நடத்தை சான்றிதழ்(REFERENCE) கேட்கிறார்கள். அவள் சரியாக பணி செய்ய மாட்டாள் என்று கூறுமாறு ஜிஎஸ்என்னை வற்புறுத்துகிறார் உரிமையாளர். அவன் அதை மறுத்து அவள் சிறப்பாக பணி புரிவாள் என்று கூறுகிறான். பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளை இயல்பாக காட்டியிருக்கிறார்கள்.
நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வழுக்கை போன்ற சிறு குறைபாடே ஒருவனை இவ்வளவு தொல்லைகுள்ளாக்கும் என்றால் மற்ற குறைபாடு உடையவர்களுக்கு எவ்வளவு தன்னம்பிக்கையும் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஊக்கப்படுத்துதலும் தேவைப்படும்? சமுதாயம் எல்லோரைப்போல எல்லோரும் இருக்க வேண்டும்(CONFORM) என்கிற நியதியை வற்புறுத்துவதும் ஒரு பிரச்சினையே.