Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

தொடர் 21: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி

அப்போதெல்லாம் உயர்நிலைப் பள்ளிகளில் வருடத்தில் ஒரு முறையோ, இரு முறையோ திரைப்படங்கள் போட்டுக் காட்டுவார்கள். எல்லாப் பள்ளிகளிலும் இருக்காது. சேலம் சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் நான் மூன்றாம் படிவம் (எட்டாம் வகுப்பு) படிக்கையில் (1956) அப்பள்ளியின் புனித இஞ்ஞாசிரியர் கூடத்தில் (ST. IGNASIOUS HALL) இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அப்பள்ளிக்கென்று சொந்தமான சினிமாப்படம் போட்டுக் காட்டக்கூடிய 16 M.M புரொஜக்டரும், திரையுமிருந்தன. அப்படியாக ஒருநாள், வகுப்பாசிரியர் உணவு இடைவேளைக்குப் பின் தெரிவித்தார்.

இன்னைக்கு இக்னேஷியஸ் ஹாலில் ஒரு ஈரானிய சினிமா காட்டறாங்க. “பிம் தி லிட்டில் டாங்கிணு. மூணு மணிக்கு ஷோ. எல்லாரும் ஒழுங்கா அமைதியா போய் பார்த்துட்டு, படம் முடிஞ்சதும் ஓடிடக் கூடாது. வகுப்புக்கு வரணும். வழக்கம் போல ப்ரேயர் உண்டு.”

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்
Image Credit: MUBI

BIM, THE LITTLE DONKEY– “பிம் என்னும் கழுதைக் குட்டி” எனும், சிறுவருக்காகத் தயாரிக்கப்பட்ட அந்த ஈரானிய கருப்பு வெள்ளைத் திரைப்படம் கிட்டத்தட்ட மௌனப் படம். ஆங்கிலத்தில் வருணணையிருந்தது. உயர் வகுப்புகளுக்கு விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வகுப்பு எடுப்பவரும், N.C.C. முதல்நிலை ஆபீசருமான ஆசிரியர் வைத்தியநாத ஐயர் மைக்கில் ஒவ்வொரு காட்சியின் வருணனையையும் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டே வந்தார்.

ஈரானியச் சிறுவர்களுக்கு கழுதைக் குட்டிகளைக் கொடுத்துப் பராமரிக்கச் சொல்லுவது ஒரு காலத்து வழக்கமாயிருந்தது. அவர்களில் ஒரு சிறுவன் அப்துல்லா. அவனது கழுதைக் குட்டியின் பெயர் பிம். சிறுவர்கள் தத்தம் கழுதைகளோடு கொஞ்சி விளையாடி மேய்த்து வருகையில், அந்நாட்டுக் குட்டி இளவரசன் மசூத், தன் கழுதைக்குட்டி மீது சவாரி செய்து கொண்டு வருகிறான். அவனுக்கு உதவியாக ஒரு பையன். இளவரசனின் கழுதை திடீரென நகராமல் நின்று விடுகிறது. உட்கார்ந்த நிலையிலேயே கழுதைக் குட்டியின் வயிற்றை இரு கால்களால் உதைத்துக் கிளப்ப முயற்சித்தும் முடியவில்லை. உதவிப் பையன் அதன் வாலைப் பிடித்து முறுக்கிச் சுழற்றியெல்லாம் பார்க்கிறான்.

இளவரசன் இறங்கிக் கழுதையை கஷ்டப்பட்டு இழுக்க, உதவி, பின்னாலிருந்து தள்ள அரண்மனைக்குள் போய்விடுகிறார்கள். அப்துல்லாவும் மற்ற சிறுவர்களும் இதையெல்லாம் பார்த்துச் சிரிக்கிறார்கள். இதனால் கோபமும் பொறாமையும் கொண்ட மசூத், அப்துல்லாவின் அழகிய கழுதை பிம்மை ஆட்களைவிட்டு திருடிவரச் செய்து கட்டிப்போட்டுவிட்டு அப்துல்லாவையும் சிறையில் அடைக்கிறான். பிம்மை மசூத் துன்புறுத்துகிறான். அதன் உடலெங்கும் வெள்ளை வண்ணம் அடிக்கிறான். காதுகளைக் கத்தரிக்கிறான். பிறகு அப்துல்லாவுக்கும் பிம்முக்கும் உள்ள பாசம், அன்பு, வாஞ்சையெல்லாம் மசூத்துக்குப் புரிகிறது. தன் தவறுக்கு வருந்தி, பிம்மீதும் அப்துல்லாமீதும் அன்பும் இரக்கமும் கொள்கிறான்.

இருவரையும் விடுதலை செய்து சினேகமாகிறான். அதேசமயம், மசூதின் தந்தையான அரசரின் மதிய சாப்பாட்டை பிம் சாப்பிட்டு விடவே, மன்னர் கட்டளைப்படி பிம் கசாப்புக் கடைக்கு அனுப்பப்படுகிறது. போகிற வழியில் திருடர்கள் களவாடி, படகில் வைத்துக் கடல் வழியே அடுத்த தேசத்துக்கு தப்பிச் செல்லுகின்றனர். மசூது சிப்பாய்களையும் அப்துல்லாவையும் ஒரு படகில் ஏற்றிக்கொண்டு கழுதைக் கள்வர்களைக் கடலில் துரத்திச் சென்று பிம்மை மீட்கிறான். அப்துல்லாவும் பிம்மும் மசூதும் இணைபிரியா நண்பர்களாயிருக்கின்றனர். சக மனிதனையும், பிற பிராணிகளையும் அன்போடு நேசித்துப் பழகுதலின் அவசியத்தைச் சொல்லும் இவ்வரிய ஈரானிய கருப்பு வெள்ளைப் படம் 1951இல் எடுக்கப்பட்டு 1954இல் வெளிவந்திருக்கும் விவரங்களை சமீபத்தில் கூகுளில் தேடிப் பிடித்தறிந்தேன்.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்
ALBERT LAMORISSE

அன்றைய ஈரானில் திரைப்படத் தயாரிப்பு, இயக்கம் என்பதெல்லாம் அரிது. ஃபிரெஞ்ச் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஈரானில் படம் பண்ணியிருக்கிறார்கள். அந்த வகையில் BIM THE LITLE DONKEY படத்தை ஆல்பர்ட் லமூரிஸ் (ALBERT LAMORISSE) எனும் பிரெஞ்ச் இயக்குனர் இயக்கியிருக்கிறார். இவரே கதையை எழுதியிருக்க, வருணனை செய்தவர் JACQUES PREVERT. படத்தில் மசூதின் நகராத கழுதையை இழுத்துச்செல்லுகையில் பின்னணியில் இசைக்கப்படும் இசை, கழுதை கத்துவது மாதிரியே இருக்கிறது. இசையமைப்பு செய்தவர் GEORGES IGUERBOUCHEN என்பவர். அரிய கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு செய்திருப்பவர் ANDREY COSTEY மற்றும் GUY TABARY.

இன்று, உலகத் திரைப்பட வரைபடத்தில் மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் ஈரானிய சினிமா மத ரீதியான கட்டுப்பாடுகளிடையேயும், அரசின் கட்டுப்பாடான கெடுபிடிகளிடையேயும், சமூகக் கட்டுப்பாட்டு வரம்புக்குள்ளும் சிக்கியிருக்கிறது. இவற்றை மீறி பல படங்கள் வெளியுலகையடைய தாமே தம்மைக் கடத்தப்பட்டுத்தான் திரைப்பட விழாக்களில் காட்டப்படுகின்றன. அவ்விதமான சிறந்த ஈரானியத் திரைப்படங்களின் முன் வரிசையில் நிற்பவை, புகழ்பெற்ற ஈரானியத் திரைப்பட மேதையெனக் கருதப்படும் மொஹசென் மக்மல்பாஃப் (MOHSEN MAKHMALBAF) படங்களாகும். இவரது மூத்த மகள் சமீரா மஹ்மல் பாஃப் (SAMIRA MAKHMAL BAF) சிறந்த திரைப்பட கர்த்தாவாக; தந்தையின் கதைகளை, தந்தையின் எடிட்டிங், வழிகாட்டல் துணையோடு படங்கள் செய்வதால் இருவரையும் இணைத்தே பேசுவதும் சரியாகப்படும்.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

90–களின் தொடக்கத்தில் மொஹசென் மக்கல் பாஃப் ஒரு சர்ச்சைக்குரிய திரைப்படத்தை இயக்கினார். “A MOMENT OF INNOCENCE” எனும் அப்படத்துக்கு ஈரானின் மதம் முதல்வாத சமூக–அரசியல் போக்கில் பலத்த எதிர்ப்பு இருந்தது. திரைப்படத் தணிக்கைக் குழுவால் படம் நாசமாகும் அல்லது தடை செய்யப்படும் என்ற யோசனையில் மஹமல் பாஃப் அதை சமர்ப்பிக்கவில்லை. முதலீடு செய்த தயாரிப்பாளர் பெருங் கவலையில் ஆழ்ந்து போனதைக் கண்ட இயக்குநர் மக்மல் பாஃல் தம் வீட்டையே விற்றுப் பட முதலாளிக்குத் தர வேண்டியதைக் கொடுத்தனுப்பினார்.

மொஹசென் மக்மல் பாஃப் ஒருமுறை கூறினார், “ஈரானில் பூகோளம், கணிதம், பௌதிகம் என்று எல்லாமுமே ஒரு மதத்தைக் கொண்டிருக்க வேண்டும்.” “ஆஃப்கானிஸ்தானம்” என்றவுடனே நமக்கு நினைவுக்கு வரும் இடம் கந்தஹார். இந்திய விமானம் ஒன்றும், பயணிகளும் தாலிபான் தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாய் வைக்கப்பட்டு சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுவிக்க பேரம் பேசப்பட்ட விமான நிலையம் உள்ள நகரம் கந்தஹார் (காந்தாரம்) இந்த கந்தஹாரின் பெயரைக் கொண்ட படத்தை வெகுசிறப்பாகத் தயாரித்து இயக்கியிருக்கிறார் மக்மல் பாஃப். உலகின் சிறந்த பத்திரிகைகளாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட இத்திரைப்படம் 2001 கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் பரிசை வென்றது. ஆப்கானிஸ்தானத்துக்குள் நுழைய முற்பட்ட ஒரு பெண்ணின் உண்மை வாழ்க்கைக் கதையின் ஊடாக, மனிதனின் தளராத நம்பிக்கையையும், தீரத்தையும் கூறும் படம் கந்தஹார் கனடாவில் குடியேறிய ஆப்கானியப் பெண் நஃபாஸ் ஒரு பத்திரிகையாளர்.

அவள் தன் சகோதரியைச் சந்திக்கும் ஆர்வத்தில் கஷ்டப்பட்டு ஆப்கன் பகுதிக்குள் வரும் நஃபாஸ், தாலிபான் தீவிரவாதிகள் புதைத்த கண்ணிவெடி வெடித்து அடிபடுகிறாள். தாலிபான் தீவிரவாதத்துக்கு ஆட்பட்ட ஆப்கனிஸ்தான் பொதுமக்கள், படும்துயரை, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் சக்திமிக்க காமிராவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்ணினம் தாலிபான்களால் மதக் கட்டுப்பாடென்று கொடுமைப்படுத்தப்படுவதை நஃபாஸ் பார்க்கிறாள். மூன்று நாள் கழித்து வரவிருக்கும் சூரிய கிரகணத்தன்று தற்கொலை செய்துகொள்ளப் போவதாய் பிரகடனப்படுத்துகிறாள் நஃபாஸ்.

தலையிலிருந்து பாதம் வரை புர்கா அணிந்து அவள் அகன்று விரிந்த பாலைவனத்தில் பயணிப்பது, வழியில் கொள்ளையர்களை எதிர்கொள்வது, இறந்து கிடக்கும் பிணங்களின் ஆடைகள், காலணிகள், பிற உடைமைகளைத் திருடர்கள், திசை தெரியாது அலையும் நாடு கடத்தப்பட்டவர்கள், செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள், கண்ணி வெடிகளில் சிக்கி ஊனமானவர்கள், என பல்வேறு மக்களை சந்திக்கும் நஃபாஸ், இறுதியில் ஒரு திருமணக் கும்பலில் சிக்கி அதுவே தீர்வுமாகி அவர்களோடு சேர்ந்து கந்தஹார் நகரை நெருங்குகிறாள். ஒரு பெண்ணின் அற்புதமான பயங்கர பயண அனுபவமாகவும் போகிறது படம். மக்மல் பாஃப் அற்புதமாய் இயக்கியுள்ள இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவு எப்ராஹிம் கஃபூரி (EBRAHIM GHAFOURI) யின் காமிராவில் வெளிப்படுகிறது.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

மொஹசென் மக்மல் பாஃப் மற்றொரு குறிப்பிடத்தக்க ஈரானிய திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். 1987– ல் வெளியான “THE CYCLIST” எனும் படம் ரிமினி சினிமா சர்வதேச திரைப்பட விழாவில் (RIMINI – CINEMA INTERNATIONAL FILM FESTIVAL) சிறந்த படத்துக்கான “தங்க R” பரிசு (GOLDEN – R) பெற்றது.

ஆப்கானிஸ்தானத்திலிருந்து தாலிபான்களின் அட்டகாசம் தாங்காது, அமெரிக்கக் குண்டு வீச்சிலிருந்தும் கண்ணி வெடிகளிலிருந்தும் உயிர் தப்ப ஏராளமான பேர் அகதிகளாக ஈரானுக்குள் நுழைந்தனர். அப்படிப்பட்ட ஆப்கன் அகதி நஸ்ஸிம். அவனுடைய மனைவிக்கு முற்றிய கான்சர். ஈரானிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவளது சிகிச்சைக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. ஆப்கன் அகதிகளை குறைந்த தினக் கூலியில் கடுமையான வேலை செய்ய கூவியழைத்து லாரியிலேற்றிக் கொண்டு போகிறார்கள். நஸ்ஸீமும் அவனது சிறு வயது மகனும் அவதிக்குள்ளாகின்றனர். அவனது வறுமையையும் பணத்தின் அவசரத் தேவையையும் உணர்ந்து கொண்ட அவனது நண்பன் ஒருவன் அவனது பரிதாப நிலையை பணம் பண்ணும் விதமாய் உபயோகிக்க எண்ணுகிறான்.

விடாமல் நிற்காமல் ஒரு வாரத்துக்கு நஸ்ஸீமை சைக்கிள் ஓட்டிக் காட்டும்படி கூறுகிறான். இதுபோன்ற “ஹடயோகம்” நம்மூர்களிலும் எனது இளம் வயதில் பார்த்திருக்கிறேன். சைக்கிள் ஓட்டினபடியே சாப்பாடு, குளியல், கழிதல் எல்லாவற்றையும் செய்வார்கள். பந்தயம் கட்டிக் கொண்டு 24 மணிநேரமும் இடைவிடாது மூன்று நான்கு நாட்களுக்கென்று பொது மைதானத்தில் சைக்கிளில் வட்டம் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவர்களை உற்சாகப்படுத்த ஒலிபெருக்கியில் சினிமாப்பாட்டு வைப்பார்கள். நஸ்ஸீமை வைத்து லட்சக் கணக்கில் பந்தயம் கட்டி கொள்ளை லாபமடிக்க முயற்சி நடக்கிறது. அவனது மனைவி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். எப்படியும் பணம் சம்பாதித்து மனைவியைக் காப்பாற்றிவிட, மனஉறுதியோடு நஸ்ஸிம் சைக்கிள் விடுகிறான். நஸ்ஸீமின் திறமைகளாக இருப்பது–இல்லாததையெல்லாம் ஈரானிய ஜனங்களுக்கு விளம்பரமாகத் தரப்படுகிறது.

ஒரு வாரத்துக்கு இரவு பகலாக இடைவிடாது ஆப்கன் சைக்கிள் சாம்பியன் நஸ்ஸீம் சைக்கிள் ஓட்டும் விஷயம் படத்தில் ஓடுகிறது. நஸ்ஸீமின் துன்பம் பணமாகிறது. ஆறாவது நாள் இரவு, நஸ்ஸீம் மயக்கமுற்று விழுகிறான். ஜனங்கள் யாருமில்லாத அந்த நடு இரவு நேரம். அந்தப் போட்டியை ஏற்பாடுசெய்த அவனது நண்பனும் இன்னொருவனும் ரகசியமாக ஓரிடத்துக்கு நஸ்ஸீமைத் தூக்கிச்சென்று படுக்கவைக்கின்றனர். நஸ்ஸீமுக்குப் பதிலாக அவன் நண்பன் பணப்பந்தயத்தை முன்னிட்டு, முகத்தை, தலையையெல்லாம் மூடிக்கொண்டு அந்த இரவு முழுதும் சைக்கிள் ஓட்டுகிறான். காலையில், உடல் தேறிவிட்ட நஸ்ஸீம் சைக்கிள் ஏறுகிறான். பந்தய நாட்கள் முடிவடையவும், ஏராளமான பாராட்டுகள் கிடைக்கின்றன. ஆனால் நஸ்ஸீமின் மனைவி கான்சரோடு போராடித் தோற்று மரணமுறுகிறாள்.

மக்மல் பாஃப் ஈரானிய மக்களின் சமூகப் பிரச்சினைகளை மிக யதார்த்தமாய் தம் படங்களில் தொடுகிறார். வறுமையின் தாக்கத்தையும் அதன் சாக்காய் வைத்து ஒருவரையொருவர் சுரண்டி வாழ்வதை தம் படத்தில் பளிச்சென காட்டுகிறார். மொஹரம் ஸாய்நல் ஸடேஷ் (MOHARRAM ZAYNAL ZADEH) என்பவர் சைக்கிளோட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

சமீரா மக்மல் பாஃப் திரைப்படமாக்கல் கலையைத் தன் தந்தை மொஹசென் மக்மல் பாஃயிடமிருந்து கற்றவர். தன் 14–வது வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்ட சமீரா 17-வது வயதிலிருந்து திரைப்படம் எடுக்கத் தொடங்கியவர் என்பது வியப்பளிக்கிறது. எவ்விதச் சுதந்திரமும் பெண்களுக்கு மறுக்கப்பட்ட சமூக– அரசியல் சூழல்! சமீராவின் முதல் முயற்சியாக இயக்கப்பட்ட ஈரானின் திரைப்படம், “APPLE” குறிப்பிடப்பட வேண்டிய படம். இப்படத்தில் இரு சிறுமிகள் பேச்சுத் திறனற்ற சகோதரிகள். அவர்களை தகப்பன் வீட்டில் வைத்து பூட்டி வைத்திருக்கிறான். குளித்தே மாதக் கணக்காகிறது. எப்படியோ அக்கம்பக்க ஜனங்கள் மனித உரிமைக் காவலர் சங்கத்துக்கு தெரியப்படுத்தி புகார் அளித்ததின் பேரில் சங்கம் அனுப்பி வைத்த பெண்மணியொருத்தி, தகப்பனை வீட்டைத் திறக்க வைத்து சிறுமிகளை விசாரிக்கிறாள்.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

அதற்கொரு பரிகாரம் செய்வது படம். இந்த அரிய சமூகப் பிரச்சினை முன்னிட்ட படமே சமீராவின் புகழுக்கு வித்திட்டது. பிறகு அவர் இயக்கிய, “THE BLACKBORDS” எனும் திரைப்படம் மிகவும் புகழ் பெற்றது. இப்படம் குர்திஷ் மக்களின் நெருக்கடியானதொரு வாழ்க்கை நிகழ்வைச் சொல்லுகிறது. ஈரானுக்கும் ஈராக்குக்கும் மூண்ட போர் பயங்கரமானது. இரசாயன வெடிகுண்டுகள் வீசப்பட்ட யுத்தம். இச் சூழலில் ஒரு இளம் ஆண் ஆசிரியர்கள் ஈரானிய–குர்திஸ்தான் பகுதியின் மலைகள் வழியே, கரும்பலகைகளை முதுகில் சுமந்துவாறு மாணவர்களைத் தேடி மலைக்கிராமங்களில் அலைகிறார்கள். கரும்பலகைகள் பெரியவை என்பதால் அவற்றின் மறைவில் ஒளிந்து கொள்ளவும், யுத்த நேரமாதலால் குண்டடியிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுகின்றன.

ஆசிரியர் கூட்டத்திலிருந்து இருவர் பிரிந்து வெவ்வேறு திசையில்–வழியில் நடக்கையில் ஒரு ஆசிரியர் சிறுவர் கூட்டமொன்றோடு சேர்கிறான். அச்சிறுவர்கள் கள்ளச் சந்தையில் கிடைத்த தடை செய்யப்பட்ட அயல்நாட்டுப் பொருட்களை ஈரான் – குர்திஸ்தான் எல்லையில் கொண்டு போய் விற்கும் படிப்பறிவற்ற சிறுவர்கள். ஆசிரியர் படிப்பு சொல்லித்தர கேட்டால், அவர்கள் தேவையில்லையென மறுக்கிறார்கள். மற்றொரு ஆசிரியர் வயதான குர்திஷ் மக்கள் இரசாயன குண்டுவீச்சுக்கு பயந்து ஈரானிலிருந்து தங்கற்ள குர்திஸ்தான் கிராமத்துக்குப்போக முற்படுகிறவர்களோடு சேருகிறான் அதில் ஒருசில கிழவர்கள் சிறுநீர் கழிக்க முயற்சித்தும் கழிக்க முடியாமல் மரண அவஸ்தையுறுகிற காட்சியை சமீரா பிரமாதமாய் படமாக்கியுள்ளார். அந்தக் கூட்டத்தில் கணவனையிழந்து ஐந்து வயதுப் பையனோடு உள்ள இளம் பெண்ணுக்கும் ஆசிரியருக்கும் முடிச்சு போடும் வேலை நடக்கிறது.

வேண்டா வெறுப்பாக பெண் இசைகிறாள். பெண்ணுக்குச் சீதனமாக தரும் வழக்கமாய் தர பணம் எதுவுமில்லாத ஆசிரிய இளைஞன் தன்னிடமுள்ள ஒரே ஒரு ஜங்கம சொத்தான கரும்பலகையை அளக்கிறான். கல்யாணமாகி அந்தப் பெண் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ஆசிரியர் எவ்வளவு பேசியும் அவள் பேசுவதுமில்லை, முகம் கொடுத்துப் பார்ப்பதுமில்லை. ஒரு கிழவன் தனக்கு வந்த கடிதமொன்றை ஆசிரியரிடம் தந்து படித்துக் காட்டச் சொல்லுகிறான். அக்கடிதம் யுத்த களத்திலிருக்கும் கிழவனின் மகன் அனுப்பியது. ஆனால், அரபிக்கில் எழுதப்பட்ட கடிதம். ஆசிரியரால் அதைப் படிக்க மட்டுமே முடியும். ஆனால் பொருள் தெரியாதென்றாலும் ஒருவாரு படித்து எதையோ சாதகமாகச் சொல்லி வைக்கிறான். பிறகு, அந்தப் பெண்ணை விவாகரத்து செய்வதாக சொல்ல, விவாகரத்தும் நடக்கிறது. சீதனமாய்த் தந்த கரும்பலகை பெண்ணைச் சேரும் என்பதால் அதையும் கொடுத்துவிட்டு நிராயுதபாணியாக நடக்கிறான ஆசிரியர். கூட்டம் இறுதியில் தங்கள் குர்திஸ்தான் கிராம எல்லையை அடைகிறது.

BLACK BOARD திரைப்படத்தின் இயக்கத்துக்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு ஒனன்றை அவருக்கும் ஸ்வீடிஷ் பட இயக்குனருக்கும் பகிர்ந்தளிக்ககப்பட்டது. குர்திஷ் மக்களின் படுதயர் குறித்த அக்கறையும் கவலையும் ஈரானியத் திரைப்பட பெண் இயக்குனர் சமீராவுக்குத்தான் இருந்திருக்கிறது. சயத் மொஹம்மதி பெஹனாஜ் ஜாஃபரி போன்றோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எப்ராஹிம் கஃபூரியின் காமிரா கோணங்களும் எம்.ஆர்.தர்வீஷின் இசைக் கோர்வையும் படத்தின் கூடுதல் சிறப்புக்குத் துணை நிற்பவை. சமூக–அரசியல் ரீதியாய் மக்களுக்கு நேரும் அநீதியை எதிர்த்துப் போராடும் உணர்வுகளைத் தெரிவிக்க ஒரு ஆயுதமாகத் தன் திரைப்படக் கலையைப் பயன்படுத்துகிறார் சமீரா.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

அதன்பிறகு சமீரா “AT FIVE IN THE AFTERNOON” என்ற திரைப்படம் செய்தார். இப்படம் அந்நாட்டு மக்களின் துன்பத்தையும் தவிப்பையும் மட்டும் எடுத்துச் சொல்லாமல் எதிர்பார்ப்பு மிக்க பெரு நம்பிக்கையையும் பேரவாவையும் வெளிப்படுத்துகிறது. இப்படமும் அவ்வாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் பரிசைப் பெற்றது. ஆஃப்கானிஸ்தானிய மக்களின் துயர வாழ்வின் பேரில் சமீரா மிகுந்த அக்கறை கொண்டவர். இன்று, உலக நாடுகளில் பெரும்பான்மை, ஆஃப்கன் மக்களுக்கு மருந்து, உணவு, பணம் அவசியம் என உணர்ந்து உதவி செய்ய முன்வருவதை அன்றே உணர்ந்து பரிசளிப்பை ஒட்டி நடந்த பேட்டியில் சமீரா கூறியதாவது:

“ஃப்கானியர்கள் மேற்கு தேசங்களின் ஏகாதிபத்திய இருண்ட மூட்டத்திலிருந்து மீண்டெழவேண்டுமானால் அவர்களுக்கு பணமும் பிற அத்தியாவசிய பொருட்களும் தேவையென்பதை எனது திரைப்படம் உலகத்துக்குச் சொல்லும் என்று நம்புகிறேன்” என்பதாகும்.

இந்தப் படம் ஒரு வயதான வண்டிக்காரன், அவன் மகள், மருமகள், அவளுடைய குழந்தை என்று நான்கு பேர் வாயிலாகச் சொல்லப்படும் கதையைக் கொண்டது. தாலிபான் கெடுபிடி ஓய்ந்த பிறகான சூழலையும் கொஞ்சம் பார்க்கிறது படம். இன்றைக்கு ஆப்கானிஸ்தானத்தில் மீண்டும் பழைய பயம், நடுக்கம் எல்லாம் திரும்பியிருக்கிறது. தாலிபான்கள் வருகையின் போது ஏராளமான மக்கள் நாட்டை விட்டுச் சென்றார்கள். விமானத்தை எதிர்நோக்கி லட்சக்கணக்கில் மக்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். ரயிலிலும் பஸ்ஸிலும் இடம் கிடைக்காமல் மேற்கூரை மேலேறிப் பயணிப்பதுபோல விமானத்தின் இறக்கைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டும், கூரை மேல் ஏறிப்படுத்தும், சரிந்து விழுந்து இறந்தும் போன மக்களை காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்ததைப் பார்த்தோம். இதை AT FIVE IN THE AFTERNOON படத்தில் வண்டிக்காரக் கிழவன் பேசும் இறுதி வசனமாக, “எங்கே போவது என்று எனக்குத் தெரியவில்லை”, என்பதை சமீரா எழுப்புகிறார்.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

2011–ல் “SEPARATION” என்ற ஓர் அதியற்புத ஈரானிய திரைப்படம் வெளிவந்து மிகச் சிறந்த படத்துக்கான பல பரிசுகளைப் பெற்றது. ஓர் இளம் ஈரானியத் தம்பதிகள். அவர்களின் பதினோறு வயதுப் பெண்ணுக்கு வெளிநாட்டுப்படிப்பு கிடைத்து பெண்ணோடு வெளிநாட்டுக்குப் போய் விட பள்ளியாசிரியையான அம்மா விரும்பி சகல ஏற்பாடுகளையும் செய்ய, பெண்ணின் தந்தை வர மறுக்கிறான். அவனுடைய வயதான தந்தை “ அல்ஜமீயர் ” நோயால் தகுந்த துணையின்றி இயங்க முடியாதிருக்கிறபடியால் தன்னால் வர முடியாதென்கிறான். மகளின் எதிர் காலம்தான் முக்கியமென கூறும் மனைவி விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கிறாள். பெண்ணுக்கு அம்மாவும் வேண்டும், அப்பாவும் வேண்டும். மனைவி பிரிந்து போய் விட்ட நிலையில் கணவன் மனநோயாளி தந்தையையும் பெண்ணையும் வைத்துச் சமாளிக்கத் திணறி அப்பாவைக் கவனித்துக்கொள்ள ஒரு பெண்மணியை அமர்த்துகிறான்.

அவள் பெரியவரை சரியாகக் கவனிக்காத நிலையில் அவர் நழுவி எங்கோ போய்விடுகிறார். வேலைக்காரி கடைத்தெருவில் சுற்றி அவரை மீட்க சாலையைக் கடக்கையில் காரில் இலேசாக மோதிக் கொள்ளுகிறாள். இன்னொரு நாள் பெரியவரைக் கட்டிலோடு கட்டிப்போட்டுவிட்டு எங்கோ போய்விடுகிறாள் வேலைக்காரி. கிழவர் கீழே விழுந்து ஆபத்தான நிலையில் கிடக்கிறார். இப்படத்தில் கிழவர் தன் நிலையறியாது நழுவி மறைவதை மட்டும் விரிவுபடுத்தி ஒரு கன்னடமொழிப் படம் ஜனரஞ்சகமாக பிற்காலத்தில் “கோதிபண்ணமத்து சாதாரண மை கட்டு” என்ற பெயரில் படமாயிற்று.

வேலைக்காரிக்கும் பெரியவரின் மகனுக்கும் சண்டை ஏற்படுகிறது. வீட்டில் பணம் காணாமற் போகிறது. திருட்டுக் குற்றமும் சுமத்தப்பட்டு வேலைக்காரியை வெளியேறும்படிக் கத்துகிறான். அவள் தன்னை அவன் படிக்கட்டில் பிடித்துத தள்ளியதாகவும் அதனால் தனது 4 மாத கரு கலைந்து போனதாகவும் போலீசில் புகார் தருகிறாள். வேலைக்காரியின் கணவன், தன் குழந்தையைக் கொன்றதாகக் கூறி புகாரளிக்கிறான். சிறைத் தண்டனைமளிக்கப்பட்ட கணவனைக் காப்பாற்ற மனைவி வீடு திரும்பி ஜாமீன் பெறுகிறாள். பெரியவரை மீட்க பாதையைக் கடந்தபோது கார் மோதியபோதே கருக் கலைந்ததென்ற உண்மையை வேலைக்காரி கூறி, அவன் கணவன் கொஞ்சம் பணம்பெறச் சம்மதிக்கிறான்.

கேஸ் தள்ளுபடியானவுடன், விவாகரத்து விஷயம் எழுகிறது. கணவன் மனைவி, மகள் மூவரும் கோர்ட்டில். பெண்ணைப் பார்த்து, “நீ யாரோடு இருக்க முடிவு செய்திருக்கிறாய்?” என்று நீதிமன்றம் கேட்கிறது. பதில் சொல்ல இயலாது பெண் கண்ணீர் விடுகிறாள்ு. பெற்றோர் வெளியில் காத்திருக்க–படம் முடிகிறது. கோர்ட் ஓர் இயந்திர மனிதன். பெற்றோர்கள் குழப்பத்தில், தந்தையா, தாயா என்ற கேள்வியில் இளம் மகள். இந்த அற்புதப் படத்தை தயாரித்து எழுதி இயக்கியவர் அஸ்கர் ஃபர்ஹாதி (ASGHAR FARHADI) அற்புதமான வண்ண ஒளிப்பதிவு காமிரா M.KALARI என்பவரது. லீலா ஹடாமியும் சரீனா ஃபர்ஹாதியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்

தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்

தொடர் 20: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய் 3) – விட்டல்ராவ்