து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




பிள்ளை செல்வம்
••••••••••••••••••••••••••
மங்கையவள் ஜெனனம் உன்னதம் பெற
மனிதகுலம் வாழ்வாங்கு வாழ்ந்துய்க்க
மன்னவர் தம் வம்சம் தழைத்தோங்க
மழலையொன்று மடியில்‌ தவழ்ந்திருக்க
வேறென்ன பேறு வேண்டும் அகண்ட இம்மாநிலத்தே..

இருள் சூழ்ந்த இப்பேரண்டம் கூட
மழலை முறுவலின் வெளிச்சம் பாய்ச்ச
வானவில்லாய் வண்ணமயம்‌ சூடுமே..

தேவாதி தேவரும் தேவகுல மங்கையரும்
மழலை விழி வீச்சில் வீழ்ச்சி பெறப் போவாரே
இத்தகு செல்வம் ஒன்று காணப் பெற்றால்
மீண்டும் வேண்டும் பிறவியொன்று இம்மாநிலத்தே.

புத்தம் புது பூமி வேண்டும்
******************************
புத்தம் புதுபூமி பிறந்திட வேண்டும்..
அழகிய நீல வானம் விரிந்திட வேண்டும்..
மின்னும் மழைத்துளிகள் உரசிட‌வேண்டும்..
பசுமைப் பூத்து நிலமெங்கும் செழித்திட வேண்டும்..

மனிதர் மனம் மகத்துவம் சமைத்திட வேண்டும்.
மெய்மை தாங்கிய சொல் உதிர்த்திட வேண்டும்.‌
பொய்யே இல்லா உலகு படைத்திட வேண்டும்..
கள்ளமில்லா நெஞ்சு வாய்த்திட வேண்டும்

மானுட நேயம் போற்றும் வாழ்க்கை வேண்டும்..
மங்காத வாய்மை ஒலித்திட வேண்டும்..
சாதி மதமற்ற சமூகம் வேண்டும்
சண்டைகள் இல்லா உலகம் வேண்டும்

உயிரனைத்தையும் அன்பு செய்திட வேண்டும் .
உயர் கல்வி ஞானம் பெருகிட வேண்டும்
தன்னிகரில்லா தனித்துவம் தழைத்திட வேண்டும்
தரணியில் தமிழ் என்றும் முழங்கிட வேண்டும்..

வேண்டும் வேண்டும் இவையாவும்
இந்த விடியல் கொண்டு வர வேண்டும்..

தனித்துவம் தன்னிகரில்லா பலம்
***************************************
பரந்துபட்ட வானம்
ஒற்றை ஆதவன்
அதே இடம்

மிளிரும் கதிர்கள்..
அதே மொழி..

ஒளிரும் வானம்..
அதுவும் அழகு….

அசைந்திராது அழியாத பாதையை.
உயிர் தாங்கும் உன்னத பூமி கூட
வலம் வரும் ஆயிரங்கால் ஆதவனை…

ஒற்றை அம்புலி..
அதே தடம்..

அசையாது‌ திடம்
ஒளிரும் நீல வானம்…
வான் சிறப்பு ..

தேய்வதும் வளருவதும் அங்ஙனமே..
மதியின் மாண்பு..

விட்டகலாது உறைவிடமதை.
விண்மீன் கூட வியந்தே வட்டமிடும்
ஒளிபொருந்திய மதிதமை..

கற்றை நட்சத்திரம்..
எப்போதும் கசகசத்தே கிடக்கும்..
மினுக்கும் மின்மினிப் பூச்சுகள்..

தனித்து சிறப்பது தன்னிகரில்லாதது.
தனித்துவம் எப்போதும் அனைத்திற்கும் தலையாயது…

ஒரு சிறந்த ஆசான்…
**************************
வகுப்பறைக்குள் தேர்ந்த சோர்ந்த என‌…
பிள்ளைகளைப் பாரபட்சம் பாராது
பாராட்டுவதும் கண்டிப்பதும்..

ஒரு சிறந்த ஆசான்…
எப்போதும் வாய்மைக்காக மட்டுமே குரலெடுப்பது..

ஒரு சிறந்த ஆசான்..
சமநிலை தேசப்பற்றை கல்வியுடன் சேர்த்து
பிள்ளைகட்குப் புகட்டுவது..

ஒரு சிறந்த ஆசான்..
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெஞ்சகத்துடன் உதாரணபுருஷனாக வாழ்ந்து சிறப்பது

ஒரு சிறந்த ஆசான்..
சீலத்திலும் சுயத்திலும் கவனம் கொள்வது..

ஒரு சிறந்த ஆசான்..
பாரபட்சமின்றி அனைத்து பிள்ளைகளின் மெனக்கிடலைப் வாய்விட்டுப் பாராட்டி மகிழ்வது..

ஒரு சிறந்த ஆசான்..
திருத்த முயலாது தான் திருந்தி வாழ்வது..

ஒரு சிறந்த ஆசான்
போதனையாக இல்லாது போதி மரமாக விரிந்து கிடப்பது..

ஒரு சிறந்த ஆசான்…
கல்விக் கேள்விகளில் தம்மை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்வது..

ஒரு சிறந்த ஆசான்..
கல்வியாளராக இராது கலையுடன் கூடிய கல்விக்கூடமாகவே வாழ்ந்து சிறப்பது..

-து.பா.பரமேஸ்வரி
சென்னை.

நூல் அறிமுகம்: த.வி.வெங்கடேஸ்வரனின் ’விண்மீன்களின் வகை வடிவம் வரலாறு’ – ஹேமபிரபா

நூல் அறிமுகம்: த.வி.வெங்கடேஸ்வரனின் ’விண்மீன்களின் வகை வடிவம் வரலாறு’ – ஹேமபிரபா




நூல் : விண்மீன்களின் வகை வடிவம் வரலாறு
ஆசிரியர் : த.வி.வெங்கடேஸ்வரன்
விலை : ரூ. 270.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
விண்வெளி சம்மந்தமான செய்திகளைப் பார்க்கும்போது, அது குறித்த ஆர்வத்தினால் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் எழுவது இயல்பு.

என்னதான் சிறு சிறு கட்டுரைகள் வாசித்துத் தெரிந்துகொண்டாலும், ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்து அடிப்படையிலிருந்து பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வது மகிழ்ச்சியான அனுபவம்தானே!

த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய “விண்மீன்களின் வகை வடிவம் வரலாறு” புத்தகத்தை வாசிக்கலாம்.

தமிழில் வானியல் பற்றி விரிவான அளவில் எளிமையாக வரும் முதல் நூல். கோள்கள் பற்றி அவற்றின் அமைப்பு, இயக்கம், வரலாறு பற்றி இதில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. சில செய்முறைகளும் தரப்பட்டுள்ளன. இந்நூல் பிரபஞ்சம் பற்றிய மறை திறவுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

-ஹேமபிரபா 

கலாபுவன் கவிதைகள்

கலாபுவன் கவிதைகள்




நேசப் பெருவெளியில்

பெளர்ணமி நிலவொளியில் படகில் பயணிக்கையில்
துள்ளிடும் வெள்ளி மீன்கள் ஒளிர்ந்து கொண்டே
நீரில் தொடர்ந்து வந்தன
வியப்பாக முழுநிலவும் ஆற்று நீரில் பிம்பமாக
தொடந்து வந்தது
வானின் நட்சத்திரங்களின் பிம்பங்கள்
மீன்களுடன் போட்டி போட்டன
படகோட்டி துடுப்பிட்டுக் கொண்டே
மெல்லிய பாடலொன்று பாடினான்
நீண்ட பெருநிலத்தின் நிதம் தோன்றி நிதம் மறையும்
நிரை நிரையாய் செடிப்பூக்கள்
காலதேவன் கடமையது
காரிருளும் கதிரவன் ஒளியும் மாறி மாறி
பூமிப்பந்தை முறையிட்டு நிறப்பூச்சுப் பூச
ஏகாந்தமும் இரைச்சல்களும்
வாழ்வின் மொழிகளாகின்றன
வலியும் வழியும் ஜன்மாவின் இருகூறுகளாய்
மானுடரை ஆட்டுவிக்கின்றன
பிரபஞ்ச பெரு நடை இதுவே

ஆமென்

****************************
அதீதங்களால்
ஆட்கொண்டவனே..

நாட்குறிப்புகளைப் புரட்டிப் பார்க்கிறேன்..
என் ஞாபகங்கள் மீண்டும் துளிர்விட்டு
புரியாத புதிராய்
அடர் தாகங்களின் நீர்த் திவலைகளாய்
இதயத்தைக் கொல்கிறதே…

தொலைந்து போன கனவுச் சிதறலாய்
சிறகடித்த அந்த நீங்கா நினைவுகள்…

என் தொலைந்து போன கனவுகள்…

– கலா புவன்
லண்டன்

சரவிபி ரோசிசந்திராவின் குழந்தைப் பாடல்

சரவிபி ரோசிசந்திராவின் குழந்தைப் பாடல்




ஒரு குழந்தைப் பாடல்
*****************************
ஆகாயத்தில் வசித்த நிலவு
ஆடிப்பாட வந்ததாம்
ஆடிப்பாடி முடித்தப் பின்னே
அசந்து போனதாம்
வீதியெல்லாம் புகைக்காற்று
திணறி மேலே சென்றதாம்
மேகமெல்லாம் அனல்காற்று
தொப்பென்று கீழே விழுந்ததாம்
மயக்கம் தெளிய நட்சத்திரம்
தண்ணீர் கொண்டு வந்ததாம்
மதி கொஞ்சம் மதி தெளிந்து
வானத்திற்குச் சென்றதாம்
புகை நமக்குப் பகையென்று
புரியவில்லை நமக்குத்தான்
புகையிலையாலே நோய்கள் வந்து
இறக்கின்றறோம் எதற்குத்தான்?
நல்ல பழக்கம் கொள்ளுவோம்
நமது உடலைப் பேணுவோம்
உள்ளம் முழுதும் நம்பிக்கை
உண்மைதான் நம் வாடிக்கை.

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்




கவிதை 1
பிறிதொரு வார்த்தை

ஒரு வார்த்தைக்கு மட்டும் பிறிதொரு வார்த்தை என்றும் இல்லை
அதுவும் நேசத்தை வார்த்தையில் சொல்வதென்றால்
ஒரு கடலைக் குடித்து விட்டு வர வேண்டும்

நானோ உதிர்த்த விண்மீன்களை
கைகளில் ஏந்திக்கொள்ளத் துடிப்பேன்
அபலைச் சருகுகளை எடுத்து முகத்தோடு உரச விடுவேன்
கண்திறக்காத குட்டிப் பூனைக்கு
வெண் சங்கில் பாலைப் புகட்டுவேன்

எண்ணங்களில் ஒரு பாலம் கட்ட முடிந்தால் போதும்
நட்டநடு நிசியில் உன் முன் ஒரு முழு அல்லி இலை போல  வந்து நிற்பேன்
மார்பில் தலைசாய்த்து லப்டப் இசையை  ஸ்வரம் பிரிப்பேன்
உதிரும் மூச்சுகள் கோர்த்து
உனக்காக ஒரு மாலை கட்டுவேன்
பின்பு உனக்காக எழுதப்பட்ட இந்தக் கவிதையை கிழித்துப் போட்டு விட்டு
உன் உள்ளங் கால் பாதத்தில்
ஒரு துளி கண்ணீரை எடுத்து
திருஷ்டிப்பொட்டிட்டு வருவேன்

கவிதை 2
மனமற்ற செம்பருத்தி

அடுத்த தெருவிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும்
தொலைந்து போன நதி
சங்குப் பூனையின் பரவசமாய்
கால்களைச் சுற்றிச் சுற்றி வருகிறது
நம்மை மோப்பம் பிடித்து

அள்ளிப்பருக நினைக்கையில்
மேகத்தைச் சபித்தபடி ஊர்ந்து போகும்
கிழவனின் உதடுகளில்
கெட்ட கெட்ட வார்த்தைகள்
வனாந்தரத்தின் வாசம்

எலிக்குஞ்சுகளாகத் தொலைக்காட்சியை
மொய்த்துக் கிடக்கும் கண்களில்
ஆதி வேட்டை வெறி அடங்கவேயில்லை

பூனையின் கண்களாய் மினு மினுத்துக்கிடக்கும்
சிறுவர்கள்
விளம்பர இடைவேளைகளில்
ரிமோட்டைக் கைப்பற்றி
பீம் டாம் சகிதம் வலம் வருகிறார்கள்

ஈரத்தை சுமந்தபடி புறப்பட்டு வரும்
சாயங்காலக் காற்றுக்கு
திறந்த படி காத்திருக்கின்றன
மனித உடலங்கள்

மொட்டைமாடியெங்கும்
காயப்போட்ட கொடிகளில் பட படத்து
அடித்துக்கொள்ளும்  மெய் இரகசியங்கள்

திருகப்பட்ட கழுத்துகளோடு
காற்றிலலையும் காகங்கள்
இரவின் கீற்றாய்  தரையிறங்கி வருகின்றன
ஒரு துளியையும்  குடித்து விட இயலாத
விரக்தியில்

சூட்டப்படும் மாங்கல்யமாய் பறந்து வந்த
வெண்புறாக்கள்
சட்டென்று கலைகின்றன
இரவு உருவாகும்  புள்ளியில்

மனமற்று ஆடும்
வாசல் செம்பருத்தியில் என்
வாசம் ஒரு கணம் தான் என்றாலும்
போதும் இது
எத்தனையோ தூக்கமற்ற
இரவுகளைக்  கரைத்து விடுவதற்கு

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்