தொடர் 17: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
விஜய் டிவியில் ஒருமுறை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் ஷங்கர் – ஏ.ஆர். ரகுமான் – வைரமுத்து கூட்டணியில் வரும் பாடல்கள் எப்போதும் வெற்றிப் பாடல்களாகவே அமைகின்றனவே அதற்கு என்ன காரணம் என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள். அதற்கு கவிப்பேரரசு அவர்கள், நாங்கள் புதிய படம் ஒன்றுக்கு பாடலை உருவாக்கும் பணிக்காக அமரும்போது, அந்த அமர்வின் முதல் பாடலை சிறந்த பாடலாக உருவாக்க அதற்குமுன் எங்கள் கூட்டணியின் உச்சப் பாடலை அளவீடாக வைத்துக்கொண்டு அந்தப் பாடலை தாண்டும் பாடலொன்றை உருவாக்கிவிட்டால் இது சிறந்த பாடலாகிவிடும் என்று முடிவு செய்வோம். பின்பு அடுத்த பாடலை சிறந்ததாக உருவாக்க வேண்டும் எனில் இதற்கும் முன்னான பாடலைத் தாண்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்வோம். இப்படியாக ஒன்றை ஒன்று ஒன்றை ஒன்று தாண்டுமாறு உருவாக்கிக் கொண்டே வரும் உத்தியே எங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம் என்று பதிளித்தார். இந்நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் என்னிடம் கூறி, இந்த பாணியை நம் தோழர்கள் மக்களிடம் கொண்டு சென்றால் என்ன என்று கூறினார்.
இதுபோல் எப்போதும் அவர் புதிய சிந்தனையை எப்படி மக்களுக்காகப் பயன்படுத்துவது என்று யோசித்துக்கொண்டே இருப்பார். அதே போல் வைரமுத்து அவர்கள் குமுதத்தில் தொடராக எழுதிவந்த சிறுகதை சிலவற்றை வாசித்துவிட்டு தான் எழுதி அப்போது நூலாக வெளிவந்திருந்த தமிழக விவசாயிகள் பற்றிய ஒரு ஆவண நூலை அவரிடம் தந்தால் அதன் வெளியை சிறுகதைகளாக அவர் மக்களுக்குப் படைக்கக் கூடும் என்றெண்ணி என்னிடம் தந்தனுப்பினார், நான் கொண்டுபோய் சேர்த்தேன். நல்ல விசயத்தை யார் சொன்னாலும் பாராட்டுவார். அதன் வழியே நிறைய நல்ல திரைப்படங்களுக்கு தீக்கதிர் இதழில் விமர்சனம் எழுதியுள்ளார்.
ஒருமுறை ஜி. ஆர் அவர்கள் கட்சி அலுவலகத்தை சுத்தம் செய்கையில் கிடைத்த பழைய செம்மலரை வாசிக்கையில் அதில் பிரசுரமாகியிருந்த என் பாடல் ஒன்றை வாசித்துவிட்டுப் பாராட்டினார். அந்தப் பாடல் பெண் விடுதலைக்காண பாடல்.
பல்லவி:
பெண்கள் கூடிப் பேச வேண்டும்
பிரபஞ்சத்தை ஆளவேண்டும்
ஒரு பூ மட்டும் மாலை ஆகாது
ஒரு நூல் மட்டும் சேலை ஆகாது
நமது வாழ்வை நாமே வாழ
முடிவு எடுப்போம் – இனி
எவர் தடுத்தாலும் பொறுக்காமல் தானே
போர் தொடுப்போம்
சரணம் – 1
பக்தி பக்தி என மோகம் கொண்டு
பணிந்தே கடந்துவிட்டோம்
ஆண்களின் தேரை தோளில் சுமந்தபடி
குனிந்தே நடந்துவிட்டோம்
பின்னே செல்லவா நாம் பிறந்தோம்
தோழி கேளடி
பிள்ளைப் பெற்று பிள்ளைப் பெற்று
இளைத்தோம் பாரடி
குடும்பம் நடத்தவும் தெரியும்
கோட்டையை ஆளவும் தெரியும்
உலக்கைப் பிடித்தக் கைகள் இனிமேல்
உலகம் எங்கிலும் விரியும்
சரணம் – 2
இரவு பகல் எனும் பேதம் கிழித்துக்
குப்பையில் வீசுவோம்
எந்த நேரமும் நமது நேரம்தான்
எழுந்து பேசுவோம்
தோல்வி என்பது கிடையாது
தொடர்ந்து ஓடிடுவோம்
துணியைப் போலே இருட்டைத் துவைத்துக்
கொடியில் போட்டிடுவோம்
வாசல் படிகளைக் கடப்போம்
வழித்தடம் புதிதாய் படைப்போம்
சிறைகளின் கதவு திறக்காவிட்டால்
சிறகுகளாலே உடைப்போம்
ஜி. ஆரைப் போலவே எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் அவர்களையும் என் ஆழ்மனதை ஆசுவாசப் படுத்துபவராக பார்க்கிறேன். அவர் தொடர்ந்து பெண்ணடிமைக்கு எதிராக மிக நுட்பமாக செயலாற்றி வருகிறார். அவர் எழுதிய பல நூல்கள் இந்த விசயத்தை வலியுறுத்துகின்றன. அதில் மிக முக்கியமானதாக நான் பார்ப்பது அவரின் “எசப்பாட்டு” என்கிற கட்டுரை நூல்தான். அது ஒவ்வொரு ஆணின் கையிலும் இருக்க வேண்டிய பொக்கிசம். உலகம் முழுக்க இருக்கும் பெண்களின் விலங்குகளையும் விடுதலையையும் பற்றிப் பேசும் நூல். அவர் தன் வாழ்வையும் பேசுவதைப் போலவே நடத்துகிறார் என்பதே ஆச்சரியம். பெரும்பாலும் எல்லா படைப்பாளிகளும் பேனாவை வைத்து எழுதிக் கொண்டும், வானத்தைப் பார்த்துச் சிந்தித்துக் கொண்டும், புகைத்துக் கொண்டும் ஃபோட்டோவிற்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கையில் அம்மி அரைத்தபடியான தனது புகைப்படம் சமூக ஊடகங்களில் வலம் வந்ததை பெருமையாக எண்ணிய மாமனிதர் இவர்.
தோழர் ச.தமிழ்செல்வன் அவர்கள் நான் எழுதி உலகத் தமிழ் நெஞ்சங்களில் தனி நாற்காலி போட்டமர்ந்திருக்கும் “ஆத்தா ஓஞ்சேல” பாடலுக்கு எதிர்மறை கருத்துரைப்பவர். பெண்ணை அல்லது தாயை கனிவோடும் தெய்வீகத் தன்மையோடும் பார்ப்பதை விரும்பாதவர். பெண்ணுக்கு சுதந்திரமே முக்கியமென்று கருதுவதால் பெண்ணை வீரமெழ பாடவேண்டும் என விரும்புபவர். தமுஎகச வின் மாநில கௌரவத் தலைவராக இருந்து ஆயிரக்ணக்கான தோழர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் தோழர் ச.தமிழ்செல்வனின் கருத்தில் எனக்கும் முழு உடன்பாடுண்டு எனினும் கரடுமுரடான மனித மனங்களின் முதல் நிலை கட்டமைப்பிற்கு கண்ணீரை வரவழைத்து நெகிழச் செய்யும் “ஆத்தா ஓஞ்சேல” போன்ற பாடல் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன். இப்பாடல் ஒலிக்கும் மேடையெல்லாம் இதற்கு எதிர் கருத்து வைத்துவந்த அவர் ஒருநாள் என்னை அழைத்து, மனதை கலங்கடிக்கும் பாடல் எழுதும் உங்களால் தான் கம்பீரமான பாடலையும் எழுதமுடியும் என உசுப்பேத்தி விட்டதில் உதித்த பாடல் தான் கீழே.
பல்லவி:
தேவதையும் இல்ல தெய்வமும் இல்ல
மனுசி தானம்மா நீ
பெண்ணின் குணமெனச் சொன்னவை எல்லாம்
பழமை வாதிகளின் பொய்
நிமிரவும் கொஞ்சம் திமிரவும்
தோழி வாராய்.. மூன்றாம் போராய்..
சரணம் – 1
நிலவென்று போற்றி கவிதைகள் பாடி
துணிகள் துவைக்க விட்டானே
மலரென்று கொஞ்சி மகிழ்ந்தவன் உன்னை
சமையலறையில் நட்டானே
தலையில் மட்டுமா நேர்கோடு
வளைவு எதற்கு வாழ்வோடு
நெஞ்சம் வேண்டும் நெருப்போடு
அன்பால் செய்து தந்தாலென்ன
திரிய வேண்டுமா விலங்கோடு
சமத்துவ கொள்கையில் ஒத்துப் போகிற
கணவனோடு நீயும் கருத்தரி
பிள்ளை பெற மட்டுமே பெண்ணென்றால் – உன்
கர்ப்பப் பையினை அறுத்தெறி
சரணம் – 2
மதமெல்லாம் கூடி மடமைகள் செய்துன்னை
அடிமைப் பொருளென வைத்ததம்மா
பக்தியில் நீயும் றெகையை மறக்க
மண்ணுக்குள்ளே தான் புதைத்ததம்மா
என்ன ஆடை உடுத்த வேண்டும்
என்ன வேலை பார்க்க வேண்டும்
நீயே முடிவை எடுக்க வேண்டும்
உரிமை சாவி எவன் கொடுப்பதும்
நீதான் பூட்டை உடைக்க வேண்டும்
கால காலமாய்க் காத்து வந்ததால்
உன்னதுதானே நெருப்பு
உனை அடிமை செய்திடும் கொடிய மிருகத்துக்கு
கொள்ளி வைப்பதுன் பொறுப்பு
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி