இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75 – சுகந்தி நாடார்
கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்
ஒரு காலத்தில் கணினியும் கணினியியலும் ஒரு தனிப்பிரிவாக ஒரு அறிவியலின் ஒருஅங்கமாகக் கருதப்பட்டது. இப்போது கூட STEM என்று சொல்லிக் கொண்டு அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணக்கு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அமைத்து கொடுப்பதோடு இவை நான்கும் இணைந்த ஒருத் தனிப்பிரிவாக பிரிக்கப்பட்டு கற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அறிவியல்பிரிவு, சமுதாய அறிவியல்பிரிவு, வீட்டுமேலாண்மை அறிவியல் என்று மூன்று பிரிவுகளாக பதினோராம் பன்னிரண்டாம் மாணவர்களுக்கு இருக்கும். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து இருப்பவர்களுக்கு, அறிவியல் பிரிவிலும் கணிதம் கணினிப்பிரிவிலும் சிக்கலில்லாமல் இடம் கிடைக்கும்.
இப்போது தமிழ்நாட்டில் எப்படி நடக்கின்றது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது ஒரு மாணவர் பயிலும் எல்லா பாடங்களிலும் இவை ஊடுருவி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. உலக தரத்தின்படி 20ம் ஆண்டு தொடக்கத்தில் அறிவியியல் பாடங்களை எடுத்துப் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் மிகக்குறைவாக இருந்தனர். இது பல பிரச்சனைகளை உருவாக்கும் என்று கருதிய அமெரிக்க தேசத்து அறிவியில் நிறுவனம் பிரதான அறிவியல் பாடங்களை என்று பெயர் கொடுத்து மாணவர்களுக்கு தொடக்க நடுநிலைப்பள்ளிகளிலேயே அவர்களுடையப் பாடத்திட்டத்தின் அடிப்படையாக இருக்கவேண்டியக் கட்டாயத்தை உணர்த்தினர்.
அதன் விளைவாக இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு வகையில் அமெரிக்கநாடு பலன் அடைந்து இருந்தாலும், மிக, மிக முக்கியமான மாற்றம், கணினியிலும் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் ஏற்பட்டது. இந்த மாற்றம் எந்த அளவிற்கு என்பதை இன்றைய அன்றாட வாழ்க்கையில் நாம் தினம்தினம் அனுபவித்து வருகின்றோம். தரவுகளின் இராஜியமாக உலகமே மாறிவிட்டது என்னும் பொழுது எந்தத் துறையை எடுத்துப் படித்தாலும் மாணவர்களில் கணினியியல் தகவல் தொழில்நுட்ப இயல் இரண்டிலும் இளம் வயதிலிருந்தே முறையாகக் கற்றால்தான் அவர்களால், அவர்கள் படிப்பைக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளமுடியும்.
கணினியியல் தகவல்தொழில்நுட்ப அறிவு என்று சொல்லும்போது, கருவிகளும் தொழில்நுட்பங்களும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது முதல் குறிக்கோளாக இருந்தாலும் அடிப்படை கணினிஅறிவு ஒருவருக்கு ஒரு அனுபவ அறிவாகக் கண்டிப்பாகத் தேவைப்படுகின்றது. ஒரு கல்விமுறையில் கணினியியலின் அனுபவ அறிவு மட்டுமின்றி மிக ஆழமான தெரிதலும் புரிதலும் கொண்ட கணினி ஆளுமையும் வல்லமையும் இன்றைய மாணவர்களுக்கு கண்டிப்பாகத் தேவையாக உள்ளது.
இது மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையின் மறுபக்கம் என்ன? கணினி ஆளுமையும் வல்லமையும் பெறக்கூடிய வாய்ப்பு இல்லாத ஒரு சமுதாயம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே உருவாகி வருகின்றது. உலகின் மனிதவளத்தில் ஒரு சமமின்மைக் காணப்படுகின்றது. அதற்கு ஏழ்மை, அரசியல் சூழல் என்று நாம் காரணங்களை அடுக்கினாலும் நாம் அனைவருமே நமக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கின்ற சேவைகளே போதும் என்று உலகின் மிக முக்கிய கணினி நிறுவனங்களை சார்ந்து இருக்க ஆரம்பித்து உள்ளோம்.
அந்த நிறுவனங்கள் நமக்குக் கொடுக்கும் சேவைகளுக்கு ஏற்றபடி நம் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு வருகின்றோம். மறுமலர்ச்சி காலத்திலிருந்து உலகில் எத்தனையோ கண்டுபிடிப்பகள் ஏற்பட்டன. அவற்றில் மின்சாரம், கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பு, அணுசக்தி கண்டுபிடிப்பு, விமானத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் என்று நாம் சில முக்கியமானத் தொழில்நுட்பங்களோடு இன்றைய தகவல்தொழில்நுட்ப கணினியியல் தொழில்நுட்பம் உலகில் கொண்டுவந்த தாக்கங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்படி ஒரு கல்வியாளர்களாக ஆராய்ச்சியாளர்களா நாம் தரவுகளின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தகவல் தொழில்நுட்பம்தான் மனித இனத்தை வேரோடு மாற்றிக்கொன்டு இருக்கின்றது.
உலக வரலாற்றில் ஒவ்வோரு தொழில்நுட்பமும் மனிதகுலத்தின் மேன்மைக்காகக் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும் அப்படிப்பட்ட பயன்பாடுகளின் எதிர்விளைவுகளை நாம் இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். சென்னை வெள்ளம், மலேசிய வெள்ளம், ஆஸ்திரேலியா வெள்ளம், கலிபோர்னியாவில் காட்டுத்தீ, சூறைப்புயல்களின் தாக்கம் வழக்கத்திற்கு மாறான இடங்களிலும் காலத்திலும் பனிப்புயல் என்று நம்முடைய அன்றாட வானிலை இரு திசைதெரியா முள்ளாக அலைபுற்றுக் கொண்டு இருக்கின்றது. இவையெல்லாம் இயற்கையில் நம் அன்றாட தொழில்நுட்பங்களின் அதீத பயன்பாட்டினால் வந்தது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
மின்சக்தி நமக்கு இயற்கையில் கிடைக்கின்றது என்று பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் அவர்களால் 1752ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதை மின்சாரம் என்ற தொழில்நுட்பமாக மாற்றியது தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள். அவரைத் தொடர்ந்து சாமுவேல் இன்சுல் என்பவர் ஒரு ஆடம்பர மூலப்பொருளாக இருந்த மின்சக்தியை அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் குறைந்த விலையில் உற்பத்தி செய்தார். மின்சாரம் கண்டுபிடித்து ஏறத்தாழ 300 ஆண்டுகள் கழித்தும் இன்னும் ஏறத்தாழ 20% உலக மக்கள் தொகைக்கு சரியான வகையில் மின்சாரம் கிடைக்கவில்லை.
மின்சாரப் பற்றாக்குறை இன்னும் தீர்ந்தபாடில்லை. ஆனால் மின்சாரத் தேவைக்காக பயன்படுத்தபபட்டு நிலக்கரி தொல்லுயிர் எச்சம் எரிசக்திகளினால் பைங்குடில் வளிக்களான (greenhouse gas) நீராவி கரிமல வாயு, ஓசோன் நைட்ரேட் ஆக்ஸைடு, மீத்தேன் ஆகியவை சுற்றுச்சூழலை பாதித்துக் கொண்டே இருக்கின்றது என்று நமக்குத் தெரியும். அதனால்தான் நீர் காற்று சூரியசக்தி என்று இயற்கை வழியில் நாம் எரிசக்தியைக் கண்டுபிடித்துக் கொண்டு இருக்கின்றோம்.
நாம் பயன்படுத்தும் அடுத்தத் தொழில்நுட்பத்தில் மிக முக்கியமானது போக்குவரத்துத் தொழில்நுட்பம் இருசக்கரவாகனம் முதல் விண்வெளியில் செல்லும் விண்கலம்வரை அனைத்தும் தங்கள் கழிவுகளாக தங்கள் பங்கிற்கு சூழவியலை மாசுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. அதனால்தான் இன்று மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உற்பத்தியில் நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியையும் நடத்தி வருகின்றன. நாம் இன்று பயன்படுத்தும் மகிழுந்து 1885களில் கண்டுபிடிக்கப்பட்டது. 1903ல் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தனை நூற்றாண்டுகளில் இவற்றின் பாதிப்பு சூழவியலில் என்ன என்று தெரியுமா? ஒரு சராசரி நான்கு சக்கர மகிழுந்து 4.5 லிட்டர் கல்லெண்ணெயிலிருந்து (petrol) பயன்பாட்டில் எட்டு கிராம் கரிமல வாயுவையும் 4.5 லிட்டர் வளியெண்ணெய் (diesel) பயன்பாட்டிலிருந்து ஏறத்தாழ பத்துகிராம் கரிமலம் வெளியாகின்றது என்றும் அமெரிக்க சூழவியியல் ஆணையம் தெரிவிக்கின்றது. அமெரிக்க வாஷிங்டன் நகரிலிருந்து ஜெர்மனிவழி சென்னை சென்று அதேபோல ஒருவர் திரும்பிவரும் பயணத்தில் 4.6 டன் கரிமல வாயுவை வெளியிடுகிறது என்று myclimate.org என்ற தளத்தில் அறிந்துகொண்டேன். அணுசக்தியினால் இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட விளைவை உலகம் என்றுமே மறவாது.
நான் இவ்வாறு பாதகமான விளைவுகளை எடுத்துச் சொல்வதால் அந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்லவரவில்லை. கடந்த நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் தங்களின் மனித பயன்பாட்டைப் பார்த்தனரே தவிர அதனால் விளையும் பாதகமான விளைவுகளை எண்ணிப்பார்க்கவில்லை.
அதே போலத்தான் இந்த கணினித் தொழில்நுட்பமும். ஆப்பிள் நிறுவனத்தின் திறன்பேசி வெளிவந்த காலக்கட்டத்திலிருந்து கணினித் தொழில்நுட்பம் பொது மக்களிடேயே மிகவேகமாகப் பரவினாலும் அதனுடைய பாதகமான தாக்கம் இயற்கைச்சூழலை மட்டுமல்ல மனிதவளத்தையே சூறையாடிக்கொண்டு இருக்கிறது. மனிதம் என்பது கற்றலும் பொருள் ஈட்டுவது மட்டும் தானா? மனித நோக்கமே பணிசெய்து பொருள் ஈட்டி பலபல சொத்துக்களைப் பெருக்குவதுதான் என்றால் நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் என்ன வேறுபாடு ஐந்தறிவு உயிரினங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் அறம். ஒவ்வோரு உயிரினத்திற்கும் ஓர் அறம் உண்டு. ஆனால் மனிதனின் அறம் எது என்பதை எப்படி ஒரு சில தொழில்நுட்ப நிறுவனங்கள் நிச்சயிக்கலாம்?
இயற்கையை தன்னைச் சுற்றிய சக மனிதர்களை, அரவணைத்துப் போக நமக்குத் தெரியவேண்டுமே? இது இங்கே வாழ்க்கைத் தத்துவமாக சொல்ல வரவில்லை. தன்னையும் நம் சமுதாயத்தையும் நாம் பேணி வாழாவிட்டால் அங்கே சமூகம் என்பதே ஏது? நம்முடைய இன்றையக் கல்விமுறைகளும் அப்படிப்பட்ட ஒரு சிந்தனையை நமக்குள் வளர்க்கவில்லை. அறநெறி என்பது ஒரு தத்துவப் பாடமாகவோ அல்லது ஆன்மீகமாகவோதான் பார்க்கப்படுகின்றது என்றோ யாரோ போட்ட வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம். நாம் சுவாசிக்கும் காற்று மாசு பட்டபோது நாம் கவலைப்படவில்லை. நம் விவசாய நிலங்கள் மனைகளாக தொழிற்சாலைகளாக மாறும்போதும் நாம் கவலைப்பட்டதில்லை. கவலைப்பட்டவர்கள் எல்லாம் அதைக் கல்விச்சூழலில் கொண்டுவரவும் இல்லை.
சமுதாய நல்லிணக்க நோக்கு இல்லாத ஒரு கல்வி எத்தகைய எதிர்காலத்தை நமக்கு உருவாக்கும்?
மனிதனுடைய எதிர்காலம் எல்லைகளை அரசியலை கலாச்சாரத்தை மொழியை ஒரு கூட்டத்தினரின் தனித்துவத்தைப் பாதுகாப்பதிலும் அதை வளர்ச்சி அடையச் செய்வதிலுமல்லவா ஒளிந்து இருக்கின்றது. இப்படி சமுதாய நோக்கோடு கூடிய நன்னெறிகொண்ட தலைமைப்பண்பு நாளைய நிறுவனர்களுக்கு, நாளைய தொழிலாளிகளுக்கு, நாளைய அரசாங்கத்திற்குத் அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. அப்படிப்பட்ட அத்தியாவசியத்தை இன்றே இப்போதேப் பூர்த்தி செய்யத் தொடங்குவதுதான் கல்வி 4.0வின் அடிப்படை.
எப்படி அறிவியலுக்கான மனிதவளம் தேவை என்று தீர்மாணித்து STEM நம் பாடங்களில் கொண்டுவரப்பட்டதோ அதேபோல நம்முடைய எதிர்காலத்திற்கு இன்று பற்றாக்குறையாய் இருப்பது சமுதாய நல்லிணக்க நோக்கு சார்ந்த பாடப் பொருண்மைகள்? நம்மால் கொண்டுவர முடியுமா? நம் கல்வி முறையை மாற்றுவதன் மூலம் நம் புவியை இயற்கை அழிவிலிருந்து காக்க முடியுமா? மனிதவளத்தை மேம்படுத்த முடியுமா? முடியும் என்று சொல்கிறது கல்வி 4.0.
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்