வீராப்பு கவிதை – சூர்ய தேவி
காடு மேடெல்லாம்
கடந்து நடந்து
ஆடு மேச்ச ஆறுமுகத்துக்கு
கால் வயித்துக்
கஞ்சி குடிக்க நேரமில்ல;
சோம்பேறி பையன பெத்ததால
சூடு போட்டாப்புல
பேசினாலும்
தான் பெத்த புள்ளயாச்சே
அவனுக்கும் சேர்த்துதான் சோறு போடணும்;
காடு மேடெல்லாம்
கண்ணசந்து தூங்காம
நாலா பக்கமும்
ஆடு ஓடுமெனு
நட்ட நடு பகலுல ஒட்டு போட்ட
செருப்ப போட்டு ஓட முடியல;
பொண்ணு புள்ள ரெண்ட
கரசேர்த்தாச்சு
பொண்டாட்டியும் நீயும்
உட்கார்ந்து கஞ்சிய
குடியுமப்பானு
ஊரார் சொல்லியும்;
கேட்காம
காலு ரெண்டும் ஓடுதப்பா
மூணாவதா
சோம்பேறி பையன
கரசேர்க்கணுமுண்ணு;
இம்புட்டு செய்யுறயே
உம் மவனுக்கு
உனக்கென்ன கடைசியில
கஞ்சியா ஊத்தப்போரானு
கேட்ட ஊராருக்கு புரியும்படியா
ஆறுமுகம் சொன்னாரய்யா
கையும் காலும்
நல்லருந்தாபோதுமய்யா
கட்டையில போகும் வரை
இந்த கட்ட
கையேந்தாம வீரப்பா
பொழப்ப நடத்திப்புடும்னு.
– சூர்ய தேவி