ஊழல் குறைந்த மாநிலம் கேரளா ஏன்? கட்டுரை – அரவிந்த் வாரியார்  (தமிழில் அ.பாக்கியம்)

ஊழல் குறைந்த மாநிலம் கேரளா ஏன்? கட்டுரை – அரவிந்த் வாரியார் (தமிழில் அ.பாக்கியம்)




அரவிந்த் வாரியார்
(தமிழில்: அ.பாக்கியம்)

கேள்வி: தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா இருப்பது ஏன்?

பதில்: பின்வரும் காரணங்களால் தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா உள்ளது.

1) மலையாளிகள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மிக அதிகமாக உள்ளது. அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என மனுக்கள் தொடர்ந்து கொடுப்பதும் போராட்டங்களும் நடத்துகிறார்கள்.

2) எந்த அரசியல்வாதியையும் வணங்கும் பழக்கம் கேரளாவில் இல்லை. அரசியல்வாதிகள் எந்த தவறான செயல்களிலிருந்தும் தப்பிக்க முடியாது என்ற சூழல் நிலவுகிறது.

3) கேரளாவில் உள்ள மலையாள செய்தி சேனல்கள் அரசாங்கத்திற்கு இணங்கி போவது இல்லை. மேலும் அவை பிரைம் டைம் விவாதங்களில் அரசாங்கத்தின் குறைபாடுகளையும், கமிஷன் பற்றியும் விமர்சன ரீதியாக ஆய்வு செய்கின்றன.

4) மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளாவில் ஆட்சி அதிகாரம் மிகவும் பரவலாக்கப்பட்டுள்ளது. இது ஊழலின் அளவைக் குறைக்கிறது. ஏனெனில் பஞ்சாயத்துகள் உள்ளூர் நிர்வாகம் தொடர்பான பல விஷயங்களில் முடிவுகளை எடுக்க அதிகாரம் பெற்றுள்ளன.

5) கேரளாவில் டிஜிட்டல் கல்வியறிவு மிக அதிகமாக உள்ளது. இது அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான மனித தொடர்புகளைக் குறைக்கிறது. இது ஊழலைக் குறைக்கிறது.

நன்றி:
அரவிந்த் வாரியார் (Arvind variar.
Quora தளத்தில் எழுதியது.)

நூல் அறிமுகம்: அ.பாக்கியத்தின் “ஞாபகங்கள் தீ மூட்டும்!” – தாரைப்பிதா

நூல் அறிமுகம்: அ.பாக்கியத்தின் “ஞாபகங்கள் தீ மூட்டும்!” – தாரைப்பிதா



“ஞாபகங்கள் நிச்சயம் தீ மூட்டும்!”

நூல்: ஞாபகங்கள் தீ மூட்டும்
ஆசிரியர்: அ.பாக்கியம்
வெளியீடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
விலை: ரூ.100/-
பக்கம்: 136
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

தோழர் ஏ.பாக்கியம் எழுதிய “ஞாபகங்கள் தீ மூட்டும்” (DYFI போராட்டங்கள் சில துளிகள்) நூல் நேற்றுதான் 28.09.2022 கள்ளக்குறிச்சி மாநாட்டில் பிரதிநியாக கலந்து கொண்ட ஒரு தோழரிடம் வாங்கினேன்.

இன்று முழுமையாக ஒரே மூச்சில் வாசித்தேன். 136 பக்கங்களும் போனதே தெரியவில்லை. அதைவிட முக்கியம் 1978 முதல் 1996 வரை SYF மற்றும் DYFI களில் ஏறக்குறைய 18 ஆண்டுகள் ஓடிய ஓட்டங்களை அப்படியே புரட்டி போட்டுவிட்டது என்றால் மிகையல்ல.

அன்றைய போராட்டங்களில் ஆட்சியாளர்களின் தலையீடு இருந்ததை, போராட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டத்தை, போராட்டங்களின் உக்கிரங்களை போகிற போக்கில் பதிந்திடாமல், படம்போட்டு பதிந்துள்ளார் தோழர்  ஏ.பாக்கியம்.

ஆம், வேலை அல்லது நிவாரணம் வேலை உரிமை தடைச் சட்டம், பஸ் கட்டணம் உயர்வு, குடிநீர் தேவை, ரேசன் அட்டை, லஞ்சம் ஊழல் எதிர்ப்பு, மருத்துவ மனைகளில் மருத்துவ வசதி, குடிமனைகள் அமைத்தல் என எடுத்த கோரிக்கைகள் யாவும் அரசுடன் மோதி, அதிலே வெல்லாமல் விட்டதில்லை.

அல்லது வேறு வார்த்தையில் சொன்னால், அரசும் அதில் கவனமிட்டு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டின. இதுதான் அந்த போராட்ட உந்துதலுக்கு பிரதான காரணியாக இருந்தது. அதை மிக நுட்பமாக புள்ளி விபரங்களோடு இந்நூல் பதிந்திருக்கிறது.

பேருந்து கட்டண உயர்வுக்கான எதிர்ப்பு போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்கைது தமிழகத்தில்தான் நடந்திருக்கும். அந்தளவிற்கு அக்காலங்களில் DYFI ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்றால் மிகையல்ல.

அன்றைய கோரிக்கைகளை பார்த்தால், இதற்கெல்லாமா போராட்டம் நடத்தப்பட்டது என தோன்றும். உதாரணமாக சென்னை உள்ளிட்ட மாநிலமெங்கும் குடிநீர் போராட்டம்; மாநிலம் முழுவதும் ரேசன் அட்டைக்கு போராட்டம் இப்படி நிறைய குறிப்பிடலாம்.

ஆம், அந்த மாதிரியான கோரிக்கைகளுக்கு தற்போது அவசியம் இல்லையென்றாலும், இன்றைய இளைஞர் சமுதாயத்தின், ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளைக் கண்டறிந்து கையில் எடுத்து போராடினால், அன்றைய அரசுகளைப்போல், அரசு அதிகாரிகளைப் போல் செவி சாய்க்கும் நிலை இல்லாமல் இருப்பது ஒரு கசப்பான பேருண்மை.

ஆம், போராட்டங்களை நீர்த்து போகச் செய்யும் கலையை இன்றைய ஆட்சியாளர்கள் கற்று இருக்கிறார்கள். அவர்களின் பாணியில் நாமும் திருப்பியடிக்கும் கலையை கண்டறிந்தாக வேண்டியிருக்கிறது. இது அனைத்து அமைப்புகளின் போராட்டங்களுக்கும் பொருந்தும்.

இந்த நூலை என்னிடம் தந்த அந்த இளம் தோழர் சொன்னார்… _”அரைஞான் கயிறு, பூணூல் கயிறுகளில் சிறையில் கொடியேற்றப்பட்டதா? அடே சாமி”_ என்கிறார். ஆம், இதுதான் இந்த நூலின் வெற்றி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

தோழர் அகத்தியலிங்கம் கூறியதைப்போல்… அக்காலத்தின் கோரிக்கை போராட்டங்களை அந்த 4 (உறுதிமிக்க போராட்டங்கள்;  பன்முக செயல்பாடுகள்;  சித்தாந்த பயிற்சி; வலுவான அமைப்பு) கட்டத்திற்குள் அடக்கிவிடலாம்.

அது, அன்று மட்டுமல்ல என்றும் எடுத்து செல்ல வேண்டிய ஒன்று. அதற்கு இந்த நூல் அடித்தளம் அமைத்து தந்திருக்கிறது. அதற்கான உழைப்பை தோழர் ஏ.பாக்கியம் செலுத்தி இருப்பது சிறப்பு. மிகுந்த பாராட்டுக்குரியது.

தோழர் பாலா வரலாற்று ஆசிரியர்களை மேற்கோள் காட்டியிருப்பதைப் போல், “எந்த ஒரு வரலாற்றையும், முழுமையாக எழுத முடியாது” என்பது சத்திய வார்த்தைகள். அதைத்தான் தோழர் பாக்கியமும் இது ஒரு புள்ளி மட்டுமே என்கிறார் மிகுந்த தன்னடக்கத்துடன்.

ஆனால், என்னை பொருத்தவரை எடுத்த 15 பணிகளில் புள்ளி வைத்து கோலமிட்டு நிறைவாக செய்திருக்கிறார் இந்த நூலில். இதுபோல் பலநூறு போராட்டங்கள் கிளை, வட்ட,  மாவட்ட அளவில் இன்னும்கூட இருக்கக்கூடும். அவற்றை எல்லாம் தொகுத்தளிப்பது அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கு அதொரு கையேடாக நிச்சயம் இருக்கும். அதற்கான துவக்கப்புள்ளி இந்த நூல் என்று வேண்டுமானால் கூறிடலாம்.

ஆம், இதெல்லாம் இரண்டாயிரத்திற்கும் முந்தியவைகள். அதற்கு பிந்திய களம் பல பதித்த போர் பரணிகள் ஏராளம். அவற்றையும் பதிவிடல் வேண்டும்.

தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவக்க காலத்தில் முத்திரை பதித்த முத்தான 15 களப்பணிகளை அதே உத்வேகத்தில் பதிந்துள்ள தோழர் எ.பாக்கியம் பதிவும், அதை 15 அத்தியாயங்களாக  வடிவமைப்பும் அருமை. மேலும் அவற்றை நூலாக்கி மாநில மாநாட்டில் வெளியிட்ட DYFI மாநிலக்குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இன்றைய சூழலை புரிந்து,  அதற்கேற்ற முறையில் மிக நுணுக்கமாக போராட்டங்களை வடிப்பதில் இந்நூல் நிச்சயம் வழிகோலும். அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் கையில் தவழ்ந்தால், “ஞாபகங்கள் நிச்சயம் தீ மூட்டும்” என்றால், அது மிகையல்ல.

– தாரைப்பிதா… 
முகநூல் பதிவிலிருந்து
29.09.2022

நூல் அறிமுகம்: ஜனநேசனின் ‘எலோ..லம்’ நாவல் – சு.பொ. அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: ஜனநேசனின் ‘எலோ..லம்’ நாவல் – சு.பொ. அகத்தியலிங்கம்




நூல் : ஏலோ…லம்
ஆசிரியர் : ஜனநேசன்
விலை : ரூ.₹360/-
பக்கங்கள் – 384
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

ஏலக்காட்டின் வாழ்க்கை ஸ்கேன்: நேற்றும் இன்றும்.

“என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம்? பள்ளு , பறைக, மாதாரி , கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல, விலகி நிக்கல! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல …அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு !……..

ஏலக்காய் டீ யின் மணம் மூக்கைத் துளைக்கும். ருசி நாக்கை ஈர்க்கும் பாயாசம், பிரியாணி என பல்வேறு சமையல்களில் ஏலக்காயைப் பயன்படுத்தி மகிழ்வோம்! ஆயின் அந்த ஏலக்காயின் பின்னிருக்கும் வலியை அறிவோமா?

மலைக் காடுகளில் காபி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்களில் செடியின் மரத்தின் தூரில் உறைந்திருக்கும் இரத்தத்தை, கண்ணீரை பேசும் புதினங்கள் சிலவேனும் வாசித்திருக்கிறீர்களா?.

என் நினைவுக்கு எட்டிய சிலவற்றின் பெயர்களை கீழே நினைவூட்டுகிறேன். வாசித்தவர்கள் அசைபோடுவீர்! வாசிக்காதவர்கள் தேடி வாசிப்பீர்!

டி.செல்வராஜின் ‘தேநீர்’ , இரா. முருகவேள் மொழியாக்கத்தில் பி.எச்.டேனியலின் ‘எரியும் பனிக்காடு’, கொ மா கோதண்டம் எழுதிய ‘ஏலச்சிகரம்’, ‘குறிஞ்சாம் பூ’, ‘ஜன்ம பூமிகள்’, கு.சின்னப்பபாரதியின் ‘சங்கம்’ , ஜானகி ராமச்சந்திரன் மொழிபெயர்ப்பில் கோதாவரி பாருலேகர் எழுதிய ‘மனிதர்கள் விழித்துக்கொள்ளும் போது’ , இரா சடகோபனின் மொழிபெயர்ப்பில் கிறொஸ்டின் வில்சன் எழுதிய ‘கசந்த கோப்பி’ [ bitter berry] , அமல்ராஜின் ‘தேரிக்காடு’ உள்ளிட்ட புதினங்கள் மலைக்காடுகளில் பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் படும்பாட்டை, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழல்களில் விவரித்திருக்கும்; ஆயின் அடிநாதமாய் சுரண்டலும் ஒடுக்குமுறையும் பேசப்பட்டிருக்கும், அவரவர் அரசியல் சமூகப் புரிதலுக்கு ஏற்ப. [ நான் சொல்ல மறந்த நூல்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்க ]

அந்த வரிசையில் இடம் பிடிக்க வந்திருக்கிறது “ஏலோ… லம்”. ஆசிரியர் ஜனநேசன். ஏலத்தோட்டங்களின் வாழ்க்கைப் பாட்டை மையம் கொண்டு எழுதப் பட்டிருப்பதுதான் இப்புதினத்தின் சிறப்பு .

“இப்புதினத்தின் நிகழ்வுகள் எண்பது விழுக்காடு உண்மையானவை. இவர்களை ஒருங்கிணைக்கவே இருபது விழுக்காடு புனைவைக் கொண்டு நெய்தேன்.” என வாக்கு மூலம் தருகிறார் ஜனநேசன். ஏற்கனவே சிறுகதைகள், குறுநாவல்கள் தந்துள்ளார். இரா.வீரராகவன் என்பது இயற்பெயர். ஓய்வுபெற்ற அரசு கல்லூரி நூலகர்.

இந்நாவலில் சுமார் அறுபது அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலக்காட்டு வாழ்க்கையையும், 2019 -20 பணமதிப்பீட்டு கால வாழ்க்கையையும் இரண்டு பாகங்களாய் இரண்டு ஸ்கேன் ரிப்போர்ட்டுகளாய் 384 பக்கங்களில் தந்துள்ளார் .

பொதுவாய் தேயிலை, காப்பி, ஏலக்காய் என எதைத் தொட்டு எழுதினாலும் அட்டைக்கடியையும், சீட்டுகட்டுக் கணக்கான டப்பா போன்ற வீடுகளையும் சொல்லாமல் கதை நகராது; பெரும்பாலும் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே இங்கே வயிற்றுப்பாட்டுக்காய் அட்டைக்கடியுடனும் கடினமான பணிச்சூழலிலும் மல்லுக்கட்டி கிடப்பார்கள். ஆம், வாழ்ந்தார்கள் எனச் சொல்லவே முடியாது. ஆயினும் அச்சூழலிலும் காதலும் காமமும் சாதியும் மதமும் அறிவும் அறியாமையும் என வாழ்வின் எல்லா கூறுகளும் அங்கே விரவியே கிடக்கும். இப்புதினமும் அந்த வரையறைக்கு விதிவிலக்கல்ல.

கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டப்பாறை ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க தந்தையை இழந்த தன் மகன் ரவியை ஒண்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பே பொன்னுத்தாய் அழைத்துச் செல்லும் காட்சியில் நாவல் தொடங்குகிறது. ரவி வழியே புதினம் விரிகிறது.

அந்த தோட்டம் கிருஷ்ணராஜா என்பவருக்குச் சொந்தம்; அவர் எப்போதாவது வந்து போகிறவர். மேனஜர் வைரம் செட்டியார் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வருபவர், கணக்குப் பிள்ளை துரைசாமி கிட்டத்தட்ட ஆல் இன் அழகுராஜாவாய் ஆட்டம் காட்டுபவர். அவரின் உதவிக்கு குப்பய்யா .

இங்கே கங்காணிகள் பழனிச்சாமி கவுண்டர், சீனி மாதாரி, பரமன், சின்னாத்தேவர், இராமர், குரங்கு விரட்டி ரெங்கசாமி ஆகியோரின் கீழ் பொன்னுத்தாய், சிவனம்மா, மாரியம்மா உள்ளிட்ட பெண்கள், கோட்டி நாய்க்கர், மாரிமுத்து, முனுசாமி என ஒரு பட்டாளம் ஏலத்தோட்டத்தின் வேரில் தம் செந்நீரைப் பொழிந்து கொண்டிருந்தனர் .

“இல்லம்மா! என் கணுக்கால்ல அட்டைகள் ரத்தம் குடிச்சப்போ, சக்கிலிய வீட்டுப் பழனிதான் அட்டையைப் புடுங்கிப் போட்டான்; அண்ணாந்து காபி பழம் பறிக்கையில் நான் கீழே விழ இருந்தப்போ பள்ளவீட்டு செத்த குழலு இருளன்தான் காப்பாற்றினான்.! ஏம்மா, சக்கிலி பறையன்னா என்னம்மா?” என சிறுவன் ரவியின் வெள்ளந்தியான கேள்வி, நிலவிய யதார்த்தத்தைச் சொல்லும். ரவி மாடு மேய்க்கப் போன இடத்தில் அறிமுகமாகும் சித்திரன் எனும் ஓர் முதியவர் மூலம் மேலும் பல செய்திகளையும் பொது விஷயங்களையும் ரவி அறிந்தான். .

கள்ளர், தேவர், சக்கிலியர், பள்ளர், பறையர், நாய்க்கர், செட்டி இன்னும் பல சாதியாகத்தான் ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க வந்தார்கள். சாதி அவ்வளவு சீக்கிரம் தலைமுழுகுகிற சமாச்சாரமா? இல்லையே! ஆனால் வாழ்க்கைப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் சாதியை மீறி அவர்களை ஒன்றுபட வைத்ததை இப்புதினம் வலுவாகவே பதிவு செய்கிறது.

“கங்காணிகள் செய்கிற அட்டூழியத்தை சிவனம்மா சாமியாடுகிற மாதிரி முதலாளி காதில் போட்டிருச்சு! முதலாளி என்ன நடவடிக்கை எடுப்பார்னு பார்ப்போம்!” என்று பெண்கள் பேசிக்கொண்டனர் .

லட்சுமி அம்மன் ஒரு கடவுளாய் வழிபடும் கோயிலாய் மட்டுமில்லை. அவர்களின் ஆற்றாமையை, கோபத்தை, எரிச்சலை, அன்பை, வெறுப்பை கொட்டும் இடமாகவும் இருந்தது. “ இதயமற்றவர்களின் இதயமாக, ஏக்கப் பெருமூச்சாக” என மார்க்ஸ் சொன்னது போல் இருந்தது.

தோட்டத்தில் பிரச்சனை முற்றிய ஓர் நாளில், கணக்குப் பிள்ளை துரைசாமி சாதிக்கலவரத்தைத் தூண்ட பயன்படுவார் என கணக்குப் போட்டு தன் சக ஊழியராய் ஏற்கெனவே சேர்த்துக் கொண்ட குப்பய்யாவிடம், லட்சுமி அம்மன் பூஜை முடிந்ததும் கடுகடுப்புடன் வார்த்தைகளைக் கொட்டினார்..

“என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம்? பள்ளு, பறைக, மாதாரி, கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல, விலகி நிக்கல! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல… அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு! எம் முப்பது வருஷ அனுபவத்தில் இம்புட்டு திமிர் பிடிச்ச ஆளுகளைப் பார்த்ததில்லை! இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான்… … மக்கா மக்கான்னு அவங்களோடு ராத்திரி பகலா இணையுறீங்களே… அவங்கள வைக்கிற இடத்தில் வைக்கணும்..” என்று பேசி கிழட்டு மாடு போல் புஸ் புஸ்ஸுன்னு மூச்சுவிட்டார் துரைச்சாமி .

வில்லனாக காட்டப்பட்டிருக்கும் இதே துரைச்சாமி செத்த பிறகு எடுக்கப்பட்ட அவரின் கடிதம் அவருக்குள்ளும் ஈரம் இருந்ததை காட்டுகிறது. நூலாசிரியரின் இப்பதிவு நுட்பமானது .

யானை மிதித்து செத்த கோட்டி நாய்க்கர், பாம்பு கடித்து செத்த மாரியக்கா மரணங்கள் பல கேள்விகளை எழுப்பின; முளைவிட்டிருந்த சங்கத்தை போராடுகிற சங்கமாக மாற்றியது; வீரமிக்க போராட்டம் மூன்று உயிர்களைப் பலி வாங்கியது. போராட்டம் வென்றது. அடியாள், வஞ்சகம், சதி எல்லாம் காட்சியாகிறது. ஆனால் முதலாளியின் போக்காலும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளாலும் எல்லாம் பறிபோனது. தலைகீழானது .

51 அத்தியாயங்களைக் கொண்ட முதல் பாகத்தில் சுமார் அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலத்தோட்டத்தின் சமூக, அரசியல்,
பொருளாதார சித்திரம் கதையாக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் என்னுரையில் நூலாசிரியரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். கதா பாத்திரங்கள் பெரும்பாலும் நிஜத்தை சார்ந்து இருப்பதால் நாவலுக்கு உயிர்துடிப்பு தானே வந்துவிடுகிறது.

ஆயினும், எனக்கு சில ஐயங்கள் இங்கே வருவதை தவிர்க்கவே முடியவில்லை. ஒன்று மலைக்காடுகளில் நான் இதுவரை வாசித்தது போல் கேட்டறிந்தது போல் கங்காணிகள் கொடூரமானார்களாய் பொதுவாய்ச் சித்தரிப்பு இல்லையே விதிவிலக்குகள் தவிர! இது என் புரிதல் கோளாறா? இடதுசாரி போராட்டங்கள் விளைவாக ஏற்பட்ட சூழல் மாற்றமெனில் அதுகுறித்த தகவல்கூட போகிற போக்கில்கூட சொல்லப்படவில்லையே! ஏன்? அல்லது எழுத்தாளர் கண்டறிந்த உண்மை எனில் கேள்வி வாபஸ் !

இரண்டு, போலீசும், அரசு நிர்வாகமும் யார் ஆட்சியிலும் ஒடுக்குமுறைக் கருவிதானே! இடதுசாரி அரசு இருந்ததால் கொஞ்சம் வித்தியாசமாக பிரச்சனையைக் கையாண்டு இருக்கலாம். ஆயின் இப்புதினத்தில் விவரிப்பதுபோல் நேர்மையும் கண்ணியமும் உள்ளவர்களாக இருப்பார்களா?

மூன்று, ஐஎன்டியுசியிலிருந்து சிஐடியுக்கு கைமாற்றிவிட்டது போல் இப்புதினத்தில் சொல்லப்பட்டிருப்பது யதார்த்ததுக்கு நெருக்கமானதா?

11 அத்தியாயம் கொண்ட இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட ஓர் அரசியல் சமூக அறிக்கையே. தோட்டங்களின் குவிமையம் உடைந்து சிறு உடைமையாளர்கள் தோற்றம், வட இந்திய தொழிலாளர் வருகை, அவர்கள் படும்பாடு அவர்களின் பலம், பலவீனம், அரசு கொள்கையால் ஏற்பட்ட சரிவு, பண்வீக்கம் தொடுத்த தாக்குதல் என எல்லாம் பாத்திரங்கள் வழி சொல்லப்பட்டிருக்கிறது .

“காலையில ரொட்டி சுட்டு சாப்பிட்டுக்கிறாங்க. உப்பை தொட்டு பச்சை மிளகாய் வெங்காயத்தை கடிச்சுகிட்டு திங்கிறாங்க.. அதில் என்ன ருசியோ என்ன சத்தோ தெரியலை! கருமாயப்பட்ட பொழப்பு….. சாயந்திரத்தில குடிக்கிற பெண்ணுகளும் இருக்காங்க…” இப்படி அவர்களின் வாழ்க்கைப் பாட்டையும் அரசியல் சமூக விழிப்புணர்வற்ற அவர்களின் அறியாமையையும் ஆங்காங்கு நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார் .

புலம் பெயரும் தொழிலாளர்களுக்காய் அரசு என்ன பாதுகாப்பு வைத்திருக்கிறது. ஒன்றுமில்லை. மாறாக கூலியைக் குறைக்க நேரம் காலமின்றி சுரண்ட சட்டத்தை காலில் போட்டு மிதிக்க முதலாளிக்கு சர்வசுதந்திரத்தை தந்துள்ளது. அது இப்புதினத்தில் சாத்தியமான அளவு சொல்லப்பட்டிருக்கு .

பணவீக்க நடவடிக்கையின் போது நோட்டை மாற்ற கமிஷன் பெற்ற பாஜகவினர் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அது பெரும் உண்மை.

சிறுகதை எழுதுவதில் கொடிகட்டியவர் ஜனநேசன், நெடுங்கதை எழுத 2004ல் தொடங்கி அப்போது ஓர் கள ஆய்வு, 2019 ல் ஓர் கள ஆய்வு என இரண்டு கள ஆய்வுகள் செய்து இந்நாவலை 15 ஆண்டுகாலமாக நெய்துள்ளார். கதைக் களத்திற்கு ஏற்ப தேவையான மலையாளம் கலந்த தமிழ் நடையும், புரிகிற மாதிரியான உரையாடலுமாய் கதையை நகர்த்துவதில் ஜனநேசன் வெற்றி பெற்றுள்ளார்.

கள ஆய்வு செய்து புதினம் எழுதுவது மேற்கத்திய உலகில் அதிகம். தமிழில் மிகக்குறைவு. ராஜம் கிருஷ்ணன் இதில் கிட்டத்தட்ட முன்னத்தி ஏராய் தடம் பதித்தார். அவ்வழியில் ஜனநேசனும் பயணப்பட்டிருப்பது மிக நன்று. பாராட்டுக்கள். தொடரட்டும் இப்பணி!

சு.பொ.அகத்தியலிங்கம்.
20/8/2022.

நூல் அறிமுகம்: ஜனநேசனின் எலோ..லம் நாவல் – விசாகன்

நூல் அறிமுகம்: ஜனநேசனின் எலோ..லம் நாவல் – விசாகன்




நூல்: எலோ..லம் 
ஆசிரியர்: ஜனநேசன்
விலை: ₹384
பக்கங்கள்: 384

வெளியீடு: பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

தமிழகத்தில் “மாபெரும்” அல்லது “ஒட்டுமொத்த – தலைகீழ்” அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்த வருடமான 1969ல், தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கேரள மலை வனப்பகுதியில், தேனி மாவட்டத்திலிருந்தும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏல விவசயாக் கூலியாகப் போய், அங்கேயே தங்கி தலைமுறைகளைக் கழித்த ஒரு கூட்டத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையில் அங்கு சற்றேறக்குறைய பத்தாண்டுகாலம் கழித்த, கனத்த, அடர்ந்த, வறண்ட பொழுதுகளையும், பாடுகளையும் இண்டு இடுக்கு விடாமல் அங்குலம் அங்குலமாக அலசியாராய்ந்து எழுதி அதை *“ஏலோ…லம்” என்ற பெயரில் நமக்குப் புதினமாகத்  தந்திருக்கிறார் எழுத்தாளர் ஜனநேசன்.

கணவன் இறந்தபின்பு பிழைப்புக்காக ஏல விவசாயியாகச் செல்ல முடிவெடுக்கும் பொன்னுத்தாய், அவளது சிறார் வயதுப் பையன் ரவியை அழைத்துக்கொண்டு வட்டப்பாறை ஏலத்  தோட்டத்திற்கு இடம்பெறும் இடத்திலிருந்து துவங்குகின்றது கதை. இடைச்சாதியனருடன், கீழ்ச்சாதியாகக் கருதப்பட்டிருந்த சக்கிலியர், பள்ளர், பறையர் உள்ளிட்ட அனைத்து சாதியினரும் பஞ்சம் பிழைக்க ஏல மலை ஏறிவரும் காலமாக அது இருந்தது. ஆண்பள், பெண்கள், வயதானவர்கள், சிறுவர்கள் என பாரபாட்சமின்றி, பணிப்பாதுகாப்பற்ற, உயிர்பாதுகாப்பற்ற, உழைப்புக்கேற்ற கூலியற்ற, அரைவயிற்றுக் கஞ்சி மட்டுமே உறுதியாகத் தென்படுகின்ற, குருதி உறிஞ்சும் அட்டைக்கடி, பெரும்பெரும் கொசுக்களின் கடி, காட்டு யானைகளின் அச்சுறுத்தல், பாலியல் சுரண்டல் இவைகளுக்கிடையே ஒரு முறைசாரா தொழிலாளர்களாகவும், கடும் உழைப்பினைக் கோருகின்ற இடத்திலும் இவர்கள் தங்கள் வாழ்வை ஒப்புக் கொடுக்கிறார்கள்.

ஓய்வற்ற அடக்குமுறைகளுக்கிடையே அந்த குளிர்மிகு அடர்ந்த வனப்பகுதியில் இறுக்கமாக நகரும் இவர்களின் வாழ்க்கையின் பின்னணியிலும், உழைப்பின் ஆதாரத்திலும் வட்டப்பாறை ஏலத் தோட்டத்தின் ராஜபாளையத்து முதலாளியின் சொகுசு வாழ்க்கை பொதிந்துகிடந்தது என்பது அந்த கேட்பாறற்ற கூலிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பணி நேரத்தின்போது மலை யானையைக் கண்ட கோட்டிநாயக்கம் மிரண்டு விழுந்து காயம் பட்டு இறந்து போகும் சமயத்தில் அந்தோட்டத் தொழிலாளர்களின் ஆழ்மனத்தில் அவர்களையறியாது பற்றிக்கொண்ட எதிர்ப்பு அரசியல், குரங்கு விரட்டியின் அலட்சியத்தால் குரங்கு மேலெ விழுந்து இறந்துபோகின்ற மாரியம்மாள் என்ற ஒரு பெண்ணின் மரணத்திற்குப் பின்னர் அவர்கள் அறிந்தே வெளிப்படத் தொடங்குகிறது.

அந்த சமயத்தில், அத்தோட்ட முதலாளி, சர்வதேச ஏல விவசாயியாக மாற வேண்டும் என்பதால், தொழிற்சங்கம் தனது விவசாயப் பகுதியில் இருக்க வேண்டும் என்ற அதற்கான நிபந்தனையின் படி, காங்கிரஸ் தொழிற்சங்கத்தை தனது தொழிலாளர்கள் மத்தியில் ஊடுறுவச் செய்திருந்ததால், இவ்விரண்டு மரணப் பிரச்சனையையும் அத் தொழிற்சங்கம் கையாள்கிறது.

சிறுசிறு அளவிலான போராட்டங்கள், சமரசம், போதாமை,  மீண்டும் பேச்சுவார்த்தை என்று சங்கத்தாருக்கும், தொழிலாளர்களுக்கும், முதலாளிக்குமிடையே நடந்து வருகின்றது.

எதிலும் தீர்வற்ற, பிரச்சனைகளையும், தேவைகளையும் தள்ளிப்போடுகின்ற நிலையே தொடர்கிறது.

இதனுடாக தொழிலார்களின் வாழ்வு நகர்கிறது என்பதை கதை அதன் போக்கில் சொல்லிச் செல்கிறது.

தொழிற்சங்கம் இருந்தும் பிரச்சனைகள் தீர்வதில் இருக்கின்ற சுணக்கத்தைக் கண்டுகொண்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுக்க, அவர்கள் தங்களுக்குத் தரப்படுகின்ற அரசியல் நெருக்கடியை தொழிலாளர்களிடம் வெளிப்படையாகச் சொல்லி, அவர்களை சிஐடியு சங்கத்தில் சேந்து செயல்பட வலியுறுத்துகிறார்கள்.

தொழிலாளர்களும், தோழமை உணர்வு கொண்ட சிஐடியு சங்கத்தில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறார்கள்.

அதன்பின்னர் அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை அருகில் வரத் தொடங்குகிறது.

வேலை நிறுத்தம், பேரணி, கலவரம், உயிரிழப்பு எனத் தொடரும் நாட்கள், ஒரு கட்டத்தில் அரசின் உதவியோடு முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் படுகிறது.

இறந்தவர்களுக்கு நிவாரணத் தொகை, தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம், குளிர்காலப் படி, மழைக்காலப் படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வரையறுக்கப்படுகிறது. இதற்கிடையில் முதலாளி மற்றும் அவருக்குக் கீழே பணியாற்றுகின்ற மேலாளர், கணக்குப்பிள்ளை போன்றோரின் சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் முயற்சிகளிலும் தொழிலாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

தொழிலாளர்களை மிரட்டுவதற்காக முதலாளியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாண்டியன் வகையறா ரவுடிகளின் தொல்லைகளிலிருந்தும் தொழிலாளர்கள் தங்களைத் தற்காக்கின்றார்கள்.

இதுபோன்ற எச்சரிக்கை உணர்வுகள் தொழிற்சங்கம்தான் கற்றுத் தந்தது என்பதில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கிடையிலும், தொழிலாளர்கள் குடும்பத்திற்குள் நடக்கின்ற காதல் உணர்வுகள், காமக் களியாட்டங்கள், உறவுமுறைக் கொண்டாட்டங்கள், குலதெய்வ வழிபாடுகள் என அனைத்தும் வந்து கடக்கிறது அவர்களுடைய அந்த வாழ்வில்.

ஒருக்கட்டத்தில், ரவுடியான பாண்டியன் வகையறாக்கள் கஞ்சாச் செடிகளை சட்டவிரோதமாக வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்ப்ப்படுகின்றார்கள்.

அதனால் வந்துவிட்ட விசாரணைக் கிடுக்கிப்பிடிகளைக் காரணம் காட்டி, ஒரு சில கூலித் தொழிலாளர்களைத் தவிர அனைவரையும் 200 ரூபாய் பொங்கல் பணம் கொடுத்து, பொங்கலைக் கொண்டாடிவிட்டு வருமாறு அனுப்புகிறார் முதலாளி.

ஏமாந்த கூலிகள், பணம் கிடைத்த மகிழ்ச்சியில் தங்களது ஊரைப் பார்க்கக் கிளம்புகிறார்கள். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி முதலாளி தன்னுடைய பெரும்பகுதி நிலங்களை விற்றுவிடுவதால் ஊருக்கு வந்திருந்த கூலித் தொழிலாளிகள் மீண்டும் ஏலமலை விவசாயப் பகுதிக்குத் திரும்ப முடிவதில்லை என்பதோடு முதல் அத்தியாயம் முடிகிறது.

294 பக்கங்களைக் கொண்ட முதல் அத்தியாயத்தின் பலம் தேனி மாவட்டத்து வட்டார மொழி.

அக்காலத்து மக்களின் அதுவும் கடைநிலைக் கூலித் தொழிலாளர்களின் வாய்மொழி அப்படியே அச்சு அசலாக எழுத்தாக வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டுச் சொல்ல இயலாத வகையில் ஒவ்வொரு வரியுமே வட்டார மொழியின் மணத்தைப் பரப்புகிறது.

வாசிக்க வாசிக்க அத்தனை இன்பம்.

மேலும், “இருண்ட காட்டில் பொழுது பார்ப்பது என்பதே மகிழ்ச்சியான விசயம்! தங்கத்தினால் உருக்கிண தண்ணி மாதிரி பொழுது மரக்கிளைகளுக்கிடையே விழும்! அது விடும் இடத்தில் நிற்கும்போது உடல் சிவந்து சூடேறி உடம்பெல்லாம் பரவுவது இதமாக இருக்கும்.

ஈரத்தில் பத்தத மேனியில் வெயில்படும்போது சுருங்கிய தோல் எல்லாம் விரிவது தொட்டாச்சினுங்கி இலை விரியறதைப் பார்க்கிற மாதிரி இருக்கும்” மற்றும் “வானத்தில் மறைக்க மறைக்க வரும் கருமேகக் கூட்டத்தில் நழுவி நழுவிவரும் நிலவின் விளையாட்டு அவர்களின் நடப்பு வாழ்க்கை நிகழ்வுகளோடு ஒத்துப்போவதாக இருந்தது” என்பது போன்ற இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை, அந்த தருணத்தை விளக்குவதாகட்டும், “ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேயிலைப்புதர்கள் தீண்டுவாரில்லாமல் சிலிர்த்துக் கிடந்தன” என்று உவமைப்படுத்துவதாகட்டும், இதுபோன்றவைகள் நாவல் முழுமைக்குமே  விரவிக்கிடக்கின்றதைப் பார்க்கும்போது மனதுக்கு அத்தனை நெருக்கமான உணர்வை அம்மக்கள் மீது கொண்டு வருகிறது.

தொழிற்சங்க வரவிற்குப் பின்னர் தொழிலாளர்கள் மனதிலும், நடைமுறை வாழ்விலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அழகாக விளக்கியிருக்கிறார் எழுத்தாளர் ஜனநேசன்.

“சிதறி பரவலாக இருக்கின்ற சூரிய வெளிச்சத்தைக் கண்ணாடி வில்லை வழியா ஒன்று சேர்த்தால் தீப்பத்த வைக்க முடியும்னா சிதறிக் கிடக்கிற நாம ஒன்றுசேர்ந்தா நாம ஜெயிச்சிடலாமில்ல” என்ற ரவியின் கருத்தினை புரிந்து உள்வாங்கிய தொழிலாளர்களாக அவர்கள் மிளிர்வதை நாம் காணமுடிகிறது.

ரத்தம் தோய உழைப்பது, ஏமாற்றப்படுவது, போராடுவது, முதலாளிகளின் சூழ்ச்சிக்குப் பலியாவது, மீண்டும் போராடுவது, தனது இருப்பை அந்தப் போராட்டத்தின் மூலம் தெளிவுப்படுத்துவது என இவர்களின் வாழ்க்கை நீள்கிறது என்பது கண்கூடு.

சிவனம்மா, பங்கஜம் போன்றவர்களின் நெஞ்சைக் கிழிக்கின்ற கதைகளினுடாகவும், சித்திரக்கிழவன், ரவியின் உறவு மற்றும் உரையாடல்களாளும் புதினத்தை மெருகேற்றியிருக்கிறார் ஆசிரியர்.

எளிய மனிர்களின் வாழ்க்கை எண்ணிப் பார்த்துவிட முடியாத அளவிற்கு எத்தனை கடுமையானது என்பதன் காலத்தின் கண்ணாடியாகக் காட்டுகிறது இந்த ஏலோ…லம் என்கிற புதினம்.

ஏலத் தொழிளார்களின் வாழ்கையுடன் தொடங்கும் இப்புதினத்தில் இம்மியளவுகூட அவர்களின் வாழ்வைத் தாண்டிய வரிகள் வந்துவிடக்கூடாது என்பதிலும், எழுத்தாளரின் மூக்கு உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதிலும் மிகப்பிடிவாதமாகக் கவனம் செலுத்தியிருக்கும் எழுத்தாளர் ஜனநேசன்,

எந்தவொரு இடைச்செருகலும் இல்லாது அவர்களின் அந்தக் குறிப்பிட்ட கால வாழ்க்கையை அப்படியே தனது எழுத்துகளின் வாயிலாக நமக்கு உரித்துக்

காட்டியிருப்பதன் மூலம் வாசிக்கும் நமக்கும் அதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் வரவிடாமல் தடுப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

அந்த வகையில் இது ஒரு அசாத்தியமிக்கதும், பொறுமையின் உச்சத்திலிருந்தும் உருவாகியிருக்கின்ற படைப்பு என்பதில் மாற்றுக்கருத்திருக்காது.

ஏமாந்து தனது ஊரிலேயே தங்க நேருகின்ற பொன்னுத்தாய் மற்றும் அவளது மகன் ரவியின் அடுத்தக்கட்ட வாழ்க்கையையும், ரவி படித்து அரசின் உயர் அலுவலராகப் பொறுப்பேற்று பணிபுரிந்து ஓய்வு பெறுவதையும் நமக்கு உணர்த்திவிட்டு, 2016 வாக்கில் ஓய்வைப் பெறும் அவர், மீண்டும் தான் சிறார் பருவத்தில் கழித்த வட்டப்பாறை ஏலத் தோட்டப் பகுதிக்குச் சென்று பார்வையிடுவதையும், அங்கிருக்கின்ற மனிர்களைச் சந்தித்து உரையாடுவதையும், தற்போதைய தொழிற்சங்க நிலையை அலசியாராய்வதினுடாக, மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கி இரண்டாவது அத்தியாத்தை ஒரு 85 பக்கங்களில் சொல்லி புதினத்தை முடிக்கிறார்  ஜனநேசன்.

ஆனால், ஏலத்தோட்ட கூலிகளின் பாடுகளைச் சொல்லிவரும் உயிர்ப்பான பகுதிகளினூடாக, பணமதிப்பிழப்பு அரசியலைச் சேர்த்திருப்பது உணர்வுப்பூர்வமாக அதனுடன் ஒட்டவில்லை என்பதை மறுக்கமுடியாது.

இருப்பினும், பிரதி வெளிவந்தபின்பு அதை நாம் புறக்கணிக்க முடியாது என்பதால், அன்றைய கால அரசியல் நிலைமையைப் பதிவு செய்கின்ற ஒரு பகுதியாக நாம் அந்த விசயத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது.

ஏலச் செடி நடுவது, களை எடுப்பது, பழமெடுப்பது என ஒவ்வொன்றும் துளயளவிறகும் விட்டுவிடாமல் அது குறித்த செய்திகளை சிரத்தையோடு பதிவு செய்திருப்பது அந்த ஏல மணத்தைவிட வாசிக்கும்போது நாம் அனுபவிக்கின்ற அற்புத மணம் ஒப்பற்றது. அதிகாரவர்க்கத்தின் வரலாறு மட்டுமே பதியப்படுகிறது என்ற நிலையில், சமகாலத்தில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளும், வரலாறும் ரத்தமும் சதையுமாக அப்படியே பதிவு செய்யப்பட்டு வருகிறதன் வரிசையில் இந்த ஏலோ…லம் நாவலும் மிக முக்கியமாக கவனத்தை ஈர்க்கிறது.

“நம்மில் தோன்றும் நிறபேதங்கள் தற்காலிம், கற்பிதமானவை! இயற்கையில் சமத்துவமானவை! பேதத்தைக் கைவிடுவோம் என்ற ஞானம் வந்தால் மோதலில்லை! சாதலுமில்லை! இதை எப்போது புரிவோம்! எப்போது தெளிவோம்!” என்ற ஆசிரியரின் ஏக்கப் பெருமூச்சு கொண்ட வாக்கியம் நம்முள் சிந்தனையைக் கிளர்த்துகிறது.

வாசகனின் சிந்தனையைக் கிளர்த்துவதுதானே படைப்பிலக்கியத்தின் ஆகப்பெரும் செயல்.

எழுத்தாளரின் செயல் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும் என்பது என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு!

நன்றி :
எழுத்தாளர் விசாகன்
தேனி

நூல் அறிமுகம் : விஜயானந்த லட்சுமியின் தேனி மகரந்தக் கருவூலம் தேடி (தேனி என்னும் தேனடை கட்டுரை) – பாவண்ணன்

நூல் அறிமுகம் : விஜயானந்த லட்சுமியின் தேனி மகரந்தக் கருவூலம் தேடி (தேனி என்னும் தேனடை கட்டுரை) – பாவண்ணன்



தேனி என்னும் தேனடை
பாவண்ணன்

01.01.1997 அன்று மதுரையிலிருந்து பிரிக்கப்பட்டு தேனி மாவட்டம் உருவானது. தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர், சின்னமனூர் போன்ற பல ஊர்கள் அந்த மாவட்டத்தில் உள்ளன. அனைத்தும் காடும் மலையும் சூழ்ந்த ஊர்கள். முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை, மேகமலை, வெள்ளிமலை, போடிமெட்டு, கும்பக்கரை அருவி, சுருளி நீர்வீழ்ச்சி போன்ற இயற்கைக்காட்சிகள் நிறைந்த இடங்கள் இங்கே நிறைந்துள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசும் காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் அடிவாரமெங்கும் நிறைந்துள்ளன.

இவையனைத்தும் தேனி என்னும் ஊரைப்பற்றிய புவியியல் சார்ந்த தகவல்கள். இப்படிப்பட்ட புள்ளிவிவரங்களைச் சேகரித்து தேனியின் வரலாற்றை எளிதாக எழுதிவிட முடியும். ஆனால் கவிஞர் விஜயானந்தலட்சுமி அப்படிச் செய்யவில்லை. ஊர்வரலாறு என்பதை மனிதர்களின் வரலாறாகப் பார்க்கும் மனம் கொண்ட அவர், வரலாறாக வாழ்ந்து மறைந்த ஆளுமைகளைப்பற்றிய தகவல்களைத் தேடித்தேடி இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் கவிஞர்கள், விடுதலைப்போராட்டத் தியாகிகள், மொழிப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மருத்துவமனை கட்டியவர்கள், நோய்நொடிகளிலிருந்து காப்பாற்றி ஊராரை வாழவைத்தவர்கள் என யாரேனும் ஒருவரைப்பற்றிய தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த ஆளுமைகளின் கொடிவழியில் வாழும் இன்றைய தலைமுறையினரைத் தேடிச் சென்று சந்தித்து உரையாடி, அவர்கள் வழியாகவே தகவல்களைப் பெற்று தொகுத்திருக்கிறார். இந்த நூலை ஒரு புனைகதைக்குரிய சுவாரசியத்துடன் வாசிப்பதற்கு விஜயானந்தலட்சுமியின் தொகுப்பாக்கம் ஒரு முக்கியமான காரணம்.

ராணி மங்கம்மாள் 1689 முதல் 1704 வரை மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர். கணவரான சொக்கநாதரின் மறைவுக்குப் பிறகு மகன் குழந்தைப்பருவத்தில் இருந்ததால், அவரே ஆட்சிப்பொறுப்பேற்று நடத்தினார். அக்காலத்தில் அவருடைய பாதுகாப்பாளராக இருந்தவர் சின்னமநாயக்கர். அவரைக் கெளரவிக்கும் வகையில் அவருடைய பெயரால் ஓர் ஊர் உருவாக்கப்பட்டு சின்னமநாயக்கனூர் என்று பெயர் சூட்டப்பட்டது. காலப்போக்கில் அந்த ஊரின் பெயர் சின்னமனூர் என்று மருவியது. அங்கே இந்துக்களுடன் ராணி மங்கம்மாள் அவர்களால் குடியமர்த்தப்பட்ட இஸ்லாமியர்களும் இணைந்து வாழ்ந்தார்கள். இரு வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் நல்லிணக்கத்தோடு அப்பகுதியில் வாழ்ந்தார்கள். ஏட்டில் எழுதப்பட்ட வரலாறு அந்தத் தகவலோடு நின்றுவிடுகிறது. இன்று வரலாற்றை எழுதுபவர்கள் இப்படி தகவல்களை மட்டும் திரட்டி அளித்தால் போதாது. அத்தகவல்களை வரலாற்றின் பின்னணியில் வைத்து நிறுவவேண்டும். கவிஞர் விஜயானந்தலட்சுமி தன் இயல்பான ஊக்கத்தின் காரணமாக மெனக்கிட்டு அலைந்து, அப்பகுதியில் வாழ்ந்த இஸ்லாமிய ஆளுமைகளைப்பற்றிய தகவல்களைத் திரட்டி, அந்த வரலாற்றை நிறுவியிருக்கிறார். மங்கம்மாள் காலத்து நல்லிணக்க வாழ்க்கைமுறை நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும் இன்றளவும் நீடித்திருப்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

விஜயானந்தலட்சுமி அளிக்கும் ஹாஜி கருத்த ராவுத்தர் பற்றிய தகவல்கள் அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆவலை அளிக்கின்றன. கருத்த ராவுத்தர் என அவர் அழைக்கப்பட்டாலும் அவருடைய இயற்பெயர் மீரான் ராவுத்தர். பிளேக் நோயால் மக்கள் மரணமடையத் தொடங்கியதும், தன் சொந்தச் செலவில் பஞ்சாபிலிருந்தும் லாகூரிலிருந்தும் மருந்துகளை வாங்கி அனைவருக்கும் வழங்கினார். ஏழைகளைக் காத்த அவருடைய வரலாற்றை அந்தோணிமுத்துப்பிள்ளை கவிதைகளாக எழுதியுள்ளார். அந்த வட்டாரத்தில் முதன்முதலாக மகப்பேறு மருத்துவமனையையும் தன் சொந்தச் செலவில் ராவுத்தரே தொடங்கிவைத்தார். மக்கள்நலம் சார்ந்த சிந்தனை அவரை விடுதலைப் போராட்ட வீரராக மாற்றியது. காந்தியடிகளின் வழியில் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைபுகுந்தார். கள்ளுக்கடை மறியலிலும் கதர்ப்பிரச்சாரத்திலும் தொடர்ந்து ஈடுபட்டார். அந்த ஊரில் உயர்நிலைப்பள்ளி உருவாக தனக்குச் சொந்தமான நிலத்தையே அன்பளிப்பாக அளித்தார்.

தேனி பகுதிகளில் வாழ்ந்த பாரதி நாராயணசாமி, க.அருணாசலம் போன்ற விடுதலைப்போராட்ட வீரர்களின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. ஏலம் மணக்கும் தேவாரம் என்னும் ஊரைச் சேர்ந்த பாரதி நாராயணசாமி 1934இல் சின்னமனூர், கம்பம், தேவாரம் போன்ற பகுதிகளுக்கு காந்தியடிகளை அழைத்துவந்து மக்களிடையே உரையாடவைத்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். க.அருணாசலம் ஓவலாபுரத்தைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையில் புதுமைப்பித்தனுடன் வகுப்புத்தோழராக படித்தவர். மதுரை அரிசனசேவா சங்கத்திலும் பெரியநாயகன்பாளையத்தில் பள்ளியாசிரியராகவும் பணியாற்றினார். பூசாரிக்கவுண்டன்பட்டியில் குடும்பத்தினரிடமிருந்து தன்னுடைய பங்காகத் தனக்குக் கிட்டிய வீட்டை சர்வோதயப்பணிகளுக்காக அன்பளிப்பாக அளித்துவிட்டார். காந்தியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் சில நூல்களை எழுதி வெளியிட்டார்.

காந்தியக்கொள்கைகளால் கவரப்பட்ட மற்றொரு கவிஞர் கம்பம் பீர்முகம்மது பாவலர். 1921இல் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு, கல்லூரியை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியில் இருந்தபோதும் சுதந்திரப்போராட்டத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் தன்னுடைய வேலையை உதறினார். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு பெல்லாரி மாவட்டத்தில் அலிப்பூர் சிறையில் ஓராண்டு தண்டனையை அனுபவித்தார். 1934இல் கம்பம் நகருக்கு வந்த காந்தியடிகளிடம் மூன்றாயிரம் ரூபாய் திலகர் நிதியாகத் திரட்டியளித்தார். கம்பத்தில் வாழ்ந்த மற்றொரு தியாகி டி.சையது முகம்மது. அவர்கள் இருவரும் சேர்ந்து கம்பம் கோட்டை மைதானத்தில் பெரிய மேடையை அமைத்து காந்தியடிகளை உரையாற்றவைத்தனர். 1935இல் தமிழ்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது நிலச்சுவான்தார்களிடமிருந்து தானியங்களைத் திரட்டி ஏழைக்களஞ்சியத்தை உருவாக்கினர். பாவலர் பீர்முகம்மதுவின் வீரம் செறிந்த பாடல்கள் இன்றளவும் கம்பம் பகுதியில் பாடப்படுகின்றன.

மக்கள் அனைவரும் அறிந்த நா.காமராசன், மு.மேத்தா, வைரமுத்து தேன்மொழிதாஸ் போன்ற கவிஞர்களுக்கு அப்பால் பலருடைய நினைவிலிருந்தே மறைந்துபோன சில கவிஞர்களைப்பற்றியும் ஏராளமான தகவல்களைத் திரட்டி பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. அவர்களில் முக்கியமான கவிஞர் அந்தோனிமுத்துப்புலவர். பாரதியார் வாழ்ந்த காலத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனுமந்தப்பட்டி என்னும் சிற்றூரில் வாழ்ந்தவர். மதுரகவி சீனிவாச ஐயங்காரின் உதவியால் தமிழில் புலமை பெற்று இசையோடு பாடல்களை எழுதினார் அவர். சிந்து, திரிபு விருத்தங்கள், சித்திரக்கவி புனைவதில் வல்லவராக இருந்தார். அந்தக் காலத்தில் பல நாடகங்களையும் நாடகங்களுக்கான பாடல்களையும் எழுதினார். அவர் எழுதிய இரட்சணிய சிந்தில் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தின் எல்லா மெட்டுகளும் காணப்படுகின்றன. அனுமந்தன்பட்டி தேவாலயம் பற்றியும் அக்காலத்தில் மக்களைத் தாக்கிய பிளேக் நோய்க்கு மறைத்திரு சாந்தப்பநாதர் என்பவர் அளித்த மருந்துகளைப்பற்றியும் அவர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

பிளேக்குகளில் ஐந்துவகை இருப்பதையும் ஒவ்வொரு வகை பிளேக்குக்கும் உரிய குணத்தையும் வரிசைப்படுத்தி ஒரு பாட்டாகவே பாடிவைத்திருக்கிறார் அந்தோனிமுத்துப்புலவர்.

அனல்போல் சுரங்காண்பது அக்கினி பிலேக்கு
அசையாமல் கிடப்பது எருமைப் பிளேக்கு
நினைவின்றி இறப்பது நித்திரைப் பிளேக்கு
ரத்தமாய்க் கழிவது ரத்தப் பிளேக்கு
வெறிகொளல் நொந்து வெறிப்பிளேக்கு

தேனி மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணைக்கட்டின் வரலாற்றையே சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்களும் பற்றாக்குறையும் மக்களை வறுமையில் ஆழ்த்தியது. மக்களைக் காக்கும் வழி தெரியாமல் அரசு திணறியது. ஜார்ஜ் பேரிஸ் என்பவர் வைகையின் துணைநதியான சுருளி ஆற்றுநீரை அதிகப்படுத்தினால் வைகை நீரைப் பெருக்கலாம் என்று முதலில் தெரிவித்தார். அவரே பெரியாறு நீரைத் தமிழகத்துக்குத் திருப்பும் ஆய்வறிக்கையை முதலில் தயாரித்தார். ஆய்வு செய்யும் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்ததால், அதற்குரிய அனுமதியைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. ஐந்தாண்டு காலம் தொடர்ந்த ஆய்வின் விளைவாக 172 அடி உயரத்துக்கு அணையை எழுப்பி, 433 அடி நீளமுள்ள சுரங்கப்பாதையை அமைத்து, அதன் வழியாக நீரைக் கொண்டுவந்து நிரப்பும் திட்டம் உருவானது.

முதன்மைப்பொறியாளராக 1884இல் பென்னி குவிக் பொறுப்பேற்றுக்கொண்டார். பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற கட்டுமானப்பணியின் விளைவாக இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ஒரு மாத அளவுக்கு தொடர்ச்சியாக பொழிந்த மழையின் காரணமாக உருவான வெள்ளத்தில் அணையின் பெரும்பகுதி சிதைந்தது. மனம் தளராத குவிக் மீண்டும் வேலைகளைத் தொடங்கினார். அணையின் உயரம் குறைக்கப்பட்டு ஐந்தாண்டு காலம் தொடர்ச்சியாக கட்டுமான வேலைகள் நடைபெற்றன. 1895இல் அணைக்கட்டு வேலை முடிந்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு அந்த நீர்ப்பாசனத்தால் பயனடைந்தது. உலகிலேயே முதன்முதலாக ஏரியில் நீரைச் சேமித்து, மலையைக் குடைந்து சேமித்த நீரை அணையின் எதிர்ப்புறம் திருப்பும் புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாக நிறைவேறியது. பென்னி குவிக்கின் நினைவைப் போற்றும் விதமாக, கிராமத்து மக்கள் தெய்வங்களை வணங்குவதுபோல அவருடைய உருவச்சிலைக்கு பொங்கல்வைத்து வழிபடுகிறார்கள் என்னும் செய்தி மெய்சிலிர்ப்பூட்டுகிறது..

பஞ்சாபில் படுகொலை செய்த கொக்கு அது
பழிபாவம் பார்க்காத கொக்கு
அஞ்சாமல் பாஸ்கரன் தமிழ்பாடி அதை
அடித்து விரட்ட வேண்டும் பாப்பா

என்று நாடக மேடையில் பாட்டு பாடி ஆங்கிலேயர் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் விஸ்வநாத தாஸ். நடத்துவது புராணநாடகமாக இருந்தாலும், பாடுவது புராணப்பாத்திரங்களுக்குரிய பாடல்களாக இருந்தாலும், நாடகத்தின் காட்சிகளுக்கு இடையிடையே இப்படி ஆங்கிலேய எதிர்ப்புப் பாடல்களைப் பாடி சுதந்திர வேட்கையை ஊட்டி வந்தார் அவர். சிவகாசியில் பிறந்து சென்னையில் மறைந்த அவருக்கு, தேனி மக்கள் சின்னமனூர் சாலையில் சிலையொன்றை நிறுவி உரிய முறையில் மரியாதை செலுத்துவருகிறார்கள். அதற்கான காரணத்தை விசாரித்து விரிவாகவே எழுதியிருக்கிறார் விஜயானந்தலட்சுமி. அயலூர்க்காரர் என்றபோதும் அவருடைய ஆங்கிலேய எதிர்ப்பு நாடகங்களுக்கு தேனிவாழ் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. விஸ்வநாததாஸ் மக்களின் மதிப்புக்குரிய கலைஞராக விளங்கினார். அவரை கைது செய்ய காவலர்கள் தேடி அலையும்போதெல்லாம் அவருக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தனர் சின்னமனூர் மக்கள். குறிப்பாக விடுதலைப்போராட்ட வீரரான ராவுத்தர் அவருக்கு ஆதரவாக இருந்தார். இருபத்தொன்பது முறை மேடையிலேயே காவலர்கள் அவரை கைது செய்தனர். அப்போதும் விஸ்வநாததாஸ் தன் ஆங்கிலேய எதிர்ப்பில் உறுதியாகவே இருந்தார்.

அடிக்கடி சிறைக்குச் சென்றுவிடுவதால், விஸ்வநாததாஸுடைய குடும்பம் வறுமையில் வாடியது. அவருடைய வீடு ஏலத்துக்கு வந்தபோது, அவருக்கு உதவுவதற்காக சென்னை ராயல் அரங்கில் ஐந்து நாட்களுக்கு நாடகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. எதிர்பாராத விதமாக உடல்நலம் குன்றியதால் முதல் மூன்று நாட்கள் நாடகம் நடைபெறவில்லை. நான்காவது நாள் வள்ளி திருமணம் நடைபெற்ற போது ஒரு பாடலைப் பாடும்போது மேடையிலேயே மயங்கி விழுந்து இறந்தார் விஸ்வநாததாஸ். அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றிய கலைஞர் என்ற அன்பின் வெளிப்பாடாக அக்கலைஞருக்கு சின்னமனூர் சாலையில் ஒரு சிலையை நிறுவி ஊர்மக்கள் கெளரவித்து வருகிறார்கள். ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆற்றலுக்கும் ஊராரின் அன்புக்கும் அடையாளமாக விஸ்வநாததாஸின் சிலை நின்றிருக்கிறது.
ஒருவரோடொருவர் அண்ணன் தம்பிகள் போலப் பழகும் இயல்புடைய மக்கள் வசிக்கும் சின்னமனூரில் ஒரு காலத்தில் தீண்டாமைச்சுவர் இருந்தது என்னும் கசப்பான உண்மையையும் பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. அவர் விரும்பியிருந்தால், தேனியின் ஒளிமிக்க பகுதிகளை மட்டுமே இப்புத்தகத்தில் முன்வைத்துவிட்டு, இருளடர்ந்த பகுதியை விலக்கிவைத்திருக்கலாம். ஆயினும் விஜயானந்தலட்சுமியின் சமநிலை நோக்கும் நேர்மையுணர்வும் அவரைச் சார்புநிலை அற்றவராக நிலைத்திருக்க வைத்திருக்கிறது.

சின்னமனூரில் வசித்த மேல்சாதிக்காரர்கள் தாம் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாது என்கிற எண்ணத்தில் 1946இல் கற்சுவர் எழுப்பித் தடுத்துவிட்டார்கள். அப்போது விடுதலைப்போரில் ஈடுபட்ட பல தியாகிகளில் ஒருவர் கோம்பை டேவிட் வில்லியமும் ஒருவர். அவர் மனக்குமுறலுடன் மதுரை ஆட்சியரைச் சந்தித்து ஒரு புகாரளித்தார். அச்சுவரை இடிப்பதற்கு ஒப்புதல் அளித்து ஆட்சியர் உடனடியாக ஓர் ஆணையை பிறப்பித்தார். ஊருக்குத் திரும்பிய வில்லியமுடன் ஒத்துழைக்க ஒருவரும் தயாராக இல்லை. வேறு வழியில்லாமல் ஒரு கடப்பாறையோடு மரக்கம்புகளைப்பற்றி சுவர் மீது ஏறி அவரே சுவரை இடிக்கத் தொடங்கினார். ஆட்சியரின் ஆணை என்பதால் மேல்சாதியினர் இயலாமையுடன் அமைதியாக நின்றிருந்தனர். சிறிது நேரத்தில் தாழ்த்தப்பட்டோரும் துணிவு வரப்பெற்று அவருடன் சேர்ந்து சுவரை இடித்துத் தள்ளும் வேலையில் இணைந்துகொண்டனார். தெருக்களுக்குக் குறுக்கில் நின்றிருந்த தீண்டாமைச்சுவர் மொத்தமாக இடிந்து வீழ்ந்தது. அந்த சுவர் நின்றிருந்த இடத்தின் மீதுதான் சின்னமனூர் முக்கியச்சாலை இன்று நீண்டு செல்கிறது என்னும் தகவலையும் குறிப்பிட்டிருக்கிறார் விஜயானந்த லட்சுமி.

சின்னமனூரில் பழமையான பாண்டியர் காலச் செப்பேடுகள் கிடைத்திருக்கின்றன. வட்டெழுத்துகள் அடங்கிய அந்தச் செப்பேடுகள் வழியாக பாண்டியர் சந்ததியினரைப்பற்றிய குறிப்புகளையும் அவர்கள் ஆற்றிய செயல்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது. சதிக்கல் என்பது கணவனோடு உடன்கட்டையேறி உயிரை மாய்த்துக்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு எழுப்பப்படும் நடுகற்கள். வீரக்கல் என்பது போரில் வீரமுடன் போரிட்டு உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்படும் நடுகற்கள். இவ்விரண்டு நடுகற்களும் கம்பம் அருகில் உள்ள புதுப்பட்டியில் கிடைத்த செய்தியையும் பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. அரசனின் முன்னிலையில் காற்சிலம்பை உடைத்து, தன் கணவன் கோவலன் மீது விழுந்த பழியை அகற்றிய கண்ணகியின் நீண்ட நடைப்பயணம் முடிவுற்று விண்ணேறிய இடமாக விண்ணேத்திப்பாறை சுருளியாகிய நெடுவேள்குன்றத்தில் இருப்பதையும் அங்கு ஆண்டுதோறும் கண்ணகிக்கு வழிபாடு நடப்பதையும் பதிவு செய்துள்ளார். இத்தகு பதிவுகள் தமிழக வரலாற்றில் தேனி நகரத்தின் பகுதிகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

இந்தப் புத்தகத்தில் நாற்பத்துநான்கு அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓர் ஆளுமையை அல்லது பழைய வரலாற்றில் புதைந்துபோன செய்தியை அறிமுகப்படுத்துகிறார் விஜயானந்தலட்சுமி. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நாவலின் சுருக்கத்தைப் படித்ததுபோல இருக்கிறது. இந்த நூலை வாசித்த பிறகு தமிழ்ச்சூழலில் தேனியின் இடம் என்ன என்பதை நாமே உணர்ந்துகொள்ளலாம். விஜயானந்தலட்சுமி அடிப்படையில் கவிஞராக இருப்பதால் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கவித்துவம் ததும்பும் தொடக்கத்தையும் முடிவையும் வழங்கியிருக்கிறார். தேனீக்கள் தினமும் மலர்களைத் தேடித்தேடி அலைந்து பூந்தேனை உறிஞ்சியெடுத்து கொஞ்சம்கொஞ்சமாக உருவாக்கும் தேனடையைப்போல இப்புத்தகத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.

(தேனி : மகரந்தக் கருவூலம் தேடி. விஜயானந்த லட்சுமி, சந்தியா பதிப்பகம், 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை -83.
விலை ரூ.340)

முதலாளித்துவ சகதியிலிருந்து எதிர்காலத்தை வெளிக்கொணர்வோம்  உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பிரகடனம் கட்டுரை – ச. வீரமணி

முதலாளித்துவ சகதியிலிருந்து எதிர்காலத்தை வெளிக்கொணர்வோம் உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பிரகடனம் கட்டுரை – ச. வீரமணி




[சோவியத் யூனியன் தகர்ந்தபின், சர்வதேச அளவில் இயங்கிவந்த சுதந்திரமான தொழிற்சங்கங்களின் சர்வதேச மகா சம்மேளனத்திலிருந்து(International Confederation of Free Trade Unions), வர்க்கப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து, உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (WFTU-World Federation of Trade Unions) 2005 இல் அமைக்கப்பட்டது. இதன் பொதுச் செயலாளராக இருந்த கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் மாவ்ரிகோஸ் இத்தனை ஆண்டு காலமும் இதன் பொதுச் செயலாளராக இருந்து இதனை சிறப்பாக நடத்தி வந்தார். இந்தியாவில் இயங்கும் சிஐடியு, ஏஐடியுசி முதலான சங்கங்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற மாநாட்டின் விவரங்கள் வருமாறு]   Let's Uncover the Future From the Capitalist Crisis World Federation of Trade Unions Declaration Article - Ch. Veeramani முதலாளித்துவ சகதியிலிருந்து எதிர்காலத்தை வெளிக்கொணர்வோம்  உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பிரகடனம் கட்டுரை - ச. வீரமணி

எதிர்காலம் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கானது என்றும், தொழிலாளர்களின் போராட்டங்கள் மூலமாக முதலாளித்துவ சகதியிலிருந்து தொழிலாளர்களுக்கான எதிர்காலத்தை வெளிக்கொண்டுவருவோம் என்றும் மே 6-8 தேதிகளில் ரோம் நகரில் நடைபெற்ற உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் 18ஆவது மாநாடு பிரகடனம் செய்துள்ளது. மேலும் அது, உலகத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, வர்க்கப் போராட்டத்தையும் தொழிலாளர் வர்க்க சர்வதேசியத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அது அறைகூவல் விடுத்துள்ளது. மேலும், புரட்சிக் கவிஞன் விளாடிமீர் மாயகோவ்ஸ்கி கூறியதுபோல, தொழிலாளர்களுக்கான எதிர்காலம் தானாக வந்துவிடாது, அதனை முதலாளித்துவ சகதியிலிருந்து வெளிக்கொணர்ந்திட வேண்டும் என்றும், தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்காலம் முதலாளித்துவமாக இருக்க முடியாது என்றும் பிரகடனம் செய்துள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் உலக அளவில் அதிகரித்துள்ள போதிலும்கூட, உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் 18ஆவது மாநாடு நம்பிக்கை மற்றும் ஆர்வத்துடன் கூடிய சூழ்நிலையில் ரோம் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. உலகத்தின் அனைத்து முனைகளிலும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதும், குறிப்பாக இந்தப் போராட்டங்களில் இளைஞர்களும், பெண்களும் கணிசமாகக் கலந்துகொண்டிருப்பதும், நம்பிக்கையை பிரதிபலித்தது. மாநாட்டின் முழக்கமாக, “ஒற்றுமையைத் தொடர்வோம்! நம் தேவைகளைப் பெறுவதற்காகவும், ஏகாதிபத்திய காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராகவும், நம் ஒற்றுமையைத் தொடர்ந்திடுவோம்!” என்பதாக இருந்தது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்று இன்னமும் உலகின் பல பகுதிகளில் தொடர்வதால் அது மாநாட்டிலும் பிரதிபலித்தது. மொத்தம் உள்ள 133 நாடுகளில் உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தில் இணைந்துள்ள 93 நாடுகளிலிருந்து 430 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றார்கள். இவர்களில் 330 பேர் நேரடியாகவும், 100 பேர் இணையவழியாகவும் பங்கேற்றார்கள்.

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் கீதம், ஆங்கிலத்திலும், ஸ்பானிஷ் மொழியிலும் பாடப்பட்டதைத் தொடர்ந்து மாநாடு தொடங்கியது. பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஷ் துவக்கவுரையை ஆற்றினார். அவர் தன் உரையில் சமீப காலத்தில் சம்மேளனத்தால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களைப் பதிவு செய்தார். அதன் விவரம் வருமாறு:

“சம்மேளனத்திற்கு தற்போது அனைத்துக் கண்டங்களிலும் உள்ள 133 நாடுகளிலிருந்து 105 மில்லியன் (10 கோடியே 50 லட்சம்) உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்தந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த, திருத்தல்வாத கருத்தியல்களுக்கு எதிராகக் கூட்டாக செயல்பட்டதன் மூலமாகவும், எந்தவொரு பிரச்சனையிலும் விமர்சனம்-சுயவிமர்சனம் என்னும் கொள்கையின் அடிப்படையில் விவாதித்து முடிவெடுத்ததன் அடிப்படையிலுமே இது சாத்தியமானது. இதுவே நம் சொத்து. இதுவே நம் எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கான ஆயுதம். சம்மேளனத்தின் 15ஆவது மாநாட்டில் முன்வைக்கப்பட்ட முழக்கம், ‘செயல்படு (action), செயல்படு, செயல்படு’ என்பதாகும். அதுதான் நம் சம்மேளனத்தை உயிரோட்டமானதாக மாற்றி இருக்கிறது. பல்வேறு பிரச்சனைகள் மீது தொழிலாளர்கள் மேற்கொண்ட செயலூக்கமுள்ள நடவடிக்கைகள்தான் நம் அமைப்பைப் பெரிய அளவில் விரிவுபடுத்திடப் பங்களிப்பினைச் செய்திருக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமை இன்றைய காலகட்டத்தில் அவசியத் தேவையாகும். எனினும், ஒற்றுமை என்னும் வார்த்தையை நாம் மட்டுமல்ல, நம் எதிரிகளும்கூட உச்சரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். உதாரணமாக, பாலஸ்தீனர்கள் தங்களுக்கென சுதந்திரமான நாடு வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஒற்றுமையும், சர்வதேச ஆதரவும் கோருகிறார்கள். அதேபோன்றே பாலஸ்தீனர்களை விரட்டியடிப்பதற்குத் தங்களுக்கு ஒற்றுமையும் சர்வதேச ஆதரவும் தேவை என்று இஸ்ரேலும் கோரிக்கொண்டிருக்கிறது. கியூபாவிற்கு ஆதரவாக ஒற்றுமையும் சர்வதேச ஒருமைப்பாடும் தேவை என்று நாம் கூறுகிற அதே சமயத்தில் அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்தியவாதிகளும் கியூபாவைத் தனிமைப்படுத்துவதற்கான ஒற்றுமை வேண்டும் என்கிறார்கள். எனவே ஒற்றுமை என்கிறபோது எப்போதும் யாருடனான ஒற்றுமை என்பதையும், எந்த லட்சியத்திற்கான ஒற்றுமை என்பதையும் கேட்க வேண்டும். ஒற்றுமை என்பது வர்க்க ஒற்றுமையாக இருக்க வேண்டும், தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஏழை விவசாயிகளுடனான, முற்போக்கு சக்திகளுடனான ஒற்றுமையாக இருக்க வேண்டும். முதலாளித்துவ சுரண்டலைத் தூக்கி எறியக்கூடிய விதத்தில் சமூக மாற்றத்திற்காகப் போராடும் அனைத்துத் தொழிலாளர்களின் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

மாறாக, சீர்திருத்தவாதிகள் கோரும் போலி ஒற்றுமை, முதலாளித்துவத்தை அழகுபடுத்துவதற்கானதாகும், வர்க்க சமரசத்தைக் கோரும் ஒற்றுமையாகும், ஏகாதிபத்தியத்துடன் ஒருங்கிணைந்த போகவேண்டும் என்று கோரும் ஒற்றுமையாகும். இதற்கு எதிரானதே உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம். இந்த அமைப்பு நடுநிலை வகிக்கக்கூடிய ஒன்றல்ல. இது முழுமையாக வர்க்கப் போராட்டத்தைத் தூக்கிப்பிடிக்கக்கூடிய அமைப்பு. தொழிலாளர் வர்க்கத்தை முதலாளித்துவத்தின் சுரண்டலிலிருந்து விடுவிப்பதற்கான அமைப்பு. அதனால்தான் ஏகாதிபத்தியவாதிகள் உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தைக் கண்டு அலறுகிறார்கள். 1952இல் அமெரிக்கா, இதன் தலைவர் தங்கள் நாட்டிற்குள் வரக்கூடாது எனத் தடை விதித்தது. அதேபோன்று 2018இல் இதன் பொதுச் செயலாளருக்கும் தடை விதித்தது. உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் உழைக்கும் வர்க்கத்திற்கும், வர்க்கப் போராட்டத்திற்கும் உறுதியாக இருப்பதால், அது ஏகாதிபத்தியவாதிகளால் மதிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை, அவ்வாறு அது மதிக்கப்படாததால், சம்மேளனம் அஞ்சப்போவதுமில்லை. சம்மேளனத்திற்கு மூன்றாவது பாதை என எதுவும் கிடையாது.

அநேகமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் நடைபெற்று சில பலன்களையும் எய்தியிருக்கின்றன. இத்தகைய போராட்டங்கள் இல்லாமல் இருந்திருந்தால், தாங்கள் வாங்கிக்கொண்டிருந்த ஊதியத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த இழப்புகளைத் அவை தடுத்திருக்க முடியாது, அது மேலும் அதிகமானதாக இருந்திருக்கும். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாத்திருக்க முடியாது. தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியாது. பணிநீக்கம் (retrenchment) மற்றும் வேலைநீக்கம் (dismissal) போன்றவற்றைக் கணிசமான அளவிற்குத் தடுத்திருக்க முடியாது.

ஆனாலும் இவை எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமான ஆதாயம் என்னவெனில், தொழிலாளர்கள் சாதியை மறந்து, மதத்தை மறந்து, மொழி-இன-பேதத்தை மறந்து வர்க்கரீதியாக ஒன்றுபட்டு நின்று போராடினால் மட்டுமே வெற்றிக்கனியைப் பறித்திட முடியும் என்பதைப் புரிந்துகொள்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாகும்.

முதலாளித்துவ அமைப்பின் வரையறைகளைத் தொழிலாளர் வர்க்கமும், சமூகத்தின் இதர பிரிவினர்களில் ஒருசிலரும் தங்கள் அனுபவங்களின் மூலம் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவேதான் தங்களைச் சுரண்டும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையை மாற்றியமைத்திட வேண்டும் என்கிற உணர்வுமிக்கவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

   Let's Uncover the Future From the Capitalist Crisis World Federation of Trade Unions Declaration Article - Ch. Veeramani முதலாளித்துவ சகதியிலிருந்து எதிர்காலத்தை வெளிக்கொணர்வோம்  உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பிரகடனம் கட்டுரை - ச. வீரமணிஇத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன் உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் 18ஆவது மாநாடு, தன் எதிர்கால லட்சியங்களை வகுத்துள்ளது. இந்த லட்சியங்களில் மிகவும் முக்கியமான ஒன்று, அனைவருக்கும் இலவச சுகாதாரத்திற்கான உரிமை, நாகரிகமான வீட்டு வசதிக்கான உரிமை, தூய்மையான குடிதண்ணீருக்கான உரிமை, உயிர்ப்பாதுகாப்பிற்கான உரிமை, நம்பகமான மற்றும் மலிவான பொதுப் போக்குவரத்துக்கான உரிமை, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்விக்கான உரிமை போன்ற உழைக்கும் வர்க்கத்தின் தேவைகளைப் பெறுவதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாகும். இன்றைய தினம் தொழில்நுட்ப வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ள நிலையில் இவற்றை தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமேயொழிய, லாபத்தைப் பெருக்குவதற்காகப் பயன்படுத்தக் கூடாது.

எனவே, தொழிலாளர்கள் ஊதியங்களை அதிகரிப்பதற்காப் போராடும் அதே சமயத்தில் வேலை நேரத்தைக் குறைத்திடவும் போராட வேண்டியிருக்கிறது. அதாவது வாரத்திற்கு ஐந்து நாட்கள் 35 மணி நேரம் என்கிற முறையில், வேலை நேரம் இருந்திட வேண்டும். உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தில் இணைந்துள்ள அனைத்து சங்கங்களும் முழு நேர வேலை, நிரந்தர வேலை மற்றும் நாகரிகமான ஊதியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கான போராட்டங்களையும், தனியார் மயம், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களையும், பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான போராட்டங்களையும், குழந்தைத் தொழிலாளர் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிரான போராட்டங்களையும் தொடர்ந்திட வேண்டும். இத்துடன் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாக விளங்கும் வேலைநிறுத்த உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களையும் தொடர்ந்திட வேண்டும்.”

இவ்வாறு அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்வதேஷ் தேவ் ராய்

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்வதேஷ் தேவ் ராய் (சிஐடியு) ‘ரோம் பிரகடனத்தை’ மாநாட்டில் அறிமுகப்படுத்தினார். அதன் சாராம்சம் வருமாறு:

“உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் 18ஆவது மாநாடு பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாட்டை மீளவும் தெரிவித்துக்கொள்கிறது. அதேபோன்று கியூபா மக்களுக்கும் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், கியூபாவிற்குப் பொருளாதாரத் தடை விதித்திருக்கும் அமெரிக்காவைக் கண்டிக்கிறது. கவுண்டநாமோவை மீளவும் கியூபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வெனிசுலா, பொலிவியா, பிரேசில் மற்றும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் போராடிக் கொண்டிருக்கும் சிரியா மற்றும் ஈரான் மக்களுக்கும் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்தக் காலகட்டத்தில் பல நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஏகாதிபத்திய யுத்தங்களுக்கும் சம்மேளனம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்ததாலும், ஐரோப்பாவில் இருந்த சோசலிச நாடுகள் தகர்ந்ததாலும் இனிவருங்காலங்களில் சர்வதேச அளவில் அமைதி ஏற்படும் என்று கூறியவர்களின் கூற்று எந்த அளவிற்குப் போலித்தனமானது என்பதை காலம் மெய்ப்பித்துள்ளது. ஐரோப்பாவில் யுகோஸ்லேவியாவிலும், தற்போது ரஷ்யா-உக்ரேனுக்கு இடையேயும் யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதேபோன்று ஈராக், ஆப்கானிஸ்தான், மாலி, லிபியா, சிரியா, அஜர்பைஜான் முதலான நாடுகளில் நடைபெறும் யுத்தங்களும் மேற்கண்ட கூற்றுக்களைப் பொய்ப்பித்துள்ளன. இவை அனைத்தும் மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆபத்தை விளைவிப்பது ஏகாதிபத்தியம்தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

உலகில் உள்ள இயற்கை வளங்கள், எரிசக்தி மார்க்கங்கள், துறைமுகங்கள், கடல்கள் போன்ற புவிசார் அரசியல் பகுதிகளைத் தமதாக்கிக்கொள்ள இத்தகைய ஏகாதிபத்திய யுத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ரஷ்யா-உக்ரேன் யுத்தத்திற்கு முடிவு கட்ட வேண்டும். உலகம் முழுதும் யுத்தத் தீயை மூட்டிக்கொண்டிருக்கும் நேட்டோ அமைப்பு கலைக்கப்பட வேண்டும்.

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம், ஒவ்வோராண்டும் செப்டம்பர் 1 அன்று உலக மக்கள் மத்தியில் சமாதானமும் நட்புறவும் பேணுவதற்காக தொழிற்சங்கங்களின் சர்வதேச நடவடிக்கை தினம் (International Action Day of Trade Unions) அனுசரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கிறது. நாஜி ஜெர்மனி இரண்டாவது உலகப் போரைத் துவங்கிய நாள் 1939 செப்டம்பர் 1 ஆகும். அன்றைய தினத்தை இவ்வாறு சர்வதேச நடவடிக்கை தினமாக அனுசரித்திட வேண்டும் என்று முன்பு 1980களில் நடைபெற்ற உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இப்போது மீளவும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.”

ஸ்வதேஷ் தேவ் ராய் முன்மொழிந்த ரோம் பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் 99 பிரதிநிதிகள் பங்கேற்றனர். சிலர் இணைய வழி தங்கள் அறிக்கைகளை முன்வைத்தனர். சிஐடியு சார்பில் ஹேமலதா உரையாற்றினார். ஹேமலதா, ஸ்வதேஷ் தேவ் ராய், இளமாறம் கரீம், அனதி ஷாஹூ ஆகியோர் நேரடியாகவும், கருமலையான் உட்பட 15 பிரதிநிதிகள் இணைய வழியிலும் சிஐடியு சார்பாகக் கலந்து கொண்டார்கள்.

இதேபோன்று ஏஐடியுசி சார்பிலும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

பின்னர் ஐந்து கண்டங்களையும் சேர்ந்த 50 நாடுகளிலிருந்து புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்கள். இதுவரை பொதுச் செயலாளராக இருந்த ஜார்ஜ் மாவ்ரிகோஸ் கௌரவ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் மெவாண்டில் மக்வேயிபா (Michael Mzwandile Makwayiba) தலைவராகவும், சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பாம்பிஸ் கிரிடிஸ் (Pampis Kyritsis) என்பவர் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இத்துடன் இந்தியாவிலிருந்து சிஐடியு-வைச் சேர்ந்த ஹேமலதாவும், ஏஐடியுசி-யைச் சேர்ந்த அமர்ஜீத் கவுரும் துணைத் தலைவர்களாகவும், சிஐடியு-வைச் சேர்ந்த ஸ்வதேஷ் தேவ ராய் மற்றும் ஏஐடியுசி-யைச் சேர்ந்த சி. ஸ்ரீகுமார் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏழுபேர்களைக் கொண்ட நிதிக் கட்டுப்பாடுக் குழுவில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சிஎச்.வெங்கடாசலமும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை நெருக்கடியும் மக்களின் போராட்டமும் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி

இலங்கை நெருக்கடியும் மக்களின் போராட்டமும் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி




இலங்கையில் மே 9 அன்று நடைபெற்ற வன்முறை நிகழ்வுகள், நாடு மிகவும் ஆழமான பொருளாதார நெருக்கடியால் சீர்கேடு அடைந்துகொண்டிருந்த நிலையில் அதற்கு ஒரு கூர்மையான நிவாரணத்தை அளித்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் அமைப்பு முறை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் முழுமையாகக் கவ்விப்பிடித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குப் பிரதான காரணமாக ராஜபக்சே குடும்பத்தின் ஆட்சி அமைந்திருக்கிறது. ஜனாதிபதியான கோட்டபய ராஜபக்சே தன்னுடைய நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆட்சிக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு முயற்சியாக தன் மூத்த சகோதரர் மகிந்தா ராஜபக்சேயை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யக் கோரியிருக்கிறார். முன்னதாக, ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்திருந்தது. அதனைத்தொடர்ந்து மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டிருந்தது.

ராஜபக்சே அரசு மேற்கொண்ட பேரழிவு தரத்தக்க முடிவுகள்தான் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். வரிகளை வெட்டியது, வேளாண்மைக்குப் பயன்படுத்துவதற்கான ரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது, வெற்று ஆரவாரத் திட்டங்களுக்கு அதிக அளவில் முதலீடுகளைச் செய்தது, எதேச்சாதிகார ராஜபக்சே ஆட்சி மேற்கொண்ட இந்நடவடிக்கைகள் அனைத்தும் அரசின் வருவாயைக் குறைத்தது, வேளாண் உற்பத்தியைச் சீர்குலைத்தது, கடன் சுமை அதிகரிப்புக்கு இட்டுச் சென்றது.

கோவிட் பெருந்தொற்று பொருளாதார நெருக்கடியை மேலும் விரைவுபடுத்துவதற்கே இட்டுச் சென்றது. இதன் காரணமாகச் சுற்றுலா முற்றிலுமாக நின்றதால் அந்நியச் செலாவணி வருமானங்களில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இத்துடன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதும் நின்றுவிட்டது.

பொருளாதாரம் நிலைகுலைந்ததைத் தொடர்ந்து, மக்கள் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் கிடைக்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். விலைவாசிகளும் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தாங்கமுடியாத அளவிற்கு நிலைமைகள் சென்றபின்னர் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் துவங்கிவிட்டார்கள். மார்ச் 31இலிருந்து கிளர்ச்சியாளர்கள் மத்திய கொழும்பு, காலிமுகத்திடல் பூங்கா பகுதியிலும், பிரதமரின் இல்லத்திற்கு வெளியேயும் அணிதிரண்டு, முகாமிட்டிருக்கிறார்கள். அமைதியான முறையில் நடந்து வந்த இந்தக் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தப் போராட்டமானது, ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்துத்தரப்பினரின் ஆதரவையும் பெற்றிருக்கிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களின் இக்கிளர்ச்சி இயக்கத்தில் தொழிலாளர் வர்க்கம் முக்கியமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 28 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றார்கள். பின்னர் மீண்டும் மே 5 அன்று இரண்டாவது ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தால் நடைபெற்றன. இதிலும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர அலுவலர்கள் உட்பட ஏராளமானவர்கள் பெரிய அளவில் பங்கேற்றார்கள். இந்த வேலை நிறுத்தங்களின்போது ஜனாதிபதியும் அவருடைய அரசாங்கமும் ராஜினாமா செய்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன.

இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டங்கள் வீறுகொண்டு நடைபெற்றதைத் தொடர்ந்து பீதியடைந்த ஜனாதிபதி கோட்டபயா, இரண்டாவது முறையாக ஒரு மாத கால அளவில், மீண்டும் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. எனினும் போராட்டக்காரர்கள் அதனை மீறினார்கள். உண்மையில் ஆட்சியாளர்கள் விழிபிதுங்கி நின்றனர். அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மே 9 அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் என்பவவை, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தைச் சீர்குலைப்பதற்காக, ராஜபக்சே தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சியாகும்.

மகிந்த ராஜபக்சே, போராடுவோரின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்வதற்குப் பதிலாக, தன் கட்சி (எஸ்எல்பிபி) ஆதரவாளர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, அவர்கள் மத்தியில் ஆத்திரமூட்டும் விதத்தில் பேசிய பின்னர், அவருடைய ஆதரவாளர்கள் வெளியே வந்து, அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், அவர்களின் தற்காலிக பந்தல்களை நாசமாக்கி இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து காலி ஃபேஸ் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த முகாம்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தார்கள். அங்கே நின்றிருந்த காவல்துறையினர் இவர்களை அடக்குவதற்குத் தவறிவிட்டனர்.

ஆளும் கட்சித் தரப்பு ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய கேவலமான வன்முறை நடவடிக்கைகள்தான் கொழும்புவுக்கு வெளியிலும் போராட்ட உணர்வைக் கொண்டு சென்று, இதற்குப் பதிலடி கொடுக்கும் நிலையை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமரின் இல்லம், டெம்பிள் ட்ரீஸ் முன் (Temple Trees) கூடி, அதனைத் தாக்க முற்பட்டார்கள். இறுதியாக, பிரதமர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்ட மகிந்த ராஜபக்சேயும் அவருடைய குடும்பத்தினரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பிற்காகக் கடற்படைத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இதன் பின்னர் ராஜபக்சே குடும்பத்தினரின் அனைத்து வீடுகளும், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளும் குறிவைத்துத் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன.

இதற்கிடையில், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும், சமாஜி ஜன பாலவெகயா கூட்டணி (SJB alliance), ஜனாதிபதி கோட்டபயா தலைமையின்கீழ் அமையும் எவ்விதமான அனைத்துக் கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்திலும் இணைய மாட்டோம் என அறிவித்தது. கோட்டபயாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். இடதுசாரிக் கட்சிகளும், ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) ஆகியவையும் புதிய தேர்தல்கள் நடைபெறும் வரையிலும் இடைக்கால ஜனாதிபதியும், இடைக்கால அரசாங்கமுமே வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

நாட்டில் அளவிடற்கரிய அதிகாரங்களைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி கோட்டபயா வெளியேற வேண்டும் என்று கோருவது நியாயமே. ஏனெனில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் குளறுபடிகளுக்குப் பிரதான காரணமே இவர்தான். இவரால் உருவாக்கப்பட்டதுதான் இப்போதிருந்துவரும் எதேச்சாதிகார தேசியப் பாதுகாப்பு அரசு. பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் பின்னிப்பிணைந்தவைகளாகும்.

ராஜபக்சே ஆட்சி அகற்றப்படுவதுடன், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளில் ஜனநாயக பூர்வமான முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி ஆட்சி ஒழித்துக்கட்டப்பட வேண்டும். மத்தியத்துவப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்பு அரசும் கலைக்கப்பட வேண்டும். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக மக்கள் ஆதரவு வளர்ச்சிப் பாதைக்கான கொள்கை ஏற்படுத்தப்பட வேண்டும். ராஜபக்சே குலத்தினரின் மீதான மாயை காணாமல் போயிருப்பதன் காரணமாக அது சிங்கள பெளத்தமத தேசியவாதம் மங்குவதற்கும் இட்டுச் செல்வதுடன், அதற்குப் பதிலாக மொழி மற்றும் மத சிறுபான்மையினர் மீது ஜனநாயக பூர்வமான அணுகுமுறையுடன் கூடிய அனைத்து மக்களின் ஒற்றுமைக்கான அடித்தளம் அமைக்கப்படும் என நம்புவோம்.

இலங்கை அரசாங்கம், கடன் பெறுவதற்காக, சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு சர்வதேச நிதியம் அளிக்கும் நிபந்தனைகள் என்பவை, சமூக நலத்திட்டங்களில் வெட்டு, சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் தனியார்மயத்தை மேலும் விரிவுபடுத்திட வேண்டும் என்பவைகளாகும். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் இவற்றுக்கு உட்படுவதைத் தவிர வேறு வழியில்லை.. ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆழமான கட்டமைப்பு நெருக்கடிக்கு இது தீர்வாகாது.

இதற்கு எதிராக மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் விதத்திலும், நிதிமூலதனத்தின் இழிவுகளிலிருந்து இலங்கையைப் பாதுகாத்திடும் விதத்திலும் ஒரு மாற்றுப்பாதை அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இலங்கையில் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு ஓர் அபூர்வமான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறைகளில் மறுகட்டமைப்பை ஏற்படுத்திடவும், அத்தகைய மாற்றத்திற்கான போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டிடவும் அவர்கள் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

(மே 11, 2022)
(நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி)

நூல் அறிமுகம்: G.K.V.மகாராஜா முரளீதரனின் சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி – தொகுப்பு: அருண்மொழி வர்மன்

நூல் அறிமுகம்: G.K.V.மகாராஜா முரளீதரனின் சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி – தொகுப்பு: அருண்மொழி வர்மன்




சினிமாவில் பிறந்த சிவப்புக் கொடி எஸ்.பி. ஜனநாதன்
சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி என்ற பெயரில் மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கான நினைவு மலர் ஒன்றை GKV மகாராஜா முரளீதரனின் தொகுப்பில்
பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருக்கின்றனர்.  ஜனநாதனின் முதற்திரைப்படமான இயற்கையின் பாடல்களும் காதல் கொண்டேன் படத்தின் பாடல்களும் ஒரே இசைத்தட்டாக வெளிவந்திருந்தன.  எனக்கு மிகவும் பிடித்த இசைத்தட்டுகளில் ஒன்றாக அதைச் சொல்வேன்.  இயற்கையில் எல்லாரும் பெரிதும் சொல்லுகின்ற, மிகப்பிரபலமான பாடல் “காதல் வந்தால் சொல்லி அனுப்பு…”; எனக்கும் மிகப் பிடித்த பாடல்களில் ஒன்றாக இன்றும் இருக்கின்றது.  அதேநேரம் அதேயளவு பிடித்த பாடலாக “பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ” பாடலையும் சொல்வேன்.  அந்தத் திரைப்படத்தின் கதை மாந்தர்களும் கதை நடக்கும் பின்னணியும் மிகவும் பிடித்திருந்தன.  அதுபோலவே பிரதான பாத்திரங்களின் உருவாக்கத்திலும் ஒரு இயல்புத்தன்மை இருந்தது.இவற்றுக்கு மேலாக, காதலிக்காகக் காத்திருக்கின்ற ஆண் என்கிற தமிழ் சினிமாவின் வழமையாகிக் கொண்டிருந்த ஒருபோக்கில் இருந்து மாறுபட்டு, காதலனுக்காக க் காத்திருக்கின்ற பெண்ணையும், இரண்டு ஆண்களால் காதலிக்கப்படும், அவர்கள் இருவருமே நல்லவர்களாகவும் அவளுக்குப் பிடித்தவர்களாகவும் இருக்கின்றபோது தேர்வு செய்பவளாகவும் இருக்கின்ற பெண்ணையும் சித்திகரித்திருந்தது இயற்கை.  இது குறித்து நுட்பமாகவும், பெண்ணிய வாசிப்புடனும் புரிந்துகொள்பவனாக நான்
இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது இருக்கவில்லை.  ஆயினும், அன்றைய சமகால தமிழ்த்திரைப்படங்களில் இருந்து தெரிந்த இந்தவேறுபட்ட தன்மை என்னை ஈர்த்தது.

இயற்கை போன்றதோரு பட த்தை எதிர்பார்த்துக்கொண்டுதான் ஜனநாதனின் இரண்டாவது திரைப்படமான ஈ திரைப்படத்தையும் பார்க்கச்சென்றேன்.  ஈ, இயற்கை போன்ற படமில்லை. ஆனால் ஈ எனக்கு இன்றளவும் மிக மிகப் பிடித்தமான படமாக இருக்கின்றது.  அன்றைய சூழலில் கனடாவில் இளைஞர்களின் குழு வன்முறைகள் மிக அதிகமாக இருந்தன.  இப்படியான குழு வன்முறைகளின் நேரடியான அனுபவங்கள் பல எனக்கும் இருந்தன.கூட்டத்தில் ஒருவனாக பங்கேற்றும் இருக்கின்றேன்.  அதேநேரம் இந்த இளைஞர்களின் துணிச்சல் தன்மையும், நேர்மையும் அவர்கள் தருகின்ற சகோதரத்துவமான பாதுகாப்புணர்வும் எனக்கு அவர்கள் மீது பெருமதிப்பை ஏற்படுத்தியிருந்தன.  கோபம் என்பது கவனமாகக் கையாளப்பட்டால் மிகவும் வினைத்திறன் வாய்ந்ததாக அமையும் என்பது என் நம்பிக்கை.  அவர்களது கோபத்தையும் துணிச்சலையும் சரியான முறையில் தடமாற்றினால் அது சமூகக் கோபம் என்கிற ஆக்கபூர்வமான செயலாக அமையும் என்று நான் நம்பினேன்.  ஈ பட த்தின் இறுதியில் பசுபதிக்கும் ஜீவாவிற்கும் இடையிலான உரையாடல் அப்படியான ஒன்றாகவே அமைந்தது அல்லது அப்படி நிகழ்ந்ததாக கருதிக்கொள்ளக்கூடியதாக அமைந்தது.  ஈ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த தாக அமைய அதுவும் ஒரு காரணமானது.  இயற்கை பட த்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றும் கூட அந்தவிதமான பாடல்களில் இருந்துவேறுபட்ட தும் அன்றைய காலத்திற்குப் புதியதுமான பாணியில் ஆனால் ஈ திரைப்பட த்துக்கு பொருத்தமான பாடல்களைச் சேர்த்திருந்தார். அதிலும் காதல் என்பது போதிமரம், வாராது போல் ஆகிய பாடல்கள் அருமையாக வந்திருந்தன.  அதற்குப் பின்னர் எனக்கு மிகப் பிடித்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக ஜனநாதன் மாறிப்போனார்.  அவரது திரைப்படங்களையும் பேட்டிகளையும் பின்னர் காணொலிகளையும் தொடர்ந்தும் ஆர்வத்துடனும் பார்ப்பவனாக இன்றளவும் இருக்கின்றேன்.  கலைகள் சமூக மாற்றத்துக்கான கருவிகளென்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்திய ஜனநாதனின் பேராண்மை, புறம்போக்கு, லாபம் ஆகிய திரைப்படங்களில் நேரடியாக அரசியல் பேசுகின்ற காட்சிகள் அமைந்திருந்தன.  அவற்றை அவர் விரும்பியே செய்திருந்தார்.  அவரது தெரிவு அதுவே என்பதை அவர் திரும்பத் திரும்ப நேர்காணல்களில் சொல்லிவந்தார்.

சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி தொகுப்பினை வாசிக்கின்றபோது ஜனநாதன் மீதான் ஈர்ப்பும் மரியாதையும் இன்னமும் அதிகரித்தே செல்கின்றது.  அரசியல் தலைவர்கள், திரைப்படத்துறையினர், மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள், களச் செயற்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் ஜனநாதனுடனான தம் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.  300க்கு மேற்பட்ட பக்கங்களில் நிறைவானதோர் தொகுப்பாக இது அமைந்துள்ளது.  உள்ளடக்கம் அத்தனை நேர்த்தியாக இருந்தபோதும் வடிவமைப்பிலும் தொகுப்பிலும் சில கவலையீனங்கள் இடம்பெற்றுவிட்டன என்பதைக் குறிப்பிடவேண்டி இருக்கின்றது.   நடிகர் ஷாமிடம் ஜனநாதன் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகள் மட்டுமே தொகுப்பில் இடம்பெற்றுள்ளன, அவற்றுக்கான பதில்களைக் காணோம், அதுபோல ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் குறிப்பில் பல சொற்கள் தங்கிலிஷான (ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எழுதிய தமிழ்ச் சொற்களாக) அமைந்துள்ளன.  இந்த விடயங்களில் பதிப்பாளர்கள் கவனமாக இருந்திருக்கவேண்டும்.  பாலாஜி சக்திவேலின் பெயரில் வெளிவந்த குறிப்பில் அவர்
அந்தக் குறிப்பினை எழுதியவர் தன் நண்பரான கே. செல்வராஜ் என்றும் செல்வராஜின் பெயரிலேயே குறிப்பினை வெளியிடுமாறும் கேட்டுள்ளார்.   மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான கருவியாக திரைப்படங்களையும், தன் காணொலிகளையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்திவந்தவர் ஜனநாதன்.  ஈழ விடுதலை, தூக்குத் தண்டணை ஒழிப்பு, அணு உலைக்கு எதிரான போராட்டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பூர்வகுடிகளின் வளங்கள் கையாடலுக்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்ட சமகாலப்பிரச்சனைகள் குறித்து பிரக்ஞைபூர்வமாக தன் திரைப்படங்களிலும் காணொலிகளிலும் குறிப்பிட்டதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவை குறித்த மக்கள் போராட்டங்களில் பங்கெடுப்பதையும் ஜனநாதன் வழக்கமாக வைத்திருந்தார் என்பதையும் அறியமுடிகின்றது.  இந்தத் தொகுப்பு அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக அமைவதுடன் கலைஞர்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வினை வலியுறுத்துவதாகவும் அமைகின்றது.

அருண்மொழி வர்மன்
கனடா

போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த ஒரு நூற்றாண்டு – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)  

போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த ஒரு நூற்றாண்டு – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)  

2020 அக்டோபர் 17, ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க தினமாகும். அது, முந்தைய சோவியத் யூனியனில் தாஷ்கண்ட் நகரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை நூறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தினத்தைக் குறிக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு நூறாண்டு காலத்தில் சென்ற…