நூல் அறிமுகம்: ஓங்கூட்டு டூணா -விஜய் ராஜ். அ
வெடித்துச் சிதறிய கனவு கல்லறை நூலகம் – கி.ரமேஷ்
கி.ரமேஷ்
தலிபான் மதவெறியர்களின் பயங்கர வாதச் செயலால் உடல் சிதறி இறந்த இரண்டு இளம் மாணவிகள் இன்று ஒரு குறியீடாக மலர்ந்திருக்கிறார்கள். அன்றும் சரி, இன்றும் சரி, மதவெறியர்களும், ஆணாதிக்க வெறியர்களும் பெண்கள் கல்வியையோ, அறிவாளிகளாகத் திகழ் வதையோ பொறுத்துக் கொண்டதேயில்லை என்பதை வரலாறு காட்டுகிறது. மேலே காணப்படும் இளம் மாணவிகள் ஒன்று விட்ட சகோதரிகள். இருவரும் படிப்பதில் மிகவும் விருப்பமுடையவர்கள். கட்டிட வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் ஆக வேண்டு மென்ற கனவுகளுடன் இருந்தவர்கள். செப்டம் பர் 2022இல் அவர்களுடைய கல்வி மையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இருவரும் உயிரிழந்து விட்டனர். அவர்களது கனவுகள் சிதறிவிட்டன. கடந்த வருடம் அக்டோபரில் மர்சியா, ஹஜார் முகமதி என்ற அந்த இரண்டு சிறுமிகளின் உடல்களும் காபூலுக்கு வெளியே இருந்த ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன. அவர்களது புதைகுழியில் ரோஜா மலர்களுடன் பெரும் சோகத்துடன் அவர்களது குடும்பத்தினர் சில புத்தகங்களையும் வைத்து அஞ்சலி செலுத்தினர். மர்சியாவும் ஹஜாரும் கடந்த செப்டம்பரில் கஜ் கல்வி மையத்தில் குண்டு வெடிப்பில் கொல்லப் பட்ட 53 மாணவர்களுடன் கொல்லப்பட்டனர். தஷ்ட்-இ-பர்ச்சி என்ற அந்தப் பகுதி ஷியா முஸ்லிம்களும் ஹஜாரா சிறுபான்மையினரும் நிரம்பிய பகுதி. மாணவிகள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காகக் கூடியிருந்த போது ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி தன் உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையினர் இளம் பெண்கள். இதற்கு முன்பும் இதே இடத்தில் 2018இல் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 மாணவர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய அமைப்பான ஐஎஸ்கேபி இதற்குப் பொறுப்பேற்றது.
2021 ஆகஸ்டில் தலிபான் மீண்டும் ஆட்சியை பிடித்ததிலிருந்து இந்த அமைப்பு ஹசார சில் 13 தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இவற்றில் சுமார் 700 பேர் காயமடைந்தும், மரணமடைந்தும் இருக்கிறார்கள் என்று மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சோவியத் உதவியுடன் ஆட்சி செய்த நஜீ புல்லாவின் ஆட்சியை இப்போது நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. நஜீபுல்லாவின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் சிறப்பாக இருந்தன. படித்தனர், வேலை பார்த்தனர், சுதந்திரமாக இருந்தனர். சோவியத்தின் உதவி யைக் கண்டு பொருமிய அமெரிக்கா அதற்கு எதிராக தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை உருவாக்கி, பயிற்சி கொடுத்து ஏவியது. அவர்கள் நஜீபுல்லாவை அகற்றி, அவர் ஐ.நா. குடியிருப்பில் இருக்கும்போதே இழுத்து வந்து கொடூரமாகக் கொலை செய்தனர். அதே வளர்த்த கடா மார்பில் பாயவும், துள்ளியெழுந்த அமெரிக்கா இருபது ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானில் நுழைந்து ஏராளமான வீரர்களைப் பலி கொடுத்தும், எதுவும் செய்ய முடியாமல் வெளியேறியது. மீண்டும் ஆட்சியைப் பிடித்த தலிபான் தனது வேலையைக் காட்டி வருகிறது. மர்சியா, ஹஜார் ஆகியோரின் சவ அடக்கத்துக்கு ஒரு நாளைக்குப் பிறகு மனதுடைந்த அவர்களது மாமா, அவர்களது பொருள்களில் ஏராளமான டயரிகளையும், பத்திரிகைகளையும் கண்டெடுத்தார். அவர்களது எழுத்துக்களால் ஆழமான தாக்கத்துக்குள்ளான அவர் மர்சியாவின் டயரியிலிருந்து சில பக்கங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அவள் வாழ்க்கையில் விரும்பியவற்றின் பட்டியலையும் அவர் பகிர்ந்தார். “என்னுடைய மர்சியாவும், ஹஜாரும் அதிசயமான சிறுமிகள், அவர்கள் வயதுப் பெண்களிடமிருந்து வித்தியாசமானவர்கள். அவர்களது பற்றுறுதி குறித்து மேலும் பல அறிந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படு கிறேன்” என்று அவர் எழுதினார். “அவர்கள் பலருக்கும் ஊக்கமூட்டியிருக்கலாம், இன்னும் அவர்களால் அதைச் செய்ய முடியுமென்று நான் நம்புகிறேன்.” ஹஜாரின் பெற்றோர் அவளது எழுத்துக்களைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பாவிட்டாலும், ஜாஹர் மர்சியாவின் எழுத்தே அவர்கள் இருவரின் ஆவல்களைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அந்த விருப்பப் பட்டியலில் முதலில் இருப்பது அவர்களுக்கு மிகவும் விருப்பமான துருக்கிய-பிரிட்டிஷ் நாவலாசிரியர் எலிஃப் ஷஃபக். நிறைவேறாத அவர்களது பட்டியலில் அடுத்து இருப்பது பாரீசில் ஈஃபில் டவரைப் பார்க்க வேண்டும், இத்தாலியில் பிசா சாப்பிட வேண்டும் என்பவை. தலிபான் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு புத்தகங்கள் வாங்குவது பற்றிய மர்சியாவின் பதிவை சமூக ஊடகத்தில் ஜாஹர் பகிர்ந்தார். மேலும் மர்சியா, ஹஜாரின் புதைகுழிகளில் அவர்களது சகோதர, சகோதரிகள் புத்தகங்களை வைத்ததையும் பகிர்ந்தார்.
இந்தப் பதிவுகள் சமூக ஊடகத்தில் பரவி, தொடரும் வன்முறையால் தனது இளைஞர்களை இழந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டின் உயிர்நரம்பைத் தொட்டன. மர்சியா, ஹஜாரின் அடக்கத்துக்குப் பிறகு அவர்களின் 22 சகோதர, சகோதரிகள் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட அமைதியான, புழுதி படிந்த, மலைமேலிருந்த இடுகாட்டுக்கு அடிக்கடி வந்து சென்றனர். ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் அங்கு பல புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். பல பெர்சிய மொழிப் புத்தகங்களும், சில ஆங்கிலப் புத்தகங்களும் பல ஆண்டுகள் படித்துக் கிழிந்த புத்தகங்களும், அறிமுகமற்றவர்களால் அங்கு விட்டுச் செல்லப்பட்டிருந்தன. அடுத்த வாரம், மேலும் இரண்டு டஜன் புத்தகங்கள் – ஷஃபாக் எழுதியவை, அமெரிக்க எழுத்தாளர் ரச்சேல் ஹாலிஸ் எழுதியவை, இராக்கிய யாசிதி மனித உரிமைச் செயல்பாட்டாளர் நதியா முராத் எழுதியவை அவற்றில் இருந்தன. “மர்சியா உண்மையிலேயே புத்தகங்களை விரும்பினாள் என்பது எங்களுக்கு எப்போதுமே தெரியும்” என்று ஹஜாரின் மூத்த சகோதரியும், மர்சியாவின் ஒன்று விட்ட சகோதரியுமான 21 வயது இன்சியா குறிப்பிட்டார். ஆனால் மர்சியாவின் டயரியிலிருந்து பல பக்கங்கள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதும், அதைப் படித்த பலரும், “அவர்கள் தம்மைச் சுற்றி புத்தகங்கள் இருப்பதை எப்படி விரும்பினார்கள் என்பதை அறிந்து இந்தப் புத்தகங்களால் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.”
புதியவர்களின் புத்தகங்கள்
மர்சியா தனது தினக்குறிப்பேட்டில் ஃபார்சியி லும், சில சமயம் ஆங்கிலத்திலும் அழகிய கையெழுத்தில் எழுதியிருந்ததை ஜாஹர் அல்ஜசீராவிடம் பகிர்ந்து கொண்டார். சுமார் அரை டஜன் டயரிகள், சில கிழிந்த நோட்டு புத்தகங்கள், மேலும் சில தோல் அட்டை போட்ட டயரிகளிலெல்லாம் நூற்றுக்கணக்கான குறிப்புக்களை மர்சியா எழுதியிருந்தாள். வரலாற்றில் தண்டிக்கப்பட்ட ஹசாரச் மற்றும் பிற ஷியா முஸ்லிம் சமூகங்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையிலும், ஆட்சியில் இருக்கும் தலிபான், பெண்கள் மீது தொடுக்கும் கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் தனது வலுவை புத்தகங்களுக்கு இடையில் தேடிய உறுதி மிக்க இளம் பெண்ணை அந்தக் குறிப்புகள் வெளிப்படுத்தின. தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, அது உயர்நிலைப் பள்ளிகளை மூடிவிட் டது. அதனால் சுமார் 3 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் வேலை செய்யும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களது சுதந்திரத்தின் மீதும் பல கட்டுப்பாடுகளை விதித்தது தலிபான். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டுமென்றால் ஒரு ஆண் உறவினர் கட்டாயம் கூட வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த இளம்பருவப்பெண் ஒரு புத்தகக் கடைக்குச் சென்று மர்சியாவும், ஹஜாரும் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்த ஷஃபாக் எழுதிய ஒரு கட்டிட வடிவமைப்பாளப் பயிலுனர் என்ற புத்தகத்தை வாங்கினார். “நான் எந்த அளவுக்குப் புத்தகங்களை நேசிக்கிறேன் என்பதை இன்று புரிந்து கொண்டேன். மக்கள் புத்தகங்களைப் பார்க்கும் போதும், படிக்கும் போதும் ஏற்படும் மகிழ்ச்சியைக் காண்பதை விரும்புகிறேன்” என்று அவள் எழுதினாள். அவர்கள் குடும்பத்தில் ஒருவர் பயன்படுத்தாத ஒரு புத்தக அலமாரியைக் கொண்டு வந்து அதை சுத்தம் செய்து அந்தச் சிறுமிகள் விரும்பிய இளஞ்சிவப்பு வண்ணத்தை அதில் தீட்டினார்.
ஒரு ஆஃப்கானிய வரைகலை நிபுணரான ஃபாத்திமா கைருல்லாஹி அந்தச் சிறுமிகளின் மரணத்துக்குப் பிறகு வலிமை மற்றும் விரிதிறனின் அடையாளமான பைன் மரத்துடன் அவர்கள் இருக்கும்படி ஒரு சித்திரத்தை வடிவமைத்தார். அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். குடும்பம் அவர்கள் பெயரில் ஒரு நூலகத்தை அமைக்கும் முடிவை எடுத்தவுடன் அவரைத் தொடர்பு கொண்டது. அவரும் அந்த நூலக அறையின் நடுவில் அந்தச் சித்திரத்தை அமைக்க ஒப்புக் கொண்டார். அக்டோபர் இறுதியில் அந்த உறுதியான நூலகப் பெட்டி இடுகாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களது புதைகுழிக்கு அருகில் வைக்கப்பட்டது. அந்த அலமாரியில் சுமார் இரண்டு டஜன் புத்தகங்கள் கண்ணாடிப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. யாரும் அவற்றை எடுத்துக் கொள்ளும்படி அந்தக் கதவுகள் பூட்டப் படாமல் வைக்கப்பட்டன. மர்சியாவும், ஹஜாரும் ஒரே வீட்டில் பல குடும்பங்களுடன் வசித்தவர்கள். அவர்களது தமது சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்ட அறையில் புத்தகங்கள் நிரம்பிக்கிடந்தன. “அவர்கள் புத்தகங்களை எந்த அளவுக்கு விரும்பினர் என்பது எங்களுக்குத் தெரிந்ததால், நாங்கள் இந்த நூலகத்தை அமைத் தோம்” என்று இன்சியா ஜாஹர், பிற உறவினர் களுடன் அமர்ந்து விளக்குகிறார். பல குடும்பங்கள் பகிர்ந்து கொண்ட அந்த வீட்டின் ஒரு குடும்ப அறையில் அவர் பாரம்பரிய ஆஃப்கானிய தரை மெத்தையில் அமர்ந்து பேசுகிறார். “அவர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் இது வைக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று விம்மலுடன் அவர் கூறுகிறார். அவர்களது வாழ் வில் அதைத்தான் அவர்கள் விரும்பினார்கள். “ஹஜார் தனது டயரியில் எழுதி இருக்கிறாள், “நான் படிக்கும் போது மிகவும் நன்றாக உணர்கிறேன். அந்தக் கதையின் ஒரு பாத்திரமாகவே உணர்கிறேன்.”
எப்போதும் கல்வி
மர்சியாவும், ஹஜாரும் ஒன்று விட்ட சகோதரிகள் மட்டுமல்ல – இணை பிரியாத தோழிகள். அவர்கள் இருவரும் மதித்த ஆசிரியர்களைப் போல் வடிவமைப்பாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கனவு கண்டனர். “நாங்கள் பெரும்பாலோரும் எங்கள் பள்ளி புத்தகங்களை மட்டுமே படிப்போம். ஆனால் மர்சியும் ஹஜாரும் வித்தியாசமானவர்கள். அவர்கள் ஏராளமான பல்வகை புத்தகங்களை அறிவைத் தேடித் தொடர்ந்து படிப்பார்கள்.” இன்சியா சோகச் சிரிப்புடன் நினைவு கூர்கிறார். “நாங்கள் பள்ளியில் படித்ததைக் காட்டிலும் அவர்கள் அதிகம் கற்க விரும்பினார்கள்.” இருவரும் புனைவுகளை விரும்பினர் என்று 28 வயது அத்தை நூரியா, ஜாஹரின் சகோதரி கூறுகிறார். அவர் மங்கலான இளஞ் சிவப்பு உடையும், அரக்கு நிற தலைமறைப்பும் அணிந்து, இன்சியாவுடன் அமர்ந்து பேசுகிறார். “ஆனால் இருவருக்கும் ஊக்குவிக்கும் புத்தகங்களும் மிகவும் பிடிக்கும். தலிபான், பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளை மூடியபோதும் அவர்களுக்கு இன்னும் நம்பிக்கை இருந்ததற்கு காரணம் அந்தப் புத்தகங்கள்தான் என்று நினைக்கிறேன். அவை அவர்களை வலுவான பெண்களாக, உயர்ந்த இலக்குகளை நிர்ணயிக்கவும், தமது இலக்குகளை அடைய வேலை செய்யவும் ஊக்குவித்தன” என்று விளக்குகிறார். “இந்தப் புத்தகங்கள் பாதகமான, கட்டுப்பாடுள்ள நிலையிலும் அவர்களை வலுப்படுத்தின என்பது என் நம்பிக்கை. அவை தமது இலக்குகளை விட்டுவிடாமல் தொடர்ந்து போராடக் கற்றுக் கொடுத்தன” என்று மருத்துவ மாணவியான நூரியா கூறுகிறார். அவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற அக்குடும்பத்தின் முதல் பெண். “அந்தப் பெண்களில் சிலர் இனிப் பள்ளி செல்ல மாட்டார்கள் என்று எங்கள் குடும்பத்துச் சிறுமிகள் அறிந்ததும், அவர்கள் மனமொடிந்தனர்” என்று ஜாஹர் கூறுகிறார். அவரும் நூரியாவும் அவர்களை தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருநாள் மாலை கூட்டினர். “நான் அவர்களுக்கு ஒரு கேக் வாங்கிக் கொடுத்து, அவர்கள் விட்டுக் கொடுக்காமல் எப்படி இருக்க வேண்டுமென்று நீண்ட நேரம் பேசினேன். அவர்கள் வலுவாக இருக்க வேண்டும், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று கூறினேன்” என்றார் அவர். “நான் அந்த நாட்களில் அவர்கள் எழுதிய டயரிக் குறிப்புகளைப் படித்த போது, புதிய கட்டுப்பாடுகளையும், சவால்களையும் தாண்டி எழுச்சி கொள்ள எப்படி ஊக்கம் பெற்றிருந்தனர் என்பதை அறிந்தேன். அவர்கள் தமது கல்வியைத் தொடர விரும்பினர், தமது எதிர் காலத்தைத் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள நம்பிக்கையுடன் இருந்தனர்” என்று நூரியா கூறினார்.
‘எந்த சாக்குப்போக்கும் இல்லை’
அவர்கள் உயிருடன் இருந்த போது இருவரும் பல்கலைக்கழகம் செல்லும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஊரடங்கு காரணமாக அவர்களது உயர்நிலைப் பள்ளி முடிவுகள் தாமதமான போது, ‘மர்சியாவும், ஹஜாரும்’ பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது என்று முடிவெடுத்தனர். அதற்கு அவர்களால் அப்போது நேரம் ஒதுக்க முடிந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் மர்சியா எழுதினாள், ‘நான் நேற்றும், கடந்த வாரமும் கடுமையாக முயல வேண்டியிருந்தது.. நான் எனது எதிர்காலத்தையும், என் வாழ்க்கையையும் மாற்ற ஒரு முடிவை நான் எடுத்தாக வேண்டும். இது போன்ற ஒரு நெருக்கடி நிலைமையில் அதை வெல்ல எடுக்கக் கூடிய ஒரே வழி படிப்பது மட்டும்தான்.” அவள் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேற வெளிநாட்டில் உதவித்தொகை பெறுவதற்கு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதை முதல் படியாக நினைத்தாள். “நான் என்னை நம்ப வேண்டும், கடவுள் எனக்கு உதவுவார்” நேரம்: 12.30 நள்ளிரவு. கடவுளே!! நானும் ஹஜாரும் அடுத்த ஆண்டு இதே நேரம், பிப்ரவரி 4 அன்று ஆஃப்கானிஸ்தானில் இருக்கக் கூடாது.” தேதி குறிப்பிடாத ஒரு குறிப்பில், “மின்சாரம் இருக்கிறதோ, இல்லையோ, தனது படிப்பைத் தொடர வேண்டிய தேவை குறித்து எழுதுகிறாள்.
அவர்களது முதல் சோதனைத் தேர்வில் மர்ஜியாவும் ஹஜாரும் 50ம், 51ம் பெற்றனர். மர்சியா வருத்தமடைந்தாள். அடுத்த தேர்வில் 60 மதிப்பெண்ணை இலக்காக நிர்ணயித்தாள். “அருமை, மர்சியா!”. அவள் எழுதிப் பெற்ற மதிப்பெண் 61. ஜாஹர் அவள் 82 மதிப்பெண் பெறும்வரை எப்படி முன்னேறினாள் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
அந்த மதிப்பெண்ணைத் தொடர்ந்து பெற விரும்பினாள். ஆனால்…” அவரது குரல் கம்முகிறது. “மர்சியாவும் ஹஜாரும் நிலைமை மோசமடைந்த போது தீர்வுக்காகத் தமது கல்வியின் பாலும், புத்தகங்களின் பாலும் திரும்பினர். பல்கலைக் கழகம் செல்லும் நம்பிக்கையே இல்லை என்று தோன்றிய போதும், சிலர் அவர்கள் நுழைவுத் தேர்விலேயே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறிய போதும், தொடர்ந்து அவர்கள் தாமே படிக்கவும், கற்கவும் செய்தனர் என்று மர்சியாவின் மூத்த சகோதரியான 22 வயது பர்வானா கூறுகிறார். “அவர்கள் எங்களை ஊக்குவித்தனர்”. ஆனால் அவர்கள் படித்த அனைத்தும் உதவிடவில்லை. ஆஃப்கானிஸ்தானில் இருந்த ஸ்திரமற்ற நிலைமையில், யாசிதி செயல்பாட்டாளர் நதியா முராத், ஐஎஸ்ஐஎல்–ஆல் கைப்பற்றப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுப் பிறகு தப்பியது குறித்து எழுதியதில் 50 பக்கங்களைப் படித்த பிறகு, தனக்கு அவ்வளவு பொறுமை கிடையாது என்று மர்சியா குறிப்பிட்டாள். பின்னால் அதை முடித்தாலும், இப்போது அதைத் தள்ளி வைத்து விட்டாள். 2022 பிற்பகுதியில், அவர்கள் கொல்லப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு தலிபான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்கத் தடை விதித்தது. வரும் நுழைவுத் தேர்வுகளில் தனியார் கல்லூரிகள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று அவற்றுக்கு உத்தரவிட்டது.
‘மிகுந்த வலி’
தலிபான் கட்டுப்பாட்டுக்கு முன்பே மர்சியா, ஹஜார் குடும்பத்தில் பெண்கள் கல்வி பெறுவது எளிதாக இருக்கவில்லை. “நாங்கள் அதற்குப் போராட வேண்டியிருந்தது” என்று நூரியா கூறுகிறார். “எங்கள் பெற்றோர் கல்வியறிவற்றவர்கள். அவர்கள் சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. சிறுவர்கள் சிறுமிகளுக்கு மேலாக மதிக்கப்பட்டனர். ஒரு வளரிளம் பருவப் பெண்ணான ஹஜாரின் மூத்த சகோதரி தனது திருமணத்துக்குப் பிறகு பள்ளிக்குச் செல்வதிலிருந்து நிறுத்தப்பட்டதைப் பகிர்ந்து கொண்டார். இதை எதிர்த்து அவர்களது குடும்பப் பெண்கள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். ஜாஹரும், மற்றவர்களும் குடும்பத்திலிருந்து பெண்களைப் படிக்க வைக்கப் பெரிய அளவில் போராடி இருக்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் கடினம் என்றாலும், மர்சியாவின் பெற்றோரும், ஹஜாரின் பெற்றோரும் அவர்களுக்கு ஆதரவளித்துப் படிக்க வைத்தனர். இன்று தமது இழப்பைத் தாங்க முடியாமல் துன்புறுகின்றனர். இந்தக் கல்லறை நூலகத்தைக் கட்டுவதன் மூலம் அந்தச் சிறுமிகளின் கனவை எப்படியாவது ஓரளவுக்கு நிறைவேற்ற முடியுமா என்று கண்ணீருடன் அந்தக் குடும்பம் முயல்கிறது. ஆஃப்கானிஸ்தானத்தை விட்டுச் செல்லாமல் அதன் நல்ல, அமைதியான எதிர்காலத்துக்காகப் போராடுவது என்று குடும்பம் முடிவெடுத்துள்ளது. மர்சியா, ஹஜாரின் தியாகம் எதிர்கால மாற்றத்துக்கு வினையூக்கியாக இருக்கும் என்று நம்புகின்றனர். இந்தக் கல்லறை நகரத்தை விட்டுத் தூரத்தில் இருந்தாலும், காரின் மூலமே செல்லக் கூடியதாக இருந்தாலும், அங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மர்சியாவும், ஹஜாரும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த கற்றல், படித்தலின் முக்கியத்துவத்தை ஏராளமானோர் இன்று பேசத் தொடங்கியுள்ளனர். அவர்களது அண்டை வீட்டார் ஒருவர் அந்த நூலகத்துக்குச் சென்று விட்டு ஒரு தன்னம்பிக்கை புத்தகத்துடன் திரும்பினார். பின்னர் வீட்டுக்கு வந்து அது எந்த அளவுக்கு மேலும் படிக்கத் தனக்கு ஊக்கமளித்தது என்று கூறினார். பிப்ரவரியில் இதே போன்ற இன்னொரு நூலகத்தைக் குடும்பம் அமைத்தது. அதில் நன்கொடையாகப் பெற்ற30 நூல்கள் வைக்கப் பட்டன. மர்சியாவும், ஹஜாரும் மிகவும் விரும்பிய நாவல்களும் அதில் அடக்கம். கண்மணிகளே உறங்குங்கள். உங்களது தியாகம் ஒரு பெரிய மாற்றத்தைச் சாதிக்கத் தொடங்கியிருக்கிறது. மடிக மதவெறி. மடிக ஆணாதிக்கம்.
கட்டுரை ஆதாரம்: அல்ஜசீரா
நன்றி: தீக்கதிர்
’பாடம்’ சிறுகதை – தங்கேஸ்
நேரம் காலை பதினொரு மணிக்கு மேல் இருக்கும். . நல்ல ஏறு வெய்யில் அடிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்கூடத்தின் காம்பவுண்ட் கேட்டை கிறீச்சென்று சத்தத்தோடு திறந்தபடி கைலி கட்டிய ஒல்லியான உருவம் ஒன்று உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.
நல்ல மிதமான வெயிலுக்கு ஆசைப்பட்டு விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். ஒன்பதாம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. .மூர்த்தி சார் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியை சுற்றிலும் மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அமைதியான சூழலில் இரும்புக் கதவு திறக்ப்பட்டதும் அது எழுப்பிய திடீர் கிறீச் சத்தம் அனைவரையும் ஒரு தற்காலிக பதற்றத்திற்கு கொண்டு சென்றது.. புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் ஒரு கணம் கரிச்சான் குருவிகளைப் போல ஒட்டு மொத்தமாக தலையை மட்டும் உயர்த்தி மேலே பார்த்தனர். உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் அந்த ஒல்லியான உருவத்தைப் பார்த்ததும் சில மாணவர்கள் தங்கள் நண்பர்களிடம் ‘’ டேய் பாட்டுத் தாத்தா வந்துட்டார்ரா ‘’ என்று இரகசியமாக கிசு கிசுத்தனர்.
கசங்கி சாயம் போன ஒரு சிவப்பு நிற அரைக்கை சட்டை. மற்றும் மடித்துக்கட்டப்பட்ட பழுப்பேறிப்போன ஊதா நிற கைலி வேட்டி தோளில் அழுக்கடைந்த ஒரு ஜோல்னாப்பை சகிதம் கையில் பிடித்திருந்த ஊன்று கோலை ஊன்றிய படி அவர் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். எப்படியும் எழுபது வயதுக்கு குறையாது –
நிதானமாக கைத்தடியை ஊன்றி ஊன்றி புல் வெளியில் பாதை கண்டு பிடித்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். வலது கண்ணிற்கு மேலே வலது கையை வைத்து ஒரு முறை பள்ளிக்கூடத்தை சுற்றிப் பார்த்தார்.
ஏற்கனவே பல முறை வந்து போன பள்ளி தான். அர்ச்சலான பார்வை என்றாலும் அதை வைத்து உடனே அலுவலங்கள் வகுப்பறைகள் எல்லாவற்றையும் ஊகித்துக் கொண்டார். பின்பு மெல்ல அலுவலகத்தைப் பார்த்து நடக்க ஆரம்பித்தார்.
மைதானத்தில் ஒன்பதாம் வகுப்பில் அமர்ந்திருந்த சர்வின் சாரிடம் கூட அனுமதி பெறாமல் வேகமாக ஓடிச்சென்று அவர் கையைப் பிடித்து ‘’ வாங்க தாத்தா நான் உங்களை ஹெச்எம் ரூமூக்கு கூட்டிட்டுப் போறேன் ‘’ என்றபடி தலைமையாசிரியரின் அறைக்கு முன் அவரை அழைத்துச் சென்று நிறுத்தினான்.
தலைமையாசிரியர் கவனமெல்லாம் கை பேசியிலேயே இருந்தது. காலையிலிருந்து செக்குமாடு போல சுற்றிக்கொண்டிருக்கும் எம்மிஸ் செயலியில் ஆசிரியர் மாணவர் வருகையைப் பதிவு செய்ய காலையிலிருந்தே அவர் போராடிக் கொண்டிருந்தார்.
வாசலுக்கு வெளியே நின்று கொண்டு உள்ளே அழைக்கப்படும் ஒரு வார்த்தைக்காக பெரியவர் வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை தலைமை ஆசிரியர் நீண்ட நேரம் கவனிக்கவேயில்லை.
‘’ தாத்தா சத்தம் குடுங்க அப்பத்தான் உள்ள கூப்பிடுவாங்க ‘’ என்றான். சர்வின்
‘’ ஐயா ‘’ என்றார் பெரியவர்
தலைமை ஆசிரியர் போனிலிருந்து பார்வையை எடுக்காமலேயே ‘’ குமாரு யாருன்னு போய் பாரு ‘’ என்று ஓ ஏ வை விரட்டினார்..
தடித்த சம்பளப் பதிவேட்டை அவசர அவசரமாக மூடி வைத்து விட்டு வெளியே வந்தான் குமார் .. பெரியவரைப் பார்த்ததும் சட்டென்று அடையாளம் கண்டு கொண்டு
‘’ தாத்தாவைப் பார்த்து வருசக்கணக்காச்சு எப்படி இருக்கீங்க ‘’ என்று அவரது கைகளைப் பிடித்து நலம் விசாரிக்க ஆரம்பித்தான்.
பெரியவரும் நெகிழ்ச்சியாக ‘ யாரு குமாரு தானா ? கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கேன் .குமாரு. .என்ன கொரோனா காலத்துல அப்படியே வீட்டோட முடங்கிப் போயிட்டேன். வீடுன்னா என்ன சுத்திலும் நாலு மண்சுவரு சாக்குப் பையிலே அடைச்ச வாசக்கதவு அவ்வளவு தான்.’’
‘’ ஓஹோ ‘’ என்றான் குமார் . தாத்தா எப்பவுமே அப்படித்தான் பேசுவார்.
‘’ நாமெல்லாம் தப்பி பொழச்சிட்டோம் தாத்தா ‘’
‘’ ஆமா குமாரு …. கண்ணு நல்லா இருந்தவனே வெளியில போய் நடமாடி பொத்து பொத்துன்னு போய் சேர்ந்துட்டான். என்னை மாதிரி ஆளு வாசலை தாண்டினா எப்படி போய் நீஞ்சி வாரது ? – அதான் அப்படியே உள்ளாற முடங்கிப் போயிட்டேன். தவிர எனக்கு உள்ள இருந்தா என்ன வெளியில சுத்துனா என்ன உலகம் ஒரே மாதிரி தான இருக்குது ‘’
‘’ தாத்தா பேச்சு அப்டியேதான் இருக்ககு மாறவேயில்லை. ஆமா தாத்தாவுக்கு பார்வை கொஞ்சம் மங்கிபோச்சோ ?’’
ஏன் குமாரு எனக்கு எப்ப தெளிவாயிருந்துச்சு இப்ப மங்கிப்போறதுக்கு – என்ன ஒன்னுக்கு ரெண்டு தரம் எதையும் பார்த்தா அடையாளம் கண்டுக்கிற மாட்டேனா ?
அது சரி சாப்பாட்டுக்கெல்லாம் என்ன பண்ணீங்க ?’
‘’ ஏன் குமாரு ஊருக்குள்ள உன்னைப் போல நாலு நல்லவங்க இல்லாமலா போயிட்டாங்க.. இல்லன்னாத்தான் என்ன ? நம்ம வீட்டுப் பக்கம் தான சர்க்கார் போட்ட நல்ல தண்ணி குழாய் இருக்கு. பைப்பை திறந்தா எப்பவும் தண்ணீ கொட்டிகிட்டேதான இருக்கு ‘’ என்ற படி மெலிந்த எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும் தனது கையை காற்றில் துழாவி குமாரின் தோள்களைப் பற்றினார்.
பிறகு ‘’ ஆமா ஐயாவை இப்ப பார்க்கலாமா ஏதோ வயித்துப்பாடு கொஞ்சம் சொல்லுறீயாப்பா ‘’ என்றார் .அவரது நரைத்த முடிகளின் மயிர்கால்களிலிருந்து இன்னும் வியர்வை வழிந்தபடியே இருந்தது-
‘’ கொஞ்சம் உட்காருங்க சாருகிட்ட பேசிட்டு வந்து உள்ள கூட்டிட்டுப்போறேன் ‘’ என்றபடி குமார் அவரை வெளியே பார்வையாளர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு உள்ளே சென்று சாரிடம் பேசி விட்டு மறுபடியும் வந்து பெரியவரை உள்ளே அழைத்துச் சென்றான். பெரியவர் எதேச்சையாக தலைமையாசியருக்குப் பின்னால் சுவரில் மாட்டப்பட்டிருந்த திருவள்ளுவர் புகைப்படத்தைப் பார்த்தபடி ‘’ ஐயா வணக்கம் நல்லா இருக்கீங்களா ‘’ என்று நின்றபடியே கும்பிடு போட்டார்.
‘’ ம் ம்ம உட்காருங்க ‘’ என்றார் தலைமையாசிரியர். பெரியவர் உட்காரவிலை. குமார் தான் சாரிடம் சொன்னான் ‘’ சார் தாத்தா வருசா வருசம் நம்ம பள்ளிக் கூடத்துக்கு வர்றவர்தான் இப்ப கொரானாவால இரண்டு வருஷமா வரலை ‘’
தலைமையாசிரியர் தலையசைத்து விட்டு பெரியவரைப் பார்த்து ‘’. ஆனாப் பாருங்க பெரியவரே இப்ப செகண்ட் மிட் டெர்ம் எக்சாம் டைம் மாணவர்கள் மதியம் தேர்வெழுதனும். இப்ப நிகழ்ச்சி நடத்துனா அவுங்க படிப்பு கெட்டுப்போயிரும் அதனால நீங்க இன்னொரு நாள் வந்தீங்கன்னா மாணவர்கள்கிட்ட ப்ரீயா நிகழ்ச்சி நடத்தலாம் ‘’ என்றார்
பெரியவருக்கு தொண்டை கம்ம ஆரம்பித்தது. இரண்டு கைகளையும் கூப்பியபடி ‘’ ஐயா நம்பி வந்துட்டேன். காலையிலேயே பக்கத்துல எலிமெண்ட்ரி ஸ்கூலுக்கு போனேன். ஏதோ அவங்களால முடிஞ்சத கொடுத்து இந்த ஏழைக்கு உதவி செஞ்சாங்க. பிறகு வழக்கம் போல அவங்கதான் என்னை இங்க அனுப்பி வச்சாங்க. இப்ப நீங்க போயிட்டு இன்னொரு நாள் வான்னு சொன்னீங்கன்னா என்னால எடுத்தேறி இன்னோரு நாள் வரமுடியாது. கூட துணைக்கு கூட்டிட்டு வாறதுக்கும் எனக்கு வேற ஆளும் கிடையாது. ‘’ என்று கண்ணை இடுக்கி இடுக்கி அவரைப்பார்த்து பேசினார்.
‘’ ஏன் உங்களுக்குன்னு குடும்பம் ஏதுமில்லையா ‘ ?
‘’ அய்யா பாருங்க நான் ஒரு தனிக்கட்டை .தாய் தகப்பன் இருந்தவரைக்கும் கூட வச்சுப்பார்த்தாங்க. அவுங்க காலத்துக்குப் பிறகு இந்த முப்பது வருசமா நான் ஒண்டிக்கட்டையாத்தான் காலத்தை ஓட்டுறேன் ‘’ என்றபடி ஜோல்னா பைக்குள் ஆர்வமாக கையை விட்டு ‘’’ ஐயாவுக்கு மரியாதை பண்றதுக்காக இந்தப் புத்தகத்தை தேடிப் பிடிச்சு கொண்டாந்திருக்கேன் ‘’ என்றபடி பழைய திருக்குறள் புத்தகத்தை எடுத்து நீட்டினார்.
தலைமையாசிரியர் அந்தப் புத்தகத்தை பெற்றுக்கொள்ளாமல் தனது மேசை டிராயரை திறந்து வரவு செலவு புத்தகத்தை எடுத்து ‘’ முடியாத பெரியவருக்கு ஐம்பது ‘’ என்று பற்றில் எழுதிவிட்டு ‘’ பெரியவரே இந்தப் புத்தகம் உங்க கிட்டேயே இருக்கட்டும் இந்தாங்க என்னால முடிஞ்சது இவ்வளவு தான் இப்ப போயிட்டு இன்னொரு நாள் வாங்க ‘’ என்று ஒரு ஐம்பது ரூபாயை அவர் கைகளில் வைத்து திணித்தார்.
அதுவே அவர் ஒரு தீர்மான முடிவை எடுத்து விட்டார் என்று பெரியவருக்கும் குமாருக்கும் தெளிவாக உணர்த்தியது.
பெரியவர் மார்பின் குறுக்காக இரண்டு கைகளைபும் கட்டிக் கொண்டு ‘’ ஐயா என்னை மன்னிக்கனும் எதுவும் குடுக்காம நான் காசை இனாமா எப்பவுமே வாங்குறதில்லை. நீங்க பெரிய மனசு பண்ணி எனக்கு மாணவர்களைச் சந்திக்கிற வாய்ப்பு கொடுக்கனும். அவங்களை இரண்டு வருசமா பார்க்காம மனசுக்க என்னவோ போலிருக்கு. வாய்ப்பு கிடைக்கும்னு நம்பி இவ்வளவு தூரம் வந்திட்டேன் . ‘ என்றார்
அவரது உயிர்ப்பசையற்ற கருவிழிகள் நிலையில்லாமல் அங்கேயும் இங்கேயும் சுழன்றபடி இருந்தன.
குமாருக்கு பெரியவரைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.. ஏறத்தாழ அவர் மிகவும் தளர்ந்து போயிருந்தார்.
தலைமையாசிரியரிடம் ‘’ சார் தாத்தா நல்லா பேசுவாரு பாடுவாரு மிமிக்கிரி பண்ணுவாரு மேஜிக் பண்ணுவாரு. இப்படி நிறைய வித்தைகள் அவர் கைவசம் இருக்குது. . இதுக்கு முதல்லயும் அவர் இங்க வந்து நிறைய நிகழச்சிகள் மாணவர்களுக்கு குடுத்திருக்காரு. ‘’என்றான் .
தலைமையாசிரியர் பெரியவரை ஏற இறங்கப் ஒரு முறை பார்த்து விட்டு ‘’சரி சரி கரெக்ட்டா அரை மணி நேரம் தான் கொடுப்பேன். அதுக்கு மேல எடுத்துக்க கூடாது- ஸ்கூல் கிரவுண்ட்லயே நிகழ்ச்சியை வச்சிக்கிறட்டும் பசங்களையெல்லாம் அங்கயே வந்து அசெம்பிள் ஆகச் சொல்லு’’ என்று சொல்லிவிட்டு பெரியவரை அங்கிருந்து அழைத்துச் செல்லும் படி குமாருக்கு தலையசைத்து உத்தரவிட்டார்
‘ நல்லதுங்கய்யா ரொம்ப நன்றி ‘ என்றபடி தலைமையாசிரியருக்கு கும்பிடு போட்டபடி குமாரின் பின்னால் சென்றார்.
‘’ தாத்தா பார்த்துக்கோங்க . பழைய ஹெச் எம் மாதிரி இல்ல இவரு இந்த மனுசன் ஒரு முசுடு ஆமா அரை மணிநேரத்துல என்ன வித்தை பண்ண முடியும்.?
‘’ சரி தான் ‘’
‘’ பார்த்துக்கோங்க அரை மணிநேரம்னு சொன்னா பத்து நிமிஷம் முன்னாடியே வந்து வார்னிங் குடுப்பாரு ‘
‘’ வா குமாரு எல்லாம் பார்த்துக்கிருவோம் ‘’ என்று சொல்லி அவனது கையை இறுக்கமாகப் பிடித்தபடி நடந்து சென்றார்.
விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து பெரியவருக்கு முன்னால் அமர ஆரம்பித்தனர். பெரியவர் ஊன்று கோலை ஊன்றியபடி நின்று கொண்டிருந்தார். பார்வை மையமாக வாசல் கேட்டைப் பார்த்து நிலைத்திருந்தது- அவரை குமாரும் மாணவர்களும் சேர்ந்து பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்தனர். வியர்வையை கைகளால் துடைத்துக் கொணடார்.
‘’ தாத்தா எங்கயிருந்து வர்றீங்க ‘’ ? என்று சிறுமிகிகள் கேட்டார்கள்.
‘’ ஐயம் பட்டிம்மா ‘’
‘’ அப்ப ‘ஜ்ல்லிக்கட்டுல மாடு பிடிப்பீங்களா ‘’ ? என்று நக்கலாக கேட்டான் பெரிய சூர்யா . அவனுக்கு எப்பவுமே சேட்டை அதிகம்.
‘’ உன்னை மாதிரி அடங்காத காளைகளை கூட அடக்குவேன் தம்பி ‘’
‘’ எப்பிடி ? ‘’
‘’ பாட்டுப்பாடி , கதை சொல்வி , கருத்து சொல்லி ‘’
‘’ இவரு பெரிய எங்க ஊரு பாட்டுக்காரன் ‘’
‘’ இல்லடா கருத்து கந்தசாமி ‘’ என்று கோரஸாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் கலாய்த்தார்கள்.
‘’ எங்க தாத்தா பாடுங்க பார்ப்போம் ‘’ என்றாள் ஜுலி
பெரியவர் உடனே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்று ஆரம்பித்தார் தொண்டை பிசிறடிக்க ஆரம்பித்தது.
சூர்யா உடனே ‘’ ஐயோ காதைப் பொத்திங்கோங்க தாங்கலை தாத்தா கத்துறது காக்கா கத்துற மாதிரி இருக்குது ‘’ என்று காதைப் பொத்திக்கொள்வது போல் பாவ்லா பண்ணினான். உடனே அவனுடைய குரூப் மாணவர்கள் அனைவரும் காதைப்பொத்திக் கொண்டு ‘’ காக்கா கத்துது தாத்தா பாட்டுல ‘’ என்று கிண்டலடித்தனர்.
வராண்டாவில் ஒரு சேரில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தலைமையாசிரியர் டக்கென்னு எழுந்திருத்து நின்றார். கைகளை பின்னால் கட்டிக் கொண்டு மணிக்ட்டை இறுக்கிப் பிடித்தார். குமார் கூட காரியம் கெட்டுப்போய் விடும் போல என்று நினைத்தான்.
ஆனால் தாத்தா சுதாரித்துக் கொண்டார். உடனே ஜோல்னாப் பைக்குள் கையை விட்டு கருப்படைந்திருந்த புல்லாங்குழலை அழுக்குப் புல்லாங்குழலை எடுத்து உடனடியாக அதே பாடலை ராகத்தோடு வாசிக்க ஆரம்பித்தார் ‘’
‘’ பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு ‘’ ——ஓஓஹோஹோ அய்யய்யோ ஒன்ஸ் மோர் என்று குணசேகரன் குரூப் கிண்டலாக கத்த பதிலுக்கு மாணவர்கள் யாரும் கத்தவில்லை
பெரியவர் புல்லாங்குழலில் அதே வரிகளை மீண்டும் இசைக்க ஆரம்பித்தார். அவர் குரலுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.
அடுத்து பைக்குள் கையை விட்டு மவுத் ஆர்கானை எடுத்த்தார். ‘’தாத்தா பழைய பாட்டு வேண்டாம் புதுப்பாட்டு பாடுங்க என்று மாணவிகள் கோரஸாக கத்த ஆரம்பித்து விட்டனர்.
யாருமே எதிர்பாராமல் பெரியவர் ‘’ பொன்னி நதி பார்க்கனுமே ‘’ என்று ஆரம்பித்ததும் கைதட்டல் பிய்த்துக் கொண்டு போனது.
தலைமையாசிரியர் உட்காரவேயில்லை. நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தார். முழுப்பாட்டையும் பெரியவர் மவுத் ஆர்கனில் வாசித்து முடிக்க்கும் வரையிலும் அசையாமல் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
சூர்யா மெய்மறந்து போய் ‘’ தாத்தா சூப்பர் தலைவர் பாட்டை ஒன்னை எடுத்து விடுங்க’’ என்று காதை அவரருகே கொண்டு சென்றான்.
‘’’ தாத்தா இவந்தான் அப்போல நீங்க பாடும்போது காக்கா கத்துதுன்னு சொல்லி காதைப் பொத்தினவன் ‘’ என்று தங்கமுத்து தாத்தாவிடம் போட்டுக்கொடுத்தான்.
தாத்தா ஒரு நிதானத்தில் சூர்யாவின் காதைப் பிடித்து பொய்யாக திருகினார்.
‘’ நான் பாட ஆரம்பிச்சதும் காதைப் பொத்துனான்ல இப்ப இவங்காத ஏங் கையில’’
‘’ ஆனா தாத்தா நீ பாடுறதை விட சூப்பரா புல்லாங்குழல் வாசிக்கிற ‘’ என்றான் சூர்யா
‘அப்படி வா வழிக்கு ‘’
உன் பேர் என்ன ?
சூர்யா
‘’ சூர்யா முதல்ல ஒரு வசனம் பேசுவோம் அப்புறம் பாட்டு என்றபடி தாத்தா
வீரபாண்டிய கட்ட பொம்மன் படி வசனத்தை அதே கம்பீரத்தோடு பேசிக்காட்டினார். திடீரென்று அவரின் மார்பு விரிந்தது. புஜங்கள் உயர்ந்தன. கைகள் விறைப்பாக இருந்தன. குரலில் ஒரு கர்ஜனை வந்து புகுந்து. கொண்டது. ’’ யாரை கேட்கிறாய் கிஸ்தி எங்களோடு வயலுக்கு வந்தாயா ? நீர் இறைத்தாயா ? இல்லை எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா ?
ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு மாணவணும் எழுந்து வசனத்தை பெரியவர் பேசுவது போல அவரின் பாணியிலேயே பேசிக்காட்ட கூட்டம் கைதட்டி ஆராவாரித்தது.
அதற்குள் மாணவர்களும் ஆசிரியைகளும் ஆசிரியர்களும் என கணிசமான கூட்டம் பெரியவருக்கு முன்னால் சேரஆரம்பித்து விட்டது.. இது தவிர சத்துணவு ஊழியர்கள் மற்றும் பொது சனங்கள் என்று சில பேர்கள் வாசல் கேட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
உண்மையிலேயே பெரியவரிடம் நிறைய அயிட்டடங்கள் இருந்தன. அதை விட முக்கியமான ஒன்று கூட்டத்தை வசியப்படுத்தும் கலை அவருக்கு நன்றாக கை வந்திருந்து.
சிறுவர்களுக்கான பீர்பால் கதைகள் விலங்குள் போல மிமிக்கிரிகள் என ஏக களேபரமாய் நிகழ்ச்சி போய் கொண்டிருந்தது.. தாத்தா பிரபல நடிகர்களின் குரல்களில் மாணவர்களுக்கு அட்வைஸ் வழங்கினார்.
‘’ கண்ணா படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்காமப் போனா
பின்னாடி வா வான்னாலும் படிப்பு வராது. .
கை நிறைய காசு சம்பாதிச்சாலும் மகிழ்ச்சி
இருக்காது ‘’
நான்கு நடிகர்களின் குரலில் இதைப் பேசினார்.
‘’தாத்தா தளபதி விஐய் வாய்ஸ்ல இந்த டயலாக்கைப் பேசுங்க ‘
ஏன் ?
‘ அதை விட உங்களுக்கு பிடிச்ச குரல்ல இப்ப நான் பேசப்போறேன் ‘’
‘’ அது யாரு ‘’
‘ நீங்களே கண்டு பிடிங்க பார்க்கலாம் ‘’ என்று சொல்லி இருபது வினாடிகள் இடைவெளி விட்டார்
கூட்டத்தில் கச கச என்று குரல்கள் எழுந்தன.
‘’ பாருங்க ஸ்டுடன்ட்ஸ படிக்கிற காலத்துல நாம ….. அதற்குள் அந்தக் குரலை அடையாளம் கண்டு கொண்டார்கள். வராந்தாவில் அமர்ந்திருந்த தலைமையாசிரியர் ஒரு விநாடி திகைத்துப் போய் பின் அது தன் குரல் தான் என்று அடையாளம் கண்டு கொண்டதும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார். ஒரு விநாடி அவர் தன்னை மறந்து கை தட்டினார்.
பெண் ஆசிரியைகள் அதை சுட்டிக்காட்டி இரகசியமாக ஏதோ கிசு கிசுத்து சிரித்தார்கள்.
அடுத்து ஆறாவது ஏழாவது எட்டாவது வகுப்பு மாணவிகளை அருகே அழைத்து ‘’ இப்போ மதியம் என்ன எக்ஸாம் பாப்பா ?’ என்று கேட்டார்.
குழந்தைகள் மதியம் இங்லிஸ் ரிவிஷன் எக்ஸாம் என்று கோரஸாக சொன்னார்கள்.
‘’ அப்டின்னா கொஞ்சம் பாடத்தையும் ஆரம்பிக்கலாமா ‘’ என்று கேட்டார்
‘’ ஸ்டெனியா . ஜாய் , ரித்திகா எல்லோரும் சற்று தயங்கி சரியென்று தலையசைத்தார்கள்.
தாத்தாவின் ஸ்பெசாலிட்டியே அது தான்.. மாணவர்கள் தயங்கி நிற்கும் நொடிக்குள் நுழைந்து அதை தனக்கானதாக மாற்றிக் கொள்வதில் சமர்த்தர் அவர்.
‘’ இப்ப ஏங் கூட சேர்ந்து பாடுங்க பார்க்கலாம் என்று சொல்லி விட்டு மேக்கிங் லைவ்ப்’’ வொர்த் வொய்ல் ‘’ அப்டிங்கற பொயம் தான் இப்ப நாம பாடப்போறது பொயட்டோட பேரு ஜார்ஜ் எலியட் என்று ஆரம்பித்தார்.
இதை கேட்டுக்கொண்டிருந்த தலைமையாசிரியருக்கு உடம்பு ஒரு நிமிடம் சிலிர்த்து அடங்கியது. . ஆங்கில ஆசிரியர் பொன்னையா திடீரென்று எங்கிருந்தோ வந்து அங்கே முளைத்து விட்டார்.
ம் பாடுங்கோ’’ எவ்ரி சோல் தட் டச்சஸ் யுவர்ஸ்
பி இட் த சிலைட்டஸ்ட் காண்டக்ட்
கெட் தேர் ப்ரம் சம் குட்
சம் லிட்டில் கிரேஸ் ஒன் கைன்ட்லி தாட் ‘’
தாத்தா பெரிய ராகத்தோடு அட்சர சுத்தமான ஆங்கிலத்தில் அந்த வரிகளைப் பாடும் போது அவரது தடித்த வெள்ளையான புருவங்கள் ஏறி ஏறி இறங்கி நாட்டியமாடின.
ஆசிரியைகள் நடனமிடும் அவரது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் முறை எல்லா மாணவ மாணவிகளும் தாத்தாவுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தார்கள்.
சில ஆசிரியைகளும் சேர்ந்து பாடினார்கள். பொன்னையா சார் கையை காலை ஆட்டி நடனமிடும் பாவனையில் ரியாக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஆறாம் வகுப்புக்கு மாணவர்களுக்கு ஸ்மிதா சக்கரவர்த்தியின் ட்ரீ பாடலும்
ஏழாம் வகுப்புக்கு வால்ட்டர் டீ லாமேரின் லிசனர்ஸ் பாடலும்
பாடி முடித்த போது கூட்டத்தில் கைதட்டலும் விசிலும் பிய்த்துக் கொண்டு போனது.
தலைமையாசிரியர் நிறுத்தாமல் கை தட்டிக் கொண்டேயிருந்தார்.
பொன்னையா சார் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விசிலே அடித்து விட்டார்.
அடுத்ததாக பெரியவர் என்ன செய்யப் போகிறார் என்று முன்னால் உட்கார்ந்திருந்த அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க பெரியவர் தன் இடுங்கி கண்களால் ஒரு முறை சுற்றிலும் நோட்டம் விட்டு விட்டு ஆறாம் வகுப்பு மாணவன் பிரபாகரனையும் கவியரசையும் தன் அருகே வரும் படி சைகையால் அழைத்தார்.
பிரபாகரனைப் பார்த்து ‘’ பேராண்டி உனக்கு என்ன பறவை புடிக்கும் சொல்லு தாத்தா அதை இப்ப இங்கயே கூட்டிட்டு வர்றேன் ‘’என்றார்
பிரபாகரன் மயில் என்றான். கவியரசு ‘’ பறவை வேண்டாம் ஆனை தாத்தா ‘’ என்றான்
சரி தான் ஐயப்பனையே இங்க கொண்டாந்துருவம் என்றபடி சோல்னா பைக்குள் கை விட்டார்.
மிமிக்ரி தான் செய்வார் என்று காத்திருந்த மாணவர்கள் அவர் சோல்னா பைக்குள் எதையோ தேடுவதைப் பார்த்து கொஞ்சம் திகைத்திருந்தனர்.
அவர் அந்தப் பைக்குள் இருந்து சிறிது நேரத்தில் வழ வழப்பான வண்ண வண்ண அட்டைக் காகிதங்களையும் சரிகைத் தாள்களையும் வெளியே எடுத்தார். பிறகு மறுபடியும் பைக்குள் கையை விட்டு நிதானமாக தேடி கூர்மை சிறிது மழுங்கிப் போன நான்கு அங்குல கத்தரியை கைகளில் எடுத்தார்.
யாவரும் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று திகைத்துக் கொண்டிருக்கும் போதே அவரின் கைவிரல்கள் நீலமும் பச்சையும் கலந்த வண்ண அட்டைக் காகிதத்தில் விளையாட ஆரம்பித்தனர். இவ்வளவுக்கும் அவர் காகிதத்ததை மடிக்க கூட இல்லை. நேரடியாக ஒரு வளைவில் கத்தரி இயங்க தீடீரென்று அங்கே ஒரு கழுத்து முளைத்தது- அடுத்ததாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அனுமானிப்பதற்குள் மயில் இறக்கைகளும் வாலும் உச்சிக் கொண்டையும் காகிதத்தில் திரட்சியாக வடிவெடுத்து வந்திருந்தன.
அதன் வேலையை கத்தரி முடித்துக் கொண்ட பிறகு தன்னாலே நின்று போய் சற்று ஓய்வெடுத்தது.
இப்போது தாத்தாவின் கரங்களில் அழகான நீலவண்ண மயில் பச்சை நிற தோகைகள் நீளமான வால் நளினமான கொண்டை வளைவுகள் என அற்புதமான படைப்பாக முளைத்திருந்தது. மயில்.
அந்த மயிலை ஆசையாக ஒரு முறை தடவி விட்டு அதை பிரபாகரன் கையில் கொடுத்தார். முகமெல்லாம் மலர்ச்சியாக விழிகள் விரிய அதை வாங்கிய பிரபாகரன் தாத்தா கேட்காமலே அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தான்.
மாணவிகள் வெட்கப்பட்டு சிரித்தார்கள். மாணவர்கள் அனைவரும் ஹோவென்ற சப்தம் எழுப்பி கைதட்டினார்கள்.
மற்றுமொரு வண்ணக் காகிதத்தை எடுத்தார்..அது சந்தன வண்ணத்தில் நல்ல கெட்டியான காகிதம். மறுபடியும் காகிதத்திற்குள் யானையைத் தேடி தாத்தாவின் கத்தரி பயணித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த காகிதத்தில் ஒருயானை தும்பிக்கையை தூக்கி பிளிறியபடி இருந்தது.
இப்போது கவியரசு அவரது கழுத்தை கட்டிக்கொண்டான்
அடுத்தடுத்து ஒட்டகச் சிவிங்கியும் வேங்கைப் புலியும் புதிதாக முளைத்தன. கூட்டம் முன்பை விட அதிகமாகச் சேர்ந்திருந்தது. கரவொலி விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தது. மாணவிகளின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்து கொண்டே சென்றன.
கடைசியாக இருகரம் கூப்பி வணங்கும் அழகு பெண் பதுமை இரண்டையும் அவர் உருவாக்கி முடித்த போது மாணவிகள் யாரும் ஏதும் சொல்லாமலே ஓடி வந்து அவரது கைகளைப் பிடித்து குலுக்கினார்கள். தாத்தா கண்களில் பாசம் பொங்க சில கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்க கைகளை நீட்டியபடியே இருந்தார்.
மாணவர்கள் பவுனு பாண்டியும் சூர்யாவும் ‘’தாத்தா நாங்கள்ளாம் உங்க ரசிகராவே மாறிட்டோம். பொம்பளைப்புள்ளைங்களுக்கும் சின்னப் பசங்களுக்கும் கலர் கலரா மயில் ரயானையெல்லாம் செஞ்சு குடுத்து அசத்துனீங்கள்ள அது போல எங்களுக்கு ஒரே ஒரு புதுப்பாட்டு மவுத் ஆர்கான்ல வாசிச்சு காட்டுங்க போதும் நாங்க உங்களுக்கு ரசிகர் மன்றமே ஸ்கூல்ல வச்சிர்றோம் ‘’ என்று கோர’’ஸாக சொன்னார்கள்.
அதற்குள் சில மாணவர்கள் உணர்ச்சி வசப்பட்டு ‘’ ஹைவேவிஸ் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக பாட்டுத் தாத்தா பெருமையுடன் வழங்கும் ‘’
இளைய தளபதி விஜய் நடித்த வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே பாடல் இப்போது நமக்காக
மாணவர்களும் மாணவிகளும் ஆரவாரத்தின் உச்சத்திற்கு சென்றனர். யாருக்கும் அவர்களின் மகிழ்ச்சிக்கு தடை விதிக்க தோன்றவேயில்லை. பிடி சார் விசிலை சாக்கிரதையாக எடுத்து பேண்ட் பைக்குள் வைத்துக் கொண்டார்.
தாத்தா அவர்களையெல்லாம் கையமர்த்தி அமைதியாக்கி விட்டு தன்னுடைய புல்லாங்குழலை மறுபடியும் எடுத்து உதட்டில் பொருத்தினார்
தாத்தாவுக்கு புதுப்பாட்டு தெரிந்திருக்குமா என்று மாணவர்கள் யோசிக்கவேயில்லை. ஆனால் சில ஆசிரியர்கள் யோசித்தார்கள்.
ஆனால் அது எல்லாம் ‘’ ரஞ்சிதமே ரஞ்சிதமே மனசை கரைக்கும் ரஞ்சிதமே ‘’ என்று புல்லாங்குழலில் வாசிக்க ஆரம்பிக்கும் வரை தான். மொத்த கூட்டமும் ஹோ வென்று கத்த ஆரம்பித்தது-
குமார் எங்கிருந்தோ போர்ட்டபிள் ஸபீக்கரையும் மைக்கையும் தாத்தாவுக்கு முன்னால் வைத்திருந்தான்.
தாத்தா பல்லவி முடித்து சரணம் எடுப்பதற்குள் கிரவுண்டில் தலைகள் தென்பட ஆரம்பித்தன – சொல்லப்போனால் தாத்தாவின் வாசிப்பு உண்மையிலேயே ரஞ்சிதம் தான் .யாரையும் மிச்சம் வைக்காமல் கிறங்கடித்து விட்டது. ஒன்ஸ் மோர் குரல்களும் விசில் சத்தமும் ஹோ என்ற கூச்சலும் நிற்பதற்கு வெகு நேரம் ஆனது. ஹெச் எம் கூட கை தட்டுறாரு பாருங்கடா என்றான் தங்க முத்தையா..
இது தான் சமயம் என்று தாத்தா ஜோல்னாப் பைக்குள் இருந்து அழுக்கடைந்த டர்க்கி டவலை எடுத்து தன் முன்னால் விரித்து விட்டு அதே வேகத்தில்
‘’ புண்ணியம் தேடி காசிக்கு போவார் இந்த உலகத்திலே ‘’ என்று புல்லாங்குழலில் வாசிக்க ஆரம்பித்ததும் தூரியில் விழும் அயிரை மீன்களைப் போல காசுகள் பொத்து பொத்தென்று அதில் விழ ஆரம்பித்தன. மாணவ மாணவிகள் யாரும் கணக்குப் பார்க்கவில்லை. கையில் இருந்ததை அப்படியே போட்டு விட்டார்கள். காசு விழும் சப்தம் பெரியவருக்கு போதுமான ஆனந்தத்தை அளித்திருக்க வேண்டும்
அவர் காற்றில் இலக்கற்று பறந்து போகும் கரிச்சான் குருவியைப்போல புல்லாங்குழலின் இசைக்குள் நீந்திப் போய்க் கொண்டே இருந்தார். எதிரில் தென்படுகிறவர்களையெல்லாம் தன்னோடு வானில் பறப்பதற்கு அழைத்துச் சென்று கொண்டேயிருந்தார்.
மாணவர்கள் அவர் முகத்தில் வெய்யில் விழுந்து மறையும் விநோத காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். வியர்வை ஆறாக காதோரங்களில் வழிய ஆரம்பித்தது- யாருக்கும் எதுவும் பேசத்தோன்றவில்லை. அவ்விடம் விட்டு நகரவும் தோன்றவில்லை.
நெடுநேரம் வானத்தில் சிறகடித்த பறவை தரைக்கு வந்து தத்தி நடப்பது போல அவர் குழலின் வேகம் இப்போது மெல்ல மெல்ல குறைந்து வந்து பின்பு சட்டென்று நின்றது. எல்லா மாணவர்களும் எழுந்து நினறு கை தட்டி ஆராவராம் செய்தனர்.
தலைமையாசிரியர் ‘ பென்டாஸ்டிக் ‘ என்று தனக்குள்ளேயே சொல்லி விட்டு தனது அறைக்கு சென்றார்
பெரியவர் துண்டில் விழாமல் அவர்க காலடியில் விழுந்து கிடந்த சில்லறைகளையும் கவனமாக எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டிருந்தார்..
‘’ ஏ தாத்தாவுக்கு நல்லா கண்ணு தெரியுது சும்மா நம்மளை ஏமாத்திகிட்டு இருக்குறாரு ‘ என்றாள் ரேஷ்மா.
தாத்தா தன் பொக்கை பற்கள் தெரிய சிரித்தார்.’’ அரை குறையாத்தான் தான் தெரியும் பாப்பா உங்கள மாதிரி நல்லா தெரியாது ‘’
‘ அப்புறம் எப்படி எல்லாத்தையும் கரெக்ட்டா கண்டு பிடிக்கிறீங்க ?
‘’ ஆனா தாத்தாவுக்கு கொஞ்சம் மந்திரம் தெரியும்ல ‘ என்ற படி சிரித்தார்.
எப்பிடி ?
‘தாத்தா உன் குரலை வச்சே உன் உருவத்தை மனசுல வரைஞ்சிருவேன்ல ‘’ என்று சிரித்தார்.
இறுதியில் நிகழ்ச்சி முடிவுக்கு வந்த போது ஆயிரத்து ஐநூற்றி எண்பது ரூபாய் சேர்ந்திருந்தது. இவ்வளவு பெரிய தொகையை சத்தியமாக பெரியவர் எதிர்பார்க்கவேயில்லை.
இப்போது .தலைமையாசிரியர் அறையில் அவருக்கு முன்பாக பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போதும் கூட அவரால் அதை நம்பத்தான் முடியவில்லை. அவரது கண்கள் ஏறத்தாழ தழும்பியிருந்தன.
தலைமையாசிரியர் ‘’ ரொம்ப பிரமாதம் பெரியவரே உங்ககிட்ட இவ்வளவு திறமைகள் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. .சீக்கிரம் மாணவர்களுக்கு உங்க மூலமா பயிற்சி கொடுக்குறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். இப்போதைக்கு இதை வச்சிக்கோங்க’’ என்று கையில் வைத்திருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை பெரியவரின் கரங்களில் வைத்தார்
‘’ தாத்தா ஐநூறு ரூபா வாங்கிக்கோங்க ‘’ என்று குமார் பெரியவரின் காதுகளில் சத்தமாக கிசு கிசுத்தான்.
ரூபாய் நோட்டை தொட்டதும் பெரியவரின் கரங்கள் இலேசாக நடுங்கின.
பெரியவர் பழைய திருக்குறள் புத்தகத்தை தேடி எடுத்து ‘’ இது ஐயாவுக்கு என்று ‘’ அவர் கைகளில் கொடுத்தார். பிறகு ‘’ ஐயா மறுக்காம இதையும் நீங்க வாங்கிக்கனும் ‘’ என்று பைக்குள் கையை விட்டு சற்று முன்னர் வண்ணக்காகிதங்களில் வார்கக்ப்பட்ட மயில் , யானை ஒட்கச்சிவிங்கி , புலி பதுமை என்று அனைத்தையும் மொத்தமாக எடுத்து வழங்கினார்.
தலைமையாசிரியர் அதை ஆசையாகப் பெற்றுக்கொண்டார்.
அந்த நிமிடத்தில் தாத்தாவை பார்ப்பதற்கு பெரிய கொடைவள்ளல் போல் தோன்றியது குமாருக்கு.
‘’குமாரு இதை நோட்டீஸ் போர்டுல டிஸ்பிளே பண்ணிடு ‘’ என்றார் தலைமையாசிரியர்
விடைபெறும் போது பெரியவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டேயிருந்தார். இனி இந்த முகத்தை என்றுமே மறக்க முடியாது என்றும் நினைத்துக் கொண்டார்.
அறைக்கு வெளியே நடந்து வரும்போது பெரியவர் குமாரின் கையைப் பிடித்து அதில் ஒரு ஐம்பது ரூபாயை வைத்தார்
‘’ வேண்டாம் தாத்தா ‘’ என்றான் குமார்
‘’ தாத்தாவோட அன்வு பரிசை வேண்டாம்னு சொல்லாத . வா ரெண்டு பேரும் போயி செந்தில் கடையில சூடா டீ குடிக்கலாம் , உங்க ஊரு டீயைச் சாப்பிட்டு ரெண்டு வருசம் ஓடிப்போச்சுல்ல ‘’ என்றார்.
குமார் ‘’ஒரு நிமிசம் இருங்க தாத்தா சார்கிட்ட சொல்லிட்டு வந்திர்றேன் ‘’ என்று உள்ளே சென்றான்.
பெரியவர் மெதுவாக வாசலைப் பார்த்து நடக்கத் தொடங்கினார். அதற்குள் அங்காங்கு இருந்து ஒடி வந்த மாணவ மாணவிகள் இருபுறமும் அவர் கைகளைப் கோர்த்து பிடித்துக் கொண்டு அவரிடம் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
தங்கேஸ்
திரைவிமர்சனம்: THE TEACHER (மலையாள மொழி திரைப்படம்) – விமர்சனம் கருப்பு அன்பரசன்
திரைக்கலைஞர் அமலாபால்
தேவிகா டீச்சராக நடித்து
விவேக் இயக்கத்தால் வெளிவந்திருக்கும் “தி டீச்சர்” மலையாளத் திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டும்
நெட் பிலிக்ஸ் ..ஓ டி டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றும் தேவிகா டீச்சர்..
பயிலும் பள்ளி ஆண் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவிக்கும் பெண் ஆசிரியையை, ஆசிரியராக பார்க்க மறுத்த பார்வையிலும், எண்ணத்திலும் வளர்த்த, வளர்ந்த ஆண் பிள்ளைகள் என்கிற மதப்பில் ஆசிரியரின் அக்கறை மிகுந்த வார்த்தைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவருக்கு இனிப்பில் மயக்க மருந்து கொடுத்து,
மயங்கியதும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
மயக்கம் தெளிந்து தன் நிலை உணர்ந்த தேவிகா டீச்சர் யாரிடமும் பகிர முடியாமல் தன் தோழியோடு மட்டுமே
பகிர்ந்திருப்பார். இதை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் அந்த மாணவர்கள் அவரை மிரட்டியதையும் சேர்த்தே சொல்லி இருப்பார் தன் தோழியிடம். அதெல்லாம் ஒன்று நடக்காது நீ தைரியமாக இரு என்ற தோழி அவருக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருப்பார்.
திருமணமாகி நான்கு வருடம் கடந்த பின்னும் தாய்மை அடையாதிருந்தவர் இந்த நிலையில் அவரின் பீரியட் நேரம் தள்ளிப் போகிறது. அதிர்ச்சியடைந்த தேவிகா தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொழுது; கர்ப்பப்பையில் கரு உருவாகி இருப்பது உறுதி செய்யப்படுகிறது. குற்ற உணர்ச்சியின் காரணமாக கரு உருவாகி இருப்பதை கணவரிடமும் சொல்லத் தயங்குகிறார். தன் வயிற்றில் வளரும் கருவை கலைக்க முற்பட்டதை அறிந்த கணவனிடம் பள்ளியில் நடைபெற்ற அனைத்து விஷயங்களையும் சொல்கிறார். ஆறுதலாக இருக்க வேண்டிய கணவன் அவரை தகாத வார்த்தை சொல்லி கடுமையான முறையில் நடந்து கொள்கிறான். அவரின் சுதந்திர செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கி தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறான் அவருக்கு எதிராக.
தேவிகா டீச்சருடைய கணவனின் அம்மா கல்யாணி.. கல்யாணி எளிய மக்களுக்கு ஆதரவாக அவர்களின் உரிமைக்காக அவரின் வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து களத்தில் போராடிவரும் வீரமிகுந்த பெண்.. களப்போராளியாக இருக்கும் அவர் ஒரு கம்யூனிஸ்ட்.
தனக்கு நியாயம் வேண்டும் என்று தேவிகா டீச்சர் காவல் நிலையத்திற்கு செல்ல முற்படும்பொழுது
“இதை அப்படியே விட்டுவிடலாம்..
காவல் நிலையத்திற்கு சென்றால், நம்முடைய குடும்ப கௌரவம் என்னாவது.. எல்லோரும் தவறாகத்தான் பேசுவார்கள்” என்று சுய கௌரவத்திற்காக டீச்சரின் நடவடிக்கை கட்டுப்படுத்தும் போது அடங்க மறுக்கிறார் தேவிகா டீச்சர்.
டீச்சருக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கல்யாணியும் அவரின் தோழர்களும். டீச்சரின் அப்பா அம்மா தங்கை உள்ளிட்ட குடும்பமும் அவரோடு நிற்கிறார்கள்.
காவல்துறையின் லத்திக்கு பெண்களை கருவுறச் செய்யும் வாய்ப்பு இருந்திருந்தால் இத்தனை நாட்களில் பல நூறு முறை நான் கருவுற்று இருப்பேன் என்று காவல்துறையின் நடவடிக்கை குறித்து பேசி, தேவிகாவை பார்த்து “நீ எடுக்கும் எந்த முடிவிற்கும் நான் உன்னோடு இருப்பேன்.. முடிவெடுக்கும் அதிகாரம் உன்னுடையது” என்று உறுதி கூறுகிறார்.
சமூகத்தில் பெண் ஒருவர் ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் பொழுது அதை நேர்கொண்டு தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய கணவன் எப்படியெல்லாம் ஆணாதிக்க சிந்தனைக்குள்ளும் பொய்யான கௌரவத்திற்குள்ளும் இருக்கிறான் என்பதையும்.. ஆணாதிக்க சிந்தனைகளுக்கு ஆட்பட்டு இருக்கும் நீதித் துறையும், காவல்துறையும் இங்கு ஒரு சார்பாகவே பார்த்து பழகி இருக்கும் இந்நிலையில்; காவல்துறையின் துணையோடு சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளின் வழியாக தப்பித்திடும் ஆண்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எந்த வகையில் எப்படி எடுக்கப்பட வேண்டி இருக்கிறது என்பதனையும் கம்யூனிஸ்டுகளின் துணையோடு செய்து முடிப்பார் தேவிகா டீச்சர்.
சட்டம் தனக்கான நீதி வழங்கும் என்கிற நம்பிக்கை சாதாரண மக்களுக்கு ஏற்படாத பொழுது அவர்கள் எப்படியான நடவடிக்கைக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்படுகிறார்கள் என்பதற்கு தேவிகா டீச்சர் முன்னுதாரணம்.
சட்டமும் ஜனநாயகம் வேண்டுமானால் களப்போராளி கல்யாணியின் செயலையும் தேவிகா டீச்சரின் நடவடிக்கையும் தீர்ப்பையும் எதிர்க்கலாம்..
ஆனால் எளிய மக்கள் சாதாரண மக்கள் எல்லா வர்க்கத்திலும் இருக்கக்கூடிய பெண்கள் தேவிகா டீச்சரின் நடவடிக்கையை கொண்டாடுவார்கள் அதில் வரக்கூடிய கம்யூனிஸ்டுகளை கொண்டாடுவார்கள்.
உடன் பயணிக்கும் ஆண், தன்னை நம்பாத பொழுது பெண் என்கிற சக்தி தனியாக வலுவாக நிற்க வேண்டும்; நிற்கும் என்பதற்கு உதாரணம்தான் “தி டீச்சர்” திரைப்படம்.
தனியா கெத்தாகா நிற்பார்கள் கம்யூனிஸ்ட் கல்யாணியும் தேவிகா டீச்சரும் படம் முழுவதிலும். தேவிகா டீச்சராக அமலாபால் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்.
கம்யூனிஸ்ட் கல்யாணியாக வரும் பெண் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
இயக்குனர் விவேக் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.
கருப்பு அன்பரசன்
நூல் அறிமுகம்: மாலினி சீதாவின் வகுப்பறை மொழி – தி. தாஜ்தீன்
நூல் அறிமுகம்: என்.மாதவனின் ”13 லிருந்து 19 வரை” – தி.தாஜ் தீன்
நூல் : 13 லிருந்து 19 வரை
ஆசிரியர் : என்.மாதவன்
விலை : ரூ.₹ 60/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
இன்றைய காலகட்டத்தில் பதின் பருவத்தினரைக் (Teenager) நாம் கையாள்வது ஒரு பெரும் சவாலாக சிக்கல் நிறைந்த task ஆகவே இருக்கிறது. பதின் பருவக் குழந்தைகளையோ, பெற்றோர்களையோ அல்லது ஆசிரியர்களையோ சாடாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தூண்டும் கருத்துகள் உள்ள புத்தகம்.
பெரும்பாலும் பதின்ம வயது (13 – 19 வரை) என்பது ஒருவித குழப்பமான பருவம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
நாம் எல்லோருமே இதனைக் கடந்து வந்திருந்தாலும் கூட நாம் அப்பருவத்தில் இருந்தது எல்லாம் பெரும்பாலும் மறந்தே விடுகிறது, மறக்காமல் இருந்தாலும் அதனை வெளிகாட்டுவதில்லை.
பதின்ம வயதில் ஏற்படும் உடல் மாற்றம் சார்ந்த குழப்பங்கள். பெரும்பாலும் தம்மைப் பலரும் கவனிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், தன் அழகை தானே ரசிக்க தூண்டும் எண்ணம், எதிர் பாலின ஈர்ப்பு, தன்னை சார்ந்த குழுவினரின் தூண்டல்கள். பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்பு, ஒப்பீட்டு பேச்சுகள் இதுபோல ஏராளமான சவால்களைச் சமாளித்து வரும் அவர்களது உணர்வுகளை உணர்ச்சிப் பூர்வமாக அல்லாமல் அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே பலனளிக்கும்.
இந்த பதின் பருவத்தில் உள்ளவர்களை அவர்களது கேள்விகளுக்கான பதில்களை சரியான அணுகுமுறையில் அவர்களை அறியச் செய்தல் மட்டுமே அவர்களை சிறந்த மனிதானாக மாற்ற இயலும் வழி.
குடும்பம், கல்வி நிலையங்கள், சமூகம் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது. ஆனால் அவர்களை நேர்கோட்டில் வளர்த்தெடுக்க வேண்டிய இம்மூன்று முனையும் தவறுகள் செய்வோரைத் திருத்துவதை விட தண்டிப்பது எளிது என்ற காரணத்தால் எப்போதும் அதனையே செய்கிறோம். ஏதேனும் தவறு செய்தால் திட்டுவது, அடிப்பது, மிரட்டுவது, சக வயதில் உள்ளவரை வைத்து Compare செய்வது. இது அனைத்தும் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது.
13லிருந்து 19வரை உள்ள இளைஞர்களை முறையாக வளர்த்து எடுக்காவிட்டால் அவர்கள் வழி தவறிப் போகும் அபாயமே அதிகம். அதே போன்று சினிமா மற்றும் ஊடகங்களின் தாக்கம் மற்றும் ஆதிக்கம் இப்பருவத்தினரிடம் மேலோங்கியே இருக்கும். ஆகவே திரைப்படங்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும், முறையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த வயதை வைத்து தான் அவர்களை கேடான வழியில் செல்ல தூண்டும் விதமாக பெரும்பாலும் படங்கள் இடம் பெறுகின்றன.
மேலும் ஆசிரியர் மாதவன் குறிப்பிடுவது பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எளிமையாக வாழுவது மிகப்பெரிய ஆளுமை என்ற கருத்தை அவர்களிடையே விதைக்க வேண்டும் என்கிறார். கற்றலின் முறைகளை தெளிவு படுத்த வேண்டியது ஆசிரியப் பெருமக்களின் கடமை என சுட்டி காட்டியுள்ளார்.
மாணவர்களின் கற்றலில் எதை நினைவில் வைத்திருக்க வேண்டும்,எதைக் கற்று மறக்க வேண்டும்,எதைக் கற்கவே கூடாது என்பன போன்ற விசயங்களில் தெளிவான சிந்தனையை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் கைகளில் உள்ளது என்பதை நினைவு படுத்துகிறார்.
இளைஞர்களை முறையான விதத்தில் வளர்த்தெடுப்பதில் குடும்பம், பள்ளி, சமூகம் இந்த மூன்றின் பங்களிப்பே முக்கியம். இளையோருக்கு சரியான வழிகாட்டுதலை அளிப்பதன் மூலம் அவர்களை நன்றாகவும், நல்லவர்களாகவும் வாழப் பயிற்றுவிக்க வேண்டும்.
இறுதியாக ஆசிரியர் கூற வருவது Teenager வயது உடையவர்களை கையாளும் வழி தெரியாமல் திணறும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாய் இந்நூல் உள்ளது.
தி.தாஜ் தீன்
தி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி
ஆவணியாபுரம்,ஆடுதுறை
ஒரே நாடு.. ஒரே நுழைவுத் தேர்வு உயர்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் நுழைய முடியுமா? கட்டுரை – பொ.இராஜமாணிக்கம்
இந்த வருடம் பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு-2022(CUET-2022) நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் ஐந்து தனியார் பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இது தேசிய கல்விக் கொள்கை 2022 பரிந்துரையின் அடிப்படையில் தேசியத் தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டது. உயர்பட்ட மேற்படிப்புக்கான தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அதனடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே சென்ற வருடம் மத்திய பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் பொது நுழைவுத் தேர்வு (CUCET-2021) நடத்தப்பட்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த வருடம் அனைத்து மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், அதன் கல்லூரிகளுக்கும் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாக (CUET-2022) இது மாற்றப்பட்டு நடத்தப்பட்டது. ஆனால் இந்த வருடம் மாநிலப் பல்கலைக் கழகங்கள் இதை அமுல்படுத்தத் தயாராக இல்லாத காரணத்தால் மத்தியப் பல்கலைக் கழகங்களில் மட்டும் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வருட சேர்க்கையில் தற்போது கிடைத்த தகவலின்படி மாநிலத் தேர்வு வாரியங்களில் படித்தவர்களை விட அதிக அள்வில் சி பிஎஸ்ஸி யில் படித்த மாணவர்கள் மத்திய பல்கலைக் கழகங்களில் அதிகம் இடம் பெற்று உல்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் டெல்லி பல்கலைக் கழகத்தின் ஒரு கல்லூரியில்(இந்து கல்லூரி) அரசியல் விஞ்ஞானப் படிப்பில் 120 கேரளா மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள். இந்த வருடம் ஒரு மாணவர் மட்டுமே இது வரை சேர்ந்துள்ளனர் என்று வயர் இதழ் கூறுகிறது.
வருடந்தோறும் சிபிஎஸ்ஸி மாணவர்களே அதிகமாக, 80 சதவீதத்திற்கு மேல், சேரும் போது கடந்த வருடத்தில் கேரளா, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா சுமார் 1500-1800 மாணவர்கள் சிபிஎஸ்ஸி க்கு அடுத்தபடியாக சேர்ந்திருந்தனர். கேரளா மாநில கல்வி வாரிய மாணவர்களே பிற மாநிலங்களை விட அதிகமாகச் சேர்கிறார்கள் என்றும் கேரளாவில் அதிக மார்க்குகள் போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் சொல்லப்பட்டது. இந்த வருடம் தற்போதைய நிலவரப்படி அனைத்து மாணவர்களும் 95 சதவீத்திற்கு மேல் சிபிஎஸ்ஸி போன்ற மத்திய கல்வி வாரியத்தில் படித்தவர்களே அதிகம் சேர்ந்துள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் என்சிஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி வடிவமைக்கப்படுவதும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி பெறுவதும் தான் என்கிறார்கள்.சுமார் 39 மாநிலக் கல்வி வாரியங்களின் மாணவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்த வருடம் ஹரியானா மாநிலக் கல்வி வாரிய மாணவர்கள் அதிக இடம் பிடித்துள்ளனர். ஆனால் ஹரியானாவை யாரும் குற்றம் சாட்டவில்லை என்கிறார்கள் வயர் இதழில் எழுதியுள்ள அபூர்வானந்த், முனைவர் அனிதா ராம்பால்.
தேசிய தேர்வு முகமையும் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளும்:
தேசிய தேர்வு முகவை என்பது ஒன்றிய அரசின் கல்வித் துறையால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். தேசிய கல்விக் கொள்கை 2020ன் பரிந்துரையின்படி இது உருவாக்கப்பட்டுள்ளது.1860ம் வருட கூட்டுறவு பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தலைவர் உட்பட 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது நிதி உட்பட அனைத்திலும் சுயமாக இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
உயர்கல்விக்கான அனைத்து நுழைவுத் தேர்வுகளும் இனிமேல் இந்த முகமை மூலமே நடத்தப்பட உள்ளது. இதுவரை சிபிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட நீட் தேர்வு தற்பொழுது இந்த முகமை மூலமே நடத்தப்படுகிறது. தற்போது கலை அறிவியல் பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தியுள்ளது. எதிர்காலத்தில் அனைத்து உயர்கல்வி பொறியியல், விவசாயக் கல்வி உள்ளிட்ட அனைத்தையும் இம் முகமை நடத்தும் எனவும் தெரிகிறது.
நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு ஏன் தேவை என்பதற்கு யுஜிசி கூறும் காரணம் என்னவென்றால் உயர்கல்விக்கு வரும் பள்ளி மாணவர்கள் பல்வேறு போர்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வருவதால் அதிக கட் ஆஃப் மார்க்குகளைப் பெற்ற மாணவர்கள் உயர்கல்வியை கைப்பற்றுகின்றனர். பிறர் விடுபடுகின்றனர். எனவே பொது நுழைவுத்தேர்வு மூலம் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான தேர்வு முலம் உரிய மாணவர்கள் உரிய உயர்கல்விச் செல்ல வாய்ப்பிருக்கும் என்கிறது.
இப்பொழுது நமது கேள்வி என்பது பல்வேறு போர்டுகளின் மதிப்பீட்டு முறையில் ஒழுங்குமுறை கொண்டு வந்து மாணவர்கள் மதிப்பீட்டு முறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்குப் பதிலாக மற்றொரு மைய மதிப்பீட்டு முறையின் மூலம் மாநில தேர்வு மாணவர்களை வடிகட்டும் முறை எதற்கு என்பது தான். இந்த மையத் தேர்வு என்பது தனியார் பயிற்சி மையங்களில் அதிக அளவில் பணம் கட்டிப் படிக்கும் மாணவர்களே அதிக மதிப்பெண் எடுத்து உள்ளெ நுழைவதும் ஏழை மாணவர்கள் இதில் வெளியேற்றப்படுவதும் தான் நடைபெறுகிறது. இதைத் தான் நீட் தேர்வு கடந்த வருடங்களில் நிரூபித்து வருகிறது. எனவே மைய நுழைவுத் தேர்வு தீர்வு அல்ல.
பொது நுழைவுத் தேர்வின் சவால்கள்:
பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான கேள்வித்தாள் என்பதே இந்தி, ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே இந்த வருடம் நடத்தப்பட்டது. அப்படியானால் அந்தந்த மாநிலங்களில் தாய்மொழியில் படித்த மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்களா? மத்திய பல்கலைக் கழகத்தில் சேர்வதிலிருந்து இவர்களை நுழைய விடாமல் தடுத்து நிறுத்திவிடப் பட்டிருக்கிறார்கள் அல்லவா?
இந்தியாவில் ஏற்றத் தாழ்வுமிக்க சமூக அமைப்பு, முழுமையற்ற பள்ளிக் கல்வி கட்டமைப்பு, உறுதி செய்யப்படாத ஆசிரியர்-மாணவர் விகிதங்கள், ஆசிரியர் பற்றாக்குறை, பல்வேறு வகைப் பாடத்திட்டங்கள், பல்வேறு வகை கற்பித்தல் முறை ஆகியன மூலம் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் மூலம் தேர்வை நடத்துவது அராஜகமான அணுகு முறை அல்லவா?
அகில இந்திய பொதுத் தேர்வை நடத்த மிகப்பெரிய கட்டமைப்புத் தேவைப்படுகிறது. இந்த வருடம் ஒவ்வொரு நுழைவுத் தேர்வு மையத்திலும் சுமார் 300 கம்ப்யூட்டர்கள் இருப்பதும் மிக திறன் மிக்க இணய வசதி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இது இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் சாத்தியமாகுமா? வட கிழக்கு மாநிலங்களில் பல பல்கலைக்கழகங்கள் இத் தேர்வு நடத்துவதை கைவிட்டுள்ளனர்.இதனால் அப்பகுதி மாணவர்கள் கர்நாடக உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு சென்று நுழைவுத் தேர்வு எழுதி உள்ளனர் என திரிபுரா பலகலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் சலீம் ஷா குறிப்பிடுகிறார்.
நீட் தேர்வு, ஜேஈஈ, சட்ட நுழைவுத் தேர்வு, நிர்வாகவியல் நுழைவுத்தேர்வு ஆகிய மைப்படுத்தபப்ட்ட தேர்வுகளில் பள்ளியில் படிக்கும் போதே தனியார் பயிற்சியில் அதிகப் பணம் கட்டிப் பயிற்சி பெற்று இந்த இடங்களைக் கபளீகரம் செய்து இருக்கிறார்கள். இது போல் தரமான பல்கலைக்கழகங்களை, கல்லூரிகளை வசதி படைத்தோரே பிடித்தமான படிப்புகளில் சேர முடியும் என்ற நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது அல்லவா? இதற்கான தனியார், பைஜூஸ் போன்ற கார்ப்பொரேட் பயிற்சி மையங்கள் கோட்ட ராஜஸ்தான் போன்ற இடங்கள் மட்டுமில்லாமல் இனி இந்தியா முழுவதும் பரவ வழி வகை செய்யாதா? அவர்கள் மாணவர்களிடம் கொள்ளையடிக்கப் பச்சை விளக்கு காட்டுவது போல் இல்லையா?
உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு தான் முக்கியமென்றால் +2 வரையிலான கல்வியையும், நுழைவுத் தேர்வுக்காக மொழிக் கேள்விகள் கொண்ட இரண்டு பகுதிகள் , ஆறு துறைசார்ந்த படிப்புக்கான கேள்விகள் கொண்ட ஒரு பகுதி மேலும் பொது அறிவு,சமகாலச் செய்திகள், லாஜிக், அனலிடிகல், கணித அறிவு ஆகியன கொண்ட ஒரு பகுதி என நான்கு பகுதி கொண்ட கேள்வித்தாளில் ஒன்பதுக்கு மேற்பட்ட பாட வகையில் மாணவர்கள் மேலும் படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் அல்லவா?
உயர்கல்வி பொதுப்படிப்புகள் பல்வகையாக இருக்கும் பொழுது ஒரே நுழைவுத் தேர்வு மூலம் எப்படி அறிவியல் , வரலாறு, பொருளாதாரம் வணிகம் , வியாபாரம் என உயர்கல்வியில் தேர்ந்தெடுத்துப் படிப்பது? சில சமயங்களில் வேறு படிப்புக்குச் செல்ல விரும்பினால் அதற்கென ஒரு தேர்வும் எழுத வேண்டும் என்பது எப்படி சாத்தியமாகும்?
இறுதியாக:
சமீபத்திய கால்நடைக் கல்லூரிக்கான விளம்பரத்தை நினைவு கூற வேண்டியுள்ளது. அதாவது நீட் தேர்வு எழுதினால் மட்டும் போதுமானது மதிப்பெண் பற்றிக் கவலை வேண்டாம் என விளம்பரம் கொடுத்துள்ளது. கட்டணம் வருடத்திற்கு 5.5 லட்சம் ரூபாய். இதிலிருந்து என்ன தெரிகிறது? உயர்கல்விக்குச் செல்ல வேண்டுமென்றால் நுழைவுத் தேர்வு எழுதித் தான் தீர வேண்டும் என்ற கட்டாயம் திணிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாகப் பெற்றால் உயர்கல்வியில் சேர்வதற்கு இது போன்ற தனியார் வணிகமயக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிக்கி சின்னா பின்னமாக வேண்டியது தான். மாணவர்களை மன உளைச்சலுக்குத் தள்ளி உயிருக்கே உலை வைத்து விடும் என்பதை நீட் தேர்வு நமக்கு தீய முன்னுதாரணமாக கண் முன்னே தெரிகிறது.
இந்தியாவில் 54 மத்திய பல்கலைக் கழகங்கள், 1027 மாநில பல்கலைக்கழகங்கள், 126 நிகழ்நிலைப் பல்கலைக்கழகங்கள் 403 தனியார் பல்கலைக் கழகங்கள் உள்ளன.பல்கலைக் கழகங்கள் கீழ் இயங்கும் கல்லூரிகள் சுமார் 42,000 கல்லூரிகள் சுமார் 4 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் என உயர்கல்விக் கட்டமைப்பு உள்ள சூழலில் ஒரே நுழைவுத் தேர்வு எப்படி சாத்தியமாகும். தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்கின்றனர். வெவ்வேறு மாநிலங்களில் பள்ளித் தேர்வு வெவ்வேறு காலங்களில் முடிவடைகிறது. இதனால் ஒரே தேதியில் நடைபெறும் தற்போதைய நுழைவுத் தேர்வு மிகத் தாமதமாக நடைபெற்றுள்ளது.இதுவே ஒரே நாடு ஒரே தேர்வு என்ற முறையின் முதல் தோல்வி எனலாம்.
மொத்தத்தில் கிராமப்புற, ஏழை மாணவர்கள் சாதரணமாக கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கே பெரும்பாடு படும் போது இது போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுதி தோல்வி அடைந்து போவதை விட தொலை நிலைக் கல்வி, திறந்த வகை ஆண் லைன் கல்வி என்ற முறைசார உயர்கல்வியை நோக்கித் தள்ளி விடப்படுவது நடக்கும். இதற்காக ஒன்றிய அரசு ஆண் கல்விக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வைத்துள்ளது.
மொத்தத்தில் நிறுவனம் சார் உயர்கல்விக்யில் இருந்து ஏழை மாணவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கே ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு வழி வகுக்கும்.
மேலும் இந்த வருட சேர்க்கையின் விளைவுகளை உற்று நோக்கினால் மாநில கல்வி வாரியத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார்கள். மருத்துவ சேர்க்கைக்கு மத்தியத்துவப் படுத்தப்பட்ட நீட் தேர்வுக்கு தமிழகம் தவிர வேறு எந்த மாநிலமும் குரல் கொடுக்காத சூழலில் இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு எதிராக அனைத்து மாநிலங்களில் இருந்தும் குரல் எழுப்பி நீட் உள்ளிட்ட அனைத்து மத்தியத்துவப் படுத்தப்பட்ட தேர்வுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
– பொ.இராஜமாணிக்கம்
நோபல் பரிசு ஏன் இந்தியர்கள் இல்லை? – ஆயிஷா இரா. நடராசன்
சிறுமி ஒருத்தி (1970) சாதாரண அஞ்சலட்டையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபலம். ஆங்கிலேயர் காலகட்டக் கல்வி சி.வி.ராமன், மேக்நாட் சாகா, சத்தியேந்திரநாத் போஸ் போன்ற அறிவியலாளர்களை உருவாக்கியதுபோல், நமது கல்வி முறையால் யாரையும் உருவாக்க முடிந்ததா என்பது அந்தச் சிறுமியின் கேள்வி. புதுடெல்லியில் உள்ள பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் சிலருக்குப் பிரதமர் இந்திரா காந்தி அதை அனுப்பி, உண்மையில் அப்படி உருவானவர்கள் குறித்து அந்தச் சிறுமிக்கு எழுதி உதவுமாறு கேட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அந்தச் சிறுமி என்ன ஆனார் என்பதும் தெரியாது என்றாலும், நாடு விடுதலை அடைந்த 75ஆவது ஆண்டிலும்கூட அந்தக் கேள்விக்குச் சரியான பதில் நம்மிடம் இல்லை. இந்த ஆண்டும் இந்தியர் எவரும் நோபல் பரிசு பெறவில்லை என்பதை எந்தச் சலனமும் இன்றி நாம் எளிதாகக் கடந்துவிட்டோம். நோபல் பரிசை விடுங்கள்; பொதுவாகவே நம் பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சிகள் எந்த நிலையில் உள்ளன என்பது ஆய்வுக்குரியது.
ஆங்கிலேயர் ஆட்சியில் அறிவியல்: ஆங்கிலேயர் ஆட்சியின்போது ராமன், சாகா, போஸ் போன்ற இந்திய அறிவியலாளர்கள் கேம்பிரிட்ஜிலும் ஆக்ஸ்போர்டிலும் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை. கல்கத்தாவின் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் என ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்ட இந்தியக் கல்விக்கூடங்களில்தான் இயங்கினர். அவற்றுக்குச் சுதந்திரப் போராட்டச் சதி நடப்பதாகப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொடுக்காத தொல்லை இல்லை. போதுமான நிதி ஆதாரம் என்றைக்குமே கிடைத்திடாத நிலையில்தான் அறிவியல் ஆராய்ச்சி இங்கு பல சாதனைகளைப் படைத்தது. சுதந்திரத்துக்கு முன்பே சர்வதேச அறிவியல் ஆய்விதழ்களில் இந்தியப் பல்துறை அறிவியலாளர்களின் 6,000 ஆய்வுகள் வெளிவந்ததாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலை: இந்திய அறிவியலில் அடிப்படை ஆய்வின் இன்றைய நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வேலைக்குச் செல்வது எனும் சமூக அழுத்தம் இன்றைய இளைஞர்களை ஆய்வு வட்டத்துக்கு வெளியே நிறுத்திவிட்டது. அதையும் மீறி உள்ளே வருபவர்களைப் பல்கலைக்கழக ஆய்வுச் சூழல் விரட்டியடிக்கிறது; சிலர் தற்கொலை வரைகூடப் போகிறார்கள். ஆய்வு நிதியைப் பங்கிட்டுக்கொள்வது எப்படி என்ற மோசமான அதிகாரச் சுரண்டலாலும் ஊழல்களாலும் கருத்தரங்கங்கள் வெறும் சடங்குகளாகச் சுருங்கிவிட்டன. ஆய்விதழில் வெளிவரும் அளவுக்குத் திறம்பட அறிவியல் ஆய்வுகளை எழுதும் மாணவர், அவர் பெயரில் அந்த ஆய்வை வெளியிட்டுவிட முடியாது. ஆய்வுக்கு வழிநடத்தும் பேராசிரியர்கள் பலர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அந்த அற்புதங்களைத் தாம் வெளியிட்டுக்கொள்ளும் வெட்கக்கேடான சூழலே இந்தியப் பல்கலைக்கழகங்களில் நிலவுகிறது. கடந்த 20, 30 ஆண்டுகளாக ஆய்வுத் துறையைப் புறக்கணித்து, பொருளீட்டுவதே வெற்றி எனப் பொறியியல், மருத்துவம் படிக்கச் சென்று, பலர் காணாமல் போனது உண்மை. ஆய்வுத் துறைகளான இயற்பியல், வேதியியல் என அடிப்படை அறிவியலுக்குள் தப்பித்தவறி நுழைபவர்கள் காண்பது என்ன? இந்தியாவில் இன்று முனைவர் பட்ட ஆய்வுகளில் மூன்றில் இரண்டு போலியானவை. தரம்வாய்ந்த ஆய்வுகளுக்கு அரசின் நிதியுதவி பெருமளவு குறைந்துவிட்டது. அறிவியல் சார்ந்த ‘பட்நாகர் விருது’ உட்பட 300 விருதுகளை நீக்கிவிட்டு, நோபல் போன்று ஒரே விருதாக வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் நம் ஆய்வுச் சூழலை மேலும் நீர்த்துப்போகச் செய்யும்.
நோபல் அறிஞர்களின் பின்னணி: இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட பிரான்ஸின் அலான் ஆஸ்பெக்ட், அந்நாட்டின் 72ஆவது நோபல் அறிஞர். பிரான்ஸின் பள்ளி, பல்கலைக்கழகக் கல்வியில் மதிப்பெண்கள் கிடையாது; ஆறு படிநிலைத் தரச்சான்று தரப்படுகிறது. அறிவியல் பட்டப்படிப்பு, ஆறு மாத ஆய்வக உதவியாளர் பணியிடப் பயிற்சியை உள்ளடக்கியது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வாந்தே பேபு, அந்நாட்டின் 32ஆவது நோபல் அறிஞர். ஸ்வீடனில் கல்லூரிக் கல்வி வரை தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆய்வு மாணவர்களைத் தத்தெடுத்து உலகெங்கும் செல்வதற்கான செலவை அரசே ஏற்கிறது. வேதியியலில் நோபல் பரிசு பெறும் மோர்டன் மேல்டால் டென்மார்க்கைச் சேர்ந்தவர். அங்கே பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டில் குறைந்தபட்சம் 100 பக்கம் கொண்ட ஆய்வறிக்கையை விருப்பமான அறிவியல் துறை சார்ந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். இதுவரை 14 நோபல் அறிஞர்களைத் தந்த டென்மார்க்கில் மொத்தம் எட்டுப் பல்கலைக்கழகங்களே உள்ளன. ஆஸ்திரியா நம்மைவிடப் பல மடங்கு சிறிய நாடு. இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டிருக்கும் ஆண்டன் ஸாய்லிங்கர் ஆஸ்திரியாவின் 23ஆவது நோபல் விருதாளர். இங்கு பாக்சோ சூலன் கல்விச் சீர்திருத்தம் அறிமுகமான பிறகு, பயன்பாட்டு அறிவியல் ஆய்வுக்கூடங்கள் பல திறக்கப்பட்டன. அவற்றில் பல பள்ளிகளோடு நேரடித் தொடர்புடையவை. பள்ளிப் பருவத்திலிருந்தே கோடை விடுமுறையில் மாணவர்கள் அங்கு சிறப்புப் பயிற்சிகள் பெறவும் முடியும். அறிவியல் என்பதே ராக்கெட்டும் ஏவுகணையும் மட்டும்தான் என்கிற நிலை அங்கு இல்லை.
கல்லூரி – பள்ளி இணக்கம் எப்போது?: நாம் நமது கல்லூரி, பல்கலைக்கழகங்களை மட்டுமே குறை கூற முடியாது. நம் பள்ளிக் கல்வி பொதுத்தேர்வு மையக் கல்வியாக இருப்பது முதல் சிக்கல். பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட அறிவியல் பிரிவுகளான இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க ஆளில்லை. பள்ளிக் கல்வித் துறைக்கும் உயர்கல்வித் துறைக்கும் ஒரு இணக்கமும் பிணைப்பும் ஏற்பட வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆய்வுத் திறனை மேம்படுத்த ‘இன்ஸ்பயர்’, ‘மானக்’ போலவும் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு போலவும் பல திட்டங்களோடு அந்தந்த ஊர்களின் கல்லூரிகள் பள்ளிக்குள் நுழைய வேண்டும். புத்தக அறிவைக் கடந்து செயல்பட பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். உண்மையான முனைவர் பட்ட ஆய்வு முயற்சிகளும் நோபல் பெறும் அளவுக்கான திருப்புமுனைக் கண்டுபிடிப்புகளும் சுயசிந்தனை, தேடல் சார்ந்தவை. வெற்று மனப்பாடப் பொதுத்தேர்வு மதிப்பெண் கல்வியைத் தூக்கி எறியாதவரை பிரதமர் இந்திராவிடம் அந்தச் சிறுமி அன்று எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நம்மால் சரியான பதிலைத் தர முடியாது என்பதே துயரமான உண்மை.
ஆயிஷா இரா.நடராசன்
கல்வியாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: [email protected]
நன்றி: இந்து தமிழ் திசை