Veezhchi Book By Albert Kamyu in tamil translated by Su. Aa. Venkata subburaya Nayakar BookReview By Pavannan. நூல் அறிமுகம்: ஆல்பர்ட் காம்யூவின் வீழ்ச்சி | தமிழில்: சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர் - பாவண்ணன்

நூல் அறிமுகம்: ஆல்பர்ட் காம்யூவின் வீழ்ச்சி | தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் – பாவண்ணன்



நன்மையும் தீமையும்
                                        – பாவண்ணன்

ஏடன் தோட்டம் களிப்பின் உறைவிடம் என்பது ஒரு நம்பிக்கை. அழகான நிலப்பரப்பு, இனிமையான சூழல், விரிந்த வானம், மரங்களும் செடிகளும் கொடிகளுமாக அடர்ந்திருக்கும் பசுமை படர்ந்த இடம் என எங்கெங்கும் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் இடமாக அத்தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் இணைப்பறவைகளாக பறந்து திரிந்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். மலர்க்குவியலில் ஒரு மலராக, பறவைக்கூட்டத்தில் ஒரு பறவையாக, அச்சூழலின் ஒரு பகுதியாகவே உல்லாசமாக அலைகிறார்கள். ஏதோ ஒரு கணத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் நெஞ்சில் படரும் ஆசை அவர்களை அந்த உல்லாசநிலையிலிருந்து அவர்களை விழவைத்துவிடுகிறது. ஆசை இன்பத்தை வழங்கியபோதும், ஒருவித குற்ற உணர்வையும் வழங்குகிறது. ஆதாம் ஏவாள் காலத்தில் தொடங்கிய அந்த மாபெரும் வீழ்ச்சி நவீன மனிதனின் காலம் வரைக்கும் மீட்சியின்றி தொடர்ந்துகொண்டே உள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இலட்சியவாதம் மங்கி தன்னலவாதம் ஓங்கி வளரத் தொடங்கிய சூழலில் மனிதர்கள் பொருளற்ற ஓர் அபத்த நிலையில் அவநம்பிக்கையுடன் வாழ்வதைப்போன்ற உணர்வில் குழம்பி வாழ்ந்தனர். அந்த அபத்தத்தையும் குழப்பத்தையும் வெளிப்படுத்தும் படைப்புகளை அன்றைய பிரெஞ்சு எழுத்தாளரான ஆல்பர்ட் காம்யூ தொடர்ந்து எழுதினார். வீழ்ச்சி அவருடைய இறுதி நாவல். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, பிரெஞ்சிலிருந்து நேரிடையாக க.ஆ.வெங்கட சுப்பராய நாயகர் முதன்முதலாக இப்போது தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தெளிவும் சரளமும் பொருந்திய நாயகரின் மொழி ஒரு நேரடிப் படைப்பைப் படிக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது.

ஆல்பெர்ட் காம்யூ இந்த நாவலை மிகவும் ஆர்வமூட்டும் விதமாக கட்டமைத்திருக்கிறார். ழான் பத்தீஸ்த் கிலெமான்ஸ் என்னும் முன்னாள் வழக்கறிஞரின் தனியுரைகளை, அருகிலேயே இருந்து கேட்ட ஒருவர் தொகுத்தளித்ததைப்போன்ற அமைப்பில் நாவல் உள்ளது. கிட்டத்தட்ட ஓர் உரைத்தொகுப்பு என்றே குறிப்பிடலாம். வாசகர்களுக்கு நம்பகத்தன்மையை ஊட்டும் விதமாக அந்த உரைகள் அமைந்திருக்கின்றன என்பதுதான் நாவலின் வெற்றிக்குக் காரணம்.  

பாரீஸில் பணியாற்றிய கிலெமான்ஸ் ஆம்ஸ்டர்டாம் மதுக்கூடம் ஒன்றில் தன் எதிரில் அமர்ந்துள்ள பிரெஞ்சுக்காரர் ஒருவரிடம் தன் நினைவுகளை எவ்விதமான வரிசைமுறையும் இல்லாமல் மனம்போன போக்கில் பகிர்ந்துகொள்வதுபோல முதல் பகுதி தொடங்குகிறது.  ஆறு பகுதிகளாக நீளும் இந்தத் தனியுரையை மொத்தமாக படித்துமுடித்த பிறகு ஒரு வாழ்க்கை வரலாற்றைப் படித்த அனுபவம் கிடைக்கிறது. தன் வழக்கை தானே நடத்தும் வழக்கறிஞரைப்போல அவர் தன் நேர்மையையும் உயர்வுகளையும் தாழ்வுகளையும் பிழைகளையும் வீழ்ச்சிகளையும் தன் தரப்பு நியாயங்களையும் தொகுத்து முன்வைக்கிறார். தன் மீது தானே குற்றம் சுமத்திக்கொள்வதன் மூலம் நம் கவனத்தை ஈர்த்து நம் நம்பிக்கையைப் பெற்று, அந்த வாதங்களை கவனமாக காதுகொடுத்துக் கேட்கத் தொடங்கும் நேரத்தில் சமூகத்தில் நிகழும் பல்வேறு குற்றங்களை அடுக்கடுக்காக முன்வைக்கிறார்.

அந்தப் பெருங்குற்றங்களின் முன்னால் தன் சிறுகுற்றத்தை சிறு குன்றிமணியாகத் தோற்றமளிக்கவைக்கும் விதமாக அவருடைய பேச்சாற்றல் அமைந்திருக்கிறது. கிலெமான்ஸ் ஒரே நேரத்தில் குற்றவாளியாகவும் நீதிபதியாகவும்  தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார். கிலெமான்ஸ் உரைக்கும் ஒவ்வொரு சொல்லும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ஐரோப்பியர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள  உதவியாக இருக்கிறது.

கிலெமான்ஸின் இரட்டை மனநிலை நாவலெங்கும் வெளிப்பட்டபடி உள்ளது. ஓரிடத்தில் தன்னைப்பற்றி மிகையான நல்லுணர்வைக் கொண்டவனாக வெளிப்படுகிறான். மற்றோரிடத்தில் தன்னைத்தானே வெறுத்துக்கொள்பவனாக வெளிப்படுகிறான். தான் அதுவரை அடைந்ததைவிட இன்னும் கூடுதலாக அடைவதற்கு ஒவ்வொரு கணமும் அவனுடைய ஆழ்மனம் விரும்புகிறது. 

ஒரே நாளில் இந்த உரையாடல் முடியவில்லை. வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு சூழல்களில் இந்த உரையாடல் நடக்கிறது. முதலில் கிலெமான்ஸ் தன் பணிச்சூழல் சார்ந்த உலகத்தைப்பற்றிச் சொல்கிறான். பிறகு தன் நகரத்தில் வாழும் தன் வாடிக்கையாளர்கள் மனநிலை சார்ந்து பேசத் தொடங்குகிறான். மற்றொரு நாளில் தான் அறிந்த வெவ்வேறு மனிதர்களின் கதைகளைப் பகிர்ந்துகொள்கிறான். பிறகு மெல்ல மெல்ல தன்னுடைய காமக்களியாட்டங்களையும் தீய வாழ்க்கைமுறைகளையும் பற்றி எடுத்துரைக்கிறான். உரையாடல் போக்கில் அமைந்திருப்பதால், கிலெமான்ஸ் தன் பேச்சின் ஊடே ஒவ்வொரு நாளும் ஏராளமான சின்னச்சின்ன நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தபடி இருக்கிறான். 

ஒரு நிகழ்ச்சி. விலங்குகளையும் மனிதர்களையும் நேசிக்கும் மனமுடைய ஒரு பெரியவர் நகரத்தில் நடைபெறும் மதப்போரின் அக்கிரமங்களைக் கண்ணால் காண விரும்பாமல் தன் சொந்த கிராமத்துக்குச் சென்றுவிடுகிறார். அனைவரையும் நேசிக்கும் தன் பண்பின் காரணமாக “நீங்கள் எங்கிருந்து வருபவர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, உள்ளே வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகுக” என்று வீட்டு வாசலில் எழுதி வைத்தார். மறுநாளே இராணுவ உதவிப்படை அவருடைய வீட்டுக்குள் சென்று அவரைக் கொன்றுவிடுகின்றனர்.

இன்னொரு நிகழ்ச்சி. ஒரு நகரத்தில் ஒரு தொழிலதிபர் இருக்கிறான். அவனுடைய மனைவி அழகானவள். எல்லோருக்கும் உதவி செய்யும் நற்குணங்கள் வாய்க்கப்பெற்றவள். அவளுக்கு துரோகமிழைத்து விலைமகள்களுடன் அந்தத் தொழிலதிபர் சுற்றுகிறான். அவள் அவனைத் தட்டிக் கேட்பதில்லை. தன்னுடைய நல்ல குணத்திலிருந்து சிறிதும் வழுவாது நடந்துகொள்கிறாள். தன் துரோகம் அவள் பார்வையில் படவில்லையோ எனக் கருதி, அவள் கண் முன்னாலேயே பிற பெண்டிருடன் அலையத் தொடங்குகிறான் அபன். அதையும் பெரிதுபடுத்தாமல் அவள் வாழ்கிறாள். அவளுடைய அமைதியும் உறுதியும் அவனை வெகுவாகச் சீண்டுகின்றன. சீற்றமுறவைக்கின்றன. ஒருநாள் ஆத்திரம் கொண்டு அவளைக் கொன்றுவிடுகிறான்.

மற்றொரு நிகழ்ச்சி. ஒரு குடியிருப்பில், அங்கு  வசிப்பவர்களுக்கு நகரத்திலிருந்து கடிதங்களைக் கொண்டுவந்து கொடுத்து குற்றேவல் புரிந்து வருகிறான் ஒருவன். பொதுவாக அவனை குடியிருப்பில் யாருமே மதிப்பதில்லை. திடீரென அவன் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாகக் கிடக்கிறான். அவன் வேலைகளை அவனுடைய அழகான மனைவி செய்கிறாள். அவள் சேகரித்து வந்து வைத்திருக்கும் மடல்களை, குடியிருப்பில்  இருப்பவர்கள் அவளுடைய வீட்டுக்கே சென்று அவளிடமிருந்து வாங்கிக்கொள்ளத் தொடங்குகின்றனர். அவன் இறந்தபோது அனைவரும் சேர்ந்து இறுதிச்சடங்கு செய்கின்றனர். திடீரென ஒருநாள் அவள் யாரோ ஒரு பாடகனை மணம் புரிந்துகொள்கிறாள்.

தினமும் அவன் மாலை வேளைகளில் பாடுகிறான். பிறகு அவளைப் போட்டு அடிக்கிறான். அவளைத் துன்புறுத்தி அழவைத்துப் பார்ப்பதில் அவன் மகிழ்ச்சியடைகிறான். அவள் கூக்குரல் குடியிருப்பு முழுக்க எதிரொலிக்கிறது. ஒருவரும் நெருங்கிச் சென்று விசாரிப்பதில்லை. ஒருநாள் அவன் குரலும் கைகளும் ஓய்ந்துவிடுகின்றன. ஒருவருக்கும் தெரியாமல் அவன்  அந்தக் குடியிருப்பிலிருந்து ஓடிவிடுகிறான். பழைய கணவனின் புகழைப் பேசியபடி அந்தப் பெண் மீண்டும் குடியிருப்புக்குள் நடமாடத் தொடங்குகிறாள்.

ஒருமுறை கிலெமான்ஸ் ஓர் இளம்பெண்ணின் மீது விருப்பம் கொண்டு நாடுகிறான். ஆனால் அவளோ அவனை ஒதுக்கிவிட்டுச் சென்றுவிடுகிறாள். எனினும் அவன் தன் முயற்சியைக் கைவிடாமல் அவளுடன் பழகிப்பழகி நட்பைச் சம்பாதிக்கிறான். அவள் அன்பைப் பெற்று அவளுடன் இன்பமாக பொழுதைக் கழித்த பிறகு அவளுடைய உறவைத் துண்டித்துக்கொள்கிறான்.

அவளோடு இன்பம் துய்ப்பதே தன்னுடைய நோக்கமாக இருந்ததே அன்றி, அவள் மீது தனக்கு எவ்விதமான நாட்டமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கிறான் அவன். ஒவ்.வொரு நாளும் தீமையின் மீது தன் நாட்டம் பெருகுவதை அவனே தெரிவிக்கிறான். பாவம் இல்லாமலோ, செய்யாமலோ இந்த மண்ணில் வாழ்வது இயலாத செயல் என்ற முடிவை அவன் மனம் எடுக்கிறது. ஏணியின் உச்சியில் மேல்படியிலிருந்து வாழ்க்கை ஒவ்வொரு படியாக அவனை இறக்கி, இறுதிப்படிக்கு இழுத்துவந்து நிற்கவைத்துவிடுகிறது.

நாவலில் இடம்பெற்றிருக்கும் ஆறு தனியுரைகளும் ஒருவகையில் தேவாலயத்தில் முன்வைக்கப்படும் பாவமன்னிப்பு உரையின் சாயலில் இருப்பதை ஒரு துணுக்குறலுடன் உணரமுடிகிறது. தான் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை நோக்கி வந்த கதையை ஒருவன் முன்வைப்பதையும் உணரமுடிகிறது. புத்திசாலித்தனம், அப்பாவித்தனமான அன்பு, எதையும் எதிர்பார்க்காத பெருந்தன்மை, கேலி, ஆற்றாமை, அலட்டல், எல்லாம் எனக்குத் தெரிந்த விஷயமே என்பதுபோன்ற மேதாவித்தனம் என அனைத்தும் அக்குரலில் மாறிமாறி ஒலிப்பதையும் உணரமுடிகிறது. 

மனித வாழ்வின் வீழ்ச்சியை அல்லது மதிப்பீடுகளின் வீழ்ச்சியைப்பற்றிய உரையாடலைத் தொடங்குவதற்காகவே காம்யூ இந்த நாவலை எழுதியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிலெமான்ஸின் வீழ்ச்சி என்பது மனிதகுலத்தின் வீழ்ச்சியே.  தொடக்கத்தில் அவன் தன் மனத்துக்கு நெருக்கமாக வளர்த்துவைத்திருந்த மதிப்பீடுகள் எதுவும் அவனுடை நல்வாழ்க்கைக்கு வழிவகுக்கவில்லை. அவன் அடைய நினைத்த எதையும் அடைய துணைசெய்யவில்லை. தன்னை அறியாமலேயே அவன் மனம் தீமையின் பாதையில் நகரத் தொடங்கிவிட்டது. தீமைக்கு இருக்கும் ஈர்ப்பும் வசீகரமும் சொல்லில் அடங்காதவை.

நூல்: வீழ்ச்சி
ஆசிரியர்: ஆல்பர்ட் காம்யூ
தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை. நாகர்கோவில்.
விலை. ரூ.140