மதுரை நாட்கள் (காலங்களைக் கடந்ததொரு உறவு) – வே. சங்கர்
நூலின் பெயர் : Madurai Days: A Bond Beyond Times
ஆசிரியரின் பெயர் : சுப்பிரமணியன்
மொழி : ஆங்கிலம்
பதிப்பகம் : நோசன்ப்ரஸ்.காம்
பக்கங்கள் : 92
விலை : ரூ.149/-
முதல் வாசிப்பிலேயே இது நிச்சயம் வித்தியாசமானதொரு நூல் என்கிற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. பின்பு சில நாட்கள் கழித்து வாசித்த பிறகும்கூட இந்நூல் மீதான ஆச்சரியமும் பிரம்மிப்பும் குறையவே இல்லை.
சிறிதும் நாடகத்தனம் இல்லாமலும் மிகையுணர்ச்சி இல்லாமலும் நடைபோடுகிறது இந்நூல் அதற்காகவே ஆசிரியருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
ஒவ்வொரு ஊரின் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அவ்வூரின் அடிநிலை மக்களின் வாழ்வியலைப் பற்றிய தகவல்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம் என்பதை அழுத்தம் திருத்தமாக எழுதியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் சுப்பிரமணியன் அவர்கள்.
1980 மற்றும் 1990களில் நிலவிய காலநிலை (தட்பவெப்பம்), மழை நாட்களில் தத்தளித்த, குறுகிய தெருக்கள், அன்றைய கொண்டாட்டங்கள், மத்திய மற்றும் கீழ் மத்தியதர மக்களின் விழாக்கள், அன்றாடம் நம் கண்முன்னே கடந்துசெல்லும் கீரைக்கார அக்கா, பெட்டிக்கடைக்காரர், ரிக்க்ஷாக்காரர் என அனைத்து வகையான மக்களின் வாழ்வியலையும் ஒரு கதைசொல்லியின் நேர்த்தியில் விவரித்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.
ஒரு புத்தகம் விமர்சகர்களாலும், தீவிர வாசிப்பாளர்களாலும், நூல் ஆர்வலர்களாலும் தொடர்ந்து நினைவுகூறப்படுகிறது என்றால், அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் தங்களது சொந்த நினைவுகளையும் கீறிவிட்டுச் சென்றுள்ளது என்று பொருள். அவ்வகையில் மதுரையில் வாழ்ந்த அல்லது வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள், ’பெற்றதையும் இழந்ததையும்’ அப்பட்டமாக விவரித்துள்ளது இந்நூல்.
இந்நூலில் காணப்படும் காலக்கட்டத்தையும் பின்னணியையும் வைத்து யோசிக்கும்போது எழுபது மற்றும் என்பதுகளில் பிறந்து வளர்ந்த ஒவ்வொரு தனிமனிதனின் மனதிற்குள்ளும் தோன்றி மறையும் போதாமையையும், அவர்களுக்குள்ளிருந்து பெருமூச்சாய் வெளியேறும் மனஎழுச்சியையும் உணர்வுப்பூர்வமாய் விவரிக்க முயன்றிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
மனித மனம் இயங்கும், சில சமயம் பிறழும், சில அந்தரங்கங்களை அசைபோடும் அதே சமயம், மறக்கமுடியாத பால்யகாலத்து ஆழங்களுள் மூழ்கி மூச்சுத்திணறுவதற்குள் மேலெழுந்து மூச்சுவிட்டு ஆசுவாசப்பட்டுக் கொள்வதைப்போல் ”மதுரை நாட்கள்” நூலை வாசித்து முடிக்கும்வரை, தென்றல் காற்று மெலிதாக, இதமாக, நிதானமாக தேகத்தை வருடிக்கொடுப்பதுபோலவே மனதின் அத்தனை நினைவடுக்குகளுக்குள்ளும் வருடிக்கொண்டே இருக்கிறது.
ஒரு திட்டமிடப்பட்ட காலகட்டத்திற்குள் அவரவர் எல்லையை விஸ்தீரணப்படுத்திக்கொண்டே செல்கிறது இந்நூல். முன்னுரையின் முதல்வரியே போதும் இப்புத்தகத்தின் இயல்புத்தன்மையைப்பற்றிச் சொல்ல. ஆம் ”இந்தப் புத்தகம் வரலாறு மட்டுமல்ல ஒரு தனிமனிதனின் அந்தரங்கம்” என்று சொல்லித்தான் தொடங்குகிறது.
தன் குழந்தைப்பருவ அனுபவங்கள், விழாக்காலங்களில் அவருடைய குடும்பம், மற்றும் உறவினர்களின் வருகை, அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் கோயில், அதைச்சுற்றி எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வீதி, பலதரப்பட்ட கடைகள், அந்தப் பகுதி மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்கூறுகள் ஆகியவற்றின் மொத்த ஆவணம்தான் இந்தப் புத்தகம் என்ற போதிலும் இது அனைவருக்கும் பொதுவானது.

தனிமனிதனின் நுண்ணுணர்வுகளுக்கும், விருப்பத்துக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் தன் மொழியின் வாயிலாக நாகரீகத்துடன் மரியாதை செலுத்தியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
ஆங்கிலத்தில் வாசிக்கத் தெரிந்திருந்தாலே போதுமானது இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொள்ள அத்தனை எளிமையான மொழிநடை. அழகான சொல்லாடல். புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதே தவிர அதில் இடம்பெற்றிருக்கும் இடங்களும், பொருட்களும், மனிதர்களும் நம் அனைவருக்கும் மிகமிகப் பரிட்சயப்பட்டவை.
சம்பவ விவரிப்புகள், ஆரம்பம் முதல் இறுதிவரை பின்னணியில் ரீங்கரித்துக் கொண்டேயிருக்கும் வயலின் இசையைப்போல மெலிதான கிண்டலும் ஆதங்கமும் ஒருசேரக் கலந்து இழையோடிக்கொண்டே இருக்கிறது.
”மதுரை நாட்கள்” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் பரிசோதனை முயற்சி என்று எடுத்துக்கொண்டாலும், அத்தனை எளிதாகக் கடந்துவிட முடியாதபடி ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி தலைப்பின்கீழ் ரகம்வாரியாகப் பிரித்து ஒரு தேர்ந்தெடுத்த கதைசொல்லி கதைசொல்வதைப் போல தொய்வில்லாமல் நகர்ந்துசெல்கிறது.
இந்நூலை வாசிக்க வாசிக்க, இப்போதுள்ள குழந்தைகள், வளர்ந்த பிறகு நினைவுகூர்ந்து அசைபோடுவதற்கு எந்தவொரு நிகழ்வுகளும் இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையும் அவ்வப்போது எழுந்துகொண்டே இருக்கிறது.
எல்லாக் குழந்தைகளும் விரைவில் பெரியவர்களாகிவிடவேண்டும் என்றே நினைக்கிறார்கள். வளர்ந்த பிறகு குழந்தகளாய் இருந்தபோது செய்த சேட்டைகளையே அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்நூல் ஒரு பெரும் உதாரணம்.
பள்ளி வாழ்க்கையையும் கல்லூரி வாழ்க்கையையும் இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியுமா என்பது சந்தேகமே. குறை என்று சுட்டிக்காட்ட வேண்டுமானால் ஒரு சில இடங்களில் இரண்டிரண்டு சொற்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அச்சாகியுள்ளது. ஆனால் அவைகள் இந்நூலின் நடையை ஒரு இடத்திலும் பாதிக்கவில்லை.
ஒரு இருபது அல்லது முப்பது ஆண்டுகாலமாக மதுரை நகரம் எப்படி இயங்கியது என்பதைத் தன் சொந்த வாழ்வியல் அனுபவத்தில் இருந்து சொல்லப்பட்ட வரலாற்று ஆவணமாக இந்நூலைக் கருதலாம்.
இன்னும் மதுரையின் ரத்தநாளங்களின் பாய்ச்சல் கொண்டு ஓடிய பல விசயங்கள் சொல்லப்படாமல் விடுபட்டுவிட்டதோ என்ற ஆதங்கமும் என் போன்ற வாசகர்களுக்கு இருக்கிறது. அடுத்த நூலில் அவற்றை எதிர்பார்க்கிறோம் என்று நூல் ஆசிரியர் புரிந்துகொண்டால் போதுமானது. மதுரை மிளிரட்டும். வாழ்த்துகள்.