மீனவர் கூட்டுறவு சங்கங்களை உயர்வடையச் செய்வோம் !
மீனவர் கூட்டுறவு சங்கங்களை உயர்வடையச் செய்வோம்
பு. விக்னேஷ், B.F.Sc. நான்காம் ஆண்டு மாணவர்,
முனைவர் இல. சுருளிவேல், உதவிப் பேராசிரியர்
கூட்டுறவு என்பது தன்னிச்சையாக தங்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார தேவைகளை பூத்திசெய்வதற்காகவும், ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்குவதற்காகவும் தானாக முன்வந்து ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். கூட்டுறவு என்பது பெயரளவில் மட்டுமல்லாமல் செயலளவிலும் ஒன்றிணைந்து செயல்படுவதாகும். இந்தியாவில் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. முக்கியமாக தேங்காய் உற்பத்தியாளர்கள், பருத்தி உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் என பல்வேறு அமைப்புகள் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாப்பதற்காகவும், நுகர்வோரின் நலனை பாதுகாப்பதற்கு பல்வேறு நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களும் உள்ளள. அதனைப் போன்று மீனவர்களின் நலனுக்காக மீனவர் கூட்டுறவு சங்கங்கள் நம் நாட்டில் இருந்தாலும் மற்ற கூட்டுறவு சங்கங்கள் போன்று மீனவர் கூட்டுறவு சங்கங்கள் முன்னேற்றம் கண்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
மீன்வளம் என்பது நாட்டின் உணவு பாதுகாப்பிற்கும் வருவாய் பெருக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய 28 மில்லியன் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர் . இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்வளத்தின் பங்கு 1 சதவீதமாகவும், வேளாண் உற்பத்தியில் 5 சதவீதமாகவும் இருக்கிறது. மீனவ கூட்டுறவு சங்கங்களை மேம்பாடு அடையச் செய்வதன் மூலம் மீனவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்பாடு அடையச் செய்ய முடியும். மீனவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள வளங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்டு சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடைவதை மீனவ கூட்டுறவு சங்கங்கள் உறுதிசெய்கிறது.
இந்தியாவில் மீனவ கூட்டுறவு சங்கங்களின் நிலை:
இந்தியாவில் முதல் ஐந்தாண்டு திட்டத்தின் அறிமுகத்திற்கு (1951 – 56) பிறகு கூட்டுறவு சங்கங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது . இந்தியாவில் கூட்டுறவு அமைப்பு என்பது 1904 ஆம் ஆண்டு முதலே செயல்பட்டு வருகிறது. ஆனால் மீனவர்களுக்கான ஒரு கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்படவில்லை. அன்றைய காலகட்டத்தில் மீனவர்களின் நிலை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் பின்தங்கியே இருந்தது. இந்தியாவில் பெரும்பாலான மீனவர்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கி உள்ளனர். இதனை கடல்சார் மீன்வள ஆய்வறிக்கை 2010-11 உறுதி செய்கிறது. மீனவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த மீனவ கூட்டுறவு சங்கங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இந்தியாவில் முதன் முதலில் மீனவ கூட்டுறவு அமைப்பு என்பது 1913 ஆம் ஆண்டு “கார்லா மாச்சிமார்” மீனவ கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்டது. அடுத்ததாக மேற்கு வங்காள மாநிலத்திலும், தமிழ்நாட்டிலும் 1918 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மீனவர் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் அடைய தொடங்கியது.
தேசிய மீனவர் கூட்டமைப்பு(FISHCOFED):
இந்தியாவில் முறையான தேசிய மீனவர் கூட்டுறவு சங்கம் 1982 ல் தொடங்கப்பட்டது. மீன்வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை எளிதாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இந்தியாவில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்கள் அமைப்பதை ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதும் இதன் குறிக்கோள் ஆகும். புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, அதற்கு பயிற்சி அளிப்பது, சுகாதாரம் மற்றும் உயிர் காப்பீட்டு அளித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
இந்தியாவில் 21 மாநில அளவிலான கூட்டுறவு அமைப்புகள், 7 பிராந்திய அளவிலான கூட்டுறவு அமைப்புகள், 132 மாவட்ட அளவிலான கூட்டுறவு அமைப்புகள், 21741 முதன்மை நிலை கூட்டுறவு அமைப்புகளும் உள்ளன. இதில் மொத்தம் 3,353,115 உறுப்பினர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு மாநில மீனவர் கூட்டமைப்பு (TAFCOFED):
தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் 2021-22 அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் 1,418 முதன்மை நிலை மீனவ கூட்டுறவு அமைப்புகளும், 12 மாவட்ட அளவிலான மீனவ கூட்டுறவு அமைப்புகளும், 1 மாநில அளவிலான மீனவ கூட்டுறவு அமைப்பும் உள்ளது. இதில் மொத்தம் 7,17,204 உறுப்பினர்கள் உள்ளனர்.
மீனவ கூட்டமைப்பின் கட்டமைப்பு:
இந்தியாவில் கூட்டுறவு சங்கங்களின் கட்டமைப்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. எ.கா கேரளாவில் இரண்டு அமைப்பு கட்டமைப்பும், மகாராஷ்டிராவில் நான்கு அமைப்பு கட்டமைப்பும் உள்ளது. பொதுவாக இந்தியாவில் மூன்று அமைப்பு கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. அதாவது மாநிலம், மாவட்டம், கிராமம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது.
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (NCDC) மீனவ கூட்டுறவு அமைப்பின் வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகளை உறுதிசெய்கிறது. மீனவ கூட்டுறவு சங்கங்களின் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மீனவ கூட்டுறவு அமைப்பின் பணிகள்:
மீன்பிடி படகு, வலை, டீசல் மற்றும் பொறி இயந்திரம் வாங்குவதற்கான மானியம் வழங்குதல், குளிர்பதன கிடங்குகள், ஐஸ் ஆலைகள் உள்ளிட்ட செயலாக்க அலகுகளை நிறுவுதல், உள்நாட்டு மீன் வளம் மற்றும் மீன் குஞ்சு உற்பத்தி மையங்களை மேம்படுத்துதல், சந்தைப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் (வாகனப் போக்குவரத்து, குளிர்பதன கிடங்கு, சில்லரை விற்பனை இயக்கம்), மீனவர்களை ஒன்றிணைத்து தொலைதூர சந்தைகளில் உள்ள நுகர்வோருடன் இணைத்தல், புதிய தொழில்நுடபங்களுக்கு பயிற்சி அளித்தல், மீனவர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்குதல், வாழ்வாதாரத்தை உயர்த்துதல், மீன் மற்றும் மீன் உபபொருட்களை சந்தைப்படுத்துதல், மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு அடிப்படை தேவைக்கான மானியத்தை அரசிடம் பெற்றுதருதல் மற்றும் பொதுவிநியோக திட்டத்தை இச்சங்கங்கள் மூலம் நடைமுறைப்படுத்துதல் ஆகியவை மீனவ கூட்டுறவு சங்கத்தின் மிக முக்கிய பணிகளாகும்.
ஆலோசனைகள்:
1. மீன்பிடி பகுதிகளை வரையறுக்கக்கூடிய மற்றும் மீனவர்களின் உரிமையை நிலைநாட்டக்கூடிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். இதில் மீனவ கூட்டுறவு சங்கங்களின் ஆலோசனைகள் முக்கிய இடம் பெற வேண்டும்.
2. கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் பல மாநிலங்களில் மீனவ கூட்டுறவு அமைப்பின் முன்னேற்றத்திற்கு உதவுவதாக இல்லை. எனவே நபார்டு வங்கி போன்று பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலம் நிதி வழங்கி மீனவ கூட்டமைப்பை மேம்படுத்தலாம்.
3. மீனவர்களின் கல்வியறிவு பின்தங்கியே உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மீனவ கூட்டுறவு சங்கங்கள் தோல்வியை தழுவுகிறது. எனவே அனைவருக்கும் கல்வி அறிவு கிடைப்பதை உறுதி செய்யலாம்.
4. பெண்களின் பங்கை மீனவ கூட்டுறவு அமைப்பில் அதிகரிக்கச் செய்யலாம்.
5. நன்னீர் மற்றும் கடல் சார்ந்த மீன்பிடிப்பில் கிடைக்கும் மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான கட்டமைப்புகளை மேலும் அதிகப்படுத்தலாம்.
6. அனைத்து வகையான மீன்களும் உள்ளூர் சந்தைகளில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைப்பதை கூட்டுறவு சங்கங்கள் உறுதி செய்யலாம். உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர்கிடையேயான உறவை மேம்படுத்தலாம்.
7. மீனவர்களுக்குக்கிடையேயான ஒற்றுமை இன்மை என்பது மீனவ கூட்டுறவு அமைப்பின் தோல்விக்கான மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே ஒற்றுமையின் அவசியத்தை உணரச் செய்யலாம்.
8. மீன்பிடித் தடை காலங்கள், இயற்கை பேரிடர் போன்ற காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத திட்டங்களை கூட்டுறவு சங்கங்களின் துணையோடு வகுக்கலாம்.
9. எல்லைதாண்டி மீன்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
முடிவுரை:
உலக அளவில் கூட்டுறவு சங்கம் வெற்றி பெற்றிருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரை மீனவர் கூட்டுறவு சங்கம் சில மாநிலங்களில் முன்னேற்றமும் சில மாநிலங்களில் பின்னேற்றமும் அடைந்துள்ளது. பொதுவாக மீனவ கூட்டுறவு சங்கங்கள் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பின்தங்கி இருப்பதற்கான காரணங்களாக குறைவான முதலீடு, சரியான தலைமை இல்லாமை மற்றும் நிர்வாக குறைபாடு, ஊக்கமின்மை, உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையின்மை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, குறைந்த கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாமை போன்றவை கண்டறியப்பட்டுள்ளது. எனவே மீனவர் கூட்டுறவு அமைப்பின் தோல்விக்கான காரணங்களை கலைந்து, நாட்டில் முன்மாதிரியாக விளங்கும் பென்பிஷ் (BENFISH), மத்சியபெட் (MATSYAFED) போன்ற மீனவ கூட்டுறவு சங்கங்களை முன்மாதிரியாக கொண்டு மீனவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யலாம்.
தொடர்புக்கு:
முனைவர் இல. சுருளிவேல், உதவிப் பேராசிரியர்
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
பொன்னேரி – 601 204.
கைப்பேசி எண்: 95663 62894
மின்னஞ்சல்: [email protected]