நூல் அறிமுகம்: விளாதீமிர் கொரலேன்கோவின் ”கண் தெரியாத இசைஞன்” தமிழில்: ரா.கிருஷ்ணையா – சுதா

நூல் அறிமுகம்: விளாதீமிர் கொரலேன்கோவின் ”கண் தெரியாத இசைஞன்” தமிழில்: ரா.கிருஷ்ணையா – சுதா




நூல் : கண் தெரியாத இசைஞன் சுதா
ஆசிரியர் : விளாதீமிர் கொரலேன்கோ தமிழில்: ரா.கிருஷ்ணையா
விலை : ரூ. ₹240/-
பக்கங்கள் : 270

வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

எந்தக் குறையும் இல்லாத மனிதன் குறையுள்ள மனிதர்களைப் பற்றி ஒருபோதும் யோசிப்பதில்லை. அவர்களின் உலகத்தினுள் எண்ணற்ற இருள்களும் அமைதியும் இருப்பதை நாம் எள்ளளவும் நினைத்துப் பார்ப்பதில்லை.

ஒரு பணக்கார வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் அது அழும் சத்தத்திலே தாய் கண்டு கொள்கிறாள் குழந்தைக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று. தாயிடமும் மருத்துவரிடமும் விசாரித்த போது அப்படி எந்த பிரச்சனையும் குழந்தைக்கு இல்லை என்றே சொன்னார்கள் இருந்தும். குழந்தையின் தாய்க்கு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஜன்னல் வழியாக உள்ளே வரும் சூரிய கதிர்கள் குழந்தையின் கண்களை எட்டுவதில்லை. ஜன்னல் ஓரத்தில் இருந்த புங்க மரத்தின் இலை அசைவுகள் குழந்தையின் கருவிழியை சட்டை செய்யவில்லை. மீண்டும் அந்த குழந்தையின் தாய்க்கு சந்தேகம் எழுந்தது. அக்கம்பக்கத்து அனுபவசாலியிடமும் மருத்துவரிடமும் மீண்டும் ஓடினாள். சில ஆய்வுகளுக்கு பின்னே தெரிந்தது அந்த குழந்தைக்கு கண் தெரியாது என்று.

இந்த செய்தி ஒரு தாயின் மனதிற்கு எத்தனை காயங்களை ஏற்படுத்தும் என்பது நாம் கொஞ்சம் அனுமானம் பண்ணிக் கொள்ள இயலும். ஆனால் எந்த நிலையிலும் இருந்து நாம் அடுத்த நிலையை தானே யோசிக்க வேண்டும். அந்தக் குழந்தையின் அடுத்த நிலை என்னவாக இருக்கும். சிறு சிறு சத்தங்கள் கூட அந்த குழந்தையை மிரளச் செய்கிறது. நாம் இசை என நினைக்கும் சில சப்தங்கள் அந்த குழந்தைக்கு அமானுஷ்யமாக தெரிகிறது. அலையின் ஓசை அருவியின் சத்தம் குயிலின் பாடல் சருகுகளின் ஓசை என அனைத்துமே இந்த குழந்தைக்கு அமானுஷ்யமாக தான் இருக்கிறது. உலகம் அன்னியப்பட்டு இருப்பதை அந்தக் குழந்தையின் முகம் அப்பட்டமாக விளக்குகிறது.

இந்த குழந்தை தன்னிச்சையாக எப்படி செயல்படும். ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் யாரோ ஒருவரை சார்ந்து இருக்க முடியுமா. இவற்றை நினைத்து அழுது புலம்பி தான் என்ன ஆகப்போகிறது. அடுத்த அடியை எடுத்து வைக்கிறாள் அந்த குழந்தையின் தாய். ஒவ்வொரு ஓசையையும் அறிமுகம் செய்கிறாள். தாயின் காலடி சத்தம் தந்தையின் காலடி சத்தம் தனது மாமாவின் காலடி சத்தம் என அனைத்தையும் அந்த குழந்தை அனுமானிக்க கற்றுக்கொண்டது. செவியே ஒலியும் ஒளியாகவும் மாறியதால் அவன் பார்வை அனைத்தும் ஓசைகள் மட்டுமே.

அவன் பாதையில் வந்து சென்ற மனிதர்கள் யார் யார் அவர்களால் இந்த குழந்தை கற்றுக்கொண்டது என்னென்ன… இது அத்தனையும் அலுப்புத் தட்டாமல் நம்மை அடுத்தடுத்த நகர்வுக்கு கொண்டு செல்கிறது இந்த புத்தகம். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை ஒரு துளி நாம் அறிந்துகொள்ள இந்த புத்தகம் பேருதவி செய்யும்.

பல நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் நமது உலகத்துக்குள் இருப்பதில்லை அவர்களும் நம்மோடு பயணிப்பவர்கள் இந்த உலகுக்கு சொந்தக்காரர்கள் என்பதை நினைவுபடுத்தி சொல்கிறது இந்தப் புத்தகம்.

– சுதா