ஒவ்வொரு நாளும்
குழந்தைகளை அணைத்து முத்தமிடுகையில்
குற்ற உணர்வில் கரைந்து போகிறேன்
கை ரேகைகளுக்கு இடையில்
தேங்கி நிற்கும் அந்த நாற்றம்
விரல்களின் இடையில் தங்கிடும் சிறுநீர் உப்பு
குழந்தைகளின் கன்னங்களில்
புழுக்களாய் ஊர்ந்து கொண்டிருக்கும் அருவறுப்பில்
உடல் சிலிர்த்து சிறுத்துப் போகிறேன்
அவ்வேளைகளில்
அன்பை மட்டும் நான் பகிரவில்லை
எனும் உண்மையின் சூடு
என்னைச் சூனியமாக்கி
என் உடலெங்கும் படர்ந்து எரிக்கின்றது
சுருக்குப் பையில்
காசு தேடும் குழந்தைகளின் கைகளில்
நீலகிரி தைலக் குப்பி அகப்பட்டு
“வாரத்தில் ஏழு நாளும் உனக்கு சளி காய்ச்சல் தானா?”
என அவர்கள் கேட்கையில்
வெளியில் சொல்ல முடியா உண்மை
உள்ளிருந்து என்னை அரிக்கின்றது
சூரிய உதயங்களில்
அஸ்தமனமாகும் எங்கள் வாழ்வு
கருவறையின் இருட்டு என்று விடியுமோ
எங்கள் தீண்டாச் சேரியின் குழந்தைகளுக்கு?
துருப்பிடித்த வாளியும்
தேய்ந்துபோன துடைப்பமும்
பல நூறு ஆண்டுகளாய்
அவற்றில் மறைந்துள்ள சோகத்துடன்
இரக்கமற்ற தந்திரமும் வஞ்சகமும்
இன்று வரை
பீறிடும் எங்கள் பெருமூச்சில் எரியவில்லை
பொங்கிவரும் கண்ணீரில் கரையவில்லை
இத்தலைமுறையில் முடிந்துவிடும் இவ்வலவும்
என எண்ணுகையில்
அடுத்த தலைமுறை
துடைப்பமும் வாளியுமாய்
எங்கள் முன்னே வந்து நிற்கும்
தூரத்தில் இணைவது போல் தோன்றி
ஏமாற்றும் தண்டவாளங்கள் போல்
அடை மழைக் காலம்
வறண்ட கோடைக் காலம்
சுழன்றடித்து வீசும் காற்றுக் காலம்
இயற்கை கூட
என்றுமே எங்கள் பக்கம் நின்றதில்லை
அன்றொரு நாள்
நடைமேடை உணவுக் கடை ஒன்றில்
தலை முடியை மறைத்து
கைகளில் உறை அணிந்த ஒருவர்
எனக்கு உணவு பரிமாறிய அவ்வேளையில்
என் சிரிப்பை அடக்க முடியாது திணறினேன்
இன்னொரு நாள்
புல்லட் ரயில் பற்றிய
பாரதப் பிரதமரின் அறிவிப்பை
தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டே
இந்த தண்டவாளங்களுக்கு இடையில்
வழுக்கி விழுந்தபோது
என் அழுகையை அடக்க முடியாது திணறினேன்
இத்தொழிலை
ஆன்மிக அனுபவம் எனச் சொல்வோரில்
ஒரு சிலரை இங்கு அனுப்பி வையுங்கள்
அவர்களும் உய்த்துணரட்டும்
அதை எங்களோடு சேர்ந்து
இன்னொரு ஜென்மம் இல்லை என நன்கு தெரிந்து
எங்கள் சேரியில் பிறக்க விரும்புவோரில்
ஒரு சிலரை இங்கு அழைத்து வாருங்கள்
இந்த ஜென்மத்திலேயே
எங்கள் துன்பத்தை அவர்களும் பகிர்ந்து கொள்ளட்டும்
முகர்தல் புலனை அடக்கிட
தரையில் காலூன்றாது நடந்திட
பயிற்சி தருவோர் யாரேனும் உள்ளனரா என
அறிந்து சொல்லுங்கள்
எங்களை மறைத்திட
முகத்திற்கு மூடி
கைகளுக்கு உறை
முழங்கால் வரை காலணி
இவற்றில் எதுவும் வேண்டாம்
நாங்கள் எங்களை மறந்திட
எங்கள் உடலுடன் மனமும் சேர்ந்து மரத்திட
எதையாவது தாருங்கள்
அதுவரை
காலையில் தேநீருக்குப் பதிலாய்
நாங்கள் பருகுவது
அற்புத தேவமருந்து எங்களுக்கு
இந்த கடவுளின் குழந்தைகளிடம்
இனி அரிக்கவும் எரிக்கவும்
ஏதுமில்லை