கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: சுண்டெலிகள் 27 – நா.வே.அருள்
சுண்டெலிகள்
*********************
ஐயனாரும் சுடலை மாடனும்
மதுரை வீரனும் தூரத்திலில்லை
அவனது
குறுவயல்களின் கூப்பிடு தூரத்தில்!
கோவணம் போலவே இறுக்கிக் கட்டிய
கோபத்திற்கு
அழுங்கல் மணம்!
பல்லிடை வைத்துக் கடித்த
பச்சை மிளகாயின்
கண் எச்சலிடும் காரத்தில்
அடிவயிற்று ஆத்திரத்தை
மயக்கிக் களிப்பேற்றும்
கம்மங்கூழ்!
கைப்பிடி சாணியில்
கட்டைவிரல் குங்குமம்
வரப்புமேல பிள்ளையார்
வந்து உக்கார்ந்தால்தான்
நாற்றங்கால் சேடையில்
வெரகால் விடுவார் வீரபத்ர மேஸ்திரி.
ஐயனார் சுடலை மாடன்
மாரியம்மா, மதுரை வீரன்
பேச்சியம்மா, பெரிய பாளையத்தா
காட்டேரி, கறுப்பு
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு சாமி
குலசாமி இல்லாமக் கும்பி நெறயாது.
குதிருக்குள் தானியங்கள் கொட்டும்முன்
உள்ளே குந்தியிருந்து குலம் காப்பவர்கள்
வரவூர் ஐயனாரப்பன்,
தீவனூர் பொய்யாரப்பன்,
பிடாரிப்பட்டுக் குளுந்தியம்மாள்.
இப்போ வயலும் சொந்தமில்ல
வாழ்க்கையும் சொந்தமில்ல
குடித்த கள் மயக்கத்தில்
குப்புற விழுந்து கிடக்கிறார்கள்
குலசாமிகள்!
காட்டு யானைகள் மேல்
கிஞ்சித்தும் பயமின்றி ஊர்ந்து செல்கின்றன
இரை பொறுக்கிக் கிடங்கில் சேர்க்க
எறும்புகள்!!!
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்