Posted inPoetry
துரோகம் கவிதை – வளவ. துரையன்
இந்தத் துரோகம்
எனக்கானதே
என்னைக் கொண்டுபோய்
வாழ்வின் எல்லையில்
வைத்து வேடிக்கை பார்க்கிறது.
ஆதரவெனக் கை போட்ட
தோள்களில் இருந்த
அழகான முள்ளெல்லாம்
அழுத்திக் குத்தின.
வந்த குருதியைத்
துடைத்துக் கொண்டு
சற்று முன்னேறினால்
கண்ணிவெடி வைத்துக்
காலைக் காயப்படுத்துகிறது.
அளவுக்கு மீறி நான்
நம்பி விட்டேனென்று
அவமானப் படுத்துகிறீர்
என் நம்பிக்கையால்
வரும் அவதூறுகளை
எதிர்கொள்கிறேன்
எள்ளலோடு.
துரோகத்தை வரவேற்கக்
காத்திருக்கிறேன்
தூள்தூளாக்குவேன்
எனும் தன்னம்பிக்கையுடன்.
– வளவ. துரையன்