Suranga Nagaram Book By Mu Nadesan Bookreview By Pavannan நூல் அறிமுகம்: மு.நடேசனின் சுரங்க நகரம் - பாவண்ணன்

நூல் அறிமுகம்: மு.நடேசனின் சுரங்க நகரம் – பாவண்ணன்



உண்மையின் தரிசனம்
பாவண்ணன்

மு.நடேசன் எழுத்தாளரல்ல. நெய்வேலி சுரங்கத்தில் அறுபதுகளில் அளவையாளராக இணைந்து படிப்படியாக பொறியாளராக உயர்ந்து 1994இல்பணிநிறைவு செய்த ஓர் எளிய குடும்பஸ்தர். அவர் மேச்சேரிக்கு அருகில் காடம்பட்டியானூர் என்னும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து  பள்ளிப்படிப்பை முடித்தார். வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஓர் எழுத்தராக வேலை கிடைத்தபோதும், மேற்படிப்பு படிக்கும் ஆவலால் கோவை தொழில்நுட்பக்கல்லூரியில் சுரங்கவியல் படித்து நெய்வேலியை அடைந்தார். அதற்குப் பிறகு அவர் நெய்வேலியை விட்டுச் செல்லவில்லை. அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன. 

தினந்தோறும் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தாலும் பல வகையான நூல்களை வாசிக்கும் பழக்கத்தாலும் தெளிந்த நீரோடை போல தடையின்றி வாசிக்கவைக்கும் அழகான மொழி அவருக்கு வசப்பட்டுவிட்டது.  தன் பணிக்கால அனுபவங்களையெல்லாம் எழுதிவைக்கும் விருப்பத்தில் இருநூறு பக்க நோட்டு ஒன்றில் தனித்தனியாக தலைப்பிட்டு எப்போதோ ஒரு சமயத்தில் எழுதி வைத்திருந்தார்.  ஒருநாள் அந்தக் காலத்துக் கல்வி எப்படி இருந்தது என்று கேள்வி கேட்ட மகனிடம், இந்த நோட்டைக் கொடுத்து படித்துப் பார்க்குமாறு சொன்னார். அந்தக் குறிப்புகள் வழியாக அப்பாவின் ஆளுமையை மகன் புரிந்துகொண்டார். அன்று, அப்பாவின் எழுத்துகளுக்கு இடையில் புலப்பட்ட எழுத்தாளரின் முகத்தை அவர்தான் முதலில் கண்டுபிடித்தார். தான் கண்டடைந்த ஒன்றை தமிழுலகமும் காண வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் உதவியுடன் அக்குறிப்புகளை வரிசைப்படுத்தி அழகானதொரு புத்தகமாக கொண்டுவந்திருக்கிறார். 

புத்தகம் இரு தளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழுமையடையும் போக்கில் அமைந்துள்ளது. ஒருபக்கம் நடேசனின் சொந்த வாழ்க்கை. இன்னொரு பக்கம் விவசாய கிராமங்களின் தொகுதியாக இருந்த நெய்வேலி ஒரு சுரங்க நகரமாக மாறி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலமாக ஓங்கி வளர்ந்த போக்கு. ஒரு நாவலைப்போல இரு தளங்களும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு வளர்ந்து செல்கின்றன. நடேசனின் மொழி படைப்பூக்கத்துடன் உள்ளது. 140 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்துமுடிக்கத் தூண்டும் வகையில் அவருடைய மொழி ஈர்ப்புடன் உள்ளது. 

ஒரு சுரங்கம் எப்படி இயங்குகிறது என்பதை ஒட்டி நடேசன் வழங்கும் சின்னச்சின்னக் காட்சிச் சித்திரங்களை வாசிக்கும்போது ஓர் அறிவியல் நூலைப் படிப்பதுபோல சுவாரசியமாக உள்ளது. கச்சிதமாக சுருக்கி எழுதப்பட்டுள்ள அவருடைய அலுவலக அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் படிக்கும்போது, ஏதோ ஒரு நாவலின் அத்தியாயங்களைப் படிப்பதுபோலவே இருக்கிறது. சில செய்திகளைக் குறைத்து, இன்னும் சில செய்திகளை இணைத்து வளர்த்து எழுதப்பட்டிருந்தால், இதை ஒரு தன்வரலாற்று நாவல் என்று சொல்வதில் யாருக்கும் தடையிருக்காது.

புத்தகத்தைப் படித்து முடித்ததும் ஒவ்வொரு காட்சியையும் மனத்துக்குள் மீண்டும் நிகழ்த்திப் பார்த்து அசைபோட்டபடி இருந்தபோது, ஒரு புனைகதைக்கே உரிய சில தருணங்களையும் முரண்புள்ளிகளையும் உணர முடிந்தது. வாழ்க்கை ஒருபோதும் நேர்க்கோட்டில் நிகழும் பயணமல்ல என்பதையே ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இந்த மண்ணில் உணர்த்தியபடி இருக்கிறது. மேடுகள், பள்ளங்கள், திருப்பங்கள், கசப்புகள், நட்புகள், துரோகங்கள், தியாகங்கள், இழப்புகள் எல்லாம் இணைந்ததே இவ்வாழ்க்கை.  நடேசனின் வாழ்க்கையும் அந்த மாறா உண்மையையே உணர்த்துகிறது.  

ஒரு நிகழ்ச்சி. நடேசனுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகன். இரு மகள்கள். மகன் பெயர் செல்வம். அவரை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நெய்வேலியிலேயே உள்ள தனியார் பள்ளியான குளூனி பள்ளியில் சேர்க்கிறார். ஆனால் செல்வத்துக்கு கல்வியில் அந்த அளவுக்கு நாட்டமில்லை.  ஆனால் ஓவியம் வரைவதில் அளவற்ற நாட்டமுள்ளவராக இருக்கிறார். ஒவ்வொரு பாடத்திலும் சராசரி மதிப்பெண்களோடு மட்டுமே அவரால் தேர்ச்சி பெற முடிகிறது. எப்படியோ பத்தாம் வகுப்புக்கு வந்துவிட்டார்

பத்தாவது வகுப்பில் அவர் படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் பள்ளியின் தலைமையாசிரியர் அந்த மாணவரிடம் தன் அப்பாவை அழைத்துவரச் சொல்கிறார். மறுநாளே நடேசன் சென்று நிற்கிறார். வழக்கமாக பள்ளியிறுதித் தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சியை ஒரு சாதனையாக தொடர்ந்து நிகழ்த்திவரும் பள்ளி அது. செல்வம் தேர்ச்சி பெறுவதைப்பற்றி தனக்கிருக்கும் ஐயத்தை அந்தத் தலைமையாசிரியர்  செல்வத்தின் தந்தையிடம் தெரிவிக்கிறார். குளூனியிலிருந்து சான்றிதழ் பெற்றுச் சென்று வேறு பள்ளியில் சேர்த்துவிட ஆலோசனை வழங்குகிறார்.

பள்ளி நிர்வாகத்தின் சொல்லுக்கு இணங்குவதைத் தவிர நடேசனுக்கு வேறு வழி தெரியவில்லை.  எழுதிக் கொடுத்துவிட்டு சான்றிதழ் பெற்றுக்கொள்கிறார். அப்போது அந்த மாணவர் தன் நினைவாக பள்ளியில் இருக்கட்டும் என ஓர் ஓவியத்தை வரைந்து கொடுத்துவிட்டு வருகிறார். மகனை அழைத்துச் சென்ற தந்தை அருகிலேயே என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறார். குளூனி பள்ளி நிர்வாகம் அஞ்சியதற்கு மாறாக பள்ளியிறுதித் தேர்வில் அவர் வெற்றி பெற்றுவிடுகிறார்.  

அந்த வெற்றியைத் தொடர்ந்து, மகனுடைய ஓவிய ஆர்வத்தைப் புரிந்துகொண்ட நடேசன் செல்வத்தை அழைத்துச் சென்று கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். ஓவியத்தில் பட்டம் பெறும் அவர் புகைப்படக்கலையிலும் நன்கு பயிற்சி எடுத்துக்கொள்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே நெய்வேலியில் ஜவஹர் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக செல்வம் சேர்ந்து ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்குகிறார். தோல்வியடையக்கூடும் என முதலில் நினைத்த குளூனி பள்ளி, செல்வம் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு வந்த ஓவியத்தை, அதன் அழகு கருதி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செல்வத்தின் நினைவாக இன்றளவும் பாதுகாத்து வருகிறது.

இன்னொரு முக்கியமான நிகழ்ச்சி. ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் 1935இல் நெய்வேலி பகுதியில் ஏராளமான நிலத்துக்குச் சொந்தமாக இருந்த ஜம்புலிங்க முதலியார் என்பவர் பாசன வசதிக்காக தன் நிலத்தில் கிணறு தோண்டியபோது கரிய நிறத் திரவமொன்று தண்ணீரோடு கலந்து வந்ததைப் பார்த்துத் திகைத்தார். அந்தச் செய்தியை ஆங்கிலேய அரசின் புவியியல் துறையினரிடம் தெரிவித்தார். அவர்கள் சில சோதனைகளை மேற்கொண்டு அங்கே நிலக்கரி இருப்பதை உறுதிப்படுத்தினர்.  ஆயினும் அன்றைய நிர்வாக நெருக்கடியின் காரணமாக ஆங்கில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

விடுதலை பெற்று புதிய சுதேசி அரசு அமைந்ததும், மீண்டும் இச்செய்தியை காமராஜரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் ஜம்புலிங்க முதலியார். விடுதலை பெற்ற இந்தியாவில் மக்களுக்குச் சேவையாற்றும் விதமாக சில பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க நேரு தலைமையிலான அரசு திட்டமிட்டிருந்த நேரம் அது. காமராஜரும் நேருவைச் சந்தித்து நெய்வேலியில் சுரங்கம் அமைப்பதைப்பற்றி எடுத்துரைத்தார். ஆரம்ப கட்ட ஆய்வுகள் அந்த இடத்தில் நிலக்கரி இருப்பதை உறுதிப்படுத்தின. நேருவுக்கும் சுரங்கம் அமைப்பதில் ஆர்வமிருந்தது. ஆனால் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்வதில் சிறிதளவு தயக்கம் இருந்தது. அந்தத் தயக்கத்தை உணர்ந்த ஜம்புலிங்க முதலியார் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் உருவாக்க, தனக்குச் சொந்தமான 620 ஏக்கர் நிலத்தை மாநில அரசுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதற்குப் பிறகு  அரசுத் தரப்பிலிருந்து வேலைகள் வேகவேகமாக நடந்தன. இறுதியில் 1956 முதல் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. எண்ணற்றோருக்கு வேலை வாய்ப்பை இந்த நிறுவனம் உருவாக்கிக் கொடுத்தது. இங்கிருந்து உற்பத்தியாகும் நிலக்கரியும் மின்சாரமும் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சென்றன. 

ஜம்புலிங்க முதலியாரின் கொடையுள்ளத்தைப் பாராட்டும் விதத்திலும் இன்றைய தலைமுறையினருக்கு அவரை அறிமுகப்படுத்தும் விதத்திலும் 26.02.2013 அன்று நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் நகரத்துக்கு நடுவில் அவருடைய உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது. அந்த விழாவில் கெளரவிப்பதற்காக முதலியாரின் வாரிசுகளும் கலந்துகொள்ள அழைக்கப்பட்டனர்.  விழாவில் பங்கேற்ற அவர்கள் தற்போது தம் குடும்பம் சிரமதசையில் இருப்பதாகவும் நிறுவனத்தில்  தம் குடும்பத்தினருக்கு வேலை அளித்தால் உதவியாக இருக்குமென்றும் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். எண்ணற்றோருக்கு வாழ்க்கையை அளித்த அந்த நிறுவனத்தின் உருவாக்கத்துக்காக ஒருகாலத்தில் தம் நிலத்தையே அன்பளிப்பாக கொடுத்தவரின் கொடிவழியினருடைய இன்றைய வாழ்க்கைச்சூழல் பற்றிய செய்தி துயரமளிக்கிறது. வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும் மாற்றங்களும் புதிரானவையாகவே உள்ளன.

நடேசனின் சுரங்கப் பணிக்காலத்தில் சுரங்க மேலாளராக இருந்த பி.எஸ்.டி.நாயுடு என்பவர் பரந்த மனப்பான்மையும் மனிதாபிமானமும் நிறைந்தவராக முன்வைக்கப்பட்டுள்ளார். நடேசனின் வாழ்க்கையில் நாயுடுவின் குழுவில் வேலை செய்த காலமே ஒரு பெரிய திருப்புமுனைக்காலம். இளமையிலேயே பல இடர்களுக்கிடையில் தன்னம்பிக்கையுடன் படித்தும் உழைத்தும் மேல்நிலைக்கு வந்த அதிகாரி அவர். வட இந்தியாவில் வேலை செய்துவிட்டு நெய்வேலிக்கு வந்திருந்தார்.

தனக்குக் கீழே பணிபுரியும் அளவையாளர்களிடமும் ஊழியர்களிடமும அவர் அன்புடனும் கண்ணியத்துடனும் பழகினார். அனைவருக்கும் அவர்மீது நல்ல மதிப்பிருந்தது.  மத்திய அரசு நடத்தும் துறைத்தேர்வுகளை எழுதும்படி அவர் அனைவரையும் தூண்டினார்.  சுரங்க மேலாளர் தேர்வில் வெற்றி பெறுபவர்கள்  மட்டுமே எதிர்காலத்தில் சுரங்கவேலையில் நீடிக்க முடியும் என்ற உண்மையை அவரே முதன்முதலில் நடேசனிடமும் மற்றவர்களிடமும் பகிர்ந்துகொண்டார். அவர்களை உடனடியாக தேர்வு எழுதும்படி நினைவூட்டியபடியே இருந்தார். நெய்வேலிச் சுரங்கமோ திறந்தவெளிச் சுரங்கம். சாதாரணமாக அந்தப் பணி அனுபவத்தைக் கொண்டு அந்தத் தேர்வை எழுதமுடியாது. அப்படித்தான் அரசு விதி இருந்தது. தற்செயலாக சில மாதங்களுக்குப் பிறகு அந்த விதி தளர்த்தப்பட்டது. பெரும்பாலும் விதி மாற்றங்களைப்பற்றியெல்லாம் அதிகாரிகள் ஊழியர்களிடையில் உரையாடுவது கிடையாது. விதிவிலக்காக நாயுடு அனைவருக்கும் அச்செய்தியைத் தெரிவித்து, உடனடியாக தேர்வை எழுதத் தூண்டினார். அடுத்தடுத்து மூன்று துறைத்தேர்வுகளை எழுதிய நடேசனும் பிற நண்பர்களும் வெற்றி பெற்று பணியில் எளிதாக உயர்நிலைக்குச் செல்லமுடிந்தது.  

தனக்குத் தொடர்பே இல்லாத ஒரு செயலுக்குப் பொறுப்பேற்று சரிவைச் சந்திக்கும் தருணமும் நடேசனின் வாழ்க்கையில் அமைந்துள்ளது. ஒருநாள் சுரங்கத்தில் ஏதோ ஒரு பகுதியில் ஒரு வேலையை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் அவர். அப்போது தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இருவர் சுரங்கத்துக்குள் வந்தனர். அவருடைய அனுமதியைப் பெறாமலேயே வேறொரு தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமான தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் செயற்பொறியாளராக இருந்தவருக்கும் மோதல் உருவாகிவிட்டது. கடைசியில் அது கைகலப்பாக முடிந்தது. கட்டுப்பாட்டு அறை வழியாக செய்தியை அறிந்த நடேசன் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று மோதலை விலக்கிவிட்டார். அக்கணத்தில் இருவரும் பிரிந்து விலகிச் சென்றனர். ஆயினும் சிறிது நேரத்துக்குப் பிறகு செயற்பொறியாளர் சார்பில் சில பொறியாளர்கள் இணைந்துகொண்டு தொழிற்சங்கக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர்.

ஒருவேளை நடவடிக்கை எடுக்க மறுத்தால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர். அதற்குள் அந்தச் செய்தி நிர்வாகத்தின் கவனத்துக்குச் சென்றுவிட்டது. நிர்வாகம் எந்த விசாரணையும் இல்லாமல் நடைபெற்ற சம்பவங்களுக்கு நடேசனையே பொறுப்பாளியாக்கி, வேறொரு சுரங்கத்துக்கு மாற்றலாணை வழங்கிவிட்டது. தன் தரப்பைத் தெரிவிக்கவும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாற்றப்பட்ட இடத்தில் அவருடைய தகுதிக்குரிய வேலைகள் கொடுக்கப்படவில்லை. பொறுப்புகள் குறைக்கப்பட்டன. வெளிநாடு செல்லும் வாய்ப்பும் தடுக்கப்பட்டது.  எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தவர் ஓர் உயர் அதிகாரி. 

ஒரே நிறுவனத்தில் ஓர் அதிகாரி அடிமட்ட ஊழியர்கள் அனைவரும் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து நல்வாழ்வு வாழ வேண்டும் என நினைக்கிறார். இன்னொரு அதிகாரியோ செய்யாத ஒரு பிழைக்கு எளிய ஊழியர்களைப் பொறுப்பாக்கி தண்டிக்க நினைக்கிறார்.  பூபதி போன்றவர்கள் பணிபுரிந்த அதே சுரங்கத்தில்தான் நாயுடு போன்றவர்களும் வேலை செய்தனர் என்னும் உண்மையின் விசித்திரத்தை யாராலும் வியக்காமல் இருக்கமுடியாது. எண்பத்துநான்கு வயது நிறைந்த நடேசன்  தன் அனுபவச்சுரங்கத்திலிருந்து முன்வைத்திருக்கும் காட்சிகளில் உண்மையின் தரிசனத்தைக் காண முடிகிறது. 

நூல்: சுரங்க நகரம்
ஆசிரியர்: மு.நடேசன்
வெளியீடு: செம்மண் பதிப்பகம்
விலை: 150

M. Natesan's Suranga Nagaram Book Review By Jeevakarunyan. நூல் அறிமுகம்: மு. நடேசனின் *சுரங்க நகரம்* - ப. ஜீவகாருண்யன்

நூல் அறிமுகம்: மு. நடேசனின் *சுரங்க நகரம்* – ப. ஜீவகாருண்யன்



சுரங்க நகரம்
நெய்வேலி பொறியாளரின் நினைவுக் குறிப்புகள்
ஆசிரியர்: மு. நடேசன்
செம்மண் பதிப்பகம்,
எண்-170, திருமூலர்தெரு (தெற்கு),
இந்திரா நகர் – நெய்வேலி – 607 801
பக்கங்கள்:144
விலை: ரூ.150

அலைபேசி: 94439 56574

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகில் காடாம்பட்டியானூர் என்னும் சிறிய கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து கடின முயற்சிகளுடன் கோவையிலும் சென்னை கிண்டியிலும் ‘சுரங்கவியல்-நில அளவையாளர்’ பட்டயப் படிப்பு முடித்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் துவங்கிய காலத்தில் வேலையில் சேர்ந்த மு.நடேசன் அவர்களின் 1964 முதல் 1994 வரை 30 ஆண்டுகள் அளவிலான பணி அனுபவங்களும் நெய்வேலியில் பணியில் சேர்வதற்கு முன்பே நிகழ்ந்த திருமணத்தின் தொடர்ச்சியில் பணி ஒய்வுக்குப் பிறகு வாய்த்துள்ள வாழ்க்கைத் தரவுகளும் நூலில் ‘இளம்பருவத்து நினைவுகள்’ எனத் துவங்கி ‘குடும்பம்’ என்னும் தலைப்புடன் 21 அத்தியாயங்களாக வளர்ந்து நிறைவு கண்டுள்ளன. உதிரிச் சேர்க்கையாக, ‘நிலக்கரிச் சுரங்கம் – சில தகவல்கள்’ என்னும் அத்தியாயம் இறுதியில் இடம் பெற்றுள்ளது.

எழுதும் தகவல்களுக்கு ஏற்ற படங்கள் சேர்ந்திருக்கும் ஐந்து – ஆறு பக்கங்கள் அளவிலான அத்தியாயங்களில் டி.எம். எஸ் மணி நெய்வேலியின் ஆணிவேர், எஸ்.யக்னேஸ்வரன் – சுரங்க நாயகன், நெய்வேலி நிலக்கரியின் மூலவர் ஜம்புலிங்க முதலியார், நேர்மை உறங்கிய நேரம், மறைந்த கிராமங்கள்-மறையாத சுவடுகள் ஆகியவை நூலில் ஆசிரியரின் உணர்வுப் பூர்வமான வெளிப்பாடுகள் என்னும் வகையில் குறிப்பிடத் தகுந்தவை.

நூலாசிரியரின் நெடிய வாழ்க்கை விவரங்களுடன் நிலக்கரி நிறுவனம் குறித்த தகவல் களஞ்சியமாக விளங்கும் நூலில் – 1935 ஆம் ஆண்டில் புதிய கிணறு தோண்டும்போது கருப்பு நிறத் திரவப் பொருளாகக் கண்ட நிலக்கரிக்காக தனது 620-ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்தவர் ஜம்புலிங்க முதலியார். 1951-ஆம் ஆண்டு 170 -ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டன. 2000-மில்லியன் டன் அளவுக்கு பழுப்பு நிலக்கரி இருப்பது தெரிய வந்தது.

நெய்வேலி நிலக்கரி அதிகபட்சமாக 4000-முதல் 5000-கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரிக் குடும்பத்தில் கடைநிலைக் கரியாக 2800 -கலோரி எரிதிறன் கொண்டது. முதிர்ந்த கரியின் நிலவியல் பெயர் ‘ஆந்தரசைட்’. நெய்வேலி கரியின் பெயர் ‘மயோசின்’.

நெய்வேலி நிறுவனத்தின் முதல் நிர்வாக இடமாக இருந்தது மந்தாரக்குப்பம். அழகிய நெய்வேலி நகரம் 35-சதுர கிலோ மீட்டர் பரப்பில் 30-வட்டங்களுடன் அழகழகான பெயர்களில் 360-தெருக்களைக் கொண்டது- என்று பட்டியலாகப் பல அரிய தகவல்கள் பக்கங்கள் 40, 42, 43 ஆகியவற்றிலும் மற்றும் பக்கங்கள் தோறும் இடம் பெற்றிருக்கின்றன. நெய்வேலியின் திறந்த வெளி சுரங்கங்களில் பெஞ்ச்களின் ஆழ – அகலம், கரி கிடைக்கும் ஆழத்தின் அளவு, ஆர்ட்டீசியன் நீரூற்று குறித்த தகவல்களுடன் பீகாரின் தன்பாத், ஆந்திராவின் சிங்கரேணி போன்ற மூடிய சுரங்கங்கள் பற்றிய விவரங்களும் ஆசிரியர் எடுத்துக் கொண்ட நூலாக்க முயற்சிக்கு அணிசெய்யும் சான்றுகளாக பல பக்கங்களில் இடம் கண்டுள்ளன.

தொடர்ச்சியில் அனல் மின் நிலைய கட்டுமாணப் பணி, 1953-காலத்தில் அமைந்த பைலட் குவாரி, சுரங்க அகழ்வுக்கு உதவும் சிறிய- பெரிய இயந்திரங்கள், சுரங்கங்களை, ஆலைகளைத் துவக்குபவர்களாக – பார்வையாளர்களாக வருகை தந்த தலைவர்கள் நேரு, காமராசர், டாக்டர் இராதா கிருஷ்ணன், நீலம் சஞ்ஞீவ ரெட்டி, ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர் இவர்களுடன் ஜம்புலிங்க முதலியார், நிறுவனம் சிறப்புற அர்ப்பணிப்புடன் உழைத்த முன்னோடி அதிகாரிகள், வட்டம் 26-ல் அமைந்துள்ள ஆலயத்தில் இடம் பெற்றுள்ள ஆசியாவின் மிகப் பெரிய நடராசர் ஐம்பொன் சிலை, நிறுவனம் துவங்கிய காலத்தில் நடைமுறையிலிருந்த 25-35-55 பைசா மலிவுப் பேருந்து ரசீதுகள் என்னும் வரிசையில் அரிய பல நிழற்படங்களை மற்றும் நெய்வேலி நகரம் ஆகியவற்றின் வரைபடத்தை அவை குறித்த தகவல்கள் அடங்கிய பக்கங்களின் அணியாய்ப் பார்க்கையில் ‘அடடா!’ என்று ஆச்சரியம் மேலோங்குகிறது. ‘நெய்வேலி இந்திரா நகரில்’ என்னும் அத்தியாயத்தில் நெய்வேலி ஆர்ச் கேட் எனப்படும் முதன்மை வாயிலின் எதிரில் முந்திரிக்காடாக இருந்த நிலம் ‘இந்திரா நகர்’ என்னும் பெயருடன் இன்று 52-பெயர்கள் கொண்ட குடியிருப்புப் பகுதியாகியுள்ள செய்தியுடன் நிறுவனத்தின் அண்டை அயலில் நிலை பெற்றிருக்கும் கிராமங்களின் பெயர்கள் மற்றும் நிறுவன வளர்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட 35-க்கும் மேற்பட்ட கிராமங்களின் பெயர்கள் அழகுற வரிசையாகியுள்ள பாங்கினை ஆசிரியரின் நூலாக்க முனைப்புக்கு எடுத்துக்காட்டு எனக் கொள்ளலாம்.

M. Natesan's Suranga Nagaram Book Review By Jeevakarunyan. நூல் அறிமுகம்: மு. நடேசனின் *சுரங்க நகரம்* - ப. ஜீவகாருண்யன்

ஆஸ்துமா நோயாளியாக இருந்தும் தமது அயராத உழைப்பால் 1961-ல் சுரங்கத்தில் நிலக்கரி வெளிப்படவும் 1962-ல் முதல் அனல் மின் நிலையம் செயல்படவும் மூல காரணமாக-மூலவராக நின்ற டி.எம்.எஸ் மணி 54 வயதில் மும்பையில் மகள் வீட்டில் இறந்து நெய்வேலியில் அடக்கமான வரலாறும் டி.எம்.எஸ். மணியை அடுத்து நிறுவன வளர்ச்சிக்கு ஓயாது உழைத்த யக்னேஸ்வரன் பணி ஓய்வு பெற்ற பிறகு மருத்துவ மனையிலிருந்த நேரத்தில் நெய்வேலி நிறுவனத்திடம் மருத்துவ உதவி கோரிய வரலாறும் நிறுவனம் துவங்க தமது 620 – ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கிய ஜம்புலிங்க முதலியாரின் வாரிசுகள், ‘ஏழ்மையிலிருக்கிறோம்!’ என்று நிறுவனத்திடம் உதவி கோரிக்கை வைத்த செய்தியும் நூலில் வாசிக்கும் நெஞ்சங்களைக் கலங்க வைக்கும் பகுதிகளாக இருக்கின்றன.

பணிக் காலத்தில் பணியிடத்திலும் நகரப் பகுதிகளிலும் நூலாசிரியரியருக்கு ஏற்பட்ட மூன்று விபத்துகள் குறித்த தகவல்களின் தொடர்ச்சியில் தொழிற்சங்கத் தலைவர் இருவரின் முறையற்ற குற்றச்சாட்டினால் நூலாசிரியர் முதல் சுரங்கத்திலிருந்து இரண்டாம் சுரங்கத்திற்கு – செய்யாத தவறுக்கு தண்டனையாக- பணி மாறுதல் பெற்ற செய்தி ‘நேர்மை உறங்கும் நேரம்’ என்னும் அத்தியாயத்தின் வழி வெளிச்சப்படுகிறது.நூலாசிரியரின் ‘குடும்பம்’ குறித்த தகவல்களில், ‘நிறுவனம் மூலம் நானடைந்த வேலை வாய்ப்பே மகன் மற்றும் இரண்டு மகள்கள் நல்ல வாழ்க்கை (மகன் செல்வன் – நண்பர் இவர் தமது உயரிய ஒளிப்படக் கலையாக்கத்தின் வழியில் அரிய பல விருதுகளுக்குச் சொந்தக்கரர் – கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் 5-ஆண்டு பட்டயக் கல்விக்குப் பிறகு நெய்வேலி ஜவகர் பள்ளியில் ஓவிய ஆசிரியர். மூத்தமகள் செல்வி அமெரிக்க வாழ்க்கை. இளைய மகள் கலை சேலம் மாவட்டத்தின் அரசினர் மேனிலைப் பள்ளியில் ஆசிரியை) பெறவும் பேரக் குழந்தைகள் உயர் கல்வி கற்கவும் உதவிற்று’ என்று பதிவாக்கியுள்ள செய்தி வாசகரை ஆழ்ந்த யோசனைக்கு ஆட்படுத்தும் கருப்பொருளாக உள்ளது.

‘நெய்வேலி நகரத்தார்கள், நிறுவனத்தில் பணி புரிபவர்கள் அம்மக்களை (நெய்வேலி நிறுவனத்திற்காக தங்கள் வீடு வாசல்களை, நிலங்களைக் கொடுத்த மக்களை) நன்றியோடு நினைவு கொள்ள கடமைப்பட்டுள்ளார்கள். இழந்த விளை நிலங்கள். முந்திரிக்காடுகள், கிராமங்களை நினைக்கும்போது மட்டும் மனது ஆற்றாமையாக இருக்கிறது.’ (பக்கம்-125) என்று நிறுவனத்திற்கு உதவிய மக்கள் குறித்து கவலை கொள்ளும் திரு- மு.நடேசன், -7557-ரூபாய் 75-பைசா சம்பளக்காரராக பணி ஓய்வு பெற்று நெய்வேலி இந்திரா நகரில் துணைவியாருடன் அமைதி வாழ்க்கை பேணும் முதிய வயதில் நாள் தவறாமல் எழுதிய பல ‘டைரி’களின் உதவியிலும் நினைவாற்றலின் வழியிலும் நல்லதொரு நூலை நமக்குக் கொடையாக்கியிருக்கிறார் என்பது மிகையற்ற உண்மை.

இந்தியாவின் முதல் பிரதமரும் நாத்திகரும் ஆன நேரு அவர்கள், ‘பொதுத்துறைகள் தேசத்தின் ஆலயங்கள்’ எனக்கூறி பல்வேறு பொருளாதாரச் சிரமங்களுக்கிடையே நிறுவிய தேசத்தின் பல பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிடத்தகுந்தது தமிழகத்தின் நெய்வேலி இந்தியா நிலக்கரி நிறுவனம். அறுபது ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்கள், தொழிலகங்கள், நிறுவனம் அமைய நிலம் வழங்கிய அண்டை அயல் கிராமங்கள், நிறுவனத்தை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டு தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அதிகாரிகள் – தொழிலாளர்கள், மற்றும் அழகிய மின்னொளி நகர் குறித்த தகவல்கள் அரிதினும் அரிதாகவே – ஒரு சில உதிரிச் செய்திகளாகவே – இதுவரை அடையாளப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்டுள்ள குறையை முடிந்த அளவில் களைந்திடும் வகையில் 84 வயதுகள் கொண்ட முதியவர் ஒருவரின் அரியதொரு முயற்சியாக, தோழர்கள் வேர்கள் மு இராமலிங்கம் மற்றும் ‘காட்டுயிர்’ இதழ் ஆசிரியர் ஏ.சண்முகானந்தம் இருவரின் முகமனுடன் ஆவணப்பட்டுள்ளது இந்த ‘சுரங்க நகரம்’.

‘35-ஆண்டுகள் நெய்வேலியில் சுரங்கம் இரண்டில் மேல் மண் நீக்கப் பகுதியிலும் சுரங்க அலுவலகத்திலும் பணியாற்றி மூன்றாண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றிருக்கும் நான் இந்த நூலின் வழியில் அரிய பல செய்திகளைப் புதிதாக அறிந்திருக்கிறேன்; வியந்திருக்கிறேன்’ என்கின்ற வகையில் ‘சுரங்க நகரம்’ நெய்வேலி மற்றும் அதன் அண்டை அயல் கிராமங்கள்- நகரங்களின் மக்கள் மட்டுமென்றில்லாது அனைவரும் படித்தறிய வேண்டிய அரியதொரு நூல் என முன் மொழிகிறேன். நூலாசிரியருக்கு எனது வணக்கங்களை-வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

ப. ஜீவகாருண்யன்