இன்றைய இளைஞர்களின் பிரச்சனைகள்: ஒரு பார்வை | Present Problems of Youth & Solutions In Tamil | What is the problem with today's youth?

இன்றைய இளைஞர்களின் பிரச்சனைகள்: ஒரு பார்வை – சுரேஷ் இசக்கிபாண்டி

இன்றைய இளைஞர்களின் பிரச்சனைகள்: ஒரு பார்வை இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள், கல்வி முறைகள், பொருளாதார நிலைமைகள் ஆகியவை இளைஞர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப வாழ முயலும் இளைஞர்கள் பல்வேறு சவால்களை…
விடுதலை - 2 (Viduthalai 2) திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) பேசும் அரசியல் | வாத்தியார் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் - https://bookday.in/

விடுதலை – 2 (Viduthalai 2) திரைப்படம் பேசும் அரசியல்

விடுதலை - 2 (Viduthalai 2) திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் (Vetrimaaran) பேசும் அரசியல் பெருமாள் - நல்ல மாணவன், கணவன் வாத்தியார் - நல்ல ஆசிரியர், போராளி மனிதரே மனிதர் சுரண்டும் போக்கு ஒழிய வேண்டும், ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த…
World Water Day (உலக தண்ணீர் தினம் ) | தண்ணீர் அரசியலை பேசும் தமிழ் திரைப்படங்கள்

மார்ச் 22: உலக தண்ணீர் தினம் –  தண்ணீர் அரசியலை பேசும் தமிழ் திரைப்படங்கள்

  எதிர்வரும் காலங்களில் தண்ணீருக்காக தான் உலக நாடுகளுக்கு இடையே, பல்வேறு இன குழுக்களுக்கு இடையே, நம்ம நாட்டை பொறுத்தவரை மாநிலங்களுக்கு இடையே மிகபெரிய போர்களும், வன்முறை கலவரங்களும் (காவேரி நதி நீர், முல்லை பெரியாறு அணை நீர்) நிகழப்போகிறது. அதற்கு…
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட விமர்சனம் (Manjummal Boys Movie Review)

‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல’ – மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட விமர்சனம்

மஞ்சும்மல் பாய்ஸ் கதை நிஜக்கதை. 2006 ஆம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி அருகே உள்ள மஞ்சும்மல் எனும் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாவாக வந்த நண்பர்கள் குழு, அனைத்து பகுதிகளையும் சுற்றிவிட்டு இறுதியாக அவர்கள் பார்த்த இடம் தான்…
நூல் அறிமுகம்: “கிகோர்” – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

நூல் அறிமுகம்: “கிகோர்” – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

        நூல்: கிகோர் (குறுநாவல்) ஆசிரியர்: ஹோவன்னஸ் டூமேனியன் தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப் வெளியீடு: வம்சி பதிப்பகம் பக்கம்: 64 விலை: ₹. 60 குடும்பத்தின் கனவுகளை சுமக்கும் தலைமகன் "கிகோர்"  ஆம் இது குடும்பத்தின் தலைமகனாய்…
thottiyin magan book reviewed by suresh isakkipaandi நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் - சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

        "யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு பணியாளராக) வேலை செய்து, அங்கு பரவிய தொற்று நோயால் உயிரை இழந்து தான் செய்த பணியை தன் மகன் சுடலைமுத்துவிற்கு கைமாற்றிவிட்டு…
The Jungle Book Written by Upton Sinclair in tamil Translated by Sa Subbarao Bookreview by Suresh Isakkipandi. நூல் விமர்சனம்: அப்டன் சிங்க்ளரின் காங்கிரீட் காடு (The Jungle) | தமிழில்: ச.சுப்பாராவ் - சுரேஷ் இசக்கிபாண்டி

நூல் விமர்சனம்: அப்டன் சிங்க்ளரின் காங்கிரீட் காடு (The Jungle) | தமிழில்: ச.சுப்பாராவ் – சுரேஷ் இசக்கிபாண்டி




நூல்: காங்கிரீட் காடு
ஆசிரியர்: அப்டன் சிங்க்ளர்
தமிழில்: ச.சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கம்: 352
விலை: 252
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.. thamizhbooks.com

எப்போதும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், மனதுக்கு நிறைவாகவும், பசுமையாகவும் தெரியும் காடுகள்தான், எளிமையான, ஏதுமற்ற அப்பாவி விலங்கினங்களுக்கு எதிரியாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காடாகத்தான் இந்த காங்கிரீட் காடு நூல் உங்கள் முன் காட்சியளிக்கும் என நம்புகிறேன். அப்படிப்பட்ட பசுமையும், அழகும் முகப்பு தோற்றத்தில் மட்டுமே இருக்கும் பல்வேறு காங்கிரீட் காடான தொழிற்சாலைகளில் சிக்குண்டு, முதலாளித்துவத்தின் லாபவெறிக்காக தன்னையே அறியாமல் அர்ப்பணிக்கிற எளிய மக்களின் வாழ்வை பேசும், பேசுவதோடு மட்டுமில்லாது அரசியல், சித்தாந்த மாற்ற எண்ணத்தை விதைக்கும் நாவல் இது.

காங்கிரீட் காடு (The Jungle) என்பது 1906 ஆம் ஆண்டு அமெரிக்க பத்திரிகையாளரும், நாவலாசிரியருமான அப்டன் சிங்க்ளர் (Upton Sinclair) எழுதிய நாவல் ஆகும். சிகாகோ, நியூயார்க், பாஸ்டன் மற்றும் இதே போன்ற தொழில்மயமான நகரங்களில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியால் சிதைவுக்குள்ளான குடும்பங்களில் இருந்து வந்து குடியேறியவர்களின் கடுமையான குடும்ப சூழ்நிலைகள் மற்றும் சுரண்டப்பட்ட வாழ்க்கையை இந்த நாவல் சித்தரிக்கிறது. இறைச்சித் தொழில் மற்றும் அதன் வேலை நிலைமைகளை விவரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி விடாத ஆசிரியர் சிங்க்ளரின் முதன்மை நோக்கம் அமெரிக்காவில் சோசலிசத்தை முன்னெடுப்பதாக இருந்தது.

இருப்பினும், பெரும்பாலான வாசகர்கள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க இறைச்சி தொழிற்சாலைகளில் இருக்கிற சுகாதார மீறல்கள் மற்றும் சுகாதாரமற்ற நடைமுறைகளை அம்பலப்படுத்தும் பல பத்திகளில் அதிக அக்கறை கொண்டிருந்தனர். இதன் காரணமாக அமெரிக்காவில் உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் இறைச்சி ஆய்வு சட்டம் உட்பட சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்த ஒரு பொது மக்களின் கூக்குரலுக்கு பெரிதும் பங்களித்தது. இதுபற்றி இந்நாவலின் ஆசிரியர் சிங்க்ளர் சிலர் பேசுகையில், ‘நான் பொதுமக்களின் இதயத்தை இலக்காகக் வைத்து இந்நாவலை எழுதி கொண்டிருந்தேன், ஆனால் தற்செயலாக நான் அதை வயிற்றில் அடித்தேன்’ என்கிறார்.

இந்த புத்தகம் தொழிலாள வர்க்க வறுமை, சமூக ஆதரவுகள் இல்லாமை, கடுமையான மற்றும் விரும்பத்தகாத வாழ்க்கை, வேலை நிலைமைகள் மற்றும் பல தொழிலாளர்களிடையே நம்பிக்கையின்மை ஆகியவற்றை சித்தரிக்கிறது. இந்த கூறுபாடுகள் அதிகாரத்தில் உள்ள மக்களின் ஆழமாக வேரூன்றியுள்ள ஊழலுடன் முரண்படுகின்றன.

எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் சோசலிச அரசியல் செயற்பாட்டாளராக செயல்பட்ட சிங்க்ளர், முக்ரேக்கர் எனப்படுகிற முதல் உலப்போருக்குப் முந்தைய காலகட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் அரசு மற்றும் வணிக நிறுவனங்களின் ஊழல்களை அம்பலப்படுத்தி வரும் எழுத்தாளர் குழுவில் ஒருவராக கருதப்பட்டார். 1904 இல், சிங்க்ளர் ஏழு வாரங்கள் சிகாகோ ஸ்டாக்யார்டுகளின் இறைச்சி ஆலைகளில் மறைந்திருந்து ஒரு தொழிலாளியை போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டே, சோசலிச செய்தித்தாளான அப்பீல் டு ரீசனுக்காக தகவல்களைச் சேகரித்தார். அவர் முதன்முதலில் இந்த நாவலை 1905 இல் தொடர் வடிவத்தில் அப்பீல் டு ரீசன் செய்தித்தாளில் வெளியிட்டார், மேலும் இது 1906 இல் டபுள்டே என்னும் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

நாஜி கட்சி மற்றும் ஹிட்லரால் உலகத்திற்கு வரப்போகும் அபாயங்களை முன்னுணர்ந்து, ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது பற்றி அவர் எழுதிய ‘டிராகன்ஸ் டீத்’ என்ற நாவலுக்கு 1943ல் புலிட்சர் பரிசு கிடைத்தது. இப்போது இந்நூலின் மொழிபெயர்ப்பு குறித்து பேசியே ஆகவேண்டும், நான் இதுவரையில் வாசித்த மொழியாக்க புத்தகங்களில் சிறந்த மொழிபெயர்ப்பு புத்தகம் இதுவே. தமிழ்மொழியின் எளிய நடையில் மொழிபெயர்த்து தமிழ் சமூகத்துக்கு வழங்கிய தோழர். ச. சுப்பாராவ்-க்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

நாவலின் நாயகன் லித்துவேனியா நாட்டை சேர்ந்த யூர்கிஸ் ருட்குஸ், தனது பதினைந்து வயது காதலி ஓனா லுகோஸ்ஜைடை அவர்களது பாரம்பரிய லித்துவேனிய பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் அவர்களும் அவர்களின் 12 பேர் கொண்ட குடும்பமும் லித்துவேனியாவில் இருந்து (பின்னர் ரஷ்ய பேரரசின் ஒரு பகுதி இருந்தது) பணவீக்கத்தால் ஏற்பட்ட வாழ்வாதார கஷ்டம் காரணமாக அமெரிக்காவின் சிகாகோவுக்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் சுதந்திரம் மற்றும் அதிக ஊதியங்களை வழங்குகிறது என்கிற அமெரிக்கா ஒரு சொர்க்கபுரி என்று அவர்களின் நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டு கனவுலகத்தில் வாழும் நாளை எதிர்நோக்கியுள்ளனர். இப்படியான கனவு மேதைமை எண்ணம் இன்றும் நமது தமிழ் சமூகத்தில் புரையோடிப்போய் இருக்கிறது.

சிகாகோ நகருக்கான அவர்களது பயணத்தில் தங்கள் சேமிப்பின் பெரும் பகுதி பணத்தை இழந்திருந்தாலும், பின்னர் திருமணத்திற்கு பணம் சேர்க்க  வேண்டிய சூழ்நிலையிலிருந்தாலும் – ஒரு நெரிசலான தங்கும் இல்லத்திற்கு வந்த ஏமாற்றம் இருந்தபோதிலும் – யூர்கிஸ் ஆரம்பத்தில் சிகாகோவில் தனது வாய்ப்புகளைப் பற்றி நம்பிக்கையுடன் மனைவி ஓனாவிடம், ”குட்டிம்மா, கவலைப்படாதா, இது எல்லாம் ஒரு பெரிய விசயமல்ல, நான் முன்னைவிட இன்னும் கடினமா வேல பாக்குறேன்” என்று தனது புஜபலத்தின் மீது நம்பிக்கை கொண்டு குடும்பத்தினர் அனைவர்க்கும் உத்வேகம் அளிக்கிறான். அவனது  இளமையான மற்றும் வலுவான உடலால்,  அங்கு வேலைக்காக காத்திருந்த நலிந்து, ஒடுங்கிப்போன மக்களிடையே அவனுக்கு மட்டும் வேலை உடனே கிடைக்கிறது. அது  மற்றவர்களுக்கு துரதிர்ஷ்டம் என அவனே நினைத்து கொள்கிறான். அவர் விரைவாக ஒரு இறைச்சி தொழிற்சாலை பணியமர்த்தப்படுகிறார்; மிருகங்களின் கொடூரமான நடத்தையைக் காணும்போது கூட, அதன் திறமையைக் கண்டு அவர் ஆச்சரியப்படுகிறார்.

அங்கு கன்வெயரில் வரும் பன்றி மற்றும் மாடுகளின் உடலை வெட்டி இறைச்சியை எடுப்பதற்காக பல கைகள் அங்கு காத்திருக்கும். அந்த கைகளுக்கு அந்த விலங்கினங்கள் காசநோய் உள்ளிட்டு எந்த நோய் தொற்றும் உள்ளாய் இருக்கிறதா என்பதெல்லாம் தெரியாது அவர்களது வேளையிலே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். கிட்டத்தட்ட பனிரெண்டு மணிநேரத்திற்கு மேலாக அவர்கள் அந்த தொழிற்சாலை கட்டிடங்களுக்குள் இருந்து சூரிய வெளிச்சத்தையே பார்த்திராத ஒரு அரியவகை மனிதர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்ட அளவு உடலில் பலவீனத்தை இருந்தாலோ உடனடியாக மேற்பார்வையாளர் அவர்களை வேலையிலிருந்து நீக்குவார். இந்த நிலையில் அவனுக்கு இறைச்சிப் போக இதர கழிவுகளை குழியில் தள்ளி விடுவதற்கான வேலை கிடைக்கிறது. அவனுக்கும் தினமும் இரண்டு டாலர் அளவிற்கு ஊதியம் கிடைக்கிறது.

தனது குடும்பத்துடன் சந்தோஷத்தில் பகிர்ந்து கொள்கிறான். பின்னர் அடுத்தடுத்த நாளில் அவர்களது குடும்பத்தில் மூவருக்கு வேலை கிடைக்கிறது ஆகையால் அவர்கள் அவர்களது நண்பனின் வாடகை மேன்ஷனில் இருந்து, தாங்கள் பார்த்த விளம்பரத்தின் மூலம் சொந்தமாக ஒரு வீடு பார்ப்பதற்கு தயாராகிறார்கள். அப்போது அவர்களுக்கு தெரியாது இந்த நகர வாழ்க்கையை நமக்கு சம்பளத்தை கொட்டிக் கொடுக்கிறது என்றால் அதை இன்னொரு வகையில் பிடிங்கிக் கொள்ளும் என்று…

அதனால் அவர்களுக்கு அதிக அளவில் கூலி கொடுக்கப்பட்டாலும், அதே அளவிற்கு செலவுகள் அங்கு காத்திருக்கும். ஆகையால் அவர்கள் மற்ற நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு போல அவர்கள் என்றென்றும்  ஏழையாக இருப்பர் என்பதை அறியாத வண்ணமே அவர்களது அன்றாட பயணம் இருந்தது.

நான்கு அறைகள் கொண்ட வீட்டில் விளம்பரத்தைக் கண்டு ஆசை கொண்ட குடும்பத்தினர் லிதுவனிய நண்பனின் வழிகாட்டுதல் மூலமாக ஒரு ரியல் எஸ்டேட் முகவரின் சாதுரியமான மற்றும் அமைதியான பேச்சை கேட்டு வீட்டிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பின்னர் அந்த வீட்டிற்கு அவர்கள் கட்டும் தொகையோடு சேர்த்து வட்டியும் கட்ட வேண்டிம், வட்டியை கட்ட முடியாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறும் நிலை இருப்பதாக அண்டைவீட்டாரின் மூலம் அறிந்து கொண்டு செலவுகளைச் சமாளிக்க, ஓனா மற்றும் 13வயது ஸ்டானிஸ்லோவாஸ் (குடும்பம் பள்ளிக்கு அனுப்ப விரும்பியவர்கள்) வேலைசெய்ய வேண்டும் என்கிற எடுக்கப்படுகிறது. நோய் அடிக்கடி அவர்களுக்கு வரும் போது, ​​அவர்கள் வேலை செய்யாமல் இருக்க முடியாது. அந்த குளிர்காலத்தில், யூர்கிஸின் தந்தை, ரசாயனங்கள் அதிகமாக இருக்கும் இறைச்சி சேமிக்கும் அறையில் வேதியியல் பொருட்களால் பாதிக்கப்பட்டு பலவீனம் அடைந்து இறுதியில் நோயால் இறக்கிறார்.

எனினும் அவர்களது குடும்பத்தில் இசைக்கலைஞன் வருகை, யூர்கிஸ் மற்றும் ஓனாவின் முதல் குழந்தை பிறப்பு ஆகியவற்றால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படுகிறது. ஆனாலும் குழந்தை பிறந்த அடுத்த வாரத்திலேயே ஓனா வேலைக்கு செல்ல வேண்டும் என்ற துன்பகர நிலையுடனே அனுதினமும் பயணிக்கிறார்கள். இந்நிலையில் பலவீனமடைந்த சக தொழிலாளிகள் ஏதோ காரணத்தைக் கூறி வேலையை விட்டு நிறுத்துகிறது. இதனைக் கண்டு மனமுடைந்த நாயகன் பின்னர் அவனும் தொழிற்சங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பிக்கின்றான். அவனது குடும்பத்தினரையும் சங்கத்தில் இணைகிறான். அதற்கிடையில் அவனுக்கு ஏற்படும் விபத்து, அதனால் அவனது மனதளவில் ஏற்பட்ட வலி கோவமாக மாறன் அதுவரையில் அன்பாக அனைவரும் பேசிக் கொண்டிருந்த அவன் மிக கொடியவனாக அனைவருக்கும் காட்சி அளிக்கக் கூடிய வகையில் இருக்கிறான். அதன் பின்னர் குடும்பத்தினை தாங்கிச் செல்ல வேண்டிய பொறுப்பு மரிஜா, எலிசபெத், மற்றும் ஓனா தலையில் விழுகிறது.

காயத்திலிருந்து மீண்ட பிறகு, யூர்கிஸ் ஒரு உர ஆலையில் விரும்பத்தக்க வேலையைப் பெறுகிறார். துன்பத்தில், அவர் மது குடிக்கத் தொடங்குகிறார். பல இரவுகளில் தனது கர்ப்பிணி மனைவி வீடு திரும்பாததால் அவர் சந்தேகம் அடைந்தார். அவளது குடும்பத்தில் உள்ள அனைவரையும் பணிநீக்கம் செய்து கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதாக அச்சுறுத்தியதன் மூலம், அவர் அவளை தொடர்ந்து பாலியல் உறவிற்கு வலுக்கட்டாயப்படுத்துகிறார். ஓனா இறுதியில் தனது மேற்பார்வையாளன், பில் கானர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கணவனிடம் ஒப்புக்கொள்கிறார். குடும்பத்தினரைக் காப்பாற்ற மனைவி எடுக்கும் முடிவு. மனைவியின் காதலைப் புரிந்து கொள்ளாத கணவன், அவளை வெறுத்து அந்த நிலைக்கு ஆளாக்கிய தொழிற்சாலையின் மேலாளரை கடுமையாக தாக்குகிறான்.

காவல்துறையால் கைது செய்யப்பட்ட நீதிமன்றம் அவனுக்கு சிறை தண்டனை விதிக்கிறது. பின்னர் சிறையிலிருந்து விடுதலையாகி, வந்த போது வீடு இன்னொரு குடும்பத்திற்கு விற்கப்பட்டு இருந்தது. அவரது குடும்பமும் கடுமையான வறுமையில் தத்தளித்துக்கொண்டிருந்தது, இரண்டாவது குழந்தை பிறக்கும் தருவாயில் வறுமை, மனைவி ஓனாவையும் குழந்தையையும் கொல்கிறது. பரதேசியாக அலையும் அவர் பின்னர் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்று ஒரு போலந்து நாட்டைச் சேர்ந்த சோசலிஸ்ட் நண்பர், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவருடன் அவரது வாழ்க்கை மற்றும் சோசலிசம் பற்றி உரையாகிறார்.

யூர்கிஸ் ஓனாவின் சிற்றன்னை வீட்டிற்குத் திரும்பி சென்று, அவளையும் சோசலிச பாதைக்கு அழைத்து வருகிறார்; வேலை தேடுவதற்கு அவனது செயல் குடும்பத்தில் மீதம் இருப்பவர்களை காப்பாற்றுவதற்கான வழியாக இருப்பதால், போதை அடிமையிலிருந்து வெளிவர அவள் சமாதானமாகச் செல்கிறாள். சோசலிஸ்ட் கட்சியின் மாநில அமைப்பாளரால் நடத்தப்படும் ஒரு சிறிய ஹோட்டலில் அவர் வேலை பார்க்கிறார். ஜுர்கிஸ் தனது வாழ்க்கையை எப்படி சோசலிசத்திற்காக அர்ப்பணித்தார் என்பதுவே மீதி கதை.

வாசிப்போருக்கு, நகர்ப்புற ஆடம்பர வாழ்க்கைக்காக காணும் கனவு, காதல், பசி, வறுமை, அரசிற்குள் புதைந்து இருக்கும் ஊழல், இரக்கமற்ற முதலாளித்துவம், சுயநல விரும்பிகள் நடுவே முளைக்கும் மனிதாபிமானம், புதுமையான வாழ்க்கை நோக்கி அழைக்கும் சோசலிச பாதை குறித்தான புரிதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

நன்றி….

John Steinbeck's Kobaththin Kanigal (Grapes of Wrath - கோபத்தின் கனிகள்) Novel Book Review By Suresh Esakkipandi. Book Day

வாழ்விடம் இழந்த மக்களின் போராட்ட வாழ்வும், அடக்குமுறைக்குள்ளான புத்தகமும்



புத்தகம் : கோபத்தின் கனிகள்
ஆசிரியர் : ஜான் ஸ்டீன்பெக், தமிழில் : கி. ரமேஷ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கம் : 628
விலை : ரூ. 595
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

– சுரேஷ் இசக்கிபாண்டி

அமெரிக்க இலக்கியத்தின் பொற்கால எழுத்தாளர்களில் ஒருவர் எனக் கூறப்படும் ஜான் ஸ்டீன்பெக் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை தமிழில் கி. ரமேஷ், அதன் வளமை குறையா வண்ணம் அருமையாக மொழிபெயர்த்துள்ளார். ஜான் ஸ்டீன்பெக்-க்கு 1962ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றுதான் ‘Grapes of Wrath’ என்னும் இந்த ‘கோபத்தின் கனிகள்’. இப்புத்தகம் தேசியப் புத்தகப் பரிசு, புலிட்சர் பரிசு என பல ஆளுமை செலுத்தக்கூடிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பல பரிசுகளைப் பெற்றதுள்ளது.

முதல் உலகப்போர் நிகழ்ந்து முடிந்து சரியாக பத்தாண்டுகளுக்கு பிறகு, ஏப்ரல் 14, 1939ஆம் ஆண்டு வெளிவந்த நாளிலிருந்து கடந்த 2014ஆம் ஆண்டு வரையில் மட்டுமே சுமார் 14 மில்லியன் (இந்திய மதிப்பில் 1 கோடியே 40 லட்சம்) பிரதிகள் விற்றுத் தீர்த்துள்ளது. அதில் 1940ஆம் ஆண்டு மட்டும் 4,30,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. அதற்கு காரணம், 1940ஆம் ஆண்டு ஜான் போர்ட் இயக்கத்திலும், அப்போது ஹாலிவுட்டில் புகழ் பெற்ற நட்சத்திர நடிகர் ஹென்ட்ரி ஃபோண்டா நடிப்பிலும் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்காவின் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுவொரு இலக்கிய பாட நூல்.

இப்புத்தகம் எந்த அளவிற்கு புகழை ஈட்டி உள்ளதோ அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது. 1939இல், இந்த புத்தகம் கன்சாஸ் சிட்டி, மிசோரி மற்றும் கலிபோர்னியாவின் கெர்ன் கவுண்டியில் தடை செய்யப்பட்டது. இது கிழக்கு செயின்ட் லூயிஸ், இல்லினாய்ஸ் பொது நூலகத்தால் எரிக்கப்பட்டது மற்றும் பஃபலோ, நியூயார்க் பொது நூலகத்தில் இருந்து தடை செய்யப்பட்டது. 1953இல், புத்தகம் அயர்லாந்தில் தடை செய்யப்பட்டது.

1973இல், எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘For Whom the Bell Tolls’ என்ற புத்தகத்துடன் சேர்ந்து, துருக்கியில் மேலும் சர்ச்சையை எதிர்கொண்டது. ஏனெனில் அந்த புத்தகத்தில் ‘அரசுக்கு எதிரான பிரச்சாரம்’ இருப்பதாக கூறி அதே ஆண்டு பிப்ரவரி 21 அன்று, பதினோரு துருக்கிய புத்தக வெளியீட்டாளர்களும், எட்டு புத்தக விற்பனையாளர்களும் இஸ்தான்புல் இராணுவச் சட்ட ஆணையத்தின் உத்தரவை மீறி புத்தகங்களை வெளியீட்டல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இஸ்தான்புல் இராணுவச் சட்ட நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, அவர்களிடம் இருந்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 John Steinbeck's Kobaththin Kanigal (Grapes of Wrath - கோபத்தின் கனிகள்) Novel Book Review By Suresh Esakkipandi. Book Day

இப்புத்தகத்தின் சர்ச்சைக்குரிய நிலை 1980களில் தொடர்ந்தது. 1986ஆம் ஆண்டில், இந்த புத்தகம் வட கரோலினாவின் பர்லிங்டனில் உள்ள கம்மிங்ஸ் உயர்நிலைப் பள்ளியில் ஒரு விருப்ப வாசிப்பு நூலாக மாணவர்களிடம் வழங்கப்பட்டது. இப்புத்தகத்தில் கடவுள் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராகவும், அவரை கொச்சைப்படுத்தும் நோக்கில் உள்ளது. ஆகையால் அது கண்டிப்பாக கிறித்துவ முறைப்படி வளரும் எங்கள் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் எனக்கூறி பள்ளி ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கூட்டத்தில் விமர்சனம் செய்தனர். அதற்கு காரணம் புத்தகத்தின் மொழி நடையில் கடவுள் மற்றும் இயேசுவின் பெயரை இழிவான முறையில் பயன்படுத்தியது, அத்துடன் பாலியல் தொடர்பான வசனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்த பின்னரே மேற்கண்ட தகவல்களை நான் விக்கிப்பீடியா மூலம் தெரிந்துகொண்டேன்.

இப்போது புத்தகத்திற்குள் வருவோம். அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் வறுமையை, வலியை, பிரிவை, எதிர்கொண்ட பல குடும்பங்களில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவான கதையைத்தான் தழுவிச் செல்கிறது.

புத்தகத்தைப் பற்றி பேசுவதற்கு முன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

முதல் உலகப் போரின் இறுதியில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை எனும் கொடூர அரக்கன் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இதன் காரணமாக இப்போது வல்லாதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கப் பேரரசின் அனைத்து பங்குச் சந்தைகளும் 1929ஆம் ஆண்டு மூடு விழா கண்டது. அதுவே பேரிடியாய் தாக்கி இதுவரை வறட்சியை, பசியை கண்டிராத மக்களை கண்ணீர் மழைக்கு அழைத்துச் செல்ல காரணமாய் ஆனது.

அங்கு பணம் எடுக்க முடியாத வகையில் ஏராளமான வங்கிகள் திவாலாகி இழுத்து மூடப்பட்டன. அந்தக் கடும் நெருக்கடியிலும் ஊசலாடிக் கொண்டு மீதமிருந்த வங்கிகள் விவசாய குத்தகைதாரர்களை நிலத்திலிருந்து தூரத்தி விட்டு அந்த நிலங்களை அபகரித்து பெரும் முதலாளிகளிடம் விற்க துவங்கியது. இதனால் அங்கு பெரும் வேலை இழப்பும், வறுமையும் பேயாட்டம் ஆடியது. சுமார் 2 மில்லியன் குடும்பங்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு குடிப்பெயர்ந்தனர். இதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவின் பூர்வக் குடி மக்களான ஓக்கிஸ் என்ற மக்கள்தான்.

 John Steinbeck's Kobaththin Kanigal (Grapes of Wrath - கோபத்தின் கனிகள்) Novel Book Review By Suresh Esakkipandi. Book Dayடென்னஸி, ஓக்லஹோமா போன்ற நகரங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாய் வேலையின்றி, உணவின்றி தவித்து பின்னர் அவர்களிடம் இருப்பதையெல்லாம் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களது குழந்தைகளின் முகத்தில், பசியினால் ஏற்பட்ட பெரும் சோகம், உயிர் பிழைப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற எண்ணம் ஆகியவை அவர்களை இயற்கை, செல்வவளம் மிக்க கலிபோர்னியா மாகாணத்திற்கு அழைத்துச்செல்ல, அங்கே அவர்கள் மிகக்குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத பெரும் துயரமான இடப்பெயர்வு நிகழத் துவங்கியது.

நாவல் பற்றி இப்போது பேச ஆரம்பிப்போம் வாருங்கள் தோழர்களே…

வறட்சியின் கோரப்பிடியில் சிக்குண்ட நிலப்பரப்பின் அகோரமான முகம் நமது கண் முன் வந்து செல்கிறது. இந்த நாவல் களத்தின் காட்சி படிமம், கடந்த ஆண்டு எந்தவித முன்னறிவிப்புமின்றி ஒன்றிய ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட கொரோனா ஊரடங்கு இடப்பெயர்வு காட்சி நமது கண்முன் அப்படியே விரியும். அதுதான் இந்த நாவலின் சிறப்பு என்பதில் ஐயமில்லை.

துரதிஷ்டவசமாக ஒரு கொலை குற்றத்தில் தண்டனையான நமது நாயகன் டாம் ஜோடு மூன்று ஆண்டுகள் சிறைவாச வாழ்க்கைக்கு பின் பரோலில் தன் குடும்பத்தைக் காண சொந்த ஊருக்கு வருகிறான். அப்போது வருகிற வழியில் அவனுக்கு சிறு வயதில் ஞானஸ்நானம் செய்த போதகர் ஜிம் கேசியை சந்திக்கிறான். அவர் தற்போது நான் போதகராக இல்லை என்கிறார். இந்த கடும் வறட்சியில் கடவுள் வந்து அப்பாவி மக்களை காப்பாற்றவில்லை; ஆகையால் யாரும் எனது போதனையை கேட்க தயாராக இல்லை என சொல்ல, மேலும் அவர்கள் இருவரும் கிறிஸ்தவ மதத்திலுள்ள முட்டாள்தனமான போதனைகளை, மூட நம்பிக்கைகளை நக்கல் செய்து பேசிக் கொள்கின்றனர். இரக்க குணம் இல்லாத முதலாளித்துவ வறட்சியின் பிடியில் சிக்கிய ஜோடின் குடும்பம் சிறிதளவு நிலத்தை குத்தகை எடுத்து அதில் பருத்தி பயிர் செய்து வந்தது. அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் வங்கி கிராமத்தில் வசித்த அனைத்து குத்தகைதாரர்களின் நிலத்தை பிடிங்கிக்கொண்டு அவர்களை விரட்டுகிறது. அவர்கள் வீடுகளை இடிக்க ராட்சச எந்திரத்துடன் காத்திருக்கிறது.

“வங்கி என்னும் ராட்சசனுக்கு இப்போது லாபம் தேவை. அதனால் பொறுத்திருக்க முடியாது. இல்லை என்றால் அது செத்து விடும். இல்லையெனில் மக்கள் மீதான வரிகள் தொடரும். ராட்சசன் வளர்வதை நிறுத்திவிட்டால் செத்து விடுவான். அவன் ஒரே அளவில் நிற்க முடியாது.”

அப்போது அவனை சந்தித்த பால்ய நண்பன் முலேவின் அப்பா அதை தடுக்க துப்பாக்கியை எடுத்து இடிக்க காத்திருக்கும் வாகன ஓட்டுநரை நோக்கி நீட்டுகிறார், உடனே இடிக்கும் வாகனத்தை ஓட்டும் அவரது சொந்த கிராமத்தை சேர்ந்த இன்னொரு வாலிபன் எனக்கு எனது குடும்பத்தின் பசியைப் போக்க வேறு வழியில்லை, எனக்கு அவர்கள் மூன்று டாலர் ஊதியம் தருவதாக கூறி அனுப்பி இருக்கிறார்கள். நான் அவர்களின் பணியாள் என்கிறான்.

உடனே அவர் அப்படியென்றால் நான் உனது வங்கி மேலாளரை கொல்லப் போகிறேன் என்கிறார். இல்லை, அவருக்கு இயக்குநர் குழுவிடமிருந்து உத்தரவு வருகிறது. இயக்குநர் குழுவிற்கு கிழக்கிலிருந்து (அதிகாரம் படைத்த செல்வந்தர்கள் இடமிருந்து) உத்தரவு வருகிறது. இப்போது நீ யாரை கொல்வாய்…? என்கிறான் இடிப்பவன். தூப்பாக்கி கீழே இறங்கியதும், வீடு தரைமட்டமாகிறது.

தன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஆவலோடு வந்த டாம், அவர்களுக்கு வீடு இடிக்கப்பட்டு கிடந்த அந்த வெறுமையான இடத்தை கண்டு திகைத்ததோடு சோகமும் அடைகிறான். பின் மெல்ல அருகிலுள்ள கிராமத்தில் தன் குடும்பம் வாழும் செய்தியை, அந்த இடத்தை காலி செய்ய மறுத்து அங்கேயே வாழும் முலேவிடம் அறிந்து, பாதிரியார் ஜிம் கேசியுடன் அங்கு செல்கிறான்.

 John Steinbeck's Kobaththin Kanigal (Grapes of Wrath - கோபத்தின் கனிகள்) Novel Book Review By Suresh Esakkipandi. Book Day

டாமைக் கண்டு மகிழ்ந்த குடும்பம், விரைவாக கலிபோர்னியா பயணத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. அவன், பாதிரியார் ஜிம் கேசியையும், அழைத்துச்செல்ல நிபந்தனையை சொல்லுகிறான். முதலில் தயங்கி, யோசித்து பின்னர் உடன்பட்டு அழைத்துச் செல்ல ஆயத்தமான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கின்றனர். அவளது அம்மா அவரது வீட்டில் கடைசியாக இருந்த பன்றிக் கறியை உப்புக்கண்டம் போட்டு தயார் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு உதவ வந்த பாதிரியாரிடம் “இது பெண்கள் வேலை” என்கிறார். அதற்கு பாதிரியார், “எல்லாமே வேலைதான். அத ஆம்பளைங்க வேலை பொம்பளைங்க வேலைன்னும் பிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?” என்கிறார். அவர்கள் இருவரும் இணைந்து பன்றிக்கறியை தயார் செய்ததோடு கைவசம் உள்ள அத்தியாவசிய பொருள்களையும், மிகப் பழமையான ஹட்சன் ட்ரெக்கில் ஏற்றிக் கொண்டு அக்குடும்பம் பயணமாகிறது. அப்பயணத்தில், “நான் வாழ்ந்தாலும் செத்தாலும் அங்கேதான் இருப்பேன்” என பயணப்பட மறுத்த டாம் ஜோடின் தாத்தா வலுக்கட்டாயத்துடனும், டாமின் பாட்டி, அம்மா, அப்பா, டாமின் அண்ணன் நோவா ஜொடு, அவன் இளைய சகோதரன் இளைஞன் அல் ஜோடு, கர்ப்பிணியான அவன் பெரிய தங்கை ஷாரன், அவளது கணவன் கோனி, வீட்டின் கடைக்குட்டிகள் ருத்தி ஜொடு, வின்ஃபில்டு ஜொடு, மாமா ஜான், பாதிரியார் ஜிம் கேசி மற்றும் அவர்களது செல்ல நாய் என அனைவரும் ஒரே குடும்பமாக பெரும் நம்பிக்கையோடு புதிய வாழ்வாதாரத்தை நோக்கி நகர்கிறார்கள்.

மேற்கு மார்க்கமாக செல்லும் ரூட் நம்பர் 66 சாலையில் இவர்களைப் போல பல ஏழ்மையான குடும்பங்கள் தங்களது உடைமைகளை மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு, தங்களது கையில் உள்ள இருப்பு பணத்தை வைத்து வாங்கிய பழைய வாகனத்துடன் பயணப்பட ஆரம்பிக்கின்றனர். இப்போது புத்தகத்தின் 14வது பகுதியிலிருந்து ஒரு சில வரிகள் “இந்த டிராக்டருக்கும், பீரங்கிக்கும் சிறு வேறுபாடுதான் உள்ளது. இந்த இரண்டாளும் மக்கள் விரட்டப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள், துன்பமடைகிறார்கள்.” எனினும் அவர்களது பயணம் சாலையில் உயிர்ப்போடு பல இன்னல்களை கடந்தும், தடைபடாமல் நீண்டு செல்கிறது.

ஆனால், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பயணமான பல குடும்பங்கள் அந்த சாலையிலே தங்களது உயிர்களை உறவுகளை இழக்கின்றனர். பயணம் நாட்கணக்கில் நீளும் போது குடும்பத்தினர் முகத்தில் ஏற்பட்டுள்ள சோகத்தின் பசி, பட்டினியின் வடுக்கள் அவர்களை புதைகுழியில் சிக்கிய மான் குட்டியைப் போல் ஆக்குகிறது. அவர்கள் கடந்து வரும் வழி எங்கும் எதிர்கொண்ட பிரச்சனைகள், வலிகள், வேதனைகள், அனுபவங்கள், உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள், மனப்போராட்டங்கள் நிறைந்த அனைத்து சொல்லாடலும் நன்மை மௌனத்தின் சாட்சியாக நிற்கவைத்து திக்குமுக்காட செய்துவிடும். மிகச் சாதாரணமான சொல்லாடல்கள் மூலம் நம்மை கனத்த இதயத்தோடு வார்த்தைகளற்ற பொம்மையாய் நிற்க வைத்துள்ளார். அதுவே ஒரு நாவலாசிரியரின் வெற்றியாகும்.
பயணத்தின் ஊடாகவே நிகழும் அடுத்தடுத்த மரணங்கள், குடும்பத்தில் அனைவரையும் சோகத்தில் தள்ளுகிறது. அவர்கள் கலிபோர்னியா மாகாண எல்லையை நெருங்கி சென்று கொண்டிருக்கும் போது டாமின் மூத்த சகோதரன் நோவா ஆற்றங்கரையோரம் இறங்கி ஒரு சுயநலவாதியாய் சாமியாரை போல் குடும்பத்திலிருத்து தன்னை விடுவித்துக் கொள்கிறான். நமது குடும்பம் உடையக் கூடாது என எண்ணி பயணத்தைத் துவங்கிய அவரது குடும்பத்தில் ஒவ்வொருவரும் இறப்பதும், வெளியேறுவதும் அவனது அம்மாவுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. அம்மாவே குடும்பத்தின் ஆணி வேராக இருந்து, அனைவரையும் வழி நடத்தி செல்கின்றாள்.

 John Steinbeck's Kobaththin Kanigal (Grapes of Wrath - கோபத்தின் கனிகள்) Novel Book Review By Suresh Esakkipandi. Book Day

அவர்களது குடும்பம் கடந்து செல்லும் வழியில் அனுபவிக்கிற பிரிவு, துன்பம், நட்பு, அரவணைப்பு, காதல் என அனைத்துமே நம்மை நிச்சயமாக வியப்பில் ஆழ்த்தும். பயணம் எப்போதும் அவர்களுக்கு அமைதியை தந்தது இல்லை. அவர்கள், தாங்கள் அனைவரும் எப்படியாவது கலிபோர்னியா திராட்சை தோட்டத்தில் வேலை வாங்கிக் கொள்ளலாம். அங்கு நமக்கென்று ஒரு வீடு வாங்கி குடியேறி நாம் நல்லபடியாக வாழலாம் என்கிற கனவு மட்டுமே அவர்களுக்கு ஆறுதலைத் தந்தது. திராட்சை தோட்டத்தை கடக்கும் போது பாட்டி உயிர் பிரிந்து விடுகிறது. வேலையும் கிடைக்கவில்லை.

கான்சாசிலும், அர்கன்சாசிலும், ஓக்லஹாமாவிலும், டெக்சாசிலும், நியூ மெக்சிகோவிலும் இருந்து பட்டினியால் பயணப்பட்டு வந்து குவிந்த குடும்பங்கள் கலிபோர்னியா மக்களுக்கு பெரும் பீதியை தந்தது. பீதிக்கு பீதியாக அடிமைமுறையும், அடக்குமுறையும் நிராகரிப்பும் அங்கே அதிகமாய் வேர் விட ஆரம்பித்தது.

சாலைகள் முழுவதும் அன்று 3,000 பேர்கள் வெறிகொண்டு சுமை இழுக்கவும், தூக்கவும் காத்துக்கொண்டு இருந்தனர். ஆகவே அவர்களால் மிரட்டி அவர்களை நிறுத்த முடியவில்லை. அவர்களது சுருங்கிய வயிற்றில் மட்டுமல்ல அவர்களது குழந்தைகளின் பாழாய்ப்போன வயிற்றிலும் இருக்கக்கூடிய பசியில் ஒரு மனிதனை எப்படி மிரட்ட முடியும். அடக்குமுறை என்பது ஒடுக்கப்பட்டவர்களை வலுப்படுத்தவும் ஒன்றுபடுத்தவுமே வேலை செய்யும். ஆனால் கலிபோர்னியா தோட்ட முதலாளிகள் அவர்கள் குறைந்த கூலிக்கு அடித்துக்கொண்டு வேலை செய்வதை விரும்பி நோட்டீஸ் அடித்து பல்வேறு பகுதிகளுக்கு விளம்பரமாக செய்துள்ளனர். அதனால் அங்கு ஒரு நபருக்கான வேலைக்கு ஐந்து நபர்கள் ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அங்கே குறைந்த கூலியில் அதிக நேரங்கள் வேலையை செய்ய வேண்டி வந்தது. அந்த பயணத்தில் அவர்களை துரத்துவதற்கு நிறைய கைகள் இருந்தன. ஆனால் அவர்கள் இதுவரையில் ஆழ்ந்த துக்கத்தில், களைப்பில், பசியில், கோவத்தில் இருந்தாலும் அதனை அவர்கள் அருகில் உள்ளவரிடம் காட்டிக் கொண்டதே இல்லை. அதனை ஒருபோதும் அவர்கள் பயன்படுத்தியதுமில்லை. மாறாக அது அனைத்தையும் எதிரில் உள்ளோரிடமிருந்து எடுத்துக் கொள்கின்றனர்.

நாவலின் கடைசிப் பக்கம் நம் அனைவரையும் உருக வைத்து கண்களை குளமாக்கிவிடும் என்பது உறுதி. அதை நான் சொல்லப்போவதில்லை.

மனித நேயத்தை, முதலாளித்துவ கொடூர கட்டமைப்பை, அது வழிநடத்தி செல்லும் இரக்கமற்ற வாழ்வை அறிய அனைவரும் இந்நாவலை வாங்கி வாசித்து உணர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

– சுரேஷ் இசக்கிபாண்டி

Sivashankar Jegadeesan Vetkaramariyatha Aasaigal book review by Suresh Esakkipandi. Book Day Branch of Bharathi Puthakalayam.

வெட்கம் அறியாத ஆசைகள்: ஆட்டி வைக்காத மனங்கள் இல்லை

சுரேஷ் இசக்கிபாண்டி நூல்: வெட்கமறியாத ஆசைகள் ஆசிரியர்: சிவசங்கர் ஜெகதீசன் "ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் உலகத்தின் அடிப்படை தத்துவத்தை, அனைத்தையும் துறந்த மகான் கௌதம புத்தர் கூறியிருக்கிறார். அதையே நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் பேசிட கானொளியாக பார்த்து…