சூர்யமித்திரனின் ஐந்து கவிதைகள்
1
புதியவர்
ரத்தமாதிரிக்கு
உறிஞ்சுகிறார்.
பழையவரிடம்
ட்யூப் நிறைய எடுத்துக்கொண்டே
போதுமா வென
வினவ
இருமடங்கு ரத்தம்
எடுத்தாயிற்று.
குத்தும்
ஊசிமுனைக்கண்ணில்
அழும்
ரத்தத்துளிகள்.
2
முதுமையைச் சுமந்த
நினைவுகளுக்கு
துக்கம்
பாலம் அமைக்கிறது.
பாசத்தின்
மணியோசை
வெகுதொலைவில்
கேட்கிறது.
பசியெனும்
பஞ்சடைக்கும்போது
காதுகளில்
சப்த தீனி
காற்றில் அலையும்.
வேரென
அவளிருந்தாள்..
வேதனைத்தீயில்
தொலைந்து போனதால்
இணைப்பறவை இன்றி
பொழுதுகளின்
பொந்து
அடைபடாது
அலைக்கழிகிறது.
நொறுங்கலை
எனக்களித்த
உறவுகளின்
முகமூடிகளில்
பாசாங்கும்
பரிதாபமும்
சேமிப்பில்.
அபகரித்த
சொத்துக்களில்
இந்த அபலைக்கு
ஆலிங்கனமில்லை.
தோள்கொடு
இறைவா..
கொஞ்சமாய்
கண்ணீரை
இறக்கிவைக்கிறேன்.
3. நூறாண்டு கடந்தும்
பாவாண்ட பாரதி
***********************
‘அஞ்சி அஞ்சிச் சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை
அவனியிலே.’
ஆம்~
தீ நுண்கிருமி
பெருந்தொற்றில்
அஞ்சி அஞ்சிச் செத்தார்…
நெஞ்சு பொறுக்குதில்லையே.
நூற்றாண்டாய்
கிழிபடும் நிலைகெட்ட மனிதர்கள்
இந்த தேசத்தின் சாபக்கேடு.
நினைவும் நல்லதில்லை
நெருங்கின பொருள்
கைப்படுவதுமில்லை..
கிருமிப்பரவலில்
தோற்றுப்போனது மனிதம்..
கனவு மெய்ப்படவேண்டும்
கைவசமாவது விரைவில்
வேண்டும் என்றாய்..
பாழும் வாழ்வினில்
பரிதவித்தே போகிறது மானுடம்.
வெள்ளிப்பனிமலையின்
மீதுலாவுவோம்..
எங்கள் பாரத தேசமென்று
தோள் கொட்டுவோம்..
பாட்டுவரிகளில் காற்று
கறைபட்ட அபஸ்வரங்களாய்
மாறினது இங்கே.
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்
பெண் விடுதலை-இன்னும்
அடுப்புக்கங்குளுக்குள்
நீறுபூத்து.
உள்ளடங்கு-ஊரடங்கு
பெரிய கடவுளுக்கு
பெரியபூட்டு.
காற்றுக்கு விடுதலை
கடவுளுக்கு விடுதலை
இங்கே~
பாட்டு மாறுது தினம் தினம்.
என்ன சொல்ல..
பாவாண்ட பாரதிக்கு
சின்ன செய்தி:
உன் காலத்து தேசம் இப்போது
சேதாரம் செய்கூலி இலவசத்தோடு
மோசம் போய்க்கொண்டிருக்கிறது
மறுபடியும்
அவதாரம் பண்ணு..
உந்தன் பாசுரங்களில்
ஜீவன் உயிர்ப்பிக்கட்டும்.
4
அந்தப்
போக்குவரத்து
வளாகத்தில்தான்
கான்க்ரீட் ‘எட்டு’
படுத்துக்கிடக்கிறது.
ஓட்டிக்காண்பித்த
அனைத்து ரக
இருசக்கரவாகனங்கள்
சமநிலை தவறுதலில்
சரியாமல்
இதுவரை இல்லை.
விடியலில் வாகன
பயிற்சி ஓட்டிகள்
நிமிடக்கணக்காய்
சாதகம் செய்தாலும்
ஒபிசிட்டி
மனிதர்களும்
கூடவே
நடைப்பயிற்சிக்கும்
எட்டு எட்டாய்
பழகிக்கொண்டிருக்கிறார்கள்
ஊடக குறுஞ்செய்தி
வாசித்து.
5
புவிஈர்ப்பு விசைக்குக்
கண்டெடுத்த
ஆப்பிள்
கடிக்கப்பட்டிருந்தது.
ஆதாமும் ஏவாளும்
வால்கா முதல் கங்கைவரை
படித்துக்கொண்டிருந்தார்கள்.
சேப்பியன்ஸ்
எழுதியது
ராகுல சாங்கிருத்தியாயன்
என புத்தகப்பூச்சன்
உளறிக்கொண்டிருந்தான்.
ஆதியும் பாதியும்
குகைக்குள்ளே
இருள் ஓவியங்களாய்
கல் திண்ணையில்
உறங்கிக்கொண்டிருந்தன.
உடைமுதல்
முடிவரை
உல்டாவாகி
பின்னோக்கிப் பயணிக்க
ஐம்பது பேர்களின்
வன்புணர்வுப் பசியில்
குரூரமாய்
மார்பகம்
அறுத்தெறியும்
ஆதிகால
சேட்டை மனிதர்கள்
கூரிய நகங்களில்
புதைகிறார்கள்.
சூர்யமித்திரன்