சூர்யமித்திரனின் கவிதைகள்
1.
குடித்து
மீந்துபோன
ஒருலிட்டர் பாட்டில்
அக்குவா மினரல்
தண்ணீர் குடித்தே
வளர்ந்தது அந்த
ரோஜா செடி.
கலர் மீன்
தொட்டியின்
பலவண்ண
மீன்களும் கூட.
2
கூடை நிறைய
புன்னகையும்
வாய் நிறைய
பூக்களையும்
சுமந்துகொண்டு
சந்தைக்கு வருகிறாய்.
இது
விற்பனைப்பொருள்
அல்லவென்று
கடைசீட்டு போட
மறுக்கிறார்
கை நிறைய
சீட்டுகட்டு
வசூல் பணப்பையுடன்
பஞ்சாயத்து ஆள்.
ஏக்கத்தோடு
திரும்புகையிலே
கூண்டுக்குள்
குமையும்
லவ்பேர்ட்ஸ்
எங்களையும்
உடன் அழைத்துப்போ
என்கிறதுகள்
கீச் காச்சிலே.
மண்டிக்கிடந்த
புதர்க்காடு.
மேலிருந்தும்
கீழிருந்தும்
பிராணநீர்.
நல்ல தீனி
எப்படி
மதமதன்னு
வளர்றாப்பாரு
பொறாமை வாய்களில்
பொச்சரிப்பு வார்த்தைகள்.
இப்படியாக
வளர்ந்த
அந்த காலிமனை
புல் பூண்டுகளை
அழித்தொழித்து
கட்டும் இடம்
காட்டியது
ஜேசிபி எந்திரம்.
ஆறுபேர்
ஆறுநாள் கூலி
என்றிருந்த
மனித சக்தியை
வேரோடு
பிடுங்கி எறிந்தது
அந்த எந்திரத்தின்
வருகை.
3
நீயும் நானும்
கொட்டும் மழையில்
நனைந்தோம்.
தனித்தனியே.
காத்திருப்பு காலம்
இருவரையும்
கோபத்தீயில்
தள்ளிவிட
கிளம்ப எத்தனித்தபோது
சடசடவென மழை.
நம்
ஊடல் தீ யை
வேரறுக்கவந்த
இந்த
மழை அரக்கனை
என்ன சொல்வது.
முழுதாய் நனைந்தும்
முக்காடு தேடும்
மனதிற்குள்
குடைமறந்த கோபம்
கொப்புளித்து
மேல் எழ..
மழைமானியாய்
நம் காதல்
சென்டிமீட்டரில்
உயருகிறது.
4
எமக்குத்தொழில்
கவிதை ~என்றால்
நீ என்ன பாரதியா
என்கிறாய்.
எல்லோரும்
இன்புற்றிருக்க
என்றால் நீ என்ன
விகடன் தாத்தாவா
என்கிறாய்.
வாடிய பயிரை
கண்டபோதெல்லாம்
வாடினேன் என்றால்~
நீ என்ன வள்ளலாரா
என்கிறாய்.
என் இனிய
தமிழ் மக்களே~என்றால்
பாரதிராஜாவா என்கிறாய்.
ஸ்வீட் எடு கொண்டாடு
என்றால்
நீ என்ன விளம்பரதாரனா என்கிறாய்.~
போதும்..
நான் இனி எதுவும்
சொல்லவில்லை
என்றால்
ஊமைவாயனா
உளறுவாயனா
என்கிறாய்.
கோலமயிலே
எதிர்க்கேள்வியில்
என் இதயம்
தோகை விரிக்கத்திணறுகிறது
இன்னொரு
மழைநாளில்
நான் குடைபிடிக்க
வருகிறேன்.
எதிர்க்கேள்விகளை
உதிரியாய்
சேர்த்து வை.
சூட்டுக்கனலில்
பிறகு சுவைப்போம்
காதல் குளிருக்கும்
சேர்த்து.