சிறகிருந்தால்
*******************
பெய்யும்
பருவமழைக்குச் சீதனமாய்
மண் முளைக்கும்
புல் பெருவெளியில்..
டன் கணக்கில்
மேய்ந்த
நூற்றைதாண்டும்
கோமாதாக்கள்
திடீரென அலைபாய்ந்த
வெள்ளத்தில் சிக்க
புல் நிறைந்த
வாயோடு
நிறை அச்சம்
நீள் பயணம்.
வெகுண்ட
திகில் கண்களில்
மீட்பரைத்தேடும்
பயம்.
பக்கவாட்டில்
சிறகு முளைத்தால்
ஒருவேளை
தப்பிக்கலாம்.
வேலையில்லா வாய்ப்பகம்
*************************************
எத்தனை தடவை
புதுப்பித்தாலும்
சிரஞ்சீவியாய்
ஆயுள்வளர்க்கும்
வேலை வாய்ப்பு.
தண்டச்சோறு
நெஞ்சில் குத்த
ம்மே..என்றழைத்த
ஆட்டுப்பண்ணை
குறும்பாடு
குறுகுறு என்று
எனைப்பார்த்ததும்
தூக்கினோம்.
துட்டு பார்த்த
புதுசில்
வேவுபார்த்த
காக்கியிடம்
காபந்து செய்ய கேட்டும்
போட்டுக்கொடுத்த
தடைக்கல்லை
சற்று
தள்ளிவைத்தோம்.
சீர்திருத்தப் பள்ளி
நிறைய
இளம் குற்ற சிறார்கள்.
எனில்
இழுத்துமூடவேண்டியது
வேலை தராத
தண்டச்சோறு
எக்சேஞ்ச் தானே.
கார் காலம்
****************
மழைக்கால குளிரில்
நடுங்குது
லட்சம் லட்சமாய்ப் போட்டு
வாங்கிய
கார்கள்.
காய்ப்பு
காய்ச்சிப்போன
கனவுகளின் நுனி ஆசை
முற்று- அலசி ஆராய்ந்து
மாளிகை வாசத்து
மதர்ப்புமிகு
நான்கு சக்கரம்
நாக்குதள்ளி
வெள்ளசீற்றத்தின்
போலீஸ்கார தள்ளலில்
அடித்துப்போனது.
ஓ..
இது
கார் காலம்.
நனைந்த கூண்டு
************************
மழைக்காலத்தில்
கூடுகளில்
குளிர் பழக்கிய
சின்ன பச்சைக்கிளி
பறவை வியாபாரியின்
தங்கமுலாம்
கூண்டுகளில்
காலம் கழிக்கிறது.
ஒரு நெல்லுக்கு
ஒருசீட்டு.
கிளிஜோதிடக்காரனின்
எதிர்காலம்
இறைவன் பெருஞ்சீட்டில்
பயணிக்கிறது.
ஆசையாய்
வளர்த்த கூண்டுக்கிளி
வெள்ளத்தில்
சிக்க~
மீட்பர் குழுவால்
காப்பாற்றி
கரைசேர்க்க
நடுங்கும்
குளிரின் வீச்சு
சிறகுகளில் மூச்சு
விடுகிறது.
சிறை பக்கத்தில்
குனிந்து
நனைஞ்சிட்டியா..ன்னு
வளர்க்கும் சிறுவன் கேட்க
குல எதிரி மிக்கி
‘மியாவ்’என்றதுபோல
கிளி காதில் விழுகிறது.