நான் பிறந்து ஓரிரு நாளில் அவன் என்னை தூக்கி வந்து விட்டான். நான் கண் திறந்து பார்த்த முதல் உருவம் அவள் தான். நான் இரவில் சிணுங்கினாலும் முகம் சுளிக்காமல் பசியாற்றுவாள். தூக்கி வந்ததோடு அவன் கடன் முடியவில்லை. அவன் உணவில் மிச்சம் அல்ல சரிபாதியை எனக்குத் தருவான். சகோதரன் எனும் வார்த்தையின் முழு அர்த்தம் அவன். பார்த்துப்பார்த்து ஒவ்வொன்றையும் செய்வான் அவன் அம்மா என் மீது கோபப்பட்டாலும் என்னை விட்டுக் கொடுக்காதவன். எனக்கென விரிப்பு கொசு அண்டாமல் இருக்க கொசுவத்தி எனக்கென்று தனி இடம் இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வான்.
நான் குழந்தைதானே ஆனாலும் நிறைய சாப்பிட வேண்டும் என அவன் என் வாயில் திணித்துக்கொண்டே இருப்பான். அவன் பள்ளிவிட்டு வீடு வந்ததும் நான் தான் அவன் விளையாட்டு பொருள். அந்த நேரத்திற்காக நானும் ஏங்கி கொண்டிருப்பேன். முத்தமிட்டு முத்தமிட்டு என்னை மூச்சிறைக்க வைப்பான்.
அந்த வீட்டில் ஒரு அக்காவும் இருந்தாள் அவளுக்கு நான் வந்தது பிடிக்கலையோ என்னவோ என்ன அவ பெருசா கண்டுக்க மாட்டா. எனக்கு ஊசி போட கூட்டிட்டு போறது குளிப்பாட்டுவது இப்படி எல்லாமே அந்த அம்மா தான். என்னோட கழிவுகளையும் அவதான் கழுவுவா.
செல்பேசினால நிறைய உறவு உருக்குலைந்து போச்சுனு சொல்றாங்க எனக்கும் அப்படித்தான் எப்பவும் என்ன கொஞ்சிக் கொண்டே இருக்கிற அந்த அண்ணன் இப்ப என்னை விட்டு கொஞ்சம் விலகிட்டான். எப்போதாவதுதான் அவன் என்னை கொஞ்சுவான் ஆனா எனக்கு அவன் கூடவே இருக்கணும்னு ஆசை. அவன் வண்டியில் போன நான் பின்னாடி போவேன் ஆனா அவன் என்ன விட்டுட்டு போயிடுவான் நானும் திரும்பி வந்து விடுவேன்.
இந்த நேரத்துலதான் அந்த வீட்டு அக்கா என்னோட பாசமா இருக்க ஆரம்பிச்சா. அவளும் நானும் நிறைய விளையாடுவோம். போட்டோ எடுப்போம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அந்த வீட்டு அம்மாவும் நல்லாதான் கவனிப்பார்கள்.
நான் இருக்கிறது அந்த வீட்டுக்காரர்களுக்கு பிடிச்சாலும் பக்கத்துல இருக்குறவங்ளுக்கு பிடிக்கல. என்னோட சத்தம் அவங்களுக்கு தொல்லையா இருந்துச்சு. எப்பவும் அவங்ககிட்ட புகார் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான் ஊளையிடுறேனு பல பேரு பல விதமா பேசினாங்க. என்னுடைய இயல்பு அதுதானே. அதனால அந்த வீட்டம்மா என்ன கட்டி போடாம விட்டுட்டாங்க. நானும் விட்டா போதும் ஓடிட்டேன். இரண்டு நாள் சந்தோஷமா இருந்துச்சு அதுக்கு அப்புறம் நல்ல சோறு கிடைக்கல. மறுபடியும் வீட்டுக்கு வந்துட்டேன்.
அப்பவும் அவங்க என்ன நல்லா கவனிச்சாங்க. நல்ல சோறு போட்டாங்க அந்தப் பையன் என்ன கொஞ்சுனான் எனக்கு ஆனந்தமா இருந்துச்சு. ஆனா அந்த வீட்டம்மா அவன ரொம்ப திட்டிட்டாங்க. அது எங்கெல்லாம் சுத்திட்டு வந்ததோ அதைப் போய் கொஞ்சிக்கிட்டு இருக்க அப்படின்னு திட்டினாங்க. அந்த வீட்டு அக்காவு என்கிட்ட பாசமா இருந்தாங்க நல்லா சாப்பிடுவேன் வெளியே நண்பர்கள் கூட சுத்துவேன். என் வீட்டு பக்கம் யாரையும் வர விடமாட்டேன். அவ்வளவு பாதுகாப்பா வச்சிருப்பேன்.
சில பேரை பார்த்து நான் குலைக்கிறது பலருக்கு பிரச்சினையா இருந்துச்சு போல. ஆனா அதெல்லாம் எனக்கு தெரியாது. பலபேர் என் மேல கோவமா தான் இருந்திருக்காங்க.
எனக்கு கறிசோறுனா ரொம்ப பிடிக்கும். அந்த அக்காவும் அண்ணாவும் தனியா எடுத்து வச்சிடுவாங்க எப்பவும். அன்னைக்கு தீபாவளி வேற ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டமா இருந்துச்சி. எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு இன்னைக்கு நிறைய கறி சோறு கிடைக்கும்னு. நானு ஓட்டமா ஓடி வீட்ல என்னோட தட்ட பார்த்தேன். தட்டு நிறைய சுடசுட பிரியாணியும் கறியும் வெச்சிருந்தாங்க. எனக்கு நாக்குல எச்சி ஊருது சாப்பிடலாம்னு பக்கத்துல போனேன் சாப்பிட முடியல. என்னவாயிருக்கும் சரி கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு பிடி பிடிக்கலாம் அப்படின்னு இருந்தேன். ஏனோ அன்னைக்கு என்னால சாப்பிட முடியல. வண்டியை சர்வீஸ் பார்க்க புதுசா ஒருத்தர் வீட்டுக்குள்ள வந்தாரு என்னால கொலைக்க முடியல. எனக்கு இது கொஞ்சம் புதுசா தான் இருந்துச்சு. அந்த வீட்டம்மாவும் டாக்டர் கூப்பிட்டாங்க ஆனால் தீபாவளின்னு சொல்லிட்டாங்க.
என்னவா இருக்கும்னு நான் யோசிச்சேன். அப்பதான் தெரிஞ்சது பக்கத்துல ஒரு அம்மா பரோட்டா வெச்சாங்க என் வீட்டு அம்மா போல நினைச்சு நல்லா சாப்பிட்டேன். “பாவம் அவங்களும் மனுஷங்கதானே” கொஞ்ச நேரத்துல நான் இறந்திடுவேனு தோணுச்சு மெதுவா எழுந்து தண்ணீர் தேடினேன் தண்ணி இல்ல. அந்த வீட்டு அம்மா ஓடிவந்து தண்ணிய வச்சாங்க கடைசியாக குடிக்க முயற்சி பண்ணேன் முடியல.
சரி நாமக்கான நேரம் வந்துடுச்சுனு போயிட்டேன். ரொம்ப தூரம் போயிடலானுதா நினைச்சேன். முடியல கொஞ்சம் தூரம் போனதும் என் உடம்பு ஒத்துழைக்கல நல்ல வெயில் நேத்து பேஞ்ச மழைத்தண்ணீல படுத்துட்டேன். கண் திறந்திருக்க நான் இருந்துட்டேன். என்னைத்தேடி வந்த அந்த வீட்டய்யா நான் இறந்தத போன்ல சொன்னார். அங்கேயே குழிக்குள்ள போட்டாங்க என்னோட உடம்ப. சில துளிகள் என் மேல விழுந்துச்சு எனக்கு இத்தனை நாள் சோறு போட்ட அந்த அம்மாவோட கண்ணீர்த்துளி போல. மேல பட்டதும் இறந்த என் உடம்புக்கு கொஞ்சம் எதமா இருந்துச்சு.