Baya Weaver ShortStory By Sudha. சுதாவின் தூக்கணாங்குருவி சிறுகதை

தூக்கணாங்குருவி சிறுகதை – சுதா




பனைமர ஓலை இடுக்குகளுக்கு இடையே தொங்கிக்கொண்டிருந்தது தூக்கணாங்குருவிக் கூடு.அந்தக் கூட்டில் ஒரு குருவி மட்டும் தான் வாழ்ந்துட்டு இருந்துச்சு. அந்தக் குருவிக்கு மனித குழந்தைகள் தான் ரொம்ப பிடிக்கும்..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பள்ளிக்கூடமா போயி குழந்தைகளை பார்த்து ரசிச்சிட்டு வரும். குழந்தைகளுக்கு பேர் இருக்கிற மாதிரி தனக்கும் பெயர் இருக்கணும்னு ஒரு ஆசை.அதனால அதுக்கு அதுவே க்ளஸினு பேர் வச்சுக்கிச்சு.

இப்படி ஒரு நாளைக்கு ஒரு பள்ளியின் போயி குழந்தைங்க பண்ற சேட்டைய ரசித்து வந்த க்ளஸி குருவிக்கு..பக்கத்துல இருக்குற ஒரு பள்ளியில் க்ளாட் னுஒரு பையன ரொம்ப பிடிச்சு போச்சு. க்ளாட்டும் அவனோட வகுப்பு தோழர்களும் உட்கார்ந்து சாப்பிடற மரத்துக்கு மேல எப்பவுமே இந்த தூக்கணாங்குருவி காத்திருக்கும்.

எதனால க்ளாட் மேல அந்த குருவிக்கு அவ்வளவு பிரியம்னு அதுக்கே தெரியல. ஒரு நாள் தவறாமல் வந்துரும் பள்ளிக்கூட விடுமுறை அப்டீனா க்ளஸி குருவிக்கு நாளே செல்லாது.குருவி பாக்குறது க்ளாட்க்கு தெரியாது.எப்படியாவது க்ளாட்க்கு அறிமுகமாகனும்னு ரொம்ப ஆசை க்ளஸி குருவிக்கு. சரி பள்ளிக்கூடத்துல ஒரு கூடு கட்டி இருக்கலாம் அப்படின்னு நினைச்சு. அந்த குருவி கூடு கட்டுற வேலைய ஆரம்பிச்சது.குழந்தைகளுக்கு பறவைகள்னா ரொம்ப பிடிக்குமே அதோட நான் தூக்கணாங்குருவி கட்டாயம் எல்லோரும் என்ன கவனிப்பார்கள் விரும்புவாங்க அப்டீனு நினைச்சது…இந்த சந்தோஷத்தோடவே க்ளாட் வகுப்புக்கு எதுத்தாப்புல தன்னோட கூட்டகட்டுச்சு.

கூட்ட கட்டி முடிச்சு அந்த குருவியும் அங்கேயே தங்கிடுச்சு..ஆனால் யாரும் அதை கவனிக்கலை எல்லோரும் அவங்கவங்க வேலைய பாக்க பரபரப்பா இருந்தாங்க. இந்த குருவிக்கு இது பெரிய ஏமாற்றமாக இருந்தது.க்ளாட் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர் கிட்ட திட்டு வாங்கிட்டு வெளிய நிற்பான். அவனை பார்க்க இந்த க்ளஸி குருவிக்கு பாவமா இருக்கும்.சரி வகுப்புல அப்படி என்னதான் நடக்குது என்று பார்க்க ஆசையா க்ளாட் வகுப்பறைக்குள்ள போச்சு.இந்தக் குருவி உள்ள போனது கூட அங்கிருந்த எந்த குழந்தையும் ஆசிரியரும் கவனிக்கல. இது தாழ்வாரத்தில் இருந்த ஒரு கம்பில் உட்காந்துகிச்சு.இப்பவும் யாரு அத கவனிக்கல இத நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு.என்ன மனிதர்கள் இப்படி இருக்காங்க அப்படின்னு நினைச்சுது.

அங்க இருக்கிற குழந்தைங்க ரோபோக்கள் மாதிரி இருந்ததா அது நெனச்சது. டீச்சர் சொல்றத அப்படியே எழுதினாங்க யாரும் எதிர்க்கேள்வி எதுவும் கேட்கல சிரிப்பு சத்தமும் இல்லை ஏன் பேச்சு சத்தம் கூட இல்லை. இதுல இருந்து மாறுபட்ட குழந்தைங்க கண்டிப்புக்கு உள்ளானாங்க க்ளாட் மாதிரி. இதை எல்லாம் பார்த்த தூக்கணாங்குருவி ஒரு முடிவுக்கு வந்துச்சு. ரசிக்க தெரியாத குழந்தை எப்படி குழந்தைகளாக இருக்க முடியும். நாம இந்த இடத்தை காலி பண்றது நல்லதுனு நெனச்சு தான் கூடுகட்ட வேறு ஒரு மரத்தை தேடி பறந்திருச்சு.

OrangeSwallow and GreySquirrel Childrens ShortStory By Dhurai Arivazhagan. ஆரஞ்சுக்குருவியும் சாம்பல்நிற அணில்குஞ்சும் சிறார் சிறுகதை - துரை. அறிவழகன்

ஆரஞ்சுக்குருவியும் சாம்பல்நிற அணில்குஞ்சும் சிறார் சிறுகதை – துரை. அறிவழகன்




கருத்த பூதம் ஒன்று கை கால் நீட்டி படுத்திருப்பது போல் காட்சியளித்தது அந்த நீண்ட மலை. பூதமாக நீண்டு நின்ற மலையின் அடிவாரத்தில் பூனைக்குட்டியாக அமைந்திருந்தது பசுமையான குக்கிராமம். கிராமத்தைச் சுற்றிலும் ஆல், அத்தி, புங்கை போன்ற மரங்கள் செழிப்பாக வளர்ந்து நின்றன. கிராமத்திலிருந்து மலை உச்சியை நோக்கி பாம்பாக வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருந்தது ஒத்தையடிப் பாதை. அந்தப் பாதையில் நடந்து போவதென்றால் அப்படியொரு பயம் கிராமத்து மக்களுக்கு.

மலை உச்சிக்குச் செல்லும் ஒத்தையடிப் பாதையைக் கடந்து திடீர் திடீரென காட்டு யானைகள்  ஒய்யாரமாக நடந்து போகும். தும்பிக்கையைத் தூக்கியபடி காட்டு யானைகள் எழுப்பும் பிளிறல் சத்தத்தில்  மான்களும், குரங்குகளும் பயந்து போய்  காட்டுக்குள் தலை தெறிக்க ஓடி மறையும். அடர்ந்த மரத்தின் கிளைகளுக்குள் பதுங்கியபடி அரைத் தூக்கத்தில் இருக்கும் பறவைகள் பதறியடித்துதப்பித்தோம் பிழைத்தோம்என காட்டுக்குள் பறந்து மறையும்

பாதையில் குழிகளை தோண்டிப் போட்டபடியே யானைக் கூட்டம் நடந்து போகும்; யானைகள் தோண்டிப் போடும் குழிகளில் இருந்து நீர் ஊற்றுசலசலவென்று பீய்ச்சியடிக்கும். காட்டுப் பன்றிகள், நரிகள், கீரிப்பிள்ளைகள் என ஏராளமான மிருகங்கள் நீருற்றைச் சுற்றி நின்று கொண்டுதளக் புளக்கென்று சத்தம் எழுப்பியபடி நீரை உறிஞ்சிக் குடிக்கும். பாதையில் பஞ்சுப் பொதிபோல குவிந்து கிடக்கும் யானைகளின் சாணத்தைத் தின்ன சில பறவைகள் கூடிவிடும்.

கரடி, புலி, கடமான், எருது, வரையாடு, கழுதைப்புலி, நீர் நாய், சாம்பல் அணில், மலைப் பாம்பு போன்ற விலங்குகளும் அந்தக் காட்டில் வசித்துவந்தன. காட்டின் நடுவில் ஓங்கி உயர்ந்து வளர்ந்து நின்றது பைன் மரமொன்று. கூம்பு வடிவ அந்த பைன் மரத்தின் உச்சியில் கூடு கட்டி வாழ்ந்ததுகுயிலிஎனும் ஆரஞ்சு நிறக்குருவிஅதே மரத்தின் அடிவாரத்தில் சின்ன பொந்து ஒன்றில் வசித்தது சாம்பல் நிற அணில் குஞ்சு ஒன்று.

சிவப்பு நிற மூக்கையும், முதுகில் வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகளையும் கொண்ட  அணில் குஞ்சை கேலி செய்யாவிட்டால் தூக்கம் வராது ஆரஞ்சுக் குருவிக்கு.

என் பக்கத்தில் வந்துகீச் கீச்சுன்னு சத்தம் போட்டு தொந்தரவு பண்ணாதே“, எப்பொழுது பார்த்தாலும் அணில் குஞ்சைப் பார்த்துச் சத்தம் போடும் ஆரஞ்சுக் குருவி. அதோடு மட்டுமில்லாமல்நாமம் போட்ட எலிஎன்றும் சொல்லி அணில் குஞ்சை இளக்காரமாகக் கேலிசெய்யும் அந்தக் குருவி. குருவியின் கேலிப்பேச்சைக் கேட்டு அணில் குஞ்சின்பொசு பொசுவென்ற வால் கோபத்தில் முறுக்கிக் கொண்டு வில்லாகத் தூக்கிக் கொள்ளும்.

ஆரஞ்சு நிறக்குருவி, சாம்பல் அணில்குஞ்சோடு இருபத்திநாலு மணி நேரமும் சண்டை போட்டபடியே பைன் மரத்தைச் சுற்றிவரும். அணில்குஞ்சும் சிறிதும் சளைக்காமல்ஏட்டிக்குப் போட்டிபோடும். ‘கீச்கீச்சென குருவி எழுப்பும் குரலுக்கு, ‘தஸ்புஸ்ஸென்று பதில் குரலெழுப்பும் அணில்குஞ்சு. தன்னுடைய பாட்டுக்கு எசப்பாட்டு பாடும் அணில்குஞ்சை எரித்துவிடுவது போல் கோபத்துடன் பார்க்கும் ஆரஞ்சுக்குருவி. “குயிலி என்ற பெயர் வாங்கிய என்னோடயே போட்டியா? என்ன ஒரு கொழுப்புஎன்பதுபோல் இருக்கும் குருவியின் பார்வை.

குயிலிக்கும், அணில்குஞ்சுக்கும் நடக்கும் சண்டையை வேடிக்கை பார்த்தபடி அவைகளைச் சுற்றிவரும் மற்ற பறவைகள். ஒரு நாள் அணில்குஞ்சைப் பார்த்து குருவி சொன்னது : “இந்தக் காட்டை உருவாக்கியது என்னோட தாத்தாவுக்கு தாத்தாவும் அவரோட தாத்தாவுக்கும் தாத்தாவும் தெரியுமா உனக்கு“. இப்படிச் சொன்ன போது கர்வத்தில் உயர்ந்திருந்தது ஆரஞ்சுக் குருவியின் தலை.

! அதுவா உன் நெனப்பு? என்னோட பரம்பரைப் பெருமையெல்லாம் தெரியாமல் உளறாதேபதிலுக்குக் குரலை உயர்த்திச் சொல்லும் அணில்குஞ்சு

குருவியும், அணில்குஞ்சும் வசித்துவந்த பைன் மரத்திற்கு அருகில் வளர்ந்து நின்றது முதிர்ந்த அரச மரமொன்று. பல தலைமுறைகளைப் பார்த்திருந்த போதும் அடக்கத்துடன் வாழ்ந்து வந்தது அரசமரம். ஆரஞ்சுக்குருவியும், அணில்குஞ்சும் போட்டுக் கொள்ளும் சண்டையைப் பார்த்து சிரிப்புதான் வந்தது அரசமரத்திற்கு.

உங்கள் இருவரின் அறியாமையைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது எனக்கு. உங்கள் இருவரின் பாட்டன் பூட்டிகளும் ஒற்றுமையாக வாழ்ந்து இந்தக் காட்டை உருவாக்கினார்கள். குருவிகளின் கழிவுகளில் இருந்து வெளியேறும் விதைகளில் இருந்தும், அணில்கள் ஒளித்து வைக்கும் பழக்கொட்டைகளில் இருந்தும்தான் காட்டில் மரங்கள் பல்கிப் பெருகுகின்றன. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை“. 

அரசமரம் சொன்னதைக் கேட்டு தங்களின் அறியாமையை நினைத்து வெட்கிப் போய் நின்றன ஆரஞ்சுக்குருவியும், சாம்பல் அணில்குஞ்சும்

அனுபவம் முதிர்ந்த அரசமரத்தின் பேச்சைக் கேட்டு குருவியும், அணில்குஞ்சும் தங்களுக்குள் சண்டை போடுவதை நிறுத்திவிட்டன

குடு குடுவென ஓடித் திரிந்து காட்டின் மூலை முடுக்குகளில் பழக்கொட்டைகளை பதுக்கி வைத்தபடி தன் வேலையைத் தொடர்ந்தது அணில்குஞ்சு; பழங்களை விதைகளோடு முழுங்கிய ஆரஞ்சுகுருவி காடுமுழுக்க தன்னுடைய எச்சங்களைப் போட்டபடி பறந்து திரிந்தது. விதைகள் பரவியதில் காட்டில் புதிதுபுதிதாக மரங்கள் முளைத்தபடி இருந்தது. குருவியும், அணில் குஞ்சும் ஒற்றுமையாக இணைந்து பாடிய பாட்டைக் கேட்டு சிலுசிலுவென காற்றில் அசைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின காட்டு மரங்கள்.